இரு நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 102.அடிமைத்தளை  (வண்ணநிலவனின் ‘பாம்பும் பிடாரனும்’ சிறுகதையை முன்வைத்து…)

 

மனிதர்களின் வாழ்வியலை, அவர்களின் அகத்துடிப்புகளை, யதார்த்தமும் குறியீட்டுத் தன்மையும் குலையாமல் பதிவுசெய்த முக்கியப் படைப்பாளர்களுள் எழுத்தாளர் வண்ணநிலவனும் ஒருவர். அவரது புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்றான ‘பாம்பும் பிடாரனும்’, ஒரு பிடாரனுக்கும் அவன் வளர்க்கும் நாகப்பாம்புக்கும் இடையிலான உறவை விவரிப்பதுபோலத் தொடங்கி, ஆழமான தனிமனிதவாழ்வியல் (Existential), தத்துவார்த்தச் சிக்கல்கள் ஆகியனவற்றைப் பற்றிப் பேசுகிறது.

கதையின் தொடக்கத்திலேயே ஆசிரியர் மனிதனுக்கும் பிராணிக்கும் இடையிலான எல்லையைத் தகர்க்கிறார். பிடாரனும் பாம்பும் வெறும் எஜமானும் வளர்ப்பு விலங்குமன்று; நீண்ட காலப் பழக்கத்தினால் ஒரே நிறத்தையும் தன்மையையும் அடைந்த ஆன்ம தோழர்கள்.  

“யாரோ ஒருவருக்கு ஆதிநிறம் வேறொன்றாக இருந்து, நட்பின் நிமித்தம் சுய வர்ணத்தை அழித்துக் கொண்டிருந்தார்கள். அபூர்வமான சிநேகத்தால் இருவரும் பீடிக்கப்பட்டுப் பல காலமாயிற்று. யாரிடமிருந்தும் யாரும் இனித் தப்பிப்பதற்க்கில்லை.”   

இங்குச் ‘சுய வர்ணத்தை அழித்தல்’ என்பது தனிமனித உறவுகளில் நிகழும் முழுமையான சமரசத்தையும், ஒருவரோடு ஒருவர் கரைந்துபோகும் நிலவையுமே குறிக்கிறது. சமூகம் கட்டமைத்த அடையாளங்களை விடுத்து, முற்றிலும் வேறுபட்ட இரண்டு உயிர்கள் தமக்குள் பொதுவான உலகை உருவாக்கிக் கொள்கின்றன.

பிடாரனின் எச்சில் மகுடியின் துவாரங்களை அடைப்பதும் பாம்பின் உடல் அந்த ஈரத்தில் ஊர்ந்து செல்வதும் இரண்டு உயிர்களுக்கிடையிலான பிரிக்க முடியாத பந்தத்தின் பௌதிக வெளிப்பாடு. இந்தச் சிநேகம் இன்பத்தை மட்டுமன்று, ஒருவித தவிர்க்க முடியாத பிணைப்பையும் (Fatalistic Bond) தருகிறது.

கதையில் வரும் பிடாரனின் மாமன் கதாபாத்திரம் மரபுக்கும் இயற்கைக்கும் இடையிலான பாலமாகச் சித்தரிக்கப்படுகிறது. அவனது உடற்கூறுகளும்கூடப் பாம்புகளோடு பொருந்திப் போகும் விதம் விவரிக்கப்படுகிறது.

பாம்புகளைப் பிடித்துப் பிழைத்தாலும் அவற்றைச் சித்திரவதை செய்யாமல், பத்துப் பதினைந்து மைல் தூரம் நடந்து மலைகளில் கொண்டு போய்விடும் மாமனின் குணம் அவனது அகத்தூய்மையைக் காட்டுகிறது. 

“நாகங்களுக்குப் பயப்படும் ஜனங்களுக்குள் அமைதி உண்டாக்கவும், நாகங்களைக் காப்பாற்றவும் மாமன் வாழ்ந்தான்” என்ற வரி, அவனது சமூகப் பணியை உணர்த்துகிறது. ஆனால், இத்தகைய உயர்ந்த அறத்துடன் வாழ்ந்த மாமன் இறுதியில் பட்டினியால் சீரழிந்து இறந்தான் என்ற முரண், உண்மையான அறம் பேணுபவர்களுக்கு இந்தச் சமூகம் வழங்கும் பரிசை மிகக் கறாராகச் சுட்டுகிறது. 

இயந்திரத்தனமான நவீன உலகமும் தன் நலனை மட்டுமே முன்னிறுத்தும் மனித சமூகமும் பாரம்பரியமான கலைகளையும், இயற்கையோடு இயைந்த வாழ்வியலையும் எவ்வாறு நசுக்குகின்றன என்பதன் குறியீடே மாமனின் துயர மரணம்.

கதையின் திருப்புமுனை என்பது பாம்பின் திடீர் உத்வேகமும் ஆட்டமும் ஆகும். எப்போதும் மகுடி ஓசைக்குக் கட்டுப்பட்டு, சுருண்டு, வித்தைகள் காட்டி, சிறிதளவு உணவிற்காக வாழ்ந்து வந்த பாம்பு, திடீரென்று அந்தச் சங்கிலியை உடைத்தெறிய முயல்கிறது. 

“தன்னுடைய அடிமைத்தளையை திடீரென்று உணர்ந்து, சுதந்திரமடைய வேண்டி இவ்விதமாய் நீண்ட ஆட்டம் போட்டு யுத்தி செய்கிறதோ” என்று பிடாரன் நினைப்பதில் ஆழ்ந்த தத்துவார்த்தக் கேள்வி அடங்கியுள்ளது. காலம் காலமாகப் பழக்கப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையை விட்டு வெளியேறி, சுயத்தை மீட்டெடுக்கத் துடிக்கும் எந்தவொரு உயிருக்கும் இந்தக் கிளர்ச்சி பொருந்தும்.

பிடாரனுக்குத் தெரிந்த மகுடி ஞானத்தை பாம்பு மிஞ்சிவிடுகிறது. அது தனக்கான புதிய நாத ரூபங்களைத் தேடுகிறது. இது மனிதனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, கலை மற்றும் ஆன்மா தன் சுய எல்லைகளை விரிவுபடுத்தும் தருணமாகும்.

பாம்பின் வாழ்க்கையிலேயே அதுவரை காணாத உச்சக்கட்ட நிகழ்வு சூரிய தரிசனம் ஆகும். வானத்தை நோக்கித் தலை அண்ணாந்து சூரியனைத் தரிசிக்கும் அந்தத் கணம், சாதாரண உலகியல் பிணைப்புகளிலிருந்து ஒரு ஆன்மா முழுமையாக விடுவித்துக் கொள்ளும் உன்னத நிலையைக் குறிக்கிறது.

“திடீரென்ற நிலையில் பாம்பின் தலை, வானத்தை நோக்கி அண்ணாந்துவிட , பாம்பு சூர்யனைத் தரிசித்து விட்டது… தானடைந்த நிலை உன்னதமென்று உணர்ந்து, எங்கெங்கோ காட்டுப் பொந்துகளில் பதுங்கி உறைந்து காலம் கழிக்கும் சர்ப்பங்களை நினைத்தது. 

இந்தக் காட்சி தனிமனிதன் தன் வாழ்நாளின் இறுதியில் அல்லது விழிப்புணர்வின் கணத்தில் அடையும் ‘ஞானம்’ அல்லது ‘தன்னிலையறிதல்’ (Self-Realization) ஆகும். சமூகம் வகுத்த வட்டத்திற்குள் (மகுடியின் ஓசை) வாழ்ந்ததற்குப் பதிலாக, பிரபஞ்சத்தின் பேரொளியான சூரியனை (Ultimate Truth) நேருக்கு நேர் சந்திப்பது பாம்பின் ஆன்ம விடுதலையாகிறது. இந்த விடுதலை பிடாரனுக்குப் புரியவில்லை; அவனால் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தப் புரியாமையே அவனுக்குத் தாங்கவொண்ணா நெஞ்சடைப்பைத் தருகிறது.

இறுதியில் பாம்பு உயிர் துறந்து சுருண்டு விடுகிறது. இது வெறும் பிராணியின் மரணம் அன்று; நீண்ட காலமாகத் தொடர்ந்த உறவின் முடிவு, ஒரு கலை வடிவம் தன் முழுமையை அடைந்து மறைவது. பிடாரன் தன் தோழனை, தன் கலையின் ஒற்றைக் ரகசியத்தை இழந்து நிற்கிறான். அவனால் அந்த இறுதி நிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 

இது மனிதவாழ்வியலின் எதார்த்தமான துயரம். தனக்கு அருகில் வாழும் மற்றொரு உயிரின் அல்லது தோழனின் அக உலகை, அதன் விடுதலைத் தாகத்தை மனிதனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதையே எழுத்தாளர் வண்ணநிலவன் இந்நிகழ்வின் மூலம் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

எழுத்தாளர் வண்ணநிலவனின் ‘பாம்பும் பிடாரனும்’ சிறுகதை, மேலோட்டமாகப் பார்த்தால் ‘ஒரு பாம்பாட்டியின் கதை’ போலத் தோன்றினாலும் ஆழத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு, கலைக்கும் ஆன்மாவிற்கும் உள்ள பிணைப்பு, அடிமைத் தனத்திலிருந்து விடுபடத் துடிக்கும் சுதந்திர வேட்கை ஆகியவற்றைத் துல்லியமாகப் பேசுகிறது.

மாமனின் பட்டினிச் சாவு சமூகத்தின் தோல்வியைக் காட்டுவது போல, பாம்பின் சூரிய தரிசன மரணம் ஆன்மாவின் வெற்றியைக் குறிக்கிறது. பழக்கப்படுத்தப்பட்ட வாழ்க்கையின் சுகத்தைவிட, ஒரு கணமேனும் சுயமாய் நிமிர்ந்து பேரொளியைத் தரிசித்துவிட்டு மாய்வது எவ்வளவோமேல் என்ற உன்னத தத்துவத்தை இப்படைப்பு வாசகரின் மனத்தில் பதித்துச் செல்கிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *