நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 99.அக வடு  (ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரனின் ‘தழும்புகள்’ சிறுகதையை முன்வைத்து…)

 

நவீனத் தமிழ்ச் சிறுகதை உலகில் எளிய மனிதர்களின் துயரங்களையும் அவர்களின் அக உலகப் போர்களையும் நுட்பமாகப் பதிவு செய்து வருபவர் எழுத்தாளர் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். அவர் எழுதிய ‘தழும்புகள்’ சிறுகதை, நடுத்தர வர்க்க முஸ்லிம் குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கல்களையும் அதனால் உருவாகும் தனிமனித உளவியல் சிதைவுகளையும் துல்லியமாகக் காட்டுகிறது.

உடல்ரீதியான காயங்கள் ஆறிவிடும்; ஆனால், வறுமையும் குடும்பச் சூழலும் மனித மனங்களில் ஏற்படுத்தும் வடுக்கள் ஒருபோதும் மாறுவதில்லை. அந்த மாறாத வடுக்களையே இக்கதை ‘தழும்புகள்’ என்ற குறியீட்டின் வழியாகப் பேசுகிறது. 

“பணம் மட்டும்தான் இதுவரை எங்கள் வீட்டில் பெரும் பிரச்சனையாக இருந்தது. இன்னொரு மருமகள் வந்ததும் குடும்பத்துக்குள் மெல்ல விரிசல் உருவாவதை உணர்ந்தேன்.”

குடும்பத்தின் நிதிநிலை எப்போது பின்தங்குகிறதோ, அங்கே மனிதர்களின் குணநலன்களும் அதிகாரமும் மாறத் தொடங்குகின்றன. இக்கதையின் மையப் பாத்திரமான இக்பால் தன் குடும்பத்தின் மூத்த மகன். பாரம்பரியமாக குடும்பத்தை வழிநடத்த வேண்டிய மூத்த மகனின் கைகள் வறுமையின் காரணமாகக் கட்டப்பட்டிருக்கின்றன.

குடும்பத்தின் தூணாக இருந்த வாப்பா, உடல்நலக் குறைவாலும் வேலையின்மையாலும் மூலையில் ஒதுங்கிவிடுகிறார். இந்த வெற்றிடத்தை உம்மா தனது அதிகாரத்தால் நிரப்புகிறாள். சொந்த பந்தத்தின் மீதான பிடிப்புக்காகத் தம்பி காஜாவுக்குக் குடும்பத்திற்குப் பொருத்தமில்லாத நபீசாவை மணமுடித்து வைப்பதில் உம்மா காட்டும் பிடிவாதம், குடும்பத்திற்குள் புதிய மோதல்களுக்கு வித்திடுகிறது.

வீட்டின் மற்ற உறுப்பினர்களைவிட முபாரக் கைநிறைய சம்பாதிக்கத் தொடங்கியவுடன், குடும்பத்தின் முடிவெடுக்கும் அதிகாரம் அவனிடம் செல்கிறது. மூத்தவனான இக்பாலால் எதையும் பேச முடியாமல் மௌனியாக இருக்க நேரிடுகிறது. பணம் படைத்தவனே வீட்டின் தலைவன் என்ற நவீன யதார்த்தத்தை இக்கதை காட்டுகிறது.

இக்பாலின் பாத்திரம் நவீனச் சமூகத்தின் சராசரி நடுத்தர வர்க்க மனிதனின் குறியீடாகும். அவனுக்குள் எழும் தத்தளிப்புகள் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வியலோடும் பொருந்திப் போகின்றன.

கம்பெனியில் ‘நோ ஒர்க்’ பிரச்சனை, மகளின் ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாத சூழல், வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்க இயலாமை என இக்பால் பலமுனைகளில் முடக்கப்படுகிறான். இந்த இயலாமை அவனுக்குள் கோபமாக உருவெடுத்து, தன் மனைவி ஜெமி மீது வெளிப்படுகிறது. தன் மீதான கோபத்தை வெளிப்படுத்த முடியாதவன், தனக்குச் சாதகமாக இருப்பவள் மீதே தனது விரக்தியைக் காட்டுவது சமூகத்தின் பொதுவான உளவியலாகும்.

வியாபாரத்திற்காக ஜெமி தன் தாலியைக் கழற்றித் தர முன்வரும்போதும் பின்னர் அந்தத் துணி வியாபாரம் தோல்வியடைந்து பணம் வீணாகும்போதும் இக்பால் அடையும் மன உளைச்சல் கொஞ்சநஞ்சமல்ல. தன் மனைவியின் நகையைக் காப்பாற்ற முடியாத, அவளுக்குச் சரியான வாழ்வைத் தர முடியாத கணவனின் குற்ற உணர்ச்சி வாசகரின் மனத்தைக் கனக்கச் செய்கிறது.

இக்கதையில் உறவுகள்கூடப் பொருளாதாரத்தின் அளவுகோலால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன.

திடீரென்று வந்து நிற்கும் திருமணப் பேச்சுகள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும்; ஆனால், இக்பாலுக்கோ அது பெரும் சுமையாக, அச்சமாக மாறுகிறது. “எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணுமல்லங்க… திடீர்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இப்படி குண்ட தூக்கிப் போடுவாங்கன்னு நினைச்சமாக்கும்?” என்ற உம்மாவின் கேள்வி, திட்டமிட முடியாத வறுமையின் கோர முகத்தைக் காட்டுகிறது.

தம்பி முபாரக் ஒட்டுமொத்தத் திருமணச் செலவுகளையும் அண்ணன் தம்பிகள் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடும் போது, அங்கே அண்ணன்-தம்பி உறவு வணிகக் கணக்குகளாகச் சுருங்கிவிடுகிறது. இக்பால் பெயரளவில்தான் மூத்தவன்; ஆனால், பணமில்லாத காரணத்தால் அவனது மூத்த உரிமையும் மதிக்கப்படுவதில்லை.

இக்கதையில் உரையாடல்களைவிட மௌனமே மிகுதியாகப் பொருள் உணர்த்துகிறது. வாப்பா தன் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் மூலையில் அமர்ந்து மௌனிப்பதும் உம்மாவின் கடுமையான சொற்களுக்கு எதிர்த்துப் பேச முடியாமல் அமைதி காப்பதும் முதுமையின் பரிதாப நிலை. க்பால் சுவரின் மூலையில் ஊர்ந்து செல்லும் பல்லியைப் பார்த்துக் கொண்டே எதையோ யோசித்து அமர்ந்திருக்கும் சித்திரம், அவனது மனத்தின் ஸ்திரத்தன்மையற்ற தன்மையைக் காட்டுகிறது. இரவின் இருள் கவிழும் வேளையில் ஜெமியும் இக்பாலும் ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொள்வது, நடுத்தர வர்க்கத்தின் முடிவில்லாத இருண்ட வாழ்வியலை அடையாளப்படுத்துகிறது.

இந்தச் சிறுகதை, வறுமை மனிதர்களின் மானுடப் பரிமாணங்களை எவ்வாறு சுருக்குகிறது என்பதை எந்தவித சமரசமும் இன்றிப் பதிவு செய்துள்ளது. பொருளாதாரப் பாதுகாப்பற்ற தன்மை குடும்பத்தை எப்படி உள்ளிருந்தே அரித்துத் தின்கிறது என்பதற்கான சாட்சியே இக்கதை.

இக்பாலையும் ஜெமியையும் போல சமூகத்தில் எத்தனையோ மனிதர்கள் தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்காகவும் சமூக அந்தஸ்துக்காகவும் தங்களின் நிம்மதியையும் ஆத்ம திருப்தியையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், ‘தழும்புகள்’ என்ற இச்சிறுகதை வெறும் குடும்பத்தின் கதை மட்டுமன்று; சமூகம் தன் தோளில் சுமந்துகொண்டிருக்கும் அழியாத வடுக்களின் வெளிச்சமுமாகும்.

– – –

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *