நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 15. தற்காலிக நீதி  (ஜெயமோகனின் ‘பீடம்’ சிறுகதையை முன்வைத்து…)

 

 

 

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘பீடம்’ சிறுகதை, நிலப்பிரபுத்துவ அமைப்பின் இரத்தக்களரி வரலாற்றையும் வன்முறையின் ஊடாகத் தெய்வம் கட்டமைக்கப்படும் ஆன்மிக-மெய்யியல் பரிமாணத்தையும் மிகக் கறாராகவும் ஆழமாகவும் ஆராய்கிறது. 

1788-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் வரலாற்றுச் சம்பவத்தை (இதுவும் புனைவாகக்கூட இருக்கலாம்தான்) மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கதை, மனிதனின் அகமும் புறமும் சந்திக்கும் புள்ளியில் ஆன்மிகம் எத்தகைய கோரமான வடிவத்தை எடுக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறது.

இக்கதையின் தொடக்கமே திருவிதாங்கூர் ராஜநீதிசபையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின் மொழியைக் கொண்டுள்ளது.

“1788-ல் தர்மராஜா என்று அழைக்கப்பட்ட கார்த்திகைத் திருநாள் ராமவர்மா மகாராஜாவின் ஆட்சிக்காலத்தில்… பத்தொன்பது வயதான புலையனாகிய சுண்டன் கழுவிலேற்றப்பட்டான்.”

இந்தத் தொடக்கம் கதையை புனைவு வெளியில் இருந்து விலக்கி, நேரடியான வரலாற்று உண்மையாக மாற்ற முயல்கிறது. ஆனால், ஜெயமோகன் வரலாற்றை அப்படியே பதிவு செய்வதோடு நின்றுவிடாமல், அதன் அடிநாதத்திலுள்ள சாதிய வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

அரசாங்கத்தின் ஆவணங்கள் என்பவை எப்போதும் ஆதிக்க வர்க்கத்தின் குரலாகவே இருக்கும். அந்த ஆவணங்களில் ‘குற்றவாளி’ என்று முத்திரையிடப்படும் சுண்டன், உண்மையில் எளிய மக்களின் கூட்டு ஆழ்மனத்திலிருந்து எழுந்துவரும் ஒரு வாதை தெய்வமாக (கழுமாடனாக) எப்படி ஆகிறான் என்பதன் வழியாகவே கதை நகர்கிறது.

சுண்டன் எவ்விதமான வீரனுமோ, புரட்சியாளனோ அல்லன். அவன் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, ‘பெண்ணன்’ என்று கேலி செய்யப்பட்ட, பகற்கனவு உலகத்தில் சஞ்சரிக்கும் மெல்லிய இளைஞன். அவனுடைய தாயான தேயி, அவனுக்கு ஏழு வயது வரை முலையூட்டி, ஐந்து வயது வரை பெயரே வைக்காமல் வளர்க்கிறாள்.

“பெயரிட்டால் தீயதேவதைகள் பிள்ளையை கொண்டு போய்விடும் என்று அவள் அஞ்சினாள்.”

இந்த இடத்தில் நாட்டுப்புற மக்களின் ஆன்மிக நம்பிக்கையும் உயிர் பிழைத்தலுக்கான உளவியலும் வெளிப்படுகிறது. உலகத்திலிருந்து தன் மகனைப் பாதுகாப்பதற்காகத் தாய் நடத்தும் போராட்டம் தோல்வியடைகிறது.

சுண்டன் உலகியல் வேலைகளைச் செய்யத் திராணியற்றவனாக, தன் கற்பனை உலகத்திலேயே திளைக்கிறான். ஆனால், அவனுடைய இந்த மென்மைக்கும் பெண்மைக்கும் மாற்றாக, அவனுக்குள் ஒரு ‘மலைவாதை’ உறங்கிக் கொண்டிருக்கிறது. 

சமூகத்தின் ஒடுக்குமுறை எல்லை மீறும் போது, குறிப்பாக அடிமைப் பெண்கள் விற்கப்படும் கோரக் காட்சி அவனுக்குள் இருக்கும் அந்தப் படுதெய்வத்தைத் தட்டி எழுப்புகிறது. இங்கு ‘வன்முறை’ என்பது சுண்டனின் சுய விருப்பமன்று; அது ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்தக் கொதிநிலையின் வெளிப்பாடு.

இந்து புராண-நாட்டுப்புற மரபுகளில் தெய்வங்கள் என்பவை அருளும் சக்திகள் மட்டுமல்ல; அவை அச்சுறுத்தலின் மூலமாகவும் விளங்குகின்றன. கதையில் வரும் ‘கழுமாடன்’ என்பது எளிய தெய்வமன்று; அது மரண தண்டனை அடைந்த, அதிலும் குறிப்பாகக் கழுவிலேற்றப்பட்டுத் துடித்துயிர்த்த மனிதர்களின் ஆத்மாக்களிலிருந்து உருவான ‘வாதை தெய்வம்’.

சுண்டன் கழுவிலேற்றப்படுவதுடன் கதை முடிவடையவில்லை. அவனுக்குக் குருதிபலி கொடுத்து, நடுகல் நாட்டி, ஆண்டுதோறும் பூசை செய்யும் வழக்கம் தொடங்குகிறது.

ஆலும்மூடு குடும்பத்தினர் செய்த அடிமை வியாபாரத்தின் காரணமாகவே சுண்டன் உக்கிரமான தெய்வமாக மாறி அவர்களைத் தாக்குகிறது. இறுதியில் அவர்கள் அஞ்சி நடுங்கி, சாந்திபூஜை செய்து, சுண்டனின் குடும்பத்திற்கே நிலமும் உரிமையும் வழங்கிச் சமரசம் செய்கிறார்கள்.

இங்கு ஆன்மிகம் என்பது வெறும் பக்தி அன்று; அது அச்சமும் குற்றவுணர்வும் கலந்த ஒரு சமரச ஏற்பாடு ஆகும். ஒடுக்கப்பட்டவனின் இரத்தம் சிந்தப்பட்ட மண்ணில் மட்டுமே ஆதிக்க வர்க்கத்தின் சமாதானம் நிலைநிற்க முடியும் என்ற சமூக யதார்த்தத்தை இது அம்பலப்படுத்துகிறது.

இக்கதையின் மிக முக்கியமான தத்துவார்த்த முரண் அதன் முடிவில் வெளிப்படுகிறது. சுண்டனுக்குக் கழுபீடம் அமைக்கும்போது, கரியாத்தானின் தடம் பதிப்பதற்காகச் சுண்டன் அமரவைக்கப்பட்டான். அதேபோல், சுண்டன் கழுவிலேறும் போது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த உருமன் என்ற இளைஞன் அந்தப் பச்சைக்களிமண் பீடத்தில் அமரவைக்கப்பட்டு தடம் பதிக்கப்படுகிறது.

“கழுப்பிடி ஆசான் சுண்டனை கழுவில் அமரச்செய்தபோது அவன் முகம் புன்னகையுடன் இருந்ததாக புள்ளுவர் பாட்டு சொன்னது… அவன் ஒரு வார்த்தை சொன்னான்: ‘கரியாத்தா!'”

இந்தச் சங்கிலித் தொடர் மானுட வரலாற்றின் மிகக் கொடூரமான உண்மையைச் சொல்கிறது – ஒரு வன்முறை முடிவுக்கு வருவதில்லை; அது அடுத்த தலைமுறைக்கான பீடமாக மாறுகிறது. பலியிடப்படுபவர்கள் தெய்வங்களாக மாறுவதும் அந்தத் தெய்வங்களை வழிபடுவதன் மூலம் ஒடுக்குமுறை அமைப்புகள் தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொள்வதும் காலத்தின் முடிவில்லாத சுழற்சியாகத் தொடர்கிறது.

ஜெயமோகனின் இந்தச் சிறுகதை ஆன்மிகத்தின் இருண்ட பக்கத்தையும் மனித மனம் வன்முறையிலிருந்து தெய்வங்களை எப்படி உருவாக்குகிறது என்பதையும் மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. வரலாறு, புராத்தம், சாதிய ஒடுக்குமுறை, உளவியல் சிக்கல்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ள இக்கதை, இலக்கியத்தின் வழியே மானுடத்தின் மீதான மிகக் கறாரான சுயவிமர்சனத்தை முன்வைக்கிறது. பீடங்கள் என்பவை வழிபாட்டின் அடையாளங்கள் மட்டுமல்ல; அவை மனிதர்களின் இரத்தத்தால் ஈரப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் சின்னங்கள் என்ற மெய்யியல் உண்மையை இக்கதை ஆழமாக உணர்த்துகிறது.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையும் இரத்தமும் ஆன்மிக அடையாளங்களாக மாறுகின்றன. இது மானுட வரலாற்றின் மிக முக்கியமான சமூகவியல் மற்றும் மெய்யியல் சிக்கல்களில் ஒன்றாகும். எழுத்தாளர் ஜெயமோகனின் இந்தச் சிறுகதை வெளிப்படுத்தும் உக்கிரமான பிம்பங்களின் ஊடாக இது பற்றி நாம் விரிவாகப் பரிசீலிக்க முடியும்.

இரத்தத்தின் வழி உருளும் தெய்வங்கள்

வரலாறு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குருதியும் கண்ணீரும்தான் ஆதிக்க சக்திகளால் புனிதப்படுத்தப்பட்டு, வழிபாட்டு பீடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

‘பீடம்’ கதையில் புலையனாகிய சுண்டன் அரச அதிகாரத்தால் கழுவேற்றப் படுகிறான். ஆனால், அவனுடைய மரணம் அத்துடன் முடிந்துவிடுவதில்லை. அவன் அடங்க மறுக்கும் ஒரு ‘வாதை தெய்வமாக’ (கழுமாடனாக) உருவெடுத்து ஆதிக்க குடும்பங்களை நடுங்கச் செய்கிறான்.

ஒடுக்கப்பட்டவனின் இரத்தம் சிந்தப்பட்ட இடத்திலேயே அவனுக்கு நடுகல் எழுப்பப்பட்டு, ஆண்டுதோறும் குருதிப் பலி கொடுக்கப்படுகிறது. இங்கு வன்முறை என்பது வெறுமனே பழிவாங்குதலோடு நின்றுவிடாமல், ஒடுக்குபவர்களின் குற்றவுணர்ச்சியையும் அச்சத்தையும் தணிக்கும் ஆன்மிகச் சடங்காக மாறிவிடுகிறது.

சாதியக் கொடுமைகளுக்கு எதிரான கோபமும் எதிர்வினையும் ஆரம்பத்தில் அதிகார வர்க்கத்திற்கு எதிரானப்  பெரும் எச்சரிக்கையாகவும் சமூக சமநிலையை உருவாக்கும் அச்சுறுத்தலாகவும் செயல்படக்கூடும்.

ஆலும்மூடு குடும்பத்தினர் சுண்டன் கழுமாடனின் உக்கிரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி, “இனி, அடிமை வியாபாரம் செய்வதில்லை” என்று சத்தியம் செய்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கே நிலமும் உரிமையும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், வன்முறையும் இரத்தமும் சமூக மாற்றத்தை ஒரு தற்காலிகப் பயத்தின் வழியாக சாத்தியப்படுத்துகின்றனவே தவிர, கட்டமைக்கப்பட்ட சாதிய மனநிலையை முழுமையாக வேரோடு பிடுங்கி எறிவதில்லை.

வன்முறையும் இரத்தமும் ஆன்மிக அடையாளங்களாக நிலைநிறுத்தப்படும் போது, அது சமூக மாற்றத்திற்கு வழிவகுப்பதைவிட, ஆழமான மற்றொரு ஒடுக்குமுறைச் சுழற்சியையே உருவாக்குகிறது.

‘பீடம்’ கதையின் இறுதியில் சுண்டன் கழுவிலேறும்போது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ‘உருமன்’ என்ற இளைஞன் களிமண் பீடத்தில் அமரவைக்கப்பட்டு தடம் பதிக்கப்படுகிறான். அதாவது, ஒரு தெய்வம் அமைக்கப்பட்ட அதே முறையில் அடுத்த பலிக்கான இடம் தயாராகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறைத் தெய்வங்களை வழிபடும் சடங்குகளாகச் சுருங்கிவிடும் அபாயம் உண்டு. பலியிடப்பட்டவர்களின் ஆன்மாக்களை ‘வாதை தெய்வங்களாக’ வணங்குவது, ஒடுக்குமுறையின் வடுவை அந்தச் சமூகத்தின் மீதே நிரந்தரமானக் குறியீடாக மாற்றுகிறது.

மெய்யியல் ரீதியாகப் பார்க்கும்போது, இரத்தமும் வன்முறையும் ஒருபோதும் மனித விடுதலையின் இறுதி வடிவமாக இருக்க முடியாது. வன்முறை ஆதிக்கத்தின் கட்டமைப்பைக் குலைக்கலாமே தவிர, மனிதனை மனிதனாக மதிக்கக் கூடிய புதிய அறத்தை அது உருவாக்குவதில்லை.

குருதிப் பலியும் உக்கிரமான தெய்வ வழிபாடுகளும் ஒடுக்குபவர்களைச் தற்காலிகமாக மிரட்டலாமே தவிர, சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் பேணும் சமூக உளவியலை அவை மாற்றுவதில்லை. அத்தகைய வழிபாடுகள் மனிதர்களை மீண்டுமொரு அச்சம் சார்ந்த யதார்த்தத்திற்குள்ளேயே முடக்கிவிடுகின்றன.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையும் இரத்தமும் ஆன்மிக அடையாளங்களாக மாறுவது என்பது நிரந்தர சமூக மாற்றத்திற்கு வழிவகுக்காது; அது ஒடுக்குமுறையின் புதிய வடிவங்களையும் அச்சம் சார்ந்த வழிபாட்டுச் சடங்குகளையும் மட்டுமே உருவாக்கும்.

சுண்டனும் உருமன்களும் பீடங்களில் தடம் பதிப்பது போல, வன்முறை எப்போதுமே மற்றொரு பலியைத்தான் கோரி நிற்கும். உண்மையான சமூக மாற்றமும் விடுதலையும் இரத்தத்தில் இல்லை. அவை, மனித சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அறம்சார்ந்த முன்னெடுப்புகளிலும் கல்வி மற்றும் உரிமைகளின் மூலமான சமத்துவத்திலும்தான் சாத்தியமாகும்.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *