திருமணங்கள் முடிவாகும் வேகத்தைப் பிற்பாடு நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். விஜிக்குப் பத்தொன்பது வயதாகும்போது அப்பாவுக்குத் தெரிந்த ஒருவர் ஒரு ஆலோசனையுடன் வந்தார். இரணியலில் உள்ள ஒரு குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. பெயர் சுகுமாரன் நாயர். அக்கவுண்ட்ஸ் ஜெனரல் அலுவலகத்தில் கணக்கர் வேலை. சென்னையில் பணியாற்றி முடித்து திருவனந்தபுரம் வந்துவிட்டார்.
அப்பாவுக்கு அதில் பிடித்திருந்த விஷயம் இரண்டு. ஒன்று,பையனுக்கு அம்மா அப்பா இல்லை. பெரியம்மாதான் வளர்த்தார்கள். ஒரே அண்ணா, அவர் சென்னையில் அக்கவுண்டன்டாகப் பணியாற்றுகிறார். இரண்டு, பையனுக்கு வேலையில் இடம் மாற்றம் என்பதே அனேகமாகக் கிடையாது. திருவனந்தபுரத்தில்தான் எப்போதும். ஓடிப்போய்ப் பார்த்துவிட்டு வரக்கூடிய துாரம்தான். கல்யாணப் பேச்சுடன் வந்த வக்கீல் குமாஸ்தா அப்பாவுக்கு நீண்ட நாட்களாகவே நன்கு தெரிந்தவர். அப்பா உடனே சரி என்று கூறிவிட்டார்.
பிளஸ்டூ முடித்துவிட்டு விஜி வீட்டில் இருந்தாள். பிளஸ்டூவைப் பலவிதமாக நொண்டியடித்துத்தான் முடித்தாள். டைப்பிங் படித்தாள். அதிலும் தேறவில்லை. கல்வி அவளுக்குக் சம்பந்தமில்லாத விஷயம். கடைசியில் அவளே சொல்லிவிட்டாள் படிப்புக்கும் தனக்கும் ஒத்துப்போகாது என்று. திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். இற்செறிப்பு என்பது பெண்களுக்கு ஒரே காரணத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. திருமணம் பெரிய விடுதலையாக ஆகிவிடும் அவர்களுக்கு.
விஜியின் திருமணம் குலசேகரத்தில் அப்பு நடேசன் என்பவருடைய கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. பிற்பாடு இவர் இந்து முன்னணி வேட்பாளராக சட்டசபைத் தேர்தலில் நின்று ஜெயித்தார். ஒரு கோயிலும் அவருக்குச் சொந்தமாக உண்டு அங்கே. இப்போது அந்த வளாகம் ஒரு பெரிய மேல்நிலைப் பள்ளியாக மாறிவிட்டது. 1982-ல் திருமணம் நடந்தது, அப்பா எப்போதும் திடமாகவும் நிதானமாகவும் இருப்பவர். ஆனால் அந்தக் கல்யாண விஷயங்களில் மட்டும் நிலை தடுமாறி பதற்றம் கொண்டார். முன்னுக்குப் பின் முரணாக உத்தரவுகள் போட்டார். தேவையில்லாமல் ஆட்கள் மீது எரிந்து விழுந்தார். கடைசியில் மெதுவாக, அண்ணா பொறுப்பை ஏற்றுக்கொண்டார். நயமாக அப்பாவை அனைத்தில் இருந்தும் விலக்கினார்.
அப்பா சோர்ந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து விட்டார். விசிறியால் நான்குமுறை விசிறிக் கொள்வார். விசிறுவதை மறந்து வெற்றிலை போட வெற்றிலைத் தட்டத்தை எடுப்பார். அதை மென்றபடி எங்கோ பார்த்து அமர்ந்திருப்பவர் வாயில் வெற்றிலை இருப்பதையே மறந்து மீ்ண்டும் பாக்கு வெட்டி புகையிலை தறித்து வைத்து தாம்பூலம் சுருட்டுவார். அடிக்கடி “பெண்ணே” என்று கூப்பிடுவார். விஜியை அவர் அப்படித்தான் அழைப்பார். கடைசிவரை ஒருமுறை கூட பெயரைச் சொன்னதில்லை. ஒருமுறை அம்மை குத்துபவர் மகள் பெயர் என்ன என்று கேட்டபோது “சொல்லுடி” என்று அம்மாவிடம் தான் சொன்னார்.
விஜி வந்து நின்றதும் புதிதாகப் பார்ப்பவர் போல அவளையே பார்ப்பார். எதற்காகக் கூப்பிட்டார் என்பது மறந்துவிடும். “எந்நு அச்சா?” என்று அவள் கேட்டதும் திடுக்கிட்டு ”குடிக்கான் வெள்ளம்” என்பார்.தண்ணீருடன் அவள் வந்ததும் அதை வாங்கி அருகே வைத்துக்கொள்வார். மீண்டும் கூப்பிட்டு தண்ணீர் கேட்பார்.அவளுக்கு அவரது நிலை ஓரளவுக்குப் புரிந்தது, பெரும்பாலும் அவர் அருகிலேயே இருந்தாள். சிலசமயம் அவளைக் கூப்பிட்டு” பெண்ணே, உனக்க பையனை இஷ்டமாயாடீ?” என்பார். அதை நுாறுமுறை கேட்டு அவளுக்கு வேடிக்கையாக ஆகிவிட்டிருந்தது. அவளுக்கே உரிய முறையில் வாய்க்குள் சிரிப்பாள்.
திருமண வேலைகளில் நானாக எதுவும் செய்ய முடியாத நிலை. அண்ணா சொன்னதை நான் செய்தேன். வெயிலில் அலைந்து விட்டு வீடு திரும்பினால் இருட்டுக்குள் கண் தெரியும்போது முதலில் விஜியைத்தான் பார்ப்பேன். ”வெயிலில் இப்ப எதுக்குச் சுத்தணும்?” சாயங்காலம் போனா போராதா? என்பார்.”அண்ணா சொல்றானே” ”அவருக்கு கிறுக்கு. நீ போய் உக்காந்து ஏதாவதுபடி” என்பார். அம்மாவுக்கும் திருமணம் நெருங்க நெருங்க ஒன்றும் புரியவில்லை. பதற்றமாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள். வீட்டின் மொத்தப் பொறுப்பும் விஜியிடம் இருந்தது.
நாகர்கோவிலுக்குப் போய் சுதர்சன் கடையில் பட்டு எடுது்து வந்தோம். அப்போதுதான் சுந்தர ராமசாமியை முதலில் பார்த்தேன். அவர் யாரென்று தெரிய மீண்டும் நான்கு வருடம் தாண்ட வேண்டியிருந்தது. நான் அவரது தோற்றத்தை வைத்து அவரை முஸ்லீம் என்று நினைத்திருந்தேன். அண்ணாதான் அவர் பிராமணர் என்றார். திருமணப்பட்டு நல்ல ஐஸ்பரியம் உள்ள பிராமணரின் கடையில்தான் எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை. நான் அருண் மொழியைத் திருமணம் செய்து கொள்ளும்போது அண்ணா நினைவூட்டினார். “விஜி கல்யாணத்துக்கு அங்கதான் பட்டு எடுத்தோம். ஐஸ்வரியமுள்ள பட்டராக்கும்.“
பட்டு, நகைகள் என்று வர ஆரம்பித்தன. வெள்ளிச்சரிகை போட்ட பச்சைப் பட்டு ஒன்று. மாறி உடுக்க பொற்சரிகை போட்டு வெண்ணிற நேரியதும் முண்டும். முப்பது பவுனுக்கு நகைகள். புதிதாக வாங்கியது கொஞ்சம், பாட்டி வழிவந்த பழைய நகைகளை உருக்கிச் செய்ததே அதிகம். விஜிக்குத் துணி, நகை எதிலும் கொஞ்சம் கூட ஆர்வமேஇல்லை.“வாடி வந்து பாருடீ” என்ற அம்மா அழைத்தபோதுவந்து எட்டிப் பார்த்ததுடன் சரி. அப்பா கூப்பிட்டு “பெண்ணே, ஆபரணம் டிசைன் இஷ்டமாயோடி?” என்று கேட்ட போது வழக்கமான உள்ளடங்கிய புன்னகை.
ஆனால் கல்யாணச் செலவுக்காக ஞாற்றடி வயலை விற்றதில் அவளுக்கு மிகவும் வருத்தம். “வயலு எதுக்கு விக்கணும்?” என்று அண்ணாவிடம் கோபமாகக் கேட்டாள். அண்ணா பதில் சொல்லாமல் போய்விட்டார். அப்பாவிடம் மாற்றுக்கருத்து சொல்வது எங்கள் வீட்டில எவருக்குமே சாத்தியமில்லை. விஜி அப்பாவிடம் போய் வயலை விற்க வேண்டாம் என்றாள். ”நகை இவ்வளவு எதுக்கு, இதையெல்லாம் நான் போடவா போறேன்?” என்றாள். ”பின்ன, ஆபரணம் இல்லாம நீ எப்படி மணையில் இருப்பாய்…. அதெல்லாம் தேவைதான்” என்று அப்பா சொல்லிவிட்டார்.
எங்கள் நாயர் சாதியில் 1952 வரை சொத்துகள் முழுக்கவே பெண்ணுக்குத்தான் சொந்தம். ஆணுக்கு குடும்பச் சொத்தில் எந்த உரிமையும் இல்லை. 1952இல் ஆளோகரி என்று சொல்லப்படும் பகுப்புமுறை வந்தது. அதன்படி சொத்துகள் பிரிக்கப்படும்போது பெண்களின் குழந்தைகளுக்கும் பங்கு உண்டு. அதில் ஒரு பங்குதான் ஆணுக்கு. 1980 முதல் சமமாக சொத்துக்களைப் பிரிக்கும் வழக்கம் உச்ச நீதிமன்றத்துத் தீர்ப்பின்படி அமலுக்கு வந்திருந்தது. ஆகவே எங்களுக்கும் சொத்தில் பங்கு இருந்தது. எனினும் நடைமுறையில் நாயத் சொத்துகள் கிட்டத்தட்ட முழுமையாகவே பெண்ணுக்குத்தான் போகும். நாயர் பெண்களின் தன்னம்பிக்கையின் ரகசியம் அது.
நானும் அண்ணாவும் சார்பதிவாளர் அலுவலகம் சென்று சொத்துகளை விஜியின் பேருக்கு மாற்றி எழுதினோம். வீடும் வீடிருந்த ஒரு ஏக்கர் நிலமும் மட்டும்தான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சொந்தம். பின்னர் 1986இல் அப்பா இறந்தபோது விஜியின் மாமியார்-கணவரின் பெரியம்மா-வந்து விஜிக்கும் அதில் ஒரு பங்குண்டு என்று வாதாடினார். அந்தக் கோணமே விஜிக்குத் தெரிந்திருக்கவில்லை. புலிபோல சீறியபடி கிழவியை நோக்கி வந்து ”என் அண்ணாக்களின் சொத்து இது. வேறு யாரும் கணக்குச் சொல்ல வரவேண்டாம்” என்று அதட்ட, கிழவி அதிர்ந்து அமைதியானாள். அன்றே வீட்டில் அவளுடைய உரிமையை எங்கள் பெயருக்கு விட்டுத்தர,பத்திரம் எழுத உத்தரவு போட்டாள். அப்போது நான் காசர்கோட்டில் வேலை பார்த்தேன். அண்ணாவுக்கு வேலை இல்லை. வேலை பெறப் பணம் தரவேண்டியிருந்தது. அந்த வீட்டையும் சொத்தையும் விற்ற பணம் அவருக்கச் செலவாகியது. குடும்பச் சொத்தாக நான் எதையும் பெறவில்லை.
திருமணம் நடந்த அன்று அப்பாவுக்கு ரத்த அழுத்தம் ஏறிப்படுத்துவிட்டார். கோயில் திண்ணையில் அவருக்கு யாரோ விசிறினார்கள். அண்ணாவும் அவரது தோழர்களும்தான் திருமண வேலை எல்லாவற்றையும் செய்தார்கள். நான் அர்த்தமில்லாமல் சுற்றி வந்தேன். பத்து மணிக்கு முகூர்த்தம். மாலை மூன்று மணிக்கு பெண்ணைக் கூட்டிச் செல்லும் சடங்கு. விஜி தேம்பி அழுததை அப்போதுதான் பார்த்தேன். அம்மா ஒரு துாணைப் பிடித்தபடி பிரமை பிடித்தது போல நின்றாள். விஜி என் கையைப் பிடித்துக்கொண்டு ” சேட்டா” என்றாள். அதன்பிறகு ஒன்றும் சொல்ல முடியவில்ல.
காரில் அவள் ஏறிக் கதவைச் சாத்திக் கிளம்பியபோது அப்பா தொப்பையும் மார்புகளும் குலுங்க காருக்குப் பின்னால் ஓடினார். “பெண்ணே பெண்ணே” என்று கூவிக் கைநீட்டிக் கதறினார்.கார் நிற்கப் போனது.“ நிறுத்தப்பிடாது போங்க போங்க” என்று ஒரு பாட்டா சொல்ல, கார் மேலும் வேகம் பிடித்து துாசு கிளப்பி போய் மறைந்தது. அப்பா அப்படியே செம்மண் சாலையில் அமர்ந்து விட்டார். ”எந்தா இது? பிள்ளைசார்?“ என்று கூட்டம் கூடி நின்று அவரைத் தேற்றினார்கள். மீண்டும் ரத்த அழுத்தம் ஏறியது. அவரை காரில்தான் வீட்டுக்குக் கொண்டுவந்தோம்.
மூன்றாம் நாள் விஜி வீட்டுக்கு வந்து அப்பாவைத் தேற்றினாள். ஒரு பத்துநாள் அவள் இங்கேயே நின்றுவிட்டுப் போகட்டும் என்றார் நாராயணன் தாத்தா. மெல்ல மெல்ல எல்லாம் சுமுகமாயிற்று. மச்சினனிடம் நான் நெருக்கமானேன். நல்ல மனிதர். வெள்ளையானவர். எட்டாம் வகுப்பு படிப்பது வரை இரணியலிலும் பிறகு சென்னையிலும் வளர்நதவர் ஆதலால் அவருக்க கிராமம் அதிகமாகத் தெரியாது. ஒகேனெக்கல் நீர்வீழ்ச்சிதான் அவர் பார்த்த முதல் அருவி. “அப்ப,இது இப்டி ராத்திரிலயும் பகலும் கொட்டிட்டே இருக்கும் இல்ல?“ என்று கேட்டார்.
குழந்தை பிறந்த பின்பு விஜி முற்றிலும் வேறு ஒருத்தியாக ஆனது போலத் தெரிந்தது. குழந்தை அன்றி வேறு எதுவும் உலகில் முக்கியம் அல்ல என்பது போல. நான் காசர்கோட்டில் வேலை செய்தேன். அப்பாஅம்மா இறந்தார்கள். அண்ணா நாகர்கோயிலில் வேலை செய்தார். எப்போதாவது ஊருக்கு வந்தால் ஒரே ஒரு நாள் அவளைப் போய்ப் பார்ப்பேன். குழந்தையைத் துாக்கிக்கொண்டு வந்து வரவேற்பாள். ஒரே கணம் கண்கள் மலரும் ”சேட்டனா,வரு” அவ்வளவுதான். அதன்பிறகு குழந்தை. குழந்தையைப் பற்றித்தான் என்னிடமும் பேசுவாள். என்னுடைய வாழ்க்கை, எண்ணங்கள் எதுவுமே அவளுக்குப் பொருட்டில்லாமல் ஆகியிருந்தன. ஒரு மணி நேரத்தில் கடுமையான அன்னியத்தன்மை உருவாகிவிடும். கிளம்பிவிடுவேன்.
எனக்குச் சரியான பெண்ணைப் பார்த்து மணம்புரிந்து வைக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு வந்தது. சாமியார்த்தனமாகச் சுற்றிக்கொண்டிருந்தவன் ஆதலால் கல்யாணம் பண்ணாமலேயே இருந்துவிடுவேனோ என்ற சந்தேகம். மச்சினன்தான் ” சும்மா இருடீ, இந்தமாதிரி சொல்லி அலைஞ்சவங்கதான் நல்லா குடும்பம் குட்டியோட பொம்பிளை பேச்சைக் கேட்டு ஒழுங்கா இருப்பாங்க” என்றார். விஜி பல பெண்களை எனக்குப் பார்த்தாள். நான் ஊருக்கு வரும் போதெல்லாம் தற்செயலாகக் கூட்டிச் செல்வதுபோல பெண்களைப் பார்க்கக் கூட்டிச் செல்வார்.
ஒரு பெண் பேரழகி. பார்த்து விட்டு வந்ததுமே நான் சொன்னேன் பிடிக்கவில்லை என்று. பீதியுடன் ”ஏன்?” என்றாள். ”தெரியவில்லை” கிண்டலாக ”அழகு போதாதோ?” என்றாள். ”அழகு ஜாஸ்தி.அது இல்லை. என் மனசில் உள்ள பெண் இப்படி இருக்க மாட்டாள்”என்றேன். பின்னே? தி.ஜானகிராமனின் கதாநாயகி மாதிரி இருப்பாள் என்று எப்படிச் சொல்வது? பேசாமல் வந்துவிட்டேன். விஜிக்கு நான் பெரிய அழகன் என்ற எண்ணம் இருந்தது, அழகிகளை அல்லாமல் அவள் யோசிக்கவே இல்லை.
ஆகவே சட்டென்று நான் அருண்மொழியை காதலிக்கும் விஷயம் தெரிந்ததும் ஏமாற்றம். ”தமிழச்சியா?” கறுப்பா இல்ல இருப்பாள்?” ”இவள் மாநிறம்” என்றேன். புகைப்படத்தைப் பார்த்துவிட்டு ”நல்ல கண்ணு” என்றாள், பிடிக்காத பாவனையுடன். திருமணம் முடிந்து ஒருவாரம் வரை அந்த அதிருப்தி நீடித்தது. அண்ணாவிடம் ”நல்ல பெண்ணுதான், ஆனா சின்ன அண்ணாவின் அழகுக்குப் பொருத்தமா இல்லை” என்று சொன்னாள். பெண்ணுக்கு முடி குறைவாக இருக்கிறது, நிறம் இல்லை என்பதெல்லாம் தொடர்ந்த குறைகள். ஆனால் அருண்மொழி அவள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து பத்து நாள் தங்கியபோது அந்த அதிருப்தி விலகி ஆழமான பிரியம் வந்துவிட்டது. “தங்கம் போல மனசுள்ள பொண்ணு, பயங்கர புத்தியாக்கும்” என்று என்னிடம் சொன்னாள்.
காதல் திருமணம் என்பதனால் எனக்கு பெண்வழியிலும் சொத்து ஏதும் கிடைக்கவில்லை என்பதில் அண்ணாவுக்கு ஒரு ஏமாற்றம்இருந்தது. அவர்தான் திருணமத்தையே நடத்தி வைத்தார் என்ற போதிலும். விஜி அண்ணாவிடம் ”நீங்களும் நானும் பெண்ணு பாத்தா எப்படிப்பட்ட பெண்ணைப் பார்ப்போம்? பணமும் குடும்பமும் பார்ப்போம். அழகு இருக்காண்ணு பாப்போம். சின்ன அண்ணனுக்கு அறிவுள்ள பெண்ணுதானே வேணும். அதைப்பார்க்க நமக்குத் தெரியுமா? அவளுக்கு அறிவு இருக்கே, அது பெரிய சொத்து” என்றாள் அருண்மொழியின் பரந்த வாசிப்பு ப்றறி விஜிக்கு பிரமிப்பு இருந்தது.
பின்பு ஒரு முறை விஜியின் வீட்டில் நானும் அருண்மொழியும் வந்து தங்கியிருந்தோம். அப்போதெல்லாம் ஓணத்துக்கு விஜி வீட்டுக்கு வருவது வழக்கம். சமையலறையில் சுத்த நாயருக்கு இயைந்த முறையில் மச்சினன் அடைப்பிரதமன் சமைத்துக்கொண்டிருந்தார். தொலைக்காட்சியில் எதோ செய்தி. தகழி சிவகங்கரப்பிள்ளையின் படத்தைக்காட்டி ஏதோ செய்தி போட்டார்கள். நான் அருண்மொழியிடம் தகழியைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். அவருடையது யதார்த்தவாதம். ஆனால் யதார்த்தவாதம் ஒரு கட்டத்தில் இலட்சிய வாதக் கனவைச் சென்று தொட்டாக வேண்டும். அதுவே அதன் உச்சம். இலட்சியவாதமே யதார்த்தவாதத்தின் உன்னதம். அந்த உச்சத்தை, தகழி சென்று தொடவேயில்லை.ஆகவே முழுக்க முழுக்க பொதுப்புத்தி சார்ந்த எழுத்தாகவே அவரது இலக்கியம் நின்றுவிட்டது, அந்தப் பொதுப்புத்தி எத்தனை கூரியதாக இருப்பினும் அதற்கு இலக்கியத்தில் மகத்துவம் கிடையாது…
அருண்மொழியும் நடுவே தல்ஸ்தோய் நாவல்களை மேற்கோள் காட்டி ஏதோ சொன்னாள். குரல்கள் உயர்ந்து ஒலித்தன. உள்ளிருந்து வந்த விஜி என்னிடம் கடுமையான குரலில் “போதும்..பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்கள்?” என்றாள். அந்த அரை நொடியில் அவளுடைய கண்களைப் பார்த்தபோது அவள் பழைய விஜி என்று எனக்குத் தோன்றியது. புன்னகையுடன் அமைதியானேன். மனம் முழுக்க உவகை நிறைந்திருந்தது, வெகு துாரத்தில் இருந்து ஏதோ ஒரு காற்றில் அவள் அருகே வந்துவிட்டு மீண்டதைப் போலிருந்தது.