“அப்பான்னு நினைக்கறப்போல்லாம் எனக்கு எறியற அந்த சிகரெட்டும் அவர சுத்தி மெதக்குற பொகையும்தான் ஞாபகம் வரும்” சேகர் அண்ணா பேசத்தொடங்கினார்.
“பொக எப்படி இருக்குன்ற? அப்படியே மேகம் மாதிரி மெதந்துக்கிட்டு, சட்டுனு கலையாம அங்கேயிருந்து கொஞ்சம் கொஞ்சமா மேல போகறதுக்கு ஆசப்பட்டுக்கிட்டு….. ஆனாலும் அவர சுத்திக்கிட்டே இருக்கறமாதிரி எனக்கு தோணும். சிகரெட் குடிக்கும்போது மட்டும் அப்பா ஃபேன் போடமாட்டாரு. சீக்கிரம் சிகரெட் தீர்ந்துபோய்டும்னு சொல்வாரு. அதென்னவோ அவரு சிகரெட் குடிக்கறத பாக்கறதுல எனக்கு அப்படியோரு ஆசை. ஏன் வெறின்னுகூட சொல்லலாம். ரொம்ப ஸ்டெய்லா இருக்கும். அதும் ராத்திரில அந்த சின்ன பொட்டு வெளிச்சத்துல அவரு முகம் கொஞ்சம் தெரியும் அப்பல்லாம் எனக்கு ஏதோ ஒரு கோயில் செலய பாக்கறமாதிரித்தான் தோணும். யட்சன் செல. காலத்துல உறஞ்சு போய் இருக்குமே அதுமாதிரி.”
எனக்கும் கிட்டத்தட்ட அதுபோன்றதொரு அனுபவத்தை சேகர் அண்ணணுடைய குரலும் அந்த இடமும் கொடுத்துக் கொண்டிருந்தது. அவர் எனக்கு பக்கத்து வீடுதான். ஐம்பதைக் கடந்து விட்டிருந்தார். வரலாறு படிக்க ஆசைப்பட்டவர், அறிவியல் பட்டம் பெற்று ஆசிரியராகி செட்டாக வாழ்ந்து கொண்டிருந்தார். அவரிடம் எனக்கு பிடித்ததே அவருடைய உடை அணியும் நேர்த்திதான். சாதாரணமான சட்டையும் பேண்டும்தான் ஆனாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். கசங்கிய சட்டையையோ, நூல் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு உடையையோ, அழுக்கையோ இதுவரை நான் அவரிடம் பார்த்ததில்லை. அவர் பேச்சு…. அது ஒருவிதமான போதை தரும் பாட்டு எனக்கு. அவர் என்ன பேசினாலும் அது எனக்கு புரிந்தாலும் இல்லாவிட்டாலும் என்னால் வேறெங்கும் செல்ல முடியாதபடி சுண்டியிழுக்கும்.
வழக்கமாக நாங்கள் அமரும் இடம்தான். அதே மரத்தடி, சிமெண்ட் பலகை. ஒரு சின்ன விநாயகர். நிலா…. தேய்கிறது என்றுதான் நினைக்கிறேன். சேகர் அண்ணா ஆசுவாசமாக புகைவிட்டபடி அமர்ந்திருந்தார். இவரும் யட்சன்தான். ஆனால் எல்லோருக்கும் அல்ல. பொதுவாக சேகர் அண்ணா கண்ணியமான ஒரு ஸ்கூல் வாத்தியார். அதிகம் பேசமாட்டார். சயன்ஸ் தவிர அவருக்கு ஏதும் தெரியாது. கொஞ்சம் முசுடு. அவ்வளவு சீக்கிரம் அவரிடம் வேலைவாங்க முடியாது என்று பெயரெடுத்தவர். ஆனால் எனக்கு தெரிந்த சேகர் அண்ணன் அதுவும் இந்த மரத்தடியில் யட்சன் சேகர் அண்ணன்தான். சிகரெட்டை குடிக்கிறாரா இல்லை கொஞ்சுகிறாரா என்று சந்தேகம் வரும். அவசரமே இல்லாமல் மிக மிக நிதானமாக அதை ரசிப்பார். ஃபில்டர் இருக்கும் பகுதி நசுங்காமல் அவர் சிகரெட்டை தூக்கிபோடுவது போல் செய்ய நானும் பலமுறை முயன்றிருக்கிறேன். இன்னும் முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
நானும் ஆசிரியர்தான். வேலையை தொலைத்துவிட்டு சுற்றியலைந்து கொண்டிருக்கும் முப்பதைத்தொட்ட ஆசிரியன். சோற்றிற்கு பிரச்சினையில்லை, சுகத்திற்கு உண்டு. ஆசிரியன் என்றேனல்லவா……என்ன ஆசிரியன்… கிளி…. அது எச்சம் போட்டால் மரம் முளைக்கும் என்று சேகர் அண்ணன் சொல்லுவார். ஆனால் அதையே செய்யும் வாத்தியார் வெறும் மலட்டுக்கிளி என்று கிண்டலடிப்பார்.
“என்னடா என்ன பாக்குற? மாலதியா? இல்ல சினேகலதாவா?” என்றார் புகைவளையத்திற்கு அப்பாலிருந்து.
“இல்லண்ணா கிளி ஞாபகம் வந்துருச்சி… அதான்” என்றேன்
“நானும் கிளியப் பத்தித்தானடா கேட்டேன். எந்தக்கிளி… சினேகாதான… செல்லமா சினேகம்மை… நல்லாருக்கில்ல… பேசாம அவளயே டாவடிச்சுடு… கூப்பிடறதுக்கு நல்லாருக்கில்ல பேரு..” மேகங்களுக்கு உள்ளிருந்து குரல் கேட்டது.
“கூப்பிட நல்லாருக்குன்ணு கட்டிக்க முடியுமா என்ன? போங்கண்ணா”
“அடேய் எங்க அப்பா என்ன எப்படி கூப்பிடுவாரு தெரியுமா?…… மொதலாளி…. மொதலாளின்னு… ஏன் அப்படி கூப்பிட்டாருன்னு இன்னெக்கும் நான் யோசிக்கறதுண்டு. தெரியல. ஏன்னா அவரு மொதலாளி குடும்பத்துல பொறந்து தொழிலாளியா மாறிட்டதுனாலயா, இல்ல கடைசிவரை அவருக்குள்ள மொதலாளியாகணும்ற கனவ ஒளிச்சு வச்சிருந்ததுனாலயா…. தெரியல. ஆனா என்ன மொதலாளின்னு தான் கூப்பிடுவாரு. எப்பவும் இல்ல, தொ இப்ப நீ இங்க ஒக்காந்திருக்கயே அதே மாதிரி நான் அவரு பக்கத்துல ஒக்காந்துட்டு, இதே மாதிரி அவரு பொகவிடுறத பாத்துட்டே இருப்பேன். அவருக்கு சிகரெட் குடிக்கறது ஒரு மாதிரி பர்சனலான விஷயம், ஏதோ ப்ரார்த்தன மாதிரி இருக்கும்போல. எனக்கு அவரு அப்படியே வானத்துக்கு புகையில ஏறிப்போற யட்சன் மாதிரியே தோணும். அவரு எதத்தான் அப்ப பேசல? மொதலாளி என்ன பாக்குறீங்கன்னு கேப்பார். தொடமாட்டார். அவரு அவர காட்டுனதெல்லாம் வெறும் வார்த்தையில தான். தொடுக கிடையாது, ஒரு கட்டிப்புடி கெடையாது. இந்தமாதிரி ஒக்காந்திருக்கற நேரம்தவிர மத்த நேரத்துல ம்ஹூம் பேச்சே கிடையாது.”
“ஏண்ணா? அவரு என்ன பண்ணிட்டிருந்தாரு அப்ப”
மேல்சட்டைப்பக்குள் கைவிட்டு துழாவினார் சேகர் அண்ணன். ஒன்றும் இல்லை என்பதுபோல அப்படியே மார்பைத் தேய்த்து தட்டிக்கொண்டார்.
“என்னடா கேட்ட? “
“இல்ல அப்பா பத்தி சொன்னீங்களே அதத்தான்…” நான் எனக்கென வைத்திருந்த பாதி தீர்ந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துக்கொடுத்தேன்.
முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் இரண்டு எடுத்துக்கொண்டார். அவரிடத்தில் எனக்கு பிடித்ததே அந்த சலனமற்ற தன்மைதான். சலனமற்ற தன்மையா? அவரைச்சுற்றி மிதக்கும் புகை சலனமற்றதுபோலத்தான் தெரிகிறது ஆனால் அது சலனமில்லாமல் இருக்கிறதா என்ன? ஒருதுளி நெருப்பு கனன்று கொண்டே இருக்கிறதே அது சலனமற்றா இருக்கிறது?. கனன்று கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி இருப்பதையெல்லாம் சாம்பலாக்கிக்கொண்டு. இதையெல்லாம் எப்படித்தான் சொல்வது? நானென்ன சேகர் அண்ணனா சம்பந்தமேயில்லாத எதையாவது சம்பந்தப்படுத்தி அழகாக பேசுவதற்கு?
“அப்பா பெரியவீட்டுக்கு இரண்டாவது புள்ள. கொண்டக்காரனுங்கன்னு சொல்வாங்க அங்க. வசதிக்கு கொறயில்ல. சுவேகான்னு ஒரு வண்டி இருந்தது கேள்விப்பட்டிருக்கயா? மொபெட்…. அது வந்தப்போ மொதல்ல அத சேலத்துல புக் பண்ணி வாங்குனது அவருதான். அதுபோக இவருக்குன்னு புல்லட் ஒன்ணு, ஜாவா ஒன்னு. பொதுவுல ஃபர்கோ லாரி.. மாடுங்க… மில்லு… பெரிய வீடு… மைனருங்க எல்லாம்….” புகை மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் பேச்சின் கனத்துக்கேற்றவாறு விதம்விதமாக வெளிவந்து என் மூச்சை நிறைத்தது. துருத்தியேதான்.
“அப்புறம் என்ன? பெரிய ஆளு.. கொஞ்சம் ஒட்டாமத்தான இருந்திருப்பாங்க. அந்தகாலத்துலதான் பொண்டாட்டியக்கூட கொஞ்சமாட்டானுங்களே. புள்ளங்கள கொஞ்சவா போறாங்க. எல்லாம் ஒரு மிதப்புதான் இல்ல.”
“ஆமா பொண்டாட்டிய கொஞ்சமாட்டானுங்களாம்… இவன் கண்டான்…….என்னடா மிதப்பு? அது மிதப்பில்ல. ஆணவம். ஆணவம்னா திமிருண்ணு அர்த்தமில்ல அவருக்கு. எல்லாத்தையும் அவரால ஆளமுடியும்ன்ற ஆம்பளத்தனம். அப்பவே லொயோலா காலேஜ்ல எம் ஏ படிச்சவரு இல்ல. இருக்கத்தான செய்யும். “
“அந்தக் காலத்துலயேவா? அப்புறம் என்னாச்சு?”
“ஒண்ணும் ஆகல… படிச்சாரு வீட்டுக்கு வந்தாரு அண்ணனுக்கு தொணையா மில்லுங்கள, மாடுங்கள, லாரிங்கள பாக்க ஆரம்பிச்சாரு. அப்படியே குடிக்கவும்…”
“மைனர் வாழ்க்கைல அதெல்லாம் அந்தகாலத்துல சகஜம்தான…”
“சகஜம்தான்… ஆனா இவருதான் மைனர் இல்லயே. ஆம்பளடா அப்பா. ரொம்ப நல்லவரு. தாத்தா சொல்லிட்டாருண்ணா மறுபேச்சு கிடையாது. அப்பாயி சொன்னா முக்கல் முனகல் கூட கெடயாது. அண்ணன்னா உசுறு. அறிவாவது மசுறாவது… அண்ணன் படிக்கல பெரிய குடும்பத்துல பொண்ணெடுத்துட்டான்.. அண்ணி ஊரையே வித்துருவாண்ணு பாத்தா… ஊரையே வாங்கிப்போடுவா…… அக்காளுங்க ரெண்டுபேரு… ஒரு தம்பி… என்னா பண்றது. தாத்தா கொஞ்சம் கொஞ்சமா நெல்லுலயும் தொவரைலயும் வழுக்க ஆரம்பிச்சுட்டாரு. அப்ப சேலத்துல கிழங்குமில்லு நல்லா ஓடன நேரம். அண்ணன் சொன்னான் தம்பி மண்டைய ஆட்டிட்டான். அவ்ளவுதான்.”
சிகரெட்டை ஆழமாக இழுத்து பின் தூக்கி எறிந்தார்.
“அதனால என்னாண்ணே… பணம்தான் இருக்கில்ல.. வசதிகொறவும் இல்ல…”
“போடா பைத்தியக்காரா எவ்வளவு பணம் இருந்தாலும்…… அந்த குடும்பத்துல படிச்சுப்புட்டாரே அப்பா. அவருக்கு டென்னிஸ் ப்ளேயராவணும்னு ஆச. அவரோட பேட்ச்லதான் என்னமோ அமிர்தராஜ்னு அந்த காலத்துல ஒரு டென்னிஸ் ப்ளேயரோட தம்பி படிச்சான்னு சொல்வாரு. அவன் கூட டென்னிஸ் மேட்ச் பாத்த கதெயெல்லாம் இதே மாதிரி சிகரெட் பொகைக்கு நடுவுல எனக்கு சொல்வாரு. மொத மொதல்ல ஐஸ் க்யூப் போட்டு விஸ்கி குடிக்கறத அவங்க வீட்டுல பாத்ததா சொல்வாரு. அப்பா ரொம்ப ஸ்டெயில் தெரியுமா. எல்லாத்துலயும் ஸ்டெய்லா இருக்கணும்னு நெனப்பாரு.”
“அதான் உங்கள பாத்தாலே தெரியுதேண்ணா.”
“போடா… இதெல்லாம் என்ன ஸ்டெய்ல். அப்பா சும்மா செகரெட்ட கையில வெச்சிருக்கற ஸ்டெய்ல் எப்படி இருக்கும் தெரியுமா? அவரு விஸ்கி குடிக்கும்போது நீ பாத்துருக்கணும். ரசிகண்டா எங்கப்பா”
“உங்க முன்னாடியேவா… நீங்க சின்னப்பிள்ளயில்ல…”
“அவரு என்னை சின்னப்பையனா பாத்தமாதிரியே எனக்கு நெனப்பில்லடா… என்ன எனக்கு சிகரெட் குடுக்கல அவ்ளோதான். ஒன்னு தெரியுமா அவரு யார்கிட்டயும் எதுவுமே வாங்கமாட்டாரு. யாருக்கும் கேட்டு குடுக்கவும் மாட்டாரு. அவருக்கு தெரியும் அடுத்தவங்களுக்கு என்ன வேணும்ணு. அவரு குடுப்பாரு அவ்ளோதான். நீ இப்ப எப்டி சிகரெட் பாக்கெட்ட குடுத்தியோ அப்படி.”
“அப்புறம் என்ன பண்ணுணாரு?”
“அவரு என்னத்த பண்ணுறது… அண்ணண் இருக்காருல்ல பெரியப்பா. என் அம்மா ஆங்காரமா சொல்லுவா… படிச்ச படிப்புக்கு விலையில்ல… இருக்கற அறிவுக்கு ஒரு மரியாத வேண்டாம்… அண்ணனுக்கு சேர் தூக்கி போடறது… ஆறு படிச்ச அவரு வந்து நிப்பாராம்… இவரு சேர எடுத்து கொண்டுவந்து போடுவாராம். இவரு என்னா வேலைக்காரனா? சரியொத்த பங்காளியில்ல…. துண்டக்கட்டிக்கிட்டு மேல துணியில்லாம தொட்டிக்குள்ளயிருந்து மில்லுல அரைக்கறதுக்கு கிழங்கு அள்ளிப் போடுவாராம்… என்னாடா உங்க அப்பா பண்றாரு. பாத்து பொழச்சுக்கோ… நீயாவது புத்திக்கேத்தமாதிரி பொழச்சுக்கோண்ணு….”
ஒருகணம் எங்களிடையே ஆழ்ந்த மௌனம் உருவானது. மேற்கொண்டு என்ன கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. சேகர் அண்ணா மீண்டும் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டார். மறுபடியும் புகை மண்டலம். இருட்டு எங்களை போர்த்தி எலும்புகளுக்குள் குளிரைத் தர ஆரம்பித்தது.
“ நான் வளர வளர அப்பா மத்தவங்க கிட்ட பேசறது ரொம்ப கொறைஞ்சு போச்சு. எங்கிட்ட மட்டும் நான் இருக்கறத மறந்து பேசிக்கிட்டே இருப்பாரு. அவரு என்னை அதிகமும் தொட்டதில்ல, ஒரே ஒருமுறை……. ஆனா அந்த வயசுல எனக்கு புரியாத என்னென்னத்தயோ பேசிட்டே இருப்பாரு.”
“புரியாததுன்னா?”
“ஆமாடா அன்னைக்கு எனக்கு அது புரியல. அப்புறம் நான் டிகிரி முடிச்ச பின்னாடி புரிஞ்சுகிட்டேன். அப்பா சொல்வாரு… நெருப்பு காத்து ரெண்டுக்கும் கனம் கிடையாது. நெருப்புக்கு மட்டும் உருவம் இருக்கு. காத்துக்கு உருவமும் கிடையாது. ஆனா இது ரெண்டும்தான் அதிகமா செயல்படற பூதம்னு. தண்ணியும், மண்ணும் கனம் இருக்கறது. கீழ படியும் கையால தொடலாம், நக்கிப்பாக்கலாம், மோந்து பாக்கலாம், கையில எடுக்கலாம். ஆனா மொதலாளி நெருப்ப என்ன செய்வீங்க… நக்கிப்பாக்க முடியுமா உங்களால… காத்த கையில புடிக்க முடியுமா உங்களால. ஒரு நாளைக்கு முன்னூறு சர்வீஸ் போட்டு ப்ராக்ட்டீஸ் பண்ணுவேன் டென்னிஸ்ல. காத்துல அந்த பந்து எப்படி திரும்பும் தெரியுமா? ராக்கெட்ல வந்து பதியறது நெஞ்சுல மோதறது மாதிரி இருக்கும் தெரியுமா. கண்ணுல இருக்கு டென்னிஸ் கோர்ட்டும் அந்த வெள்ள ட்ரெஸ்சும். கண்ணுல மட்டும்தான் இருக்கு. நெருப்புக்கு உருவம் மட்டுந்தான மொதலாளி. என்ன புரியுதா? உனக்கு புரியும்போது பாத்துக்கோ.”
நான் மௌனமாக இருந்தேன். இந்தமுறை சிகரெட்டை கொடுக்கலாமா என்ற தயக்கம் வந்தது.
“கொண்டக்காரனுங்க குடும்ப பேரு கெடக்கூடாதுல்ல. பேரு வெறும் காத்துலதான் இருந்தது ஆனா அத காப்பாத்த மண்ணுல நிக்கத்தான வேணும். மண்ணுக்கு மட்டும்தான இருப்புன்னு ஒண்ணு இருக்கு. தண்ணிக்கு இருப்பு இருந்தாலும் அது ஒழுகிக்கிட்டேல்ல இருக்கும். இங்க அப்பா மண்ணுல நின்னாரு. என்ன மண்ணுல நின்னா என்ன, எல்லாரும் இல்ல நிக்கணும். அக்காளுங்களும் தம்பியும் அண்ணணும் ஆகாசத்துக்கும் பூமிக்கும்ல எகிறிக்குதிச்சானுங்க. ஒருத்தனும் பத்து கூட தாண்டல ஒருத்தன் வீட்டு புள்ளங்களும் ஒழுங்குக்கு வரல. எல்லாம் அத்து வுட்டு அலஞ்சானுங்க. தாத்தா இல்லல்ல. அவங்கயாரும் அப்பாவும் இல்லைல்ல. காரதூக்கி கிட்டு மீன்வாங்க அறுவது கிலோமீட்டர் போவாங்களாம், சேர தூக்கிபோட ஆளு வேணுமாம். நல்லாருக்குல்ல….?”
எனக்கு பிடித்தமான, அவரது வழக்கமான நக்கல் சிரிப்பு சிங்கப்பல் தெரிந்து மறைந்தது அழகாக இருந்தது. சிகரெட்டை நீட்டினேன்.
“தண்டவாளப்பெட்டி நிறைய நக இருந்தது, பொட்டிப்பணம் இருந்தது. பணத்த தண்ணின்னு சொல்வாங்க தெரியுமா? அப்படித்தான் ஆச்சு. தண்ணி நெருப்புலயும் காத்துலயும் ஆவியாத்தான போகும். அப்பாவுக்கு அப்பத்தான் கல்யாணம் ஆயிருந்தது. மத்தவங்களுக்கு இருவத்தஞ்சுக்குள்ள கல்யாணம் பண்ற வீட்டுக்குள்ள இவருக்கு மட்டும் முப்பத்தெட்டு வயசில. ஆனா மனுசண்டா எங்கப்பா.”
“ஏண்ணா? எத சொல்றீங்க?”
“எங்கப்பா இருக்காரே ரசிகன், ஆனா ஒண்ணுத்தயும் சொல்ல மாட்டாரு. நான் ஸ்கூல் படிக்கறப்போ இங்கிலீஸ்ல மெர்சென்ட் ஆப் வெனிஸ் பாடமா இருந்தது. ஒரு நாள் ராத்திரி இதே மாதிரி அவர்ட்ட ஒக்காந்திருந்தப்போ, என்ன மொதலாளி படிச்சிட்டு இருந்தீங்கன்னாரு. சொன்னேன். கொஞ்ச நேரம் ஒண்ணுமே பேசல. புரிஞ்சதான்னு கேட்டாரு. நான் மையமா தலய ஆட்டுனேன். எந்தக் கடனுக்குண்ணு சதய அறிஞ்சு கொடுத்துட்டிருக்கேனோ தெரியலண்ணார். படிச்சிட்டேன் அதான் பெரிய தப்பு. கொடுக்கவும் முடியல குடுக்காம இருக்கவும் முடியல. நான் ஏன் இப்படி சிகரெட்டா ஊதறேன் தெரியுமான்னாரு? தலையாட்டினேன்.
சேகரா அறிவு நெருப்புடா, சுடர்மாதிரி தாண்டா முதல்ல ஆரம்பிக்கும். நான் அதுல விழுந்த விட்டில் பூச்சிடா. ஆனா உள்ள பூந்து பூந்து கருகி கருகி வெளியவந்துட்டே இருக்கேன். மீள முடியல. நெருப்புக்கும் காத்துக்கும் கனம் இல்லயில்ல. அதனாலதான் தட்டழியறேன் போல. மண்ணுல இறங்கி நிக்கப்பாக்குறேன் முடியலடா. இந்த கலங்கலும் அழுக்கும் கனமும் தாள முடியல. நான் நெருப்பாவே இருந்திருக்கணும். முடியல. நீ புரிஞ்சுக்கோ. நெருப்பு மட்டும் போதாது வாழ்க்கைக்கு, தண்ணியும் மண்ணும் வேணும். ஆனா அத திரும்பவும் நெருப்பாவும் காத்தாவும் மாத்தவும் முடியணும்.”
கையைச்சுட்ட சிகரெட்டை எறிந்தார் சேகர் அண்ணன். அசந்தர்ப்பமான அந்த மௌனத்தை கலைக்க விரும்பினேன்.
“உங்களுக்கு அது புரிஞ்சதாண்ணா?”
“ஏண்டா ஸ்கூல்ல பத்து பன்னெண்டு புள்ளங்களுக்கு பிட்டு குடுக்கச்சொன்னா குடுத்து தொலையேண்டா. ஸ்கூல பொறுத்தவரைக்கும் நீ வெறும் கிளிதாண்டா. இன்னைக்கு தேதியில வாத்தியானுங்க எல்லாரும் மலட்டுக் கிளிதான். ஆனா கிளி மலடு இல்ல, விததான் மொக்க. உன்னோட அறிவு, நேர்மை, நியாயம், அர்ப்பணிப்பு… த்தூ…. பன்னிக்கு முன்னாடி ஏண்டா முத்தப்போடறே….. பீயத்தான பறிமாறனும்.”
சிரிப்பு வந்தது. எப்பொழுது தத்துவம், எப்பொழுது வாழ்க்கை, எப்போது மலம் என்று அவருக்குச் சரியாகத் தெரியும். படித்து பண்பட்ட சேகர் அண்ணன் கொச்சையாக பேசுவதில் மன்னன். ஆனால் அது வெகு சிலரிடம்தான்.
“அவபேரு என்னடா? சினேகம்மை. அவள்ட போயி நாளைக்கே சொல்லிரு லவ்வ. வேலையில்ல, பணமில்லன்னு பைத்தியக்காரனாட்டம் திரியாத. மாலதி கலருதான், அழகுதான்… எத்தனெ நாளக்கி டா அழகும் கலரும். சினேகம் மாங்கலருதான், ஆனா எல்லாத்தையும் சமாளிச்சுடுவா. மனசு காத்துடா. அதுல ஆச உரசுனா நெருப்பு புடிச்சி எரிஞ்சிட்டே இருக்கும். வயசுல குண்டிக்கு சுகமாயிருக்குண்ணு தோணும் ஆனா மிஞ்சுற சாம்பல் உன்னுதாதான் இருக்கும். சாம்பலுக்கு பதிலா கொஞ்சம் மண்ணுல எறங்கி நின்னா தப்பில்ல. கொஞ்சமா அழுக்க ஒட்டிக்கோ. தண்ணியிருக்கில்ல கழுவிக்கோ. காத்து சரியா அடிக்கும்போது ஒரு நாள் சுடர் நெருப்பு எல்லாத்துலயும் புடிச்சுக்கும் அன்னைக்கு பாத்துக்கலாம்.”
ராஜன் பைக்கில் வந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்த மரத்தடிக்கு அப்பால் நின்றான். மணி ஒன்பதரை என்று அதற்கு அர்த்தம்.
“சிவா அம்மா வாங்கிட்டு வரசொன்னத வாங்கி ராகவன் வீட்டுல வச்சிருக்கேன் நீ போயி எடுத்துட்டு வந்துடு. கிளம்பிடலாம்…” என்றார்.
“சரிடா ராகவா கடமை என்னை அழைக்கிறது. சென்று வென்று வருகிறேன்….” என்று நாடகத்தனமான குரலில் சொன்னார்.
“அண்ணா உங்கப்பா ஏன் அப்படி சொன்னாருன்னு சொல்லலியே…” என்றேன்.
“எந்தப்பொண்ண பாத்தாலும் பொண்ணு வீட்டுல போயி ஏதாவது கொற சொல்லி சொல்லி உனக்கு கல்யாணம் ஆகவிடாம பாத்துட்டே இருந்தா நீ என்னடா பண்ணுவே? கிழங்குமாவு வாசனை எப்படி இருக்கும் தெரியுமா? எறங்கி நின்னா குளுகுளுன்னு இருக்கும். நாத்தம் போக நாலுமொற குளிக்கணும். உன்னால முடியுமா? உன் ரத்தம் அடுத்தவன் உடம்புல தங்கமா இருக்கும், கஞ்சி சாக்கடைல தான் போகனும்னா என்ன செய்வே? என் பையன் சிவராஜ் இன்னைக்கு டாக்டருக்கு படிக்கறான், எங்கப்பாவோட பையன் பத்துபேருகிட்ட மாசம்மாசம் பிச்ச வாங்கி படிச்சான். வயசு காலத்துல கைக்கு பையன் வராம, சொத்துமுழுக்க எவன் எவன் கையிலயோ போறத பாத்துட்டு, பிச்சையெடுக்க மனசும் வராம கிடந்து, முப்பதுநாள் எதையும் திங்காம கொடல் எரிய எரிய புகைஞ்சு சாகுறவனுக்கு அந்த நெருப்பு இப்படி வார்த்தையாத்தான வரமுடியும். ஆனா எங்க அப்பா மனுஷண்டா…. உடம்பு எரிய எரிய படுத்துக்கிடந்தாலும் என்னை கடைசியா தொட்டாரு பாரு, அந்தக்கை குளுந்துதாண்டா இருந்துச்சி. அன்னைலருந்து இன்னைக்கு வரைக்கும் அவர நினச்சுதான் நிக்கறேன்….. நெருப்புலயும் காத்துலயும் மட்டுமில்ல நிலத்துலயும். என் பொண்டாட்டின்னா எனக்கு உசுறு. என் பையன் டாக்டர்…… தோ இந்த வயசுல பி.ஹெச்.டி பண்ணுறேன். அவரு குடிச்ச சிகரெட்டு மேல மட்டும்தான் போய்ட்டு இருந்தது….. அவரமாதிரியே. நான் அப்படியில்ல. போடா போயி பொழப்பப்பாரு. நாளைக்கு சினேகம்மைய பாத்துரு………. அதுக்கு அப்புறமா நெருப்பெரிக்கலாம் என்ன………..” என்றார் சேகர் அண்ணன்.
