
மனிதர்களின் வாழ்வியலையும் அவர்களின் அக உலகையும் மிக இயல்பான வட்டார வழக்கோடு பதிவு செய்வதில் வல்லவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவரது ‘இடமோ, வலமோ?’ என்ற சிறுகதை, தமிழ்நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரிப் பகுதியின் நிலப்பரப்பு, பழையாறு, மயானம், சுடலைமாடன் வழிபாடு மற்றும் யாருமற்ற முதியவரின் இறுதிப் பயணம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தனிமனித வாழ்வியலை ஆழமாகப் பேசுகிறது.
கதையின் தொடக்கம் சுடுகாட்டின் எதார்த்தக் காட்சிகளுடன் தொடங்குகிறது. இறந்த பிணம் சாம்பலான பின்பு எலும்பைப் பொறுக்குதல், அதன் மீது தென்னங்கருக்கு நடுவது, இளநீர் விட்டுச் சடங்குகள் செய்வது என மரபு சார்ந்த சடங்குகள் விவரிக்கப்படுகின்றன. ஆணா, பெண்ணா, சாதியா, வர்க்கமா என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி, இறுதியில் அனைவரும் வந்து சேரும் ஒரே இடம் இந்த மயானம் மட்டுமே.
இங்கு வரிசையாக இருக்கும் குழிகள் சாதியப் பிரிவினைகளைக் காட்டினாலும் சுடலைமாடனின் பார்வையில் அந்தப் பிரிவுகள் அர்த்தமற்றதாகி விடுகின்றன. வாழும் காலத்தில் மனிதர்கள் உருவாக்கும் ஏற்றத்தாழ்வுகள் யாவும் சுடுகாட்டுச் சாம்பலில் அடிபட்டுப் போய்விடுகின்றன என்ற எதார்த்தத்தை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மிகக் கறாராகப் பதிவு செய்கிறார்.
கதையின் மையக் கதாபாத்திரம் தன் வாழ்வின் எஞ்சிய பகுதியில் நினைவுகளைத் தொலைத்துவிட்டு, எங்குச் செல்வது என்று தெரியாமல் நாடோடியாகத் திரியும் முதியவர் காசிலிங்கம் ஆவார். அவரது சொந்த மகனே அவரைப் பேருந்தில் ஏற்றி, வடசேரி அல்லது நாகர்கோவில் பகுதியில் தற்செயலாகத் தொலைத்துவிட்டுச் சென்றுவிடுகிறான். பெற்ற மகனால் கைவிடப்பட்ட மனிதனின் அகத் தவிப்பு, அவனது அடையாளங்களான ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்ற எதுவும் அவனுக்கு உதவாமல்போகும் சூழல் மனித உறவுகளின் வறட்சியை வெளிப்படுத்துகிறது.
அவர் மயான மேட்டில் வந்து படுப்பதும் சுடலைமாடன் பீடத்தின் அருகே உள்ள இளநீர்த் தேங்காயைச் சாப்பிட்டுத் தன் பசியைப் போக்கிக் கொள்வதும் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட நிலையை உணர்த்துகிறது. அவருக்குள் இருக்கும் இயலாமையும் உலகத்தோடு உள்ள தொடர்பும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விட்டன.
இக்கதையின் முக்கியமான குறியீட்டு அம்சம் சுடலைமாடன் கதாபாத்திரம் ஆகும். புராணக் கடவுள்களைப் போல இல்லாமல், நாட்டுப்புறத் தெய்வமான சுடலைமாடன் தன் எல்லைக்குள் வந்து கிடக்கும் அந்த முதியவரைப் பார்த்துத் திகைக்கிறான், இரக்கப்படுகிறான்.
“இவனுக்கு என்ன செய்து நமக்கு என்ன ஆகப்போகுது?” என்று யோசிக்கும் சுடலைமாடன், இறுதியில் முதியவர் தனக்குத் தேங்காய்ப் பருப்பைப் படைத்ததை எண்ணி அவருக்கு அருள் செய்ய முற்படுகிறான்.
மனிதர்களின் சட்ட திட்டங்களோ, சாத்திரங்களோ அறியாத பாமரத் தெய்வத்திடம் உள்ள கனிவு, மனிதர்களைக் கைக்கழுவிவிட்ட நாகரிகச் சமூகத்திடம் இல்லை என்பதை எழுத்தாளர் சுட்டிக் காட்டுகிறார்.
சித்தர்களின் பாடல்களையும் (சிவவாக்கியர், திருமூலர்) பக்தி இலக்கிய வரிகளையும் கதையோட்டத்தில் இணைப்பதன் மூலம் ‘ஆன்மிகம்’ என்பது ஏழைகளின் துயரத்தைப் புரிந்துகொள்வதில்தான் உள்ளது என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறார்.
இன்றைய நவீன நுகர்வு கலாச்சாரத்தில், வயதான பெற்றோர்களைப் பராமரிக்க முடியாதோ அல்லது பாரமாக நினைத்தோ அவர்களைத் தொலைத்துவிட்டுச் செல்லும் கொடூரமான மனநிலையை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இக்கதையில் கூர்மையாக விமர்சித்துள்ளார். காசிலிங்கத்தின் மகன் அவரைத் திட்டமிட்டுக் கைவிட்டுச் செல்வது என்பது தனிமனித அறம் எங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும்.
வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட அல்லது கைவிடப்பட்ட முதியவர்களின் இறுதிப் பயணம் சுடுகாட்டில் முடிகிறது. அவர்களுக்காகக் கண்ணீர்ச் சிந்தக்கூட உறவுகள் அருகில் இல்லாத அந்தத் தனிமைத் துயரம், இன்றைய சமூகத்தின் குடும்ப அமைப்புகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டுகிறது.
நாஞ்சில் நாடனின் ‘இடமோ, வலமோ?’ சிறுகதை, இறப்புக்கும் வாழ்வுக்கும் நடுவே ஊசலாடும் முதியவரின் கதையின் வழியாக, மனிதர்களின் சுயநலத்தையும் விளிம்புநிலை மக்களின் அவலத்தையும் மிக யதார்த்தமாகப் பேசுகிறது. அறிவியலும் நாகரிகமும் வளர்ந்துவிட்டதாகச் சொல்லப்படும் காலத்திலும் மனிதநேயம் சுடுகாட்டுச் சாம்பலைப் போல எங்குத் தூசியாய்ப் பறந்துவிட்டது என்பதை இக்கதை சிந்திக்க வைக்கிறது.
– – –
