( தேஜூ சிவன் )
Anything can happen in a novel, and everything is reasonable, even if you never have and will never see such a person, or encounter such a situation, in real life. In a novel, you feel that it’s possible. In addition, in the novel’s internal world, there should be no clear moral judgments.
இது The Art of the Novel என்ற நூலில் மிலன் குந்த்ரே நாவல் குறித்து சொன்ன விளக்கம்.
தமிழ் இலக்கியத்தின் Unsung Heros பற்றிய ஒரு பட்டியல் எடுத்தால் அது மிக நீளமான ஒன்றாய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். அந்தப் பட்டியலில் எம்.கோபாலகிருஷ்ணனுக்கும் ஓரிடம் உண்டு. அதிகம் கவனிக்கப் படாத அல்லது பேசப்படாத , தேடுபவர் கண்களுக்கு மட்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஓர் அரிய நட்சத்திரம் எம்.ஜி.கே.
2002 ல் வெளியான அம்மன் நெசவு அவரின் முதல் நாவல் . மேலே சொல்லப்பட்ட மிலன் குந்த்ரேவின் நாவல் குறித்த விளக்கம் இந்நாவலுடன் தன்னை மிகச் சரியாகப் பொருத்திக் கொள்கிறது. முதல் விதையே பெரும்விருட்சமாக மாறும் அதிசயம் இவருக்கு வாய்த்திருக்கிறது.
வரலாறு, குலதெய்வம், நம்பிக்கை, சாதி எனும் பல்வேறு வர்ண நூல்களெடுத்து தன் கைத்தறியில் ஓர் அற்புத வர்ண புகை போன்ற மெல்லிய ஒரு நாவலை நெய்திருக்கிறார்.
முகலாயப் படையின் மதவெறித் தாக்குதலுக்கு அஞ்சி தேவாங்க செட்டிமையின் அறுபத்து நான்கு மனையினரும் தங்களின் குலதெய்வமான செளடேஸ்வரியின் பொற்சிலையுடன் உஜ்ஜயினி நகரை விட்டு விலகி சந்திரவதி நதியைக் கடக்கும் போது தங்களின் தெய்வத்தை நதியில் இழக்குமிடத்திலிருந்து நாவல் தொடங்குகிறது.
வேணுகோபாலனுக்கு ஒரு திருவரங்கன் உலா, ஜெயமோகனுக்கு ஒரு குமரித்துறைவி போல் கோபாலகிருஷ்ணனுக்கு ஓர் அம்மன் நெசவு. ஆனால் இவர் மற்ற இருவரிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறார் சில சமகாலப் பிரச்னைகளைச் இந்நாவலில் சொன்னதன் மூலம்.
மதவெறியால் exile ஆனவர்களின் சந்ததியினருக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு சாதிவெறியால் அதே தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு பானை நன்னீருக்காய் சொந்த தேசத்திலேயே அகதிகளாக்கப் பட்டு விரட்டப் பட்டவர்களின் வறுமை சூழ் வரலாறு இது.
எவ்வளவு நம்பிக்கைகள். எவ்வளவு புறக்கணிப்புகள். எவ்வளவு துரோகங்கள்.
தம் குலதெய்வத்திற்கு குருதிகொடை கொடுத்தும் வேரில்லாத் தாவரம் போல் அலைய நேர்ந்த ஒரு மனிதத்திரளின் பயணக் கதை என்றும் சொல்லலாம்.
உயர் சாதி, இடைநிலை சாதி, தாழ்த்தப் பட்ட சாதித் தீண்டாமைகளை நிறைய நாவல் பேசியிருந்தாலும். வெவ்வேறு படிநிலையில் இருக்கும் இரு இடைநிலைசாதி அமைப்பில் நிகழும் மேட்டிமைத் திமிர் இந்நாவலில் மிக நுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளது.
தலைமுறை தலைமுறையாக வாய்வழிக் கதையாகச் சொல்லப் பட்டிருந்த அம்மன்நெசவு நஞ்சப்பனின் தறியில் அதிர்ஷ்டத்துடன் விழுந்திருந்தாலும் அதன் பின் நிகழும் சம்பவங்களின் சிடுக்குகளை நஞ்சப்பன் ,உண்ணம்மாள், பூசாரி, மீனாட்சி போன்ற மிக எளிமையான மனிதர்கள் மூலமும், சோமனூர்க்கவுண்டர், பண்ணாடிக்கவுண்டர், மயில்சாமி, வெள்ளிங்கிரி, அப்புக்குட்டி போன்ற ரெளத்ரமான மனிதர்கள் மூலமாகவும் மிக லாவகமாகச் சொல்லிச் செல்கிறார்.
இந்நாவலின் உச்சம் என நஞ்சப்பனையும், ராசாமணியையுமே சொல்ல முடிகிறது. குறிப்பாக ராசாமணி. குழந்தை இல்லாத , பால் கொடுத்து அறியாத வெளுத்த முலைகள் கொண்ட ராசாமணி. ஊர்க்குழந்தைகளின் பசியாற்ற அரிசிச் சோறு பொங்கும் ராசாமணி. அன்னை செளடேஸ்வரியின் மனித உருவம் .
“அம்மன் புடவையின் முந்தித் தலைப்பு விரிந்தது, மஞ்சள் மடிப்பில் சரிந்து விழுந்த பூக்களிலிருந்து எழுந்த மணம் வசீகரமாயிருந்தது. சுழன்று அலைந்து மேலேறி காற்றில் நெளிந்தது புடவையின் நடனம். செம்மஞ்சளில் குழைந்து பிளம்பென ஓளிர்ந்தது. பொன்னிழைகளின் பின்னல்களுக்கிடையில் கோர்த்துக் கொண்ட நட்சத்திரங்களின் மினுமினுப்புடன் மெல்ல அசைந்தது புடவை. சின்னச் சின்ன வர்ணப் பட்டைகளாய் புடவை பிரிந்து நெளிய, காற்றின் இடைவெளிகளில் அதன் நிறங்கள் ஈரமாய்ப் பரவின. நீண்டு சிவந்த வளைக்கரமொன்று வண்ணங்களை விலக்கிக் கொண்டு முளைத்தது. அதன் விரல்கள் நீண்டு பளபளத்தன. அந்தக் கரத்தின் அபிநய லயத்தில் அசைந்த புடவை மெல்ல அவன் கைகளின் மீது வழிந்து நழுவியது.”
இதனை கோபாலகிருஷ்ணனின் மொழியின் உச்சம் என்று சொல்லவேண்டும்.
Pleasure of the Text and Bliss of the Text என்று Rolan Barthes தன்னுடைய The pleasure of the Text எனு நூலில் சொல்வது இதைத்தான்.
இந்நாவலைப் படித்த முடித்த பின்னிரவில் சட்டணக்கு… புட்டணக்கு.. சட்டணக்கு… புட்டணக்கு என்ற அம்மன் நெசவுத் தறியின் சீரான ஓசை ஒரு பெயர் தெரியாப் பறவையின் ராத்திரி நேரத் திடுக்கிடும் சிறகடிப்புப் போலவும், ஆஃப்ரிக்க டிரிப்பிள் காங்கோவின் தாள லயம் போலவும் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தது.
அம்மன் நெசவு, கோபாலகிருஷ்ணன் எனும் இலக்கியக் களிறின் விஜயத்திற்காக ஒலித்த முன் மணியோசை.
******************
நிச்சயமாக படிக்கத் தூண்டும் பதிவு நன்றி.