கவிச்சுவையின் அடிப்படையில் கம்பராமாயணத்திலேயே பல பாடல்களைக் கம்பன் எழுதியிருக்க வாய்ப்பில்லை என ஒதுக்கி வைத்துள்ளோம். சொல் நயமும் பொருள் நயமும் குறைந்த, கவிராயத்தனம் கமழும் சில தனிப்பாடல்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒரு பேராசிரியர்கூட அவை கம்பனுடையதல்ல என்று சொல்லிவிடக் கூடும். அத்தகைய பாடல்களையும் கலைச் சிகரமென தலைமேல் ஏத்தும் புதுமைப்பித்தனுக்கு தமிழில் கவிதைகள் துவங்குவதே சங்க காலத்திற்குப்பின்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. குறுந்தொகையும் கலித்தொகையும் எல்லாம் அவருக்கு வெறும் யதார்த்த விஸ்தரிப்புகள் – கலைத்தன்மையே இல்லாத போட்டோபிடிப்புகள். கலை என்று புதுமைப்பித்தன் எதை நினைக்கிறார்? கலை என்பதே அதில் எழும் உணர்ச்சிகள் மட்டுமே என்பது புதுமைப்பித்தன் தரப்பு. சங்கக் கவிதைகளின் உணர்ச்சிக் கொந்தளிப்பை நாம் அறிவோம். புறச்சூழலை வைத்தே அகத்தைக்காட்டுதல், நுண்மையான உணர்வுகளைக் கூறுதல் முதலிய சங்க கவிதைகளின் இயல்புகளை தன் கதைகளில் புதுமைப்பித்தனும் பாவித்திருக்கிறார். இருந்தும் ஏன் புதுமைப்பித்தன் சங்கக் கவிதைகளை வெறும் புகைப்படங்கள் என்று நிராகரிக்கிறார்?
அதற்கு புதுமைப்பித்தன் காலத்திய புகைப்படங்களிலிருந்து துவங்க வேண்டும். அன்றைய புகைப்படங்கள் வெறும் நினைவுச் சின்னங்களாகவும் செய்தி ஊடகத்தின் ஒரு பகுதியாகவும்தான் இருந்தன. கலையல்ல ― ஆவணத்தன்மையே அவற்றின் முதன்மை இயல்பு. ஒரு சட்டகத்தில் உள்ள காட்சியைக் கலையாக்கும் ஆதார இயல்பான ‘படிமமாதல்’ நிகழாத புகைப்படங்களையே புதுமைப்பித்தன் சங்க இலக்கியங்களுக்கு உவமையாக்குகிறார்.
மேலும், ஒரு புகைப்படத்தை ஆவணமாக நிலைநிறுத்த அதன்மீது இடப்படும் விளக்கச் சங்கிலிகள் அப்புகைப்படத்தைப் படிமமாக எழவிடாமல் தடுக்கவும் வாய்ப்பு உள்ளது. அல்லது இவ்வாறும் சொல்லலாம். அடிக்குறிப்புகளையும் விளக்கங்களையும் கடந்து தன்னளவில் நிற்கும் புகைப்படங்களே கலையின் தகுதியைப் பெறுகின்றன. சங்க கவிதைகள் மீது நிகழ்த்தப்பட்ட அடிப்படை வாசிப்பே திணையையும் துறையையும் நிர்ணயிப்பதுதான். அவை ஒருவகைத் தலைப்புகள், விளக்கக் குறிப்புகள்.
புதுமைப்பித்தன் கவிதைக்குத் தலைப்பு வைப்பதற்கு எதிரியா? இல்லை. கம்பனிலிருந்து பாரதிதாசன்வரை புதுமைப்பித்தன் ரசித்த எல்லாக்கவிதைகளும் தலைப்பிடப் பட்டவையே. அந்தத் தலைப்புகள் எல்லாம் கவிதையின் உள்ளடக்கத்தைக் குறிக்கும் வகையில் இருக்கின்றனவே அல்லாமல் கவிதையிலிருந்து நாம் அடையவேண்டிய உணர்வுகளையும் அனுபவங்களையும் பட்டியலிடுவன அல்ல. பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு’ பாரதி பற்றவைத்த விடுதலைப் போருக்கான முதல் தீப்பொறியாக பலகாலமாக வாசிக்கப்பட்டாலும் இன்னும் பலவகையிலும் அக்கவிதையை வாசிக்க இடமிருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது. கம்பன் காவியத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் தலைப்பிருந்தாலும், அவை பாடல்களின் உள்ளடக்கத்தைக் கூறுவது மட்டும்தான். ஆனால் புதுமைப்பித்தன் படித்த சங்க நூல்களின் கறாராக வகுக்கப்பட்ட திணைகளும் துறைகளும் அனைத்து அனுபவங்களையும் ஐந்து பெட்டிகளுக்குள் ஒடித்தும் மடித்தும் திணிக்க முயல்பவை. கூடுதலாக, அவற்றின் தாளமோ உணர்வைத் தூண்டுவதில்லை. அரிய சொல்லாட்சிகளோ மனத்தவிப்பை நேரடியாக முன்வைப்பதைவிட சூழல் வர்ணனைகளில் வீணாகுபவை.
திணையையும் துறைகளையும் வைத்து மட்டும் ஓர் அகத்துறைப் பாடலை வாசிப்பது என்பது ஆயிரம் ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாசிப்புமுறை மட்டுமே. கூட்டு வாசிப்புக்கான இந்தமுறை கற்பனையின் சிறகடிப்பைப் பொருட்படுத்தாது, பழம்பட்டியல் ஒன்றில் உள்ள நயங்களுள் எத்தனை ஒரு பாடலில் விழுந்துள்ளது என சில்லறை எண்ணிச் சரிபார்ப்பது மட்டும்தான். வகுக்கப்பட்ட பாதையிலிருந்து பெரும்புலவனையும் ஓர் அடிகூட விலகிவைக்க விடாதது இம்முறை. எத்தனைக் கதைகள்! துமி என்றும் திகட சக்கரம் என்றும் பதங்கள் இல்லை என்பதிலிருந்து ராமகதையினுள் எப்படி இரணியன் கதை வரலாம் என்பது வரை. இவைபோன்ற முட்டல்களில் எப்போதும் இறுதியாக வெல்வது புலவனின் கற்பனையாகவே இருந்தாலும் அம்மீறலும் உடனடியாக ஏற்கனவே இருந்த பட்டியலின் அங்கமாக சேர்க்கப்பட்டு விடுகிறது. அத்தகைய வாசிப்பு ஒன்றிலிருந்து உடனடியாக வெளிவந்து நவீன கவிதைகளின் முன்தொடர்ச்சியாக சங்க இலக்கியங்களை வாசிக்க வேண்டும் என இலக்கிய முன்னோடிகள் சொல்வதுதான் எனக்கும் உவப்பானது.
குறுந்தொகையின் முதற்பாடல் இது.
செங்களம்படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல்தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
– திப்புத்தோளார்
[போர்க்களம் சிவக்கும்படிக் கொன்று அசுரரை அழித்த
அம்பும் யானையின் கொம்பும் சிவக்க
கழல் அணிந்த முருகனின் குன்றில்
குருதிப்பூவான காந்தள் நிறைந்துள்ளது]
அகப்பாடல்களில் அபூர்வமாக வெளிப்படும் தாளமோ, மனதவிப்பின் கண்ணீர் கொப்பளிக்கும் உணர்ச்சிகர சொற்களோ இல்லாத இப்பாடலுக்குத் திணை குறிஞ்சி. ஆகவே கூடலும் கூடல் நிமித்தமாகவும் மட்டுமே வாசிக்க வேண்டும் என்பது புலவர்தம் பாடம். எனவே, தலைவன் கூடலுக்காகக் கொடுத்த கையுறையை மிகுதிக்கண் மறுத்துத் தோழி் சொன்னது என்பது துறை. ஏன் தோழி? குறிஞ்சியின் தலைவி கூடலை மறுக்க முடியுமா? கூடலை மறுப்பதற்காகத்தான் இன்னொரு துறையைத் தலைவிக்கு கொடுத்துள்ளோம் அல்லவா. எவ்வளவு சிறிய சட்டகம். உண்மையில் இது காந்தள் பூத்த குன்றல்ல – அதன் புகைப்படம் மட்டும்தான். அதுவும் என்னவாக பொருள் கொள்ள வேண்டும் என்று கொட்டை எழுத்தில் எழுதி வைக்கப்பட்ட புகைப்படம்.
துறைப் பகுப்பே வேண்டாமா? எத்தருணத்தில் யாரால் யாருக்குச் சொல்லப்பட்டது என்பதுதான் துறை பகுப்புக்கு அடிப்படை. அதாவது கவிதையின் கூற்றுக்கு ஒரு சூழலை (context) உருவாக்கி அளிப்பது. கணிசமான நவீன கவிதைகளில் இப்பணியை ஆற்றுவது அதனதன் தலைப்புகளே. கவிதை ரசனைப் பதிவென்பதே அக்கவிதைக்கு நாம் அளிக்கும் சூழலை விவரிப்பதே. கவிதையின் பேசுபொருளையோ அல்லது சொற்களின் பின்னுள்ள உணர்வுகளையோ தொட்டுக்காட்டாத கவிதை ரசனைகுறிப்புகள் எவையேனும் தமிழில் உள்ளனவா? ஒட்டுமொத்தமாக துறை பகுப்புகளை நிராகரிப்பதைவிட, அவரவர் சொந்த வாசிப்பை முன்வைக்கும் ரசனைக்குறிப்புகளாக அவற்றைக் கருதுதலே நலம். ஏற்கவும் விலக்கவும் தன் ருசிக்கேற்ப மாற்றிக்கொள்ளவும் இயலக்கூடிய துறைகள். ஒவ்வொரு வாசகனுக்கு இந்தக் கவிதையை இவ்வாறு வாசித்தேன் என அந்தரங்கமாக இன்னொருவனிடம் சொல்வதுபோல ஆகவேண்டும் துறைகள்.
கருத இன்னொன்றும் உள்ளது. ஒரு கவிதையில் படிமமாக எழும் பொருளொன்றின் கோணங்கள் ஒட்டுமொத்த சங்கக் கவித்தொகையில் எவ்வாறெல்லாம் துலங்குகிறது என்பது. அதாவது இப்பாடலில் காந்தள் வெறும் குருதியின் மலராகச் சொல்லப்பட்டிருப்பினும் பிற பாடல்களில் எவ்வாறெல்லாம் பூத்துள்ளது என்பதை அறிதல்.
காந்தள், கோடல், தோன்றி ஆகிய மலர்களைக் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் தனித்தனியாக குறிப்பிடுகிறார். காந்தளும் கோடலும் பிற சங்கப் புலவர்களாலும் நச்சினார்க்கினியராலும் ஒன்றை ஒன்று குறிக்கப் பாவிக்கப்பட்டுள்ளது. பிங்கல நிகண்டு, சேந்தன் திவாகரம் முதலிய பிற்கால நூல்களில் கோடலும் தோன்றியும் காந்தளின் வேறு பெயர்கள் என்றே குறிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, இவை காந்தளின் வெவ்வேறு வகைகளைக் குறிக்கலாம்.
காந்தள் குருதியின் மலர் மட்டும் அல்ல நெருப்பின் தீச்சுடரின் மலரும்தான். மழைக்காலத்தில் மலர்வது. பெண்களின் கைக்கும் விரல்களுக்கும் உவமிக்கப்படுவது. பெண்களின் கைவளை போன்று இருப்பது. செம்பவழமும் ஆனது. படமெடுக்கும் பாம்பாகவும் பார்க்கப்படுவது. காந்தள் எப்பொழுதும் குலைதான் – நெஞ்சக்குலை என்பது இதயம். மலர்வதற்கு முன்னிருக்கும் காந்தள்முகை எதிரியைக் கொன்ற யானையின் கொம்புபோல நுனி மட்டும் சிவந்தது. அதனாலேயே தீக்கடைக்கோல் போலவும் காட்சி தருவது. சேவலின் கொண்டை போன்ற மலர். வேலன் வெறியாட்டின் போது சூடும் மலர். முருகனின் அடையாளப்பூ. மடலேர்தலின் போது தலைவன் சூடும் பூ. மஞ்சள் நிற மகரந்தத்தை அதிகமாகச் சொரிந்து சூழ்பனவற்றைப் பொன்னாக்கும் பூ. காந்தள் முகையில் வண்டு அமர்ந்தவுடன் மலர் விரியும். மலர் ஒன்றுதான். பார்க்கும் கண்கள் பல அல்லவா?
சரி. மேலே குறிப்பிட்ட திப்புத்தோளாரின் பாடலை எங்கிருந்து துவங்குவது? ஏன் இப்பாடல் தோழியின் கூற்றாக இருக்க வேண்டும்? வேறு மக்கள் சொல்லியிருக்க வாய்ப்பேயில்லையா?
ஒருக்கால் இது தலைவியின் கூற்றாக இருந்தால், காந்தள் நிறைய இருக்கிறது என்று சொல்பவள் யாருடைய இடத்தில் நிறைய இருக்கிறது என சொல்கிறாள்? எங்கள் மலையில் காந்தள் நிறைந்துள்ளது. கொடுக்கவும் ஆளுண்டு எனவே, தலைவன் தேவையில்லை என்று சொல்கிறாளா? எங்கள் மலையில் பூத்த காந்தள் எல்லாம் எதிரியின் குருதி. ஆகவே, தலைவன் அவளை எண்ணவும் வேண்டாம் என்கிறாளா?
வண்டு தொட்டவுடன் மலரும் பூ போல போர் வென்ற வீரனைக் கண்டவுடன் மலர்ந்த தலைவியின் மனம்தான் அந்த மலையா?
முருகனின் மலை என்பதால் அது தலைவனின் மலையா? தலைவனின் மலையென்றால் அங்கு பூக்கும் காந்தள் எது? வேறுசில பாடல்கள் சொல்வதைப் போல காந்தள் என்பது பெண்களின் கரமா? தலைவனைச் சூழ்ந்துள்ள பெண்களின் கரங்களே தான் வருந்தக் காரணம் ― தலைவனுக்கோ அவை மலர்கள் என்கிறாளா? மழைக்காலத்தில், எரியும் தீ என காந்தள் அவன் குன்று நிறைந்து மலரும் போதுதான் என் நினைவு அவனுக்கு வந்ததா என்கிறாளா?
தலைவன் எனக்குத் தருவது அவன் மலை நிறைந்து பூத்த மலர்களுள் ஒன்றை என்கிறாளா தலைவி? ஒருபோதும் பலர் அடையக்கூடிய ஒன்றில் நிறைவுற மாட்டேன். அவன் தன் தலை கொடுத்தாவது பெற்றுத்தரும் தேவமலர் ஒன்றே தான் கொள்ளத்தக்கது என்கிறாளா?
அல்லது தலைவனும் தலைவியும் கூடி வாழும் குறிஞ்சிமலையின் பூவா காந்தள். சேவல் என மலை நிறைந்து கூவுகிறதா காந்தள்? காந்தள் சொரியும் மகரந்தம் என அவர்கள் காதலினால் உலகமே பொன்னாகிறதா?
ஏன் இப்பாடல் தலைவன் தலைவியிடத்துச் சொன்னதாக இருக்கக்கூடாது? தன் வீரத்தைச் சொல்கிறானா அவன்? நீ பிறந்தகுடியை வெல்லத்தக்கவன் நானே என்கிறானா? உன்னை வெல்வதற்கான போரில் சிந்தப்பட்ட ரத்தம் எல்லாம், பின்னர் உன்னால் மலரென உணரப்படும் என்கிறானா? முருகனைப்போன்ற உன் குடியின் வீரர்களை நான் வெல்வேனோ என்றஞ்சியும் நான் வென்றால் உன்குடி தோற்குமே என்று வருந்தியும் உன் நெஞ்சகக் குருதி பெருகியதே உன் மலையின் சிவப்பு என்கிறானா?
தலைவன் மலையின் பெண்கள் எல்லாம் அவன் குருதியில் பிறந்தவர்கள். ஆகவே நீயே எனக்குத் துணைவி என்கிறானா? அவன் மலைமுழுதும் நிறைந்திருப்பது செம்பவழம் என்கிறானா?
இன்னும் யார்யாரின் கூற்றாகவெல்லாம் இருக்கலாம்? தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறானா? போரில் வென்ற பின்னர் குருதி படிந்த அம்பையும் யானைக்கொம்பையும் பார்த்து, இவைபோன்ற மலர் நம் குன்றில் முகிழ்க்கும் கார்காலம் வந்துவிட்டதே, விரைந்து செல்க என்கிறானா?
தலைவன்பால் அன்பு கொண்ட தலைவியிடம் தாய் தலைவனைப் பழித்துரைக்கிறாளா? ஒருபோதும் போரினால் குருதி உலராத குடியில் ஒருவனையா நீ உளங்கொள்ள வேண்டும் என்கிறாளா? அங்கு சென்ற பெண்களின் நெஞ்சமெல்லாம் பூத்துள்ளது குருதியின் பூவே என்கிறாளா? அவன் ஊரெங்கும் படமெடுக்கும் பாம்புகளே நிறைந்துள்ளன என்கிறாளா?
பெண்மணம் புரிந்த காதலனை நினைத்துத் தலைவன் சொல்வதாகுமா? உன் போர் வெற்றியைக்கண்டு பெண்களும் உன்னை விரும்பினர். நீயும் குடிக்கொருத்தி மனத்துக்கொருத்தி என இருவரை மணம் புரிந்தாய். அதை எண்ணி எண்ணிப் பெருகும் என் கைக்கிளையின் குருதியே உன் மலையை சிவக்கச் செய்யும் காந்தளின் மலர் என்கிறானா? நான் உன்னை உரிமை கொள்ள வாய்ப்பேயில்லை என்றாலும் என் நெஞ்சுக்குலையே உன் மலையெங்கும் பூத்து பரவியுள்ளது என்கிறானா?
இவையேதும் இல்லாமல் போரைத் தவிர்க்கச்சொன்ன அறவோன் ஒருவரின் சொல் கைமறதியாக அகத்துறைப் பாடலாகக் குறிக்கப்பட்டதா? அரசே, உனது குன்றில் அரக்கரைக் கொன்றழித்துக் குருதி படிந்த அம்பினைப்போல, இரத்தம் தோய்ந்த யானையின் கொம்பினைப் போல முகிழ்த்திருந்த காந்தள் மலர்ந்தவுடன் குருதிப்பூவாகவே ஆகிவிட்டது என்றாரா? போர்வெற்றிக்குப்பின் குருதிபூசிய அம்புடனும் கொம்புடனும் நீ ஊர் நுழைகையில் ஒலித்தது வேண்டுமானால் வெற்றிமுழக்கமாக இருக்கலாம். ஆனால் இப்போதும் ஒலிப்பது கணவனை இழந்த பெண்களின் குமுறல் மட்டுமே என்றாரா? இம்மலை நிறைந்துள்ள தீக்கடைக்கோல்களிலிருந்து எழும் தீ என்றேனும் இம்மலையை அழிக்கும் என்றாரா?
இவற்றுள் சில மிகைவாசிப்புகளாகவும் குறைவாசிப்புகளாகவும் இருந்தாலும் பதினைந்து சொற்களுக்குள் எவ்வளவு உணர்ச்சிகள்? ஒருவேளை, சிவப்பை புகைப்பட சிறுமலரின் நிறமாக அல்லாமல் மதம் கசிய தலை குலுக்கி வரும் யானையின் கொம்பில் சொட்டும் குருதித் துளியாக புதுமைப்பித்தன் பார்க்க நேர்ந்திருந்தால், “அடடே! இந்த போட்டோவும் ஒரு கலைதானோ” என்றிருப்பார் குரல்வளை உந்த சிரித்தபடி.
***
அடிக்குறிப்பு:
காந்தள் – உவமங்களும் உவமேயங்களும் பிறவும்
*குருதியின் மலர் ― நற். 34, 399; முல்லை. 96
*நெருப்பின் மலர் ― தோன்றி மட்டுமே நெருப்பின் மலராகச் சொல்லப்படுகிறது.
*மழைக்காலத்தில் மலர்வது ― பரி. 14
*பெண்களின் கையும் கைவிரல்களும் ― கலி. 40, 59; பரி. 19; பட்டி. 153-4; ஐங். 293; சிறுபாண். 167; பொருநர். 33; குறுந். 167.
*பெண்களின் கைவளை ― புறம். 90; மலை. 519.
*செம்பவழமும் ― பரி. 4
*படமெடுக்கும் பாம்பு ― குறுந். 239; அகம். 138,154.
*எதிரியைக் கொன்ற யானையின் கொம்பு ― நற். 294; கலி. 53
*தீக்கடைக்கோல் ― கலி. 101
*சேவலின் கொண்டை ― குறு. 107
*வேலன் வெறியாட்டின் அடையாளப்பூ ― தொல். பொருள். புறத்திணை 62.
*மடலேர்தலின் பூ ― இளம்பூரணம்
*முருகனின் அடையாளப்பூ ― திருமுருகு. 42
*கடவுள் பூ ― அகம். 152
*அதிக தாது உடையது ― நற்றி. 359
*அரும்பில் வண்டு அமர்கையில் மலரும் பூ ― நற். 399; ஐங்குறு. 226; குறுந். 239, 265; பதிற்று. 67; பரி. 18