முந்நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 184.அருளும் அதிகாரமும் (பா. செயப்பிரகாசம் எழுதிய ‘தாலியில் பூச்சூடியவர்கள்’ சிறுகதையை முன்வைத்து…)

மூத்த எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்தின் ‘தாலியில் பூச்சூடியவர்கள்’ என்ற சிறுகதை, தமிழ் நடுத்தர வர்க்க மற்றும் கிராமியச் சமூக அமைப்பில் புதைந்து கிடக்கும் சாதிய வன்முறை, நிலப்பிரபுத்துவ அதிகாரம், பாலின அடக்குமுறை மற்றும் பொருளாதாரச் சுரண்டல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சாட்சியப் படைப்பாகும். 

இலக்கிய வெளியில் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை வெறும் இரக்கத்திற்குரியதாக மட்டும் சித்தரிக்கப்படாமல், அவர்களின் அக எழுச்சியும் அதேநேரம் அதிகார வர்க்கத்தால் அவர்கள் எத்தகைய உளவியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதும் இக்கதையில் நுட்பமாகப் பேசப்பட்டுள்ளது.

ஒரு கிராமத்தின் பள்ளத் தெருவும் ரெட்டி வீட்டு முதலாளிகளின் ஆதிக்கமும் அந்தச் சூழலில் அகப்படும் தைலி என்ற பெண்ணின் வாழ்க்கையும் வெறும் கதையன்று; அது தமிழ்ச் சமூகத்தின் ரத்தமும் சதையுமான யதார்த்தம். 

கதையின் தொடக்கமே தீவிரமான சமூகக் காட்சியுடன் தொடங்குகிறது. பள்ளக்குடிக்குச் சொந்தமான கருப்பசாமி கோவிலில் பொங்கல் விழாவின் போது, புதிதாகத் கல்யாணமாகி வந்த பள்ளப் பெண் தைலி அக்கினிச் சட்டி ஏந்தி ஆடுவது அந்த ஊரையே உலுக்குகிறது.

“தாலியில் பூச்சூடிய பள்ளப் பெண்களின் குரவை மேலெழுந்தது” என்ற வரி, தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளங்களை ஆழமாகப் பேசுகிறது. ரெட்டி வீட்டுப் பெண்கள் மட்டுமே கூந்தலில் பூச்சூட அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில், பள்ளப் பெண்கள் தாலியில் பூச்சூடிக் கொள்வது ஒன்றே அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று காட்டியது. அந்தச் சமூகக் கட்டுப்பாட்டை உடைக்கும் விதமாக தைலி அக்கினிச் சட்டி ஏந்துவது அவளது அகத்தில் எழும் முதல் எதிர்ப்புக் குறியீடாகும்.

தைலி மீது சாமி வந்து ஆடும்போது, அவளது குரல் சாதாரணப் பெண்ணின் குரலாக இல்லாமல், கருப்பசாமியின் ஆக்ரோஷமான குரலாக மாறுகிறது. “மூணு வருஷமா பஞ்சம் சாமி… விளக்கேத்தறதுகூட இல்லே, எங்க கோயில் விளக்கேத்தாம இருண்டு கிடக்குடா” என்று சாமி கோபித்துக் கொள்வது, ஒடுக்கப்பட்ட மக்களின் குலதெய்வமும்கூட சாதிய வன்முறையாலும் வறுமையாலும் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. அந்தநேரத்தில் அந்த எளிய மக்களின் பயமும் பக்திப் பரவசமும் அதிகாரத்திற்கு முன் அவர்கள் எத்தகைய உளவியல் அடிமைத்தனத்தில் வாழ்ந்தார்கள் என்பதை விளக்குகிறது.

கதையின் மற்றொரு முக்கியக் களம், வடரெட்டி மற்றும் அவனது மனைவி தும்மக்கா இடையேயான சொத்துரிமை மற்றும் பொருளாதாரச் சண்டையாகும்.

தும்மக்கா தன் தாய்வீட்டிலிருந்து கொண்டுவந்த புஞ்சை நிலத்துத் தானியங்களைக்  குலுக்கையில் தனித்துப் பூட்டி வைத்துக் காப்பாற்றுகிறாள். ஒரேவீட்டில், ஒரேபடுக்கையில் வாழ்ந்தபோதும் அவர்களின் சொத்துக்கள் தனித்தனியாகவே இருக்கின்றன. புருஷனின் செலவிலேயே ஜீவனம் நடந்தாலும் அவளுடைய சேகரிப்பில் எதையும் தொட அவனுக்கு உரிமையில்லை.

தும்மக்கா தன் சொத்தைப் பாதுகாப்பதில் காட்டும் பிடிவாதம் ஒருபுறமிருக்க, வடரெட்டி அந்தச் சூழலைப் பயன்படுத்தி விளிம்புநிலைப் பெண்ணான தைலியைத் தன் வளைவுக்குள் கொண்டுவர முயல்வது மறுபுறம் நடக்கிறது. இங்கு மனித உறவுகள்கூட பொருளாதாரத்தின் அடிப்படையில், நிலத்தின் ஆதிக்கத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படுகின்றன என்பதை எழுத்தாளர் கறாராக வெளிப்படுத்துகிறார்.

ராஜாமணி நடத்தும் கடை கிராமத்தின் அதிகார மையமாகவும், காமத்தின் வெளிப்பாடாகவும் செயல்படுகிறது.

காய்ச்சிய வெயிலில் கடைக்குச் செல்லும் தைலி, கடையில் சாமான்கள் வாங்கும் போது எதிர்கொள்ளும் அவமானங்கள் கொடூரமானவை. கடையின் பலகையில் அமர்ந்திருக்கும் வடரெட்டியின் கண்கள் தைலியின் மீது படிந்திருப்பதும், ராஜாமணி அவளிடம் கொச்சையாகப் பேசுவதும் விளிம்புநிலைப் பெண்கள் எத்தகைய பாலியல் வன்முறைக்கு மறைமுகமாக ஆளாக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

தைலி தனக்குத் தேவையான மாகாணிப்படி தவசத்திற்குப் பொரிகடலியும் புளியும் கேட்கும்போது, ராஜாமணி கேட்கும் இரட்டை அர்த்தப் பேச்சுகள் அவள் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. வடரெட்டி அவள் கொட்டானில் சீனிமிட்டாய் அள்ளிப் போட்டு வலையை விரிக்கும்போது, தைலி கூனிக்குறுகிப் போவதும், பயத்தில் அவள் உடல் நடுங்குவதும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்ணின் உளவியல் சித்திரமாகும்.

சமூக நெறிமுறைகளை மீறும் பெண்களை அல்லது விளிம்புநிலை மக்களை அடக்க ஊர் பஞ்சாயத்து பயன்படுத்தும் உத்திகள் கதையில் விரிவாகப் பேசப்படுகின்றன.

தைலி ஊர் வழியே தண்ணீர் எடுத்துச் செல்வதும், காலில் செருப்புடன் நடப்பதும் அக்ரகாரத்து ரெட்டி வீட்டுப் பெண்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. “உன்னை யாருடி போகச் சொன்னது?” என்று அவர்கள் கேட்பது, சாதியக் கட்டளைகளை மீறுபவர்களுக்குச் சமூகம் வழங்கும் தண்டனையின் எச்சரிக்கையாகும்.

ஒருகாலத்தில் தப்பு செய்யும் தாழ்ந்த ஜாதிக்காரர்களை ‘ஊர்க்காலி மாடு’ மேய்க்கச் சொல்லித் தண்டித்த சமூகம், இப்போது தைலியின் மீதான வன்மத்தை வெளிப்படுத்தத் துடிக்கிறது. தைலி ஊர் வழியே நடப்பது ரெட்டி வீட்டுப் பெண்களின் அகச் சமநிலையைக் குலைக்கிறது; ஏனென்றால், அது அவர்களின் பலநூறு ஆண்டுகால ஆதிக்கச் சுவரில் விழும் முதல் விரிசல் ஆகும்.

தைலியின் கணவனான மாடசாமிப் பள்ளன் எளியவன்; சாதுவானவன். ஆனால் அவனது குடிசைக்கு முன்னால் ரெட்டி வீட்டு இளவட்டங்கள் மட்டைப்பந்து விளையாடுவதும், புளியமரத்தில் உட்கார்ந்திருப்பதும் அவனது குடும்பத்தின் மீதான அத்துமீறலாகும்.

தன் மனைவியின் மீது ஊர் மக்களின் கண்கள் விழுவதையும், வடரெட்டியின் நிழல் தன் குடும்பத்தின் மீது படிவதையும் பார்த்துக் கொண்டிருக்கும் மாடசாமிப் பள்ளனின் அகவேதனை சொல்ல முடியாதது. இரவில் குடிசைக்கு வெளியே ஒட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டு, காலடியோசைகளுக்காகக் காதுகளை விரித்துக் காத்திருக்கும் அவனது காவல் ஒரு தனிமனிதனின் கைளற்ற நிலையைக் காட்டுகிறது.

வெளியில் நடக்கும் இந்த அழுத்தங்கள் பகலில் அடங்கிக் கிடந்தாலும், இரவானால் அந்தக் குடிசைக்குள் சண்டையாகவும் அழுகையாகவும் வெடிக்கிறது. தன் மனைவியைக் காப்பாற்ற முடியாமல், அதேநேரம் வறுமையின் பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆணின் பலவீனமான உளவியல் இங்குத் துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கதையின் இறுதியில், ஊர் சபையின் தீர்ப்புகளை மீறி தைலி தன் கணவனுடன் இணைந்து வாழ முயன்றாலும், சமூகத்தின் வன்முறை அவளை விடுவதாக இல்லை. பஞ்சாயத்தின் தீர்ப்புக்குப் பின், விடியலில் நிசப்தமாகப் புளியந்தோப்பில் ஊர்க்காலி மாடுகளைப் பத்திக்கொண்டு பெண் போவதை ஊரே பார்க்கிறது.

எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்தின் ‘தாலியில் பூச்சூடியவர்கள்’ சிறுகதை, தமிழ் இலக்கியத்தில் சாதிய ஒடுக்குமுறையையும் பாலினச் சுரண்டலையும் ஆழமாகப் பேசும் முக்கியமான ஆவணமாகும். தாலியில் பூச்சூடித் தன் உரிமையைக் கொண்டாட நினைக்கும் விளிம்புநிலைப் பெண்கள் மீது இந்தச் சமூகம் எத்தகைய வன்முறையை ஏவுகிறது என்பதை இக்கதை வெளிப்படுத்தியுள்ளது. தனிமனிதனின் சுதந்திரம், பசி, காமம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான யுத்தத்தைத் துணிச்சலாக இந்தப் படைப்புப் பதிவுசெய்துள்ளது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *