
நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை, அதிலும் குறிப்பாக கிறிஸ்தவ மிஷனரி சூழல் மற்றும் ஆலய அரசியலுக்குள் நசுங்கும் எளிய மக்களின் அக-புறத் தவிப்புகளைத் துல்லியமாகவும் யதார்த்தமாகவும் பதிவு செய்த எழுத்தாளர்களுள் அ. எக்பர்ட் சச்சிதானந்தம் குறிப்பிடத்தக்கவர்.
அவரது படைப்புகள் வாசகருக்கு மேலோட்டமான அனுதாபங்களை வழங்குவதில்லை; அதிகாரத்தின் கோரப் பற்களுக்கு நடுவே எளிய மனிதர்கள் எப்படித் தங்களின் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுப் பிழைப்புக்காக மண்டியிடுகிறார்கள் என்பதைச் சமூகத்தின் முகத்தில் அறைவது போலப் பேசும் தன்மை கொண்டவை.
அந்த வகையில், அவர் எழுதிய ‘நுகம்’ என்ற சிறுகதை, முக்கியமான விவாதங்களைத் திறக்கக்கூடிய ஒரு பிரதியாகும். இக்கதையைத் தனிமனித வாழ்வியல், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நிலவும் சாதிய-அதிகாரச் சுரண்டல், மற்றும் மத நிறுவனங்களின் போலித்தனமான ஒழுக்க நெறிகள் ஆகிய தளங்களில் நிறுத்தி விமர்சிக்க இடமுள்ளது.
கதையின் தலைப்பான ‘நுகம்’ என்பது ஒட்டுமொத்தப் பிரதியின் ஆன்மாவையும் தாங்கி நிற்கும் முக்கியமான குறியீடாகும். ‘நுகத்தடி’ என்பது மாடுகளின் கழுத்தில் மாட்டப்பட்டு, வண்டியின் பாரத்தை இழுக்கப் பயன்படும் மரக்கருவி. இக்கதையில் அந்த ‘நுகம்’ என்பது வெறும் விலங்குக்கானதன்று; அது திருச்சபை நிர்வாகம், ஏரியா சேர்மன், போதகர்கள் மற்றும் மிஷனரி அமைப்புகள் ஆகியவை எளிய மக்களின் கழுத்தில் மாட்டியிருக்கும் பொருளாதார மற்றும் சமூகச் சுரண்டலின் குறியீடாகும்.
கதையின் நடுவில் வரும் கருங்குழி சர்ச் வாசலில் தொங்கும் படத்தின் சித்திரம் இத்தலைப்போடு நேரடியாகப் பொருந்திவருகிறது:-
ஒரு மாட்டின் கழுத்தில் ரத்தம் வழிகிறது; நுகத்தின் மீது ‘சாத்தான்’ என்று எழுதியுள்ளது. வண்டியின் பாரம் – வறுமை, வியாதி, பாவப்போராட்டம், பிசாசின் வேதனைகள்.
மற்றொரு மாட்டின் கழுத்தில் உள்ள நுகத்தின் மீது ‘இயேசு கிறிஸ்து’ என்ற வார்த்தை உள்ளது.
படத்தின் கீழ் மத்தேயு 11:29 வசனம்: ‘என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்மாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.’
ஆனால், கதையின் நிஜ உலகமோ இதற்கு முற்றிலும் முரணானது. எளிய தோட்டக்காரரான தேவன்புவும் அவனது குடும்பமும் சுமக்கும் நுகம் அவர்களுக்கு இளைப்பாறுதலைத் தருவதில்லை; அவர்களின் முதுகையும் கழுத்தையும் ஒடித்து, அவர்களைச் சவாரி செய்யும் மேட்டுக்குடி அதிகாரிகளின் காலடியில் மண்டியிட வைக்கும் கொடூரமான பாரமாகவே மாறுகிறது.
கதையின் நாயகன் தேவன்பு, மிஷனில் பல ஆண்டுகளாகத் தோட்டக்காரராக வேலை பார்க்கும் எளிய மனிதன். அவனது மூத்த மகள் சலோமி (சலோமிரோஸ்) பி.எட். படித்துவிட்டுப் பல ஆண்டுகளாக வேலைக்காகக் காத்திருக்கிறாள்.
தகுதியான பட்டதாரிப் பெண்ணுக்கு வேலை பெறுவதற்குக்கூட ஆலய நிர்வாகத்தின் காலில் விழ வேண்டிய, ஏரியா சேர்மனின் வீட்டு வாசலில் காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலையை இக்கதை வெளிப்படுத்துகிறது.
சேர்மனின் வீட்டில் நடக்கும் விசாரணையும் அவமானப்படுத்தல்களும் தமிழ்ச் சமூகத்தின் சாதிய மற்றும் வர்க்க அடக்குமுறையின் நேரடிச் சாட்சியாகும்.
தேவன்பு தன் மகளுக்காக சேர்மனின் காலில் விழுந்து கதறுகிறான்.
தன் மானத்தை விடுத்து, தனக்குத் தெரியாத மொட்டைக் கடிதப் பழியையும் தன் மீது சுமத்திக்கொண்டு மன்னிப்புக் கேட்கிறான்.
மனிதன் தன் குழந்தையின் எதிர்காலத்திற்காகத் தன் சுயமரியாதையை எந்தளவுக்குத் கீழே இறக்கி வைப்பான் என்பதன் ரத்தமும் சதையுமான சித்திரம் இது. தேவன்புவின் இந்த அடிமைத்தனமான செயலைக் கண்டு அவனது மனைவி ஞானமும் மகள் சலோமியும் கோபப்பட்டாலும் அந்த வறுமைச் சூழல் அவர்களை வேறு வழியின்றி அதே அதிகாரத்தின் முன் முழங்காலிட வைக்கிறது.
சலோமிதான் இக்கதையின் மையப் பாத்திரம். அவளது தகுதி பி.எட். வரலாறு மற்றும் ஆங்கிலம். அவள் படித்துவிட்டாள் என்பதற்காகச் சமூகம் அவளுக்குரிய மரியாதையையோ வேலையையோ எளிதில் வழங்கிவிடுவதில்லை. அவளது தந்தை படும் அவமானங்களை அவள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்குக் கிடைக்கும் கடிதங்களும் (குறிப்பாக மீனாட்சியின் கடிதம்) அவளது சொந்தத் தொழில்முயற்சி குறித்த கனவுகளும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் மிஷினரி பள்ளிகள் மற்றும் திருச்சபைக் கமிட்டிகளில் நடக்கும் குளறுபடிகள் அவளது லட்சியங்களைச் சுக்குநூறாக உடைக்கின்றன.
கமிட்டிக் கூட்டத்தில் அவள் பெயரும் பரிசீலிக்கப்பட்டாலும் காட்வின் ஐயரின் துணைவியாருக்கு அந்த வேலை தாரை வார்க்கப்படுவதும், அதற்குச் சொல்லப்படும் காரணங்கள் அனைத்தும் மதத்தின் பெயரால் நடக்கும் சுயநல அரசியலுமே என்பதைவள் புரிந்துகொள்கிறாள்.
சலோமிக்குத் தன் தந்தையின் மீது கோபம் உண்டு; அதேசமயம் தந்தையின் இயலாமையின் வலியை அவள் உணர்ந்தும் இருக்கிறாள். சர்ச் கூட்டத்தில் சேர்மனும் போதகர்களும் எளிய மக்களை மிரட்டும் போக்கைக் கண்டு சலோமி கிளர்ந்தெழுகிறாள். சேர்மனின் காலில் விழுந்து வேலை வாங்குவதைவிட, தன் சொந்த முயற்சியில் (மீனாட்சியின் உதவியுடன் நர்சரி பள்ளி தொடங்குவது போன்ற சுயசார்பு முயற்சிகள்) நிற்பதே மேல் என்ற முடிவுக்கு அவள் வருவது அவளது பாத்திரத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
எழுத்தாளர் அ. எக்பர்ட் சச்சிதானந்தம் இக்கதையில் கறாராக விமர்சிப்பது திருச்சபைகளுக்குள்ளும் மிஷினரி அமைப்புகளுக்குள்ளும் கோலோச்சும் போலி ஆன்மிகத்தைத்தான். ஏரியா சேர்மனும், ஐசக் போன்றவர்களும் தேவன்புவை மத ஒழுக்கம், விசுவாசம், காணிக்கை செலுத்துதல் போன்றவற்றைக் காட்டி மிரட்டுகிறார்கள்.
“ஆவிக்குரிய வாழ்க்கைல வளர்ந்தாதாய்யா கடவுளுடைய ஆசீர்வாதத்த மேன்மேலும் பெறமுடியும்” என்று நீதியுரை வழங்கும் சேர்மனே, ஊழல் புகார்களிலும் கடைகளிலிருந்து லஞ்சம் வாங்குவதிலும் பெண்களுடன் தொடர்பில் இருப்பதிலும் திளைப்பவராக உள்ளார்.
போதகர்களும் கமிட்டி உறுப்பினர்களும் தங்களுக்குச் வேண்டியவர்களுக்கு (காட்வின் ஐயரின் மனைவி போன்றோருக்கு) வேலை வழங்குவதற்காக வேதவசனங்களையும் சபையின் விதிகளையும் வளைக்கிறார்கள்.
‘தேவன்பு ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு வருவதில்லை, காணிக்கை செலுத்துவதில்லை’ என்பதே அவனுக்கு வேலை மறுப்பதற்கான பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது. எளிய மக்களின் வறுமையையும் இயலாமையையும் பொருட்படுத்தாத இந்த மத நிறுவனங்கள், தங்களின் அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ளக் கடவுளின் பெயரைக் கவசமாகப் பயன்படுத்துகின்றன. வில்ஃபிரட் போன்றவர்கள் அமெரிக்கா செல்வதற்காகச் சேர்மனின் தயவை நாடுவதும் அதற்குப் பின்னால் நடக்கும் பேரம் பேசுதல்களும் திருச்சபையின் வணிகமயமாக்கலை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன.
தேவன்புவின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நடுத்தர-விளிம்புநிலைக் குடும்பம். தேவன்புவின் தாழ்வுணர்ச்சியும், சேர்மனின் வீட்டில் அவன் படும் அவமானமும் அவனது குடும்பத்திற்குள்ளும் வன்முறையாக வெடிக்கிறது. இரவில் குடித்துவிட்டு வந்து அவன் கத்துவதும், தன் குடும்பத்தின் மீதும் தன் மீதும் உள்ள விரக்தியை வெளிப்படுத்துவதும் விளிம்புநிலை மனிதர்களின் அக உலகத்தின் ஆழமான காயங்களைக் காட்டுகின்றன.
ஞானமும் (மனைவி) குழந்தைகளும் படும் துயரங்கள் ஒருபுறம் இருக்க, சமூகத்தில் எளியவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகக்கூட எத்தனை தூரம் அவமானப்பட வேண்டியுள்ளது என்பதைப் பற்றி இக்கதை பேசுகிறது. கதையின் முடிவில், தேவன்பு மீண்டும் சேர்மனிடம் மன்னிப்புக்கேட்கத் தயாரானாலும் சலோமியோ அந்த அடிமைச் சங்கிலியை அறுத்துக்கொண்டு வெளியேறத் துடிக்கிறாள். இது தனிமனிதனின் விடுதலைக்கான முதல் படியாகும்.
எழுத்தாளர் அ. எக்பர்ட் சச்சிதானந்தத்தின் ‘நுகம்’ சிறுகதை, தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலை மக்களின் குரலாக ஒலிக்கக் கூடிய பிரதியாகும். மதம், கல்வி, வேலைவாய்ப்பு என்ற பெயரில் எளிய மனிதர்களின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சுரண்டலின் நுகத்தடியை இக்கதை கறாராக அகற்றிப் பார்க்கிறது. தேவன்புவைப் போன்றோரின் கண்ணீரும் சலோமியைப் போன்றோரின் எழுச்சியும் சமூகத்தில் எப்போதுமே விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான வாழ்வியல் உண்மைகளாகும்.
– – –
