இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 140.நீண்ட கால வேதனை  (ஆபிதீனின் ‘உயிர்த்தலம்’ சிறுகதையை முன்வைத்து…)

 

விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலை, குறிப்பாக இஸ்லாமிய சமூகச் சூழலில் உள்ள முரண்களையும் வலிகளையும் துல்லியமாகவும் யதார்த்தமாகவும் பதிவுசெய்து வருபவர்களில் எழுத்தாளர் ஆபிதீன் குறிப்பிடத்தக்கவர். 

இவரது ‘உயிர்த்தலம்’ எனும் சிறுகதை, உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான ஓர் இளைஞனின் (வஹாப்) வாழ்வையும் அவனைச் சுற்றியுள்ள குடும்பத்தினரின் உளவியல் தத்தளிப்புகளையும் மையமாகக் கொண்டு கட்டமைக்கப் பட்டுள்ளது.

மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான விளிம்புநிலைத் துயரங்களை, மதச் சடங்குகள், குடும்ப வறுமை, தலைமுறை இடைவெளி மற்றும் சமூகத்தின் பார்வை ஆகிய தளங்களில் வைத்து இக்கதை பேசுகிறது. 

கதையின் மையக் கதைமாந்தரான வஹாப், வெறும் உடல் ஊனமுற்ற ஒருவனல்லன்; மனித குலத்தின் பரிதாபகரமான விதியையும் இயலாமையையும் பிரதிபலிக்கும் குறியீடு. பிறந்து சில வருடங்கள் மட்டுமே அழகாக இருந்தவன், தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் நரம்புக் கோளாறு காரணமாகத் தொட்டியிலேயே முடங்கிப் போகிறான்.

“தொட்டியின் கம்பிகளைச் சுற்றிப் பிணைந்துள்ள அவன் சூம்பிப் போன கால்களுக்கு என்ன தெரியுமோ அதுதான் அவன் மூளைக்கும் தெரியும்.”

இந்த வரி தனிமனிதனின் சுயாளுமை முற்றிலுமாக மறுக்கப்பட்டு,  குறிப்பிட்ட எல்லைக்குள் அவனது வாழ்க்கை சுருங்கிவிடுவதைக் காட்டுகிறது. அவனுக்கு பசி தெரியவில்லை, மலம் கழிப்பது தெரியவில்லை, ஏன் தான் அடிபடுவதை உணரும் திறன்கூட அவனிடம் இல்லை. ஆனாலும், அவனது உயிர்ப்பு மட்டும் அந்தத் தொட்டிக்குள் போராடிக் கொண்டிருக்கிறது. அவனது அக்கா (லாத்தா) சிறிதும் அருவருப்பின்றி அவனைக் கவனித்துக் கொள்வதும், உம்மாவின் பாசமும் மட்டுமே அவனது மனித அடையாளத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக உள்ளன.

குடும்பச் சுமை மற்றும் பொருளாதாரச் நெருக்கடிகளுக்கு நடுவில், மாற்றுத்திறனாளி ஒருவனைப் பராமரிப்பது என்பது எந்தளவுக்கு உளவியல் அழுத்தத்தைத் தரும் என்பதைப் பற்றி இக்கதை பேசுகிறது. உம்மாவால் முடியாதபோது, அந்தப் பொறுப்பைத் தன் இளமையைத் துறந்து ஏற்றுக்கொள்கிறாள் லாத்தா.

வெளிநாட்டில் வேலை செய்யும் அண்ணன் (நானா) மற்றும் அவனது குடும்பத்தினரின் அலட்சியப் போக்கு, வஹாப்பை ஒரு மனிதனாகக்கூட மதிக்காத சமூகம் ஆகியவற்றுக்கு நடுவில் லாத்தாவின் கைகள் மட்டுமே வஹாபுக்கு அரணாக இருக்கின்றன.

படிக்க வேண்டிய வயதில், குடும்பச் சூழலால் கல்லூரிக் கல்வியை இழந்து, வஹாப்பின் மலத்தையும் சிறுநீரையும் கழுவுவதையே தனது வாழ்வாக மாற்றிக்கொள்ளும் லாத்தாவின் பாத்திரம், குடும்பத்திற்காகத் தங்களது தனிப்பட்ட விருப்பங்களைத் தாரைவார்க்கும் பெண்களின் வாழ்வியலைக் காட்டுகிறது.

இஸ்லாமியச் சூழலில் காலங்காலமாகப் பின்பற்றப்படும் தர்ஹா வழிபாடுகள், மார்க்கச் சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவை குறித்த விவாதங்களை இக்கதை திறம்பட முன்வைக்கிறது.

வஹாபுக்குக் குணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தர்ஹாக்களுக்கு அலைவதும் மண்ணில் புதைத்து வைத்தியம் பார்ப்பதும் இறுதியில் ஏமாற்றத்தில்தான் முடிகிறது. அறிவியல்ரீதியான மருத்துவம் கைவிட்ட பின்பு, சமூகம் நம்பிக்கையின் பெயரால் எதை எதையோ நாடுகின்றது என்பதை இது காட்டுகிறது.

கதையின் இறுதிப் பகுதியில் வஹாபுக்குச் ‘சின்னத்து’ செய்ய வேண்டுமா என்ற விவாதம் எழுகிறது. சாபு போன்றவர்களின் கண்டிப்பான மதக் கோட்பாடுகளுக்கும் லாத்தாவின் நடைமுறை யதார்த்தமான எதிர்ப்புகளுக்கும் இடையிலான மோதல், மனிதனின் இறுதித் தருணங்களில்கூட மதம் எத்தகைய அழுத்தங்களைக் கொடுக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

கதையில் வரும் நானாவின் பாத்திரம், நவீனக் கல்வியைப் பெற்றும் சொந்த வாழ்க்கையில் கோட்டைவிட்ட ஒருதலைமுறையின் பிரதிபலிப்பாக உள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு, குடும்பக் கடன் சுமை, கல்லூரிக் கல்வியைத் தொடர முடியாத தம்பியின் இயலாமை எனப் பல பிரச்சினைகள் குடும்பத்தைச் சுழன்றடிக்கின்றன.

சமூகத்தின் ஒடுக்குமுறைகள், அரசியல் கட்சிகளின் முரண்கள் மற்றும் வறுமை ஆகியவற்றுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் எளிய மக்களின் வாழ்க்கை, எந்தச் சமயத்திலும் வெடிக்கக் காத்திருக்கும் குண்டு போல விவரிக்கப்பட்டுள்ளது. மஹதியின் தற்கொலை போன்ற சம்பவங்கள், இந்தச் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் எத்தகைய உளவியல் சிதைவுக்கு ஆளாகிறார்கள் என்பதை உணர்த்துகின்றன.

வஹாப்பின் இறுதி நாள்களில் அவன் வெளிப்படுத்தும் சத்தங்களும் அவனது உடலிலிருந்து வெளிவரும் நாற்றமும் சுற்றியிருப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. இறுதியில் அனைவரும் அவனை விட்டு விலகிச் செல்லும்போது, அவனது மரணம் மிக இயல்பாக ஒரு விடுதலை போல அணுகப்படுகிறது.

“மவுத் என்பதே உயிரைச் சின்னத்து செய்வதுதான்” – என்ற நானாவின் வரிகள், வாழ்வின் இறுதியான விடுதலையை அல்லது மரணத்தின் அர்த்தத்தை ஆழமாகச் சிந்திப்பதாக அமைகின்றன. வஹாப்பைப் போன்ற விளிம்புநிலை மனிதர்களுக்கு மரணம் என்பது தண்டனையன்று; நீண்ட கால வேதனைகளில் இருந்து கிடைக்கும் நிம்மதி என்ற உளவியல் உண்மையை இக்கதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

ஆபிதீனின் ‘உயிர்த்தலம்’ சிறுகதை, உடல் ஊனம் மற்றும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒருவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, மனித மனங்களின் ஈவுயிரற்ற தன்மையையும் அதேவேளை உறவுகளின் உன்னத தியாகங்களையும் முன்வைக்கிறது.

தனிமனித வாழ்வியலின் மிகத் சிக்கலான உளவியல் தளங்களையும் சமூகத்தின் முரண்களையும் சமரசமின்றிப் பேசும் இக்கதை, வாசகர்களின் மனத்தில் ஒரு நீங்கா வடுவையும் ஆழமான சிந்தனையையும் ஏற்படுத்திச் செல்கிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *