பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே

துறவு நமது கலாச்சாரத்தின் அடிநாதமாய் ஊறியிருக்கும் ஒன்று. அதனால்தான் நம் சமூகம் காந்தியைக் கொண்டாடுகிறது. சம்சார வாழ்வில் இருக்கும்போதும் ஒருவித விட்டேற்றியான மனநிலையை இது கொண்டிருக்கச் செய்கிறது. இகவாழ்வின் நிலையின்மையைச் சுட்டுவதாகவே மதங்களும், கீழைத்தேய மரபும் உள்ளது. அறிவியலின் வளர்ச்சிப்போக்கில், குறிப்பாக பயன்பாட்டு அறிவியலின் வளர்ச்சியால் வசதிகளும் பொருட்களும் பெருகிவிட்ட இக்காலத்தில் ஆன்மீகம் என்பது உலகியல் தேவைக்கான வேண்டுதல்கள், சடங்குகளாக மாறிவிட்டன.

உண்மையான ஆன்மீக மனம் உலகமயமாதலில் பெருமளவில் தாக்குதலுக்குள்ளாகி விளிம்புநிலைக்குச் சென்றுவிட்டது. அதற்கான தேவையையும் நவீன உலகம் இல்லாமலாக்கியுள்ளது. நமது நேரத்தை நிறைப்பதற்கான பொருளாதாரத் தேவைகள் சார்ந்த வேலைகளும், பொழுதுபோக்குகளும், குடும்ப, சமூக நடவடிக்கைகளும் பெருகிவிட்டன. இந்தத் தொகுப்பு மனநிலை (collective psychology) நம்மை சுய அழிப்புக்கு உள்ளாக்குகிறது. சமூகத்தில் பொருந்துவதற்கான முனைப்புகளும் அதன் படிநிலைகளில் ஏறிச்செல்லும் போட்டியுமாக வாழ்க்கை ஓடி மறைகிறது. இங்கு ஆன்மீகம் என்பதுகூட ஒரு மோஸ்தராக இந்த ஜிகினாச் சமூகத்தில் ஒட்டப்பட்ட ஒரு சுவரொட்டியாக வலம் வருகிறது.

இக வாழ்வு என்பது மாயை. மனதைத் தூய்மையாக்கிக் கொண்டு, இந்த உலகின் நிலையின்மையை ஒதுக்கி நிலையான மகிழ்ச்சிக்கு முகாந்திரமான இறைவனிடத்தில் மனதை நிறுத்து என்று பேசிய சித்தர்களுக்கு நவீன காலத்தில் இடமென்ன? இப்போது யாரிடமாவது அதைச் சொன்னால், ஆமாம், மாயைதான். இருக்கும்வரை சந்தோசமாக இருந்துவிட்டுப் போவதைவிட வேறென்ன இருக்கிறது வாழ்க்கையில், என்று கேட்கக்கூடும். ஒட்டுமொத்தமாக கூருணர்வற்ற தன்மை சமூகம் எங்கும் பரவியிருக்கிறது. இதைத் தாண்டி வருவது அரும்பாடு. தன் உடலைத் தாண்டியிருக்கும் வெளி, மற்றமை என்பது நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் குணத்தை அதீதப் பொருள் உற்பத்தியும், உலகமயமாக்கலும் உருவாக்கி வைத்திருக்கின்றன. அதனால்தான் இலக்கியம்கூட இங்கு மொண்ணைத்தனமாக, எனக்குப் பிடித்திருக்கிறது-நான் கொண்டாடுகிறேன் என்ற அளவில் இருக்கிறது. அடிப்படைக் கேள்வி உள்ள இடத்திலேயே, அது எது சார்ந்து இருந்தாலும் தீவிரமான, உயிரோட்டமான வெளிப்பாடு இருக்கும். அப்படியானவற்றைத் தேடிச்செல்லும் ஆர்வமும் இருக்கும்.

இந்தக் காலத்தில் துறவு மனோபாவம் குறித்து கேள்வியெழுகிறது. `பார் அனைத்தும் பொய் எனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறக்கை அரிது அரிது!` என்கிறார் தாயுமானவர். மிகப்பெரும் செல்வந்தராக வாழ்ந்த பட்டினத்தார் அனைத்தையும் துறந்து கோவணத்தோடு வீட்டைவிட்டுச் செல்கிறார். வீடு வீடாகச் சென்று பிச்சையேற்று வாழ்கிறார். ஒரு கட்டத்தில் பிச்சையேற்கச் சென்ற இடத்தில் ஒரு முரடன் அவரை அடித்து விரட்டிவிடவே இனி வீடுவீடாகச் செல்வதில்லை; யாரும் வந்து கொடுத்தால் உண்பேன். இல்லாவிட்டால் அழிந்ந்துபோகட்டும் இந்த உடல் என்று பேசாமல் இருந்துவிடுகிறார். அவரது சீடரான பத்திரகிரியார் ஓர் அரசனாக இருந்தவர். மெய்யறிவுத் தேடலில் பட்டினத்தாரைச் சரணடைந்து துறவு ஏற்றவர்.

பட்டினத்தார், பட்டினத்தடிகள், பட்டினத்துப் பிள்ளையார், திருவெண்காடர், திருவெண்காட்டடிகள் என்று பலவாறு அழைக்கப்படும் பட்டினத்தார் காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்தவர். சமாதியான இடம் திருவொற்றியூர். இப்போதும் சென்னையில் நகரத்தார் இனத்தவர் தங்கள் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் திருவொற்றியூரில் சடங்குகள் செய்யும் வழக்கம் உள்ளது.நகரத்தார் குலத்தில் ‘அரும்பார்க்கிளையார்’ என்ற பிரிவினர் பட்டினத்தார் வழி வந்தவர்கள்.பட்டினத்தார் பாடல்களிலும் நிறைய இடைச்செருகல் இருப்பதாகவும் பட்டினத்தார் என்பவர் கூட ஒருவரில்லை, மூவர்; பதினோராம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களைப் பாடிய திருவெண்காட்டி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதல் பட்டினத்தார்; ‘பட்டினத்தடிகள் பாடல் திரட்டு’ இயற்றியவர் இரண்டாம் பட்டினத்தார். இவரது காலம் பதிநான்காம் நூற்றாண்டு; மூன்றாவதாக வருபவர் இதற்கடுத்த காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்து உள்ளது. மூன்றாம் பட்டினத்தாரின் பாடல்கள் ’முதல்வன் முறையீடு’, ‘அருட்புலம்பல்’, இறந்தகாலத் திரங்கல்’ ஆகியவை. முதல் பட்டினத்தார் வேளாண் மரபைச் சேர்ந்தவர் என்றும் இரண்டாமவர் நகரத்தார் என்றழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

பட்டினத்தார் பாடல்களில் பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள் நிறைய உள்ளதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. உண்மை என்னவென்றால் அவர் உடலைத்தான் தூஷிக்கிறார். எல்லா உலகியல் பற்றுக்கும் மூலகாரணம் உடல். அதன் இன்பத்துக்காகத்தானே இத்தனையும். உடலை மறு என்கிறார். எனவே இதை பெண்ணுடலை இழிவுபடுத்துவதாகத் தனித்துப் பார்க்கக்கூடாது. ஏன் பெண்ணுடல் பேசப்படுகிறதென்றால், ஆன்மீகத்தையும் துறவையும் பட்டினத்தார் பாடல்கள் ஒருவகையில் ஆண்களிடமே பேசுகிறது எனலாம். அதனாலேயே பொதுவாக உடலை நிந்திப்பதுடன், பெண்ணுடல் நிந்தனையும் சேர்ந்துகொள்கிறது. (துறவில், மெய்யியல் தேடலில் ஏன் பெண்ணை பட்டினத்தார் சேர்க்கவில்லை என்பது தனி விவாதம்)

இருப்பினும் ஒரேயொரு பாடல் மட்டும் சற்று எல்லை மீறியதாகப் படுகிறது:

கைப்பிடி நாயகன் தூங்கையி லேயவன் கையையெடுத்
தப்புறத் தன்னி லசையாமன் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன் சென்று துயினீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படி நானம்பு வேனிறை வாகச்சி யேகம்பனே.

கூடா ஒழுக்கத்தைப் பேசும் பாடல். பெருந்திணை வரிசையில் நம்மிடம் களவொழுக்கத்தைத் தாண்டி வேறுபாடல்கள் இல்லை. ஆனால் அகத்திணையைத் தழுவி எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட காஹா சத்தசஈ-யில் (மொழிபெயர்ப்பு: சுந்தர் காளி, பரிமளம் சுந்தர்) நிறைய பாடல்கள் கள்ளவுறவு குறித்துப் பேசுகிறது. சங்கப்பாடல்கள் தொகுக்கப்பட்டபோது பொதுவொழுக்கத்துக்கு மாறான பாடல்கள் கழித்துக் கட்டப்பட்டிருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. நிற்க. இந்தப் பாடலில் பெண்மையை இழிவுபடுத்துவதாக வாதிக்கமுடியும். ஆனாலும், பட்டினத்தார் பாடல்கள் அனைத்தும் இகவுலகப் பற்றை நீக்குவதற்காக பாடப்பட்டவை என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். பல இடங்களில் தாயார் முதற்கொண்டு உறவுகள் அத்தனையும் மலமும் நீரும் படுக்கையில் கழிக்கக் கிடக்கையிலும், மரணத்தின்போதும் உடன்வருவதில்லை என்பதைத் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டுகிறார். உடல் இச்சையை மறுத்து பற்றறுக்கவும், சம்சாரத்தில் ஈடுபட்டு, காமச் சுழலில் உழலாமல் இருக்கவும் சொல்லும் போதனையின் வெளிப்பாடாகவே இந்தப் பாடலையும் கருதவேண்டும்.

முதல் பட்டினத்தார் இயற்றிய பிரபந்தங்களில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரகுண பாண்டியனைக் குறிப்பிடுகிறார். நம்பியாண்டார் நம்பி பட்டினத்தார் குறித்துக் குறிப்பிடுகிறார். அவரது காலம் பத்தாம் நூற்றாண்டு. எனவே முதல் பட்டினத்தார் காலம் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமாக இருந்திருக்கலாம்.சேக்கிழார் பெரியபுராணம் இயற்றியது பன்னிரெண்டாம் நூற்றாண்டில். எட்டாம் நூற்றாண்டிலிருந்து தீவிரமடைந்த பக்தி இயக்கத்தின் விளைவால் தொடர்ச்சியாக பல பக்தி இலக்கிய நூல்கள் வரத்தொடங்கின. பெரிய புராணத்திலேயே பல நாயன்மார் கதைகளில் சிவன் பக்தர்கள் கனவில் வந்து செய்தியைச் சொல்லிவிட்டுச் செல்வதுபோல பட்டினத்தார் வரலாற்றிலும் இதுபோல சின்னச்சின்ன விசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் சிவன் கனவுச் செய்திப் பரிமாற்றம் செய்வதைக் காண்கிறோம். பட்டினத்தார் பாடல்களில் இரண்டு மூன்று இடங்களில் நாயன்மார்கள் சிலரைப்பற்றிய குறிப்புகளைப் பார்க்கிறோம். மற்ற சித்தர்களைப் போல பட்டினத்தார் விக்கிரக வழிபாட்டுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லவில்லை. பல கோவில் தலங்கள் குறித்துப் பாடியிருக்கிறார். இரண்டாம் பட்டினத்தார் காலம் பதிநான்காம் நூற்றாண்டு என்பது இதன்மூலம் ஓரளவு ஏற்கக்கூடியதாகிறது.

பட்டினத்தார் புராணத்தில் அவர் பாடியதாகக் கூறப்படும் பாடல்கள் பல இப்போது இல்லை. ‘மெய் நாட்டோர்’ என்ற முதற்குறிப்பு கொண்ட பாடலை முதலாவதாகக் கொண்ட பாமாலையும் இல்லை. பட்டினத்தாரிடம் ஞானோபதேசம் பெற்ற பத்திரகிரியார் கதையும் புதிரானது. தன்னை அண்டிவந்த நாய்க்குச் சோறிட்டு வளர்த்து வந்தவரை பட்டினத்தார் சம்சாரி என்று சொல்லியதால் சினத்தில் திருவோட்டை நாய்மேல் அடிக்க நாய் இறந்துபோகிறது. ஓரிடத்தில் அது அப்போதே பெண்ணாக மாறியதாகவும் இருவருக்கும் முக்தி கிடைத்ததாகவும் ஒரு கதையுண்டு. இன்னோரிடத்தில் அந்த நாய் மறுபிறப்பில் காசிராசன் மகளாகப் பிறந்து வளர்ந்து திருமணப் பருவத்தில் அந்தப் பெண் திருவிடை மருதூரில் தன் குருநாதரைச் சரணடைய வேண்டும் என்று விண்ணப்பித்து அவள் பத்திரகிரியாரிடம் வர, அவர் பட்டினத்தாரிடம் அவளைக் கூட்டிக் கொண்டு சென்று கேட்க, பட்டினத்தார் சிவனை நினைந்து தியானிக்க அப்போது தோன்றிய சோதியில் இருவரும் ஐக்கியமானதாகச் சொல்கிறது. ஆனாலும் இந்த இருகதைகளும் ஏற்கும்படியாக இல்லை. நாயைக் கொன்ற மனவுளைச்சலில், துறவின் தகிப்பைத் தாங்கமுடியாமல் பத்திரகிரியார் விலகிச் சென்றிருக்கக் கூடும் அல்லது தன்னையே மாய்த்திருக்கவும் கூடும். அல்லது அப்போதே அவருக்கு ஞானம் சித்தித்திருக்கக் கூடும். நாய் இறந்தபின் பெண்ணாகப் பிறந்து குறைந்தது பதினாறு பிராயங்கள் வளர்ந்து அதன்பின் அவரைத் தேடி வருவது பொருந்தக்கூடிய கற்பனையாக இல்லை.’ஒட்டுடன் பற்று இன்றி உலகைத் துறந்த செல்வப்

பட்டினத்தார் பத்திரகிரி பண்புணர்வ தெந்நாளோ?’ என்று பாடுகிறார் தாயுமானவர்.நிற்க.

இந்தக் கட்டுரையின் நோக்கம் பட்டினத்தார் பாடல்களில் இலக்கிய நயத்தைக் காண்பதுதான். அந்த வகையில் தன்னிகரற்று விளங்குவது தனது தாயாரின் இறப்பையொட்டி பட்டினத்தார் பாடிய பத்து பாடல்கள். இன்றைக்கும் வாசிக்கையில் உள்ளத்தைக் கரைப்பவை. மணிப்பிரவாள நடையும் உணர்ச்சிப் பெருக்கும் மனித உயிர்கள் அத்தனையையும் நெக்குருகச் செய்பவை.

ஐயிரண்டு திங்களா அங்கமெலா நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்யைரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பே னினி.

முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்தே
அந்திபக லாச்சிவனை ஆதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல்மூட்டு வேன்.

வட்டிலிலுந் தொட்டிலிலு மார்மேலுந் தோள்மேலுங்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்
சிறாகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.

நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றுந் தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்.

அரிசியோ நானிடுவே னாத்தா ள்தனக்கு
வரிசையிட்டுப் பார்த்துமகி ழாமல் – உருசியுள்ள
தேனே யமிர்தமே செல்வத் திரவியபூ
மானே யெனஅழைத்த வாய்க்கு.

அள்ளி யிடுவ தரிசியோ தாய்தலைமேற்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் – மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி யென்றன்
மகனே யெனஅழைத்த வாய்க்கு.

முன்னை யிட்டதீ முப்புரத்திலே
பின்னை யிட்டதீ தென்இ லங்கையில்
அன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூள்க மூள்கவே.

வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக்
குருவி பறவாமற் கோதாட்டி யென்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரங்கிடந்தென்
தன்னையே ஈன்றெடுத்த தாய்.

வீற்றிருந்தா ளன்னை வீதி தனிலிருந்தாள்
நேற்றிருந்தா ளின்றுவெந்து நீறானாள் – பாற்றெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென் றிரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.

இந்தப் பாடல்களுக்கு பொழிப்புரையெல்லாம் தேவையில்லை. அப்படியே மனதுக்குள் சொல்லிப் பார்த்தாலே அந்தக் கதறல் புரிபடும்.

ஒரு பாடலில் செவியாமல் நீ சேவித்தால் என்றொரு வரி வருகிறது. தமிழ்தான் எத்தனை அழகு. செவியாமல் என்பது வெளியுலக சப்தங்களுக்குக் காதுகொடுக்காது தியானித்தல் என்றும், வாய்விட்டு ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லாமல் சொல்லுதல் அதாவது காதால் கேட்டுணரத் தக்கதாக இல்லாமல் மௌனமாய் ஒலிப்பது என்றும் பொருள்படுகிறது.

நெஞ்சோடு கிளத்தல் சித்தர் பாடல்களில் குறிப்பிடத்தக்க அம்சம். தனித்திருப்பவருக்கு மனமே தோழனும் எதிரியும். ஒரு பாடலில் ’நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றிரு’ என்கிறார். நடு என்பது எது? நடுநிலையாக, சார்பின்றி இருப்பதா? அதுவும்தான். ஆனால் பாடல் சொல்லும் பொருள் உள்ளுக்குள் உள்ள மையத்தில் இருத்தலை, விழிப்புநிலையைக் குறிக்கிறது. பைபிளில் இயேசு கிறித்து கூறியதாக ஒரு வாசகமுண்டு. ‘நான் உனக்கு நடுவில் இருக்கிறேன்’. உள்ளமே கோவில் என்பதும் இதைக் குறிப்பதுதான்.நெஞ்சோடு கிளத்தல் வகையில் இன்னொரு பாடலில் கடந்தகாலத்தை நினைத்து வரும் ஏக்கத்தை வானத்து மீனுக்கு வன்தூண்டில் இடுவதுபோல் என்று ஒப்பிடுகிறார். ஆற்றோட்டத்தில் முன்பு எடுத்துத் திரும்பவிட்ட நீரை அள்ளுவது எப்படி?

கீழேயுள்ள பாடல் அப்படியே நவீன கவிதையை ஒத்திருக்கிறது. ஆனால் பேசுபொருள் வேறு. சற்று ஜென் கவிதைப் பண்பையும் இதில் காணமுடிகிறது.

அட்டாங்க யோகமும் ஆதாரம்
ஆறு அவத்தை ஐந்தும்
விட்டுஏறிப் போன வெளிதனி
லேவியப்பு ஒன்றுகண்டேன்
வட்டுஆகிச் செம்மதிப் பால்ஊறல்
உண்டு மகிழ்ந்திருக்க
எட்டாத பேரின்பம் என்னை
விழுங்கி இருக்கின்றதே

பேரின்பத்தை அனுபவித்தலைச் சுட்டும் விதத்தைப் பாருங்கள். பேரின்பமே தன்னை விழுங்கிவிட்டதாம். ஐந்து வித அவத்தைகளைத் தாண்டி குண்டலினியின் ஆறுநிலை கடந்து உச்சியில் வட்டமாய்த் தோன்றும் செம்மதிப் பாலை உண்ட போதை. தன்னை மட்டும் நிறைக்காது தன்னைக் கடந்தும் கடல்போல் பெருகிக் கிடக்கும் பேரானந்தம்.

ஒரு பெண்ணிடம் ஆணின் அவலட்சணமான உறுப்பு எதுவென்று கேட்டால் ஆணுறுப்பு என்றே சொல்லக்கூடும். பெண்ணுறுப்பும் அப்படியே. இவற்றின் மீதான கவர்ச்சி மனிதருள் எழும் காம இச்சையின் அளவைப் பொறுத்தது மட்டுமே. ஒரு பாடலில்

‘பிறந்தஇடம் தேடுதே பேதைமட நெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்’

என்று குறிப்பிடுகிறார். அதாவது நெஞ்சம் பிறப்புறுப்பை நாடுகிறது. கண்கள் நாடுவது முலைகளை.

’நினைமின் மனமே எனத்தொடங்கும் கோயில் திருவகவல் பாடல் ஒன்றில் ஓரிடத்தில் ‘எனதற நினைவற’ என்று வருகிறது. எனது என்ற பற்று நீங்கி நினைவு நீங்கி என்பதில் நினைவை நீங்குதல் என்றால் ஞாபகத்தை அழித்தல் என்று அர்த்தமல்ல. அதன்மீதான பற்றை நீக்குதல். எனது என்பது கடந்தகாலத்தோடு தொடர்புடையது. கண்ணுக்குத் தெரியாத அந்தக் கண்ணியை அறுப்பதைக் குறிப்பிடுகிறார். பட்டினத்தாரின் அனைத்துப் பாடல்களுமே சந்தத்தோடு இயைந்து பாடக் கூடியவை. நினைமின் மனமே அதில் குறிப்பிடத்தக்க ஒன்று. கோயில் அகவலின் இரண்டாவது பாடலில் ஒருவரி ‘அங்கோ டிங்கோ டலமருங் கள்வர்’ (அங்கு ஓடி இங்கு ஓடி அலமரும் கள்வர்)பாடியிசைக்க எத்தனை இனிமையாக இருக்கிறது பாருங்கள். இந்தப் பாடலில் அடுத்தடுத்து வரும் வரிகள் ஆரம்பகட்ட வியாக்கியான நவீன கவிதையைப் போலவே ஒலிக்கிறது.

ஈமக் கனலி லிடுசில விருந்து
காமக் கனலிற் கருகுஞ் சருகு
…         …         …
அந்தரத் தியங்கும் இந்திர சாபம்
அதிரு மேகத் துருவி னருநிழல்
நீரிற் குமிழி நீர்மேலெழுத்து
கண்டுயில் கனவிற் கண்ட காட்சி
அதனினும் பொல்லா மாயக் களங்கம்

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் ஒரு சித்தாந்தம் வைத்திருக்கிறார். அதாவது ஒருவர் பணக்காரர் என்றால் அவர் கள்ளம் உள்ளவர். பணத்தை அநீதியில்லாமல் சேர்க்கமுடியாது என்பது அவர் திடமான நம்பிக்கை. இது பழைய அதாவது உலகமயமாதலுக்கு முன்பிருந்த ஒரு பார்வை. ஒருவரிடம் செல்வம் குவிந்தால் அது ஏதோவொருவகையில் சுரண்டிப் பறித்ததாகவே அர்த்தம் கொள்ளும் பார்வை. நியாயமாக யாரையும் ஏமாற்றாமல் தன் கைத்திறமையை மட்டும் நம்பி நன்றாக உழைத்துச் சம்பாதிக்கப் பலவழிகளை நவீன உலகம் திறந்து வைத்திருக்கிறது. ஆனால் நேர்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் அரசூழியர்கள் பாடுதான் திண்டாட்டம். அவர்கள் கண்முன் அநீதி நடக்கும். அப்போது கள்ள மௌனம் காப்பார்கள். தன்வரையில் இலஞ்சம் வாங்கவோ அப்படியான செயல்பாட்டில் பங்கேற்பதோ இல்லை என்ற அளவோடு அவர்கள் நேர்மைக் கோடு நின்றிருக்கும்.

ஓடாமற் பாழுக் குழையாம லோர முரைப்பவர்பாற்
கூடாம நல்லவர் கூட்டம் விடாமல் வெங் கோபநெஞ்சில்
நாடாமல் நன்மை வழுவாம லின்றைக்கு நாளைக்கென்று
தேடாமற் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே.

பணத்துக்காக ஓடிக்கொண்டே இருக்கக்கூடாது; வீணாய் உழைக்கக்கூடாது; உழைப்பு என்பது மனதோடு பொருந்தியதாய் அனுபவித்துச் செய்வதாய் இருக்க வேண்டும். இவர் வேண்டியவர், அவர் வேண்டாதவர் என்று பிரித்துப் பேசுவோரிடம் சேராமல், நல்லவர் கூட்டத்தோடு எப்போதும் இருந்து, நன்மையே செய்து, இன்றைக்கும் நாளைக்கும் சேர்த்து வைப்பது குறித்துத் தேடாத அளவுக்கு பொருள்கொடு இறைவனே என்று வேண்டுகிறார். ஒருசில பாடல்களில் கிடைத்த திண்ணையில் உறங்கி, பசித்தபோது பிச்சையெடுத்து, சும்மாயிருப்பதே அளப்பரிய செல்வம் என்றும் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். எமனுக்கு ஒருபாடலில் காலத்தச்சன் என்று பெயரிடுகிறார். இந்தச் சொல்லாட்சியை இதற்குமுன் நான் கேட்டறிந்ததில்லை. ‘பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே’ என்ற பட்டினத்தாரின் பாடலின் கடைசிவரியை பாரதி தனது சுயசரிதையின் தொடக்கத்தில் வைத்திருக்கிறார்.

தொடரும்…

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *