இரு நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 109.அடிமைத்தனம்  (நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி’ சிறுகதையை முன்வைத்து…)

 

 

தமிழ் நவீன இலக்கிய உலகில் இருத்தலியல் தனிமை, அக உலகச் சிக்கல்கள், மரபுவழிப்பட்ட கட்டமைப்புகளுக்கு எதிரான மௌனம் ஆகியவற்றைத் தன் எழுத்துகளின் மைய நரம்பாகக் கொண்டவர் எழுத்தாளர் நகுலன் (T.K. துரைசாமி). இவரது படைப்புகள் எப்போதுமே ஆர்ப்பாட்டமான மொழி நடையைக் கொண்டவை அல்ல; மிக அமைதியான, உறைந்த நீரோடை போன்ற சொற்களுக்குள் பெரும் சூறாவளியை அடக்கிவைக்கக் கூடியவை. அந்த வகையில், எழுத்தாளர் நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி’ என்ற சிறுகதை, தனிமனித வாழ்வியல் சார்ந்து ஆழ்ந்த உளவியல் விவாதங்களையும் தார்மீகச் சிக்கல்களையும் எழுப்பும் முக்கியமான பிரதியாகும்.

ஒரு மனிதனுக்கும் அவனது செல்லப்பிராணிக்கும் இடையிலான உறவை விவரிப்பது போல் தொடங்கினாலும் இக்கதை உண்மையில் நவீன மனிதனின் அகத் தனிமை, சமுதாயத்தின் இயந்திரத்தனம் மற்றும் பாசத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இடையிலான மெல்லிய கோடு ஆகியவற்றை ஆராய்கிறது.

கதையின் தொடக்கத்திலேயே கதைசொல்லி நவீனன் தன் வாழ்வின் சுருக்கத்தை நம் முன் வைக்கிறான்:- “என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகின்றேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை… 14ஆவது கதைக்கு வந்த செக்கை கமிஷன் குறைத்துக் கையில் கிடைத்தது 4 ரூ. 25 பைசா.”

இருபத்தைந்து வருட இலக்கியத் உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம் வெறும் நான்கு ரூபாய் இருபத்தைந்து பைசா என்பது, எழுத்தாளனின் சமூக மதிப்பையும் அவனது அக உலகச் சோகத்தையும் ஒரேவரியில் அம்பலப்படுத்துகிறது. பெற்றோர் இறப்பு, உடன்பிறந்தவர்கள் தூரம், காதலி சுசீலாவின் திருமணம் என்று நவீனனின் வாழ்க்கை தனிமைப்படுத்தப்பட்ட தீவாக மாறிவிடுகிறது.

அவனுக்குக் கோபமோ கசப்போ ஏற்படுவதில்லை; ஒருவித மரத்துப்போன அமைதி அவனிடம் நிலவுகிறது. இந்தத் தனிமையில்தான் அவனது வாழ்வில் ‘ராஜூ’ என்ற நாட்டு நாய் வந்து நுழைகிறது. சமூகம் புறக்கணித்த எழுத்தாளனுக்கும் எவ்வித எதிர்பார்ப்புமற்ற விலங்குக்கும் இடையிலான உறவுதான் இக்கதையின் அடித்தளம்.

நவீனனும் அவனது வளர்ப்பு நாயான ராஜூவும் பகிர்ந்துகொள்ளும் அன்பின் வெளிப்பாடு அலாதியானது. அவன் ஜூரத்தில் படுத்திருக்கும் போது அவன்மீதான ராஜூவின் பாசம் அசலானது. ஆனால், அந்தப் பாசத்தின் பின்னால் விசித்திரமான முரண்பாடு ஒளிந்துள்ளது. அதுதான் வெள்ளிக்கிழமை தோறும் வரும் ‘இறைச்சிப் பைத்தியம்’.

“வெள்ளிக்கிழமை தோறும் 12 மணிக்கு இறைச்சி கிடைக்கும் என்பதால் என் ராஜூ என் காலை நக்கித் தின்கிறது.”

நாய் பசியின் காரணமாக நாயின் இயல்பை வெளிப்படுத்துகிறது; ஆனால் அந்தச் செயல் நவீனனுக்கு பெரும் உளவியல் சுமையாக மாறுகிறது. நாய் தனக்கு உணவு தருபவனின் காலை நக்குவது அதன் அடிமைத்தனத்தின் அல்லது விசுவாசத்தின் வெளிப்பாடு. நவீனன் மனிதன் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் தனக்குச் சாதகமான நேரத்தில் அந்த விலங்கின் பாசத்தை ஏற்றுக்கொள்பவன், அது தனக்குச் சங்கடமாக மாறும்போது எரிச்சலடைகிறான்.

மனிதர்கள் விலங்குகளிடம் அன்பு செலுத்துவதுகூடக் குறிப்பிட்ட எல்லை வரை மட்டும்தான்; அந்த எல்லை மீறப்படும்போது அல்லது அது தனக்குச்  சமூகச் சங்கடத்தை உருவாக்கும்போது, மனிதனின் போலித்தனம் வெளிப்பட்டுவிடுகிறது.

கதையின் திருப்புமுனை பாம்பேயிலிருந்து வரும் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் என்.எஸ். கானேகரின் வருகையில்தான் நிகழ்கிறது. நவீனனுக்கும் கானேகருக்கும் இடையே முறையான சம்பிரதாயங்கள் எதுவுமில்லை; இலக்கியத்தின் மூலமான தூரத்து ஆத்மார்த்தப் பிணைப்பு மட்டுமே உண்டு.

ஆனால், அந்தச் சந்திப்பின் போழுது ராஜூவின் செய்கை நவீனனைச் சங்கடத்திற்குள்ளாக்குகிறது:- “இவருடன் ஏன் சமயத்தை வியர்த்தமாக்குகின்றாய்? ஏதாவது இறைச்சி கிடைக்குமோ? என்று கேட்பது போல் இருந்தது.”

நவீனன் கானேகரிடம் தன் நாயின் விசித்திரமான நடத்தையை வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. எழுத்தாளனின் அந்தரங்க உலகமும் அவனது வீட்டின் வறுமையும் வெளி உலகத்திற்குக் காட்ட முடியாத விலங்கின் வெறியும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் தருணம் இது. மணி 12 அடித்தவுடன் இறைச்சிக்காகத் துடிக்கும் ராஜூ நவீனனின் ஆடுசதையைக் கடிப்பதும் கானேகர் அதிர்ந்துபோவதும் மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான வன்முறையின் எல்லையைக் காட்டுகிறது.

கானேகர் ஊருக்குத் திரும்பும் முன் சிரித்துக் கொண்டே, “நாய்க்கு ஒரு ராத்தல் இறைச்சி என்றால் இவ்வளவு சபலமா?” என்று கேட்பது எளிய கேள்வியாகத் தோன்றினாலும் அது மனிதர்களின் பேராசையையும் அடிப்படையான விழைவுகளையும் நமுட்டுத்தனமாகச் சுட்டிக்காட்டுகிறது.

கதை முடிவுறும் விதம் மிக நெகிழ்ச்சியான அதேசமயம் கறாரான உண்மையை உரக்கச் சொல்கிறது. ராஜூ தன்னைக் கடித்துவிட்ட குற்றத்திற்காக அன்று, அது தன் காலை நக்கித் தின்ற அந்த அடிமைத்தனமான சபலத்திற்காகவே வேலைக்காரன் மூலம் ‘கார்ப்பரேஷனில்’ நாய் பிடிப்பவனிடம் கொடுக்கப்படுகிறது.

“ஏனென்றால் அது கடித்ததைவிட அது வாரந் தவறாமல் என் காலை நக்கினதுதான் எனக்குச் சகிக்க முடியவில்லை.”

நவீனனுக்கு ராஜூவின் மீதிருந்த பாசத்தைவிட, தன் மானத்தின் மீதும் தன் சுயமரியாதையின் மீதும் உள்ள பிடிப்பு மேலோங்குகிறது. நாய் தன் காலை நக்குவதை அடிமைத்தனத்தின் அடையாளமாக உணர்கிறான்; அது அவனுக்குச் சகித்துக்கொள்ள முடியாத அவமானமாக மாறுகிறது. 

அந்த நாய் செய்த குற்றம் இறைச்சிக்காக ஏங்குவது அன்று; மனிதனின் காலை நாக்கினால் தடவித் தன் இருப்பை உறுதிப்படுத்த முயன்றதுதான். இறுதியில், அந்தத் துரோகத்திற்காக அல்லது அந்தச் சங்கடத்திற்காக அது கொல்லப்படுவதற்கோ அல்லது பிரிக்கப்படுவதற்கோ நவீனன் மௌனமாக அனுமதி அளித்துவிடுகிறான்.

எழுத்தாளர் நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி’ சிறுகதை, மனித மனத்தின் ஆழத்தில் புதைந்திருக்கும் அகந்தையை, தனிமையை மற்றும் ஈவுஇரக்கமற்ற யதார்த்தத்தைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஒரு ராத்தல் இறைச்சிக்காக எதையும் செய்யும் விலங்கு ஒருபுறம் இருக்க, நான்கு ரூபாய் ராயல்டிக்காக வாழ்நாள் முழுவதும் எழுதும் ஓர் எழுத்தாளன் மறுபுறம் இருக்கிறான்.

இங்கு மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான இடைவெளி என்பது மிகவும் குறைவுதான்; இரண்டும் ஏதோஒருவகையில் எதற்கோ அடிபணிந்துதான் கிடக்கின்றன என்ற கசப்பான உண்மையை இக்கதை நம் முகத்தில் அறைந்து சொல்கிறது. தனிமனிதனின் வாழ்வியலில் உறவுகளும் பந்தங்களும் எவ்வளவு தற்காலிகமானவை என்பதற்கான சிறந்த சாட்சியாக இக்கதை திகழ்கிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *