
கிராமப்புற எளிய பெண்களின் அக உலகத் தவிப்புகளை எவ்விதமான சமரசமுமின்றி எழுத்தில் வடிப்பவர்களில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் முக்கியமானவர். அவர் எழுதிய ‘வெயிலோடு போய்…’ என்ற சிறுகதை, கிராமத்துப் பெண்ணின் தீராத காதலின் ஏமாற்றத்தையும் அவளது விசுவாசத்திற்கும் சமூக எதார்த்தத்திற்கும் இடையிலான மோதலையும் உணர்வுபூர்வமாகப் பேசும் தலைசிறந்த கதை.
கதையின் நாயகி மாரியம்மாள், தன் காதலனும் முறைமாமனுமான தங்கராசு ஊருக்கு வந்திருக்கிறான் என்ற செய்தி கேட்டதும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கணவனின் கோபத்தையும் மீறித் தன் தாயின் வீட்டுக்கு ஓடி வருகிறாள்.
அந்த ‘வெயில்’ என்பது வெறும் வானிலைச் சூழல் அன்று; அது அவளது வாழ்க்கையின் தகிப்பு. வெயிலில் காய்ந்து, உடல் கருகி, காதில் கம்மலும் கழுத்தில் தாலியும் தவிர வேறு நகைகள் ஏதுமின்றி, குடிசை வாழ்வின் வறுமையைக் சுமந்துகொண்டு அவள் ஓடிவரும் அந்தத் தருணம் அவளது வாழ்வியலின் நிழற்படமாகும். காதலின் நிமித்தம் அவள் படும் அவஸ்தைகளும் இறுதியில் அந்த வெயிலின் தாக்கமும் அவளது அகத்தில் ஏற்படுத்தும் எரிச்சலும் தலைப்போடு முழுமையாகப் பொருந்திப் போகின்றன.
மாரியம்மாளின் உலகமே தங்கராசு மச்சானை மையமாகக் கொண்டுதான் இயங்குகிறது. சிறுவயது முதலே அவனுடன் கள்ளிப்பழம் பறிக்கச் செல்வது, கம்மாயில் குளித்தால் மச்சானுக்குப் பிடிக்காது என்று ஒதுங்குவது, பெரிய மனுஷியானதும் அவன் மீதான காதலை மனதுக்குள் பூட்டி வைப்பது என்று அவளது பால்யம் முழுவதும் தங்கராசின் நினைவுகளாலேயே கட்டமைக்கப் பட்டிருக்கிறது.
பஞ்சம் வந்து தந்தை இறந்தபோதும் குடும்பம் வறுமையில் வாடியபோதும் மச்சான் கோமதியின் கல்யாணத்தின்போது கதவு இடுக்கு வழியாக அவனைப் பார்த்துப் பூரித்துப் போனபோதும் அவளது காதலின் ஆழம் குறையவில்லை. ‘தங்கராசு தனக்கு இல்லை’ என்று வேறொரு பெண்ணுக்குத் தாலி கட்டிவிட்ட பின்னருங்கூட, அவளால் அவனை முழுமையாக வெறுத்து ஒதுக்கிவிட முடியவில்லை.
ஆனால், காதலின் கற்பனை உலகிற்கும் யதார்த்த சமூகத்திற்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. தங்கராசு டவுனில் படித்து உத்தியோகம் பார்ப்பவன்; மாரியம்மாளோ தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைபார்த்து, அருள்மிகு மாரியம்மன் கோவில் பொங்கலுக்காக ஓடிவரும் எளிய கிராமத்துப் பெண். வறுமையும் பொருளாதார வேறுபாடுகளும் அவர்களைப் பிரித்துவிடுகின்றன. அண்ணன் மச்சானின் கல்யாணத்தை எதிர்த்தாலும் மாரியம்மாள் பிடிவாதம் பிடித்துக் கல்யாணத்துக்கு ஆளை அனுப்பியதன் மூலம் தன் காதலின் எஞ்சிய துளியைப் பிடித்துக்கொள்ள முயல்கிறாள்.
கதையின் முக்கியமான மற்றும் திருப்புமுனையான பகுதி மாரியம்மாள் தன் மச்சானின் மனைவியைச் (ஜானு) சந்திக்கும் தருணம். மாரியம்மாள் தன் காதலனின் மனைவியின் மீது எல்லையற்ற அன்பையும் வாஞ்சையையும் எதிர்பார்ப்பவளாகச் செல்கிறாள். அவளைத் தன் அக்கா போலவும் மச்சானின் மனைவியாகவும் பாவித்து அவளிடம் நெருங்கிப் பழக முற்படுகிறாள்.
ஆனால், அந்தச் சந்திப்பு மாரியம்மாளின் கற்பனை உலகைச் சுக்குநூறாக உடைத்துவிடுகிறது. மாரியம்மாள் பாசத்துடன், “யக்கா… மாசமாயிருக்கிகளா” என்று கேட்கும்போது, அந்த அக்கா தரும் பதில் கதையின் ஒட்டுமொத்த மனவேதனையையும் வெளிப்படுத்திவிடுகிறது: “ஆம, அது ஒண்ணுக்குத்தான் கேடு இப்பம்”
அந்த வார்த்தைகளில் உள்ள வெறுப்பும் சூடும் சலிப்பும் மாரியம்மாளால் தாங்க முடியாதவை. தங்கராசு தன் மனைவியிடம் பிரியமாகக் கேட்கும்போது, அவள் வெறுப்புடன், “ஆஹாகாகா… ரொம்பவும் அக்கறைப்பட்டுக் குப்புற விழுந்துறாதிக…” என்று கறாராகப் பதிலளிப்பதைக் கேட்கும்போது, மாரியம்மாளுக்குப் பனிமலை சரிவது போலிருக்கிறது.
தான் இவ்வளவு நாளாகத் தெய்வமாக, கனவாக நினைத்து வழிப்பட்ட மச்சானின் இல்லற வாழ்க்கை இவ்வளவு கசடுகளும் வெறுப்பும் நிறைந்ததாக இருப்பதைக் கண்டு அவள் அதிர்ந்துபோகிறாள். அவள் தன் மச்சானை மாத்திரம் நேசிக்கவில்லை; அவன் வாழ்வையும் சேர்த்துத்தான் நேசித்தாலும்; ஆனால், அங்கே நிலவும் நரகவேதனை அவளது இதயத்தை ரணமாக்குகிறது.
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் இக்கதையில் வெறும் காதலை மட்டும் பேசவில்லை; அதற்குப் பின்னால் இருக்கும் பொருளாதாரச் சுரண்டலையும் நடுத்தர வர்க்கத்தின் வறுமையையும் பதிவு செய்துள்ளார்.
மாரியம்மாளின் கணவர் சிறு வியாபாரி. தேங்காயும் பொரிகடலையும் விற்றுப் பிழைப்பு நடத்துபவர். அவர் தன் மனைவி ஊருக்கு அடிக்கடி செல்வதையும் அங்குச் செல்லும்போது பருப்பு, வெல்லம் என்று எதையாவது அள்ளி வழங்குவதையும் கடுமையாக எதிர்க்கிறார். அவருக்கு அந்தச் சின்ன ஊரில் வியாபாரம் செய்வதே பெரிய பாடாக உள்ளது.
மறுபுறம், தங்கராசின் குடும்பமோ நகைநட்டு குறைவு என்பதற்காக அவனது மனைவியைக் கொடுமைப்படுத்துவதாக ஊரில் பேசப்படுகிறது. டவுனில் படித்து உத்தியோகம் பார்க்கும் மச்சானின் வாழ்க்கையும் வறுமையின் பிடியிலிருந்தும் வரதட்சணைக் கொடுமைகளிலிருந்தும் தப்பவில்லை. ‘உழைக்கும் எளிய மக்களின் வாழ்வில் காதல் என்பது ஓர் ஆடம்பரம்; வறுமை எல்லாவற்றையும் தின்று தீர்க்கும் ஒரு பூதம்’ என்பதை மாரியம்மாளும் அவளது குடும்பமும் எதிர்கொள்ளும் விதமே நமக்கு உணர்த்துகிறது.
கோவிலில் பொங்கல் வைத்துவிட்டு வீடு திரும்பிய இரவில், மாரியம்மாளின் கணவர் தன் வியாபாரத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் மாரியம்மாளோ அன்றைய தினம் தான் கண்ட காட்சிகளாலும் தான் இழந்த கனவுகளாலும் உள்ளம் உடைந்து ஊமையாக அமர்ந்திருக்கிறாள்.
அவளது மௌனத்தைக் புரிந்து கொள்ளாத கணவர், எரிச்சலடைந்து அவளது முடியைப் பிடித்து உலுக்குகிறார். அந்தத் தருணம் மாரியம்மாளுக்குள் இருக்கும் அத்தனை சோகங்களையும் அணை உடைத்து வெளியே கொண்டுவருகிறது. அவள் ஏங்கி அழ ஆரம்பிக்கிறாள்.
கணவரோ தான் ஏதோ பேசிவிட்டதற்காகத்தான் அவள் அழுவதாகத் நினைத்துக்கொண்டு அவளைத் தேற்றுகிறார். ஆனால், அவளது கண்ணீருக்கான காரணம் அவளது கணவரின் வன்முறையன்று; அவள் இவ்வளவு நாளாகப் பொக்கிஷமாகப் பாதுகாத்துவந்த காதலின் சிதைவும் அவளது மச்சானின் நிம்மதியற்ற வாழ்வும்தான். விளிம்புநிலைப் பெண்களின் அக உலகக் காயங்களை யாரும் புரிந்துகொள்வதில்லை; அவர்களின் கண்ணீருக்குக்கூட இந்தச் சமூகத்தில் உரிய மதிப்பு கிடைப்பதில்லை என்ற நித்ய உண்மையை இந்தக் கதை உரக்கச் சொல்கிறது.
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்…’ சிறுகதை, தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலை மக்களின் அக உலகத் தவிப்புகளையும் ஏமாற்றப்பட்ட காதலின் வலியையும் தீவிரமாகப் பதிவு செய்த பிரதி. வறுமையும் சாதிய-பொருளாதாரச் சூழலும் எளிய மனிதர்களின் கனவுகளை எப்படி நசுக்குகின்றன என்பதை இக்கதை காட்டுகிறது. ‘மாரியம்மாளின் கண்ணீர்’ என்பது வெறும் கிராமத்துப் பெண்ணின் கண்ணீர் மட்டுமன்று; அது வாழ்வின் கோர யதார்த்தத்தால் ஏமாற்றப்பட்ட கோடிக்கணக்கான எளிய மக்களின் துயருற்ற ஆன்மாவின் ஓலமாகும்.
– – –
