
ஆன்மிகம், பக்தி மரபு, கிராமியச் சூழல் மற்றும் விளிம்புநிலை மனிதர்களின் அகச் சிக்கல்களை நுட்பமாகப் பதிவு செய்துவரும் எழுத்தாளர்களில் மாரி கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடத்தக்கவர்.
அவர் எழுதிய ‘திருச்சாந்து’ என்ற சிறுகதையை மேலோட்டமாகப் பார்த்தால் திருப்பதிப் பயணம், பஜனைப் பாடல்கள் மற்றும் பக்தி லயிப்பு ஆகியவற்றைப் பேசும் ஆன்மிகப் கதையாகத் தோன்றலாம். ஆனால், அதன் அடி அடுக்கில் மனித மனங்களின் ரகசிய வக்கிரங்கள், பாலியல் ஈர்ப்புகள், இரத்தப் பந்தங்களைத் தாண்டிய குற்றவுணர்ச்சி மற்றும் மனப்பிரமைகள் எவ்வாறு தனிமனிதனின் வாழ்வியலைச் சிதைக்கின்றன என்பதை அறிய முடியும்.
கதையின் நாயகனுக்கும் அவனது வளர்ப்புத் தாயாக, வழிகாட்டியாக விளங்கும் கோதை அக்காவுக்கும் இடையிலான உறவு எளிய தாய்ச் சேய் உறவன்று. அது விவரிக்க முடியாத, உளவியல் ரீதியான சிக்கல் நிறைந்த பிணைப்பு. கோதை அக்கா அவனைக் குழந்தையாகப் பார்த்தாலும் அவனது ஆழ்மனத்தில் அவளது உருவம் காமமும் பக்தியும் கலந்த விசித்திரமான வழிபாட்டுப் பொருளாகவே பதிந்துள்ளது.
“அந்த தெருவில் இருந்த அத்தனை கோபியருக்கும் நான் தான் ஸ்ரீகிருஷ்ணன். என் சில்மிஷங்கள் தான் அவர்களுக்கு விளையாட்டு. யாதவ குலத்தில் பிறந்த ஸ்ரீகிருஷ்ணன் இல்லை ராமனுஜ தாசரால் கண்டெடுத்த கிருஷ்ணன்.”
இந்த வரிகள் கதையின் மைய உளவியலைத் திறந்து காட்டுகின்றன. தன்னை ஸ்ரீ கிருஷ்ணனாக உருவகித்துக்கொள்ளும் நாயகன், கோதை அக்காவைச் சுற்றியுள்ள உலகைத் தன் லீலைகளின் களமாகக் காண்கிறான். ஆனால், கோதை அக்கா தற்கொலை செய்துகொள்ளும் போது, அந்தப் பக்திப் போர்வையின் கீழ் மறைந்திருந்த அவனது அக உலகமும் சரிந்து விழுகிறது.
அவள் கிணற்றில் இறங்கி மாண்டுபோனதற்குக் காரணமான சமூக அழுத்தம் மற்றும் அகத் தவிப்புகளைப் புரிந்து கொள்ளாமல், அவளைக் கற்பனையான தெய்வ நிலையிலும் குற்றவுணர்ச்சியின் குறியீடாகவும் மாற்றிவிடுகிறான் நாயகன்.
கோதை அக்காவின் மரணம் நாயகனின் அகத்தில் நிரந்தரமான வடுவை ஏற்படுத்துகிறது. அவளது இறுதி முகத்தைப் பார்ப்பதைக்கூடத் தவிர்க்க நினைத்த அவன், பின் குற்றவுணர்ச்சியின் துரத்தலால் அங்கே செல்கிறான். நாணலோடை, தூர்ந்து போன கால்வாய், வாடிய பூக்கள், கருவண்டுகளின் ரீங்காரம் ஆகியவை அவனது அகத்தில் எழும் குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடுகளாகவே விரிகின்றன.
அவளது ஒப்பாரிச் சத்தம் தாங்காமல் ஓடும் அவன், இயற்கையின் அமைதியில் தன்னை இழக்கிறான். தான் தோன்றியம்மன் கோயிலின் ஒற்றைச் சுடர் அவனுக்குக் கோதை அக்காவின் நெற்றியில் எப்பொழுதும் இருக்கும் ‘திருச்சாந்து’ போலத் தெரிகிறது. இந்த இடத்தில்தான் அவனது பிரமை தொடங்குகிறது.
யதார்த்தத்தின் கொடூரமான உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத அவனது மனம், அதை பக்திப் பிரமையாகவும் ஆன்மிக அனுபவமாகவும் மாற்ற முயல்கிறது. கோதையக்காவுடனான பால்ய நினைவுகள், அவளது அரவணைப்பு, அவனுடன் அவள் பகிர்ந்துகொண்ட பாசுரங்கள் எல்லாமே அவன் தப்பிச் செல்லும் உளவியல் முகமூடிகளாக மாறுகின்றன.
கதையில் வரும் மங்கா குளமும் திருக்கிருஷ்ண தாச மடமும் வெறும் ஆன்மிகத் தலங்கள் அல்ல; அவை நாயகனின் தோல்வியுற்ற காதலின் மற்றும் அலைபாயும் மனத்தின் குறியீடுகள். கோதையக்காவுடன் மட்டும் நின்றுவிடாமல், அவனது வாழ்வுக்குள் வரும் ‘தேவி’ என்ற கதாபாத்திரத்துடனான உறவும் இவ்வாறே சீரழிகிறது.
பத்து நாள் உற்சவத்தின் போது கூட்டத்தில் மலர்ந்த அந்த இளமைக்காலக் காதல், எந்தக் காரணமும் இன்றிச் சிதைந்துபோகிறது. லட்சத் திரளில் ஜொலித்த அந்தப் பெண் தன் கை நழுவிப் போவதையும் அதன் பிறகு அவன் மீண்டும் தனிமையின் கோரப் பிடியில் சிக்கிக்கொள்வதையும் அவன் உணர்கிறான். மங்கா குளத்தில் பாசி சூழ்ந்த மண்டபத்தில் படுத்திருக்கும் நாய் போன்ற குறியீடுகள், அவன் வாழ்க்கையின் அர்த்தமற்றத் தன்மையைக் காட்டுவனவாக உள்ளன.
அவன் தேடிச் செல்லும் திருப்பதிப் பயணமும் பஜனைப் பாடல்களும் அவனுக்கு எந்த அமைதியையும் தருவதில்லை. கோவிந்தா கோஷம் எழுப்பும் கூட்டத்தின் நடுவேயும் அவன் தனிமைப்படுத்தப்படுகிறான். நாத மணியோசையில் அவன் காணும் பிரமைகள் யாவும் அவனது அகத்தின் சிதைந்த எச்சங்களே.
கதையின் முடிவு முக்கியமான உளவியல் உண்மையை உரக்கச் சொல்கிறது. மலைப் பாதையில் இரவில் திரும்பி வரும்போது, காற்றுடன் கலந்து வரும் திருச்சாந்தின் மணம் அவன் நாசியை நிரப்புகிறது. மழை பொழியும் அந்தத் தருணத்தில் அவனது பிரமை உச்சம் தொடுகிறது.
“மழ பொழிய அவள் திரும்பி ‘ஆத்ம பந்தம்’’ என்றாள். ஒரு கணம் அவள் கண்ணில் கோதை எழ துயர் கலைந்த பூரண வெளி எங்கும் தூய நிர்வாணம் துலங்கியது.”
இந்த இறுதி வரி, நாயகன் இன்னும் யதார்த்த உலகிற்கு வரவில்லை என்பதைக் காட்டுகிறது. அவனது மனம் முழுமையாக மனப்பிரமை உலகில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கோதை அக்காவின் மரணத்தினால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியிலிருந்து மீள முடியாமல், அவளைத் தெய்வமாகவும் தன் ஆத்ம பந்தமாகவும் கற்பனை செய்து கொண்டு, தன் உண்மையான வாழ்வியலின் துயரங்களை மறைத்துக்கொள்கிறான். சமூகம் இடும் பக்திப் போர்வையைப் போர்த்திக்கொண்டு, தன் அகத்தின் வக்கிரங்களையும் தோல்விகளையும் நியாயப்படுத்த முயலும் மனிதனின் கையறுநிலையை இது துல்லியமாகக் காட்டுகிறது.
எழுத்தாளர் மாரி கிருஷ்ணமூர்த்தியின் ‘திருச்சாந்து’ சிறுகதை, பக்தி மரபின் பின்னணியில் மனித மனங்களின் அந்தரங்கத் தவிப்புகளையும் பாலியல் குழப்பங்களையும் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைக் கறாராக அலசுகிறது. கோதை அக்காவுடனான உறவு மற்றும் அதன் சோகமான முடிவு ஆகியவை வெறும் சம்பவங்கள் அல்ல; அவை தனிமனிதனின் வாழ்நாளின் ஆன்மச் சிதைவுகள். மனிதனின் பாலியல் தூண்டுதல்களையும் குற்றவுணர்ச்சியையும் ஆன்மிக மயமாக்க முயலும் சமூக உளவியலை இந்த நவீனச் சிறுகதை காட்டுகிறது.
– – –
