வேலையின் களைத்துப் போன பயணத்தில் சில சொற்கள் சிக்கிப் பின்னுக்கு இழுத்தது.
விடுபட்டு விடுபட்டு உடல்நோவு அழைத்தபடியே இருந்தது.
கிடைத்த இருக்கையின் சன்னலோரம் வெளியே யாவையும் புறந்தள்ளியது.
வாளிப்பாய் இருக்கும் மரங்களுக்கு நகர்ந்து விட ஆசைகள் கிளைவிட்டதாவெனக் கேட்க வேண்டும்.
தடைபடும் ஓட்டத்திற்கு நிகர் செய்ய நேரமில்லாத பொழுது வண்ணப் பூக்கள் வசீகரித்தது.
வெட்டிய மரக் கிளையின் பொந்தில்.வேர் விட்டுத் துளிர்த்த செடி இருக்குமிடம் மறந்து தோட்டப்பொழிவில் வளர்ந்து இருந்தது.
எம்பியாடும் சிறுமியின் வேகம் குறைக்க ஊஞ்சல் கவலை கொண்டு தவித்தது.
நாய்க் குட்டி தான் சிறுமியை வேகம் கூட்டி விளையாண்டு ஓடியது.
கைபேசியில் கவனம் கொண்டவர்கள் அவ்வப்பொழுது வெளியில் பார்க்க வேதனைப் பட்டார்கள்.
இறங்குமிடம் சமீபிக்க குறைந்து போன வலியை ஒத்தியெடுத்த பாட்டியின் சிரிப்பிற்கு மொழியொரு தடையாகாமல் போனது.
கிட்டப் போகும் மகிழ்விற்காய் உற்சாகத்தில் கோர்த்துக் கிடக்கும் இவ்வார்த்தையும் ஒவ்வொன்றும் தருணம் பார்த்து பற்றிவிட உதிராமல் காத்திருக்கிறது.
***
-ரவி அல்லது.
***
