கீரனூர் ஜாகீர் ராஜா அவர்களின் எழுத்தில் எனக்கு முதன் முதலில் அறிமுகமாகியது ஹலால் சிறுகதை .. இக்கதையின் முதல் வரியிலேயே நாயகியின் பெயர் அவளது வயது அவளுக்கு பிடித்தமானநிறம் அவளது வீட்டை என்னவென்று அழைப்பர் என்பதை சுருக்கமாக கூறிவிடுகிறார் .. எண்பதுதொண்ணூறுகளின் வாசகர்கள் மட்டுமல்ல இக்கால வாசகர்களுக்கும் பிடித்தமான விசயம் எதையும் சுற்றிவளைக்காமல் இப்படி நேரடியாக விசயத்திற்கு வருவது தான் ..
கதையின் நாயகன் இப்ராகிம்க்கு ஜூலியை பிடிக்கும் .. அவளை மட்டுமல்ல அவளது சர்ச் வீட்டையும் பிடிக்கும் .. அதற்கு 7 காரணங்கள் கூறியிருப்பார் .. படிக்க படிக்க உங்கள் கண்முன்னே அந்த சர்ச் வீடு தோன்றும் .. நம் கற்பனைதிறன் விரியும் ..
முரட்டுச் சேவல் வாங்க கடைக்கு செல்லும் இப்ராகிம் அதை மறக்க கூடாதென சுலோகம் போல சொல்லி செல்வது நம் பால்யகாலத்துக்கு இட்டுச் செல்கிறது .. அம்மா வாங்கி வர சொல்லி அனுப்பிய பொருளை இப்படித்தானே சொல்லிக் கொண்டே செல்வோம் ..
இறைச்சி கடையில் நுழைந்ததும் வீசிய பரிமளத்தில் கிறங்குகிறான் இப்ராகிம் .. நாமும் கூடவே கிறங்குகிறோம் ..
ஜூலிக்காக அவன் பைபிளின் இரண்டு வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருப்பான் .. காதல் பைபிளையும் கற்றுத்தருகிறது ..
ஜூலி வளர்த்த கிளிகள் .. அதிலொன்றை அவள் பறிகொடுத்தது .. மிஞ்சியிருந்த கிளியின் சிறகுகளை பத்திரப்படுத்துவதெல்லாம் கவிதை
ஜூலி அலங்காரம் செய்து கொள்வதை பார்ப்பது நாடகத்தை பார்த்தனுபவிக்கும் பரவசத்தைக் கொடுத்தது இப்ராகிமுக்கு என்பது நல்ல உதாரணம் ..
இவரின் எழுத்து எளிய மனிதர்களின் வாழ்வியலை பதிவு செய்வதாய் உள்ளது .. அவரின் மீன்காரத் தெரு நாவல்இஸ்லாமிய அடிதட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவும் அம்மக்களின் சமூக வர்க்கபேதத்தையும் அவர்களுக்கிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கூறுவதாகவும் உள்ளது .. ஒவ்வொரு புத்தகத்திலும் இவருக்கான அரசியல் ஒளிந்திருக்கிறது .. இவரின் மீன்காரத் தெரு நாவலே அதற்கு உதாரணம் .. அடித்தட்டு மக்களின் குரலை அவர் எழுத்துக்களின் மூலம் உரக்கச் சொல்கிறார் ..
ஒரு கட்டமைப்பில் வாழும் இஸ்லாமியப் பெண்ணொருத்திக்கு சுதந்திரம் கொடுத்தால்எப்படியிருக்குமென கற்பனை செய்தாள் அதுதான் வடக்கேமுறி அலிமா ..அலிமாவை எண்ணத்தில்வைத்து எழுத்தில் கொண்டுவர எத்தனை வைராக்கியம் வேண்டும் ! ஏன் இவ்வாறு கூறுகிறேனெனில் .. பெண் என்பவள் பெண்மை நளினம் தாய்மை என ஏதேனும் ஒரு வழியில் வரையறுக்கப்பட்டவளாகவே இருக்கிறாள் .. பெண்களுக்காக எழுதப்பட்ட கதைகளிலும் கூட அவளுக்காக பேசுவதும் ஆணுக்கு நிகரானவள் எனவும் சமத்துவம் பேசுவதுமாகத்தான் இருக்கும் .. வரையறுக்கப்படாத சுதந்திரமான ஒருபெண்னைப் பற்றி நாம் அதிகம் கற்பனை கூட செய்து இருக்க மாட்டோம் .. அதிலும் அலிமா மெய்யியல்தேடல் கொண்டவள் .. அவளை மனதில் நிறுத்தி எழுதுவதென்பது அசாதரணமான காரியம் .. நிஜமாகவே அதற்கென தனி ஆற்றல் வேண்டும் ..
ஒரு ஆண் தனியாகவோ குழுவாகவோ மிக சுலபமாக பயணம் செய்ய முடியும் .. அதுவே ஒரு பெண்ணிற்குஅது அவ்வளவு சுலபமில்லை .. அதிலும் தனியே பயணம் என்பது கானல்நீரே .. பொருள் பணம் தாண்டிய தேடல் என்பது ஆண்களுக்கே சவாலான விசயமெனில் பெண்ணிற்கு ! அத்தடைகளைஉடைத்தெறிபவளாக அலிமாவின் பயணம் ஆரம்பமாகிறது ..
கொச்சியிலிருக்கும் அலிமா யார் ? பட்சியா யட்சியா நீலியா திருடியா கஞ்சா விற்பவளா தலாக்கொடுக்கப்பட்டவளா அல்லது மனப்பிறழ்வு கொண்டவளா யாரிவள் !
அலிமா பேரழகி தேவதை இனத்தவள் .. ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் அலிமாவாய் மாறி பயணம் செல்ல ரகசிய ஆசையுண்டு .. மறுப்பதிற்கில்லை .. பயணம் அதுவும் தனியே ஒரு பெண் பயணம்செய்தாளேயானால் அவளது பெண்மைக்கு பாதுகாப்பு என்னவென கேள்வி வரும் … அதை அலிமாவின் பயண துவகத்திலேயே ஆசிரியர் நமக்குத் தெளிவு படுத்தி விடுகின்றார் .. அவளது பயணம் ஒரு தேடல்அவ்வளவே .. சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்களே அது போல ..
சரி பயணிப்பவள் அவ்வளவு தானே எனில் இல்லையே .. அப்படியும் இல்லை .. அவள் திரைப்படத்தில்நடிப்பவள் .. கதை எழுதுபவள் .. கதாசிரியை .. அவளை நீங்கள் எதற்குள்ளாகவும் வைத்து பூட்டி விடமுடியாது ..
நேற்றொரு நண்பன் இன்றொரு நண்பன் நாளையொரு நண்பனென சமூகம் கிழித்து வைத்த கோட்டைதாண்டிச் செல்பவளாக இருக்கிறாள் ..
அலிமாவை எழுதியவர் எத்தனை முற்போக்கான அல்லது அதையும் தாண்டிய மனிதராய் இருக்க வேண்டும்.. ஒரு பெண்ணின் அக ஓட்டங்களை மிக இயல்பாய் அலிமாவில் பதிவு செய்திருக்கிறார் ..
அவர் எழுத்துக்கு ஒரு வாசமுண்டு .. வடக்கேமுறி அலிமாவில் அஹமது அன் கோ வில்வேலையாட்களுக்கு போடப்படும் மூன்று வேளை சாப்பாட்டை வர்ணித்து அவர் எழுதி இருக்கும்எழுத்துக்கென தனி வாசனையுண்டு .. அது படிக்கும் நம்மையும் பசியாற்றும் ..
வடக்கேமுறி அலிமாவைப் படித்தவர்கள் போகும் வழியெங்கும் அலிமா தென்படுகிறாளாவென தேடுவதுஉறுதி ..
எச்சரிக்கை : அலிமாவைப் படிக்கும் முன் ஒரு சிறு இதய நடுக்கத்திற்கு தயாராக இருங்கள் ..
கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் தனித்துவமென்பது அடித்தட்டு மக்கள் மனதின் எண்ணங்களின் வண்ணங்களை தனது எழுத்தில் மயிலிறகாய் வருடுவதே.