இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 136.அறச்சீற்றம்  (பி. எஸ். ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள்’ சிறுகதையை முன்வைத்து…)

 

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் தனித்துவமான பாணியாலும் உளவியல் ஆழத்தாலும் இலக்கியத் தடம்பதித்த எழுத்தாளர் பி.எஸ். ராமையாவின் படைப்புகளில் ‘நட்சத்திரக் குழந்தைகள்’ என்ற சிறுகதை உன்னதமானது.

இது மனிதர்களின் வாழ்வியல் எதார்த்தங்களையும் நயவஞ்சகமான சமூகச் சூழலையும் மழலையின் மாசற்ற அக உலகையும் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டும் சிறுகதை.

குழந்தை ரோஹிணியின் அப்பாவித்தனமான உலகத்திற்கும் மனிதச் சமூகத்தின் வக்கிரமான பொய்களுக்கும் இடையிலான மோதலை மையமாகக் கொண்டு, தனிமனித வாழ்வியலின் முக்கியமான உளவியல் கூறுகளை இப்படைப்பு காட்டிச்செல்கிறது.

கதையின் தொடக்கத்தில் சோமசுந்தரம் தனது மகள் ரோஹிணிக்குச் சொல்லும் சிறிய பொய் போன்ற உண்மை, குழந்தையின் கற்பனை உலகில் பிரம்மாண்டமாக வளர்ந்து விடுகிறது. “நாம் ஒவ்வொரு தடவையும் ஓர் உண்மையைச் சொல்லும்பொழுது ஒரு நட்சத்திரம் பிறக்கிறது” என்ற தந்தை கூற்று, குழந்தைக்கு வெறும் அறிவார்ந்த தகவல் அன்று; அது அவளது ஆன்மாவின் பகுதியாக மாறிவிடுகிறது.

ரோஹிணியின் ஆறு வயது மனம் எந்தவொரு லௌகீகக் கறையும் படியாதது. அவளது கேள்விகள் அனைத்தும் “தெய்வ உலகத்துக் கேள்விகள்” என்று ஆசிரியர் குறிப்பிடுவது, மனிதன் காலப்போக்கில் இழந்துவிட்ட இயற்கையான ஆன்மிகத் தூய்மையைக் குறிக்கிறது.

பட்டணத்தின் இயந்திரத்தனமான சூழலிலிருந்து கிராமத்திற்கு வந்தவுடன், குழந்தையின் எண்ணங்கள் இயற்கையோடு இயைந்து விடுகின்றன. பாதாம் மரங்கள், மாலை நேரத்து வர்ண ஜாலங்கள், வெண்மேகங்கள் யாவும் அவளுக்கு வெறும் சடப்பொருட்கள் அல்ல; அவை உயிர்த்துடிப்புள்ள பிரபஞ்சத்தின் வெளிப்பாடுகள்.

இங்கே தனிமனிதனின் தொடக்க நிலை என்பது இயற்கையோடும் சத்தியத்தோடும் எந்தவிதத் தடையுமின்றி ஒன்றியிருக்கிறது என்பதை எழுத்தாளர் பி.எஸ். ராமையா அழகாகப் பதிவுசெய்கிறார்.

பி.ஏ. வரை படித்த சோமசுந்தரம் நவீன மனிதனின் பிரதிநிதி. தபால் நிலையத்திற்குத் தினசரி ஓடுவதும், கடிதங்களுக்காகவும் பத்திரிகைகளுக்காகவும் ஏங்குவதும் இன்றைய நடுத்தர வர்க்க மனிதனின் அன்றாடப் பிழைப்புவாதத்தின் சின்னங்கள்.

சோமசுந்தரத்தால் ஒருபுறம் தன் குழந்தையின் தத்துவார்த்தக் கேள்விகளுக்கு முழுமையாகப் பதிலளிக்க முடியவில்லை; மறுபுறம் குழந்தையின் பிரகாசமான முகத்தைக் காணும்போதெல்லாம் சக்கரவர்த்திக்கும் இல்லாத பெருமிதம் அவருக்குள் எழுகிறது.

மாலை வேளையில் குழந்தை இயற்கையின் பேரழகில் லயித்து நிற்கும்போதும், “மானத்தைப் பாரு… அவ்வளவு குழந்தைகளையுடைய சுவாமிக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கும்!” என்று அவள் பரவசப்படும்போதும், சோமசுந்தரம் தன் சொந்த லௌகீகச் சிந்தனைகளில் மூழ்கி “உம்” என்று கடந்து சென்று விடுகிறார்.

இது தனிமனித வாழ்வியலின் முக்கியமான வீழ்ச்சியைக் காட்டுகிறது. மனிதன் தன் அன்றாடப் போராட்டங்களிலும் இயந்திரத்தனமான வாழ்க்கையிலும் மூழ்கிவிடுவதால், அருகில் கொட்டிக்கிடக்கும் ஆன்மிக அழகையும் குழந்தையின் மாசற்ற அக உலகையும் கவனிக்கத் தவறிவிடுகிறான். இந்தத் தவறுதான் பின்னாளில் பெரும் துயரத்திற்கு வித்திடுகிறது.

கதையின் உச்சக்கட்டத் தருணம் நெஞ்சை உலுக்குவது. வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் நிலை தவறி கீழே விழுந்து மறைகிறது. அதைக் கண்ட ரோஹிணி அடக்க முடியாத துயரத்துடன் விம்மி அழுகிறாள்.

“நீதானே அப்பா சொன்னே, நாம் ஒரு நிஜம் சொன்னால் ஒரு நட்சத்திரம் பிறக்கிறதுன்னு, அப்போ…. ஒரு நட்சத்திரம்… கீழே விழுந்தா….. யாரோ ஒரு பொய்…. சொல்லிட்டாங்கன்னுதானே அர்த்தம்?” – இந்த ஒரு கேள்வியில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அறவீழ்ச்சியும் அம்பலப்படுத்தப் படுகிறது.

மனிதச் சமூகம் வாழும் இந்தப் பூமியில் ஒவ்வொரு முறையும் பொய் சொல்லப்படும் போதெல்லாம் பிரபஞ்சத்தில் ஒரு சத்தியம் அல்லது தூய்மை இறந்து விடுகிறது என்பதைக் குழந்தை தன் உள்ளுணர்வால் ஆழமாக உணர்கிறது.

மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்காகச் சொல்லும் சின்ன சின்ன பொய்கள்கூட, பிரபஞ்சத்தின் ஒழுங்கையும் அழகையும் குலைக்கின்றன என்பதை இச்சிறுகதை விமர்சிக்கிறது. சமூகம் பொய்யை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொண்டு விட்டது; ஆனால் மழலையின் மனம் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

குழந்தையின் அழுகையைக் கேட்டவுடன் சோமசுந்தரத்தின் இதயம் “ஆயிரம் சுக்கல்களாகச் சிதறி விழுந்தது” போன்ற உணர்வுக்கு ஆளாகிறது. இது தந்தையின் பாசம் மட்டுமன்று; மனிதச் சமூகம் தன் குழந்தைகளுக்கு எத்தகைய கறைபடிந்த உலகத்தைப் பரிசளித்திருக்கிறது என்ற குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு.

நாகரிகம் அடைந்துவிட்டதாகப் பீற்றிக் கொள்ளும் மனிதர்கள், உண்மையில் நேர்மையும் சத்தியமும் அற்ற ஒரு பொய்யான உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

குழந்தையின் அழுகை வெறும் அழுகை அன்று; அது மனிதகுலத்தின் அறநெறிச் சரிவுக்காகக் குழந்தை சிந்துங்கண்ணீர். “அந்தப் பச்சை உள்ளத்தில் எழுந்த துக்கத்தையும் அதன் துன்பத்தையும் நாவின் மொழிகளால் விவரிப்பது இயலாத காரியம்” என்ற வரிகள், தனிமனித ஆன்மா சந்திக்கும் மாபெரும் ஒழுக்கத் துயரத்தை ஆழமாகப் படம்பிடிக்கின்றன.

இந்தச் சிறுகதை, மனிதர்கள் தாங்கள் தொலைத்துவிட்ட சத்தியத்தையும் தூய்மையையும் மழலையின் கண்கள் வழியே மீண்டும் காண முயலும் தத்துவார்த்தப் பிரதியாகும்.

பணத்திற்காக, புகழுக்காக, சுயநலத்திற்காக நாள்தோறும் பொய் பேசிப் பழகிவிட்ட இந்தச் சமூகத்தில், தனிமனிதன் தன் அகத்தூய்மையை எவ்வாறு இழந்துவருகிறான் என்பதை இக்கதை கறாராகவும் கலைநயத்தோடு எச்சரிக்கிறது. ரோஹிணியின் கண்ணீர் என்பது வெறும் சோகத்தின் வெளிப்பாடு அன்று; அது பொய்மயமான இந்த உலகத்தின் மீதான ஆன்மிகத்தின் குற்றப்பத்திரிகை!

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *