நம்பிக்கை, நன்னெதிர்பார்ப்பு, அன்பு மூன்றும் நிலையானது,
அதில் அன்பே தலையாயது.
பைபிளின் புகழ்பெற்ற ‘அன்பு’ அத்தியாயத்தின் இறுதி வரி (கொரிந்தியர் – 13). பின்னாளைய மேற்கத்திய தத்துவ அறிஞர்கள் இந்த வரியிலிருந்து அன்பு (Compassion) என்னும் கருதுகோளை விரிவுப்படுத்திக் கொண்டதாகச் சொல்வதுண்டு. கிறிஸ்துவ மதம் அறிவை குறையுடையதாக காண்கிறது. செல்வத்தையும், பற்றையும் குறை கொண்டதாகவே குறிப்பிடுகிறது. பற்றில்லாத தூய அன்பு முதன்மையானது என்கிறது.
பைபிளில் உள்ள இயேசுவின் வாழ்க்கை வரலாற்றில் அவர் சென்று தொடும் புள்ளி அந்த தூய அன்பே. எவ்வித ஆணவமும், பற்றும், மோகமும் இல்லாத தூய அன்பு. அதனாலேயே குருசு அன்பின் வடிவம்.
இயேசுவின் வாழ்க்கை வரலாற்று வழியாக அவர் ஒவ்வொன்றையும் துறந்து சென்று அந்த ஞானத்தை அடையும் புள்ளி திரண்டு வரும், அதன் உச்சத்தில் நின்றே அவர் தன் சீடர்களுக்கு மலை பிரசங்கம் இயற்றுகிறார். இதில் இயேசு அறிவையும், செல்வத்தையும் உதறுமிடம் நாடகீகமானது. அவர் நாற்பது நாள் தொடர் நோன்பில் இருந்த போது சாத்தானான லூசிஃபர் அவர் கண் முன் மொத்த உலக ராஜியத்தையும் காட்டுகிறான். அவை அனைத்தையும் இயேசுவுக்கே தருவதாகவும் தன்னை வணங்கும்படியும் கேட்கிறான். இயேசு அதனை மறுக்க தொடர்ந்து இயேசுவுக்கும் லூசிஃபருக்குமான உரையாடல், அதில் லூசிஃபரை வென்று இயேசு மலை மேல் ஏறி தன் பிரதான சிஷ்யர்கள் பன்னிருவரை அழைத்து பிரசங்கம் நிகழ்த்தி உலகத்திற்கான சுவிஷேசத்தை கூறுகிறார். (மலை பிரசங்கம்; மத்தேயு 5-7, லூக்கா 5-8). இதில் லூக்கா எழுதியது எனக் கூறப்படுவதே எனக்கு பிடித்தது. அதுவே கவித்துவமானது, மேலும் நாடகீகமானது.
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கடல்’ நாவல் மேலே சொன்ன பைபிள் கதையின் நவீன நாவல் வடிவம். லூசிஃபரான பெர்க்மான்ஸ்க்கும், புனிதரான சாமுக்கும் இடையிலான போராட்டம். அதில் வரும் தாமஸ் அவர்கள் இருவர் ஆடும் பரமபத ஆட்டத்தின் சிறு பாவை.
இந்நாவலை பற்றி ஜெயமோகன் தன் முன்னுரையில் குறிப்பிட்டது போல் நாவல்ட்டி (Novelty) எனச் சொல்லப்படும் எந்த புதுமையான அம்சமும் இதில் இல்லை. மேலே சொன்னது போல் கதைக்கரு மிகத்தொன்மையானது, இதில் கையாளப்பட்டிருக்கும் படிமங்கள் பெரும்பாலும் பைபிளில் உள்ளது அல்லது அதன் மறுவரையறை. நாவலின் வடிவம் கூட தல்ஸ்தேவஸ்கியன் தன்மை கொண்டது. அதாவது நீண்ட தன்னுரையாடல், தாமஸ், சாம் இருவருக்கும் இடையிலான உரையாடல் அல்லது சாம், பெர்க்மான்ஸ் இருவருக்கும்.
இவையெல்லாம் முன்னரே வகுப்பப்பட்டுவிட்டது நாவலின் பலம். இனி இதற்கு மேல் நாவலில் என்ன உள்ளது என்பதே கேள்வி. அனைத்தும் தெரிந்த பின்பும் எனக்கு தெரிந்து நாவல் வாசித்தவர்கள் எல்லோரும் ஒரே மூச்சில், அதாவது மூன்று நாட்களுள் அறுநூறு பக்க நாவலை வாசித்து முடித்துவிட்டனர். அதற்கு காரணம் அனைத்திற்கும் மேலாக கதை கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம். அதாவது பைபிளின் புதிய ஏற்பாடு கொண்டிருக்கும் அதே நாடகீக உச்ச தருணங்கள் வழியாக மட்டுமே கதை நகர்கிறது. அதற்கு இணையான உருவகங்களும், படிம மறுவரையறைகளுமே நாவலை விடாமல் ஒரு சாகச நாவல் போல் வாசிக்கத் தூண்டுகிறது.
வெண்முரசு நாவல் தொடர் எழுதி முடித்ததற்கு பின்பான ஜெயமோகனின் நாவல்களில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன என்பது இங்கே முக்கியமான கேள்வி. உலக இலக்கிய பரப்பிலேயே அதிகம் எழுதிய எழுத்தாளர் என்பதால் வெண்முரசுக்கு பின்பாக ஜெயமோகன் நாவல்களில் கதைத் தருணங்கள் அல்லது ஒரு வாழ்க்கை தருணத்தில் மானுடர் கொள்ளும் முடிவு என்ன என உசாவுவது அத்தனை முக்கியமான ஒன்றாக இல்லை. அதற்கு மாறாக ஒட்டுமொத்தமாக ஒரு எழுத்தாளர் கொண்டிருக்கும் வாழ்க்கை/மெய்மை புரிதல் என்ன, இத்தனை வாழ்க்கை வழியாக அவர் எந்த தரிசனத்தை சென்று தொடுகிறார் என்பதே பிரதானமாக கவனிக்க வேண்டியுள்ளது.
உதாரணமாக, நாவலில் ஆக்னஸ்மேரி திரும்ப வரும் இடம். திரைக்கதையில் வருவது போல் சாமுக்கு எதிரான விசாரணையில் ஆக்னஸ்மேரி அவருக்கு எதிராக பொய் சாட்சி சொல்லுகிறாள். அதன்பின் பத்து ஆண்டுகள் கழித்து சாம் அதே ஊருக்கு திரும்பி வரும் போது அவள் இத்தனை ஆண்டுகளில் எப்படி மாறியிருக்கிறாள் என அவளது உடல் மொழியில் உள்ள சிறு சிறு மாற்றங்களின் மூலம் வாசகனின் மனதில் ஆசிரியர் பதிவு செய்கிறார். இதனை போன்று பல தருணங்கள் அவரே வெண்முரசில் எழுதியுள்ளார் என்பதால் அதனை எப்படி சரியாக எழுதியுள்ளார் என்பதைப் பற்றி மட்டும் பேசுவது பிற சிறு நாவல்களை வாசிப்பது போல் இந்நாவலையும் சுருக்கிவிடும் எனக் கருதுகிறேன்.
எனவே ஒரு கேள்வியை மட்டும் முன்வைத்து வெண்முரசிற்கு பின்பான ஜெயமோகனின் எழுத்து எவ்வகை எவ்வண்ணம் பொருள் கொள்கிறது எனப் பார்க்கிறேன்.
வெண்முரசிற்கு பின் ஜெயமோகன் தன் எழுத்துலகை ஒளியால் ஆனது என அறிவித்துக் கொண்டார். குறிப்பாக நூற்றிமுப்பத்தியாறு சிறுகதைகளின் முடிவில் அவர் ஆற்றிய சூம் உரையில் அதனை சொன்னார். அந்த ஒளி என்ன என்பதே எனக்கான கேள்வி. அதுவே அவர் நாவல்களில் வெளிப்படும் பிரதான தரிசனமா? என்பது அடுத்த வினா.
ஒரு எழுத்தாளர் மானுடரின் இத்தனை இருண்ட பக்கங்களை எழுதிய பின்பு அவர் மானுட குலத்தின் மேல் நம்பிக்கை கொண்டவராக, அவர்களின் மேன்மையான நிலைகளை அறிந்தவராக மாறி விடுவாரா என்ன? இருள் கூடி கூடி அடர் இருள் வெளிச்சத்திற்கு கூட்டிச் செல்லுமா என்ன?
அப்படி ஒரு கேள்வியை வைத்து கடல் நாவலை வாசிக்கும் போது மானுடம் கொள்ளும் உச்சப்பட்சமான இருள் எது என்பது ஜெயமோகனின் பிரதான கேள்வியாக உள்ளது. திரைக்கதையில் இல்லாத முக்கியமான அம்சம் இது. சாம் கதாபாத்திரம் முற்றிலும் புனிதராகவே திரைக்கதையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆனால் சாமுக்குள் இருக்கும் ஒரு துளி லூசிஃபர் யார் என்ற இடத்திலேயே நாவல் தொடங்குகிறது. மொத்த நாவலிலும் அந்த லூசிஃபரை பார்த்து அச்சம் கொள்ளும் ஒருவனாகவே சாம் உள்ளார்.
தாமஸிற்கான முழு மீட்பை சாமால் ஏன் ஏற்படுத்த முடியவில்லை. அதற்கும் பதில் நாவலிலே வருகிறது. புனிதர்கள் அல்லது புனிதர்கள் என தன்னை உணர்ந்தவர்களின் ஒளிக்கு நிழலுண்டு. சாமின் நிழல் என்ன என்பதே கேள்வி.
மேலே சொன்ன பதிலை தாந்தே தன் டிவைன் காமெடி வழியாக சாமிற்கு சொல்கிறார். நாவல் கருக்கொள்ளும் புள்ளி என்பது தாந்தே வரும் இந்த பகுதி தான். இதிலிருந்தே வாசகன் அதற்கு முந்தைய பகுதியை தொகுத்து அடுத்த பகுதியில் வரும் சாகச கதையை புரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது.
டிவைன் காமெடியில் ஏழு வட்டங்கள் கொண்ட விளையாட்டு ஒன்று வருகிறது. அதில் மனிதர்களை ஆடச் செய்கிறார். இதில் இரண்டாம் வட்டம் பெக்காட்டம் (Peccatum) உணர்ச்சிகரமானது, தீவிரமானது, எதிர்பார்க்கவே முடியாத திருப்பங்களால் ஆனது. முதல் வட்டமான வொல்காரிஸில் (Vulgaris) இருக்கும் அழகு, மகத்துவம், புனிதம் எதுவும் இதில் இல்லை. ஆனால் அதிலிருக்கும் போது ஒருவன் தான் அதுவல்ல என உணர்ந்துக்கொண்டே இருக்கிறான். ஆகவே அவன் இரண்டாவது வட்டமான பெக்காட்டம் தேர்வு செய்கிறான்.
தாமஸ் சாமால் உந்தப்பட்டு அத்தனை மனமாற்றம் அடைந்த பின்னரும் அவன் மனம் அந்த முதல் வட்டத்திலிருந்த சலிப்பைக் கண்டு இரண்டாவது வட்டத்திற்கு செல்கிறது. அதுவே அவனை சாமிடமிருந்து பெர்க்மான்ஸ் நோக்கி நகர்த்துகிறது. இதுவும் திரைக்கதையில் வருவது போல் சட்டென்ற மாற்றமாக நிகழவில்லை. படிப்படியாக அவனது நகர்வு நாவலில் வருகிறது. முதலில் அவன் மீன்பிடி வாழ்க்கையில் இருப்பதிலேயே சாகசமான நிகழ்வான சுறா வேட்டைக்கு செல்வதில் தொடங்குகிறது. அங்கிருந்து படிப்படியாக பெர்க்மான்ஸை சென்றடைகிறான்.
பெர்க்மான்ஸ் கதையில் தனக்குள் இருக்கும் ஒருதுளி ஒளியிடமே மன்றாடுகிறான். அதையும் அவன் துறந்த பின்னரே முழுவதும் வெளியேறுகிறான். இப்படி மூன்று மைய கதாபாத்திரங்களும் இருளின் வெவ்வேறு எல்லையில் நின்றுக் கொண்டிருக்கின்றனர்.
இதை தவிர பிற சிறு கதாபாத்திரங்கள் மேலும் ஆசிரியர் கொண்டிருக்கும் அவதானிப்பு அதுவே. ஆசிரியரின் பல நாவல்களில் வரும் ஒரு அம்சம் பெருந்திரள் மேல் என்றும் நன்மை எழுவதற்கான வாய்ப்பே இல்லை என்பது. அவர் எப்போதும் திரளை இருளின் வடிவாகவே சித்தரித்து வருகிறார். நமக்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு இடம் சாமுக்கு எதிராக குற்ற விசாரணை நிகழும் பகுதி. அதில் சாம் மீட்டெடுத்த மொத்த மக்கள் திரளும் அவருக்கு எதிராக திரும்பி அவரை அடித்து காரி உமிழ்ந்து ஏசுவர். அவர் திரும்பி வந்த பின்னரும் அதுவே செய்வர். ஆனால், சாம் அவர்களை மெல்ல மெல்ல மீட்டெடுப்பார். அதே நேரத்தில் தாமஸ் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்திருப்பான். பாவத்தால் சேர்த்த அவன் பணத்தில் செய்யும் விழாவில் தன் ஊரிலிருந்து யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என சாம் சொல்வார். அது தாமஸ் அவன் அம்மாவிற்காக ஏற்படுத்திய ஒரு விழா. உண்மையில் அதில் முதலில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒருவர் பின் ஒருவராக வெவ்வேறு காரணங்களால் அதில் சென்று சேர்வர். தாமஸ் அவர்களை கண்டு ஒரே சமயத்தில் கர்வமும், கசப்பும் அடைவான். இதில் எங்கே மனித குலத்தின் ஒளி நிறைந்துள்ளது. ஜெயமோகன் எழுத்தில் வரும் எந்த கதாபாத்திரமும் அவர்கள் வெளிப்பட சாத்தியமான சந்தர்ப்பத்தில் நஞ்சையே வெளிக்காட்டுகின்றனர். பெருந்திரள் ஒரு சந்தர்ப்பம் வரும் போது புனிதரான சாமை கூட அவர்களுள் ஒருவராகவே காண்கிறது.
ஒருவனைக் கொல்லும் படி தாமஸை பெர்க்மான்ஸ் சொல்வான். ஆனால் அவனை கொல்வதற்கு தாமஸ் தயங்குவான். அவன் அம்மாவும், மனைவியும் அனாதையாகக் கூடும் என யோசிப்பான். அவன் இறந்த அடுத்த நாளே அவர்கள் வேறொரு விதத்தில் மாற்றமடைந்திருப்பதைக் காணுவான்.
இந்நாவல் வழியாக பார்க்கையில் கூட ஜெயமோகன் மானுடத்தின் ஒளியை காட்டவில்லை என்பது மட்டுமல்ல. அவர்கள் மேல் ஒரு சிறு பரிவு கூட இல்லை என்றே தெரிகிறது. மானுட மேன்மைக்கான நம்பிக்கை நாவலின் ஒரு பகுதியில் கூட வரவில்லை. திரள் மேல் நம்பிக்கை கொண்டவரான சாம் கூட இறுதியில் அடைவது அவர்கள் மேல் கசப்பை மட்டுமே. அவர் நம்பிக்கை கொண்டிருந்த ஆக்னஸ்மேரி, அவர் உன்னத காதல் கொண்ட செலினா, சர்ச் பாதிரியார்கள், பிஷப் என எல்லோரும் அவருக்கு அந்த கசப்பையே பதிலாக தந்தனர்.
ஆனால் அத்தனைக்கும் மேலும் சாமிற்கு இருந்த நம்பிக்கை எது? தாமஸை இறுதி வரை அவர் நம்ப காரணமென்ன?
இப்படி சொல்லலாம், ஜெயமோகனின் கடல் நாவல் ஒட்டுமொத்தமான மானுட மேன்மைக்கும், தனி மனதினின் தனித்துவ வெளிப்பாட்டிற்குமான ஊடாட்டு. அதில் அவர் எந்நிலையிலும் மானுட நல்லியல்பை நம்பவில்லை. ஆனால் தனி வெளிப்பாட்டின் ஒரு புள்ளியில் அந்த ஒளி எங்கோ இருக்கும் என நம்பினார். பேரிருளை சிறிய டார்ச் வெளிச்சம் இல்லாமல் ஆக்கிவிடுவது போல. அந்த ஒரு துளி எங்கே எங்கே என உசாவி பார்ப்பதே கடல் நாவலிலும், காவியம் நாவலிலும் நிகழ்ந்துள்ளது.
காவியம் நாவலின் கட்டமைப்பை பார்த்தால் அதில் மானுட மனத்தின் சாத்தியமான அனைத்து இருளும் சொல்லப்பட்டுவிட்டது. அதற்கு மேல் ஏதேனும் ஒளி எஞ்சி நிற்கிறதா என்ற கேள்வியே உள்ளது. அந்நாவல் சென்றடையும் உச்சம் அக்கேள்விக்கான பதிலிலேயே.
கிறிஸ்துவ மதமாகட்டும், நம் மரபில் உள்ள பௌத்த, சமண மதங்களாகட்டும் அந்த ஒரு துளி ஒளியின் மேல் கட்டமைக்கப்பட்ட ஒன்று. இங்கே மண்ணில் அறம் என, விழுமியங்கள் என ஒன்று உண்டாக்கப்படுவது அது ஒன்றை நம்பியே.
மொத்த பைபிளையும் வாசிக்கும் போது ஒரு மலைப்பு உண்டாகும். இயேசுவின் எழுகை இத்தனை இருளுலகின் மேல் இயற்ற பட்டதா என்று. அத்தனை கசப்புகளும், போர்களும், வஞ்சங்களும் நிறைந்தது பழைய ஏற்பாடு. ஜெயமோகன் தன் எழுத்தின் வழியாக சென்று தொடும் புள்ளியும் அதுவே.
நான் மேலே சொன்னது போல் ஜெயமோகன் கிறிஸ்துவ தொன்மத்தை மீளுருவாக்கம் செய்யவில்லை. அவர் அந்நாவல் வழியாக தான் உருவாக்கி வைத்திருக்கும் கிறிஸ்துவின் பிம்பம் சரி தானா என சோதனை செய்து பார்க்கிறார். தன் அகம் நம்பியிருக்கும் கிறிஸ்து இவர் தானா என சாம், தாமஸ் வழியாக உறுதி செய்துக் கொள்கிறார். தல்ஸ்தோயும், தஸ்த்யேவ்ஸ்கியும் செய்த அதே சோதனை.
இதே நிலையை வரலாற்றில் முக்கியமான எழுத்தாளர்கள் அனைவரும் சென்றடைந்திருக்கின்றனர். எனக்கு மிகவும் பிரியமான எழுத்தாளரான பேர் லாகர்குவிஸ்ட் எழுதிய பாரபாஸ் சிறந்த உதாரணம். இரண்டாம் உலகப் போர் வரை கற்பனாவாத கவிஞராகவே அறியப்பட்ட அவர் உலகப்போருக்கு பின் மானுட குலத்தின் மேல் முழுவதும் அவநம்பிக்கையை கொள்கிறார். அத்தனை கசப்பும், அவநம்பிக்கையும் நிறைந்த மனிதராகிறார். அதன் பின் பாரபாஸ் நாவல் எழுதுகிறார். நாவலில் பாரபாஸின் பயணமென்பது ஒரு விதத்தில் ஆசிரியரின் பயணமும் கூட. இறுதியில் எது உண்மையான அன்பு என இயேசு சொல்லிச் செல்வதை பாரபாஸ் உணர்கிறான். நாவலின் வழியாக லாகர்குவிஸ்ட்டும்.
தல்ஸ்தோய், தன் கடைசி காலத்திலேயே இவான் இலியச்சின் மரணம் என்ற மனித மனத்தின் உச்ச சாத்தியமான இருள் கொண்ட குறுநாவலையும், சிறுவர்களுக்கான நல்லுபதேச, இறைநெறி கதைகளையும் எழுதினார். தஸ்த்யேவ்ஸ்கியின் இறுதி நாவல் ‘கர்ம்சோவ் சகோதரர்கள்’, அதின் இறுதியில் அலேக்சே கரம்சோவ் அத்தனை இருளை கண்ட பின் இறுதியாக குழந்தைகள் வழியாக அதே மீட்பரை அடைகிறான்.
இந்த மனநிலையை இப்படி விளக்கலாம், சிறந்த நாவலாசிரியர்கள் ஒரு புள்ளியில் மானுடத்தின் அனைத்து சாத்தியமான இருளையும் தங்கள் எழுத்தின் மூலம் அறிந்தவர்கள் ஆகின்றனர். அதன் மேலே சென்று தங்களுக்கான அடுத்தக்கட்ட கேள்வியை நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் மேலும் அவநம்பிக்கையாளனாக, இறையின் மேலும், புவியின் மேல் ஒட்டுமொத்த சிருஷ்டியின், இங்கே உள்ள அறம், விழுமியம் அனைத்தின் மேலும் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகவும் வாய்ப்புள்ளது. ஆனால் எல்லோரும் ஒரேபோல அதற்கு எதிராக அமைந்த ஒளியை கண்டடைகின்றனர் என்பதே விந்தை.
நாமெல்லோரும் கரையிலிருந்தே கடலை பார்க்க அறிந்தவர்கள். நமக்கு அதனுள்ளே ஆழத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. ஆனால் மேலே சொன்னவர்கள் அனைவரும் அதன் ஆழத்தின் எல்லை வரை சென்று பார்க்கின்றனர். அங்கே ஆழ்கடல் சலனமற்றது, மேற்பரப்பில் கொந்தளிப்பில்லாதது, அடியில் பயங்கரமானது, ஆழம் நிறைந்தது, இருள் சூழ்ந்தது, திக்கற்றது, கட்டற்றது, திகைக்கவைப்பது. ஆனால் சூரியனின் முதற் துளி ஒளியை அதுவே அறிவது.
***