முன்பு ஒருமுறை முகநூலில் கவிஞர்களுக்கிடையே கவிதை எங்கிருந்து உருவாகிறது என்ற கேள்வியை முன்வைத்து ஓர் விவாதம் நடந்தது. இடதுசாரியப் பார்வையுடையோர், அதைச் சமூகம் சார்ந்து புறவயமான ஒன்றாகக் கூறுகின்றனர். தனிமனித அவத்தையும் புறத்தின் பாதிப்பே என்பது அவர்கள் வாதம். முந்தைய கட்டுரையில் நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி அறிவியல் அதை நரம்பியல் செயல்பாடாகக் கருதுகிறது. புதுமைப்பித்தன், பிரமிள் போன்ற எழுத்தாளர்கள் உத்வேகம், சொற்களில் பாயும் மின் தரிப்பு, அடிமன அவத்தை என்று முன்வைக்கின்றனர். வெளிப்பட்ட கணநேர மின்னலைப் பார்க்கிறோம். அதன் துடிப்பு நெஞ்சில் வெட்டுகிறது. பின் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. அந்த மின்னல் எங்கே? அதன் தோற்றுவாய் எது? அது பூமியில் தோன்றியது என்று வாதாடக்கூடுமா? ’மின்னெழுந்து மின்பரந்து மின்னொடுங்குமாறுபோல்’ அது இல்லாமல் இருக்கிறது. அதன் தோற்றுவாய் மேகங்களின், அந்த நீர்ப்பந்தலின் மோதலில் தெறிப்பது. பின் மழையாய்ப் பொழிந்து பூமியெங்கும் தழுவுகிறது. காற்றில் ஆவியாகி உருவற்றுக் கரைந்து உருவெடுக்கிறது. இதுவன்றோ மின்னலைத் தோற்றுவிக்கிறது? உருவற்றும் உருப்பெற்றும் அது இல்லாது இருப்பது அல்லவா.
இலக்கியத்தில் கவிதையின் தோற்றுவாய் என்பதில் இந்த மின் தரிப்பு வரை ஏற்றுக் கொள்கிறோம். நிச்சயம் அது உணரக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆனால் அத்தரிப்பு தோன்றுமிடமென்று ஒன்று இருக்கிறதல்லவா. அதை அடிமனம், அடிமனதின் அவத்தை என்று பிரமிள் குறிப்பிடுவார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி கூட கவிதை எழுதியிருக்கிறார். அவை விழிப்பு நிலையை, ஏகாந்தத்தைப் பாடுகின்றன. அவற்றை இந்த வரையறைக்குள் சேர்க்க முடியாது. சரி, இந்தக் கட்டுரைக்கு இதற்குமேல் இது குறித்துப் பேச வேண்டியதில்லை.
துறவு என்பது இந்தியப் பண்பாட்டியலின் ஒரு அடிப்படைக் கூறாகத் தொடர்ந்து வந்துள்ளது. உலக மயமாக்கலும் நுகர்வுக் கலாச்சாரமும் இதைக் கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கிவிட்டது என்பது ஒருபக்கம் இருந்தாலும், இதன் எச்சங்களும் நீட்சியும் தொடரத்தான் செய்கின்றன. இது “ஆசையை அறு” என்ற புத்தனின் கண்டுபிடிப்பின் தொடர்ச்சி. மனித வரலாற்றின் மகத்தான அறைகூவல். எத்தனை எளிமையான வரி. ஆனால் உள்ளே செல்லச் செல்ல அத்தனை சிக்கலானதாக ஆகிறது. பயமே கடவுள். பயமே பூதம். பயம் என்பது வேட்கையின் இன்னொரு பக்கம். ஆசையற்றவனுக்கு பயமுமில்லை. பற்றற்றிருப்பது என்பது தனித்திருப்பது. தனித்திருக்கும் துணிவு.
புவியீர்ப்பு விசை தான் நான் இப்படி உட்கார்ந்து கொண்டிருப்பதற்கும் இந்த மேசைக்கணினி மேசைமேல் இருப்பதற்கும் காரணம். புவியீர்ப்புக்கு வரம்பு இல்லை. அதை நிறுத்த முடியாது. நிறை என்ற இருக்கும்வரை ஈர்ப்பு என்பதும் இருக்கும். ஆனாலும் பூமியிலிருந்து உயரே எண்பது கிலோமீட்டர் விலகிச் சென்றால் ஒருவரால் பறக்க முடியும். இந்தப் பூமியின் வலுவான ஈர்ப்பு விசையைப் போன்றது வேட்கை. எதன் மீதும் வேட்கை கொண்டிராத ஒருவருக்கும் தன் பிள்ளைகள் மீது இருக்கும் பற்று ஆழமானது. உயிரியல் ஆணுக்கும் பால் சுரப்பிகள் உண்டு ஆனால் பால் சுரப்பைத் தூண்டும் அளவுக்கான புரோலாக்டின் என்ற சுரப்பி இல்லை என்கிறது. ஆணுக்கும் சூட்சுமமான தொப்புள்கொடி உண்டு. வேட்கை என்னும் இடையறாத அக மின்னோட்டத்தை, அந்த ஈர்ப்புவிசையைக் கடந்தால் ஒருவரால் வான் வெளியில் மிதக்க முடியும்.
உருத்தரிப்ப தற்குமுன் னுடல்கலந்த தெங்ஙனே
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்க ளெங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாற தெங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே
ஓர் உருவைத் தரிக்கும்முன் தாய் தகப்பன் கலந்தது எவ்வாறு? கருவுண்டானதற்கான காரணங்கள் என்ன? அவ்வாறு உருத்தரித்து இவ்வாறு அவயங்கள் பொருந்தி உள்ளும் வெளியும் மூச்சு ஓட இங்கே உயிர் தரித்து நிற்பது எங்கனம்? ஆன்றோரின் சொல்லின் அர்த்தம் உணர்ந்துகொள். பாரதியார் ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ என்று இம்மண்ணைக் குறித்து பாடுகிறார். எந்தக் கணத்தில் ஊறிய விந்து அது? பிள்ளை பெற வேண்டும் என்ற ஆசை இருந்து பெற்றதா இல்லை இச்சையின் வெளிப்பாடா? கோடானுகோடி விந்தணுக்களில் ‘இவ்வுயிர்’ அதில் சென்று சேர்ந்த மாயமென்ன? இதற்குமுன் பலமுறை அண்டத்தில் முட்டித் தோற்றிருந்ததா? தோற்ற விந்தணுக்களில் இருந்த உயிர்கள் என்ன ஆயின?
அப்படி அடித்துப்பிடித்து வந்து இவ்வுயிர் பிறந்ததன் நோக்கம் தான் என்ன? பிறவுயிர்க்கு எக்காரணம் கொண்டும் துன்பம் செய்யாதிருப்பதே அடிப்படை மனிதத்தன்மையுடைய செயல். இதைத் தாண்டி தன்னளவில் தன் அறிதலுக்குட்பட்டு அதன் அத்தனை சாத்தியங்களுடனும் அந்த வட்டத்தில், அந்த வட்டத்தின் விளிம்பில் தொடர்ந்து முட்டியபடி விழிப்புணர்வோடு இருக்க முனைவதும், இருப்பதுமே வாழ்தலின் சாராம்சம். விழிப்புணர்வின்றி, அதற்கான முயற்சியின்றி இருப்பதுவே பாவம்.
சமூகம் என்பது ஒரு கட்டமைப்பைக் கொண்டது. அது பொதுவாக இருவரை ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவர் பைத்தியம்; இன்னொருவர் ஞானி. இருவரையும் எந்த அமைப்புக்குள்ளும் பொருத்த முடியாது. சித்தனுக்கு எல்லாம் ஒன்றுதான். பேதமில்லை. சமூக அடுக்கில் இது தொந்தரவூட்டும் நிலைப்பாடு. சித்தன் சாதியைச் சாடுகிறான். சாதி மனிதர்களுக்குள் அடுக்கை உருவாக்குறது. மனிதர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது. உயிரியல் ரீதியாக மனிதர்கள் அனைவரும் ஒரே தகுதியுடையவர்கள். ஒருவர் மேலானவர் என்பது அவரது அகத்தெளிவின் அடிப்படையில் உறுதிசெய்ய வேண்டிய ஒன்று. அது எளிதில் வரையறுக்கத்தக்கதல்ல. எனவே இதற்குள் போகாமல் தனிப்பட்ட விவகாரமாக விட்டுவிட வேண்டும். சமூகத்தில் ஒருவர் பொருளீட்டும் திறன் வர்க்கப்படிநிலையைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளையும், படிநிலையையும் தவிர்க்க முடியாது. பொதுவாக பலருக்கும் சமத்துவம் என்றால் அடுக்குமானத்தைக் கலைத்துப்போடுவது, ஒரே நேர்க்கோடு வரைவது என்பதுபோல கற்பிதம் செய்து கொள்கிறார்கள். சமத்துவம் என்பது அக விழிப்பு. ஒருவரை அவரது கல்வி, பொருள், சமூகநிலை ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிடாமல் சக உயிராக, சமமாக மதித்து நடத்தும் பண்பு புறவயமான சமத்துவம். பாரபட்சமின்றி, தாழ்வோ உயர்வோ மனதளவில் கொள்ளாமல் இருப்பது அகவயமான சமத்துவம்.
கரண்டு குஞ்சு, கலர் குஞ்சு அல்லது லக்கான் குஞ்சு என்றழைக்கப்படும் குஞ்சுகளை சிறுவயதிலிருந்தே எனக்கு வளர்க்கப் பிடிக்கும். சின்னவயதில் ஒரு குஞ்சு பத்து காசுக்கு விற்பார்கள். ஒன்பது குஞ்சுகளை விதவிதமான நிறங்களில் வாங்கிவிட்டேன். ஓரளவு உடல் வைத்தபின்புதான் குஞ்சுகள் நேராக உட்கார்ந்து உறங்கத் தொடங்கும். அதற்குமுன் குஞ்சுகளுக்கு எப்படி உறங்குவது என்றுகூடத் தெரியாது. மல்லாந்து, ஒருக்களித்து, ஒரு காலை நீட்டி என்று விதவிதமாகப் படுத்துக் கிடக்கும். ஒரு நாலைந்து நாள் இருக்கும். இரவு கூடையைக் கவிழ்த்துவைத்ததைக் காலையில் திறாந்து பார்த்தால் ஒன்றையும் காணோம். குஞ்சு இருந்ததற்கான தடயமே இல்லை. வெளிவாசலில் மட்டும் சிவப்பாய் ஒரேயொரு இரத்தப்பொட்டு. போனமாதம் கூட இரண்டு வாங்கிவிட்டேன். ஒன்றைக் காகம் கண் முன்னாடியே தூக்கிப்போய் விட்டது. ஒன்று மட்டும் வைத்திருந்தேன். என்னதான் வயிறு நிறைய சாப்பிடக் கொடுத்தாலும் அதை வெளியில் விட்டு மேய்க்க முடியவில்லை. ஒன்று எனது வேலைப்பளு. இன்னொன்று அதற்கு தனியாக வெளியில் மேய பயம். தாயில்லாத சோகத்தைக் குரலில் தோய்த்து ஒலிக்கும். வேலையில் அமர்ந்திருக்கும் எனக்கு அதைத் தாங்கவே முடியவில்லை. கடைசியில் கோழி வளர்க்கும் ஒரு வீட்டில் கொடுத்து விட்டேன். இனி கோழிக்குஞ்சு வளர்ப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.
சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநரிக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலு குஞ்சதஞ்சுந் தானிறந்து போனதே.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு சேவல்கள், ஐம்புலன்களாகக் குஞ்சுகளும் இவற்றின் தாயாக ஆன்மாவும் இருக்க சதா ஓயாத சண்டை. மரணமென்னும் கிழட்டுநரி கூட்டுக்குள் வந்தால் ஒன்றுகூட மிஞ்சாது.
நினைவுகளை வாசனை என்பார்கள். விருப்பத்துடன் ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கையில் கொஞ்சம் உள்ளே அவதானித்தால், நாம் நினைவுகளைத் தழுவிக் கொண்டிருப்பதோ, இய்லாமையோடு அதைப் புணர்ந்துகொண்டிருப்பதாகவோ படுகிறது. ஒரு பிடித்தமான சுவை நினைவைக் கிளத்தி பெருவிருப்பம் கொள்ளச் செய்கிறது. உணவை அள்ளி அள்ளி விழுங்கும்போது அதன் வாசமும் சுவையும் நினைவெனும் வாசனை விருப்பத்துக்குரிய பெண் முழுவதுமாக வந்து நிற்பதைப் போல. விருப்பத்துக்குரியவை எல்லாம் நினைவுகளே. பார்க்கும் விழிகளுக்குப் பின்னாலும், நாசிக்குப் பின்னாலும், செவிக்குப் பின்னாலும், நாவுக்கு உள்ளும், தொடும்/படும் உடலுக்கு உள்ளாகவும் நினைவுகளே நிழலாய்ப் படர்ந்திருக்கின்றன. இதையெல்லாம் காணும்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்துக்கும் நமக்குமான தூரம் மலைக்க வைக்கிறது. இதுமட்டுமா? இந்த மனம் பழைய நினைவுகளை மட்டுமா கவிந்து வைத்திருக்கிறது; என்ன ஏதென்று அறியாத, அனுபவித்திராத விசயங்களில் கூட அல்லவா நினைவுகளின் புனைவை முடைந்து வைக்கிறது.
சதா மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கையில் மனமற்ற நிலையை அடைவது எப்படி? கண்முன்னே களவு போவதுபோலத்தான் இது. சிறிதுநேரம் எண்ணங்களைக் கவனிக்கத் தொடங்கினால் எப்போது கதவு திறந்தது அது எப்போது வெளியே போனது என்று தெரியாதபடி திரியத் தொடங்கிவிடும். முதலில் இப்படி கவனிக்க வேண்டும் என்று தோன்றுவதற்கே நீண்டதூரம் கடக்க வேண்டியிருக்கிறது. உணவுப்பழக்கம், யோகாசனங்கள், தியானம், பிராணயாமம், சரியான நேரத்துக்குத் தூங்கி எழுதல் போன்றவை தன்னைத்தானே அவதானிக்க உதவும் கருவிகள் எனலாம். இதைத்தாண்டி பாவனை முக்கியம். பாவனை என்பது இருப்பதுபோல் பாவித்தல். ஞானம் என்றால் என்ன என்பது நமக்குத் தெரியாது; எண்ணங்களற்ற நிலையும் தெரியாது – எப்போதோ சில தருணங்களில் அமையக்கூடியது அது. திரும்பத் திரும்ப மனமற்ற நிலையை பாவித்து அதைத் தியானிக்க அது அதுவாகவே மாறிவிடும்.
பிணங்குகின்ற தேதடா பிரஞ்ஞைகெட்ட மூடரே
பிணங்கிலாத பேரொளிப் பிராணனை யறிகிலீர்
பிணங்குவோ ரிருவினைப் பிணக்கறுக்க வல்லிரேல்
பிணங்கிலாத பெரியவின்பம் பெற்றிருக்க லாகுமே.
எதற்கு இரண்டாக, நாலாக, எட்டாக, பதினாறாக, பலவாறாகப் பிரிந்துகிடக்கிறாய் பிரக்ஞை கெட்டவனே. ஒன்றித்து நில். அங்கே இரண்டிலாத பேரொளி பொங்கும் உயிர் உள்ளது. ஒன்று இரண்டாவது பிணக்கு. எண்ணம் என்பதே ஒரு பிளவு அல்லது இரண்டாதல். எண்ணங்களற்று இருக்கையில் மாறுபடாது ஒன்றாக இருப்பாய். ஓர்மையில் இருப்பதே பேரின்பம்.
மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்பில்நூ லணிவதும்
ஆட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்க ளாற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மாட்டிறைச்சி யல்லவோ மரக்கறிக் கிடுவது.
மேற்கண்டவை வேதியர்களை, பார்ப்பனர்களைச் சாடும் சிவவாக்கியரின் இன்னும் இரு பாடல்கள். இடையில் நான் பல பாடல்களைத் தவிர்த்துவிட்டேன். இந்தப் பாடல்களில் நாம் சில செய்திகளைத் தெரிந்துகொள்கிறோம். அதாவது சிவவாக்கியர் வாழ்ந்த 9-10ஆம் நூற்றாண்டுகளில் மான் தோலில் பூணூல் அணியும் பழக்கம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்திலும் யாகத்தில் ஆட்டிறைச்சியை அவியாகக் கொடுத்திருக்கிறார்கள். வைதீகச் சடங்குகள் எல்லாமே லோகாயதமானவை. அவை எளிய மக்களுக்கானவை. மக்கள் தங்கள் சுகவாழ்வுக்காகக் கடவுளை வணங்குகிறார்கள். போகமே அவர்களது விருப்பம். அதற்கு துணைசெய்வதற்காகக் கடவுளிடம் வேண்டுவதே வைதீகச் சடங்குகள். ஆனால் என்ன ஒரு பரிதாபம். அதைக்கூட மனிதர்களால் நேரடியாகக் கடவுளிடம் கேட்கமுடியவில்லையே. புரியாத மொழியில் கடவுளிடம் ஒரு இடைத்தரகரை வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். அவ்வளவு விலகியிருக்கும் கடவுள் எப்படி அவர்களுக்கு நெருக்கமாக முடியும்?