துருக்கித் தொப்பி- நாவல் குறித்து

நவீன இலக்கியப் படைப்புகளில் மொழியின் பங்கு பிரதானமானது. மொழி வகுக்கும் பாதைகளினூடாகத்தான் எழுத்தாளனும் பயணிக்கிறான். வாசகனும் பயணிக்கிறான். ஒரு படைப்பை பிரம்மாண்டமானதொரு மாளிகை என்றால், மொழியே அதன் வாயில் எனலாம். அந்த வாயிலைத் திறந்துவைப்பதும் மூடிவைப்பதும் படைப்பாளிக்கு விடுக்கப்பட்ட சவால். வாசகனின் பார்வையில், திறந்துவைக்கப்பட்ட வாயில் என்பது அவனது நல்லதிர்ஷ்டம், மூடிவைக்கப்பட்ட வாயில் என்பது அவனது துரதிஷ்டங்களில் ஒன்று. சிறிது நேரம் கதவைத் தட்டிவிட்டு காத்திருக்கலாம். அதைத் தாண்டி அவனால் ஏதும் செய்துவிடமுடியாது. நாவலில் இது மேலும் முக்கியமானதாகிறது. திறந்துவைக்கப்பட்ட மாளிகையில் வாசகன் காலப் பிரக்ஞையின்றி சஞ்சரிக்கமுடிகிறது. அந்த நாவல் காட்டும் வாழ்க்கையில் தானும் இடம்பெற்று அதன் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்டு, அந்த அனுபவத்தைத் தன்னுடைய சேகரங்களில் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ள இயல்கிறது.

திரு கீரனூர் ஜாகிர் ராஜாவின் முதன்மையான பலம் என்பது அவரது மொழியே. எந்தச் சிக்கலுமில்லாமல் வாசகனுக்கான தன்னுடைய படைப்பு வாயிலைத் திறந்து வைத்திருக்கிறார். அதே சமயம் அவரது மொழி தீவிரமானதாகவும் இருக்கிறது. எகிற வேண்டிய இடத்தில் எகிறியும் குழைய வேண்டிய இடத்தில் குழைந்தும் அது ஓர் முன்னறியாத மாயத்தை நிகழ்த்துகிறது. எளிமையாக எழுதுகிறேன் என்று தட்டையாக நீர்த்துப் போன நடையில் எழுதி வாசகனை ஏமாற்றும் ஜாலக்கார எழுத்தில்லை இது. அசல் சரக்கு.

அதிலும் அவரது “துருக்கித் தொப்பி” நாவல் காட்டும் உலகம் மேலும் அசலானது. இசுலாமிய வாழ்க்கையை நவீனத் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யும் கலைஞர்களில் எனக்குப் பிடித்தமானவர்கள் தோப்பிலும் ஜாகிர் ராஜாவும். தோப்பில் நாஞ்சில் வட்டாரக் கடற்கரையோரத்து முஸ்லீம் மக்களின் வாழ்வைத் தன் படைப்புகளில் பிரதானமாகப் பதிவு செய்தார். ஜாகிர் ராஜாவின் உலகம் என்பது அவர் சார்ந்த கீரனூர் மற்றும் பழனி வட்டாரத்து தமிழ் முஸ்லீம்களின் வாழ்க்கை. இசுலாமிய எழுத்து என்பது ஒரு மேலோட்டமான அடையாளத்துக்காகத்தான் சொல்லப்பட்டதேயன்றி அவர்களை அதற்குள் குறுக்குவதற்காகச் சொல்லப்பட்டதல்ல.  அதற்கு வெளியேயும் காத்திரமான படைப்புகளை அளித்தவர்கள் இவர்கள்.

கதையைத் தாண்டி இந்த நாவலில் என்னை ஈர்த்தது இதில் உள்ள வரலாற்றுப் பண்பாட்டுக் குறிப்புகள். இதிலுள்ள திராவிடக் கட்சி அரசியல் வரலாற்றைச் சொல்லவில்லை. அது எல்லோருக்கும் ஏறக்குறைய தெரிந்ததுதான். ஆனால், முஸ்லீம் குடும்பத்தில் இந்துப் பெயர்கள் இருப்பதை நான் இந்நாவல் மூலம்தான் அறிந்து கொண்டேன். பட்டம்மாள், மல்லிகா, பொன்னுதாயி போன்ற பெயர்கள் யாவும் எனக்கு ஒரே சமயத்தில் புதிராகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. பின்னர், நாவலின் ஓர் இடத்தில் இவர்கள் முன்னர் பத்தாயத்தில் இருந்து வந்தவர்கள் என்பதும் குடும்பமாக வெள்ளையம்மாளின் தர்ஹாவிற்குச் சென்று வழிபடுவதையும் வாசித்தபோது எனக்கு இதற்கான விடை கிடைத்தது.

எங்கள் தேனி மாவட்டத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நிலவி வரும் மத நல்லிணக்கம் நிறைவேற்படுத்துவது. நானறிந்து இந்துக்களுக்குள் சில சாதியினரிடையே கலகம் ஏற்பட்டதுண்டு. ஆனால் இன்றுவரை இந்து முஸ்லீம் கலகம் ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது என்றும் நம்பிக்கையுடன் சொல்லமுடியும். உத்தமபாளையம் என்ற ஊரில் பெருவாரி முஸ்லீம்கள்தான். அவர்கள் நடத்தும் ஹாஜி கருத்த ராவுத்தர் என்ற கல்லூரியில்தான் அந்த மாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலும் இருந்து வரும் இந்துக்கள் படிக்கிறார்கள். ஏதேதோ காரணங்களால் பயந்து போன அல்லது நோய்மையில் மெலிந்து போன குழந்தைகளை இன்றும் எங்கள் ஊர் பள்ளிவாசல்களில்தான் மந்தரிக்க எடுத்துச் செல்கிறோம். தமிழ்நாட்டில் பல ஊர்களிலும் இந்த வழக்கம் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் வணங்கும் என் குரு இஸ்லாமிய சூஃபி மரபில் இருந்து வந்தவரே.

இஸ்லாமியர்களின் பல்வேறு பிரிவுகளையும் அதனதன் பெயர்களையும் அறிந்து வைத்திருந்தாலும் அவர்கள் வாழ்வையும் பண்பாட்டையும் இந்த நாவல் மூலம்தான் அணுகியறிய முடிந்தது. வரலாறு காட்டும் சித்திரம் வேறாகவும் அன்றாடம் காட்டும் சித்திரங்கள் வேறாகவும் இருக்கின்றன. உதாரணமாக, லெப்பை என்பவர்கள் மறை ஓதுபவர்கள். வழிபாட்டுத் தலங்களில், வழிபாட்டுச் சடங்குகளில் மறை ஓதும் லெப்பைகளின் இடம் முக்கியமானது. நாவலில், நாகூர் தர்காவில் குரான் ஓதுகையில் ஓரிடத்தில் ஜொஹரப்பா தடுமாறும்போது அவளது தங்கை அவளைத் திருத்துகிறாள். இதைப் பார்த்த அவர்களது தாய் ரஹீமா, ஜொஹரப்பாவின் தொடையில் கிள்ளி, “லெவப் புள்ளையாடி நீ.. என ஏசுகிறாள். பொதுவாகவே லெப்பைகள் மதிப்புக்கிரியவர்கள் என்பதே வரலாறு சொல்வது. ஆனால், நாவலின் அன்றாடத்தில் பட்டம்மாள் நூர்ஜகானின் குடும்பத்தை அவர்கள் மாட்டுக் கறி தின்னும் பழக்கத்தைச் சுட்டிக்காட்டி “என்ன இருந்தாலும் லெவக்கூட்டந்தான.. மாட்டுக்கறி திண்டு மசை ஏறிக் கெடக்கறவுளுக” என்கிறாள்.  ஜொஹரப்பாபை மணம் பேச வந்திருப்பவனைக் காட்டி ரஹீமா தன் கணவனிடம் “பட்டாணியா கிட்டாணியா இருக்கப் போறேங். அதுவேற வம்பெழவு” என்கிறாள். இதுபோல இஸ்லாமிய சமூகத்தில் நிலவும் பல்வேறு உள்முரண்கள், மேல் கீழ் அடுக்குகள், விருப்பு வெறுப்புகள் யாவும் இந்நாவலில் அசலாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

வரலாற்றில் “ராவுத்தர்” என்பவர் அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டிற்குமிடையே  குதிரை வாணிகம் செழித்திருந்தபோது அங்கிருந்து இங்கு வந்தவர்கள் என்ற செய்தி கிடைக்கிறது. அது போலவே “மரக்கல ராயர்” என்ற பெயர் காலப்போக்கில் மருவி “மரைக்காயர்” என்றானது. இவர்கள் மரக்கலத்தில் சென்று வாணிபம் செய்து பொருளீட்டியவர்கள் என்ற குறிப்பும் கிடைக்கிறது. “பட்டாணியர்” என்பவர் உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களுக்கும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் முஸ்லீம்களுக்கும் எந்தவிதமான மண உறவுகளும் இருப்பதில்லை.  இந்தப் பின்னணியில் வைத்து வாசித்தால் “பட்டாணியா கிட்டாணியா இருக்கப் போறேங்.” என்ற ரஹீமாவின் சொற்களின் பின்னுள்ள அர்த்தம் புரிகிறது. கேரளத்திலும் தங்ஙள், கோயாக்கள், மாப்ளா வகையறா போன்ற உட்பிரிவுகள் இருக்கின்றன. தங்ஙள் என்பவர்கள் மந்திரம் ஓதுபவர்கள், பில்லி சூனியம் போன்ற மாந்தரீக வேலைகளில் ஈடுபடுபவர்கள் என்று அறிய முடிகிறது. (மாப்ளா வகையினரைப் பற்றிய சில தகவல்கள் இவரது சாமானியர்களைப் பற்றிய குறிப்புகள் நாவலில் இடம்பெறுகின்றன.  ஜெயமோகனின் பத்து லட்சம் காலடிகள் என்ற சிறுகதையையிலும் மாப்ளா வகையினரைக் குறித்த தகவல்கள் இருக்கின்றன).

நாவலில் என்னை ஈர்த்த இன்னொரு விஷயம், கிறிஸ்துவத்துக்கும் இஸ்லாமிற்கும் இடையே உள்ள சில ஒற்றுமைகளைத் துலக்கமாகச் சொல்வது. இரண்டுமே ஆபிரகாமிய மதங்கள் என்றாலுமே, அதிலுள்ள சில பெயர் ஒற்றுமைகளை இந்நாவல் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. யூத- கிறித்துவ- இஸ்லாமிய வரிசையை இந்நாவல் நினைவூட்டுகிறது. குரான் முக்கியத்துவம் கொடுத்துப் பேசும் இருபத்து ஐந்து இறைத்தூதர்களில் நபிகள் நாயகம் அவர்களே கடைசி இறைத்தூதர். அவருக்கு முந்தைய இறைத்தூதராக ஈஸா என்ற ஏசு இருந்தார் என்பது என்னைப் போன்ற தகவல்கள் எண்ணற்ற பொது வாசகர்களுக்குப் புதிய செய்தியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இரு மதத்துக்கும் உள்ள பொதுவான சில பெயர்களை (ஆப்ரகாம்-இப்ராஹிம், சாலமன் சுலைமான், ஜோசப் யூசுப், ஐசக்- ஈசாக், பாத்திமா) நூர்ஜஹானிடம் ரூபன் பட்டியலிடுகிறான். இதற்கெல்லாம் மதவாதிகளிடம் இருந்து ஆசிரியருக்கு நிச்சயம் பல எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும்.

கேபிஷே ஒரு சுகவாசியாகத்தான் நாவல் முழுக்கத் தோன்றுகிறார். முன்னோர் கஷ்டப்பட்டு சேகரித்த செல்வத்தை தான்தோன்றித்தனமாகச் செலவழித்து அழிக்கவே பிறந்தவர். இப்படிப்பட்டவர்களின் சாபக்கேடு என்பது தான் மட்டுமல்லாது தன்னோடு சேர்ந்தவர்களையும் அழிவில் தள்ளுவதுதான். அதுவே இந்த நாவலில் நடக்கிறது. சினிமாவிலும், பெண்களிலும் செல்வத்தை இழப்பது. சுகவாசி செல்வந்தர்களுக்கேயுரிய பல மோஸ்தர்கள். ஆர்மோனியம், மர்லின் மன்றோ படம், அது தவிர தகாத பெண் சேர்க்கைகள், சிறுவர்களுடனான ஒருபால் உறவு, மருமகள் தன் குழந்தைக்கு பால் தருவதையும், அவள் தன் அடிவயிற்றை வருடிப் பார்ப்பதையும் மறைந்திருந்து பார்ப்பது என சகல கீழ்மைகளின் அம்சமாகவே நாவல் முழுக்கத் தோன்றுகிறார். எட்டுக்கல் வீட்டில் மாடியின் உயர்ந்த தளத்தில் வசிக்கிறார், ஆனால் வாழ்க்கையில் தாழ்ந்த தளத்திலேயே நின்றுலவும் கதாபாத்திரமாக இருக்கிறார்.

ஆண்கள் செய்யும் தவறுகளினால் பாதிப்புக்குள்ளாகிறவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். வாழ்க்கையிலும் இந்த நாவலிலும். அதிலும் முஸ்லீம் குடும்பங்களில் பெண்களுக்கான வெளி என்பது மிகவும் குறுகியது, முழுக்க முழுக்க ஆண்களின் கட்டுப்பாட்டிலேயே வாழ விதிக்கப்பட்டவர்கள், அவர்களைத் தாண்டி எதுவும் செய்யமுடியாதவர்களாகவே இருக்கிறார்கள். அனைவரையும் ஆட்டிப் படைக்கும் பட்டம்மாளும் கூட முறை மீறிய உறவுகளில் திளைக்கும் கணவனைத் தண்டிக்க முடியவில்லை. பேசும்போது குத்திக்காட்டுவதுதான் அவளால் இயன்றது. ரஹீமாவும் அப்படியே. குறத்தியிடம் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் தன் கணவனை அவளாலும் ஒதுக்கித் தள்ள முடியவில்லை. இதையே அந்தப் பெண்கள் செய்திருந்தால் அவர்கள் கதி என்னவாகியிருக்கும் என்பது நாமறிந்ததே. அடுத்த தலைமுறைப் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தன் உறவுக்காரனாக இருந்தாலும், தான் விரும்பிய அப்பாஸை நூர்ஜகானால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. அவளது தங்கையான ஜொஹரப்பாவோ முதல்நாள் தன்னைப் பெண் பார்க்க வந்தவனை மறுநாளே மணம் செய்துகொள்ள வேண்டியதாகிவிடுகிறது.

நூர்ஜகானின் ஆழ்மன விருப்பம் நிறைவேற்றப்படாமலே போகிறது. அவள் மணம் செய்துகொண்ட அத்தாவுல்லாவை அவள் விரும்பவில்லை. நாகூர் தர்காவில் அப்பாஸை நினைத்து அவள் உடைந்து அழுவது மிகவும் நெகிழ்ச்சியூட்டும் இடம். அவள் மனதில் அந்த வெற்றிடம் கடைசிவரை நிரப்பப்படாமலே இருக்கிறது. வயதில் இளைவர்களானாலும் சுலைமானிடமும், ரூபனிடமும் அவள் தேடியது என்ன? ஒருவேளை ரூபனால் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடிந்திருக்குமா? அதற்கு விடை தெரியும் முன் நாவல் முடிந்துவிடுகிறது.

இந்த நாவல் சில சம்பிரதாயங்களைத் தகர்த்தெறிவதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக, தாய் மகன் உறவு. இந்த விஷயத்தில் நூர்ஜகானும் ரகமத்துல்லாவும் புதிர்மிகுந்தவர்களாகவே தோன்றுகிறார்கள். அதிலும் ரகமத்துல்லா இதற்கு முன் தமிழ் நாவல்கள் காட்டாத ஒரு சிறுவன். அவன் மூலம் சிறுவர் உலகத்தின் இன்னொரு குரூர பக்கத்தையும் ஆசிரியர் காட்டுகிறார். ரகமத்துல்லா பிறந்ததும் அவனுக்காகத் தனது நிர்வாணத்தையும் பொருட்படுத்தாமல் பரிதவித்த அதே நூர்ஜகான் அவன் வளர்ந்தபின் அவனை நடத்தும்விதம், அத்தாவுல்லாவிடம் அவனைப் பற்றிப் புகார் கூறுமிடம், ரகமதுல்லாவிடம் அவள் பேசும் கெட்ட வார்த்தைகள் என முற்றிலும் வேறொருத்தியாக மாறிவிடுகிறாள். உளவியல் ரீதியாக அவன் பிறந்த பிற்பாடுதான் அம்மைத் தழும்புகளால் தன் அழகு அழிந்துபோனது என எண்ணுகிறாள். ரகமதுல்லாவோ, தன் தம்பியிடம் இருக்கும் பிரியத்தால்தான் தன்னை அவள் வெறுக்கிறாள் என நினைத்துக்கொண்டு வெற்றுச்சுவரைத் தன் தம்பியாகப் பாவித்து அதன் மேல் கல்லெறிகிறான்.

ரகமத்துல்லா சிறுவனாக இருந்தாலும் வயதுக்கு மீறிய உணர்வு நிலைகளைக் கொண்டுள்ளான். எல்லா வகையிலும் கேபிஷேவின் வாரிசாகும் தகுதிவாய்ந்தவன். மிக இளமையிலேயே தாயின் உடல், அவளது நிர்வாணம் போன்றவற்றைப் பார்க்கக் கிடைத்ததால் ஏற்பட்ட காம உந்துதலை, அவன் மீதான அவளது குரோதம் மேலும் வளர்த்துச் செல்கிறது. தாயின் மார்பில் இருந்த சாவியை முகர்ந்து பார்ப்பது, தன்னைக் காட்டிலும் ஐந்து வயதான மல்லிகாவுடன் நிகழும் இலைமறைக் காய்மறை உடலுணர்ச்சிகள், நேரடியாகவே கட்டித்தழுவுதல், தாத்தா கேபிஷேவுடனான ஒருபால் உறவு என வயதுக்கு மீறிய அதிர்வலைகளால் ஆட்கொள்ளப்பட்டு இழுத்துச்செல்லப்படுகிறான். இதுதவிர புகைப் பிடித்தல், திருட்டுக்கு முயல்தல், வன்முறை என ஓர் இளம்குற்றவாளிக்கான  அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறான். நாவலின் கடைசி அத்தியாயத்தில் அவன் பிறிதொரு திசையை நோக்கிச் செல்லும் தடையமும் தெரிகிறது. கூடவே, அவன் வயதையொத்த சிறுவர்களும் “ரூபன், ரூபன்” என்று கத்தி அவனைச் சீண்டுவதெல்லாம், சிறுவர் உலகின் இன்னொரு பக்கத்தைத் திறந்து காட்டுகிறது.

இதையெல்லாம் தாண்டி அவன் மேற்கொள்ளும் நூதனமான அரசியல் தந்திரங்கள் வியப்பை ஏற்படுத்துகிறது. தாயை வெறுப்பேற்ற அவளது எதிரியான பட்டம்மாள் வீட்டில் அவ்வப்போது அடைக்கலமாவது, தாயைப் பற்றி அவர்களிடம் கேலி பேசுவது, முடிவாக தந்தை அத்தாவுல்லாவிற்கே தாயின் நடத்தை குறித்து கடிதம் எழுதுவது என எல்லா வகையிலும் ஒரு சராசரி சிறுவனை மீறிய நடத்தைகளையே ரகமதுல்லா வெளிப்படுத்துகிறான்.

ஒருவகையில் அவன் பரிதாபத்துக்குரியவனும்கூட. அவனுக்கு அவன் விரும்பிய அன்பு எவரிடத்திலும் கிடைக்கவேயில்லை. யாவரும் அவனைத் தங்கள் சொந்த லாபங்களுக்காக உபயோகப்படுத்திக்கொள்கிறார்களே தவிர உண்மையில் அவனை ஒருவரும் விரும்பவில்லை. பட்டம்மாள் நூர்ஜகானுக்கெதிரான துருப்புச் சீட்டாக அவனைப் பயன்படுத்திக் கொள்கிறாள், கேபிஷே தன் காமப்பசிக்காக அவனைப் பயன்படுத்திக் கொள்கிறார், மல்லிகாவும் புதிதாகப் பிறந்துவரும் பாலியல் உணர்ச்சிகளைத் துய்ப்பதற்கான அவனைப் பயன்படுத்திக்கொள்கிறாள், தாயின் பாசமும் அவனுக்குக் கிடைக்கவில்லை, தந்தையின் அரவணைப்பும் கிடைக்கவில்லை. அவனை விரும்பும், அல்லது அவன் விரும்பும் சின்னப்பொட்டு மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கிறாள்.  அவளும் அவனை விட மிக உயரத்தில் மலையில் இருக்கிறாள். அவனுக்கு எட்டாத தொலைவில்.

துருக்கித் தொப்பி என்பதை வீழ்ச்சிக்கான குறியீடாக நான் பார்க்கவில்லை. மாறாக, அதை நிறைவேறாத விழைவுக்கான குறியீடாகவே பார்க்கிறேன். யாவருக்கும் அவரவர் மனதில் ஒரு துருக்கித் தொப்பி இருக்கிறது. கேபிஷேவுக்கு நீடித்த காமவிழைவும், இளமையும் செல்வமும். நூர்ஜகானுக்கு இழந்த காதல். அத்தாவுல்லாவுக்கு கட்சி அரசியல். ரகமத்துல்லாவுக்குக் கிடைக்காத அன்பு. அந்தத் துருக்கித் தொப்பி கடைசிவரை அவர்கள் கைக்குச் சிக்காமல் அந்தரத்திலேயே நின்று விடுகிறது.

*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *