
புலம்பெயர் இலக்கிய வெளியில் ஈழத்துச் சூழலையும் தாண்டி, பசிபிக் தீவுகளில் ஒன்றான பிஜியில் வாழும் இந்திய மக்களின் வாழ்க்கையதார்த்தங்களைப் பதிவு செய்து வருபவர்களில் எழுத்தாளர் ஆசி கந்தராஜா குறிப்பிடத்தக்கவர்.
அவரது ‘எண்ணம் இரங்காதோ?’ எனும் சிறுகதை, தலைமுறை தலைமுறையாக வேரறுக்கப்பட்டு, சொந்த மண்ணின் நினைவுகளோடு போராடும் கூலித் தொழிலாளரின் வாழ்வியலையும் அவரது குடும்பத்தின் சிதைவுறும் உறவுச் சிக்கல்களையும் மிகச் செறிவாகப் பேசுகிறது.
சிங்காரம்பிள்ளை என்ற எளிய மனிதனின் மரணப் படுக்கையை மையமாகக் கொண்டு நகரும் இக்கதை, காலனித்துவத்தின் வடு, அந்நிய மண்ணில் மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களை இழந்து தவித்தல், தலைமுறை இடைவெளி மற்றும் தனிமனிதனின் தனிமை ஆகிய உளவியல் கூறுகளைக் கறாராக வெளிப்படுத்துகிறது.
சிங்காரம்பிள்ளையின் உயிர் நீண்ட நேரம் பிரியாமல் இருப்பதற்கான காரணத்தைத் தேடும்போது, அவனது கடந்த கால அடிமைவாழ்வு கண்முன்னே விரிகிறது. பதினெட்டாவது வயதில் கூலிகளாக ‘பிஜி’க்குக் கொண்டுவரப்பட்ட தமிழர்களுக்கு எந்தவொரு முறையான ஆவணமோ வயதோ பதிவு செய்யப்படவில்லை.
“அடிமைக்குப் பத்திரப் பதிவு எதற்கு? அதனால் உண்மையான வயது இற்றைவரை அவருக்குத் தெரியாது.”
இந்த வரி தனிமனிதனின் அடிப்படை அடையாளத்தையே மறுத்த காலனித்துவக் கொடூரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. ஒரு மனிதன் தான் எங்குப் பிறந்தான், தனது வயது என்ன என்ற அடிப்படை விவரங்கள் கூடத் தெரியாமல், கரும்புத் தோட்டங்களில் தனது முழுஆயுளையும் இயந்திரமாய் உழைத்துத் தீர்ப்பது எந்தளவிலான உளவியல் சிதைவைச் தரும்?
சிங்காரம்பிள்ளையின் மரணம் கிராமத்தினருக்குக்ரு ‘கலியாணச் சாவு’ போலத் தெரிகிறது. ‘தொண்ணூறு வயதுக்குமேல் வாழ்ந்தவன் நிம்மதியாகப் போய்ச் சேர வேண்டியதுதானே!’ என்ற எள்ளல் பார்வையே அங்குள்ள சமூகத்திடம் உள்ளது. ஆனால், அந்த நீண்ட ஆயுள் என்பது நிம்மதியானதன்று; தாய் மண்ணைப் பார்க்க முடியாமல், தன் சொந்த வேர்களை இழந்து தவித்த பல ஆண்டுகளின் சுமையாகும்.
மனைவியின் மறைவுக்குப் பின் சிங்காரம்பிள்ளை முற்றிலும் தனிமைப்படுத்தப் படுகிறான். அவனது குடும்பம் சிதைந்து போகிறது. மகனோ போதைக்கு அடிமையாகி, மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்து வாழ்கிறான். இந்தத் தனிமையைத் தாங்க முடியாமல் சிங்காரம்பிள்ளை இயற்கை அன்னையோடு உறவாடத் தொடங்குகிறான். வீட்டின் பின்பகுதியில் குவியும் மைனாக்களுக்குத் தீனிபோட்டு, அவைகளிடம் தமிழ்மொழி பேசி மகிழ்கிறான்.
பிஜி சுதேசிகள் அவரை ‘மறை கழண்ட மைனா’ என்று அழைக்கிறார்கள். பிஜி மக்களிடம் இந்தியர்கள் மீது ஒருவிதமான சமூக அச்சம் உள்ளது. மைனாக்கள் எப்படி வேகமாகப் பெருகித் தங்கள் பூர்வீகப் பறவைகளைக் காடுகளுக்குள் துரத்தினவோ, அதேபோல் தாங்களும் பிஜி மண்ணில் ஒடுக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் சுதேசிகளிடம் உண்டு. இந்தச் சூழலில், தனிமையில் வாடும் சிங்காரம்பிள்ளை மைனாக்களிடம் பேசுவது, அவனது தனிமனித உளவியலின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.
தமிழைக் காதலாய் நேசித்த அவருக்கு, அவரது சொந்த மகனே பிஜிஹிந்தியையும் தமிழும் கலந்து பேசும் அந்நியனாக மாறிவிடுகிறான். பேரனாவது தமிழ்க் கற்க வேண்டும் என்ற அவரது தீராத ஆசை நிறைவேறாமல் போவது அவருக்குப் பெரிய வலியைக் கொடுக்கிறது. ஊருடனும் உறவுடனும் இருந்த தொடர்புகள் அறுந்துபோய், மொழியையும் அடையாளத்தையும் இழந்த ஒரு தலைமுறையின் தவிப்பை சிங்காரம்பிள்ளையின் பாத்திரம் தாங்கி நிற்கிறது.
இக்கதையின் மிக முக்கியமான குறியீடு சிங்காரம்பிள்ளையின் ‘றங்குப்பெட்டி’ ஆகும். பிஜிக்கு வரும்போது அவர் கொண்டுவந்த அந்தப் பழைய, துருப்பிடித்த இரும்புப் பெட்டி அவரது வாழ்நாள் முழுவதையும் தனக்குள் அடைத்து வைத்துள்ளது.
கரும்புத் தோட்டத் தீயில் மருமகள் கருகி இறந்த பின்னர், அவனது ஒரே பிடிமானம் தலைநகர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் தொழில்நுட்பம் படிக்கும் பேரன் மட்டுமே. அந்தப் பேரனின் படிப்புச் செலவுக்காக, தனது மனைவியின் தாலிச்சரடு, சங்கிலி, காப்பு அனைத்தையும் விற்றுப் பணம் சேர்த்துள்ளான்.
சிங்காரம்பிள்ளையின் இறப்புக்குப் பிறகு அந்தப் பெட்டி உடைக்கப்படும் போது, அதில் பெரிதாக எதுவும் இருக்கவில்லை. பொத்தல்கள் நிறைந்த வேட்டிகள், இரத்தக்கறை படிந்த கதர் மேலங்கிகள் (அடிமைச் சித்திரவதைச் சின்னங்கள்), மனைவியின் நைந்த புடவைகள் மற்றும் பாரதி பாடல் புத்தகம் மட்டுமே இருந்தன.
ஆனால், அந்தப் புத்தகத்திற்குள் இருந்த கடித உறையில், பேராண்டி ஊருக்குப் போய்வருவதற்காகப் பணம் சேர்த்து வைத்திருந்தமை தெரியவருகிறது. தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சேர்த்த சொத்து என்று அவர் எதையும் சேர்த்துவைக்கவில்லை; தன் சந்ததியாவது தன் தாய் மண்ணைக் காண வேண்டும் என்ற ஏக்கத்தில் அவர் சேர்த்த சேமிப்பு அது. இது தனிமனிதனின் சுயநலமற்ற தியாகத்தின் உன்னத வெளிப்பாடாகும்.
சிங்காரம்பிள்ளையின் மகனின் பாத்திரம் புலம்பெயர் சமூகத்தின் இரண்டாம் தலைமுறை எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிதைவையும் திசையற்ற தன்மையையும் காட்டுகிறது. வேலை ஏதும் இல்லாமல் சதா காவாவும் சாராயமும் குடித்துப் போதையில் திளையும் அவனுக்குத் தன் தந்தையின் வலியோ, தமிழோ புரியவில்லை. அவனுக்குத் தந்தை மீதுள்ள ஒரே பற்று, மது அருந்தப் பணம் தேவைப்படும்போது தந்தையைக் குளிர்விப்பது மட்டுமே.
இறப்பு வீட்டில்கூடக் காரியங்களைச் சரியாகச் செய்யாமல், றங்குப்பெட்டியை எப்படியாவது திறந்து பணத்தையோ பொக்கிஷத்தையோ எடுத்துவிட வேண்டும் என்ற பேராசையே அவனிடம் உள்ளது. பாரம்பரியமும் மொழியும் காக்கப்படாமல், போதைக்குள் மூழ்கடிக்கப்பட்ட ஒரு சந்ததியின் குறியீடாக மகன் சித்தரிக்கப்படுகிறான்.
மறுபுறம், மூன்றாம் தலைமுறையான பேரன் படித்து முன்னேறினாலும் தாத்தாவுக்கும் அவனுக்கும் இடையேயான இடைவெளியை மொழிப் பிரச்சினை பிரித்து விடுகிறது. இறுதியில் தாத்தா தனக்காகச் சேர்த்து வைத்த பணத்தையும் பாரதி பாடலையும் காணும்போது அவன் அடையும் குற்ற உணர்ச்சியும் மனவேதனையும் தலைமுறைகளுக்கு இடையேயான தொடர்பாடல் குறைபாட்டைத் தெளிவாக உணர்த்துகிறது.
கதையின் முடிவு மிகச் செறிவான தருணத்தில் நிறைவடைகிறது. பாரதியின் பாடல் புத்தகத்தில் ‘கரும்புத் தோட்டத்திலே…’ என்ற அத்யாயத்தில் சிங்காரம்பிள்ளை பென்சிலால் அடிக்கோடிட்ட வரிகளை ஐயர் உரத்துப் படிக்கிறார்:-
கரும்புத் தோட்டத்திலே – அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே – அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ?
இந்த வரிகள் வெறும் கவிதையல்ல; சிங்காரம்பிள்ளையின் ஒட்டுமொத்த வாழ்வின் நேரடிப் பிரதிபலிப்பு. அடிமைத்தனத்தில் உழன்று, தாய்நாட்டை இழந்து, மொழி தெரியாத தீவில் தனித்து நின்று மடிந்த இலட்சக்கணக்கான தமிழர்களின் வரலாற்றுத் துயரத்தின் குறியீடு இது.
இந்தச் சிறுகதை, எளிய மனிதனின் இறப்பைச் சுற்றியுள்ள நிகழ்வுகளின் ஊடாகப் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்று வலிகளையும் தனிமனிதனின் பரிதவிப்புகளையும் அசாத்தியமான எழுத்துநடையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தேடலுக்காகச் சென்று தன் வேர்களைத் தொலைத்துவிட்டு, அடுத்த தலைமுறைக்காகத் தன் வாழ்க்கையையே துடைத்துத் தீர்த்த ஒரு மனிதனின் மனசாட்சியின் குரலாக இக்கதை ஒலிக்கிறது. தனிமனித வாழ்வியலின் மிக ஆழமான உளவியல் தாக்கங்களையும் கலாச்சார வேர்களின் அவசியத்தையும் இக்கதை வாசகர் நெஞ்சில் பதித்துச் செல்கிறது.
– – –
