
மனிதர்களின் ஆழ்மனப் பதற்றங்களையும் உடல்சார்ந்த பலவீனங்களையும் அதிகாரப் பெருமிதங்களையும் நேர்த்தியாகப் பதிவு செய்து வருபவர்களில் எழுத்தாளர் பாலாஜி பிருத்விராஜ் குறிப்பிடத்தக்கவர்.
அவர் எழுதிய ‘தூளி’ என்னும் சிறுகதை, முதலாளியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் (Liver Transplant) பின்னணியை வைத்துக்கொண்டு, தந்தைவழிப் பெருமை, ஆண்மையின் வீழ்ச்சி, வாரிசு அரசியல், வறுமையின் மீதான சுரண்டல் மற்றும் மனித உறவுகளின் ஊசலாட்டம் ஆகியவற்றை ஆழமாகக் காட்சிப்படுத்துகிறது.
உடலின் சிறு துண்டு மற்றொரு உடலால் மாற்றப்படும் போது, அந்த உடலோடு இணைந்த அக உலகமும் அதன் அதிகாரமும் எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கின்றன என்பதை இக்கதை அழுத்தமாகப் பேசுகிறது.
மனிதனின் அக உலகம் என்பது அவன் வாழ்ந்த சூழலாலும் அவனது முன்னோர்களின் பரம்பரையாலும் கட்டமைக்கப்படுகிறது. கதையின் நாயகனான முதலாளி தன்னைத் தன் தந்தையின் தொடர்ச்சியாகவே பார்க்கிறான்.
அவனது தந்தை சாதாரண நிலையிலிருந்து ஒரு ‘மண்டி’யை உருவாக்கித் தொழிலை வளர்த்தவர். காய்கறிகளைத் தொடாமலேயே ஒரே பார்வையில் ஏலத்தை எடுக்கும் அந்தத் திறமை, அவனுக்குள் ஊறியிருந்த பூர்வீக உழவு மணத்திலிருந்தும் பரம்பரைச் சொத்திலிருந்தும் உருவானது என்று அவன் நம்புகிறான்.
“இதுகூடச் பண்ணலைன்னா சிவனேச நாடார் மகனா பொறந்து என்ன பிரயோசனம்?” என்ற அவனது எண்ணம், தன் தந்தையின் ஆளுமை தனக்குள் தொடர்ந்து இயங்குவதாக நம்பும் ஒருவனின் அகப்பெருமிதத்தைக் காட்டுகிறது. ஆனால், இந்த ஆதிக்க மனோபாவமும் பரம்பரைச் பெருமையும் தன் உடலின் மீதான அதிகாரத்தை இழக்கும் போது எப்படித் தகர்ந்து போகிறது என்பதே கதையின் மையத் திருப்புமுனையாக அமைகிறது.
கதையின் முதலாளி எதிர்கொள்ளும் மாபெரும் வீழ்ச்சி என்பது அவனது உடல் அவனைக் கைவிடுவதுதான்; குறிப்பாக, அவனுக்கு ஆண் வாரிசு பிறக்காததும், சுஜியின் தற்செயலான காதல் திருமணமும் அவனை மனத்தளவில் சிதைக்கின்றன.
ஆம்பளைக்குத் தன்னோட உடல் பலந்தான் ஆதாரம். அதில் சந்தேகம் வந்துவிட்டால் மனிதனின் அக உலகமே கவிழ்ந்துவிடும். தனக்கு ஆண் வாரிசு பிறக்கவில்லை என்பதும், தன் மகளின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததும் அவனது ஆண்மைச் செருக்குக்கு விழுந்த மரண அடிகளாக மாறுகின்றன.
யாரிடமும் வெளிப்படுத்த முடியாத இந்த வெறுப்பையும் கோபத்தையும் அவன் மதுவின் மூலம் தன் உடலிலேயே செலுத்துகிறான். குடிபோதையில் அவன் தன் கல்லீரலைச் செரித்து, அதை ‘நச்சுப்பையாக’ மாற்றுவது என்பது, தன் மீதான வன்மத்தைத்தானே தன் உடலுக்குள் செலுத்தும் சுய அழிவுச் செயலாகும்.
லிவர் சிரோஸிஸ் (Liver Sirohsis) நோயின் இறுதி நிலைக்குச் சென்று, மீண்டு வந்த முதலாளியின் வாழ்க்கை ஒரு மறுபிறப்பாகக் காட்டப்படுகிறது. ஆனால், அந்த மறுபிறப்பு சாதாரணமானது அன்று; அது மற்றொரு மனிதனின் உடலின் ஒரு பகுதியை விலைக்கு வாங்குவதன் மூலம் நிகழ்ந்தது.
கல்லீரலைத் தானம் செய்பவன் கட்டட வேலைக்குப் போய், குடிக்கு அடிமையான எளிய மனிதன். அவனது மனைவியின் உடல் கூறிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டு முதலாளிக்குப் பொருத்தப்படுகிறது. அங்கே முதலாளியின் பெருமையும் பரம்பரைச் சொட்டும் ஏழையின் உடற்கூட்டின் மீதுதான் உயிர்வாழ வேண்டியிருக்கிறது என்ற வரலாற்று முரண் சுட்டிக் காட்டப்படுகிறது.
கல்லீரலைக் கொடுத்துவிட்டு மருத்துவமனையில் நடமாடும் அந்தப் பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவள் எதையும் உள்ளே எடுத்துச் செல்ல மாட்டாள்; அனைத்தையும் உடலால் மட்டும் கடந்து செல்லும் இயந்திர வாழ்க்கை அவளுடையது. முதலாளியின் உயிருக்கான விலையை அவளது உடல் சுமக்கிறது.
கதையின் மற்றொரு முக்கியமான உளவியல் முரண் சுஜியின் நடவடிக்கைகளிலும் முதலாளியின் எதிர்வினைகளிலும் வெளிப்படுகிறது.
தன் தந்தை ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வந்ததும், சுஜி தனது குழந்தையுடன் அருகில் வந்து மன்னிப்புக் கேட்பது போல நடித்தாலும் முதலாளியின் மனம் உடனடியாக, “சொத்தை என் பேரக் குழந்தை பெயரில் எழுதி வைக்க வேண்டும்” என்ற வியாபாரக் கணக்கிற்கே தாவுவது மனித உறவுகளின் வணிகத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
முதலாளி சுஜிக்காகத் தன் முகத்தில் தயாராக வைத்திருந்த அந்தப் புன்னகை, தொழிலில் நண்பர்களுக்கு விருந்துகளில் தரும் நளினமான சிரிப்பே தவிர வேறில்லை. அன்புகூட அங்கே ஒரு கணக்கீடாகவே மாறுகிறது.
கதையின் இறுதியில் முதலாளி தன் உடலின் இயலாமையையும் அந்த அழுகிய கல்லீரலைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறான். குருத்து மாதிரி வளரும் அந்தச் சிறிய கல்லீரல் துண்டுக்குள் மற்றொரு பெண்ணின் உயிரும் வலியும் ஊடுருவியிருப்பதை அவன் உணர்கிறான்.
கதையின் முடிவில் அவன் மீண்டும் வலிப்பு ஏற்பட்டு, தன் உடல் முறுக்கேறி கல்மூங்கிலைப் போல நீளும் போது, வலியைக் கடந்து செல்வதற்காக அவன் காத்திருக்கும் விதம் மனித வாழ்வியலின் தவிர்க்க முடியாத துயரத்தை உணர்த்துகிறது. வெளியே மணிநாதம் போல ஒலிக்கும் அந்த இயந்திரத்தின் ‘பீப்’ ஒலி, வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான மெல்லிய நூலாய் ஒலிக்கிறது.
மனிதன் தன் அக உலகத்தின் அதிகாரத்தையும் பரம்பரைச் பெருமையையும் காப்பாற்றிக் கொள்ளத் தன் சொந்த உடலையே வதைத்துக் கொள்ளும் போது, மற்றொரு எளிய மனிதனின் உடலின் துண்டு அவனுக்கு வழங்கும் மறுவாழ்வு அவனது ஈகோவைத் திருத்துகிறதா அல்லது அதை மேலும் பலப்படுத்துகிறதா? என்ற வினா என்னுள் எழுகிறது.
இந்தக் கேள்விக்குரிய விடையினை எழுத்தாளர் பாலாஜி பிருத்விராஜின் ‘தூளி’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, இத்தகைய மறுவாழ்வு அவனது ஈகோவை ஒருபோதும் திருத்துவதில்லை; அவனது பரம்பரை அதிகாரப் பெருமிதத்தையும் வியாபாரக் கணக்குகளையும் மேலும் பலப்படுத்தி, வர்க்க ஆதிக்கத்தை இன்னும் ஆழ வேரூன்றச் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மனிதனின் அக உலகம் அவனது அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது; அந்த அதிகாரம் அசைக்கப்படும் போது அவன் தன் உடலையே அழிக்கத் துணிகிறான்.
கதையின் முதலாளி தனக்கு ஆண் வாரிசு பிறக்காததும் மகளின் காதல் திருமணமும் தன் ஆண்மைச் செருக்குக்கு விடுத்த சவாலாக உணர்கிறான். அதைத் தாங்க முடியாமல் தன் கல்லீரலை மதுவைக் கொண்டு விஷமாக மாற்றிச் சிதைக்கிறான்.
தன் பரம்பரைக் கணக்கையும் சிவகிரி ஜமீன் தேக்குத் தூண்களையும் தந்தையின் ஆளுமையையும் தன் உடலுக்குள் சுமப்பதாக நம்பும் அவனது ஈகோ, உடல் அழியும் நிலையிலும் தன் அகப்பொய்மைகளை விடத் தயாராக இல்லை.
தன் சொந்த உடலை வதைத்துவிட்டுக் கடைசியில் அவன் பிழைத்துக் கொள்வது மற்றொரு எளிய ஏழையின் உடல் உறுப்பு தானத்தினால்தான் (உண்மையில் ஏஜெண்டுகளின் வழி வறுமையால் விற்கப்பட்ட உடல் துண்டு).
ஒருபுறம் குடிக்கு அடிமையான ஏழைத் தொழிலாளி, மறுபுறம் எங்குமற்றுப்போன உணர்ச்சியற்ற அவனது மனைவி. முதலாளியின் உயிருக்கான விலையை அந்த எளிய பெண்ணின் உடல் சுமக்கிறது.
மருத்துவமனையில் மறுபிறப்பு எடுத்து எழுந்து வரும் அந்த முதலாளி, அந்தத் தியாகத்திற்காக அல்லது அந்த எளிய மனிதர்களின் வறுமைக்காக மனம் வருந்துகிறானா என்றால் இல்லை. அவனது முதல் எண்ணமே, “அந்தக் குழந்தையைக் கூட்டிட்டு வாங்க… சொத்தை என் பேரக் குழந்தை பேரில் எழுதி வைக்க வேண்டும்” என்பதாகத்தான் இருக்கிறது.
மற்றொரு மனிதனின் உடலின் ஒரு பகுதி தனக்குள் பொருத்தப்பட்ட பிறகும் அந்த முதலாளியின் அக உலகத்தில் எந்த ஒரு மெய்யியல் மாற்றமும் நிகழ்வதில்லை.
அவன் சுஜியைக் கண்டதும் தன் முகத்தில் ஒரு நளினமான ‘வணிகப் புன்னகையைத்’ தயாரித்துக் கொள்கிறான். அந்தப் புன்னகை அவன் தொழிலில் நண்பர்களுக்கு விருந்துகளில் தரும் சிரிப்பைப் போன்றது. அன்புகூட அங்கே ஒரு கணக்கீடாகவே மாறுகிறது.
தன் உடலுக்குள் வேறொரு எளிய மனிதனின் குருத்து போன்ற கல்லீரல் வளர்ந்தாலும் அவனது மனதுக்குள் இருக்கும் சிவனேச நாடார் பரம்பரைச் செருக்கும், “என் சொத்து, என் வாரிசு” என்ற அதிகாரப் புத்தியும் மாறவில்லை. மறுவாழ்வு அவனுக்கு மரணத்தின் பயத்தைக் கற்றுக் கொடுத்திருந்தாலும், அவனது ஈகோவை அது துளியும் திருத்தவில்லை; மாறாக, தன் அதிகாரத்தைத் தொடர அந்த எளிய உடலையும் தன் வாரிசு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஈகோவின் உச்சத்தையே அது காட்டுகிறது.
தன் சொந்த உடலை வதைத்துக் கொண்ட ஒரு மனிதனுக்கு எளிய மனிதனின் உடல் துண்டு வழங்கும் மறுவாழ்வு அவனது ஈகோவை ஒருபோதும் திருத்துவதில்லை. அது அவனது குற்றவுணர்ச்சியைக் கூடத் தூண்டாமல், அவனது பரம்பரை அதிகாரப் பெருமிதத்தையும் சொத்துரிமை வெறியையும் மேலும் பலப்படுத்துவதற்கே பயன்படுகிறது என்பதை ‘தூளி’ சிறுகதை யதார்த்தமாக நம் கண்முன்னே நிறுத்துகிறது.
எழுத்தாளர் பாலாஜி பிருத்விராஜின் ‘தூளி’ சிறுகதை, மனிதனின் அகக் கிடக்கைகளையும் உடல் சார்ந்த பலவீனங்களையும் வர்க்க முரண்பாடுகளையும் சமரசமின்றிப் பேசும் படைப்பாகும். பரம்பரைச் சொத்து, ஆண் திமிர், வாரிசு அரசியல் ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட மனிதனின் அக உலகம், ஏழையின் உடலின் துண்டால் மீட்கப்படும்போது எழும் உளவியல் சிக்கல்களை இக்கதை துல்லியமாக வெளிச்சமிடுகிறது. மனித வாழ்வின் குரூரமான எதார்த்தங்களை முகத்தில் அறைவது போலச் சொல்லும் இப்படைப்பு முக்கியமான என எண்ணுகிறேன்.
– – –
