முழுவிடுதலை (ரம்யாவின் ‘குரத்தி’ நாவலை முன்வைத்து)

 

”எழுத்தாளர் ரம்யா தன்னுடைய இந்த முதல் நாவலிலேயே சமகால நவீனத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் அனைவரையும் வென்றுவிட்டார்” என்பேன். அந்த அளவுக்கு எல்லாவகையிலும் அடர்த்தியான நாவல் இது. 

சமண சமயத்தில் சைன ‘தவப்பெண்’ணைக் ‘குரத்தி’ என்று குறிப்பிடுவதுண்டு. பெண்துறவியரைப் பற்றிய இலக்கியப் பதிவுகள் மிகக்குறைவு. குறிப்பாக நவீனத் தமிழ் இலக்கியத்தில் இல்லையென்றே கூறலாம். அக்குறையினை இந்த ஒரு நாவலே போதுமான அளவுக்கு நிவர்த்தி செய்துவிட்டது. இந்த நாவலின் மையமே பெண்கள் தம் வீட்டைத்துறந்து ஆன்ம விடுதலையை அடைவதுதான். குறிப்பாக, முழு விடுதலையை நோக்கிய பெருந்தேடலே இந்த நாவலின் முதன்மையான ஊடுபாவாக உள்ளது. 

தென்மாவட்டங்களில் சமண சமயம் தழைத்தோங்கியிருந்த காலக்கட்டதைப் பின்னணியாகக் கொண்டு, தமிழ் இலக்கியப் பெருவெளியில் நடந்துசென்ற எண்ணற்ற ஔவைகளுள் ஓர் ஔவையை மட்டும் நாவல் தலைவியாக்கி அவரைக்கொண்டே பெருங்காதலையும் பெருந்தவ வாழ்வினையும் வாழ்வின் நிலையாமையையும் ஒன்றோறொன்று பிணைத்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ரம்யா. 

தவப்பெண்ணின் பார்வை வழியாக ஒட்டுமொத்த சமய மோதல்களையும் சமயக்கருத்துப் பரவல்களையும் சமயம் சார்ந்த தருக்க நியாயங்களையும் விவாதங்களையும் எண்ணற்ற குலப்பிரிவுகளையும் இனக்குழு, உழுகுடி மற்றும் பொதுக்குடிகளையும் அவர்களின் வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு மோதல்களையும் அழுத்தமான தீற்றலெனக் காட்டிச் செல்லும் இந்த நாவலைப் ‘பெண்ணிய நாவல்’ என்று குறுக்கி, சுருக்கிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

வாசகரின் கரம்பற்றி ஔவை வாழ்ந்த, அவர் நடந்து அலைந்த, ஏறி இறங்கிய மலைகளையும் மடுக்களையும் வெவ்வேறு நிலப்பெருவெளிகளையும் குறிப்பாக நானிலங்களையும் காட்டிச் செல்கிறார் எழுத்தாளர் ரம்யா. அதே நேரத்தில் வாசகரின் கழுத்தைப் பிடித்து வெவ்வேறு சமணப்பள்ளிகளில் இருத்தி, சமயக்கருத்தாடல்களிலும் வாதுக்களிலும் பார்வையாளராக்கி விடுகிறார் எழுத்தாளர் ரம்யா.

முருகப்பெருமான் ஔவைக்கு நாவல்கனிகளைத் தந்த தொன்மத்தையே இந்த நாவலின் அடிச்சரடாக்கி அதன் மீது எண்ணற்ற அடுக்குகளைச் சேர்த்து, இறைவனுக்கும் மானுடப் பெண்ணுக்குமான உரையாடலைப் பெருக்கி அதன் வழியாக மாக்காதலையும் மானுடப் பெருவிடுதலையையும் ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளார் எழுத்தாளர் ரம்யா. 

வேலன் – வள்ளி இணையரின் வழியாக ஒரு பெருங்காதலும் ஔவையின் தனிப்பட்ட மாக்காதலும் ஒன்றையொன்று வெட்டிச் செல்கின்றன. மாக்காதல் பேசும் அதே வேளையில் மாபெரும் துறவு பற்றியும் இந்த நாவல் உரக்கப்பேசுகிறது. இந்த முரண்தான் இந்த நாவலை உயரத்திற்குத் தூக்கிச் செல்கிறது. காதல் வழியாகத் துறவு, காமத்தின் வழியாகத் துறவு, துறவு வழியாகவே பெருந்துறவு எனத் துறவினை வெவ்வேறு வழிகளில் அணுகியுள்ளது இந்த நாவல். 

சமணப் பெண்துறவியர் வாழ்வு பற்றிய மிகப்பெரிய பதிவு இந்த நாவலில் இடம்பெற்றுள்ளது. குறிஞ்சி நில மக்களுக்கும் முல்லை நில மக்களுக்கும் இடையே ஏற்படும் பண்பாட்டு முரணைச் சமண சமயம் தன் மருத்துவத்தாலும் சிகிழ்ச்சை முறைகளாலும் இலக்கியத்தாலும் சீர்செய்கிறது. 

ஏறத்தாழ எல்லா வகையான நிலத்திலிருந்தும் எல்லாவிதமான வாழ்வியல்படிநிலைகளிலிருந்தும் பெண்கள் வீட்டைத்துறந்து அல்லது மிகப்பெரிய துயரிலிருந்துவிடுபட்டு துறவுநோக்கி வருகிறார்கள். ஆன்ம விடுதலையை அடையத் துடிக்கின்றனர். துறவில் நிலைகொள்ள இயலாமல் காப்பியங்களில் வழியாகக் காதலை நோக்கிப் பாய்ந்து அதன் வழியாகவும் ஆன்மவிடுதலையை அடைய விழைகிறார்கள். 

இந்த நாவலில் ஆண்துறவியர் ஆன்மவிடுதலையை நோக்கியும் பெண்துறவியல் ஆன்மமுழுவிடுதலையை நோக்கியும் செல்கின்றனர். ஆண்கள் கிடைப்பதில் அமைதிகொள்ள, பெண்களோ தாம் தேடச் சென்றதனை அடைந்து நிறைவுகொள்கின்றனர். 

பெரும்பாலான துறவறப் பெண்கள் பேச்சின் வழியாகவும் (சமய வாதுக்கள், ஆன்மிக உரைகள், நீதிக்கதையினைக் கூறுதல்) மற்றவர்கள் எழுத்தின் வழியாகவும் (செய்யுள், இலக்கியம், காப்பியம் படைத்தல்) தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றனர். அவற்றுக்கு அடித்தளமாக அவர்களின் பெருந்தவவாழ்வு இருக்கிறது. இந்த நாவலில் இடம்பெற்றுள்ள ஔவைக்கும் அவ்வாறே அமைகிறது.

இந்த நாவல் பதிப்பிப்பில் நான் பெருங்குறைகளாக இரண்டினைக் கருதுகிறேன். ஒன்று –  ஒருமை பன்மை மயக்கமும் மயங்கொலிப் பிழைகளும். இரண்டு – அட்டைப்படத்தில் அழகிய சிற்பத்தைச் சிதைக்கும் வகையில் எழுத்தாளரின் பெயரைப் பதிப்பித்திருப்பதும் உள்ளே அத்யாயங்களை அழகுபடுத்தாமையும். 

மணம் மிகுந்த பிரியாணியைச் சமைத்துக்கொடுத்துள்ளார் எழுத்தாளர் ரம்யா. ஆனால், அதனைப் பதிப்பாளர் வாசகருக்குத் ‘தலைவாழைஇலையில் தராமல் ‘பேப்பர் பிளேட்டில்’ தந்துவிட்டார்’ என்ற ஆதங்கம் எனக்குள் பொங்குகிறது.     

நாவல் படைப்பில் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகனுக்கும் எழுத்தாளர் ரம்யாவுக்குப் பல ஒற்றுமைகள் இருப்பதாக நான் கருதுகிறேன். 

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் தன்னுடைய பெருநாவல்களின் முதல் அத்யாயத்தில் பெருந்தடையினை நிறுவியிருப்பார். ‘அதனைத் தகர்த்து முன்நகர்பவர்களே, நாவலுக்குள் நுழைபவர்களே அந்த நாவலுக்குரிய வாசகர்’ என்று அவர் வகுத்திருப்பார். அவ்வாறே எழுத்தாளர் ரம்யாவும் இந்த நாவலின் முகப்பினை அமைத்திருப்பார். எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகனின் நாவல்களில் நாவல் கருவுக்கு ஏற்ப ஆன்மத்தேடல், அறம், தத்துவம், தருக்க உரையாடல்கள் குறிப்பாக ‘நாவல்அமைதி’ ஆகியன இருக்கும். இவை அனைத்தையும் இந்த நாவலிலும் காணமுடிகிறது. அதற்குச் சில சான்றுகள் பின்வருமாறு –

எங்குப் போக வேண்டும் என்பதை என் ஆழம் அறிந்திருந்ததாக இன்று உணர்கிறேன்.

இழக்க ஒன்றுமில்லாதபோது இருக்கும் எடையின்மையை உணர்ந்திருந்தேன். 

எந்த மனிதருக்கும் இன்னொருவரின் துயரத்தை அப்படியே உணரக்கூடிய உணர்திறன் இல்லை.

என் ஆன்மா தான் இதுவரை நடித்து வந்த பாவனைகளைக் கைவிட்டுப் புதிய ஒன்றாகத் தான் மாற வேண்டும், அதற்கான ஆவனசெய் என என்னிடம் மன்றாடிக்கொண்டிருந்தது.

சொற்போர்கள் தரும் கிளர்ச்சியைப் பற்றியும் அதில் தான் கையாளும் உத்தியைப் பற்றியும் என்னுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தாள். நான் அப்பாதையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என்பது தந்த பெரிய சுதந்திரம் அதைப் பற்றி அவள் முழுமையாகப் பேசுவதற்கு உதவியிருக்கலாம். 

உடல் மாறுவது வழியாகவும் நம் கடந்த காலம் நம்மை விட்டு அகல்வது நிகழ்கிறதா என்ற கேள்வி என்னில் எழுந்தது. அது உண்மையுமில்லை. ஏனெனில்  எங்கோ எப்போதோ நிகழ்ந்தவற்றைக்கூட சட்டென இப்போது இக்கணம் நிகழ்ந்ததென உருமாற்றிக் காட்டும் மனம் இருக்கும்வரை, அதைக் கட்டுக்குள் கொணராதவரை அத்தகைய விடுதலை சாத்தியமில்லை என்று தோன்றியது. 

மாறாத நிலையான அம்சம் ஒன்று இங்கு உள்ளது. அதை அளவீடாகக் கொண்டே இங்குள்ள மாறிக்கொண்டே இருக்கும் ஒன்றை நாம் உணர்கிறோம் என்பது எத்தனை உண்மை.

நான் இன்று மகிழ்ச்சியில் ததும்பியிருக்கிறேன்” என்று சொல்லியபடி அவன் இடுப்பில் சொருகப்பட்டிருந்த புல்லாங்குழலை எடுத்து இசைக்க ஆரம்பித்தான். ஔவை கண்களை மூடி அமர்ந்திருந்தாள். அவன் நிறுத்திய பின்னரும் அந்த இசை அங்குத் தவழ்ந்துகொண்டிாருந்ததைப் போல அவள் ஒடுங்கி முகம் புன்னகைத்திருந்தது.   

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் நாவல் களத்தையோ அல்லது நாவல் மாந்தர்களின் மனவோட்டத்தையோ குறிப்புணர்த்த மிகச் சிறந்த உவமைகளைக் கையாள்வார். அவ்வாறே எழுத்தாளர் ரம்யா இந்த நாவலில் பயன்படுத்தியுள்ள உவமைகள் மிகச் சிறப்பாக உள்ளன. 

சிறிய நீர்ப்பாம்புகள் நீந்துவதைப் போல குரங்குகளின் வால்கள் மரக்கிளைகளிலிருந்து தொங்கியபடி காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.

அவள் இதயம் துடிப்பது மலையில் எதிரொலிப்பது போல உணர்ந்து பெருமூச்செறிந்தாள்.

தேர்ந்தெடுத்த நாவல்கரு, அந்தக் கருவினைக் கதையாக்கும் முறைமை,  கதைகூறும் உத்திமுறைகள், தேர்ந்து பயன்படுத்தும் ஆழ்பொருட்சொற்கள், கதைமாந்தர்களின் அகவெளிப்பயணம், தர்க்க உரையாடல்கள், கனவுப்பெருக்கு, நவீன உரைநடை ஒழுங்கு எனப் பலவகையில் எழுத்தாளர் ரம்யா, எழுத்தாளர் உயர்திரு.  ஜெயமோகனை மிகநெருங்கி வருகிறார். என்னளவில் நான் ரம்யாவைப் ‘பெண்’ ஜெயமோகனாகவே கருதுகிறேன். 

இனி எழுதவரும் அடுத்த தலைமுறைப் பெண்கள், எழுத்தாளர் ரம்யாவையே தம் முன்மாதிரியாகக் கைக்கொள்வர். அந்தத் தகுதியினை இந்தக் ‘குரத்தி’ நாவல் அவருக்கு வழங்கிவிட்டது.   

நவீனத் தமிழ் இலக்கிய உலகுக்கு ‘இந்த நூற்றாண்டின் கொடை’ என்று கருதத்தக்கவர் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன். அதேவரிசையில் பெண் எழுத்தாளர் ரம்யா என்பது என்னுடைய முடிபு.

(ரம்யா, குரத்தி (நாவல்), விஷ்ணுபுரம் பதிப்பகம், கோயம்புத்தூர், பக்கங்கள் – 168, விலை – 220.00)

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *