தமிழ்க் கவிதையியலில் இயற்கை

மொழியை வைத்துதான் ஒரு சமுதாயத்தின் வரலாறு, மாண்புகளை அறிய முடியும். மொழியைப் புறக்கணித்துவிட்டு ஒரு சமுதாயமும் வளரமுடியாது. நம்முடையை சங்க இலக்கியங்கள் ஆட்சி, அரசியல், வாழ்க்கை, சமுதாயம், பண்பாடு, நாகரீகம், பழக்கவழக்கம் பற்றிப் பேசியிருக்கின்றன. முனைவர் பட்ட ஆய்வுரைகளுக்கு வெளியே அது வெகுமக்களால் அரிதிலும் அரிதாகவே கொண்டாடப்பட்டு வருகின்றன.

வடவேங்கடமும் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிறது தொல்காப்பியம். வேங்கடம் என்பது திருப்பதி அதுவரையிலும் நமது மொழியின் எல்லை இருந்திருக்கிறது. இமயமலை வரையிலும் நமது ஆட்சி எல்லை பரந்து விரிந்திருந்தது.

“பஃறுளியற்றுடன் பன்மலையடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார். கங்கையைக் காட்டிலும் பேராறு நமது தமிழகத்தில் இருந்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் 2285 பாடல்கள். அதில் 300 புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து இருக்கின்றோம். இன்னும் பலநூறு பாடல்கள் கால வெள்ளத்தில் மறைந்துவிட்டன.  நமது கைக்கு வரப்பெற்றதைக் கொண்டு நாம் தமிழ் மொழி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லிவருகிறோம். இதில் 1193 பாடல்கள் பாணர்கள் பாடியதோ புலவர்கள் பாடியதோ அல்ல. வெகு மக்களின் வாய்மொழி மரபிலிருந்து எழுத்துக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில் பார்த்தால் தமிழ் அதற்கு முன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதலாம்.

கவிதை எப்போது தோன்றியது என்று வரையறுத்தால் அது கல்தோன்றி முன் தோன்ற காலத்தே என்று தமிழ் மொழிக்குச் செல்வதுபோல், உலகச் சமூகத்திற்கும் கவிதைக்கான தோற்றத்தை விளக்குவது சாலப் பொருந்தும். ஆம். கவிதை, ஆதிப் பொதுவுடமை காலத்திலிருந்தே, குகையில், காட்டு மரங்களின் நிழலில் மனிதன் வாழ்ந்திருந்த காலத்திலிருந்தே கவிதை தோன்றிவிட்டது.  வேறு உயிர்களை விட மனிதன் கடலோடும் மலையோடும் வெகுவான உறவு கொண்டிருக்கிறான். தொடர்ச்சியான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் வழியே இன்றைக்கு நவீன உலகில் மனிதன் அடைந்திருக்கும் வளர்ச்சி மிகப்பெரியது. அதே வேளையில் இயற்கையை விட்டு பாரதூரமாக அன்னியமாகிவிட்ட நிலையில் பெரும் பேரழிவுகளின், அன்றாடம் வானிலைப் பிறழ்வுகளுடன், தொற்று நோய் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லா மனிதப் பிறழ்வுகளிலிருந்தும் மீண்டு வாழ்தலுக்கான கருவியாக எல்லாக் காலத்திலும் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கவிதைகள் இயற்கையைப் போற்றுகின்றன. இன்றைய நவீன கவிதைகள் காலகட்டம்வரை இயற்கையைப் பாடாத கவிகள் இல்லை. நீங்கள் ஒருவரை வாழச் சொல்லித் தரவேண்டுமென்றால் முதலில் இயற்கையை நேசிக்கக் கற்றுத் தரவேண்டும். அப்படி நீங்கள் அதை வருணிக்கும் வார்த்தைகளில் கவித்துவம் விளையாடக் காண்பீர்கள். எனவேதான் கவிதைகளை உலகமெங்கும் மொழி கண்டுபிடிப்பதற்கு முன்பே உதித்துவிட்டது என்கிறோம். ஆதி மனிதன் அவனைச் சுற்றிய ஒலி வளைவுகளில் முதலில் இசையைக் கண்டடைந்திருப்பான். அவனது சங்கேத மொழியே இயற்கையிலிருந்து, ஏனைய உயிர்க் கூட்டங்களின் ஒலியிலிருந்து, தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் உடல் மொழியிலிருந்து, விதவிதமான லயத்தைக் கொண்டு எழுந்திருக்கிறது. மனிதன் சிக்கி முக்கிக் கற்களை உரசும்போதே அதன் ஒலியில் அதன் பொறியில் அதைக் கண்ட வியப்பில் கவிதையையும் கண்டிருப்பான் என்று தோன்றுகிறது. கவிதை ஒரு கண நேரத்தில் நிகழும் புத்தெழுச்சி. உணர்வெழுச்சி. காணததைக் கண்டதும், இது கற்பனையா உண்மையா என்று சிந்திக்கும்போது ஒன்றின் மீது கொண்ட மனங்கவிதல் கவிதையாகிறது.

கவிதலை சற்று நீட்டல் அளவையில் சொன்னால் காதல் ஆகிறது. ஒருவனுக்கு ஒரு பெண்ணின் மீது எப்போது காதல் அரும்புகிறது. இயற்கையின் வானிலை மாற்றங்கள் போலத்தான் அவனது உணர்ச்சி நிலையை காதல் ஆட்டி வைக்கிறது. உணர்ச்சி நிலைகள் உடல் நிலையில் மாற்றங்களைச் செய்கிறது. தூக்கம் வராமல் காதலியின் நினைவுகளில் புரண்டு படுக்கின்றான். நாம் நமது நெஞ்சில் எழுந்த உணர்வு அலைகளை என்னவென்று அறிய முடியவில்லை. காதலி நின்றால், நடந்தால், அசைந்தால், காதுமடல் விளிம்பில் விரலால் தலைமுடியை இழுத்துவிட்டால், அதுமட்டுமா… தும்மினால் தூங்கினால் எல்லாமே கவிதையாகத் தெரிகிறது. ஏன் இந்த தீடீர் மாற்றம் என்ன நடக்கிறது எனக்குள் என்று புலன்களால் அறிய முற்படுகிறான்.

காதலும் புணர்தலும் இயற்கையின் அனைத்து உயிரசைவுகளிலும், உயர்திணை அஃறிணை பாகுபாடின்றி நிகழும். கவித்துவம் எல்லோருக்கும் அவரவர்க்கு வாய்ப்பான சூழலில் நிகழும். ஆனால் எல்லா நேரங்களிலும் சீசன் இல்லாதபோதும் மழைச் சாரலை உணரமுடியுமானால், அல்லது வானவில் தோன்றபோதும் வானவில் தோன்றக் காணமுடிந்தால், சிறகுகள் இல்லாமலே தூரத்து மலை முகட்டுக்கு பறந்து திரும்ப முடியுமென்றால் அதையும் காதல் எனலாம். கணந்தோறும் அந்தப் பித்து நிலையை தனக்குள் அடைகாத்து வைத்திருப்பவன் கவிஞன் ஆகிறான். ‘எங்கெங்கு காணினும் இன்பமடா…’ என்ற பாரதியின் வரிகள் இயற்கையின் மீது கொண்ட காதலையும் கூடத்தான்  பேசுகின்றன. அந்த இயற்கை அழகின் ஒரு அங்கமாக விளங்கும் பெண்களையும் பேசுகின்றன. ‘சிந்துநதியின் மிசை நிலவினிலே என்று பாடத்துவங்கி… சேரநன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்தே தோழிகளோட்டி விளையாடி வருவோம்’ என்று பாடியவனும் அவன்தான்.

இந்தக் கொண்டாட்டங்களுக்கு எல்லாம் மாறாக, விட்டுவிலகி ஒரு சிட்டுக்குருவியென பற என்றவனும் அதே பாரதிதான். நம்மைப் பிணைத்திருக்கும் உலகியல் கட்டுகளிலிருந்து விடுவித்துப் பறத்தலைப் பேசுகிறது. இப்படி எல்லா கணங்களிலும் இயற்கையின் அரவணைப்பின் போதும், பெருஞ்சீற்றத்தின்போதும் அதன் மீதான கவிஞனின் பித்தேறிய பெருவிருப்பத்தையும் காதல் எனலாம். அதை எழுத்தில் வெளிப்படுத்துகையில் கவிதை என்றாகிறது.

‘கோடி கோடி இன்பம் வைத்தாய் இறைவா…’ என்றும் ‘காணக் கண்கோடி வேண்டும்…’ என்பதும் சாதாரணமாக வெகுமக்கள் வெளியில் சாதரணமாகப் புழங்கும் இயற்கை மீதான வியப்பை பேசும் சொற்பதங்கள். ஆகவே கவிதை மனித உணர்வுக் கலவைகளுக்கு மிக நெருக்கமான முதலில் தோன்றிய கலைவடிவமாகக் கொள்கிறோம். ஒழுங்கமைக்கப்பட்ட ஒலியின் கோர்வைகளை இசையாகவும், எவ்வளவுதான் நீரை கையில் அள்ளினாலும் இருப்பு கொள்ளாமல் நழுவிச் செல்லுவதைக் கவிதை என்றும் கொள்ளலாம். வாழ்க்கையைப் போலவே கவிதைகள் நமது தன்னுணர்வுக்கும் அப்பாற்பட்ட மொழியற்ற மொழியைக் கொண்டிருக்கிறது. மொழிக்கு வெளியே அது மின்னலைப் போல தோன்றி மறைகிறது. உரைநடைக்கும் இன்னபிற கலைவடிவங்களுக்கும் ஆசிரியர்கள் உண்டு. கவிதை அப்படியல்ல. இதை கவிஞர் பிரான்சிஸ்கிருபா அடிக்கடி உதிர்க்கக் கேட்டிருக்கிறேன். ஆமாம் அது தான்தோன்றியாக நமக்குள் எப்போது நுழைகிறது. அதன் வருகை எழுத்தாக எப்போது எப்படி உருமாறுகிறது நம்மால் கணிக்க முடிவதில்லை.

ஆக, ஏற்கனவே மொழி புழங்கிய தலைமுறைகளிலிருந்துதான் கவிஞன் உருவாகிறான்.   இயற்கையின் ஒவ்வொரு அணுக்களோடும், அசைவுகளோடும் நமது உடலும்,மனமும் ஒத்திசைவு கொண்டிருக்கிறது. உலகியலுக்கும் உலகியலுக்கு வெளியேயும் மாறிமாறி ஊசலாடினாலும் கவிதைகள் அனைத்தும் நம்மை இயற்கையுடன் இயைந்த வாழ்க்கைக்குத் திரும்பவே அறைகூவல் விடுக்கின்றன. நவீன வாழ்க்கையின் அத்தனை இடர்பாடுகளிலிருந்தும் நமக்கான விடுதலையை இலக்கியமே வழங்க முடியும். சமூக அரசியல் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு இடையே பிறந்து மறைந்து பிறந்து மறைந்து இந்தப் புவிப்பரப்பின் சமநிலைக்கான புரட்சியை கவிதைகளே முதலில் நிகழ்த்த முடியும்.

ஓசை மரபானது பாக்களால் இசைக்கப்படுவதாகி தமிழ் நிலத்தில் பாணர், பாடினி, விறலியர் மரபு பொதுவெளியில் எல்லோரையும் ஈர்க்கும்படியாக நாடோடியாகத் திரிந்து பாடிச் சென்றது. பிறகு நாகரீகமடைந்த சமூகத்தில் இதுதான் பண் இதுதான் பாடல் என்று பண்படுத்தியிருக்கிறார்கள். எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் எல்லாவித இன மக்களாலும், போர் வீரர்களாலும், விவசாயிகளாலும், சட்ட வல்லுநர்களாலும், மருத்துவர்களாலும், மத குருமார்களாலும், அறிவியலறிஞர்களாலும், அரசர்களாலும், அரசிகளாலும், தத்துவவாதிகளாலும், ஞானியர்களாலும், யோகிகளாலும் கவிதை எழுதப்பட்டும் படிக்கப்பட்டும் கேட்கப்பட்டும் வந்திருக்கிறது.

நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள் போன்ற தனது எளிமையான வடிவங்களில் வெகுமக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக கவிதைகள் தனிப்பெரும் உயிரியாக, பேதமற்ற முறையில் தமிழ் நிலத்தின் பண்பாட்டு வேர்களுக்கு நீரூற்றும் தனிப்பெரும் பாத்திரமாக கவிதைகள் இயங்கி வருகின்றன. பாடல்களின் வழி குழந்தைகள் முதலியவரையும் கவரும் வடிவமாக இருந்து வருகிறது.

ராபர்ட் ஃப்ராஸ்ட் என்னும் அமெரிக்கக் கவிஞர் சொல்கிறார். “கவிதை என்பது டென்னிஸ் விளையாட்டு போன்றதுதான். ஒரே ஒரு வித்தியாசம். டென்னிஸ் விளையாட்டிற்கு குறுக்கு வலையுண்டு. கவிதை விளையாட்டில் அது இல்லை.” என்று.

கவிதையின் இலக்கணம் சொல்லணியியலோடும் அணியிலக்கணத்தோடும் தொடர்புடையது. எனவே கவிதை அணிகளை மிகுதியாகப் பயன்படுத்தும் ஒரு மொழியாகும். மேலும் கவிதை மொழி பிறரைத் தூண்டி இணங்க வைத்தலில் ஆற்றல் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஒருவகையில் கவிதை ஏமாற்றும் திறன் கொண்டது. அதாவது கூட்டியும் குறைத்தும் முரண்படுத்தியும் பலவாறு வேறுபடுத்திச் சொல்கிறதல்லவா? அதனால் கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ சொல்கிறார்.  தன்னிலை திரிந்து ஒருவகைப் பைத்திய நிலையில் எழுதும் உண்மைக்குப் புறம்பான கவிதை மனித இனத்திற்கு பெருங்கேடு விளைவிக்கக் கூடுமாதலால் கவிஞனை நாம் படைக்க வேண்டிய இலட்சிய உலகிலிருந்து வெளியேற்றிவிடுவதே நல்லதென்று. கிரேக்க ரோமனியர்களிடையே கவிஞர்கள் குறித்த அவரது இந்தக் கூற்று எத்தனை நகைப்புக்குரியது.

வாழ்க்கையை இலக்கியம் எப்படி அளக்கிறது ? டி.எஸ்.எலியட் தன்னுடைய கவிதை ஒன்றில் இதற்கான பதிலை குறிப்பிடுகிறார். ‘இலக்கியம் வாழ்க்கையை தேக்கரண்டியால் அளக்கிறது’ என்கிறார்.  நாள்பட்ட தீராத நோய்வாய்ப்பட்டவரை ஒரு தேக்கரண்டியில் குணப்படுத்த முடிந்தால் எப்படியோ அப்படியே கவிதைகள் முழு வாழ்க்கையின் சாரத்தைப் பிழிந்து, நன்மை தீமைகளைப் பகுத்தாய்கிறது. மனங்களை இன்பத்திலோ துன்பத்திலோ ஆழ்த்தும் ஒரு தேக்கரண்டி மருந்தாகவும் நாம் பொருள் கொள்ளலாம்.

தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் கவிதை மொழியை எவ்வாறு கையாளுவது என்பதற்கான வரையறைகளை முன்மொழிகிறது. கவிதை எழுதப்படுவதை  “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்/ பாடல்சான்ற புலனெறி வழக்கம்” என்கிறார். இதை ஆழமாக உற்று நோக்கினால் நாடக வழக்கு என்பது யதார்த்த எழுத்துமுறைக்கு அப்பாற்பட்டதாகவும், உலகியல் வழக்கு என்பது யதார்த்தம் அதாவது இயல்பு நவிற்சிக்கு உட்பட்ட எழுத்துமுறையாகவும் கொள்ள முடியும். இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் நேரடியாகப் பொருளுணர்த்தும் செய்யுள், சுற்றிவளைத்துப் பொருளுணர்த்தும் செய்யுள் அல்லது பாடல் என்று பொருள் கொள்ளலாம்.

தொல்காப்பியருக்குப் பிறகுதான் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த குண்டகர் என்ற சமஸ்கிருத இலக்கிய ஆசிரியர் இதைக் கண்டடைந்து தொகுத்து எழுதுகிறார். அவர் இயல்பான எழுத்து அல்லது பேச்சு முறையை அதாவது யதார்த்த முறையை ஸ்வபாவ உக்தி என்றும், இயல்பு நவிற்சிக்கு மாறான எழுத்துமுறையை வக்ர உக்தி எனப் பிரித்துப் பொருள் தருகிறார். மறைமுகக் கவிதை அதாவது சுற்றிவளைத்துப் பொருளுணர்த்துவதை ஆங்கிலத்தில் oblique poetry என்று அழைக்கிறார்கள்.

மேலும் தொல்காப்பியர் உள்ளுறை உவமம், இறைச்சி போன்ற தொனிப் பொருள்களும் கவிதையில் இயைந்து வரலாம் என்கிறார். இந்த இரண்டும் தமிழ்க் கவிதைகளுக்கே உரித்தான உலகின் மூத்த கண்டுபிடிப்பு எனலாம்.

இன்றைக்கு வெகுமக்கள் தளத்தில் கண்ணதாசன், வைரமுத்து இவர்களே கவிஞர்களாக அறியப்பட்டிருக்கிறார்கள். தொல்மொழி மரபின் பன்னெடுங்கால தொடர்ச் சங்கிலியில் எத்தனை கவிஞர்கள் உருப்பெற்று வந்திருக்க வேண்டும். அதுபற்றிய எந்த சிந்தனையும் அற்ற தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.  இன்றைக்கு பல்வேறுபட்ட ஊடகத் தளங்களில் புழங்கும் மொழியின் புத்தாக்கம் கவிஞர்களால் நிகழ்ந்தது.  இப்போதும் ஒரு போர்வீரனைப் போல தன்னெழுச்சியாக எங்கோ நாம் அறியாத சிறு மூலை மூடுக்குகளில் இருந்தெல்லாம் கவிஞர்கள் பிறந்து வருகின்றார்கள். அவர்கள் பழைய ஓசை நயத்தை வெளியேற்றிய நவீன வடிவங்களை தங்கள் கவிதைகளில் முயன்று பார்க்கின்றனர்.

ஓரிடத்தில் ‘கனவும் உரித்தால் அவ்விடத்தான’ என்கிறார். கனவு என்பதே தன்னுணர்வற்ற ஒரு வெளிப்பாட்டு முறை என்பதை பின்னர் வந்த சர்ரியலிச கோட்பாடாகவும் நாம் புரிந்துகொள்ளலாம்.  இத்தகைய நவீனமான வாசிப்பு அணுகுமுறைகள்தான் தமிழ்மொழி வளம்பெற்று நிலைபெறுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

இலக்கணத்தை மீறிய விலகல் முறைகளைக் பாட்டில் கையாளலாம் என்பதை அப்போதே தொல்காப்பியர் வலியுறுத்தியிருக்கிறார். விலகல் என்பது வடிவம் சம்பந்தமான ஒன்றாகவே மேற்கத்திய விமர்சனத்துறையில் கொள்ளப்பட்டது. பொருளுக்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சமகாலக் கோட்பாட்டாளர் நோம் சாம்சாஸ்கி கவிதையியலைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஆழ் அமைப்பு, மேற்புற அமைப்பு என்று பிரிக்கிறார். மோசமான சுமாரான கவிதைகளில் மேற்புற அமைப்பு மட்டுமே விலகலுக்கு உள்ளாகுகிறது. ஆனால் நல்ல கவிதைகளில் ஆழ் அமைப்பே விலகலுக்குள்ளாகிறது” என்கிறார்.

பலதுறை நூலறிவும், அனுபவ அறிவும் அதை எடுத்தியம்பக் கையாளும் தனித்த மொழியறிவும் கவிதைக்கு இன்றியமையாததாக கோரப்படுகிறது.  படிமங்களையும் குறியீடுகளையும்  தனது அனுபவப் பரிமாணங்களால் விரிக்கும்போது, வாசிப்பவரின் கற்பனையையும், மனவெழுச்சியையும் பொறுத்து அதை எழுதியவருக்கு நிகராகவோ அல்லது மேம்பட்டோ கவிதையிலிருந்து உள்ளொளியானது கிளைத்துச் செழிக்கக் கூடும். எந்த இலக்கிய வடிவமும் எழுதப்பட்டவுடன் ஆசிரியன் இறக்கிறான் என்பது இதனால்தான். இன்றளவும் கம்ப ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், திருக்குறள், சங்கப் பாடல்கள்,  நவீன கவிதைகள் போன்றவற்றை எழுதியருக்கு நிகராக, அதற்கு உரை வழங்குபவர்கள் பல்வேறு வாசகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். கெடுவாய்ப்பாக தமிழில் வாசகர்கள் குறைவாகவும், விமர்சகர்கள் அரிதாகவும், கவிஞர்கள் பல்கிப் பெருகியும் காணப்படுகிறார்கள்.

கவிஞர்களை நால்வகையாக நாம் பிரிக்கிறோம். ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரக் கவி. இதில் மதுரகவியாக புகழப்படுபவர் குற்றாலக் குறவஞ்சியைப் பாடிய திரிகூட ராசப்பக் கவிராயர். குற்றாலக் குறவஞ்சி சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இதில் பள்ளு, அந்தாதி, கலம்பகம் போன்ற இன்னபிற வடிவங்களும் உண்டு.

இந்த நிமிடம்வரை நமது வாழ்க்கை குறித்த முற்றும் தெளிவான வரைபடமோ, தத்துவங்களோ, கோட்பாடுகளோ நம்மிடம் இல்லை. கலையும் இலக்கியமும் வாழ்க்கையுடன் சிறு பிள்ளையைப் போல நம்மை விளையாட்டில் பங்கேற்க அழைக்கிறது. அதில் கவிதைகளானது அதன் மூதாதைத் தன்மையில் உயிர்த்திருக்கிறது. நம்மை உயிர்ப்பிக்கிறது. இலைச் சருகுகள், மண்டிய தாவரங்கள், பறவைகள், விலங்குகள், கடல், கடல் அளந்தும் அளக்கமுடியாத வகையில் மோதியும் விலகியும் செல்லும் உயிரினங்கள், இன்னும் எத்தனை எத்தனை வரிசைகள், இயற்கையின் தவப் புதல்வர்களான கவிஞர்களின் பட்டியலில்.

கடலை நோக்கும் எவரின் மனமும் பாசாங்குகளைக் களைகிறது. குழந்தைகளைப் போல அலைகளை விரட்டியும், தப்பித்துக் கரைதிரும்பியும், தானாக அதனில் குதித்துக் கரைந்து கொள்ளவும் உடன்படுகிறோம். கடற்கரையை விட்டு வெளியேறும்போது நமது குழந்தைமை காணாமல் போகிறது.

இந்தக் குற்றாலத்தையே எடுத்துக் கொள்வோம். தூர மலைகளின் சிகையில் பொதிந்த மேகங்களைக் கண்டால், எதிர்பாராத கணத்தில் சட்டென்று அதன் சாரல் நம்மை நனைத்து வேறொரு கூட்டத்தையும் நனைக்கிறது. இப்படி ஒவ்வொரையும் குற்றால மலைகளின் கூட்டம் யானைக் கூட்டம்போல வலம்வந்து அதன் தும்பிக்கையின் நீர்ப் பிளிறல்களைப் போல நனைத்துச் செல்லும் இயற்கையின் மடியில் நாம் குழந்தைகளாகிறோம். குற்றாலச் சாரலை வரவேற்றுத் தோரணங்கள் கட்டி விழாவெடுக்கிறோம். இந்தப் பயணம் முடிந்ததும் மீண்டும் சக்கரங்களை மாட்டிக்கொண்டு இயந்திரமயத்தில் தலையிட்டு சுய விருப்பங்களைத் தொலைக்கிறோம்.

பிறப்புக்கும் மரணத்திற்கும் இடையிலான போராட்டத்தில் நாம் இளைப்பாறும் பொழுதுகள் ஒவ்வொன்றும் கவித்துவத்தாலேயே நிரம்பி வழிகிறது. சற்றே இளைப்பாற, சற்றே நம்மை நாமே விசாரணை செய்துகொள்ள, சற்றே நம் வாழ்க்கையின் சலிப்பிலிருந்தும், களைப்பிலிருந்தும் விலகிச் செல்ல உருண்டோடும் காலச் சக்கரத்துக்கு முற்பட்ட இயற்கையின் மடியில் தஞ்சமடைகிறோம். நமக்குக் கையளிக்கப்பட்ட வாழ்வு என்பது ஒவ்வொரு கணத்திலும் சமரசங்களால் ஆனது.  எங்கோ நிகழும் இயற்கைப் பேரிடர்களிலிருந்து, சர்வாதிகாரப் போக்குகளினால் எங்கோ நிகழும் மத, இன பிரிவினை வாதங்களிலிருந்து விலகிச் செல்லும்போது குற்றவுணர்வுகளின் வழியாக அல்லது கையறு நிலையின் வழியாக நமது சுயத்தை பரிசோதித்துக் கொள்கின்றோம். கவிதைகள் பிறிதின் நோயை தன் நோய்க்கூறாக அறிந்து தெளிகிறது. அழுக்காறுகளைக் களைந்தெடுக்கும் கருவியாக விளங்குகிறது.

அற்றைத்திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்நிலவின்
வென்று எறிமுரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே…

என்னும் பாரிமகளிரின் புறநானூற்றுப் பாடலானது கையறு நிலைத் துறையில் அமைந்த ஒன்று. அரிஸ்டோபோனஸின் லிஸிஸ்டிராட்டா எனும் கிரேக்க நாடகத்தினை உலகின் முதல் யுத்த எதிர்ப்பு நாடகம் என்றால் அதற்கு இணையாக பாரிமகளிர் பாடல் உலகின் முதல் யுத்த எதிர்ப்புப் பாடல்(Anti-War Poetry) என்று சொல்ல வேண்டும். சொல்லொண்ணா சோகமாக நிலவும் குன்றும் காட்சிப் படிமம் கொண்டு இயற்கையோடு இயைந்த வாழ்வின் இழப்பை இந்தக் கவிதைப் பேசுகிறது. ஈழ இனப் படுகொலைக்குள்ளான தந்தையரை, தம் சொந்த மண்ணை இழந்த ஈழத் தமிழ்க் குழந்தைகளின் குமுறலின் வெளிப்பாடக இக்கவிதை இன்றளவும் உயிர்த்துடிப்புடன் காட்சி கொள்கின்றது. அதனால்தான் காலம் கடந்தும் நிற்கின்ற கவிதையாக இன்றும் வாசிக்கப்பட்டு வருகிறது.

குறுந்தொகையில் வரும் ஒரு பாடல்..

யாயும் ஞாயும் யாரோ கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

இந்தக் கவிதை அகவாழ்க்கையை காதலைப் பாடுகிறது. அதில் உச்சமாக செம்புலப் பெயல் நீர் போல வரும் படிமம்தான் இந்தக் கவிதைக்கு ஒரு காவியத் தன்மையை வழங்கியிருக்கிறது. ஒரு அனுபவத்தை யார் வேண்டுமானலும் எந்த வடிவத்திலும் சொல்லிவிட முடியும். ஆனால் அதை இயற்கையின் ஆழ்ந்த படிமத்தோடு தொடர்புபடுத்தும்போது கவிதை ஆகிறது. கவிஞனுக்குரிய வேலை இதுதான். செம்புலப் பெயல் நீரை காதலில் ஒன்று கலப்பவர்களோடு தொடர்புபடுத்துகிறது. காதலை ஒரு உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் உணர்வெழுச்சியாகவும், மனிதகுலத்தின் மேன்மையான மானுடப் பண்பாகவும் ஆக்கித் தருகிறது. இப்போது இருப்பதுபோல நூற்றியெட்டு சாதிகளும் அதில் பத்து பன்னிரண்டு உட்பிரிவுகளும் அப்போதிருந்த இனக்குழுச் சமூகத்தில் இல்லை. சாதிய, மத வெறிகொண்டு கெளரவக் கொலைகள் நிகழும் இந்தக் காலகட்டத்தில் காதலைப் போற்றும் தன்மையால் இந்தக் கவிதை இன்றைய சூழலுக்கும் பொருந்தி நிலைபெற்றது.

அகப்பாடல் குறுந்தொகையின் 27 வது பாடலில்

கன்றும் உண்ணாது கலத்தினும் படாஅது
ஆன் தீம்பால் நிலத்து உக்காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும் தீதலை
அல்குல் என்மாமைக் கவினே

என்கிறார் வெள்ளிவீதியார். காதலனால் முழுமையாக இன்பம் துய்க்கப் பெறாது தீம்பால் நிலத்தில் சிதறியதுபோல திதலை அல்குல் பொலிவிழந்தது என்னும் சொற்படிமம் தலைமகனின் பாலியல் விருப்பத்தினை நிறைவேற்ற முடியாத இயலாமையை பகடியோடு பேசுகிறது.

குறுந்தொகை தோன்றியது காப்பியங்கள் தோன்றிய காலகட்டத்திற்கும் முந்தையது. அதன்பிறகுதான் இலக்கண நூலான தொல்காப்பியம் இயற்றப்படுகிறது. காப்பியங்கள் தோன்றிய காலகட்டத்தில்தான் பக்திமரபு தோன்றுகிறது. பக்தி மரபு தோன்றிய பிறகு அரசனையும், தெய்வங்களையும் போற்றிப் பாடும் பாடல்கள் வருகின்றன. ஆணுக்குச் சேவகம் புரிகிறவளாக பெண்ணைப் பார்க்கிறது. அடக்க ஒடுக்கங்கள் பேணப்படுகின்றன. ஆனால் இனக்குழு சமூகமாக இருந்த காலத்தில் அப்படி இல்லை. மூர்க்கமாக தனது காமத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தும் பாடலாக வெள்ளிவீதியாரின் இந்தப் பாடலை நாம் காணலாம். ரமேஷ் பிரேதன், குட்டி ரேவதி, மனுஷ்ய புத்திரன் போன்றவர்கள் உடலரசியல் கவிதைகள் எழுதும் நவீன காலகட்டத்திலும் இந்தப் பாடல் நீட்சி பெற்றதாகக் காண்கிறோம்.

வாழ்க்கையை எப்படிப் புரிந்துகொள்ள முடியாமல் அல்லல்படுகிறோமோ அப்படித்தான் கவிதைகளும். தொடர்ச்சியான வாசிப்புப் பயிற்சிகளின் விளைவாய் கவிதை மொழியில் நமது ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.  நல்ல கவிதைகள் நம்மை நமக்கு அடையாளங்காட்ட விழைகின்றன. அதற்கு நாம் ஒப்புக்கொடுக்கவும், சிரத்தை எடுத்துக் கொள்ளவும் வேண்டும்.

நாளைச் செய்குவம் அறம் எனில், இன்றே
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்,
இதுவென வரைந்து வாழும் நாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை –

என்பது சிலப்பதிகார வரிகள். இந்தப் பாடலில் கேள்விகளால் ஆனது நமது நல்லுயிர் என்றும், அதனால் எந்தக் நற்காரியத்தையும் நாளை செய்வோம் என்று ஒத்திப் போடுவது அறமாகாது, அதனால் இன்றே செய்வோம் என்று வலியுறுத்துகிறது. கடல் சூழ்ந்த உலகம் யாவிலும் இதுதான் எனது வாழ்க்கை, இதையெல்லாம் நான் முழுவதுமாகக் கற்றுத் தெளிந்தேன் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலாது என இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார்.

இயற்கை இல்லாமல் ஒரு கவிதை இயங்க முடியுமா? காவியப் பாடல்கள் அனைத்தும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் இல்லாமல் இயற்றப்பட்டிருக்கின்றதா? உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் வடிவம் இவற்றைக் கொண்டே பண்டையத் தமிழரின் காவியங்களாக உருப்பெற்றன. தமிழ்க் கவிதையியலை அய்யப்பப் பணிக்கர் திணைக் கவிதையியல் என்று அழைத்து அது எம்மொழி இலக்கியத்தை ஆராயவும் துணை செய்யும் என்று எழுதியும் பேசியும் வந்திருக்கின்றார். தகழி சிவசங்கரன் பிள்ளையின் ‘செம்மீன்’ நாவலை அம்மூவனாரின் நெய்தல் திணைப் பாடலொன்றோடு ஒப்பிட்டுக் காட்டித் திணைக் கவிதையியலின் பெருமையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

எது கவிதை. எப்படி எழுத வேண்டும் என்று உலகக் கவிஞர்களும் பலரும் பலவிதமாக கவிதையியல் குறித்த பார்வைகளை முன்வைத்துள்ளனர். சிலி நாட்டைச் சார்ந்த பின்நவீனத்துவ கவிஞரான நிக்கனார் பாரா சொல்கிறார். “கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சந்தேகமின்றி, இந்த நிபந்தனையுடன் வெற்றுத்தாளில் நீ முன்னேற வேண்டும்” என்று.

பாப்லோ நெரூதா சொல்கிறார். “அற்ப ஆயுள் கொண்டதானாலும், மகத்தானது ஆனாலும், கவிதை ஒரு உன்னதச் செயல்பாடு என்றே நம்புகிறேன்” என்று.

கீட்ஸ் சொல்கிறார். “கால்வாய் இல்லாத இடத்தில் பெய்யும் ஒளிமழையே கவிதை” என்று.

தமிழ்க் கவிஞர்களில் பிரம்மராஜன் சொல்கிறார். “அநித்தியத்திற்கெதிரான சதிதான் கவிதை. எனவே கவிஞனைக் காலம் காலமாய் தீர்க்கதரிசி என்று வரலாறு கூறி வருவது மிகைப்படுத்தல் அல்ல” என்கிறார்.

தமிழின் மூத்த வரலாறு மற்றும் மொழியியல் ஆய்வாளரான வையாபுரி பிள்ளை சொல்கிறார் “இது சிறந்த கவிதை என்று எளிமையாகச் சொல்லி விடுவதுபோல எது சிறந்த கவிதை எனச் சொல்ல முடியாது”

எனக்குப் பிடித்த இயற்கையை அடிப்படையாகக் கொண்ட நவீன கவிதைகள் சிலவற்றைப் பற்றி இங்கு பேசலாம்.

முதலாவது பிரமிள்

பிரமிள் நம் தமிழ் நிலத்திற்கான தமிழின மேன்மைக்கான அசலான கவிஞர். எழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டவர். எதைத் தொட்டுப் பேசினாலும் அதில் அறவுணர்வுடன் கூடிய சமகால அரசியல் வழுவாத தொலை நோக்குப் பார்வைகளை முன்வைப்பவர். படிமக் கவிதைகளில் முன்னோடி. படிமம் என்பது உவமை உருவகம் உவமேயத்திற்கு அடுத்தபடியான ஒரு இறுகிய வடிவம். நவீன கவிதைகளின் ஆதார சுருதியாக படிமங்கள் விளங்குகின்றன. கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளின் போது கிடைக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அழியாத செப்பேடுகளை, மண்பாண்டங்களை, அணிகலன்களை ஆராய்ச்சி செய்யும் துறையை நாம் படிமவியல் துறை என்கிறோம். அப்படித்தான் கவிதையிலும் படிமங்கள். முழு  வாழ்வின் பரிமாணத்தையும் கவிதைக்குள் விதைபோல உறையச் செய்யும் ஓரிரு சொற்களை படிமங்கள் என்கிறோம். படிமங்கள் காலமற்ற வெளிக்கு நம்மை அழைத்துச் செல்வன. கவிஞர் பிரமிள் பெருவாரியாக படிமங்களை இயற்கையிலிருந்தே தேர்ந்தெடுக்கிறார். கவிதையாக எழுதப்பட்ட பிறகு அது ஆழ்மனத்தை அகழாய்வுக்கு உட்படுத்திய ஏதோவொரு தத்துவ விசாரணைகளைக் கொண்டு விளங்குகின்றன.

அவரது புகழ்பெற்ற கவிதைதான் ‘காவியம்’ என்ற தலைப்பில் வந்த இந்த கவிதை

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது.

இந்தக் கவிதையில் சிறகு ஒரு படிமமாக வருகிறது. நேரடியாகப் பார்த்தோமானால் அது பறவையின் சிறகு. நுட்பமாகப் பார்த்தால் அங்கே ஒரு பறவை மட்டுமல்ல. ஒரு மனிதனின் முக்கியமான ஒரு காலகட்டத்தினைப் பிரதிபலிக்கும் நாவலைப் போல அல்லது சிறுகதையைப் போல அல்லது ஒரு சினிமாவைப்போல அந்தச் சிறகு எழுதிச் செல்வதாகப் பொருள்கொள்ள முடியும்.

‘கவிதை’ என்கிற தலைப்பில் பிரமிள் எழுதிய மற்றொரு கவிதை இது.

திமிங்கிலம் பிடிக்கக் கப்பலேறி
கடல் நீரில்
குழி பறித்தேன்.
வந்து கவ்வி
வசப்படுமென்று
புலிக்கு இரையாய்
தூண்டிற்புழு தொங்கவிட்டு
மரத்திலே காத்திருந்தேன்.
தூண்டில் துளிர்த்து
இலையில் ஊர்ந்து
வசமாயிற்று
புயல்.
நீர் சுழன்று குழிந்து
பிடிபட்டது
பிரளயம்.

என்ன இந்த ஆளு சம்பந்தமில்லாம எதையெதையோ இணைச்சுப் பேசுறாரு தோணும். கவிஞர்கள் அப்படித்தான் நண்பர்களே. எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டான் என்று பழமொழி இருக்கிறதல்லாவா. கடலில் யாராவது குழி பறிக்க முடியுமா, அற்பப் புழுவுக்குப் போய் ஒரு காட்டுப் புலி இரையாகுமா. என்றாலும் இந்தப் பைத்தியக்காரத்தனத்தில் இருந்து விடுகதை போன்ற இந்த வரிகளிலிருந்துதான் கவிதை உருவாகிறது.  இது இயற்கையுடன் கொண்ட பித்துநிலை.

முயற்சித்தது வசமாகவில்லை. ஆனால் பாருங்கள் மரத் தூண்டிலில் இலை துளிர்க்கிறது. புயல் வசமாகிறது. நீர் சுழன்று குழிந்தால் மீன்கள் என்ன விண்மீன்கள் முதல் திமிங்கிலங்களும் கிடைக்கின்றன.

இந்தப் படிமக் கவிதை மற்றொன்றையும் விளக்குவதாகப் படுகிறது. தூண்டில் என்பது நெடிய காத்திருப்பின் குறியீடாகக் கொண்டால் இந்தக் கவிதை வாழ்வின் மீது நம்பிக்கை கொள்வதற்கான ஒன்றாகவும் நாம் காணலாம். சாதாரணக் காத்திருப்பு அல்ல. உங்கள் மரத்தூண்டிலில் இலைகள் துளிர்க்கும் வரையிலான காத்திருப்பு. தாடி வளர்த்து தன்னைச் சுற்றி புற்று வளர்ந்து தவமிருக்கும் முனிவருக்கான காத்திருப்பு அது. உலகளாவிய மானுட விடுதலை குறித்த கனவு காணும் போராளிகளின் தவப்பயனுக்கான வரிகளாகவும் கருதலாம். பெரிதினும் பெரிது கேள் என்ற சொற்றொடர் பிரமிளின் இந்தக் கவிதைக்குப் பொறுந்தும்.

கவிஞர் யுவன் சந்திரசேகரின் கவிதை ஒன்று. தலைப்பு குறிப்பு.

கிளியென்று சொன்னால்
பறவையைக் குறிக்கலாம்
பச்சையைக் குறிக்கலாம்
மூக்கைக் குறிக்கலாம்
பெண்ணைக் குறிக்கலாம்
கூண்டுச் சிறையைக் குறிக்கலாம்
சமயத்தில் அது
கிளியையும் குறிக்கலாம்.

இந்தக் கவிதையில் கிளி என்பதை ஒரு குறியீடாகக் கொண்டு அது கற்பனையில் பல அர்த்தங்களைத் தருவதாகச் சொல்கிறார்.  நாம் அழகான பெண்களை மூக்கும் முளியுமாக இருக்கிறாள் என்கிறோம் அல்லவா. அதனால் கிளி பெண்களைக் குறிக்கிறது. கிளி என்று சொன்னதும் ஜோசியக்காரனின் கூண்டோ அல்லது சர்க்கஸ் கூண்டோ நினைவுக்கு வருகிறது. பார்க்கும் இடங்களிலெல்லாம் நந்தலாலா உந்தன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா என்று பாரதி பாடியது போல கிளி என்றவுடன் பச்சை நிறம் தெரிகிறது. பச்சை என்றால் ஒரு காட்டையும் குறித்து நிற்கிறது அல்லவா. பாடலின் இறுதியில் கிளி என்றால் சமயத்தில் கிளியையும் குறிக்கலாம் என்று முடிக்கிறார். இந்தக் கவிதையில் கவிஞர் யுவன் சொல்ல வருவது ஒரு உயிரை அல்லது ஒரு பொருளை முன்னிட்டு நமக்கு வரும் பல்வேறு கற்பனைகளையும் நினைவுகளையும் கூண்டு என்ற படிமம் அடைபட்ட கிளியை மட்டுமல்லாமல் பெண்ணடிமைத் தனத்தையும் சுட்டி அமைந்துள்ளதாகப் பார்க்கலாம். கடைசியில் கிளி சமயத்தில் கிளியையும் குறிக்கிறது எனும்போது கிளி என்பது ஒரு சொல்தானே அந்த உயிருக்கு நாம்தானே இப்படி பெயரிட்டிருக்கிறோம் என்பதாகி சொல் ஆராய்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்வதாகவும் படுகிறது. இப்படி கவிதைகளை அனுபவப் பூர்வமாக விரித்துச் செல்லும்போதுதான் அதன் பரிமாணங்களை நம்மால் சுவைக்க முடியும். இன்னும் ஒவ்வொருவருக்கும் அவர்களது பருவத்தையும் சூழலையும் முன்னிட்டு கவிதை என்னும் கலை ரகசியமான மனவோட்டங்களை நிகழ்த்த வல்லதாக இருக்கிறது.

அடுத்ததாக நமது பாட்டையா நகுலனுக்கு வரலாம். ‘பூ’ என்ற தலைப்பில் வரும் கவிதை. அதில் பின்பாதி வரிகளை இங்கே வாசிக்கிறேன். கவிதையியலுக்கான கவிதையாகவும் இதை நோக்கலாம்.

சொற்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா?
அல்லது கவிஞன் சொற்களைத்
துகிலுரித்துக் கொண்டே இருக்கின்றானா?
ஏதோ ஒரு வெறி
எங்கிருந்தோ ஒரு வேகம்;
“பூ” என்று உதறிச் சென்று
நான் என் பயணத்தைத் தொடர்கையில் கூட
அந்த சாக்ஷாத் சந்தர்ப்பத்தில் கூடப்
பூ என்னைக் கண்டு
சிரிக்கின்றது – தோன்றுகிறது.
“சாரலின் கடுஞ்சினத்தில்” கூடப்
“பூ மோகம்” உன்னைக் கைவிடுவதில்லை.
அர்த்தமற்றப் பெருவெளியில்
இதழ் இதழாக
ஒரு பெரு வெளியில்
இதழ் இதழாக
ஒரு பூ விரிவதைக் கண்டு
பூ என்று உதறி எழுந்து
போக விரைந்தவன்
பூ என்று சொல்லி
வாய்டைத்து நின்றேன்.

இந்தக் கவிதை மொழியின் மீது கொண்ட பித்தையும், அந்தப் பித்திலிருந்து வெளியேற முயன்றாலும் அது மீண்டும் தொடர்வதாகவும் சொல்கிறது. பூக்கள் குழந்தைகளைப் போலவே மகிழ்வித்துக் கொண்டிருக்கும். பூவைக் காணும்போதெல்லாம் நமது அகம் மலர்கிறது. குற்றாலம் தோட்டத் திருவிழாவில் மலர்க்கண்காட்சி நடத்தப்படுவது அதனால்தான்.  சிக்கல் மிகுந்த வாழ்க்கையின் தருணங்களில் என்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில் என்று சோர்ந்து ஒன்றிலும் நிலைகொள்ளாமல் தடுமாறும் வேளைகளிலும்  நாம் எதிர்பார்க்காத வேளையில் பூக்கள் தலையாட்டியபடி நம்மிடம் நலம் விசாரிக்கின்றன.  ஆனால் பூக்கள் இந்த வாழ்வைக் கொண்டாட அழைக்கிறது. ஆக கவிதைகள் நமக்கு வாழக் கற்றுக் கொடுக்கின்றன.  நம்மைச் சுற்றி நிகழும் அற்புத கணங்களைக் கண்டும் காணாமல் செல்லும் விரைவான பயண முடுக்கத்தில் நிதானத்தைக் கற்றுக் கொடுக்கின்றன.

அடுத்ததாக கலாப்ரியா. அவர் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் வசிக்கும் இடைகாலுக்குப் பக்கத்தில்தான் ஊர்மேனி அழகியான். கோவில்பட்டியில் வசிக்கிறேன் என்றாலும் எனது பூர்வீகம் இங்கேதான். கலாப்ரியா குற்றாலத்தில் நடத்திய பதிவுகள் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறேன். அதுதான் கடைசி கூட்டம். 2007 அக்டோபரில் நடந்தது. எனக்கான நவீன இலக்கிய நுழைவாயில் என்றே அந்தக் நாளைச் சொல்லலாம். கலாப்ரியா அவரது வீட்டு கல்யாண விசேசம் போல பழமையான அந்த ராஜா பங்களாவில் விருந்து உபசரிப்புகள் நிகழ்ந்தன.

நவீன இலக்கியத்தின் பல்வேறான போக்குகளை உள்வாங்கி எழுதிய கவிதைகளின் காவியச் செறிவு கொண்டிருந்தன.  வர்ணனை பகடி சித்திரம் கலாப்ரியா கவிதைகளில் பிரதிபலித்தன. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை, அரசியல் சூதாட்டங்களுக்கு இடையில் அல்லல்படும் எளிய மனிதர்களின் அன்றாடப் பாடுகளை எதிரொலித்தன. காதலை,  பாலுணர்வின் வேட்கைகளை, வாழ்வின் அபத்தத் தருணங்களை தனது கவிதைகளில்  நிர்வாணப்படுத்தியவர் என்ற வகையிலும் முன்னோடி கவிஞராகத் திகழ்கிறார்.

குற்றாலம் என்றதும் பொதுவாக எல்லோருக்கும் அருவி நினைவுக்கு வரும். பிறகு குரங்கு நினைவுக்கு வரும். குரங்கு என்றதும் எனக்கு கலாப்ரியா கவிதை ஒன்று நினைவுக்கு வரும்.

ஆகப் பெரிய உயரங்களை மறந்தது
கூத்தாடியின் தோள் குரங்கு.

கலாப்ரியாவின் மற்றொரு கவிதை ‘எம்பாவாய்’ எனும் தலைப்பில் வருகிறது.

நேற்று மாலை
சூரியன் கடைசியாய்
முத்தமிட்ட
உடைமரப் புதர்களை
யாரும் வெட்டியிருக்கக்
கூடாதென்றபடி.

காளை மாட்டுக் காலில்
ஒட்டியிருக்கிற அட்டைக்காய்
நாக்கு நீட்டி ஏமாந்த தவளை
இடைத் திட்டுகளில் ஏறி
கெடத் துவங்கும் கால்வாயில்
புதுநீரைக் கனவித்தபடி;

காவல் வருகிற
கருப்பு நாயை
பொதி சுமந்து
உணவு மறுத்த
ஊரோரக் கழுதைகளிடையே
விளையாடப் போக
விடக் கூடாதென்றபடி.

ஆரஞ்சு நிறச் சூரியன்
பாதி அம்மணத்தைப்
பார்த்துவிடக் கூடாதென்றபடி
வருகிற பாதையை
இருட்டால்
வழி மறைத்துவிடக்
கூடாதென்றபடி…
கொஞ்சம் சிரித்துப் பேசினபடி…

நகரோரத்துக்
குடிசைப் பெண்கள்
ஆண்டாளின்
வம்சங்கள்
சொறி உதிர்க்கும்
கறுப்பு நாயைத்
துணைக் கழைத்து
ஊரை விட்டு
வெளியே
கக்கூஸ் தேடிப்
போவார்
கருக்கலில்.
கொஞ்சம் சிரித்துப் பேசினபடி.
ஸ்ரீமத்…. அருளிச் செய்த
திருவெம்பாவை.

வைதீக பக்தி மார்க்கத்தில் கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் சிவபெருமானைத் துதித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பாக திருவெம்பாவை. அதிகாலையில் சோம்பல் முறித்து இறைவனைத் துதிக்க தோழியரைக் கூட்டிச் செல்வதாக அமைந்த பாடல்கள் அவை. அதை பின் நவீனத்துவப் பார்வையில் எளிய குடிப் பெண்களின் அன்றாடப் பிரச்சினையின் ஊடாக புனைந்து எழுதப்பட்ட பாடல்தான் இது. நாத்திகச் சாயல் கொண்ட சிந்தனையாகவும் இந்தப் பாடலைக் கொள்ளலாம்.

உடைமரப் புதர்களை யாரும் வெட்டியிருக்கக் கூடாது. துணைக்கு அழைத்துச் செல்லும் கறுப்பு நாய் கைவிடப்பட்ட கழுதைகளைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே விளையாடச் சென்றுவிடக்கூடாது.கெட்டு வற்றிப் போனாலும் கற்பனையில் தவளையைப் போல கால்வாயில் புதுநீர் பற்றிய கனவு வரவேண்டும் இப்படிச் சிரித்தபடி பேசிக் கொண்டே காலைக் கடமையைக் கழிக்கச் செல்கிறார்கள் தோழிகள். இது கலாப்ரியாவின் ‘எம்பாவாய்’ கவிதை.

அடுத்ததாக இயற்கை பற்றிய தேவதச்சன் கவிதை.

ஒரு இடையன்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஆனால்
எண்ணிறந்த தூக்குவாளிகள்
எண்ணிறந்த மழைகள்
எண்ணிறந்த தலைப்பாகைகள்
எண்ணிறந்த காற்றுகள்
எண்ணிறந்த தொரட்டிகள்
எண்ணிறந்த பகல்கல்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ரயில்வே கேட் அருகில்.

இந்தக் கவிதை ஒரு பாடல் போல ராகமியற்றி வருகிறது. பதிமூன்று வரிகளில் பத்து பனிரெண்டு ஆடுகள் ரயில்வே கேட் கிராசிங்கில் காத்திருப்பின் பின்னணியை தேவதச்சன் படம்பிடித்துக் காட்டுகிறார். எண்ணிறந்த என்று திரும்பத் திரும்ப வரும் வரிகளில் வெவ்வேறு இடப்பெயர்வு தொழிலாளிகளின் எண்ணிறந்த வாழ்க்கைச் சூழலையும் எடுத்தாள்வதாக இந்தக் கவிதையைக் கொள்ளலாம்.

அடுத்ததாக எனக்கு முன்னால் ‘வாசிப்பது எப்படி’ என்ற தலைப்பில் பேசி அமர்ந்திருக்கின்ற கவிஞர் போகன் சங்கருடையது. நாம் தொலைத்த மழலைப் பருவத்தை கண்ணீருடன் அசைபோடுவதாக வரும் கவிதை இது.

வானவில்லின் மறுபுறம் மிதக்கும்
நீலப் பறவைகள் போல நம் குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஆழக் குதிக்கும் ஆற்றில்
நாம் அவர்கள் தற்காலிகமாகத் தாவி நிற்கும்
ஒரு பாறையெனவே நிற்கிறோம்.
நம்மிடமிருந்து உந்தி எழுந்து பறந்து
உன்னைவிடவும் உன்னைவிடவும்
அவர்கள் பிரபஞ்சத்தை இன்னும் கூர்மையாக அறிவார்கள்.
நீண்டதூரம் பறப்பார்கள்.
பாறைகள் பறப்பதில்லை தான்
ஆனாலும் யார் கண்டது?
அவர்கள் நம்மையும் பறவையாக்கும்
ஒரு சொல்லோடு என்றேனும்
திரும்பி வருவார்கள்”.

இந்தக் கவிதையில் வரும் பாறை என்ற படிமமானது நமது இளமை கடந்த கனிந்த பருவமாகக் கொள்ளலாம். இப்போது குழந்தைப் பருவத்தில் கிடைத்த வியப்புகளில்லை. அதனால் நம் குழந்தைகளுக்காக முதுகு வளைக்கிறோம். அவர்கள் நம்மீது ஏறிப் பறக்கின்றார்கள். நாம் காத்திருக்கின்றோம். அவர்கள் வனாந்திரமெல்லாம் சுற்றித் திரும்பி வந்து நம்மைப் பறவையாக்கும் சொற்களுக்காக.

அடுத்ததாக சங்கர ராம சுப்ரமணியன்

காலங்கள்
மூகூர்த்தங்கள்
வேளைகள்
தாண்டி
அருவியில்
குளித்துக் கொண்டிருக்கின்றன
குற்றாலத்து லிங்கங்கள்.
எப்போதும் குளிக்கும் குற்றாலத்து லிங்கங்கள்.

இந்தக் கவிதை மேலோட்டமாகப் பார்த்தால் அருவிப் பாறையில் வடிக்கப்பட்ட லிங்கங்கள் என்பதாகப் புரிய நேரலாம். ஆனால் கோயிலுக்குள் குற்றால நாதருக்கு வழங்கப்படும் சுக்கு நீர் வைத்தியத்தியத்திற்கும் இதற்கும் சம்பந்தப்படுத்த முடியாது. கவனிக்க வேண்டும் இந்த லிங்கங்கள் சீசன் இல்லாத காலங்களிலும் குளித்துக் கொண்டிருப்பது.

மிதக்கும் இருக்கைகளின் நகரம், காகங்கள் வந்த வெயில், சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை, அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க் குட்டிகள்,  ராணியென்று தன்னையறியாத ராணி என்று தனது தொகுப்பின் தலைப்புகளிலேயே பெரும் கவித்தெறிப்பை நிகழ்த்திக் காட்டியவர் சங்கர்ராம சுப்ரமணியன். அவரது மற்றொரு கவிதை இது.

ராணியென்று தன்னையறியாத ராணி

மலைச் சரிவிலுள்ள
அந்தச் சிறுவீட்டின்
வாசல் படியில்
கன்னத்தில் கைபதித்து
மென்சோகத்துடன்
காத்திருக்கிறாள்
ராணியென்று
தன்னையறியாத
ராணி.

இந்தக் கவிதை வாசித்த சில மாதங்களுக்குப் பிறகு கொடைக்கானல் மலைக்குச் சென்றிருந்த நேரம் அது. மலைச் சரிவில் கட்டப்பட்ட ஏதோ ஒரு சிறிய வீட்டு வாசல் முன்பு யாரோ ஒரு சிறுமியைக் கண்டுவிட மாட்டாமோ என்று என் கண்கள் தேடியது. ஆம் இந்தக் கவிதை நம்மை இயற்கையின் அழகைக் கொண்டாட அழைக்கின்றன. அப்படியான தருணங்களைக் கொண்டாடத் தெரிந்தவர்கள் அனைவரும் ராஜாக்கள்தான்.

அடுத்ததாக வண்ணதாசன்

ஒரு நட்சத்திரத்தின் பெயரைக் கூட
எனக்குச் சொல்லத் தெரியாது
இந்த வானத்தின் கீழ்தான்
இத்தனை ஆண்டுகள்
வாழ்ந்து வருகிறேன்.
நட்சத்திரம் தெரிவதற்கு
தெரிய வேண்டியதில்லை
நட்சத்திரத்தின் பெயர்.

இந்தக் கவிதை சினிமா நட்சத்திரங்களின் மீது கொண்ட வெறிபிடித்த ரசிக மனநிலையைக் கிண்டல் செய்வதாகவும் நாம் கொள்ளலாம். கவிஞர் நட்சத்திரங்களின் பெயர்களை அறியாமலா இருப்பார். என்றாலும் பொய் சொல்லிவிட்டு பிறகு சரி செய்ய வருகிறார் கடைசி வரியில். கவிஞர் சொல்ல விரும்பியது இதைத்தான்… நட்சத்திரம் எதுவும் தனக்கு பெயர் சூட்டிக் கொண்டதில்லை. தண்ணொளி பொருந்திய அழகுக்காக அது பெருமைபட்டுக் கொண்டதில்லை. அப்படியே நானும் வாழ்ந்துவிட்டுப் போகிறேன் என்பதுதான்.

அடுத்தது விக்கிரமாதித்தன்

அருவியை நீர்வீழ்ச்சி என்று
யாரேனும் சொல்லிவிட்டால்
மனம் பதறுகிறது.
என்ற புகழ்பெற்ற வரிக்குச் சொந்தக்காரர் விக்கிரமாதித்தன். சங்கர் ராம சுப்ரமணியன், வண்ணதாசன் வரிசையில் அடையாளங்களை மறுக்கும் மற்றொரு கவிதை இது.

அருவி

யாருக்கும் சொந்தமில்லை
அதனால்
அருவிக்கு யாரும் அன்னியமில்லை.

விழுவது தவிர்த்து
வேறு லட்சியமென்ன உண்டு
அருவிக்கு.

குளிர்ச்சியும் தெளிவும் அதன்
குணங்களல்ல இயற்கை.

அரசுகள் மாறுவதும்
ஆட்சியாளர்கள் புதிதாக வருவதும்
அதற்கொரு விஷயமேயில்லை.

அருவியின் எல்லைக்குள் யாரும்
செய்தித்தாள் மேய்வதோ
அரசியல் பேசுவதோ இல்லை.

அருவியிடம் கோபம் கொள்வோர்
யாருமில்லை.
அவசியமென்ன இருக்கிறது அதற்கு.

அருவி வாழ்தல் பயம் அறியாதது
அதனால்
சுரண்டல் தெரியாதது.

அத்வைதம் மார்க்ஸியம்
ஸ்ட்ரக்சுரலிசம்
எதுவும் தெரிந்து கொள்ள வேண்டிய
ஹிம்சையற்றது அது.

ஆயிரம் தடவை
அருவியில் குளித்தாலும்
யாருக்கும் ஏன்
புத்தி வருவதில்லை?

விக்கிரமாதித்தனின் இந்தக் கவிதை அருவிக்கு முன்பு எல்லோரும் சமம். மூலிகை சிகிச்சை என்று சொல்லி நீராடுவோர் யாருக்கும் இது ஏன் தெரிவதில்லை என்று கேள்வி எழுப்புகிறார். அருவி என்றால் அருவி மட்டுமா இந்த வாழ்வே எல்லோருக்குமான ஒரு கொடையல்லவா. மனிதனுக்கு இயற்கை கற்றுக் கொடுக்கும் பாடமாகவும் இந்தக் கவிதையைக் கொள்ளலாம்.

நிறைவாக இதே பாடுபொருள் வரிசையில் நான் எழுதியது. தலைப்பு ‘பூச்சி’.

இந்தப் பூச்சியை
இதற்குமுன் பார்த்திருக்கிறீர்களா
எண்ணிலடங்கா கால்கள் கொண்ட
குட்டி வேதாளம் போல.
வடதுருவம் தென்துருவம்
கீழை மேலை எல்லாம் கடந்தது
கடக ரேகை மகர ரேகை
பூமத்திய ரேகையெல்லாம் அறியும்
அதனால் ஒரு கர்வக் கிறுக்கு.
இதைப் படம் பிடித்து
கூகுளில் தேய்த்தோ
அகராதியைப் புரட்டியோ
ஒருவேளை
கண்டுபிடிக்க முடியலலாம்.
ஆனாலும் நீங்கள்
என்ன பெயரிட்டு அழைத்தாலும்
திரும்பிக்கூட பார்க்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *