முந்நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 200.தலைமுறைகளின் மனநிலைகள்  (ஆஸ்டின் சௌந்தர் எழுதிய ‘சிவப்பு’ சிறுகதையை முன்வைத்து…)

நவீனத் தமிழ் இலக்கிய ஆர்வலரும் விமர்சகரும் எழுத்தாளருமான ஆஸ்டின் சௌந்தரின் முதல் சிறுகதை ‘சிவப்பு’. இது, மனிதர்களின் அக உலகையும் காலங்காலமாகச் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் மரபுகளையும் நவீன உலகிற்கும் பாரம்பரியத்திற்கும் இடையிலான உராய்வுகளையும் நுட்பமாகக் காட்டுகின்றது. இந்தச் சிறுகதை அமெரிக்க வாழ்வுமுறைக்கும் தமிழகத்தின் கிராமிய வேர்களுக்குமான பாலமாக விளங்கும் குடும்பத்தின் எதார்த்தங்களை விவரிக்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குத் திரும்பத் தயாராகும் பேத்தியின் தவிப்பு, தொண்ணூற்றாறு வயதை நெருங்கும் ரங்கநாயகி பாட்டியின் முதிய கால நினைவுகள், தலைமுறைகளைக் கடந்து தொடரும் குடும்ப உறவுகளின் சிக்கல்கள் மற்றும் தியாகங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இக்கதை நகர்கிறது. 

சிறுகதையின் தொடக்கத்திலேயே எழுத்தாளர் ஆஸ்டின் சௌந்தர் நவீன உலகத்திற்கும் கிராமியப் பாரம்பரியத்திற்குமான இடைவெளியை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். நாயகி அமெரிக்காவில் படித்து, அங்கேயே வாழத் துடிக்கும் நவீனப் பெண். அவளது வருங்காலக் கணவன் ஜேசன் பவல். மறுபுறம், 96 வயதை எட்டியும் தன் காலத்து நினைவுகளிலேயே சஞ்சரிக்கும் ரங்கநாயகி பாட்டி.

இங்குத் தனிமனித வாழ்வியல் அடிப்படையில் இரண்டு வெவ்வேறு உலகங்கள் மோதிக்கொள்கின்றன. பாட்டியைப் பொறுத்தவரை அவளது உலகம் என்பது அவளது குடும்பம், அடுப்படி, திண்ணை, கணவர் கேசவன் மற்றும் அவளுக்குக் கிடைக்கப்பெற்ற ஒரேயொரு பொக்கிஷமான ‘சிவப்புப் பட்டுச் சேலை’ ஆகியவற்றைச் சுற்றியே அமைகிறது. ஆனால், பேத்தியின் உலகமோ பாஸ்போர்ட், ஏர் டிக்கெட், வைஃபை, நெட்ஃபிக்ஸ், வீடியோ கேம்கள் மற்றும் காதலர் ஜேசன் என அதிநவீனத் தொழில்நுட்பத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது.

இடைப்பட்ட இந்தக் கலாச்சார மாற்றத்தில், பேத்தி தன் பாட்டியின் மீதும் அவளது கதைகளின் மீதும் பற்றுக்கொண்டிருந்தாலும் அவளது உடனடித் தேவை பாட்டியின் திருமணப் பட்டுச் சேலையை அமெரிக்கா கொண்டு செல்வது மட்டுமே. நவீனக் காலத்து நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே அப்பட்டுச் சேலை அவளுக்குத் தெரிகிறது. ஆனால் பாட்டிக்கோ அது வெறும் துணியன்று; அவளது ஒட்டுமொத்த வாழ்வின் துயரங்கள், அடக்க ஒடுக்கங்கள் மற்றும் கணவனின் ஒரேயொரு பிரியமான வெளிப்பாடு. இந்த இடத்தில் இருவேறு தலைமுறைகளின் மனநிலைகளுக்கு இடையேயான முரண்பாடு கூர்மையாக வெளிப்படுகிறது.

கதையில் வரும் கிராமிய வீடும் அதன் அமைப்பும் வெறும் கட்டடச் சுவர்களல்ல; அவை காலங்காலமாகப் பெண்களைச் சுமைதாங்கிகளாகப் பிடித்து வைத்திருக்கும் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பின் குறியீடுகள். திண்ணையில் அமர்ந்து ஊருக்கு நியாயம் பேசும் தாத்தா, காலை முதல் இரவு வரை அடுப்பங்கரையும் திண்ணையுமாக ஓடித் தேயும் பெண்களின் கால்கள், “பெண்டுக ரகசியம் பெண்டுகளோட” என்ற பெயரில் திணிக்கப்படும் மௌனம் ஆகியவை கிராமிய வாழ்வியலின் மறுபக்கத்தைக் காட்டுகின்றன.

பாட்டி தன் இளமைக் காலத்தைக் நினைவுபடுத்துகையில், தன் கணவன் கேசவன் தன்னை அன்போடு நடத்தியதைவிட, கோபத்தில் கையில் கிடைத்ததை வைத்து எறிந்ததையும், தான் சமைத்ததை ஒருநாளும் பாராட்டியிராத தன்மையையுமே பெருமையாகவும் ஆறுதலாகவும் சொல்கிறாள்.

“பிரியமா எனக்கு முகூர்த்தப் பட்டுச் சேலையை எடுத்தாருங்கறத நினைச்சே உன் தாத்தனோட நான் காலம் தள்ளுனேன்” என்ற பாட்டியின் வரி, ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண் சமூகத்தின் பல நூற்றாண்டுகாலச் சமரசங்களையும் சகிப்புத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.“ சிறிய அன்பு வெளிப்பாட்டிற்காகப் பெண்ணின் ஒட்டுமொத்த வாழ்வுமே அர்ப்பணிக்கப்படுவதை இக்கதை விமர்சிக்கிறது.

கதையின் தலைப்பாக அமைந்துள்ள ‘சிவப்பு’ என்பது பல அடுக்குகளைக் கொண்ட ஒரு குறியீடு. சாயங்கால வேளையில் மலையடிவாரத்தில் மறையும் சூரியனின் இரத்தமும் மஞ்சளும் கலந்த நிறமாகவும் மழைக்கால ஈர மண்ணில் ஊர்ந்து செல்லும் தம்பலப்பூச்சியின் மர்மமான சிவப்பு நிறமாகவும் அப்பட்டுச் சேலை வர்ணிக்கப்படுகிறது.

தாத்தா தன் மனைவிக்காக ஆசைப்பட்டு, உறவினர்களின் எதிர்ப்ப மீறி கோயம்புத்தூரில் சென்று வாங்கிய அந்தச் சிவப்புச் சேலை, அவர்களின் காதலின் ஒரே அடையாளமாக மாறுகிறது. மறுபுறம், அந்தச் சிவப்பு நிறம் நெருப்பைக் குறிப்பதாகவும் அமைகிறது. “நெருப்புல தண்ணி ஊத்துனா என்ன ஆகும்?” என்ற பாட்டியின் கேள்விக்கான தத்துவார்த்த அர்த்தம், குடும்ப வாழ்வின் அடக்க முடியாத வெப்பத்தையும், அந்த நெருப்பில் உருகிப்போன பெண்களின் வாழ்வையும் குறிப்பதாக உள்ளது.

அமெரிக்கக் காதலன் ஜேசனின் விருப்பத்திற்காக அந்தப் பட்டுச் சேலையைத் தன் நாட்டுக்குத் தூக்கிச் செல்லத் துடிக்கும் பேத்தியின் ஆர்வம், பாரம்பரியத்தை மதிப்பதைக் காட்டிலும் அதை ‘அருங்காட்சியகப் பொருளாக’ அல்லது ‘அதிர்ஷ்டச் சின்னமாகக்’ கருதும் நுகர்வுவாத மனநிலையை வெளிப்படுத்துகிறது.

இக்கதையில் சித்தப்பாவின் பாத்திரம் இன்றைய கிராமிய வாழ்வியலின் வணிகமயமாக்கலையும் போலித்தனத்தையும் அம்பலப்படுத்துகிறது. வெளிநாட்டுப் பணத்தில் வீடு பராமரிக்கப்பட்டாலும் விவசாயத்தை ஒரு பழம்பெருமைக்காக மட்டுமே செய்துவிட்டு, “பாட்டியிருக்கிறவரைக்கும் அவங்களை ஏமாத்துறதுக்காவது செய்யணும்” என்று அவர் கிசுகிசுப்பது இன்றைய கூட்டுக்குடும்பங்களின் சிதைவை அப்பட்டமாகக் காட்டுகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் பேத்திக்கும் அவளது காதலனுக்கோ பாரம்பரியம் என்பது இன்ஸ்டா ரீல்ஸாகவும் கோவில்களில் சேலைகட்டும் சடங்குகளாகவும் வாட்ஸ்அப் செய்திகளாகவும் சுருங்கிவிடுகிறது. பாட்டியின் கதைகளைக் கேட்டு மெய்சிலிர்ப்பதாகச் சொன்னாலும் கடைசி வரை அந்தச் சேலை கைக்கு வராதபோது ஏற்படும் ஏமாற்றம் தனிமனிதர்களின் உணர்ச்சிகளைவிடப் பொருள்கள் மீதும் அந்நிய நாட்டுச் சடங்குகளின் மீதும் அவர்கள் வைத்துள்ள பற்றை வெளிச்சமிடுகிறது.

கதையின் உச்சக்கட்டமாக, பேத்தி ஊருக்குப் புறப்படும் கடைசித் கணத்தில் அலமாரிச் சாவி காணாமல் போவது ஒரு குறியீட்டுச் செயலாக அமைகிறது. மூன்று வாரங்களாகச் சாவியைத் தராமல் இழுத்தடிக்கும் பாட்டியும் சித்தியும் திட்டமிட்டே அதைச் செய்திருக்கக்கூடும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அந்தச் சிவப்புப் பட்டுச் சேலை என்பது பாட்டியின் ஆன்மாவுடன் கலந்தது; அதை அமெரிக்கா என்ற அந்நிய பூமிக்குத் தூக்கிச் செல்வதை அந்த முதிய மனம் கடைசி வரை விரும்பவில்லை என்பதே நிஜம்.

சேலைக்குப் பதிலாகப் பாட்டி தன் கையில் திணிக்கும் “கதையுள்ள நோட்டு” என்பது தலைமுறைகளைக் கடந்த அனுபவங்களின் சாட்சியாகும். சேலை கிடைக்கவில்லை என்றதும் ஏமாற்றமடைந்தாலும் அதை கார் கண்ணாடியில் பார்த்துவிட்டு நிறைவடையும் பேத்தியின் மனநிலை, பாரம்பரியம் என்பது வெளிப்படையான பொருட்களில் இல்லை, அது தலைமுறைகள் கடத்தும் நினைவுகளிலும் கதைகளிலும்தான் அடங்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.

எழுத்தாளர் ஆஸ்டின் சௌந்தரின் ‘சிவப்பு’ சிறுகதை, ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைப் பெண்களின் உளவியலைத் துல்லியமாக ஆராய்ந்துள்ளது. கிராமியச் சூழலின் வறட்சியும் உறவுகளின் மேலோட்டமான அன்பும் நவீன உலகின் இயந்திரத்தனமும் இக்கதையில் நேர்த்தியாகக் கலக்கப்பட்டுள்ளன. பெண்களின் ஒடுக்கப்பட்ட வாழ்வியலையும் அவர்கள் எஞ்சியிருக்கும் அன்பை எப்படிக் காப்பாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் இக்கதை ஆழமாகப் பதிவுசெய்துள்ளது. 

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *