காக்கை-கமண்டலம்

நார்ப்பூச்சி கூட்டிற்குள் நுண் முட்டைகள் சரியான அலைவரிசைக்காக காத்திருக்கின்றன. உணர்கம்பிகள், தண்டு, எலும்பு ஏதுமின்றி திரவிய தசையை மேல் அழுத்திலிருந்து கீழ் அழுத்தத்திற்கு பாய்ச்சும்போது நகர்வு ஏற்படும். விளிம்பு சேலோஃபான் உறைக்குள் ரகசிய ஆய்வுக்கூடங்களில் பிசினை அணுக்கதிர்களால் தாக்கி உருவாக்கப்பட்ட அமிலத்தின் அணுக்களை மனித செவிக்குக் கேட்கா அதிர்வெண் அலைவரிசையில் அசைத்துக்கொண்டிருக்கிறது உயிர் கணினி. அமிலத்தின் அதிர்வெண்ணும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் பாழடைந்துபோன வானொலி நிலையத்திலிருந்து பரவும் வானொலி அலைகளின் மூல அதிர்வெண்ணும் ஒத்திசைத்தால், அமில அணுக்கள் தடுக்கமுடியா பெருக்கத்திற்கு உள்ளாகி விஸ்வரூபம் எடுக்கும்.

அகல பாதாளத்தில் புதைந்திருக்கும் விண்கல்லில் உறைந்திருக்கும் ஒரு செல் உயிரியை தேடி ஆயிரம் கிணறுகள் தோண்டி ஏமாற்றமடைந்த விண் நாடோடி கூட்டம், தோண்டிய கிணறு ஒன்றில் ஜீவ சமாதி எடுக்க ஆயத்தமாகிறார்கள். சமாதி எடுப்பதற்கு முன் அவர்களுக்கு மட்டும் தலைமுறை தலைமுறையாக வாய்வழியாக ரகசியமாய் ஓதப்பட்ட வேள்வி முறைப்படி தன்னையே காவாக அர்ப்பணித்துக்கொள்ள மெல்லிய இடை யுவதி ஒருத்தி தயாராகிறாள். வேத முறைப்படி ஆன்ட்ரோமேடா நட்சத்திர கூட்டத்திலிருக்கும் ஆல்ஃபா ஆன்ட்ரோமேடே நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியை மட்டும் பிரித்தெடுக்க தூய பட்டகம் ஒன்றை தலைக்கு மேல் உயர்த்துகிறாள். சில வினாடிகளில் பிரபஞ்சத்தின் அனைத்து ஒளியும் மங்கி அந்த பட்டகத்தினுள் நுழைந்து ஞாலம் அனைத்தையும் கரும் இருள் சூழ பல உயிரினங்கள் மாய்கின்றன. பிரித்தெடுக்கப்பட்ட தூய ஒளி கண்களை பொசுக்கும் ஜொலிப்புடன் அவள் இதயத்தை பிளந்து வாவிக்குள் பாய்கிறது.

காவி உடையணிந்த சிப்பாய்கள், கழுகு சின்னம் பொருந்திய சிகப்பு கொடிக்கம்பத்தின் கீழ் அகண்ட மைதானத்தின் விளிம்பு தடகள பாதையில் அணிவகுக்கின்றனர். அணிவகுப்பு மைதானமெங்கும் ஸ்வஸ்திகா குறியீடு வெள்ளை வட்ட பின்னணியில் சிகப்பு துணியில் அச்சடிக்கப்பட்டு அனைத்து கம்பங்களிலும் பறக்கின்றன. தீப்பந்தங்கள் ஏந்திய சிப்பாய்கள், தங்க தலைக் கூந்தலை அழகாய் ஜடையெடுத்து பின்னிய பெண்கள், நேர்த்தியான சூட் அணிந்த வியாபாரிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் எல்லோரும் மைதானத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் பிரதான மேடையை நோக்கி ஆதர்ச பார்வையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நிலவில்லா இரவு பொழுதில் மாய வார்த்தைகளை கண்கட்டு வித்தைக்காரனின் சிந்தை மயக்கும் பேச்சைப்போல உயர்வு தாழ்வுகளுடன் உணர்ச்சிவசப்பட்டு சொற்பொழிவு ஆற்றுகிறார் ஒருவர். அவரின் பேருருவ படங்கள் மைதானம் எங்கும் வியாபித்திருக்கின்றன. சொற்பொழிவு முடிந்ததும் அனைவரும் வலதுகையை மார்பளவு தூக்கி உறுதிமொழி எடுக்கின்றனர். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மைதானத்தின் மத்தியில் குவிக்கப்பட்டு தீக்கு இரையாக்கப்படுகின்றன. எரியும் தழலிலிருந்து சிவந்த காகித துண்டு ஒன்றில் விசித்திர சின்னம் பொருந்திய துகள் மெதுவாக எரிந்துகொண்டே காற்றில் பறக்கிறது. அந்த துகள் முழுக்கவும் புகைந்தபோது கோடி யுகங்களாக அந்த சின்னத்தில் கைதாகியிருந்த ராட்சச ஜீவி ஒன்று விடுதலையாகி திடீரென வானில் மின்னலை ஏற்படுத்துகிறது. அதைக் கண்ட மக்கள், தெய்வமே தலைவரை ஆசீர்வதிப்பதாக கருதி ஆரவாரம் செய்கின்றனர்.

ஆயிரக்கணக்கான மைல்கள் பரப்புள்ள வற்றிய ஏரியின்மேல் தூண் இல்லாமல், பிடிக்கயிறு இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது விண்பாலம். அதன் மேல் பயணிக்கின்றன மின் கித்தான் பொருத்தப்பட்ட பாய்மரங்கள். இருட்டில் வண்ணமயமான ஒளிவெளியுடன் ஒய்யாரமாய் பாலத்தின்மேல் கடக்கின்றன தோணிகள். விரிந்து கொண்டிருக்கும் ஞாலத்தின் விளிம்பிலிருந்து பெருவெடிப்பின்போது தூய ஆற்றலிலிருந்து எடை உருவாக காரணமாயிருந்த மர்ம கதிர்களை திருடி மாலுமியற்ற, பயணியாற்ற பாய்மரத்தின் இருப்பில் பொக்கிஷப்பெட்டியினுள் கடத்துகின்றனர் விண் கள்ளர்கள். மாயாவி மெர்லின் வசியவித்தையால் சிறைபிடித்த சூனியக்காரி அவர்களின் ஜென்ம விரோதி. துருவ நட்சத்திரத்திலிருந்து பாய்மரத்தை மர்ம ஒளிக்கதிர்களால் கடத்த முயல்கிறாள். சிரஞ்சீவியாகும் ஆசையில் ஆயிரக்கணக்கான பாய்மர அணிவகுப்பில் மர்ம கதிர் கடத்தும் பாய்மரத்தின் அடையாளத்தை காட்டிக்கொடுத்த யயாதி, வறண்ட ஏரியில் மாளிகை அமைத்து விண்ணை நோக்கி காத்திருக்கிறான் மரணப்படுக்கையில்.

**

காலை நாளிதழை புரட்டி படித்துக்கொண்டிருந்த வயதானவருக்கு அவர் பின்னால் பழைய வால்வு ரேடியோ பெட்டியிலிருந்து வெளிவரும் மர்மமான வானொலி நிலைய அதிர்வலைகளின் ரீங்காரம் சரியாக கேட்கவில்லை. ஆனால் அந்த அதிர்வலைகளினால் காகித நூலிழைகளில் உருகிப்போயிருந்த நார்ப்பூச்சிகளின் பெருக்கம் ஆரம்பமானது. அவற்றில் சில காற்றுடன் கலந்து அந்த பெரியவரின் கைகளில் விழுந்து உலர்ந்த சருமத்தின் செத்த செல்களை விழுங்கத் தொடங்கின.

முதல் பக்கத்தை மேலாக ஒருமுறை நோட்டம்விட்டுவிட்டு, நாளிதழின் மூன்றாம் பக்கத்திற்கு வந்தபோது, சர்வதேச செய்திகள் பிரிவில் முக்கிய செய்தியாக, “சைபீரிய பகுதியில் வெப்பம் அதிகமானதால் பனி உருகி பனிக்கம்பளத்திற்கு கீழே செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும் ஆழமான கிணறுகள் முதல் முறையாக பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்துள்ளன. ஆயிரத்திற்கும் மேலான கிணறு ஒன்றை சோதனையிட்ட ருஷ்ய விஞ்ஞானிகளுக்கு, நெஞ்சில் துல்லியமாக வெட்டப்பட்ட துளையுடன் உறைந்த பெண் மம்மி ஒன்று கிடைத்திருக்கிறது. அந்த பெண்ணின் விசித்திர எலும்பமைப்பு அவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது”

அதே பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த இன்னொரு செய்தி, “ஜெர்மனியின் தற்போதைய அரசாங்கம் கடும் மக்கள் எதிர்ப்பிற்கு ஆளாகியுள்ளது. தெருக்களில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக அணிவகுத்து வேலை, அந்நியர்களின் வெளியேற்றம், புதிய ஜெர்மனியின் உருவாக்கம் என்ற கோஷங்களை எழுப்பி கடைகளையும் பொது உடைமைகளையும் தீக்கு இரையாக்கினார்கள். ‘ஜெர்மனியின் பொற்காலம் நாஜி காலத்தில் தான் இருந்தது. அதற்கு பிறகு பின்தங்கி விட்டோம்’ என்றார் புரட்சியாளர்களில் ஒருவர்.”

அதே பக்கத்தில் இன்னொரு செய்தி, “அனைத்து நாடுகளும் பங்கேற்கும் விஞ்ஞான ஆய்வில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பாட நூல் சாத்தியக்கூறாக முதலில் கருத்தரிக்கப்பட்ட நுண் அணுத்துகள் ஒன்றை முதல் முறையாக பயிற்சி தரவுகளின் மூலமாக காண கிடைத்ததாக அறிக்கை வெளியிட்டனர் விஞ்ஞானிகள். உலகமெங்கும் இயற்பியலாளர்கள் இந்த நிகழ்வை இந்நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியல் முன்னடைவென போற்றி கொண்டாடினர். ‘இந்த நிகழ்வு உண்மையிலேயே நம்பமுடியாத ஒன்றாக தோன்றுகிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளாக பல மில்லியன் செலவழித்து, பல தோல்விகளுக்கு பின், முதல் முறையாக தரவுகளின் மூலம் அந்த அணுத்துகளைப் பார்த்தபோது மெய்சிலிர்த்துவிட்டது. ஒரு மணித்துளியின் ஒரு பங்கில் பத்து மில்லியன் பங்கு மட்டுமே கால ஆயுள் உள்ள இந்த அணுத்துகள், ஆற்றலை எடையாக மாற்ற காரணி. இதனால்தான் ஞாலம் உண்டானது” என்றார் பூரிப்பில் விஞ்ஞானி ஒருவர்.

பேப்பரை எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் முதல் எழுத்திலிருந்து கடைசிவரை படித்து முடித்த அந்த பெரியவர், மெதுவாக அதை மடித்து தரையில் வைத்துவிட்டு வானை நோக்கினார். வலது கையில் சிறிதாக அரிப்பு ஏற்பட்டதால் அதை சொறிந்துவிட்டு, “தண்டம். ஏன் இந்த பேப்பரை வாங்கறேனோ புரியலே” என தனக்கே வினவிக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *