பற்றுமின்கள், பற்றுமின்கள் – 2

உண்மையான ஆன்மீகத்துக்கும் நாத்திகத்துக்கும் பெரிய வேறுபாடில்லை. நாத்திகம் இல்லையென்று மறுக்குமிடத்தில் ஒரு கதவு சாத்தப்படுகிறது. இயேசு, ‘நான் உனக்கு நடுவில் நிற்கிறேன்’ என்கிறார். மனசாட்சியைச் சொல்கிறாரா? இல்லை, அதற்கும் மேல். தனக்குள் ஒருமித்து, உயிர்த்திருக்கும் கணங்களை, இந்த உணர்வுகளை அப்படியே உட்கிரகிக்கையில் நடுவாக இருப்பது அது. நாம் எந்தப் பக்கம் விலகிச் சென்றாலும் அது நடுவில்தான் இருக்கிறது. நடு என்பது ஒரு புள்ளி மட்டுமே.

ஓஷோ ஓரிடத்தில் நான் போதிப்பது கடவுள் தன்மையைத்தான்; கடவுளை அல்ல என்கிறார். ஜிட்டுவோ, பயந்தவருக்குத்தான் கடவுள் தேவை; பயமில்லாவிட்டால் கடவுளுக்கான தேவையே இல்லை என்கிறார். இதையும் நாத்திகமாக ஏன் சொல்லக் கூடாது? அறிந்ததினின்றும் விடுதலையடைய அவர் அழைப்பு விடுக்கிறார். அதில் மதங்களில் இருந்து, சடங்குகளில் இருந்து விடுபடுவதும் சேர்த்தி தான்.

மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ

எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ

கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ

நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய்

இந்த ஒரு பாடலை மட்டும் அரை மணி நேரத்துக்கு மேல் மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டே இருக்கிறேன். சிவவாக்கியரின் பணிப்பெண்ணைப் போலச் சொன்னபடியெல்லாம் கேட்கிறாள் தமிழ். இதை வாசிக்க முடியாது; ஆனந்தமாய்ப் பாடத்தான் முடியும்; வரிகளில் உள்ள இசை அப்படி. இந்த நிலம்; சுற்றியுள்ள கடல்; மேலே வானம் எல்லாம் நீதான். எழுத்து வடிவிலுள்ளவை எல்லாம் நீ; என் கண்ணும் நீ; கண்ணுளாடும் பாவையும் நீ; இதைச் சொல்லிவிட்டு கடைசி வரியைப் பாருங்கள்: நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய். நண்ணுதல் என்றால் கிடைத்தல், நெருங்குதல். என்னுள் நீராய் நின்ற உன் பாதம் கிட்டுமாறு அருளுவாய். உள்ளே நீராய் நிற்கும் பாதத்தை எப்படி உருவகிப்பது? அல்லது கண்ணுளாடும் பாவை என்பதற்குப் பின் இந்த வரி வருவதால் கண்ணின் நீர்மையைச் சொல்கிறதா? எல்லாமே நீதான் எனும்போது என் கண்ணில் தெரிவதெல்லாம் நின் பாதங்கள். அவை எனக்குக் கிட்டுமாறு அருள்புரி என்கிறாரா?

சடங்கு சாத்திரங்களை சிவ வாக்கியர் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அந்தக் காலத்துப் பெரியார் என்றுகூடச் சொல்வார்கள். கடனேயென்று மந்திரங்களைச் சொல்லிச் செல்வதற்கும் சும்மா இருப்பதற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. ஒரேயொரு கணம் என்ன சொல்கிறோமென்று அறிந்து சொன்னால் கூடப் போதும்.

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே

வேர்த்திரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?

மாத்திரைப்போ தும்முளே மறிந்து நோக்க வல்லிரேல்

சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்தி முத்தி சித்தியே!

பல கல் தூரம் நடந்துசென்று, மலைகளில் ஏறிப் போய் பார்த்துவிட்டு கடவு்ளை தரிசித்துவிட்டு வந்தேன் என்பார்கள். கடவுள் வெகு தூரத்தில் இருக்கிறார் என்று அந்த திசையைப் பார்த்துக் கும்பிடு போடுவார்கள். ஆனால், அது எங்கும் நீக்கமற வியாபித்திருக்கிறது, உன்னுள்ளும், உன்னைக் கடந்தும். உன்னைக் கவனித்தாலே போதும். கடவுள் தனியாகக் கோவிலுக்குள் போய் உட்கார்ந்திருக்கவில்லை. இப்போதுகூட சிலசமயம் சிறுபிள்ளைத் தனமாக ஒன்று தோன்றும். இந்தக் கதிரவன் ஒளி எப்படி அங்கிங்கெனாதபடி எங்கெனும் ஒளியைப் பொழிகிறது. வெயிலை விடுங்கள். ஒளியல்லவா அனைத்தையும் துலங்கச் செய்கிறது? ஒளியல்லவா நிழலைத் தருகிறது? நிழலல்லவா நிறத்தைத் தருகிறது? நிறமல்லவா அழகைத் தருகிறது? சூரியனே இப்படியென்றால் பிரபஞ்சமெங்கும் ஓடும் சக்தி எப்படியானதாய் இருக்கும்?

தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்

பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஇப் பராபரம்

ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்

நேரதாக உம்முளே அறிந்துஉணர்ந்து கொள்ளுமே.

அப்போது எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்திருப்பேன். வேன் பிடித்து குடும்பத்தோடு இராமேசுவரம் சென்றிருந்தோம். கடலில் குளித்துவிட்டு, தீர்த்தமாடி விட்டு கோவிலுக்குள் நுழைந்தால் கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது. நான் சத்தமில்லாமல் வந்து வேனில் படுத்துத் தூங்கிவிட்டேன். சாமி கும்பிட்டுத் திரும்பிய குடும்பத்தினர் திட்டித் தீர்த்தனர். அப்போதிருந்தே இப்படித்தான் இருக்கிறேன். கூட்டம் இருக்கும் எந்தக் கோவிலுக்கும் போவதில்லை. ஒருவித அக உரையாடலாய், எப்படி காற்று வீசுவதை உணர்ந்து கொள்கிறேனோ அதைப் போல உள்ளே கலங்கலாய் இருக்கும் நீரைத் தெளிவடையுமா என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதும் அல்லது குளத்தில் கல்லெறிந்து பார்த்துக் கொண்டிருப்பதுமாய்க் கழிகிறது.

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்

வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே

காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே

ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

இந்தப் பாடல் எனக்குக் கீதை வரிகளை நினைவூட்டுகிறது.

//உன்னுடையதை எதை இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது,

எதைக் கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது,

எது இன்று உன்னுடையதோ,

அது நாளை மற்றொருவருடையதாகிறது//

’நல்லா எஞ்சாய் பண்ணு’ என்கிறோம். எனக்கு enjoy என்ற வார்த்தைக்கு உண்மையிலேயே அர்த்தம் தெரியாது. என்னைப் பொறுத்தவரை நாம் எப்போதுமே ஒரு கணம் முந்தியிருந்தால் பேருந்தைப் பிடித்திருக்கக் கூடியவர்கள்; அதாவது பேருந்தைத் தவற விட்டவர்கள். அப்படியிருக்க ஒருவரால் உண்மையாகவே enjoy ஆக இருக்க முடியுமா? நான் பார்த்தவரை அப்படியான நடிப்பை மட்டுமே காண்கிறேன்.

வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யு மாய்

மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்

நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்

ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே

இதுவும் முந்தைய பாடல் சொல்லும் அதே கருத்துதான். ஆனால் ஓடு வாங்கிய காசுக்குக் கூட இந்த உடல் பெறாது என்பதில் வரும் எள்ளலும் குரூர உண்மையும் முந்தையதில் இல்லை. வீடெடுப்பதிலோ, குடும்பத்தோடு வாழ்வதிலோ எந்தத் தவறுமில்லை. ஆனால் எதுவும் நிலையில்லை என்ற உணர்வு அடிநாதமாய் ஓட வேண்டும். அதற்காக மரண பயத்துடன் வாழ்வது என்ற அர்த்தமில்லை. மரண பயத்தை வெல்வதற்கான அடுத்தடுத்த அடிகளை வைத்து நகர வேண்டும்.

மாறுபட்ட மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டு போய்

ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே

மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்

கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே.

சிவனை நினைத்து உருகியுருகிப் பாடும் சிவ வாக்கியர், ஐந்தெழுத்து மந்திரம் குறித்துத் திரும்பத் திரும்பப் புகழும் சிவ வாக்கியர் அந்த லிங்கத்தை ஊறுபட்ட கல் என்கிறார். நீங்கள் துலக்கி வைக்கும் மணி பிற உலோகக் கலப்புடையது. நீங்கள் ஊற்றும் தேன் வண்டினுடைய எச்சில்; நீங்கள் வணங்கும் கல்லும் முழுமையான கல்லில் வெட்டியெடுத்ததால் ஊறுபட்டது. இது என்ன சடங்கு? இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? கடவுள் உன்னுள் இருக்கிறார். அகமே சிவம். கடவுளுக்காக எங்கும் செல்ல வேண்டாம். இடைத் தரகர்கள் வேண்டாம். நீயும் கடவுளும் போதும். இருக்கிறதோ இல்லையோ, கடவுளுக்கு காசு வேண்டாம். அருட்பெருஞ்சோதி. லிங்கப் பிரகாசம்.

கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

சிவன் தான் என்றில்லை. எந்த மதமாய் இருந்தாலும் அந்தராத்மாவோடு அதை இருத்திக் கொண்டால் போதும். மிக நெருங்கிய நண்பனைக் காட்டிலும் நெருக்கமானது அது. நம் குரலை அப்படியே சொல்லாமல் புரிந்துகொள்ளும் இன்னொரு அகம். அகத்து உள், உள்ளத்து உள். அவ்வளவுதான் ஆன்மீகம். இது கடவுளாகத்தான் உருவகிக்க வேண்டுமென்பதில்லை. உருவமே தேவையில்லை. அறமாக இருக்கலாம். வழுவா நடுநிலையாக இருக்கலாம். யோகாப்பியாசத்தில், தியானத்தில் எட்டும் மோனநிலையாக இருக்கலாம்.

புத்தர் பேருரைகளில் ஐந்தாம் நூலான குத்தக நிகாயத்தில் வரும் சுத்த நிபாதம் பகுதியில் தியானிக்கும் முறைகள் குறித்து புத்தர் விளக்குகிறார். துக்கத்தின் காரணத்தில் மனம் குவித்து அதைத் தியானிக்கையில் அதன் பல்வேறு விதங்களைப் பட்டியலிடுகிறார். துக்கத்துக்கான காரணம் அறியாமை; பொருள் மீதான பற்றுதல்; மன உருவாக்கங்களும் மனக் கிளர்ச்சிகளும்; துக்கத்துக்கான காரணம் உணர்வு; தொடுகை; இன்ப துன்ப நுகர்ச்சி; வேட்கை; மனக் குழப்பம்; வேட்கையைத் தூண்டும் பொருள் (ஆகாரம்); உணர்ச்சி வேகம்; இவ்வாறு பட்டியலிடும் புத்தர், தியானிப்பதற்கு அருவத்தைத் தியானிப்பது மேலும் அமைதியைத் தர வல்லது என்கிறார். எவ்வகைத் தியானமானாலும் சேரக்கூடிய இடம் ஒன்றுதான். சமீபத்தில் நண்பர் ஒருவர், `தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி` என்று சொல்கையில் சிவ ரூபத்தை மட்டுமின்றி எந்நாட்டு மக்களும் வழிபடக்கூடிய தெய்வம் சிவரூபமே என்று சொல்வதைச் சுட்டிக் காட்டினார். இதிலுள்ள மதாபிமானத்தை விடுங்கள். ஆனால் எத்தனை நல்லிணக்கத்துடன், எல்லாம் நீயே எனத் தொட்டு நிற்கிறது.

இருக்கநாலு வேதமும் எழுத்தைஅற வோதிலும்

பெருக்கநீறு பூசினும் பிதற்றிலும் பிரானிரான்

உருக்கிநெஞ்சை உட்கலந்து உண்மைகூற வல்லிரேல்

சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமே.

பிழையே இல்லாமல் மனப்பாடமாய் வேதம் ஓதினால் அங்கே அதற்காக வந்துவிடுமா சிவம்? வெறும் வார்த்தைகளில் என்ன இருக்கிறது? எத்தனை அழகான வரி பாருங்கள். ‘உருக்கி நெஞ்சை உட்கலந்து’ எதனுள் கலப்பது?

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *