தொகுப்பில் மொத்தம் பத்துக் கதைகள். கிருத்திகாவின் பெயர் முன்பே தெரியுமென்றாலும், அவரது கதைகள் எதையும் படித்ததில்லை. எதிர் வெளியீட்டின் நாய்சார் தொகுப்பில்தான், அவரது கதைகளை முதன்முதலாய் படித்தேன்.
நவீன வாழ்வில் சென்டிமெண்ட் என புறக்கணிக்கப்படும் மெல் உணர்ச்சிகளின்மீது மையம்கொண்டதாக இத்தொகுப்பிலுள்ள கிருத்திகாவின் கதைகளனைத்தும் அமைந்திருக்கிறது. இருந்தபோதும் கதைகள் சலிப்பையோ அலுப்பையோ ஏற்படுத்தவில்லை. கதைகளைப் படிக்கும்போது தன் கதை மாந்தர்கள் மேல் ஒரு துளி வாஞ்சை ஏற்பட்டால் அதுவே தன் கதைகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்கிறார் கிருத்திகா. தொகுப்பின் பெரும்பாலான மனிதர்கள்மீதும் எனக்கு பிரியம் ஏற்பட்டது என்பதுதான் இத்தொகுப்பின் மீதான என் விமர்சனம்!
கவுரதை கதையில், இரவெல்லாம் கண்விழித்து ஊரைக் காவல் காக்கும் கருப்பின் நடமாட்டத்தைப் பார்த்ததும் ஏனோ ஜெயமோகனின் மாடன் மோட்சம் நினைவுக்கு வந்தது. கிருத்திகா அந்தப் பக்கமெல்லாம் செல்லவில்லை. கருப்பு காவல்காரர் மட்டுமில்லை. ஏழைபாழை ஜனங்களின் குறைதீர்க்கிறவரும்கூட. கேட்பது சாமியிடம்தான் என்றாலும், கேக்கிறவன் தயக்கமில்லாமல் கேட்பதற்காக, பதிலுக்கு அவன் தரும் படையலை ஏற்றுக்கொள்கிறவர். ஊரையே காவல் காத்தாலும், அருகிலிருக்கும் மலங்காட்டுக்கு அருகில்தான் நிற்கிறார் கருப்பு. அங்கிருந்து வரும் நாற்றம் குடலைப் பிடுங்குகிறது. அருள் வந்து ஆடுபவரின் மேல் இறங்கி மலங்காட்டில் ஒதுங்குவதை மாற்றச்சொல்கிறார். காவலை விட்டுவிட்டு இடம்மாறிப் போய்டுவேன் என ஊர்க்காரர்களை மிரட்டினாலும், நாங்க என்ன ஐயாமாருங்க மாதிரி கக்கூஸ் கட்டி போய்வறவங்களா… எங்களுக்கு வேற வழியில்லை என கருப்பையே அதட்டி உருட்டி உட்கார வைக்கும் ஊர்.
மனசுக்குள் கருப்பனின் மீதான காதலும் வார்த்தைகளில் அவரைச் சீண்டும் நையாண்டியுமாக அவரது வாகனம் குதிரை. காவல்காக்கும் கருப்பனின் குதிரைக்கு ஒரு பிரச்சனை வர, ஊர்ப்பிரச்சனையெல்லாம் தீர்க்கும் கருப்பு, அதைத் தன் கவுரதைக்கு குறைவுவராமல் எப்படித் தீர்க்கிறார் என்பதை கிருத்திகா சித்திரமாகத் தீட்டியிருக்கிறார்.
நாய்களைப் போலவே நாய் கதைகளும் ஆர்வமூட்டுபவை. சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையான நாய்சார், எடுத்து வளர்க்கப்படும் நாய் தன் எஜமானன் மேல் காட்டுகிற அதீத அன்பைப் பற்றிய கதை. நகரத் தெருக்களில் ஒன்றில் புதிதாக வாடகைக்கு வரும் குழந்தையில்லாத நடுத்தர கணவன்- மனைவி. மனைவியோ நோயில் அல்லாடுகிறவள், கடைக்கு ஏதோவொன்றை வாங்க வரும் கணவர், தன் பின்னாலே வந்த நாயின் நிர்க்கதியைக் கண்டு தூக்கிச் சென்று வளர்க்க ஆரம்பிக்கிறார். தனது காலை மாலை நடைகளில் நாயையும் துணைக்குக் கூட்டிச்செல்கிறார். இதனாலேயே சுற்றுவட்டாரத்தில் நாய் சார் என்ற பெயரையும் வாங்கிக்கொள்கிறார். எடுத்துவளர்த்தாலும், வாசலோடு சரி. வீட்டுக்குள் வருவதில்லை நாய். வெறுமனே உண்ட சோற்றுக்காக வாலாட்டி தன் நன்றிக்கடனை தீர்த்துப் போகாமல் தன் மெய்யன்பை வெளிப்படுத்துகிறது. பழகிய முடிவென்றாலும் சலிப்பு ஏற்படுத்தவில்லை
தொழில் மேதைமைமிக்க ரங்கமுத்து ஆசாரியின் கைவேலைத்திறன் மீது பிரியம்கொள்ளும் சிறுவன் பாபுவுக்கு ஒரு ஆசை. அந்த ஆசையை ஆசாரி நிறைவேற்றினாரா என்பதை தவம்- விவரிக்கிறது.
ஆண்டாண்டு காலமாக ஒருவருக்கு சவரம் செய்யும் நாராயணன் என்னும் சவரத் தொழிலாளிக்கும், அவரது சேவையை அனுபவிக்கும், கதைநெடுக பெயர் சொல்லப்படாத தாத்தா என்பவரின் குடும்பத்துக்குமான பிணைப்பைப் பேசுகிறது பிரியம் சிறுகதை. தாத்தா- பாட்டிக்கு நாராயணனிடம் பிரியம் இருக்கிறது. நாராயணனிடமோ, தாத்தா மேலான மாறாத விசுவாசம் இருக்கிறது. வெறும் தொழில் பரிட்சயமாய் முடிந்துபோகாமல், இருவரும் ஒருவரையொருவர் தம் மனதில் ஒரு இடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். கதையின் முடிவை விடவும், இவர்கள் இருவரின் பிரியத்தைச் சொல்லும் இடங்கள் கதையில் சிறப்பாக அமைந்திருக்கிறது.
வாழ்வென்னும் பெருந்துயர், மகாபாரதப் போரில் கலந்துகொள்ளும் வீரன் ஒருவனின் மனைவியை கதாபாத்திரமாக வைத்து எழுதப்பட்ட கதை. மகாபாரதப் போரில் உயிர்துறந்த லட்சக்கணக்கான வீரர்களையும் போருக்குப் பின் அவர்களது மனைவிகளின் கதியென்ன என்ற கேள்வியையும் மையமாக வைத்து, சில கேள்விகளை வசமாக எழுப்பவரும் நாயகி, திரெளபதியைக் கண்டதும் வாயடைத்து நின்றுவிடுகிறாள். ஏன்…
இந்தத் தொகுப்பின் சிறப்பான கதைகளிலொன்றாக வாசம் சிறுகதையைச் சொல்லலாம். தன் மருமகளாக நிர்மலாவை கற்பனை செய்துவைத்திருக்கிறாள் தியாகுவின் அம்மா. வாழ்வில் நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன… அத்தை மகளான நிர்மலாவுக்குப் பதில் வேறொருத்தியைக் காதலித்து மணந்துகொண்டு போய்விடுகிறான் தியாகுவின் அண்ணன் சிவா. வேறொருவனை மணந்துகொண்டு அதே ஊரி்ல் வாழும் நிர்மலா, நோய்மையின் பிடியில் வீழும் தியாகுவின் அம்மா மீது கொண்டிருக்கும் பிரியமும், தன் மருமகளாக வராதபோதும் நிர்மலா மீதான இவளின் மாறாத அன்பும் வாசமாக கமழ்ந்திருக்கிறது கதையில்.
மெத்தை என்பது கனவாக மட்டுமே அமையக்கூடிய துரைராசுவுக்கு, தன் பாட்டி வேலாயியின் உடல்நலக்குறைவால் வீட்டுக்கு வந்தமைகிறது மெத்தை. பள்ளி வரை மற்றவர்களிடம் பெருமை பேசும் பொருளாய் ஆன அந்த மெத்தையில் அவன் அமரவும், புரளவும், படுத்துறங்கவும் கனவு காண்கிறான். அவன் கனவு என்ன ஆனது என்பதை மெத்த கதை பேசுகிறது.
மற்ற கதைகளிலிருந்து இயற்கை கதையின் உள்ளடக்கம் சற்று மாறுபட்டது. விடியக் காத்திருக்கும் காஞ்சனா, தன் கணவன் சபாபதியுடனான வாழ்க்கையை அந்த இரவில் தொகுத்துப் பார்க்கிறாள். மனைவியாக வந்ததிலிருந்து, அவர் மீதான ஈர்ப்பும் விலகலும், கருத்துவேறுபாடும் அந்த மொத்த வாழ்க்கையின் அர்த்தமும் அர்த்தமின்மையும் அவளுக்குள் ஓடுகிறது. விடியலுக்காக காத்திருக்கையில் அவள் மனதில் ஓடுபவையும், அந்த நினைவுப்பெருக்கு எதனால் என்பதுமே கதை.
கோவிலின் மூலையில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கும் லிங்கத்தின் இருப்பு பள்ளிச் சிறுவனா… இளைஞனா என்று தெரியாத கதைநாயகனை உறுத்த, அதை அறிய வரும் கறிவெட்டிச் சம்பாதிக்கும் இதயத்துல்லா, தினமும் லிங்கத்துக்கு மல்லிகை வாங்கிச் சார்த்த காசு தருகிறார். கண்டுகொள்ள ஆளில்லாத ஈஸ்வரனுக்கான விமோசனத்தை இதயத்துல்லா கையில் அளிக்கிறார் கிருத்திகா.
மிகச் சிடுக்கான தர்க்க விசாரணைகளோ, சாதாரண வாழ்க்கையில் தட்டுப்படாத கதைக் கருக்களோ, மூளையைச் சோர்வடைய வைக்கும் எழுத்து நடையோ எதுவுமில்லாமல் எளிய கதைகளின் வழி வாசகனை, தன் கதையில் ஈர்த்து நிறுத்தும் சூட்சுமம் கிருத்திகாவுக்குத் தெரிந்திருக்கிறது. சாமான்யர்களின் கதைகளென்றாலும்… கதைகள் சாமான்யமானவையல்ல!