முந்நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 202.அகமெனும் பெருவெளி (எல். ஜே. வயலட்டின் ‘தையலும் இல்லாள்; மையலும் இல்லாள்’ சிறுகதையை முன்வைத்து…)

 

காலம், அகாலம் எனப் பிரித்தறியவியலாத பெருவெளியை நுட்பமான மனவியற் கூறுகளைக் கொண்டு படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர் எல்.ஜே. வயலட். யதார்த்தத்துக்கும் மாயக்கனவுலகுக்குமான அகவயப்பாலமமைக்கும் பெண்ணை மையப்படுத்தி இந்தச் சிறுகதை எழுதப்பட்டுள்ளது.

அறுந்துதொங்கும் அரைகுறையான வாழ்வை எதைக் கொண்டு தைப்பாள் இந்தத் தையல்? என்ற வினாதான் முதலில் வாசகரின் மனத்துக்குள் எழும். அவளால் எதையும் முழுமையாகத் தைக்கவோ இணைக்கவோ இயலாது என்பதே அவளின் பெயருக்கும் இந்தக் கதைக்கும் குறியீடாக அமைந்துள்ளது.

பற்றற்றுத் திரியும் இலக்கற்ற மனவெளிப் பயணியைப் போல அல்லாமல் ஒன்றை மட்டுமே இலக்காக்கித் துணியும் இச்சையையும் இந்தக் கதை குறிப்புணர்த்துகிறது. 

இந்தச் சிறுகதையில் அன்பு, காதல் போன்ற லௌகீகச் சுமைகளின் குறியீடாக இல்லத்தில் இருக்கும் பெண் அல்லது மனைவி என்ற பொருளில் ‘இல்லாள்’ என்ற சொல் அமைந்துள்ளது.

அவள் யார்? யாருக்கானவள்? தனக்கோ, தன் குடும்பத்துக்கோ அல்லது இந்தச் சமுதாயத்துக்கோ அவள் ஒருபொருட்டல்லள். அவள் அவளுக்கும் அல்லாமல் யாருக்கும் இல்லாமல் ஏதுமற்று எஞ்சும் துளியெனப் பூமியில் வாழ்கிறாள்.

பரபரப்பான பேருந்துநிலையத்தில் ஒதுக்கப்பட்ட மக்களின் துயரரேகைபோல பெண்களின் வாழ்வு சீரழிகிறது. அங்கிருந்து காவலர் எழுப்புவது நவநாகரீகப் பெண்ணை. அது யதார்த்த சித்திரம். அங்கிருந்தே அவளின் அகவுலகம் இத்தகைய புறவுலகிலிருந்து பிரிந்துவிடுகிறது. காத்திருந்து காத்திருந்து பொதிந்து வைக்கப்பட்ட பொட்டலம் போல அவள் இருக்கிறாள். காலம் அவளை இறுக்க அவள் அதன்மீதுகொண்ட கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறாள்.

தொழில்நுட்பம் தொந்தரவாகும் மனச்சூழலை எழுத்தாளர் அவளிடமுள்ள ஸ்மார்ட் ஃபோனைக் குறியீடாக்கிக் காட்டியுள்ளார். அவள் புறவுலகுக்கும் அகவுலகுக்கும் இடையே ஊடாடத் தொடங்குகிறாள். காலம், வெளி என அவள் உள்ளகம் பரவுகிறது. அதேநேரத்தில் அவள்  பேருந்துப் பயணத்தில்தான் இருக்கிறாள்.

தன்னுடைய வலிநிறைந்த அனுபவங்களைத் தனக்குள்ளேயே பொதிந்து வைத்துக்கொள்ளும் இறுக்கமான மனவியல்புகொண்ட பெண் பாத்திரமாகத் தையல் இருக்கிறாள். முப்பத்தைந்து ஆண்டுக்காலத்தில் அவள் பேணிப் பாதுகாத்து வருவதோ மிக மிகச் சொற்ப எண்ணிக்கையிலான நிழற்படங்களே. இதுகூட அவள் தன் வாழ்வை விரும்பும் விழுக்காட்டுக்குச் சான்று காட்டுகிறது. அவள் தன் கைப்பையில் வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு குறியீடுதான்.

மானுடர் தம் வாழ்வியலின் சாட்சியாக எதைச் சுமந்தலைகின்றனர்? வெறும் நினைவுகளைத்தானே!? கடந்து வந்த வலிமிகுப் பாதைகளையும் அந்தந்த கணத்தில் பரிதவிப்புகளையும் தானே சுமக்கிறார்? எலும்புகளையும் மனித மதிப்புகளையும் விட்டுச் செல்லத்தானே வேண்டியுள்ளது?

இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள வெட்டப்பட்ட மரம் ஒரு குறியீடு. அதனை வெட்ட வந்த மனிதர்களும் தையல் கொண்ட பிரமையும் சிறப்பாக  வெளிப்பட்டுள்ளனர்.

அவர்களின் உரையாடலில் காலம் கலைந்துபோகிறது. நேற்று, இன்று என்ற காலக்கிரமங்கள் கலைகின்றன. அவை முன், பின்னாக மாறுகின்றன. மனிதனால் பகுக்கப்பட்ட  நொடி, நிமிடம், மணி, நாள், வாரம், ஆண்டு என்ற  காலப் பகுப்புகள் முற்றழிகின்றன. அந்தந்த கணம் மட்டுமே மகிழ்வாகவும் வதையாகவும் மாறி மாறி நிகழ்கின்றன. 

‘அம்மா’ என்ற உறவைப் பற்றி ஏதும் அறியாதப் பெண்ணிடம் தையல் நடத்தும் உரையாடல்கள் வாசகரின் அகத்தில் அறைகின்றன. அடுக்குமாடிக் கூண்டுகளுக்குள் வாழும் மும்பை நகரவாசிகளின் வாழ்வு நரகத்திற்கு இணையானது. அங்கு மனிதன் பிராணியாக்கப்படுகிறான். 

இந்தச் சின்னஞ்சிறு அறைகளுக்குள் அடைபடும் மனிதர்கள் உண்மையில் வாழவேண்டியது அளவிடமுடியாத இந்தப் பரந்த வெளியில் அல்லவா? தையல் தனக்குத்தேவையான இடத்தினை இறுதிவரை அடையவேயில்லை. அவள் மேலும் மேலும் சுருங்கி சுருங்கி கூட்டுப்புழுவென மீச்சிறு இடத்திலேயே இருக்க, வாழ நேர்கிறது. அது ஒரு சிறைதான். சின்னஞ்சிறிய சிறை.

நடைப்பயணம் நீள நீள உடலும் உள்ளமும் சோர்வுகொள்கின்றன. உடலே வலியின் பிம்பமாகிவிடுகிறது. அது ஒரு மீளாத்துயர்தான்.

பெண் தரும் மூலிகையால் தன் துயர் எடை குறைந்து மீள்கிறாள். நவீன மனிதரின் மீட்சிக்கான குறியீடாக அந்தக் மூலிகை இந்தச் சிறுகதையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த மீட்சி முழுமையானதன்று. கணநேர இளைப்பாறுதலாகவே அமைகிறது.  

ரயில் பயணத்தில் அவளால் அந்தக் கதவினைத் தட்டித் திறக்க இயலாமல் ஆவது என்பது அவளுக்கும் இந்தச் சமுதாயத்துக்குமான பெருந்தூரத்தையே காட்டுகிறது. 

 தையலைப் பற்றிய எந்த நேரடியான விவரணைகளும் இந்தச் சிறுகதையில் இல்லை. அதனால்தான் அந்தத் தையலை வாசகர் தன்னிடத்தில் வைத்து தாமே அந்தத் தையல் என்று உருவகப்படுத்திக்கொள்ளவும் வழிவகை ஏற்படுகிறது. நல்ல சிறுகதை வாசகரின் மனத்துக்கு மிக நெருக்கமாக அமைவது இவைபோன்ற சில விடுபடல்களால்தான்.

நவீன மனிதன் கூட்ட நெரிசலில் இடிபட்டு வாழ்கிறான். ஆனாலும் அவன் தனியன்தான். நவீன காலத்தின் மையத் துயரே இந்த முரண்தான். இறந்த காலத்தில் உண்டதை நிகழ்காலத்தில் அசைபோடும் விதமாக இந்தக் கதை அமைந்திருந்தாலும் தையலின் பயணம் முடிவற்று நீள்வதால் வாசகர் எதிர்காலத்தின் விளிம்பில் நின்றபடியே நிகழ்காலத்தைத் தொடர்ந்து வரமுடிகிறது.  ஒட்டுமொத்தத்தில் எழுத்தாளர் எல்.ஜே. வயலட் எழுதிய இந்தத் ‘தையலும் இல்லாள்; மையலும் இல்லாள்’ என்ற சிறுகதை சிறந்த உளவியல் பிரதி. 

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *