முந்நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 171.அறச்சிக்கல் (வைரவன் லெ.ரா. எழுதிய ‘அதே மேஜையில்’ சிறுகதையை முன்வைத்து…)

 

எழுத்தாளர் வைரவன் லெ. ரா. எழுதிய ‘அதே மேஜையில்’ சிறுகதை, சமகால நடுத்தர வர்க்க மனிதனின் உளவியல் சிக்கல்களை, பொருளாதார நெருக்கீடுகளை, தனிமையின் கோர முகத்தை மற்றும் மாநகர நாகரிகத்தின் இயந்திரத்தனமான வாழ்வியலைத் துல்லியமாகக் காட்டும் படைப்பு. இக்கதை நவீனப் பொருளாதாரத்தில் தன்னைத் தொலைத்துவிட்டு, அதிகாரத்தின் முன்னே சிறுமையுற்று, சொந்தக் குடும்பத்தாரின் கேலிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் ஆளாகித் தவிக்கும் எளிய மனிதர்களின் கூட்டுமனசாட்சியின் வெளிப்பாடாக அமைகிறது.

கதையின் தொடக்கம் குளிர்ச்சியான டிசம்பர் மாத சனிக்கிழமையில் தொடங்கினாலும் அந்நிகழ்வு கதையின் நாயகனின் ஆன்மாவில் உறைந்திருக்கும் நீண்டகாலக் குளிர்வையும் வெறுமையையும் வெளிப்படுத்துகிறது. பன்னாட்டு வங்கியில் உயர்ப் பதவியில் வேலை பார்க்கும் மனைவியும், அவளது சம்பாதிப்புச் சுவடுகளும் கதாநாயகனை உளவியல் ரீதியான தாழ்வுணர்ச்சிக்கு ஆளாக்குகின்றன. “பழைய ஜட்டி” என்ற மனைவியின் வார்த்தை, குடும்ப அமைப்பில் ஆணின் பொருளாதாரச் சார்புநிலை அவனது அகந்தையை எப்படி நசுக்குகிறது என்பதற்கான நேரடியான சாட்சியாகிறது.

இச்சூழலில் அவனுக்குக் கிடைக்கும் தற்காலிகத் தனிமை விடுதலையைத் தருவதற்குப் பதிலாக, அவனது பலவீனங்களைப் பூதக்கண்ணாடி போலக் காட்டுகிறது. 65 இன்ச் தொலைக்காட்சி, பியர் எனத் தனது தனிமையை நுகர்வுப் பொருட்களின் வழியே கடத்த முயலும் நாயகன், உண்மையில் நுகர்வு கலாச்சாரம் மனிதனை எப்படி இயந்திரமாக்கிவிட்டது என்பதன் குறியீடாகிறான். அலுவலகத்தில் மேலதிகாரியின் பணிச்சுமைக்கு மறுப்பு சொல்லத் திராணியற்ற மரமண்டையாக அவன் தன் பிம்பத்தைக் கண்டடைவது, இன்றைய கார்ப்பரேட் வாழ்வியலின் சகிப்புத்தன்மையற்ற யதார்த்தமாகும்.

கதை நகரும் ‘கங்கோத்திரி பார்’ சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களின், நசுக்கப்பட்டவர்களின் ஆன்மா சந்திக்கும் ஒரு தற்காலிகக் கூடம். அங்கே வாசலில் கிடக்கும் முதிய யாசகரும், உள்ளே எதிரே அமரும் பெயரற்ற இளைஞனும் நடுத்தர வர்க்கத்தின் கீழ்நிலை நிழல்களாவார்கள்.

எதிரே அமரும் இளைஞனின் பாத்திரப்படைப்பு கதையின் மைய நாடியாகும். அவனது வாழ்க்கை அவலங்களின் குவியல்:- தாயின் ஏமாற்றுத்தனங்கள், குடும்பப் பொறுப்புகள், கான்கிரீட் வேலை செய்த கைகளின் வெண்தேமல், குறைவான கூலி, காதலியின் திருமண விலகல் எனப் பல அடுக்குகளைக் கொண்டது. அவன் எதிர்கொள்ளும் வஞ்சகங்களைவிட, அவன் வெளிப்படுத்தும் எதார்த்தமான ஒப்பிடுகள் நம்மை உலுக்குகின்றன. “நம்ம குண்டி அரிக்கும்போது சொரிவோம்…” என்ற அவனது கொச்சைமொழிவழக்காறு, நவீன நாகரிகத்தின் போலி முகமூடிகளைக் கிழித்தெறிகிறது.

கதையில் நாயகனும் அந்த இளைஞனும் வெவ்வேறு தளங்களில் இருந்தாலும் இருவரின் அக உலகும் ஒரே மாதிரியான தோல்விகளாலும் குற்ற உணர்ச்சிகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. நாயகன் தன் மனைவியின் குடும்பத்தினரின் கேலிப் பேச்சுக்களுக்கும், அலுவலகச் சுரண்டலுக்கும் அஞ்சி நடுங்குகிறான். தொலைபேசியில் மாமனாரிடம் பேசும்போது பவ்யமாகக் குரலை மாற்றிப் பேசும் அவனது நடிப்பு, குடும்பம் என்ற நிறுவனத்திற்குள் மனிதன் எத்தகைய சமரசங்களைச் செய்ய வேண்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது.

மறுபுறம், அந்த இளைஞன் எதையும் மறைக்கத் திராணியில்லாமல், தன் காயங்களை வெளிப்படையாகப் பேசுகிறான். அவனது விரக்தியும் கண்ணீரும் யாருடைய கவனத்தையும் ஈர்க்காத மாநகரச் சூழலில், நாயகன் அதனைப் பார்த்தும் பாராமல் கடந்துசெல்வதுதான் நவீன மனிதனின் தனிமைச் சாபமாகும். “நினைத்திருந்தால் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, காப்பாற்றி இருக்கலாமே!” என்ற குற்ற உணர்வு நாயகனை மாத்திரமன்றி, சக மனிதனைத் திரும்பிப் பார்க்கத் தவறும் ஒட்டுமொத்த சமூகத்தையும் நோக்கி எறியப்படும் கேள்விக் கணை.

கதையின் தலைப்பு மிக முக்கியமான பொருத்தம் கொண்டது. ஆரம்பத்தில் நாயகனுக்கும் அந்த இளைஞனுக்கும் இடைப்பட்ட தூரத்தைக் குறிக்கும் அந்த மேஜை, கதையின் முடிவில் பெரிய தத்துவார்த்த உண்மையைச் சொல்கிறது. இளைஞனின் தற்கொலைக்குப்பின்பு, அதே மேஜையில் வந்து அமரும் வேறொரு மனிதனின் வார்த்தைகள் கதையை முழுமை பெறச் செய்கின்றன: “ஞாபகம் இருக்கா? நீயெல்லாம் எவ்ளோ சம்பாதிக்கிற… உனக்கே அவ்ளோ பிரச்சனை? நானெல்லாம் பிளாட்பாரம். சாவுலாம்னுதான் வந்தேன்… நீயொரு வாழும் புத்தர் பய்யா.”

இந்த இடத்தில் கதாநாயகன் அடைந்த அதிர்ச்சி சாதாரணமானதன்று. அவனது உயர்தர உடை, ஐபோன், கை நிறைய சம்பளம் எல்லாவற்றையும் தாண்டி, அவனும் அந்த விளிம்புநிலை இளைஞனும் அடிப்படையில் ஒரே துன்பச் சக்கரத்தில் சுழல்பவர்கள்ள்தான் என்ற உண்மை அவனுக்குப் புரிகிறது. “ஒருவேளை அது நானாகவும் இருந்திருக்கலாம்” என்ற எண்ணம் அவனது அகந்தையை முழுமையாக உடைத்துவிடுகிறது. பொருளாதார ரீதியாக அவன் மேல்தட்டில் இருக்கலாம்; ஆனால், ஆன்மாவின் அடிப்படையில் அவனும் பிச்சைக்காரனைப் போன்றே வறுமையில் வாடுகிறான்.

வைரவன் லெ ரா அவர்களின் ‘அதே மேஜையில்’ சிறுகதை, பொருளாதார வளர்ச்சி மனிதனை எப்படித் தனிமைப்படுத்துகிறது, அவனது உளவியலை எவ்வாறு சிதைக்கிறது என்பதைச் சிறப்பான நடையில் விவரிக்கிறது. நுகர்வு வெறியும் அந்தஸ்துப் போட்டியும் நிறைந்த இன்றைய சமுதாயத்தில், சக மனிதனின் கண்ணீரைத் துடைக்கத் தவறிவிட்டுத் தனிமனித வெற்றிகளைக் கொண்டாடும் மனிதர்களின் முகத்தில் விழும் சாட்டையடி இக்கதை. 

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *