முழுக்கோடு வீடு அமைந்தது அப்பாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. அதுவரை அத்தனை பெரிய வீட்டில் நாங்கள் இருந்தது இல்லை. அருமனை,முஞ்சிறை,பத்மநாபபுரம்,கொட்டாரம் எனக் குடியிருந்த வீடுகள் எல்லாமே சிறியவை. சில வீடுகளை பிறருடன் பகிர்ந்தும் கொள்ள வேண்டியிருந்தது. அருமனைக்கு மீண்டும் மாற்றலாகி வந்தபோது அப்பா வீடுதேட ஆரம்பித்தார். அருமனையில் சிறிய வீடுகள்தான் இருந்தன. ஒரு கட்சிக்காரர் வில்லங்கத்தில் கிடந்த முழுக்கோடு வீட்டை சுளுவாடகைக்கு எடுத்துத் தருவதாகச் சொன்னார்.
அருமனையில் அப்பாவின் ஆபிஸில் இருந்து நான்கு கிலோமீட்டர் துாரத்தில் இருந்தது அணியாட்டு வீடு. கிராமம் முழுக்கோடு, நுாறு வருடப் பழைமை கொண்ட வீடு அது. மரத்தாலான மூலவீடு. அதைச் சுற்றி பெரிய அறைகள் இணைக்கப்பட்டிருந்தன. எடுத்ததுமே ஒரு பெரிய கூடம். அதில் நாங்கள் ஊஞ்சல் கட்டி ஆடுவோம். அழிபோட்ட முகப்பு. அதற்கு அப்பால் மர வீட்டின் வராண்டா. மரத்தாலான இரு வைப்பு அறைகள். ஒரு படுக்கையறை ஒரு பத்தாயப்புரை.
மர வீட்டின் வலப்பக்கம் இணைக்கப்பட்டதாக இன்னொரு மாபெரும் கூடம். ஐம்பது பேர் சாதாரணமாகப் புழங்கலாம். இன்றைய வழக்கில் உணவுக்கூடம். அன்று அதுதான் பெண்களின் உலகம். அதையொட்டி சமையல் அறை. கிணற்றடி அறை. அதிலிருந்து மேலும் கலந்து சாய்ப்பு எனப்படும் புழக்கடை அறை. அதில் உரல், ஆட்டுரல், சருகு அடுப்பு முதலியவை. பிறகு வெளியே தனியாக இரு கூரைக்கட்டிடங்கள். ஒன்றில் சாம்பல் குழியும் விறகு அடுப்புகளும். அதற்கு விறகுப்புரை என்று பெயர். இன்னொன்றில் நெல் அவிக்கும் அடுப்பும் பெரிய இரு நெல்லுரல்களும் ஏணி போன்ற பொருட்கள் வைக்கும் வசதியும். அதற்கு நெல்லுபுரை என்று பெயர்.
மொத்தத்தில் அது ஒரு உதாரண நாயர் தரவாட்டு வீடு. அணியாட்டு குடும்பம் சிதறிப்போய், நிலங்கள் பாட்டக்காரர்களால் கைவசப்படுத்தப்பட்டு, நீதிமன்ற வழக்குகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்தது. அந்த வீடு எட்டேக்கர் விரிவுள்ள தோட்டம் நடுவே இருந்தது. அதில் முந்நுாறு தென்னை மரங்கள், ஏராளமான மாமரங்கள், பலா மரங்கள், இலஞ்சி,அத்தி, சணாத்தி, கொன்றை,பூவரசு மரங்கள். ஒரு குட்டிக் காடு. பெரிய முகப்பு முற்றம்.அதேயளவு பெரிய புழக்கடை முற்றம். இரண்டையும் சேர்த்தால் வருமளவுக்கு பெரிய அறுத்தடிக் களம்.தோட்டம் ஒரு குத்தகைதாரரின் பராமரிப்பில் இருந்தது.
அப்பாவுக்குள் இருந்த குல நாயர் மெல்ல வீறு கொண்டு எழு ஆரம்பித்தார். அப்பாவின் அப்பாவுடைய சொந்த ஊர் திருவரம்பு. அங்கே அவர்களுக்குச் சொத்துகள் இருந்தன. அவர் திருவட்டாறு கோயிலடி வளாகத்தில் லட்சுமிக் குட்டியம்மாவை மணந்து அப்பாவைப் பிறப்பித்ததுமே இறந்து விட்டார். பாட்டி அதன்பிறகு மேலும் திருமணம் புரிந்து மேலும் குழந்தைகளுக்குத் தாயானாள். அப்பாவுக்கு சிறு வயதிலேயே அவரது அம்மாவுடன் ஒத்துப்போக முடியவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அப்பா வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
அதன்பிறகு அப்பாவுக்கு என வீடு இருந்ததில்லை. டியூஷன் ஆசிரியராகப் பல வீடுகளில் ஒண்டிக்கொண்டார். கேரள அரசு ஊழியரானார். பிறகு தமிழக அரசு ஊழியரானார். அவருடைய அகத்தில் தன்னுடைய அப்பாவின் சொத்துக்கள் முழுக்க அன்றைய பெண்வழிச் சொத்துரிமை முறைப்படி மருமகள்களுக்கு கைமாறி பலவாறாகச் சிதறிப் போய்விட்டதனால் அப்பாவுக்கு திருவரம்பு வயக்க வீட்டில் ஒரு வகையான உரிமையும் எஞ்சியிருக்கவில்லை. குடும்பத்தின் பொதுச் சுடுகாட்டு நிலத்தில் கூட அவருக்கு உரிமை இருக்கவில்லை.
இருந்தாலும் அப்பா திருவரம்புக்கு அடிக்கடிச் சென்று வருவார். திருவரம்பு மகாதேவர் ஆலயத்தில் நடக்கும் திருவிழாக்களுக்கும் சிறப்பு பூஜைகளுக்கும் சென்று சாமி கும்பிடும் பாவனையில் ஊரையும் ஊராரையும் பார்த்து வருவாா். அப்பாவின் பள்ளித்தோழர் நாராயணன் போற்றி திருவரம்பு மகாதேவர் கோயிலின் பூசாரியாக கோயிலருகே குடியிருந்தார். அங்கே போய் போற்றியுடன் விளையாடிவிட்டு வருவார். மானசீகமாக அப்பா திருவரம்பு ஊரில்தான் வசித்தார்.
முழுக்கோட்டு வீட்டை அப்பா மெல்ல மெல்ல தன்னுடைய அந்தரங்க கனவான தரவாடு ஆக மாற்ற ஆரம்பித்தார். கொல்லைப் பக்கம் ஒரு தொழுவம் கட்டி நாலைந்து பசுக்களை வாங்கி விட்டார். அது அவருடைய நெடுநாள் திட்டம். அதன்பின் பாதி வாழ்நாளை அவர் தொழுவத்தில்தான் கழித்திருக்கிறார். இரவு நெடு நேரம் வரை மாடுகளுக்கு உண்ணி பொறுக்கியும், தடவி விட்டும் தொழுவத்திலேயே இருப்பார். தொழுவத்தில் ஈஸிசேர் போட்டு அமரக் கூடிய ஒரே ஆள் நானறிந்த வரை அவர்தான்.
அப்பா நாய் வளர்க்க ஆரம்பித்தார். சேமித்த பணத்தில் வயல் வாங்கினார். எட்டுக்கீலோமீட்டருக்கு அப்பால் திருவரம்பில் வயல் வாங்கி அவரே நேரடியாக விவசாயம் செய்ய ஆரம்பித்ததை ஊரில் டீக்கடைகள் தோறும் விவாதித்துச் சிரித்தார்கள். அதைப் பாட்டத்துக்கு விட்டுவிடலாமே என்று ஆலோசனை சொல்லப்பட்ட போது அப்பா வாய்நிறைய வெற்றிலையைத் திணித்தபடி மௌனம் சாதித்தார்.அங்கு முதல் முதலில் வயல் அறுவடை செய்தபோது கற்றைகளை மாட்டு வண்டியில் ஏற்றிக் குறுகலான பாதைகளில் பகல் முழுக்க ஓடச் செய்து திருவரம்புக்குக் கொண்டு வந்ததைக் கேள்விப்பட்டவர்கள் நம்ப முடியாமல் பாய்ந்து வந்து எங்கள் வீட்டுமுன் கூடினார்கள்.
அறுவடை செய்தவர்களே கதிரடிக்க வேண்டும் என்பது சாஸ்திரமானதால் திருவரம்பில் இருந்தே ஆட்கள் தனி வண்டியில் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களுக்கு மீன்கறியுடன் சோறு போடப்பட்டது. அறுவடை முடிந்து பத்தாயத்தில் நெல்லைச் சேர்த்தபின் அப்பா பத்தாயப்புரை அருகே ஈஸிசேர் போட்டு அமர்ந்து கனகம்பீரமாக வெற்றிலை நீவி சுண்ணாம்பு தேய்த்து சுருட்டி வாயில் போட்டுக்கொண்டார். “அந்த நெல்லை அங்கிண கதிரடிச்சு வித்துட்டு இங்க நெல்லும் வைக்கோலும் வாங்கினா பாதிக்குப் பாதி லாபமுல்லா?” என்று வீட்டு வேலைக்கு வந்த எஸிலியம்மா கேட்டபோது அப்பா புன்னகையுடன் “நீ போடி மயிரே, இருழிக்க சுகம் உனக்கு என்ன தெரியும்?“ என்றார்.
அதே கேள்வியைக் கேட்டு முந்தின நாள் அடி வாங்கியிருந்த அம்மா “என்ன சொல்கிறார்?” என்று கேட்டபோது எசிலி “அம்மிணியே அவரு இருழி படிக்குதாரு.அதில ரெசம் கண்டுபிட்டாரு. பேடிக்க வேண்டாம்.இப்பம் நஷ்டமானாலும் பிறவு பொன்னு எடுப்பாரு. வெப்ராளப்படாம இருங்க” என்றாள். அம்மா பெருமூச்சு விட்டாள். ஆனாலும் அம்மாவுக்கு ஆறவில்லை. விவசாயியின் வீடு என்ற தோரணையை அந்த வாடகை வீட்டில் உருவாக்குவதற்காக அப்பா பணத்தை அள்ளி இறைத்தார். இருபத்து நான்கு பழுதுள்ள ஒரு பெரிய ஏணியை வாங்கிக்கொண்டு வந்து திண்ணையில் கட்டித் தொங்கவிட்டார். அது தென்னைமரம் ஏறுவதற்குரியது, தென்னை மரங்கள் எதுவும் எங்களுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. வீட்டுக்கு முன்பக்கம் பெரிய வைக்கோல்போர் கூட்டப்பட்டது. எருக்குழி வெட்டப்பட்டது. கடைசியில் அப்பா ஒரு பெரிய கலப்பையை வாங்கிக்கொண்டு வந்து விட்டுமுன் வைத்ததும் முழுக்கோட்டில் அவர் ஒரு வாழும் தொன்மமாக ஆனார்.
அப்பா படுசிக்கனம். என்னுடைய அப்பா ஆனதனால் அப்படிச் சொல்கிறேன். வேறு ஒருவர் என்றால் கஞ்சன் என்று சொல்வேன். டீக்கடையில் ஒரு வடை சாப்பிடுவதாக இருந்தால்கூட முதலில் விலை கேட்டபிறகுதான் கையில் எடுப்பார். வீட்டில் அம்மாவும் சிக்கனம்தான். அக்காலத்தில் கிராம வாழ்வில் எல்லாமே மலிவு. அத்துடன் பத்திரங்களைப் படித்து சட்ட ஆலோசனைவழங்குவது அப்பாவுக்கு உபரிவருமானம் தரும் தொழிலாகவும் இருந்தது. சிறுகச்சிறுகச் சேமித்து திருவரம்பை ஒட்டி நிலங்களை வாங்கினார். வில்லங்க நிலங்களை ஆராய்ந்து வாங்கி நீதிமன்றச் சிக்கல்களைத் தீர்த்து எடுப்பதில் அவர் நிபுணர்.
அப்பாவின் குடும்ப வீட்டை ஒட்டிய நிலத்தை வாங்கியது அவருடைய வாழ்க்கையின் பெரு வெற்றி. அவரது குடும்பப் பெயர் வயக்கவீடு. வீடடின் பெயர் “கணபதியம் விளாகம்” அப்பா பெருமிதத்துடன் என்னையும் அண்ணாவையும் அழைத்துக்கெதாண்ட அந்த நிலத்துக்குப்புானார். தென்னைமரங்களை ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தார். அந்த நிலத்தில் அவர் உலவுமபோது நிலவில் ஆம்ஸ்ட்ராங் உலவுவது போல இருக்கிறது என்றான் அண்ணா. நான் வேறு பக்கம் பார்த்துச் சிரித்தேன்.
நிலம் வரிவாக ஆற்றை நோக்கி இறய்கி ஆற்றுக்குள் பரவிக் கிடந்தது. அப்பா பணம் செலவு பண்ணி அந்த நிலத்தில் பாத்திகள் கட்டி அதை எழுப்பினார். ஒவ்வொரு நாளும் அங்கே வேலைாயாட்கள் உழைத்தார்கள். புதிய நோட்டுகளைவங்கியில் இருந்து கொண்டு வந்து செலவரழித்தார். அவருக்குக் கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரம் இருப்பதாக ஊரில் வதந்தி பரவியது. விளைவாக அவர் புதிய புதிய ரூபாய் கொடுத்தால் வேலையாட்கள் அவற்றை வாங்க மறுத்தார்கள். அப்பா ஆற்றுவண்டலை வெட்டி, சுமந்து கொண்டு வ்நது கொட்டி எழுப்பிய நிலத்தில் முதன் முதலாக அல்பீஸ் மரங்களை நட்டார். மேல் மண் தொடர்ந்து கரைந்த ஆற்றுக்குள் விழிந்து கொண்டிருப்பதானல் அப்பகுதி நிலங்களெல்லாமே சக்தியிழந்து மரங்கள் தேம்பி நிற்கும். ஆற்று வண்டலை அள்ளிப்போட்டப் பாத்தி கட்டி அதன்மீது அடர்த்தியாக அன்னாசிச் செடிகளை நட்டால் மண் அரிக்காது என்று அப்பா கண்டு பிடித்தார். அல்பீஸ் மரம் மிகச்சிறந்த வணிகப்பயிர் என்பதை நிரூபித்தார் அவர். ஏழுவருடம் கழிந்து அந்த மரங்களை விற்று அதேபோல இன்னொரு தோட்டத்தை அவர் வாங்கினார்.
திடிரென்று ஒருநாள் அணியாட்டு வீட்டின் கோயில் தீர்ப்பு வந்தது. தீர்ப்பு கிடைத்ததுமே அதைப் பெற்றவர் வீட்டையும் நிலத்தையும் விற்றார். வீட்டைக்காலி செய்யும்படி வாங்கியவர் சொன்னார். நான் அப்போது எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அங்கு வந்தோம். அப்பா அப்பகுதியில் விரிவாக வேர்பரப்பி விட்டிருந்தார். நான்கு மாடுகள்,நாய்கள், கோழிகள்,பூனைகள், வைக்கோல்போர், தேங்காய்ப்புரை, நெற்குதிர் எல்லாவற்றையும் இடம்மாற்ற வேண்டும். திருவரம்பு தவிர எங்கம் செல்ல முடியாது. திருவரம்பில் வாடகைக்கு வீடு கிடைப்பது அனேகமாகச் சாத்தியமில்லை.
இரவில் அப்பா ஈஸிசேரில் படுத்து மீண்டும் மீண்டும் வெற்றிலை போட்டார். “டீ” என்றார். அது காதல் அழைப்பு. அப்பா அம்மாவை வாரம் ஒருமுறை அப்படி அழைப்பதுண்டு.இருவரும் சிரித்துக் குலாவிக் கொள்வார்கள்.- சண்டை தொடங்குவது வரை அம்மா சென்று அருகே அமர்ந்ததும் “ஒரு வீட்டைக் கட்டிடலாம்ஏண்டி?” என்றார் அப்பா.அம்மா பிரமித்துப் போனாள். ஒன்றும் சொல்ல முடியவில்லை. “நான் யோசித்துவிட்டேன். நமக்குச் சொந்தவீடு இல்லாமல் முடியாது. ஒருபிளான் போட்டேன்”அப்பா பெட்டியிலிருந்து ஒரு கத்தைத் தாள்களை எடுத்தார். ஏழெட்டு வருடங்களாகவே போட்டு வைத்த கணக்குகள். அதன்படி பத்தாயிரம் ரூபாய்க்குள் ஒரு வீட்டைக்கட்டி விடலாம். “நீ என்ன சொல்றே?” அம்மா சம்மதித்தாள்.
அப்பா மேற்கொண்டு வீட்டைப்பற்றிப் பேச ஆரம்பித்தபோது அம்மா துணுக்குற்றாள். “ஓட்டு வீடா?”இப்போ யார் ஓட்டுவீடு கட்டுகிறார்கள்? டெரஸ் வீடு கட்டுவோம்.””ச்சீ..போடி எரப்பாளி நாயே..” அப்பா பொங்கினார். “குடும்பத்தில் பிறந்தவன் சிமிண்ட் வீடு கட்டுவானா? கோழிக்கூடு மாதிரில்ல இருக்கு அது? மரம் அறுத்து அடுக்கி வீடு கட்டுவது தான் நாயருக்கு மரியாதை. அதெப்படி, நல்ல குடும்பத்தில் பிறந்தால்தானே தெரியும்?” தன் குடும்பத்தைச் சொன்னால் அம்மா கொதித்து எழுவாள்.அப்பா பதிலுக்கு எகிறுவார். வழக்கம்போல அடிதடி. அப்பா பீரோவைப் பிடித்து ஆவேசமாகத் தள்ளினார். அது டமாரென்று சரிந்து விழுந்தது. அம்மா போய் சமையல் அறைக்கதவை ஓங்கி அறைந்தாள்.
ஊரில் உள்ள எல்லாருமே அப்பாவிடம் உபதேசித்தார்கள். டெரஸ் வீடுதான் உறுதியானது, அதுதான் வரும்காலத்தில் மதிப்பு உள்ள கட்டிடம்.செலவும் ஓட்டு வீட்டைவிடக் குறைவுதான். நல்லமரம் போட்டு ஓட்டு வீடு கட்டுவதற்கு டெரஸ் வீட்டை விட அதிகம் செலவாகும். மேலும் அப்படி பெரிய ஓட்டு வீடு கட்டுவதற்குத் தகுதியான ஆசாரிமாரும் இப்போது இல்லை. அப்பா அவருக்குப் பிடிக்காத எதையும் கேட்டதே இல்லை. வெற்றிலை குதப்பியபடி பேசாமல் பார்த்துக்கொண்டே இருப்பார்.
ஓட்டு வீடு கட்டுவதற்குத் தெரிந்த ஆசாரிமாரே இப்போது இல்லையே என்றார் அப்பாவின் நண்பர் கிருஷ்ணபிள்ளை. அப்பா அதையும் பல வருடங்களுக்கு முன்னரே பார்த்து வைத்திருந்தார். அப்பாவின் தேர்வான புண்ணியம் குமாரன் ஆசாரி திருவனந்தபுரத்தில் மகாராஜாவுக்கு ஒருபெரிய ஓட்டு வீடு கட்டிக் கொடுத்தவர் என்றார் அப்பா. அப்பாவின் அப்பா வசித்த பழைய கணபதியம் விளாகத்து வீட்டுக்கு அருகிலேயே இடம்பார்த்தார். ஸ்தானம் பார்த்த அப்பாவின் அண்ணாவும் சோதிடரும் வைத்தியருமான கேசவபிள்ளை “தோஷமில்லை” என்றுதான் மையமாகச் சொன்னார். அங்கே வீடு கட்டுவதென்ற இறுதிமுடிவை அப்பா எடுத்து நெடுநாட்களாகிவிட்டது.
வாஸ்துமண்டலம் போடுவதற்கு குமாரன் ஆசாரியின் அப்பா பாச்சு ஆசாரியை மாட்டு வண்டியில் கொண்டு வந்தார்கள். கிழவருக்கு எண்பது தாண்டிவிட்டிருந்தது. நல்ல திடமான உடல். மார்பில் சோப்புநுரை போல நரை மயிர். கீழ்த்தாடையை மாடு அசைபோடுவது போல ஆட்டும் வழக்கம் இருந்தது, பல்லில்லாத ஈறுகள் அப்போது உள்ளே ஒன்றுடன் ஒன்று வழுக்கி உரசும். வாஸ்து மண்டலத்தை அவர் ஏற்கனவே வரைந்து கொண்டு வந்திருந்தார். வண்டியிலிருந்து இறங்கி மாமரத்தடியில் சிறுநீர் கழித்துவிட்டு திரும்பி மகாதேவர் கோயிலை நோக்கிக் கும்பிட்ட பிறகு ”எங்கயாக்கும் தலம்?” என்றார். அப்பா பவ்யமாக வந்து கிழவரை அழைத்துச் சென்று இடத்தைக் காட்டினார். கிழவர் அப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தார். ”இங்கிண வீடு நிக்காதே நாயரே”என்றார். ”இதாக்கும் நமக்கு வேண்டிய எடம்” என்றார் அப்பா. ”இந்த எடம் வலது எடது மீட்டு கெடக்கு.கெழக்க வாசல் வைக்கப்பிடாது வடக்க வாசல் வச்சா ஐசரியக் கேடுல்லா?” அப்பாவின் கண்கள் மாறுபட்டன. ”இதாக்கும் நான் சொல்லப்பட்ட எடம்” என்றார். மூத்தாசாரி தன் மகனை நோக்கி ”புலையாடிமோனே,எங்கல போன?” என்றார். ”எங்கல வாறதுக்கு?எரப்பாளிக்க மோனே” என்று கிழவர் ஊன்றி வந்த வெள்ளிப்பூண் பிரம்பால் மகனை அடிக்கப் போனார். ”அப்பன் வரணும்” என்று குமாரன் ஆசாரி தந்தையை இழுத்துச் சென்றார்.
வண்டிச்சக்கரத்தின் அருகே நின்று இருவரும் பேசிக்கொண்டார்கள். அப்பா என்னிடம் திரும்பி “வாய் பாத்துட்டு நிக்கறியா? ஓடுடா” என்றார். நான் சற்றே விலகினேன். குமாரன் ஆசாரி வந்து ”அப்பம் காரியங்கள் சொன்னது போல. தறிவச்சுப் போடுவோம்” என்றார். சற்றுதள்ளி எசிலியும் அம்மாவும் நின்றிருந்தார்கள். அம்மா என்னை அழைத்து ஆசாரியை அருகே கூட்டிவரச் சொன்னாள். ஆசாரி சற்று தயங்கியபடிதான் அருகே வந்தார். அம்மா “எந்தா விசேஷம் குமாரா?”என்றாள். “ஒண்ணுமில்லை அம்மிணி. ஒண்ணுமில்லை” ”மூத்த ஆசாரி என்ன சொல்லுறார்?” குமாரன் ஆசாரி அம்மாவைப் பார்க்காமல் ”கிழக்கு பாகத்தில் ஒரு வாசல் கூட வைக்கலாம் என்று அவருக்கு அபிப்பிராயம்” என்றார்.
அம்மா கூர்ந்து நோக்கி “அதாக்குமா அவர் சொன்னது? உள்ளதைச் சொல்லணும்” என்றாள். ஆசாரி “அது மாதிரித்தான்” என்றார். “உள்ளதைச் சொல்லணும் ஆசாரியே” என்று அம்மா மன்றிடும் குரலில் கூறினாள். ஆசாரி “இங்க வீடு நிக்காதுண்ணு சொல்லுதார் அம்மிணி. சாஸ்திரப் பிரகாரம் கிழக்கு வாசல் உள்ள மூலைக்கெட்டு இங்க நிக்கும். இங்க கிழக்கு வாசல் வைக்க வழியில்லை. அதைச் சொல்லுதார்” அம்மா வாயில் கை வைத்தாள். “அம்மிணி பயப்பட வேண்டாம். கிழக்கு பாத்து சாஸ்திரத்துக்கு ஒரு வாசல் வைப்போம்.சாஸ்திரப்படி உள்ள சடங்குகள் எல்லாம் அதில் செய்வோம். வடக்கு வாசல் நம்ம உபயோகத்துக்கு. பிறவு என்ன?”
“சாஸ்திரத்தையும் ஏமாற்றிவிடலாமா ஆசாரியே?” என்றாள் அம்மா. “அம்மிணி இதெல்லாம் பழங்கணக்குகள். இன்னைக்கு இதையெல்லாம் ஆருபாக்குதா? நாகர்கோவிலில் ஓரோருத்தனுக்கு இருக்கப்பட்டது உள்ளங்கை மாதிரி பூமி. அதில அவன் அவனுக்கு வேண்டிய வீட்டைக் கெட்டுதான். என்ன சாஸ்திரம் பாக்க முடியும்?” அம்மா “அது வேற கணக்கு.தெருவுங்கிற அமைப்பு இருந்தா ஒட்டுமொத்த ஊருக்கு வாஸ்து பாக்கணும். இது அப்பிடி இல்லியே”“அம்மிணி நான் சொல்லவேண்டியத சொல்லியாச்சு இனி ஏதாவது உண்டுமானா. பிள்ளைவாள்கிட்ட சொல்லுங்க” . அம்மா “நான் என் பிள்ளைகள் கூட வாழ வேண்டிய எடமாக்கும் ஆசாரியே” என்றாள். ஆசாரி வேறுபக்கம் பார்த்தபடி “அதை அவருக்க கிட்ட சொல்லுங்க” என்றார்.
வாஸ்து குறிக்கப்பட்டது. கன்னி மூலையில் முதல் தறி அறையப்பட்டது. மஞ்சள் பூசப்பட்ட தென்னைமரத்தடியாலான தறியை அப்பா இரண்டு கைகளாலும் எடுத்து மெல்ல நட்டார். எசிலியும் வேறு இரு உள்ளுர்ப் பெண்களும் குலவையிட்டனர். அம்மா இரு கைகளாலும் வாயைப் பொத்தியபடி பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் முகம் அழுவது போலிருந்தது. இருசெங்கல் எடுத்து வைத்து சுண்ணாம்புச் சாந்து வைத்து கட்டியபிறகு அந்த மூலைக்கு வாழையிலையில் பூ,பழம், வெற்றிலை பாக்கு, தீபம் துாபம் வைத்து பூஜை செய்யப்பட்டது. சிவன் கோயிலில் இருந்து பூசை செய்து கொண்டு வரப்பட்ட தேங்காய் உடைக்கப்பட்டது. மஞ்சள் பூசப்பட்ட சரடுக்கண்டு எடுத்து ஒரு நுனியை முதல்தறியில் கட்டி இழுத்து பிற தறிகளை அறைய ஆரம்பித்தார்கள் ஆசாரியும் உதவியாளர்களும்.
வாழைக்கரை வீட்டு கணேசபிள்ளை அப்பாவிடம் “எத்தனை கோல்?” என்றார். அப்பா “இருபது கோல்…சிலப்போ கூடும்” என்றார்.அவர் ஆச்சரியத்துடன் “ஒற்றை புரையாட்டா?” என்றார். அப்பா பெருமித பாவனையில் புன்னகை செய்தார். “அப்பம் உயரம் அறுபதடிக்கும் மேலே வருமே” அப்பா சிரித்தபடி“மாமன் பழைய கணபதியம் விளாகத்து வீட்டைப் பார்த்ததுண்டா?” என்றார். “எங்க? நான் இங்க வாரப்பமே கூரை இடிஞ்சு போச்சே அதுக்கு?”. அப்பா “ம்ம்“ என்றார்.“இந்தத் திருவரம்பிலேயே உயரமான வீடு அது. நாப்பத்தெட்டு அடி உயரம். இது அதைவிட பதினஞ்சடி உயரம் கூடுதல் இருக்கும்” என்றார். கிருஷ்ணபிள்ளை மாமா “அப்பம் அதாக்கும் பிளான்?” என்றார். அப்பா சிரித்தபடி “பின்ன?” இதுக்கு பேரு வச்சு இருவது வருஷமாகுது தெரியுமா?” மனசுக்குள்ள இருக்கு இந்த வீடு’’ என்றார்.
கிருஷ்ண பிள்ளை கணபதி பிள்ளையை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு “என்னவாக்கும் பேரு?” என்றார் . “கணபதியாம் விளாகத்து மேக்கே வீடு” என்றார் அப்பா. “ஐஸ்வரியமுள்ள பேராக்குமே”என்றார் கிருஷ்ணபிள்ளை மாமா. “எல்லாரும் இருந்து சாப்பிட்டுட்டுப் போகணும் மடைப்பள்ளியில் சொல்லியிட்டுண்டு” அப்பா சொன்னார். தரையில் வீட்டின் வரைபடம் சரடுகளும் தறிகளுமாக உருவாகி வந்தது. பலாமரத்தடியில் ஒரு கல்மீது குந்தி அமர்ந்து அப்பா அதையே பார்த்துக்கொண்டிருந்தார். வெயில் படர்ந்த குளத்தின் கரையில் இருப்பவர்போல அவர் முகத்தில் ஒரு ஒளி தளதளத்துக் கொண்டிருந்தது. துாரத்தில் மஞ்சணாத்தி மரத்தின் அடியில் விஜியும் எசிலியும் அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். அம்மா தலை குனிந்து சோர்ந்து அமர்ந்திருந்தாள்.
அந்த வீட்டை அப்பாவால் கட்டி முடிக்கவே முடியவில்லை. பணத்தை இழுத்துக்கொண்டே இருந்தது. நான் காசர்கோட்டில் வேலைக்குச் சென்றபோதுதான் அதன் வேலை பெரும்பாலும் முடிந்தது. பெயிண்டிங் நடந்துகொண்டிருந்தது. அந்நாட்களில்தான் அப்பாவும் அம்மாவும் உச்சக்கட்ட மனக்கசப்பை அடைந்தார்கள். ஒரு நாள் அம்மா துாக்கில் தொங்கினாள். சமையலறையை ஒட்டிய சிறிய வைப்பு அறையில். அதன்பின் அப்பா அந்த வீட்டில் தன்னந் தனியாக ஐம்பத்து ஐந்து நாட்கள் இருந்தார். அதன்பிறகு அவரும் தற்கொலை செய்துகொண்டார்.
அந்த வீட்டை நாங்கள் மூவருமே கைவிட்டோம். அது பாழடைந்து இருண்டுகிடந்தது. அதைத் திறந்து கூடபார்க்காமல் விற்றோம். லாரன்ஸ் பெருவட்டர் அதை இடித்து மரங்களைக் கழற்றி விற்றார். வீடிருந்த இடத்தை சமப்படுத்தி ரப்பர் நட்டார். இப்போது அங்கு ஒரு வீடு இருந்த தடம்’கூட எஞ்சாது. தெரியவில்லை,நான் அப்பா இறந்த பிறகு திருவரம்புக்கே போனது இல்லை.