
வரலாற்றாய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலை சமீபத்தில் வாசித்தேன். களப்பிரர் காலம் குறித்து மிகக் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன என்று ஆரம்பத்தில் அவர் நூலைத் தொடங்கும்போது, இதெற்கெதற்கு 180 பக்கப் புத்தகம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் களப்பிரர் காலத்தில் அண்டை நாடுகள், சமயம், இலக்கியம், போர்கள் என விரிவாக இந்நூல் அலசிச் செல்வதன் மூலம் களப்பிரர் ஆட்சி குறித்து ஓரளவு தெளிவான சித்திரத்தை அளிக்கிறது.
ஒன்றாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் எத்தனை மன்னர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பார்த்தால் சட்டென்று ஆதித்த கரிகாலன் மட்டுமே நினைவுக்கு வருகிறார். அதைத் தவிர்த்து நம்மிடம் முறையான வரலாறு இல்லை. எழுதப்பட்ட கல்வெட்டு, செப்பேடுகளிலும் ”துஞ்சினார்” என்று பொத்தாம்பொதுவாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. பௌத்தம் பரவிய சீனம், இலங்கையில் எல்லாம் அவர்கள் வரலாற்றைத் தெளிவாகப் பதிவு செய்து வைத்துள்ளனர். தமிழகத்தில் பௌத்தம் பரவியிருந்தும் நம்மிடம் தரவுகள் இல்லை. காரணம் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் பௌத்த நூல்கள் அனைத்தும் இங்கே அழிக்கப்பட்டுவிட்டன.
எனக்கு இந்த நூலில் களப்பிரர் காலத்தில் இலங்கை அரசர்கள் என்ற பகுதி ஆச்சரியமாக இருந்தது. இந்த மன்னர்களின் வரலாறு சூலவம்சம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூலவம்சத்தை பௌத்தத் துறவிகள் வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளனர். இந்நூலை அவர்கள் பாலி மொழியில் எழுதி வந்துள்ளனர்.
ஓகாரிக திஸ்ஸன் (கி.பி. 209-231)
ஹீனயான பௌத்தம் ஒருகட்டத்தில் 18 பிரிவுகளைக் கொண்டதாகப் பிரிந்து போயிருந்தது. அதிலொன்று தேரவாதம். இது இப்போதுவரை இலங்கையில் பின்பற்றப்படும் பௌத்தமதப் பிரிவாக உள்ளது. திஸ்ஸனின் ஆட்சியில் மகாயானம் உள்ளே நுழைந்தது. அதை இம்மன்னன் வளரவிடாமல் தடுத்தான்.
அபயநாகன் (கி.பி. 231 – 239)
இவர் திஸ்ஸனின் தம்பி. இவனுக்கும் பட்டத்து இராணிக்கும் கூடா ஒழுக்கம் இருந்துள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டதும் தம்பி தமிழ்நாட்டுக்கு ஓடிவந்துவிட்டார். தமிழ்நாட்டிலிருந்து ஒரு சேனையைத் திரட்டிக்கொண்டு அண்ணன் மீது படையெடுக்க, அண்ணன் இராணியோடு இலங்கையின் மத்தியிலுள்ள மலைநாட்டுக்கு ஓடிவிட்டான். இவன் பின்னாலேயே விரட்டிச் சென்று அவனைக் கொன்று இராணியைக் கவர்ந்துவந்து தனது இராணியாக்கிக் கொண்டான்.
ஸ்ரீநாகன் II (கி.பி. 240 – 242)
இவர் திஸ்ஸனின் மகன். அபயநாகன் இறந்தபின் இரண்டாண்டுகள் மட்டுமே நாட்டை ஆண்டிருக்கிறான்.
விஜயகுமரன் (கி.பி. 242 – 243)
இவர் ஸ்ரீநாகன் II-இன் மகன். இவரது தாத்தா திஸ்ஸன் காலத்திலேயே அரண்மனையில் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. விஜயகுமாரன் அரியணை ஏறியபோது, லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்த சங்க திஸ்ஸன், சங்கபோதி, கோதபய என்ற மூன்று நெருங்கிய நண்பர்கள் அவரிடம் அமைச்சர்களாகப் பணியாற்றி வந்தனர். இம்மூவரும் சதி செய்து கி.பி. 243ல் மன்னர் விஜயகுமரனைக் கொன்றனர். அத்துடன் திஸ்ஸனின் வம்சம் முடிவுக்கு வந்தது.
சங்க திஸ்ஸன் (கி.பி. 243 – 252)
இவரும் சதியில் கொல்லப்பட்டார். மாம்பழப் பிரியரான இவர் இலங்கையின் கிழக்குத் தீவு ஒன்றுக்குச் சென்றபோது அங்கே மாம்பழத்தில் நஞ்சூட்டிக் கொன்றிருக்கிறார்கள்.
சங்கபோதி (கி.பி. 252 – 254)
இவர் காலத்தில் மரண தண்டனையை ஒழித்திருக்கிறார். இவர் எந்தளவு இரக்க குணமுள்ளவர் என்றால், ஒரு மரண தண்டனைக் கைதியைக் கொல்வதற்குப் பதில் போலியாக ஓர் உருவம் செய்து அவன்தான் இவன் என்பதுபோல ஏமாற்றி கொலையாளியைத் தப்பிக்க வைத்துவிடுவாராம். இதையெல்லாம் சகிக்காமல் இந்தக் கூட்டாளிகளில் ஒருவரான கோத்தபய என்னும் இலம்பகன்னன் இவருக்கு எதிராகக் கலகம் செய்தான். அரசருக்கு எதிராக அவன் போர்தொடுக்க, சங்கபோதி போர் புரியாமல் தப்பியோட, அவரைப் பிடித்த சேனாபதி ஒருவன் அவர் தலையை வெட்டி கோத்தபயவுக்கு அனுப்பினான். கோதபய ஆட்சியைப் பிடித்து மேகவண்ணாபயன் என்ற பெயரில் நாட்டை ஆண்டான்.
கோதபய (கி.பி. 254 – 267)
இவனது காலத்திலும் மகாயானம் தலைதூக்கியிருக்கிறது. அதை அடக்கி தேரவாதத்தை ஓங்கச் செய்தார். மகாயான பிக்குகளை நாடுகடத்தினான். அப்படி நாடு கடத்தப்பட்ட பிக்குகள் தமிழகம் வந்து இங்கிருந்த மகாயான பௌத்தத் தலைவராக இருந்த சங்கமித்திரர் இலங்கையில் மகாயானத்தைப் பரப்ப கங்கணம் கட்டிக் கொண்டார். அங்கே தேரவாத பிக்குகளுடன் வாதஞ்செய்து வென்றார். இதனால் மன்னனும் அவரை ஆதரித்தான். தன் பிள்ளைகளான ஜேட்ட திஸ்ஸன், மகாசேனன் ஆகிய இருவரை அவரிடம் கல்வி கற்க அனுப்பினான்.
ஜேட்டதிஸ்ஸன் I (கி.பி. 267 – 277)
சங்கமித்திரரின் மாணவனாக இருந்தாலும் இவனுக்கு குருவிடம் பகை இருந்தது. அதனால் இவன் அரியணை ஏறியதும் அவர் ஏரம் கட்டிக் கொண்டு சோழநாட்டுக்கு வந்துவிட்டார். சங்கமித்திரருக்கு கோதபயவின் இரண்டாவது மகன் மகாசேனனிடம்தான் அன்பு இருந்தது. இவர் காலத்தில் மணிமேகலைக்கு ஒரு விகாரை எழுப்பியுள்ளார்.

மகாசேனன் (கி.பி. 277 – 304)
மகாசேனன் அரியணை ஏறியதும் சங்கமித்திரர் திரும்பி வந்து தன் கையாலேயே முடிசூட்டி அழகு பார்த்தார். மன்னன் ஆதரவுடன் மகாயானம் பரவ வழிவகுத்தார். தேரவாத மகாயானப் பூசல்கள் இவனது காலத்தில் அடிக்கடி நிகழ்ந்தன.
ஸ்ரீ மேகவண்ணன் (கி.பி. 304 -332)
இவனது ஆட்சிக்காலத்தில்தான் கலிங்கத்திலிருந்து புத்தரின் பல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது இந்தியாவில் வடக்கே சந்திரகுப்தன் ஆட்சி செய்துவந்தான். அவனிடம் புத்த பிக்குகளைத் தூது அனுப்பி புத்தகயாவுக்கு வருகைதரும் பிக்குகளுக்கு பாதுகாப்பு அளித்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டான்.
ஜேட்டதிஸ்ஸன் II (கி.பி. 332 – 341)
இவன் ஸ்ரீ மேகவண்ணனின் தம்பி. நுண்கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தான். தந்தத்தில் சிற்பங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த இவன் அரண்மனையிலேயே அதைப் பொதுமக்களுக்குக் கற்பிக்கவும் செய்தான்.
புத்ததாசன் (கி.பி. 341 – 370)
ஜேட்டதிஸ்ஸனின் மகன். மருத்துவ நிபுணனாகவும் இருந்தான். பாம்புக்கே வைத்தியம் பார்த்து நோய் தீர்த்ததாகச் சொல்கிறார்கள். இவனது காலத்தில் வைத்தியசாலைகள் பெருகின. மருத்துவர்களுக்கு நிலங்களும் தானமளித்திருக்கிறான். பாஹியான் என்னும் சீன யாத்திரிகர் இவனது காலத்தில் இலங்கையில் வந்து தங்கியிருக்கிறார்.
உபதிஸ்ஸன் (கி.பி. 370 – 412)
புத்ததாசனின் மூத்த பிள்ளை. இவன் 42 ஆண்டுகள் அரசாண்டிருக்கிறான். தந்தையைப் போலவே மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவனது பட்டத்து இராணி உபதிஸ்ஸனின் தம்பி மகாநாமனோடு கள்ள உறவில் இருந்தாள். மகாநாமன் பிக்குவாகச் சேரவிருந்தான். இந்நிலையில் இராணி அரசனைக் குத்திக் கொன்றுவிட்டாள். அதனால் மகாநாமன் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.
மகாநாமன் (கி.பி. 412 – 434)
அண்ணனின் மனைவியும் பழைய இராணியுமானவளை புதிய இராணியாக்கிக் கொண்டான். இவனுக்கு ஆண் வாரிசு இல்லை. சங்கா என்றொரு பெண்பிள்ளை மட்டுமே. மகாநாமனுக்கு இன்னொரு தமிழினத்தைச் சேர்ந்த மனைவி இருந்தாள். தமிழ் இராணிக்கு சொத்திசேனன் என்றொரு மகன் இருந்தான்.
சொத்தி சேனன் (கி.பி. 434)
இலங்கையை ஆண்ட மன்னர்களிலேயே மிகவும் கெடுபேறுடையவன் இந்த மன்னன்தான். இவன் அரியணை ஏறிய அன்றே கொல்லப்பட்டான். முந்தைய அரசனின் மூத்த இராணிக்குப் பிறந்த சங்காவால் சொத்திசேனன் அரியணை ஏறுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நஞ்சூட்டி அவனைக் கொன்றாள்.
சத்தக் காகசன் (கி.பி. 434)
பிறகு சங்கா தன் கணவனான சத்தக் காகசனை அரியணை ஏறச் செய்தாள். சத்தக் காகசன் என்றால் குடை ஏந்துபவன் என்று அர்த்தம். மகாநாமனுக்கு கொற்றக்குடை ஏந்தியவனாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஓராண்டுகாலமே இவன் அரசாண்டான். இவன் இறந்ததும் அமைச்சர் சடலத்தை அரண்மனையிலேயே கொளுத்திவிட்டு மித்தசேளன் என்பவனை மன்னராக்கினார். அத்துடன் லம்பகர்ண பரம்பரை முடிவுக்கு வந்தது.
மித்தசேளன் (கி.பி. 435 – 436)
இவன் ஒருகாலத்தில் கொள்ளைக்காரனாக இருந்திருக்கிறான். இவனை மன்னனாக்கிய அமைச்சரின் பெயர் தெரியவில்லை. அரசன் நோய்வாய்ப்பட்டிருப்பதால் வெளியே வரமுடியவில்லை என்று சொல்லி காலத்தை ஓட்டியிருக்கிறார்கள். இவ்வாறாக இலங்கையில் தொடர்ந்து குழப்பங்கள் நிகழ, பாண்டிய மன்னன் படையெடுத்துவந்து மன்னனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான்.
பாண்டியர் ஆட்சி (கி.பி. 436 – 463)
அனுராதபுரத்திலிருந்து ஆண்ட இப்பாண்டிய மன்னனது பெயர் தெரியவில்லை. பாண்டு என்று பொதுவாக அழைக்கின்றனர். இக்காலகட்டத்தை ஆறு திராவிட மன்னர்களின் காலம் என்றழைக்கின்றனர். அந்த ஆறு மன்னர்கள், 1) பாண்டு, 2) பரிந்தன், 3) இளம்பரிந்தன், 4) தீர்த்தரன், 5) தாட்டியன், 6) பீடியன். பாண்டியர்கள் ஆட்சியின்போது இலங்கையின் தெற்குப் பகுதியான உரோகணத்தை ஆண்டுவந்த தாதுசேனன் என்பவனுடன் அடிக்கடி போர் நடந்தது. அத்தகைய போர்களில் தீர்த்தரன், தாட்டியன், பீடியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர். கடைசியில் பீடியன் தாதுசேனனிடம் தோற்றுப்போய் தாதுசேனன் அரியணை ஏறினான்.
தாதுசேனன் (கி.பி. 463 – 479)
பாண்டியர்களுக்கெதிராக 27 ஆண்டுகள் கலகம் செய்து ஒருவழியாக மன்னரானான் தாதுசேனன். இவன் வாழ்க்கை துயரமானது. இவனுக்கு இரண்டு மனைவியர். ஒரு மகளும் மொக்கல்லானன் என்ற மகனும் உண்டு. இரண்டாவது மனைவி குலத்தில் தாழ்த்தப்பட்டவள். அவள் மூலமாக கஸ்ஸபன் என்றொரு மகன் பிறந்தான். மகளை தன் தங்கை மகனுக்கு மணம் செய்வித்தான். மருமகனை தனது சேனாதிபதியாக்கிக் கொண்டான். மருமகனது பெயர் உபதிஸ்ஸன். அவன் அரசனின் மகளும் தனது மனைவியுமானவளை ஒருமுறை சவுக்கால் விளாச, காரணமே இல்லாமல் தன் மகளை அடித்திருக்கிறான் என்பதை அறிந்து மகள்மேல் பேரன்பு கொண்டிருந்த அரசன் கடுஞ்சினம் கொண்டான். அவனது அம்மாவும் தனது தங்கையுமானவளை உயிரோடு நெருப்பிலிட்டு எரித்துவிட்டான். இதனால் அரசன் மேல் தீராப்பகை கொண்ட சேனாதிபதி பழிதீர்க்கத் தீர்மானித்தான். அரசனின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்த கஸ்ஸபனுக்கு அரசாளும் ஆசையைத் தூண்டிவிட்டான். தன் பக்கம் ஆட்களைச் சேர்த்துக் கொண்டு அரசனைச் சிறையிலடைத்தான். அரசனின் இன்னொரு மகன் மொக்கல்லானனைக் கொல்ல முயல அவன் தமிழகத்துக்குத் தப்பியோடினான். அத்தோடு சேனாதிபதி நிற்கவில்லை. கஸ்ஸபனிடம் அவனது தந்தை பெருஞ்செல்வத்தை மொக்கல்லானனுக்குத் தருவதற்காக ஒளித்து வைத்திருப்பதாகவும் அந்த இடத்தைத் தெரிந்துகொள்ளுமாறும் தூண்டினான். பலமுறை ஆட்களை விட்டுக் கேட்டும் அரசன் பதில் சொல்லாதிருக்கவே, அவனைக் கொன்றுவிடும்படி கஸ்ஸபன் ஆணையிட்டான். சேனாதிபதி அரசனை நிர்வாணமாக்கி சுவரோடு சேர்த்துச் செங்கல்லால் சுவரெழுப்பிப் பூசிவிட்டான்.
கஸ்ஸபன் I (கி.பி. 479 – 497)
இவன் பாதுகாப்புக்காக சீக்கிரி மலைமேல் கோட்டையமைத்து அரசாண்டான். இந்தக் கோட்டை மற்றும் அரண்மனைச் சிதிலங்கள் இன்னமும் இலங்கையில் உள்ளன. தமிழகத்தில் உதவிதேடிச் சென்ற மொக்கல்லானனுக்கு சாமானியமாக உதவி கிடைக்கவில்லை. பதினெட்டு ஆண்டுகள் கழித்து தனக்குக் கிடைத்த போர் செய்வதில் திறன் பெர்ற பதினெட்டு தமிழ் நண்பர்களுடன் கஸ்ஸபன் மீது படையெடுத்தான். தோற்கும் நிலையில் இருந்தபோது யானை மீதிருந்தபடி வாளால் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு கஸ்ஸபன் இறந்துபோனான்.
மொக்கல்லானன் (கி.பி 497 – 515)
இவன் அரசனானதும் தன் தந்தையைக் கொல்ல கஸ்ஸபனுக்கு உதவியாக இருந்தவர்களைக் கொன்றுகுவித்தான். பலருக்கு மூக்கையும் காதையும் அரிந்து நாடுகடத்தினான்.
குமார தாதுசேனன் (கி.பி. 515 – 524)
மொக்கல்லானனின் மகன். இவன் ஒரு கவிஞனும்கூட. இவன் எழுதிய ஜானகி ஹரணம் என்ற காவியம் பிரபலமானது. இவருக்கும் இந்தியாவின் காளிதாசருக்கும் இடையே நட்பு இருந்ததாகவும் அவர் இலங்கை வந்து தங்கியிருந்தபோது ஒரு சதியில் கொல்லப்பட அத்துயர் தாங்காது அவரை எரியூட்டிய நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டதாக ஒரு கதை உண்டு. இல்லை, இது மொக்கல்லானனின் அமைச்சரின் மகனான காளிதாசன். அவன் அரசனின் நெருங்கிய நண்பன், அவன் இறந்தபோதுதான் துயர் தாங்காமல் தானும் தீயில் குதித்து உயிர்விட்டான் என்றும் சொல்கிறார்கள்.
கீத்திசேனன் (கி.பி. 524)
குமார தாதுசேனனின் மகன். ஆட்சிக்காலத்தில் 9 மாதங்கள் சென்ற நிலையில் இவனது தாய்மாமன் சிவன் இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான்.
சிவன் (கி.பி. 524)
இவன் அரியணை ஏறிய இருபத்தைந்து நாட்களில் உபதிஸ்ஸன் என்பவனால் கொல்லப்பட்டான்.
உபதிஸ்ஸன் III (கி.பி. 524 – 526)
இந்த உபதிஸ்ஸன் யாரென்றால் தாதுசேனனின் மகளை மணந்து, அவன்மேல் வஞ்சம் கொண்டு கஸ்ஸபனைத் தூண்டி கடைசியில் உயிரோடு அரசனுக்குச் சமாதி கட்டியவன். அதாவது, மொக்கல்லானனின் தங்கையை மணந்தவன். மொக்கல்லானன் தன் தந்தையைக் கொல்ல உதவிய ஆயிரம் பேரைக் கொன்றிருக்கிறான். இவன் எப்படித் தப்பினானென்று தெரியவில்லை. உபதிஸ்ஸன் தன் மகளை சிலாகாலன் என்பவனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். உபதிஸ்ஸனுக்கு கஸ்ஸபன் என்றொரு மகனுண்டு. சிலாகாலன் ஆளும் ஆசைகொண்டு மாமனாரோடு போர் செய்தான். உபதிஸ்ஸனுக்கு ஏற்கெனவே வயதாகிவிட்ட காரணத்தால் கஸ்ஸபன் போர் செய்துவந்தான். கடைசியில் கஸ்ஸபன் தோற்றுப்போய் களத்தில் தற்கொலை செய்துகொண்டான். அச்செய்தியறிந்து உபதிஸ்ஸனும் இறந்துபோனான்.
சிலாகாலன் (கி.பி. 526 – 539)
இவனுக்கு மொக்கல்லானன், தாட்டாபபூதி, உபதிஸ்ஸன் என மூன்று மகன்கள். மூவருக்கும் ஆளுக்கொரு திக்கில் ஆட்சியைக் கொடுத்து ஆளச் செய்தான். மகாநாகன் என்ற கொள்ளைக்காரனை அரசு அலுவலில் உதவிக்கு வைத்துக்கொண்டு, உரோகணத்தில் அவனை வரி வசூலிப்பவனாக நியமித்தான். அவன் வரியை வாங்கித் தானே வைத்துக்கொண்டு உரோகணத்திலேயே தங்கிவிட்டான்.
தாட்டாபபூதி (கி.பி. 539 – 540)
சிலாகாலன் இறந்தபின், இரண்டாவது மகன் தாட்டாபபூதி ஆட்சியைக் கைப்பற்றினான். மூத்த அண்ணனான மொக்கல்லானனுக்கு ஆட்சிப் பொறுப்பைத் தராமல் இரண்டாமவன் வந்ததை மூன்றாவது தம்பி உபதிஸ்ஸன் கண்டித்தான். அதனால் அவனைக் கொன்றுவிட்டான். மொக்கல்லானன் தாட்டாபபூதி மீது படையெடுத்தான். மொக்கல்லானன் எதற்கு தேவையில்லாமல் படைவீரர்கள் ஒருவருக்கொருவர் கொன்று சாக வேண்டும், ஒற்றைக்கு ஒற்றை போர்செய்து யார் ஆள்வது என்று முடிவு செய்வோம் என்று செய்தியனுப்பினான். இருவரும் யானை மீது அமர்ந்து போர்செய்ய, மொக்கல்லானனின் யானை தாட்டாபபூதியின் யானையைத் தந்தத்தால் குத்திவிட அது திரும்பி ஓடியது. தோற்றுப்போனதால் வாளெடுத்துக் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான், தாட்டாபபூதி.
மொக்கல்லானன் II (கி.பி. 540 – 560)
கீர்த்தி ஸ்ரீமேகன் (கி.பி. 560 – 561)
மொக்கல்லானன் இறந்ததும் அவனது இராணி மற்ற உறவினர்களுக்கு நஞ்சிட்டுக் கொன்றுவிட்டு தன் மகனை அரசனாக்கினாள். ஆனால் பின்னாலிருந்து அவளே ஆண்டாள். இவளது ஆட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்தேறின. கீர்த்தி ஸ்ரீமேகனின் பாட்டனார் சிலாகாலனால் உரோகணத்தில் வரி வசூலிக்க அமர்த்தப்பட்டிருந்த மகாநாகன், இக்குழப்பத்தைப் பயன்படுத்தி படையெடுத்து வந்து ஆட்சியைக் கைப்பற்றினான். கீர்த்தி ஸ்ரீமேகன் வெறும் பத்தொன்பதே நாட்கள் அரியணையிலிருந்தான்.
இலங்கையின் அரசியல் அப்போதிருந்தே ஓர் இரத்த சரித்திரமாக இருந்திருப்பது ஆச்சரியம்தான்.
