1.
உன் வருகைக்கு முன்பு இவ்வுலகம் வேறொன்றாக இருந்தது. ரயில் சலித்தும் அலுத்தும் ஊர்ந்து கொண்டிருந்தது. ஜன்னலின் ஊடாக பாய்ந்தோடிய காட்சிகளில் புதிதாக ஒன்றுமே இல்லை. செல்போனின் சக்தி குறைந்த பிறகு நேரத்தைக் கொல்லும் வழி தெரியாமல் விரைந்தோடும் காட்சிகளை வெறித்துக் கொண்டிருந்தேன். கண்களை மூடி துாங்கலாம் என்றாலும் மனம் விழித்துக்கிடந்தது.
நேற்றிரவு குடி. குடித்தால் மட்டுமே உற்சாகம் பீறிடுகிறது. குடி ஒன்றே கொண்டாட்டம் என்றாகிப்போனது. வசைகளாகப் பொழிந்து தள்ள முடிகிறது. அனைத்தையும் துாற்றி அவதுாறு செய்து புழுத்துப்போன சொற்களால் அசிங்கப்படுத்திவிடலாம். மது எனக்களிப்பது கீழ்மையில் தயக்கம் ஏதும் இன்றி உருண்டு புரண்டு எழுந்துவிடும் முழுச்சுதந்திரத்தை. என்னிடம் நல்லதாக எதுவும் இல்லை. தோற்றுப்போனவன் என்பதால் கடந்த காலத்தை எண்ணிப் பார்ப்பதும் இயலாத காரியம். நிகழ் காலத்தில் நான் உயிர் பிழைத்திருக்கவே போராட வேண்டியிருக்கிறது.
கோட்டயத்தில் ரயில் நின்றது. சுவாரசியம் இன்றியே நடைமேடைகளைப் பார்த்தேன். பெண்களை ரசிப்பதில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன் நான். அவர்களின் நிமிர்வு என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும். ஒரு யுவதி அந்த நிசியிலும் கால்மேல் கால்போட்டு செல்போனை நோண்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அங்கணம் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணின் அல்குல் குறித்த யூமா வாசுகியின் ஒரு கவிதை எனக்கு நினைவு வந்தது. ஒரு கணம் என் கண்களைச் சந்தித்த பின்னர் மீண்டும் பழைய சயனம். காதோர ரோமங்களை இடது கையால் அவள் பின் தள்ளிய லாவகம் என் வாழ்நாள் நினைவு. வண்டி கிளம்பிய போதுதான் நீ விரைந்து வந்து ஏறினாய். முதலில் என்னை ஈர்த்தவை உன் முலைகள். நீ ஆபாசமாக எடுத்துக்கொள்ள மாட்டாய் என்கிற நம்பிக்கையில்தான் நான் உண்மையைச் சொல்கிறேன். அவை நீ வந்த வேகத்தில் குலுங்கின. தளும்பி நின்றன. தாய் மடியை முட்டி மோதும் பன்றிக்குட்டிகள் போலிருந்தன. மூச்சுவாங்க நின்று உன் பெட்டிகளை என் தலைக்கு மேலே நீ வைத்த போது நான் மிக அருகே அவற்றைக் கண்டு ஏங்கிப் போனேன். அவைகளின் வெக்கையை மிக அந்தரங்கமாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நீ அணிந்திருந்த டீ சர்ட்க்குள் அவை கொண்டிருந்த சுதந்திரம் என்னை உன் அடிமை என்றாக்கியது. அதன் பின்னர் தான் நான் உன்னை ஏறிட்டேன். முதல் கணமே பேரழகி என்று தோன்றியது. நீ மூவாற்றுப்புழாவில் இறங்கிச் சென்று என்னை ஒருகணம் உற்றுநோக்கி இருளுக்குள் மறைந்து செல்லும் வரை ஆ..பேரழகி என்ற வியப்பில் உருப்பெருக்கம்தான் நிகழ்ந்து கொண்டிருந்தது.
வாழ்க்கையில் பொற்கணங்கள் அன்றாடம் அமைந்து விடுவதில்லை. நீ என் வாழ்வின் ஒரே பொற்கணம். ஏன் அப்படி என்று நான் அதன்பின்னர் பலமுறை கேட்டுக் கொண்டேன். உன் நிறம் கருப்புதான். உன் அருகிலேயே செக்கச் சிவந்த ஒரு யட்சி அன்று நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த போது தோன்றாத பரவசம் உன்னிடம் நான் அடைந்தேன். அதன் காரண காரியங்களை நான் தொகுத்துக்கொண்டேன்.
நீ என்னுடைய பெண்களில் யாரையோ கொண்டிருந்தாய். உன் உதடுகள் காலாதீதமான சிற்பங்களுக்குரியவை. குவிந்தும் இடையில் மெலிந்தும் நீள் கோடு போன்ற விளிம்புகளும் கொண்டவை. அதன் செந்நிறம் சாயந்திரத்தின் சொற்ப ஒளியிலும் பொன்னென ஒளிர்ந்தன. உன்னுடல் கொழுத்திருந்தது. முலைகள் மட்டுமின்றி கன்னக்கதுப்புகள்,வெளித்தெரிந்த கைகளின் பாகங்கள். பின்புறத்தின் மேடுகள் என அனைத்தும் சதைத்திரண்டு பூரித்து இருந்தன. எங்கேயும் வறுமை இல்லை. அத்தனை சதைகளை நீ கொண்டிருந்தது உன் பெருங்கருணை என்றே என் உள்ளம் நம்பியது. கொண்டாடியது. உன் அணைப்பிற்காக உண்மையில் ஏங்கியது.
காதுகளை மட்டுமே அரை மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றின் அபாரமான இருப்பு ரீங்கரித்துக்கொண்டு இருக்கச் செய்தது. காது ரோமங்கள் காற்றில் ஆடின. சுருண்டும் நெளிந்தும் பறந்தன. நீ செல்போனைத்திறந்து காதுகளில் கேட்கும் கருவிகைளைப் பொருத்தி வேறொரு உலகத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டாய். உன் உலகத்திற்குள் என் இருப்பு இடைஞ்சலாக அமைந்து விடக்கூடாது என்பதில் நான் மெனக்கெட்டேன். நான் உன்னை ஆராதிப்பவன். உன் அழகின் மது உண்டு கிறங்கிக் கிடப்பவன். என் வாழ்வின் பொற்கணங்களில் ஒன்றை வழங்கிய தேவதை நீ. உன் இருப்பே நீ எனக்கு வழங்கிய வரம்.
உன் முன்னர் தான் என்னை நான் அசிங்கமாக உணரத் தொடங்கினேன். என்னுடலைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறேன். நாற்பத்தைந்து வயதிற்குள் நான் ஐம்பதைத்தாண்டிய உடலைக் கொண்டிருந்தேன். தொந்தியும் குடியால் ஊதிப்பெருத்த கன்னங்களும் என்னை அகோரமாக மாற்றியிருந்தன. நாற்பது வயதிற்கு மேல் என்னுலகில் இச்சைகளைத் தவிர வேறு ஒன்றுமே நிலைத்திருக்க வில்லை. பெண்ணுடலுக்கும் ருசியான உணவுகளுக்கும் சதா போதையில் ஆழ்ந்திருப்பதற்கும் மட்டுமே என் மொத்த இருப்பும் ஏங்கித் தவித்தது. கிடைத்த அனைத்தையும் தின்று கொழுத்து விட்டேன். குடியும் குடி போதையில் நான் உள்ளே திணித்த ஊன் உணவுகளும் என்னை விகாரம் ஆக்கிவிட்டன. நீ என்னைப் பார்த்தும் சீண்டப்படாமல் போக அது வே காரணம்.
என் நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரித்தது. எதாவது செய்து உன் கவனத்தை ஈர்க்க முயன்றேன். தலையை ஆட்டினேன். கண் இமைகளை வேகமாக அடித்துக்கொண்டேன். கால்களை நீட்டி மடக்கினேன். மெல்லிய குரலில் ஒரு சினிமாப் பாடலை முணுமுணுத்தேன். உன்னால் பரவசம் அடைந்து தவித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உனக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்பதே என் நோக்கம்.
உன் முகத்தில் கணந்தோறும் பலநுாறு பெண்களின் முகங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. கற் சிற்பம் ஒன்று உயிர் பெற்று என் முன்னே நிற்பதாக நினைத்துக்கொண்டேன். உன் முன்னே யுகங்கள் பல கடந்து சென்றன. யுகங்களாக நீ இந்த வாழ்க்கையின் பல்வேறு கோலங்களை பார்த்துக் கொண்டிருக்கிறாய். யுகங்களாக உன் முன்னே மண்டியிட்டு மதி மயங்கிய ஆண்களின் கண்களையும் நினைவில் கொண்டிருக்கிறாய். யார் கண்டார் உன்னால் வீழ்ந்த ராஜ்ஜியங்களும் பேரரசுகளும் சென்ற யுகங்களில் மண்ணிற்குள் மறைந்திருக்கலாம். நிலைத்த உன் புன்னகை இயற்கையின் பேரெழில். இயற்கையின் முன் சொற்கள் அற்று நிற்பதைப் போன்று உன் முன்னே நான்.
உலகம் பொல்லாதது. சூதுகளும் சூழ்ச்சிகளும் கொண்டது. பொய்மையை தன் உடலெங்கும் ஈசிக்கொண்டிருப்பது. யோக்கியத்தனங்களை மிகக் குறைவாக பாவித்துக்கொண்டிருப்பது. சுயநலத்தின் வேர்களால் கட்டுண்டது.அனைத்துக் காரியங்களுக்குப் பின்னும் லாப நட்டக்கணக்குகளைக் கொண்டிருப்பது. மெல்லுணர்வுகளுக்கும் கவித்துவக் கணங்களுக்கும் அர்த்தமற்றது. பொருளற்ற வாழ்க்கையை பொருள்களை அள்ளிப்பதுக்குவதன் ஊடாக கனப்படுத்த விழைவது. நுண்ணுணர்வு கொண்ட ஒரு உள்ளம் இவ்வுலகத்தை கண்டு கணந்தோறும் துக்கித்து இருக்கவே சாத்தியம். நானும் அவ்விதம் ஆகிப்போனேன். என்னுள்ளே எப்போதும் பிறர் மீதான சுடுசொற்கள். என் இயல்பில் இல்லாத பல ஆயுதங்களை கைக்கொள்ள நிர்ப்பந்தித்த இந்த உலகத்தின் மீது எனக்குத் தீராப் பகை. பெண்ணே..உன் முன்னே மட்டுமே நான் சற்று இளைப்பாறுகிறேன். என் துயரங்களை மறந்தேன். என் படைக்கலங்களை ஓய்வில் இருக்க விட்டேன். பீறிடும் குரோதச் சுனைகளை தற்காலிகமாக துார்ந்து போகச் செய்தேன். விச்ராந்தியாக இரு விச்ராந்தியாக இரு என உள் இளக்கம் அடைந்து ஓய்ந்து இருந்தேன்.
ஊர் திரும்பியதும் என் அன்றாடம் மீண்டும் என்னை வந்து ஒட்டிக்கொள்ளும். ஒரு அரசு அலுவலகத்தின் குமாஸ்தா நான். ஊரின் சிக்கல்களை எல்லாம் இனங்கண்டு தீர்வுகள் இருக்கும் புலங்களை நோக்கி தள்ளிக் கொண்டிருப்பவன். நல்லதும் தீதும் என ஓராயிரம் ஓலங்களில் அன்றாடம் உழன்று கொண்டிருப்பவன். உச்சபட்ட நெருக்கடிகளால் என் அகம் சீழ்பிடித்து நாறிக்கிடக்கிறது. குமாஸ்தா உலகில் மென்னுணர்வுகளுக்கு இடமே இல்லை. அதிகாரங்கள் மேலும் கூடுதல் அதிகாரங்கள்.
ரயில் நின்றது. இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும் போல. ரயிலில் கிடைத்த சப்பாத்தி முட்டைக்கறியை எழுபது ரூபாய்க்கு வாங்கிக்கொண்டேன். உன் முன்னே அமர்ந்து உண்பதை நான் விரும்பவில்லை. நீ இவ்வுலகின் நெருக்கடிகள் தீண்டாத ஒரு பொன்னுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாய். உன் கண்கள் மூடியிருந்தன. உன் உதடுகளை நான் உற்றுக்கவனித்தேன் அவை உள்ளே முறுவலித்து வெளியே சிந்திவிட தயாராக இருந்தன. உன் உதடுகள் உன் உதடுகள் உன் உதடுகள் என நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆட்கள் இறங்கினார்கள். ஆட்கள் ஏறினார்கள். ஆட்கள் கழிவறைக்குச் சென்று திரும்பினார்கள். சட்டென்று பார்த்தால் நீ என் அருகில் அமர்ந்திருக்கிறாய்.
உன் வாசனை என்னைத் தீண்டியது. ஓராயிரம் வாசனைகளில் அது ஒன்றே தனித்துவம் மிகுந்தது. ஆழ்ந்து உள்ளே இழுத்து வெளியே விடாமல் எனக்குள் புதைக்க முயன்றேன். உன் உடலில் இருந்து ஒரு மலரில் இருந்து எழுவதைப் போன்ற வாசனை. உன் தொடைகளும் தோள்களும் என்னை அவ்வப்போது வந்து தீண்டிச் சென்றன. நான் அதன் பரவசம் தாளாமல் கண்களை மூடிக்கொண்டேன். உள்ளே ஓய்ந்திருந்த என் எரிமலை பொங்கி வழிய ஆரம்பித்தது. லாவா ஊர்ந்து வழிந்து என் நிலத்தை வெக்கை மிகுந்து நீட்டிக்கச் செய்தன.
முடிவிலாத எண்ணிக்கையில் நான் உனக்கு நன்றிகள் சொன்னேன். உன் அன்பும் கருணையும் உலகத்தில் வேறு எவரிடமும் நான் இதுவரை கண்டதில்லை. உன் இருப்பை அப்படியே உள்ளே அனுபவிக்க ஆரம்பித்தேன். உன் அருகாமையை என் வாழ்நாள் முழுக்க பத்திரப்படுத்தி ஏந்திக்கொள்வேன். உன் உடலின் வெக்கையை உள்ளங்கைக்குள் பொத்தி வைக்க முயன்றேன். உன் தீண்டல் மிக மென்மையாக இருந்தது. குழந்தையின் உடலைத் தொடுவதைப் போல அத்தனை மிருதுவாக மண் துகள்களை கைகளில் பிசைவதைப் போன்று.
உன்னுடனே உன் பின்னால் வீடு திரும்பி விடலாமா என்று ஒரு கணம் தோன்றியது. அவ்வாறு உன் பின்னால் சுற்றித்திரிந்து இப்பிறவியை முடித்துக்கொள்வதே இப்பிறப்பிற்கு நான் செய்யும் குறைந்த பட்ச மரியாதையாக இருக்கும். வேறு என்ன அர்த்தம் இருந்துவிடப் போகிறது இந்த வாழ்க்கையினால்.
நீ வாழும் உலகத்திற்குள் ஒரு அந்நியனைப் போல நான் வாழ்ந்து முடிய வேண்டும் என்று ஏங்கினேன். எனக்கு வேறு ஒன்றிலும் முக்கியத்துவம் இருப்பதாகத் தோன்றவில்லை. உன் வீடிருக்கும் வீதியில் உன்னைப் பார்த்து விடச் சாத்தியமுள்ள தொலைவில் நான் விழுந்து கிடக்க வேண்டும். உன்னுடைய அலுவலகத்தின் வாசலில் உன்னைக் காணும் வாய்ப்புள்ள பார்வைக் கோணத்தில் அமர்ந்திருக்க வேண்டும். உன் வாழ்நாள் முழுக்க உன்னைப் பின் தொடரும் நிழலினைப் போல நான் உடன் இருக்க வேண்டும்.
நீ அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச் சென்றாய். வண்டி நின்றதும் உன்னிடம் ஒரு அவசரம் வந்து தொற்றிக்கொண்டது. மேலிருந்து பெட்டியை இறக்கினாய். கைப்பையை திறந்து பார்த்து உறுதி செய்து கொண்டாய். உதடுகளை ஒரு முறை நாவால் தீண்டி ஈரப்பள பளப்பை ஏற்படுத்திக்கொண்டாய். உன் அக்குள் ஈரம் அக்கணத்தில் என்னைக் கொந்தளிக்கச் செய்தது. காற்றில் மீறிப்பறந்த முடிக்கற்றைகள் என்னைப் பொறாமை கொள்ளச் செய்தன. எழுந்து நின்று டீ சர்ட்டின் சுருக்கங்களை நீவிக்கொண்டாய்.
இங்கே நான் பூரித்துப் பொங்கி பரவசப் பித்தேறி பிதற்றிக்கொண்டிருக்கிறேன். உன் மீதான பித்தில் போதம் கிழிந்து பெருங்காற்றில் அலைபடும் சருகைப் போல உழன்று கொண்டிருக்கிறேன். என்னை சாந்தப்படுத்தும் எந்த நோக்கமும் உன்னிடம் இல்லை. என்னுலகில் நீ பேரிடர் என நிகழ்ந்து கொண்டிருக்கிறாய். என் காலடி நிலம் பிடுங்கப்பட்டுள்ளது. என் வீதிகளை காட்டாற்று வெள்ளம் சுழித்துக்கொண்டு செல்கிறது. என் வீடுகளை பூகம்பப் பிளவுகள் உடைத்துச் சிதைத்துக்கொண்டிருக்கிறது. நீ எதையும் அறியாமல் இறங்கினாய். ஒரு முறை இந்த வாழ்விலே ஒரு முறை கடைசி ஒரு முறை என என்னை ஏறிட்டாய்.
பின் இருக்கையில் சாய்ந்து தலையை மேலே துாக்கி பெருமூச்சொன்றை விட்டேன். ரயில் கிளம்பினாலும் உன்னுடல் தெரியும் வரை எக்கிப் பார்த்தேன். நீ உன்னுலகில் மிகச் சாவதானமாக நடந்து சென்றாய். என்னுலகில் இருந்து நிரந்தரமாக தொலைந்து கொண்டிருந்தாய். உன்னுடல் இருளுக்குள் கரைந்து சென்றது. அன்பே…பேரன்பே…உன்னை என் வாழ்நாள் முழுக்க பத்திரப்படுத்திச் சுமப்பேன். நதியின் போக்கில் உயிர் பிழைத்த சிறு தாவரம் நான். உன் வருகையும் பெருக்கமும் உணர்வூட்டமும் உன் உப விளைவுகள்.
2.
பிறகு நான் பித்தனானேன். என் சொற்கள் தன்னிலை இழந்தன. சுயம் அழிந்து காற்றில் அலைபடும் சருகென்றானேன். அன்னையின் மனம் கலங்கியது. தென்திசை தெய்வத்திடம் அவள் முறையிட்டாள். என்னை மீட்டெடுக்கும் மாயக்கரத்தை அவள் வேண்டினாள். குத்திட்டு நின்ற என் பார்வை ஓயாத அலையடிப்பின் திரட்சி என அவள் உள் மனம் அறிந்திருந்தது. அடங்காத கொதிகொண்டு அவள் உன்னைத் தேடினாள். உன் இருப்பின் காலடித் தடத்தினை வேட்டைநாயின் நாசித்துவாரங்கள் போல அவளின் ஐம்புலன்களும் தேடித் தவித்தன. அவளின் நீட்சி நான். அவளை மண் மூடலாம். அவள் ஆன்மாவின் பழரசம் நான். என்னைப் பித்தனாக்கி வெள்ளந்தித்தனத்தை உறையச் செய்த பின்னர் நீ விட்டு விடுதலையாக்கினாய். என் அலைதலில் ஒரு நோக்கமும் இல்லை. காலம் வெறுமனே வழிந்தோடுவதைப்போல விதி வசமானது என் நாட்கள். காலையும் மாலையும் நிசிகளும் என்னைக் கைவிட்டன. என் போதத்தின் உரத்த மௌனம் என்னைக் குத்தி ஓரிடத்தில் நிலைக்கச் செய்தது. நான் நீ இன்றி ஒன்றும் அற்றவன் ஆனேன். என் நிழலின் பேருரு உன் சாயலில் விரிந்து கிடந்தது. என் உலகின் பிரஜைகள் உன் குரலுக்கு ஒத்திசைந்தனர். எட்டுத்திக்கும் மதயானைகள் மூண்டும் பதறாத பக்குவத்தை என் பித்தம் அளித்தது. யானையின் சீற்றம் அதன் ஆகப்பெரிய உடம்பு எதுவும் என்னை அசைக்கவில்லை. காட்டின் வழி அறிந்த நான் திக்குதிசையழிந்து சீர்குலைந்து போனேன். உன் இதழ்களின் செவ்வரிகள் என்னைப் பல கூறுகளாக்கியது. வரிகளுக்கு இடையே உள்ள வெளிகளில் என் அகாலம் பதுங்கிச் சென்றது. ஈரம் கசிந்த உதடுகளின் மினுக்கத்தால் நான் என்றும் சிறைப்பட்டேன். என்னை அடைக்கும் தாழ் உன் இருப்பு. என்னை விட்டுவிடுதலையாக்கும் ஔடதம் உன் இன்மை. யாரிடம் என்றில்லாமல் காணும் ஒவ்வொருவரிடமும் உன்னைத் தேடினாள் என் அன்னை. அவள் அறியாத ஒன்றினால் நான் வசியம் செய்யப்பட்டிருக்கிறேன். அவளும் கன்னிகாத்து ஆண்களின் கண்களை நன்கறிந்தவள்தான். அவளின் வெக்கைகளை ஒற்றிந்த இரவுகள் இன்று என்னைக் கண்காணிக்கின்றன. இரவுகளின் கண்களுக்கு மிக நுட்பமான தொடு உணர்வு. அவை நிழல்களின் வருகையையும் அவற்றின் மெலிந்த அசைவுகளையும் மிகத்துல்லியமாக பதிவு செய்துகொள்கின்றன. நுட்பமான ஒலித்துணுக்குகளையும் நிலத்தில் வழிந்தோடும் நீரின் போக்குவரத்தினையும் முன் உணர்ந்து கொள்கின்றன. வசமான கண்காணிப்பின் வளையத்திற்குள் வந்து விழுந்துவிட்டேன். ஆயினும் என்னிடம் எந்தவித மாற்றமும் இல்லை. வான் தனித்திருக்கிறது. அது என்னைப் பார்த்து துக்கித்து நிற்கிறது. வான் மீன்களும் ஒளிரும் கண்களால் என் துயர் கண்டு துாக்கம் தொலைத்து எனக்கு துணை நிற்கின்றன. மேகங்கள் ஒரு கணம் என்னைக் கண்டு திகைத்து பின்னர் ஆசுவாசம் அடைந்து செல்கின்றன. இரவும் பகலும் வந்து செல்கின்றது. நீ என்னை நீங்கிச் சென்று கணகாலம் ஆயிற்று. யாண்டுகள் பல ஓடிற்று. உன்னை வேண்டி நான் அலைகள் மோதி திரும்பிச் செல்லும் கடற்கரையில் ஒற்றைக்காலில் தனித்திருக்கிறேன். என் தவம் கலைந்து நான் இயல்பிற்கு வந்து வீடு திரும்பும் காலத்திற்காக அன்னை கண்கலங்கி காத்திருக்கிறாள். என் துயர்கள் அனைத்தையும் தன்னில் மாற்றிவிட்டு என்னை மீட்க அவள் மேற்கொண்டுள்ள எத்தனங்கள் ஒரு புள்ளியில் முட்டி மோதி நிற்கின்றன. அவள் கொண்ட பயணங்கள் அனைத்தும் முடிவின்றி நீள்கின்றன. திரும்பிச் செல்ல அவளுக்கு தடங்களே இல்லை. எல்லைகள் அவள் முன் உடைந்து புதிய தொடங்கங்களை அளிக்கின்றன. நீண்ட பயணம் அவளிடம் ஓரிடத்தில் நிலைத்திருப்பதின் அருமையைப் புரிந்து கொள்ளச் செய்துள்ளது. என் பொருட்டு அவள் கீழ்வானின் முடிவின்மையைத் தொட்டுவரவும் தயார்தான். சமநிலைக்குலைவுதான் இங்குள்ள அனைத்திற்கும் ஆதி நிகழ்வு என்பதை அன்னை அறிவாள். ஒன்றின் இருப்பை பிறிதொன்று ரத்து செய்தது. சரிபாதிகள் இரண்டும் ஒன்றை ஒன்று விழுங்கிட எத்தனித்தன. பிம்பங்கள் நீரில் அலைந்தன. பிம்பங்களை ஓடும் நீர் உள்ளிழுக்க வில்லை. நிலைத்த பாவனைகளைக் கொண்டிருந்த ஆற்றின் பிம்பங்களில் உன் வருகையை கண்டுணர்ந்தான் ஆதி மனிதன். உன்னையும் என்னையும் தவிர ஈடன் தோட்டத்தில் அனைத்தும் இருக்கின்றன. உன் சொல் பணிந்து நான் ருசித்த கனியினை பிறகு நீயும் ருசித்தாய். கனியோ எல்லாக் கனிகளையும் போலத்தான் இருந்தது. அதற்கென்று தனித்த உன்னதங்கள் எதுவும் இல்லை. ஆயினும் நமக்கு நம் காலடி மண் மறுக்கப்பட்டது. நம்முடைய குடில்கள் கலைக்கப்பட்டன. என்னை உன்னிடம் இருந்து பிரித்தார்கள். நிம்மதியும் நிலைத்தங்கலும் ரத்து செய்யப்பட்டன. ஈடன் தோட்டம் தன் கதவுகளை நமக்காக மட்டும் திறந்தது. நாம் வெளியே தள்ளப்பட்டோம். தானாக திறந்துகொண்ட கதவுகள் முடிவற்ற அகன்ற வெளிகளைக் காட்டிக்கொடுத்தது. தளைப்பட்ட நாம் துணிந்து நடந்து வந்தோம். நம்மைத் தவிர அனைத்தும் அங்கே இருக்கின்றன. அவை நம்மைப் போல துயர் கொள்ளவில்லை. அவற்றின் இயல்புகளில் எந்தவித பாடபேதமும் ஏற்படவில்லை. காற்றிக்கு உடன்பட்டு அசைந்தாடும் கிளைகளைப்போல அவர்களின் அன்றாடங்கள் இருக்கின்றன. உன் சொல்பேச்சுக்கேட்டு நான் அக்கனியைப் புசித்தேன். என் நிலைகண்டு நீயும் புசித்தாய். பசியால் அன்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தால் நாம் தள்ளிவைக்கப்பட்டோம். இழந்தது ஈடன் தோட்டத்தை மட்டுமே.இன்றோ நீயும் விட்டுச் சென்றாய். உன் இன்மை என்னை கலக்கம் கொள்ளச் செய்துவிட்டது. என் கால்களில் ஓயாத நடுக்கம். உன் இன்மையால் நான் மொத்தமாக என்னையே இழந்தேன். என்னில் ஒரு பாதியை பக்கவாதம் பறித்துக்கொண்டது. செயல் இழந்த என் ஒரு பாதியை என் கண்கள் பீதியோடு வெறிக்கின்றன. ஒரு மூளையில் பாதியை மட்டுமே நம்பியிருக்கிறேன். இதயத்திலும் பாதி இறந்து விட்டது. உயிர் விரைந்து வழிந்தோடுகிறது. கரைகரைந்த ஆற்றின் நீரினைப் போல என இருப்பு எல்லை இன்றி விரிந்துகொண்டே போகிறது. விளிம்புகள் கலைத்து அடுக்கப்படுகின்றன. அவற்றினைக் கொண்டு நீ ஆடும் சூதாட்டம் முடிவற்று நீள்கிறது. மண்ணில் விழுந்த உன் சொற்கள் எல்லாம் பெரும் விருட்சங்களாக கிளைத்து நிற்கின்றன. அவற்றின் கனிகளில் உன் ருசி இருப்பதாக பட்சிகள் சொல்லிச் செல்கின்றன. அவற்றின் அசைவில் கலைந்தோடும் காற்றில் உன் வாசனையை மீட்டெடுக்கிறேன். உன்னைத் தீண்ட நான் நீட்டும் கரம் முடிவற்றதாய் உள்ளது. அன்னையின் உள்ளே உடைந்து சிதறிய உத்வேகத்தின் ஓராயிரம் துளிகளில் மிகச்சிறிய துளியாக நானிருந்தேன். ஈரம் கசியும் சதுப்பு நிலத்தில் நான் நிலைகொண்டேன். பாய்ந்து சென்று என்னை உருவாக்கும் விளைநிலத்தை கைப்பற்றினேன். நிலம் பிளந்து குருத்திலை விட்டு நான் என்னை உருவாக்கும் காலத்தில் நீ வந்து சேர்ந்திருக்கவில்லை. உகந்த உடல் தேடி அலைந்து கொண்டிருந்தாய். உன் வருகையை அறிந்திராத என் விதி அதன்பிறகுதான் மாற்றி எழுதப்பட்டது. உடலென நீ தனித்திருப்பது என்னை சஞ்சலம் கொள்ளச் செய்கிறது. உன்னோடு கலந்துவிட தவிக்கும் என் இருப்பின் கனம் கூடிக்கொண்டே இருக்கிறது. இச்சையின் நறுமணம் என்னைக் கசியச் செய்கிறது. நான் தென்றல் போல உன்னைத் தொடுகிறேன். உன் சிகையசைத்து உள் நுழையும் மென்தீண்டலில் என் தவிப்புகள் இளைப்பாறுகின்றன. உன்னைத் தொட்டபின்னர் ஆசுவாசம் கொள்ளும் என் புலன்களில் மேலும் வெறி ஏறுகிறது.உன்னை நானாக அறிந்துகொள்வது நம் விதி. பிரிந்து சென்றாலும் என் பாதியாக நீ இருக்கிறாய். அலையும் காற்றில் நிலைத்திருக்கும் சுடர் நம் எதிர்காலம். இச்சைகள் தேங்கி தேங்கி உடல் கரைந்து கொண்டிருக்கிறது. நிறைவேறாத ஏக்கங்களின் கனம் தாளாமல் தோள்கள் வலுவிழந்துவிட்டன. நெஞ்சில் ஏற்றிவைத்த மலைகளைப் போல நான் இன்மையை நோக்கி நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். என் ரூபங்கள் சிறுத்துப் போகின்றன. நான் அரூப இருப்பின் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். என்னை மீட்டெடுக்கும் தார்மீகம் உன்னுடையது. என் தலைவிதியை எழுதும் சொற்களை உன் விரல்கள் உள்மடக்கி வைத்திருக்கின்றன. உன் பெருங்கருணை எனக்கு மட்டும் மறுக்கப்படுவதேன்? உன் நல்லியல்பு எனக்காக மட்டுமே திரிந்து போனது எதனால்?சமநிலைக்குலைவை சாட்சியாக்க விழைகிறாயா?தத்துவங்கள் வெறும் சொற்கள். அல்லது சுவை ஏற்றபட்ட பண்டங்கள். அவற்றை பாவிக்கும் அத்தனைப்பேரும் போதம் அழிந்து ஓயாத சொற் சஞ்சரிப்பில் தளைத்துக்கிடக்கின்றனர். தத்துவங்களைப் போல நீயும் என்னைச் சதா பெரும் குழப்பத்தில் ஆழ்படுத்த விரும்புகிறாயா? மனம் அழிய வேண்டும். அது ஓயாமல் நடுங்கிக்கொண்டு இருக்கிறது. மனத்தின் இருப்பே இங்குள்ள அனைத்தும். மனம் என்னை விரித்தெடுத்து உன்னிடம் அழைத்து வருகிறது. அதன் இருப்பு நிலையற்ற பதற்றங்களால் ஆனது. என்னை இரண்டாகப் பிரித்து ஒன்றை ஒன்று வேவு பார்க்கச் செய்கிறது. நானே மீட்பன். நானே அடிமை. இரண்டிற்கும் இடையே உள்ள நிகழ்தகவு நீ.
3.
உன் நினைவுகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. அவையும் உன்மத்தம் பீடித்து நான் அலைந்த நாட்களில் என்னுள் வந்து படிந்தவை. நீயும் துாயோளாக அன்றிருந்தாய். உன் இருப்பே என்னை வான்மீதேற்றும் விசையாக இருந்தது. உதடுகளில் ஒளிந்திருக்கும் எனக்கான வார்த்தைகளை பல்வேறு விதமாக கற்பனை செய்து கொண்டிருப்பேன். உன் கடைக்கண் பார்வை என்னைத் தொட்டு தீண்ட தவம் கிடப்பேன். என் தன்நிலை குழந்தையின் கையில் சிக்குண்டு பிய்த்துப்போடப்பட்ட பஞ்சு மிட்டாயைப் போல ஆனது. சிதறுண்டு பலநுாறு பயணத்தி்சைகளில் அலைந்து கொண்டிருப்பேன். என்னை ஈர்த்து ஒன்றிணைக்கும் காந்தப்புலமாக நீ இருந்தாய். என் அலைவுகளின் நிலைத்தலாக உன் வாசம் இருக்கும். காலம் பேதலித்து கணங்களில் சிக்குண்டு பிதற்றுவதை நான் உன் முன் ஒவ்வொரு முறையும் உணர்ந்தேன். உன் கைகளின் மென் மயிர்கள் பொன்னொளி கொண்டு சுடர்ந்தன. உன் முகத் தசைகளின் ஒளிர்வில் என் உள்ளொளி பற்றிக்கொண்டு பரவியது. நீ ஏற்றிய தீத்துளிகள் உண்டு பரவி திரண்டெழுந்து பேராழியென்றாகி அடிமுடி காணமுடியாத பெரும் புதைகுழி என்றாயின. அத்து அலைந்து உள் மடிப்புகளில் நழுவிச்சென்று யாருடைய மடியோ என்று எண்ணி மயங்கி உன் மடியில் விழுந்தேன். நானறிந்த சுகந்தங்களில் அதி உச்சமாக நீ இருந்தாய். நீ அலாதியானவள். காலாதீதங்களின் பெருந்தொகை. அதி அற்புதங்களின் ஒன்றிணைவு. ஆரவாரத்தின் ஆழ் மௌனம். பேரெழில்களின் குவிமையம். உன் அருகில் இருப்பதை ஏங்கிய என் எண்ணங்கள் சதா பித்தேறி உன் வீடிருந்த வீதியில் சிலைத்து நின்றன. சத்தங்கள் ஏதும் எழுப்பும் உத்தேசம் கொண்டிருக்கவில்லை அவை. உன் வருகை ஒரு வசந்தம் என்றும் உன் பார்வை ஒரு புலரி என்றும் உன் தீண்டல் ஒரு மீட்பு என்றும் அவை எண்ணின. கட்டுப்பாட்டை மீறி நான் உன்னை ஏங்கும் ஓராயிரம் நாவுகள் ஆனேன். நுனி சிவந்து எச்சில் நளினம் கொண்டு ஒளிரும் நாவுகள். நா நுனிகள் சிலபோது நாகங்களின் படவிரிவாயின. நச்சின் தீண்டலை விழுங்கி வைரங்களைத் துப்பினேன். இரவில் ஒளிரும் வைரங்கள் என் விடங்கள். அலகிலா விளையாட்டு உன் வருகை. முடிவிலா கொண்டாட்டம் உன் இருப்பு. எண்ணிலா பேரின்பங்கள் உன் தீண்டல். மின்னல்களின் ஒளிச்சேர்க்கை உன் அணைப்பு. இரத்த நாளங்கள் சிவந்தன. குருதியோட்டத்தின் அதிவிரைவு தளர்ந்து தொங்கிய தசைத்திசுக்களை உயிர்ப்பித்தன. உயிரோட்டம் மிகுந்து நாளும் பொழுதும் முடுக்கிவிப்பட்டது. காலத்துகள் சேர்ந்து உருப்பெற்று காலப்பிரமாண்டம் ஆனது. உன் முலையிடுக்குகளில் கிளைத்துப்பரவிய பேராறுகள் என் வயலை ஊடறுத்துப் பாய்ந்தன. வெள்ளத்தின் முன் வேடிக்கை பார்ப்பவனாகவும் வெள்ளத்தால் அடித்து பிடுங்கி வீசியெறிப்பட்ட மரங்களில் ஒருவனாகவும் நானிருந்தேன். உயிர்வாதை என்றாலும் உன் அணைப்பும் தீண்டலும் என்னை மகிழ்வித்தன. உயரேச் செல்ல செல்ல முடிவிலியின் தரிசனம். உன் மீது ஏறிப் பறந்து வெட்டவெளியை மறந்து உடல்சோர்ந்து நிலம் திரும்பும் இடைவிடாத பயணம். சிறகுகளை நீ உண்டாக்கினாய். திரைகளை நீ விலக்கி வைத்தாய். அறிதல்களை நீயே எளிமையாக்கினாய். அறத்தின் கதவுகளை நீயே கீல் நீக்கினாய். உன் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் மறைபொருள் என் வேதம். ஒற்றைச் சொல்லில் தோன்றி உலகெங்கும் பரவும் உன் தரிசனம் என் ஞானம். கற்சிலையென உன்னை வடித்து காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும் மாயத்தை நான் உண்டாக்குவேன். உன்னைக் குறித்த கற்பனைகள் பல்கிப்பெருகி இப்புவியெங்கும் பரவி உன் குன்றாக் கீர்த்தி நிலைக்க என்னை அர்ப்பணிப்பேன். பேரழகின் சிறிய ஒளிர்வுகள் என்னைக் கிளர்த்தின. இடையின் நெளிவுகள் என் அகத்தை வெளியேற்றின. கட்டுடல் கண்டு நான் எழுந்த உயரம் நான் அதற்கு முன் அறிந்திராதது. எனக்குள் பேருருவம் கொண்டவள் நீ. குன்றிய மணியென சிறுத்து காண்பவர்களுக்கு எளிய எண்ணங்களை உற்பத்தி செய்யும் என் பிறவிக் குறுகலை நீக்கிய வரம் நீ. உன் அடியில் உயிர்ப்பிக்கும் வெக்கை உள்ளது. உன் அருகாமையில் பசுமை கொள்ளும் வாய்ப்பு இருந்தது. நீ இயற்கையின் ஓர் அங்கம் ஆனாய். குளிரின் இதம் ஆனாய். பூவின் முடிவிலா நிறங்கள் ஆனாய். உன்னைக் காண நான் வான் நோக்கினேன். வானின் கீழே உன்னை நினைக்கச்செய்யும் அனைத்தும் வானின் மேலேயும் பிரதிபலித்து தெரிந்தன.வெறும் உடலென நீ என் முன் தோன்றினாய். உன் கைகளில் என் வாழ்நாட்களின் பெரும்பகுதி சென்று மறைந்தது. உன் உதடுகளின் வரிகளுக்கு இடையில் என் அறிதல்கள் கரைந்தன. உன் புருவ மயிர்க்காடுகளின் உள்ளே நான் அலைந்து திரிந்த ஓராயிரம் மைல்கள் இன்னும் பதிவு செய்யப்படாத பயணக்குறிப்புகள். உன் தனங்களின் செழுமையில் சுவைத்துக்கிடந்த பிறவிகள் வரையறுக்க முடியாதவை. உன்னைப் பற்றிய கதையாடல்கள் என்னை துயருறச் செய்கின்றன. உன் மீதான அவதுாறுகள் பெரும் துக்கத்தைத் துாக்கி சுமக்கச் செய்கின்றன. ஆயுள் கைதியைப் போல உன் நினைவுச்சுவர்களுக்கு மத்தியில் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறேன். ஆழப்பாய்ந்த வேர்களைப் போல வான் நோக்கி கிளைகளை விரிக்க முயல்கிறேன். என் சித்தத்தை சிதறடிக்கும் நோக்கம் உனக்கில்லைதான். உன் வருகையும் உன் இருப்பும் என்னை நிறைத்தன. நீ இயல்பாக நடந்து சென்று அறைகளுக்குள் மறைந்து விடுகிறாய். உன் வருகையும் மறைவும் பறந்து விரிந்த வானில் மேகங்களைப் போல நிகழ்ந்து விடுகிறது. துாயோளே நீ அறியாவண்ணம் இங்கே பலநுாறு கொந்தளிப்புகள் நிகழ்கின்றன. போர்க்கள வீரர்களைப் போல ஓருடலின் பொறிகள் மோதிக்கொள்கின்றன.எண்ணங்கள் பொருதி எண்ணங்களில் இருந்து குருதிகள் வழிகின்றன. மேகங்களிடையே மோதி ஒளிரும் மின்னல்களைப்போல உன் பிரிவின் வாதைகள் வந்து போகின்றன. உன் இருப்பைப் போலவே உன் மறைவும் இப்பிரபஞ்சத்தின் தீண்டல் என்றாகிறது. நீ என்றோ என் அருகில் இருந்தாய். அதனால் தானே நான் இன்றும் இருந்து கொண்டிருக்கிறேன். என்றும் இருக்கப்போகிறேன்.
