1.

வழக்கமாக செல்லும் நூலகம்தான் என்றாலும், ஒவ்வொரு முறை செல்லும்போதும் கடந்த முறை கண்டிராத நூல் கண்ணில் தட்டுப்படும்.அதனாலேயே புதிய நூல்களைக் காணும்போது கண் விரியாது,அபூர்வம் என்றும் தோன்றாது.பல விதமான நூல்கள் சீரின்றியும்,ரகம் பிரிப்பதில் ஓர்மையின்றியும் இருப்பது காரணமாக இருக்கலாம்.நூலகத்தின் இயல்புதான் அது.தேவிபாரதியின் சிறுகதை தொகுதி ஒன்றை ‘சிறார் இலக்கியம்’ பிரிவில் பார்த்தேன்.ரஸிகன் கதைகள் என்று தலைப்பிடப்பட்ட  நூலை பார்த்து அலட்சியம் செய்ததும் அதனால்தானோ என்னவோ.முதல் முறையாக பார்த்தப்போது கையில் எடுக்கவில்லை.மீண்டும் கண்ணில் பட்டது.எடுத்து புரட்டியபோது, இதுவரை யாரும் அந்த நூலை எடுத்து வாசித்த தடமேயில்லை.ஆர்வம் வந்துவிட்டது.(தீவிர இலக்கிய படைப்புகள் அப்படிதான் பெரும்பாலும் இருக்கும், அதுவும் இயல்புதானோ?).திறந்தவனுக்கு ஒரே அதிர்ச்சி – யுவன் சந்திரசேகர் முன்னுரை.நூலை அடி அடுக்கில் வைத்துவிட்டு நகரப்பார்த்தேன்.மனம் ஒப்பவில்லை.முதல் கதையை வாசித்தேன்.கதையின் பெயர் பலாச்சுளை.யுவன் முன்னுரையின் முதல் பத்தியில் தனக்கு பிடிந்திருந்ததாக அந்தக் கதையை குறிப்பிட்டுள்ளார்.அக்கதையை வாசித்தபின் முழு நூலையும் தீர்மானமாக எடுத்துக்கொண்டேன்.

பதினெண் கதைகளும் நான்கு நாடகங்களும் கொண்ட அந்தத் தொகுப்பைத் தமிழினி வெளியிட்டுள்ளது.2006  ஆம் ஆண்டு ஆய்வாளர் அ. சதீஷ் தொகுத்த இக்கதைகள் 1938 – 1962 வரை ரஸிகன் என்ற புனைபெயரில், பழைய தஞ்சையைச் சேர்ந்த  நா.ரகுநாதன் எழுதியது.ரஸிகன் என்று இணையத்தில் தேடியபோது கிட்டாத தகவல்கள்  ரசிகன் என்று தேடியபோது கிட்டிவிட்டது.நூலை இணையத்தில் தேடியபோது பதிப்பில் இல்லை என்றும் தெரியவந்தது.அவரின் கதைகளையும் நாடகத்தையும் பற்றின கட்டுரையாக இது இருக்கலாம். (காண்க – தமிழ் விக்கி)உண்மையில் தமிழ் சூழல் அநேகமாக மறந்துவிட்ட ஆளுமையைபற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று இக்கட்டுரையை எழுதவில்லை.மாறாக அதிகம் கவனிக்கப்படாத ஓர் ஆக்கத்தை பற்றி எழுதுவதிலும், பேசுவதிலும் நிறையவே சுதந்திரம் இருப்பதாகத் தோன்றுகிறது.அதிலும் நமக்கு உவக்கும் கதைகளாக  இருக்கும் பட்சத்தில் குழப்பிகொள்ளத் தேவை இருக்காது பாருங்கள்.

1999 – தஞ்சை சிறுகதைகள் என்ற நூலில் எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாள் பல தஞ்சை படைப்பாளிகளின் கதைகளைத் தொகுத்துள்ளார்.தொகுதியின் நோக்கமே நவீன இலக்கியத்தில் தஞ்சையைச் சேர்ந்தவர்களைத் தொகுத்துப் பார்ப்பதை தவிர வேறெந்த நோக்கம் இருப்பது போல் தெரியவில்லை.கா.சி வேங்கடரமணி முதல் யூமாவாசுகி வரை உள்ள தொகுப்பில் ரஸிகன் பெயர் இல்லை.இத்தனைக்கும் 1962 யில் ரஸிகனின் பத்து கதைகள் அடங்கிய தொகுப்பு வெளிவந்ததாக அ. சதிஷ் குறிப்பிட்டுள்ளார். வெ.சா, ரஸிகன் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டவராக தெரிகிறது.அப்படிப்பட்ட ஆளுமை எப்படி தஞ்சை சிறுகதைகளில் விடுபட்டார் என்பது தெரியவில்லை.சோ.சு.பெ கவனத்தில் ரஸிகன் இருந்ததற்கும் சாட்சியில்லை.வெ.சாவும் அவரின் நூல்களை அவரிடமே கேட்டு வாங்கி படித்ததாகச் சொல்கிறார்.சோ.சு.பெருமாளுக்கு ரஸிகன் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.எது எப்படி என்றாலும் 1982 ஆம் ஆண்டு தன் 89ஆம் அகவையில் ரஸிகன் இறையடியேறும் வரை பெரிய கவனம் இல்லாமல் வாழ்ந்து ஓய்ந்தார் என்று புலப்படுகிறது.வல்லிக்கண்ணன் மட்டும்  மதிப்புரை எழுதியுள்ளதாக வெ. ச குறிப்பிடுகிறார்.காண்க.இதில் முரண் என்னவென்றால் தஞ்சை சிறுகதைகள் தொகுதியில் முதலில் உள்ள கா.சி வேங்கடரமணியை ஆங்கிலத்தில் முதன்முதலில் கதை எழுத வற்புறுத்தியவரே ரஸிகன் தானாம்.

ரஸிகன் என்ற கலை ஆளுமை மறக்கடிக்கப்பட்டதைப் பற்றி வெ. சா , க. நா. சு இடத்தில் கேட்ட போது க. நா.சு அதற்கு இவ்வாறு பதில் தருகிறார்.

அவர் தொடர்ந்து எழுதியவர் இல்லை. அவர் எழுதிய பத்திரிகை அவ்வளவாக வெளித்தெரிந்த ஒன்று அல்ல. எதுவும் தொகுப்பாக வெளி வந்தால் தான் ஒரு மதிப்பீடு எந்த எழுத்து பற்றியும் சாத்தியம்.

சரி, தொகுப்பாக வந்த பின்னரும் ரஸிகன் தொடர்ந்து வாசிகப்பட்டதாக தெரியவில்லை. மறுபதிப்பே வரவில்லையே !

மேலும் க. நா. சு அப்படி ஒற்றை வரியுடன் விடக்கூடியவரா என்ன?  1985 யில் இலக்கிய சாதனையாளர்கள் வரிசையில் ரஸிகனன பற்றி விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இன்று ரஸிகன் பற்றி வாசிக்க கிடைக்கும் ஒரே விரிவான கட்டுரை அதுதான். நான்கு பக்கம் கொண்ட அக்கட்டுரையில் க. நா. சு – வுக்கும் ரஸிகனுக்கும் இடையிலான நட்பு, அவர்கள் முரண்படும் புள்ளிகள், ரஸிகனின் கலை நோக்கு, தனிப்பட்ட வாழ்க்கை செய்தி,  சுபாவம் போன்றவற்றை சில ரசமான சம்பவங்களுடன் அவரை எடுத்துக்காட்டுகிறார்.அந்த கட்டுரையிலிருந்து சில வரிகள்.கீழே.

  • பேராசிரியர் பாஸ்கரன், ராஜாஜி முதலியவர்களுடன் அறிவுத் தளத்தில் ஒன்றாக வைத்துப் பேசக்கூடியவர் ரகுநாதய்யர்.…தன் அறிவு பற்றிய அகம்பாவம் இருந்ததே தவிர அவர் ராஜாஜி மாதிரி பிறரை மட்டம் தட்ட அதை உபயோகப்படுத்த மாட்டார்.

  • ..தஞ்சை ஜில்லாவில் பிராம்மண சமுதாயத்தின் பேச்சு, பழக்க வழக்கங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட இவை ஒரு யதார்த்த உண்மை தொனிக்க எழுதப்பட்டிருந்தன.

  • …அவர் editor ஆக இருந்த கால கட்டத்தில் ஹிந்து பத்திரிகையின் புஸ்தக மதிப்புரைப் பக்கங்களுக்கு ஒரு அலாதியான மதிப்பு இருந்தது என்பது எனக்குத் தெரியும்.

  • இலக்கியத்திலும், நாட்டு நடப்பிலும், இசையிலும், சமஸ்கிருதத்திலும் நல்ல தேர்ச்சியுள்ளவர் என்று அவரைக் கூறுவார்கள். ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் மூன்றிலும் அவருக்கு நல்ல புலமையுடன் ஒரு ஆழ்ந்த கவனமும் பரிச்சயமும் இருந்தது.

  • ..நான் அவருடைய ரஸிகன் கதைகளை மதிப்பிட்டு இலக்கிய வட்டத்தில் ”இவற்றில் உருவ அமைதி காணவில்லை. சிறு கதைகளாக இவை தேறாது. ஆனால் விஷயம், உள்ளடக்கம், கருத்து என்பவற்றினால் ஒரு முக்கியமான புஸ்தகம் இது” என்று review எழுதியபோது என்னை மறுநாள் நேரில் பார்த்தபோது ரகுநாதய்யர்

உன்னிடம் எப்படி சிறுத்தைக்கு உருவம் தரலாம் எனக் கற்றும் கொள்கிறேன். வா என்று கூறி வரவேற்றார்.

  • …பத்துப்பாட்டை அவர் 1959-ல் அகில இந்திய எழுத்தாளர் மகாநாட்டில் தொடங்கி (நெடுநல்வாடையில் தொடங்கி) அற்புதமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு பிரசுரகர்த்தாவும் அதை வெளியிட முன்வராததனால் அவரே வெளியிட்டார்.

  • …சென்னை மெரினாவுக்கு அடுத்த படியாகத் தனக்கு நினைவில் இருப்பதாக அவரைத்தான்(ரஸிகன்) ஸ்டீபன் ஸ்பெண்டர் குறிப்பிட்டார். மடாரியாகா “அவர் சர்வகலா சாலையில் இருக்க வேண்டியவர்; பத்திரிகை ஆபீஸில் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

  • …..அவர் தனியாகத்தான் உறவினர் வீட்டில் இருந்தார். மனைவி அவருடன் வாழ்வது முடியாத காரியம் என்று அவரை விட்டுவிட்டுப் போய் எங்கேயோ கோயிலிலோ, மடத்திலோ இருந்ததாகச் சொன்னார்கள். அதுபற்றி தீர்க்கமாக நான் விசாரித்ததில்லை… .

  • …1959 ல் நான் இலக்கிய விஷயக் காரியதரிசியாகச் செயல்பட்ட அகில இந்திய எழுத்தாளர் மகாநாட்டிலும் பல கூட்டங்களில் கலந்து கொண்டு தலைமை தாங்கி அவற்றை ஆழமும் கனமுமான கூட்டங்களாகச் செய்த பெருமை ரகுநாதய்யருக்குண்டு… .

அந்த கட்டுரையை க. நா. சு இப்படி முடிக்கிறார்.

  • …ஒவ்வொரு தடவை அவரைச் சந்திக்கும் போதும் அவருடன் பேசியதனால் நான் அளவற்ற பொக்கிஷங்களைப் பெற்றதாக எண்ணிக் கொண்டுதான் திரும்புவேன். அவருடன் என்னால் ஒத்துப் போக முடியாத பல விஷயங்கள் இருந்தாலும் கூட அவர் சொல்வதைக் கேட்ட நான் எப்போதுமே பாக்கியவானாக உணர்வேன்.

சமகாலத்தில் விமர்சனம் பற்றிய ஆர்வத்தை ஓர் இலக்கிய ஆர்வலர் வெளிப்படுத்தும் போது அவரிடம் பெரும்பாலும் இருக்கும் எதிர்பார்ப்பு – சமாகாலத்தின் முக்கிய நூல்கள், அண்மையில் வெளிவந்தச் சிறந்த சிறுகதை,புத்தக கண்காட்சியில் வெளியாகிய நல்ல நாவல் – கவிதை -சிறுகதை ,மாத இதழ்களில் வெளியான சிறந்த கதை போன்ற கேள்விகளுக்கான விமர்சகனின் கருத்தை ஒட்டியதாகவே இருக்கிறது. உண்மையில் இதை விமர்சகர் செய்யதக்க விஷயமாக கருதினாலும் அதைவிட தலைபோகும் காரியம் இப்பதாகவே தோன்றுகிறது.ஓர் இலக்கிய பிரதியை வாசிக்கும் போது அதனை நிமித்தமாக வைத்து ஒட்டுமொத்த சூழலையும் அளந்து பார்ப்பதே விமர்சனத்தின் நோக்கமாக இருக்கும்.அந்த வகையில் விமர்சகன் சிறந்த வாசகனாக இருக்க வேண்டியதும் இன்றியமையாததே.நாம் இலக்கிய செயல்பாட்டையும், விமர்சனத்தையும் ரிலே ஓட்டம் போல் மட்டுமே கற்பனை செய்கிறோமோ என்று தோன்றுகிறது.அது அப்படி இருப்பதல்ல.என்னளவில் எக்கி எக்கி திரும்பிப் பார்ப்பதும்தான் முக்கியம் என்பேன்.மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்ப்பது நாம் கடந்தத் தூரத்தை அளவிட அல்ல, மாறாக நாம் காண்பது எதை? எவ்வளவை? என்று முற்றறியவே.இப்படிச் சொல்கிறேன்.வளமாக சமகால சிறுகதைகளை அல்லது  இலக்கியத்தின் தரத்தை ஆராய இதை முன்வைக்கவில்லை.சமகாலத்தின் நோக்கங்களை நாம் புரிந்து கொள்ளவும்.’இன்றி’ன் குரலாக ‘நாளை’க்கு ஒலிக்கவும் தான்.பின்னே திரும்பிப் பார்க்கையில் நமக்கு தென்படுவது எப்போதும் ஒன்றாகவே இருக்கும் என்று நம்பமுடியுமா?

பாரதி, புதுமைப்பித்தன், க. நா. சு, சு. ரா, தி. ஜா, அசோகமித்திரன் முதலியோருக்கான இடம் தமிழில் பெரியது.அதற்கு காரணம் அவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள் என்பதல்ல,என்பதும் அவர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பும் தான் காரணம் என்பதும் தமிழ் சூழல் அறிந்தது.சம கால சிறுகதையாளருக்கு ஏற்படும் சிக்கல் இதுதான். இலக்கிய முன்னோடிகளின் இடம் என்பது மொழிபெயர்ப்பு,அபுனைவு,மற்ற துறைசார் விவாதம்,இலக்கிய விமர்சனம், சமூக விமர்சனம், நடத்திய இதழ்கள், உரைநடையில் குறிப்பிட்ட எழுத்தாளரின் தாக்கம், சமகால மற்றும் அடுத்த தலைமுறையிடம் அவர் செலுத்திய பாதிப்பு போன்றவற்றால் அவர்களின் இடம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.ஒருவர் நிகழ்த்தும் செல்வாக்கு என்பது வெறும் சிறுகதைகளில் மட்டும் இருப்பதாக கருதமுடியாது.ரஸிகன் என்ற எழுத்தாளரின் வாழ்க்கை அதைத்தான் சுட்டுகிறது.பதிணென் கதைகளை மட்டுமே எழுதியிருந்தாலும் பல கதைகள் இன்றும்  உயிர்ப்புடன் தான் இருக்கிறது.ஆனால் அவரை நம் முன்னோடி மரபில் வைக்க அது போதுமானது இல்லை.நல்ல சிறுகதைகளை எழுதியவர் என்ற அடையாளம் நமக்கு போதாது. ’இன்று நல்ல சிறுகதைகளை எழுதிவிட்டால் போதும்’ என்ற மனநிலையே தவறு என்று தோன்றுகிறது.’மெட்சும்படி ஒரு படைப்பு’ என்ற நோக்கமும் காலாவதி ஆகிவிட்டது.தமிழ் சூழலை முற்றுணர்ந்து அதற்கு குந்தகம் விளைவிக்காதக் கதையை எழுதினாலும்கூட அதன் இடம் மிக சிறியது தான்.ப.சிங்காரமும், சம்பத்தும் விதி விலக்கு. அது அனைவருக்கும் நடக்கும் என்று உத்திரவாதமில்லை.மேலேயே சொன்னேனே ரஸிகன் வாழ்வு அதைத்தான் காட்டுகிறது.இவ்வளவு ஏன்? அண்மையில் விளக்கு விருது பெற்ற விட்டல்ராவ் பற்றி பாவண்ணன் பேசும்போது ஐம்பது வருடங்களாக எழுதிய அவர் (விட்டல் ராவ்) பெரும், முதல்விருது இது என்கிறார்.கலை பெருமானம் தானே எல்லாம் ?என்ற வாதத்தினைப் பொருள் படுத்தினாலும் – எவ்வளவு யோசித்தாலும் தொடர் செயல்பாட்டினைக் கண்டுகொள்ளும் பொறுப்பிலிருந்து தப்பித்தலுக்கான நியாயம் என்ற எண்ணம் தான் வலுப்பெறுகிறது.

வளமான சிறுகதைகளை முன் வைத்து மற்ற விடயங்களில் உள்ள தேக்கத்தை இட்டு கட்டப்பார்க்கிறோம் என்பதே நான் சொல்லவருவது.அரை வயிற்றுக்கு உண்டு மிச்சத்திற்கு நீர் அருந்தினால் ஏப்பம் வராது. எதுக்களித்து வரும்.

இதைத்தான் ‘மந்தம்’ என்ற பதத்தில் அர்த்தப்படுத்த விரும்புகிறேன்.இது சற்று கடுமையாக இருக்கலாம். ஆனால் தமிழ் அறிவுலகம் இதை உணர்ந்து தான் இருக்கிறது.ரஸிகனை நாம் மறந்ததற்கு அவரின் நல்ல சிறுகதைகள் மட்டும் போதாது என்பதே காரணம் என்று தோன்றுகிறது. வேறெந்த விஷம உள்நோக்கதுடன் தமிழ் சூழல் நடந்துக் கொண்டது என்று குற்றம் சாட்ட  முகாந்திரமும் எதுவும்  எனக்குத் தட்டுப் படவில்லை.

எது தான் எதிர்ப்பார்ப்பு? என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறது.ஆனால் இலக்கியவாதி அதை ஏற்று நடக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எனக்கில்லை.(வாச்சான் போச்சான் – கதை தான்.) ஓர் எழுத்தாளர் முன்னோடிகளை முற்றும் அறிந்திருக்க வேண்டும். அதாவது சமகால முன்னோடிகள் விட்ட இடத்தை அதை விட நெருக்கமாக தெரிந்திருக்க வேண்டும்.மேலும், வாசிப்பில் ஒரு command – ஆம் comment டை சொல்ல வில்லை.கருத்து போதாது,நிறுவுதல் பலம் கொண்ட, தனக்கும் சூழலுக்கும் ஏற்ற கட்டளை. அது இலகுவாக இருந்தாலும், நெகிழ்வாக இருந்தாலும் நல்லது.

2.

சரி, ரஸிகன் என்ற ஆளுமையை ஏன் பொருள்படுத்த வேண்டும் என்பது அடுத்த கேள்வி. உண்மையில் அவரை வாசித்த பின்னர் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்தே அவரைப் பற்றிய இந்த கட்டுரை  எழுதுகிறேன்.இன்னும் நினைவில் நிற்கும் தருணங்கள், காட்சிகள், மனிதர்களை எப்படி பொருள்படுத்துவது என்பதே என் கட்டுரையின் இப்பகுதியின் நோக்கம்.

தி. ஜா துணை என்று ஒரு கதை எழுதி இருப்பார். படிக்க படிக்க சிரிப்பில் கன்னங்கள் வலி எடுத்துவிடும்.தி.ஜாவின் சிறந்த கதை என்று இதை யாரும் சொல்லி நான் கேட்டதில்லை.இது சிறந்த கதையும் இல்லைதான்.ஆனால் கதையின் நோக்கத்தையும், வியம்புதலையும் பார்த்தால் தி. ஜா வெற்றி பெற்றிருக்கிறார் என்பது என் எண்ணம். இது வெற்றி அடைந்த கதை என்பதற்கு அளவுகோல் நான் சிரிப்பது மட்டும் தான் அல்லவா.அப்படி ஒரு கதை அதன் பேசு பொருளுக்கு உட்பட்டுதான் நாம் கவனிக்க வேண்டி உள்ளது.ரஸிகன் எடுத்துக்கொண்ட பல பேசு பொருளுக்கு நியாயம் செய்துள்ளார் என்பது ஒரு காரணம். மற்றொன்று வழக்கமாக நாம் சொல்லும் “நேற்று எழுதியது போல் உள்ளது” என்பதாலும் தான்.அதாவது மொழி மட்டுமன்றி, வடிவம் சார்ந்த திட்ட வட்டங்களைத் தளர்த்திக்கொண்ட பின்நவீனத்துவ காலத்திலும் எடுபடுகிறது என்பதால் தான்.(அப்படிப்பட்ட கதைகள் குறைவு என்றாலும்,மூன்றாம் பகுதியில் அதைப்பற்றி பேச உள்ளேன்.)

முதலில் ரஸிகன் கையாளும் மொழி,தஞ்சை மொழி என்றவுடன் நமக்கு தி. ஜா ஓர் அளவுகோளாகிவிடுவது இயல்புதான் என்றாலும் மொழி  விஷயத்தில் ரஸிகன் தி. ஜா வை தாண்டுகிறார். தி. ஜா தொடர்ந்து வெகுஜன இதழ்களில் எழுதியதன் பொருட்டு அவர் இலேம்பான – பொது மொழியை கையாண்டார் என்று தோன்றுகிறது. பிராமண – அப்பிராமண பாத்திரங்கள் கையாளும் மொழியில் வேறுபாடு இல்லை. அதை குறை சூட்டுவோரும் உண்டு.ஆனால் ரஸிகன் இவ்விஷயத்தில் முன் செல்கிறார். நவீனத்துவம் தழைத்தோங்கும் முன்பே ரஸிகன் எழுதியதினாலோ என்னவோ, வலுவான, கெடுபிடி மொழியில் வெளிப்படவில்லை.தஞ்சைக்கு வட்டார மொழி இல்லை என்றாலும், பிராமண-அப்பிராமண வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.அதை மிகச் செறிவுடன் ரஸிகன் எழுதுகிறார். ‘பாரத மணி’ அவ்வளவு பிரபலமான பத்திரிகை இல்லை என்பதால் இவ்வளவு சுதந்திரம் கிடைத்திருக்கலாம்.

சமகாலத்தில் துணுக்குற வைக்கும் விஷயங்களில் மொழி பிரதானமானது.சினிமா உள்ளிட்ட வெஜன புழக்கத்தில் இலக்கிய ஆளுமை ஒருவர் மொழியை சிதையாமல் காத்துக்கொள்ள முயலும்போது, நாம் கடந்த காலத்தில் கைவிட்டு சொற்களை பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது.அதாவது தனிநபர் நினைவில் துயிலும் மொழியை ரிப்பேர் செய்ய தேவை இருக்கிறது.நான் தஞ்சாவூர் வேறா  எவ்வளவை மறந்து விட்டேன் என்று தெரிந்துக்கொள்ள ஆச்சரியமாக இருந்தது.அதை பட்டியலிட்டால் நன்றாக இருக்காது பாருங்கள்.!

இரண்டாவது – ரஸிகனிடத்தில் வெளிப்படும் தெளிவான வாழ்க்கை பார்வை(vision). ‘முன் நகர்தல்’ என்ற பேசுபொருள் தொடர்ந்து வெவ்வேறு வகையில் வருவதாக வாசிக்க இடமிருக்கிறது.தொடக்கால இலட்சிய மனநிலையுடன் பொருந்தி போவதாக இருந்தாலும்,கதையின் தரிசனமாக ,துருத்தலின்றி வெளிபடுவதையும் பார்க்க முடிகிறது.’பழசு’ என்று கதையை ஒதுக்குவதற்கு இது துணையாக இல்லை என்பதும் சாதகமான ஒன்றுதான்.மேலே சொன்ன க.நா.சு கட்டுரை வழி நமக்கு கிடைக்கும் ரஸிகன் வேறு வகையானவர்.சற்றே ஆசார மனமும், பழைமைவாத பார்வையும் கொண்டவர் போல் க.நா.சு சொல்கிறார்.இதை பற்றி மேலே போக ரஸிகனின் புனைவு சார் அபிப்பிராயத்தை அறிந்தால் அன்றி முடிவுக்கு வருவது சிரமம்.கதைகளில் வழி நமக்கு கிட்டும் ரஸிகன் முன் நகர்வை தான் முன் வைப்பதாக தோன்றுகிறது.

ஆய்வாளர் அ. சதீஷ் காலவரிசைபடி அல்லாமல் ரசனை அடிப்படையில் கதைகளை வரிசைபடித்தி தொகுத்துள்ளார்.நூலின் கடைசி பக்கம் கால வரிசையைக் காட்டுகிறது.நான் அது பிரகாரம் வாசித்தேன்.

பலாச்சுளை என்ற கதை ரஸிகன் 1938 டில் எழுதிய முதல் கதை.தங்கம்மாள் என்ற பிராமணி சுளை தருவதில் பக்கத்து வீட்டு ஏழை பையனை பேதம் பார்க்கிறாள்.கணவன் வைத்தியநாத ஐயர் தன் மனைவியின் தான்திண்ணித் தனத்தை கடித்துக்கொண்டு ஒரு கூறு தரும்படி உத்தரவிடுகிறார்.வைத்தியநாதர் குடும்பம் ஊரில் செல்வ செழிப்பு மிகுந்த குடும்பம்.தங்கம்மாளுக்கு அதனால் நிறையவே கர்வம். அவளிடம் அண்டி ஆமாம்சாமி போட்டு பிழைக்கும் பெண்டீர்களும் நிறைய உண்டு.ஒரே ஒரு விடுபடல் – ராதை(ஏழை சிறுவனின் தாய்).இத்தனைக்கும் இரு குடும்பங்களும் சொந்தம் வேறு. ராதை காலஷேபம் செய்யும் வீட்டை சேர்ந்தவள்.அதனால் தங்கம்மாள் ராதையை கிளப்புக்காரி என்று ஏசுகிறாள்.

ஏழை சிறுவன் – நாராயணன் வீடு திரும்பி ஆர்வமாக எடுத்து வாயில் வைத்தால் அதில் சுளையின் சுவை இல்லை.

ஆம், மற்றது அனைத்தும் தாள்.இதை கண்டு ராதை மகனை அனைத்துக்கொண்டு அழுகிறாள். கதை அங்கு முடியவில்லை.

நாராயணனை அனைத்துக்கொண்டவள் சற்று நேரம் தூங்கி விடுகிறாள். கதவு தட்டப்படும் ஓசை கேட்டு விழித்தவள் திறந்துப் பார்க்கையில் வைத்தியநாதய்யர்.மகன் கிருஷ்ணமூர்த்திக்கு உடல் சரியில்லை என்று ராதையை அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறார்.தங்கம்மாள் அழுது அனத்துகிறாள். தன் ஒரே மகனுக்கு காலராவோ என்று கண்ணீர் வடிக்கிறாள்.ராதை சரி செய்ய முடியும் என்று நம்புகிறாள்.சுமச்கலிப் பிரார்த்தனை செய்து புடவையை ராதைக்கு தரவேண்டும் என்று மனதிற்குள் வேண்டுகிறாள்.இரவு முழுவதும் அய்யரும் ராதையும் சிறுவனை பார்த்துக்கொள்ள தங்கம்மாள் தூங்குகிறாள்.காலை எழுந்து பார்த்தால் கிருஷ்ணமூர்த்தி உடல் தேரிவிடவே ராதை வீடு திரும்ப யத்தனிக்கிறாள்.அப்போது தங்கம்மாள் பலாச்சுளைகளை தருகிறாள்.

அதற்கு ராதை – வாண்டாம் அம்மாமி,நீங்க நேத்திக்கி குழந்தை கிட்ட குடுத்து அனுப்பிச்ச பழத்தைச் சாப்பிட்டு எனக்கு வயர் நெரஞ்சு போச்சு என்று சொல்லி சிரிக்கிறாள். கதை அங்கும் முடிந்த பாடில்லை.

தங்கம்மாள் ராதைக்கு தர வைத்திருந்த புடவையை வேறு ஒரு பெண்ணிற்கு பூஜை அன்று தருகிறாள். அப்படி தரும் போது என்ன சொன்னால் என்பதோடு கதை முடிகிறது.

(அனைத்து கதையையும் அவ்வாறு சுருக்கமாக சொல்ல உத்தேசம் இல்லை தான். ஆனால் பதிப்பில் இல்லாத நூல் ஆயிற்றே வேறு எப்படி?)

கதையில் தங்கமாளின் அற்ப தனமும், ராதையை வெல்ல முடியாத தோல்வியும் தட்டுப்பட்டாலும்,அதை ரஸிகன் மிக இயல்பாக உயிரோட்டமான தன் மொழியில் சித்தரிக்கும் போது பாத்திரங்கள் உயிர்ப்புடன் நம் அருகே வந்து நிற்கிறார்கள்.இந்த அம்சம் சிந்தனை தெரிப்பை பின்னே தள்ளுகிறது என்று சொல்லலாம். அதுவே இந்த கதையின் வெற்றி என்று தோன்றுகிறது.நல்ல யதார்த்த வாத கதையில் நான் எதிர்ப்பார்ப்பதும் அதயே தான்.

விருந்து வேண்டாம் என்று கதை ஒரு பகடி முயற்சி. விருந்தினராக செல்லும் போது அதிக கவனமில்லாத உபசரிப்பு சிக்கல் என்றால், அதிக உபசரிப்பும் தொல்லையையே தருவதாக – சில சம்பவங்களை கதை சொல்லி கிருஷ்ணைய்யரிடம் அவர் நண்பர் விவரிக்கிறார்.

விசித்திரவாணி என்ற கதை நல்ல கதை என்று தோன்றுகிறது.தமிழில் என் அறிதலுக்கு உட்பட்டு சில அழகியல் தரப்புகள் உள்ளன.யதார்த்தவாத உத்தியில் வாழ்க்கையை அள்ளக்கூடிய கதைகள்.அவை எழுத்து என்பதை ஆவணமாக பார்க்கும்.மேலும் சமூகவியல் சார்ந்த தகவலும், எழுத்து என்பதை அரசியல் செயல்பாடாகவும் பார்க்கலாம். அடுத்தது தத்துவார்த்த செறிவுடன், அடிப்படை கேள்வி யிலிருந்து பிசகாது தரிசனம் நோக்கி மொழியில் பீரிடும் கதைகள். இறுதியாக தர்க்கத்தை தள்ளி வைத்து மாய யதார்த்த உத்தியின் சாத்தியத்தை தமிழ் சூழலில் கையாண்டு பார்க்கும் கதைகள்.நிற்க.இவைகளை பட்டியலிடும் போதே, அவைகளை அவ்வளவு அறுதியிடல் சாத்தியமில்லாத விஷயமாக தங்களுக்கு தோன்றலாம். எனக்கும் சொல்லும் தோறும் விலகுவதை  உணர்க்கிறேன்.ஒரு வசதிக்காக வைத்துக்கொள்வோமே.ரஸிகனை எந்தத் தரப்புகளில் வேண்டுமென்றாலும் பொருள் படுத்தி பார்க்கத்தக்க எழுத்தாளர் என்று சொல்லவே இவ்வளவு பீடிகை.

இப்போது விசித்திரவாணி  கதையை வாசித்தால் மாய யதார்த்த கதையோ என்று கூட சொல்ல முடியும். ராமானுஜம் என்ற அரசு ஊழியர் டிராமில் செல்லும்போது ரேடியோ பற்றி சிலர் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு தானும் வாங்க வேண்டும் என்று உத்தேசிக்கிறார். பின்னர் அவர் அதை வாங்கி பயன்படுத்திய போது அனைத்துமே விசித்திரமாக நடக்கிறது. உதாரணமாக – அரசியல் பிரச்சாரம் செய்வதை மிக விரிவாக – அரசியல் வாதிகள் உண்மையை சொல்லி பிரச்சாரம் செய்வதை எழுதுகிறார். காங்கிரஸ், முஸ்லிம் லீக், நீதி கட்சி, கம்யூனிஸ் கட்சி என்று எந்தப் பேதமும் இல்லாமல் அவரவர் நெருக்கடியை சொல்கிறார்கள். மிக தெளிவாக அப்போதைய அரசியல் யதார்த்தத்தை வெளிபடுத்துகிறது.இறுதியாக  விசித்திரமெல்லாம் கனவு என்று முடிகிறது. இன்னும் அவன் டிராமில் தான் உள்ளான் என்று கதை முடிகிறது.

ராப்பயணம்,ஞாபகப் பூ ஆகிய கதைகள் ‘எழுதிப்பார்த்த’ கதைகள் என்று தான் சொல்ல வேண்டும்.ராப்பயணம் என்ற கதை இரவின் பதட்டத்தையும், ஞாபகப் பூ – சாமந்தி பூவின் தொந்தரவை சுட்டுவதாக இருக்கிறது.

சரஸ்வதி பூஜை கதை முன்பு சொன்ன முன் நகர்வை சாரமாக கொண்டது.இறுதி திருப்பத்துடன் மரபாக கதையாக மாறியிருக்கிறது.ரங்கஸாமி அய்யர் தன் புஸ்தக அறையைச் சுத்தம் செய்யும் முனைப்பில் இருக்க, தன் இரு அண்ணை இல்லாத மகன்களில் ஒருவனால் கடிந்து கொள்ளப்படுகிறார்.விளையாட செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தால் மகன் தந்தையை எதிர்ந்து பேசிவிடுகிறான்.அப்போது கதை ரங்கஸாமி அய்யரின் பால்யம் நோக்கி திரும்புகிறது.அவரின் மாமா சுந்தரமய்யர் வீட்டில் இருந்து தான் படித்த போது நடந்த சம்பவங்களை விவரிக்கிறார் கதைசொல்லி. ஒவ்வொரு வருடமும் தான் ஒருபோதும் படித்திராத புத்தகத்திற்கு பூஜை போட சரஸ்வதி பூஜை அன்று மட்டும் புத்தகங்களை பெட்டியிலிருந்து எடுக்கும் வழக்கமுள்ளவர் மாமா.ஆனால் படிப்பின் மீது பெரிய மதிப்புடையவர்.மருகன் நன்றாக படிப்பதையும் குறைபட்டுக்கொள்ள கூடியவர்.அப்படி ஒரு சரஸ்வதி பூஜை அன்று மாமா பெட்டியை திறக்கும் போது கரையான் தின்று தீர்த்து விடவே மாமா படபடப்பும், பின் ஸ்தம்பித்தும் விடுகிறார்.அந்நேரம் ரங்கஸாமி அய்யர் அப்பா வருகிறார்.மைத்துனரை அவர் குறைபட்டுக்கொண்டு பின் தன் மகனை கதை கேட்க கோயிலுக்கு அழைத்து போக விரும்புகிறார்.ரங்கஸாமிக்கு விருப்பம். மாமாவின் குணத்தை எண்ணி பயம். அவர் நினைத்தது போலவே ரங்கஸாமி கிளம்பும் நேரம் அவரை நாலு சாத்து சாத்தவே அப்பாவுக்கு கோபம் வந்து அவரை தன்னுடனே அழைந்து வந்துவிடுகிறார்.பின் அவர் மாமாவை பார்க்க வில்லை.தன் மாமாவிடமிருந்து தான் மாறுபடும் புள்ளியையும், சேரும் புள்ளியையும் அறிந்து ரங்கஸாமி ஐயர் தன் மகன்களை வளர்க்கிறார். கதையை ரஸிகன் முடிக்கும் இடம் தான் முன் நகர்வை சுட்டுகிறது.புத்தகங்களை அவ்வாறே விட்டுவிட்டு மகன்களுடன் விளையாட ஓடுகிறார் ரங்கஸாமி. இது ஒரு வெகுஜன கதை போன்று தான் இப்போது எனக்கும் படுகிறது. ஆனால் அவரின் முக்கிய கதைகளாக நான் நினைக்கும் பல கதைகளில் இந்த தலைமுறை இடைவெளியும்,தெளிவான சமூக பார்வையும், முன் நகர்வு குறைந்த தொனியில் காணக்கிடைக்கிறது.

(முழு கதையையும் சொல்லுவது கொலை தான். ஆனால் மந்தத்தை விட மோசமில்லை. காட்சிகள் தங்கிதான் இருக்கிறது அதற்காகவேனும் ரஸிகனை வாசிக்கலாம்.)

குடும்ப தலைவி என்ற கதையில் இறுக்கமான குடும்ப அமைப்பை ஆவணமாக காட்சிப்படுத்தும் கதை. சாமிநாதன் என்ற குடும்பத் தலைவன் பொறுப்புகளை வகித்து வருகிறான்.அம்மா அராஜகம். அப்பா அலட்சியம். தம்பி- பொறுப்பிற்கு அர்த்தம் தெரியாதவன்.ஊழல் செய்தும் காசு பார்க்க முடியாத சாமிநாதன். அவன் மனைவி இணக்கம் பேணாமல் வீட்டுக்கு நடையை கட்டவே. அவளை மீட்க அலுவலகத்தில் கையாடல் செய்து, சங்கிலி ஒன்று மனைவிக்கு வாங்கி போட்டு அழைத்து வருகிறான் சாமிநாதன்.அதனால் வேலை இழக்கிறான்.வீட்டாருக்கு அது தெரியவரவே சாமிநாதன் அம்மா அவள் நகையை வைத்து ஈடு செய்ய வேண்டி உள்ளது.குடும்ப பொறுப்பிலிருந்து விலகும் போது மையம் சிதைவைதையும், ஒத்துழைப்பு – இழப்பு,பொறுப்பு மாறும் போது எதிர்கொள்ள வேண்டிய இழப்பையும் சாரமாக சுட்டும் கதை என்று வாசிக்கலாம்.

அசலம் ஐயர் வைபவம்- அது அமைப்பின் ஸ்திரமில்லாத, போலி தகவல்களின் தொகுப்பாக இருப்பதை சொல்லும் கதை.மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அசலாயதனம் ஐயர் செய்யும் தில்லுமுல்லுவை சொல்லுவதே பேசுபொருள்.பிரிட்டீஸ் அதிகாரிக்கு நெருக்கமாக அசல் என்று தம் பெயரை மாற்றி கொள்வது பற்றி யோசித்தால் கதை விரியும்.சுதந்திர இந்தியாவின் அமைப்பையும் அதில் உள்ள ஓட்டையையும் சீட்ட, தெளிவாக விமர்சன தொனி மின்னும் பல கதைகளுக்கு இது முதல் புள்ளி.

அகப்பட்டுக் கொண்டாரய்யா, பால்ய ஸ்நேகம்,விடுமுறை – ஆகிய மூன்று கலைகளும் படிப்பு தரும் அழுத்தம் அதை கையாள சிறுவன் எதிர் கொள்ளும் மன நெருக்கடியை குழந்தை மனம் வெளிப்படும்படி எழுதப்பட்டுள்ளது.விடுமுறை மட்டுமே கதை என்ற வடிவத்தில் அமர்ந்துள்ளது.அழகியலால் நின்றுவிட்ட கதை.

யார் கை மேல் – பகடியில் வெற்றி பெற்ற கதை என்று சொல்லலாம்.பாஸ்கரய்யர் வீட்டிற்கு அழையாவிருந்தாளியாக வருகிறார் கோபாலஸாமி,அவர் மகளுக்கு பாஸ்கரய்யர் மகனை பேசி முடிக்கப் பார்க்கிறார்.அதற்கு முன்பாக அவர்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள் வழி பகடியை நேர்த்தியாகவும், இயல்பாகவும் எழுதிக்கடத்தியுள்ளார். (அ.மியின் ஒரு ஞாயிற்றுக்கிழமை என்ற கதைக்கும் இதற்கும் ஏகபோக பொருத்தம்.)

கூத்தாடி கதை என்பது சற்றே பெரிய கதை.சொல்வது நன்றாக இருக்காது.ரங்கசாமி என்ற கூத்து கலைஞனின் வாழ்வை சொல்லும் கதை.அவன் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவன்.மனைவியை விடுத்து ‘சாதி கூத்தாடிச்சி’ ஒருத்தியுடன் சேர்ந்த வாழ சென்றதால், மூன்று வருடங்களாய் அவரின் பிரபலமான சந்திரமதி நாடகம் நிகழவில்லை.இப்போது புதிய ஓர் இளைஞயனுக்கு கிருஷ்ண ஐயர் ஜன திரள் இடையே விவரிக்கிறார் ரங்கசாமி பெருமையை.நாடகத்தின் உச்ச வேலையில் நடக்கும் கொலை முயற்சி சற்றே செயற்கையாக தெரியும் ஒரே இடம்.(அவர் புனைவிலேயே). ஆனால் அந்த கூட்டத்திலேயே அவன் முன்னாள் மனைவி இருக்கிறாள்.இவன் கூத்துக்கட்டுவதை கொஞ்சமும் விரும்பாததாலேயே ரங்கசாமி வேறு பெண்ணுடன் சென்றிருப்பான்.சந்திரமதி என்ற படிமம் சட்டென்று அவள் பக்கம் திரும்புவதற்கு இச்செயற்கைக் பயன்படுவதால் துருத்துக்கொண்டு தெரியவில்லை.மேலும்  நாடக தருணத்திற்கு அது உதவி புரிகிறது.

 3.

1962 – டில் தன் தொகுப்புக்காக மூன்று கதைகளை எழுதி சேர்த்துள்ளார் ரஸிகன்.அம்மூன்று கதைகள் -வெகுநாளைக் குடியானவன், வெள்ளெருக்கு, மாப்பிள்ளை.இந்த மூன்று கதைகளும் மிக நீண்ட கதைகள் என்பது மட்டுமன்றி,நல்ல கதைகளும் கூட.அ.சதீஷ் பலாச்சுளை கதைக்கு அடுத்தே இம்மூன்று கதைகளையும் தொகுத்துள்ளார்.காலத்தால் பின்னே எழுதப்பட்ட அக்கதைகளை முக்கிய கதைகளாக எனக்கு தோன்றுகிறது.மேலும் இரண்டு கதைகளை அத்துடன் சேர்ந்ததுக் கொள்ளலாம்.ஒன்று ஊருக்கு பெரிய மனுஷர், மற்றொன்று கீசகவனம்.

இந்த ஐந்து கதைகளும் முக்கியமான கதைகள் என்பதால் பொதுவாக பேசலாம் என்று தோன்றுகிறது.உண்மையில் வெகுநாளைக் குடியானவன் என்ற ஒற்றை கதைதான் என்னை கட்டுரை எழுதவே உத்தியதோ என்று ஐயம் வருகிறது.நிலம் – சாதி – அதிகாரம்  சார்ந்த கேள்விகளை தம் ஆதாரமாக வைத்திருப்போர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கதை. பறையர்-படையாச்சி-பிராமணர் என்று உள்ள கிராம அமைப்பில் அடுத்த தலைமுறை தலையெடுப்பதால் இவைகளுக்கு இடையே இருந்த உறவுகளில் உண்டாகும் சிக்கல்கள்,விழுமிய மாற்றம்,- அது யாருக்கு சாதகமாக மாறுகிறது என்பதை கதை மிக விரிவாக விவாதிக்கிறது.பண்பாட்டு வேர் பிடிப்பு மிகுந்த கதை என்பதாலோ தெரியவில்லை அந்த கதையை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் ஒருமுறை தான் படித்தேன். இரு தினங்கள் தொண்டைக்கும், மூளைக்கும் இடையே மின் வெட்டு நிகழ்ந்து கொண்டிருந்தது. (உண்மையில் மிகையாக சொல்லவில்லை. ரசிய இலக்கிய தாக்கம் இதில் நேராகவே வெளிப்படுகிறது.மேலும் இந்த கதையையா தமிழ் சூழல் மறந்தது என்ற ஆச்சரியமும், என் வாசிப்பின் மீதான சந்தேகமுமே கூட எழுந்து விட்டது)

அக்ரஹாரம் இருக்கும் – இல்லாத கிராமங்களுக்கு இடையிலான வேறுபாடு, 1951- தஞ்சை ஜமீன்தாரி குத்தகை சட்டம் ஏன் பெயருக்கு ஏட்டில் தூங்கியது, என்ற அடிப்படையான கேள்விகள் தொடங்கி சாதியின் சுபாவம் தமிழ்நாட்டில் மாறி வந்ததன் வரலாறு என்று விரிய சாத்தியமுள்ள கதை.’ஏய்’ என்று அழைத்தவுடன் ‘எசமானே’ என பக்தியுடன் இடையில் துண்டுடனும் வந்து நிற்கும் காட்சியை சினிமாவில் பார்த்திருப்போம், பேச்சாளர்கள் பேசி கேட்டிருப்போம், எழுத்து – அரசியல் எழுத்தாளர்கள் எழுதியும் படித்திருப்போம். ஆனால் இவைகளின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தும் திராணி உள்ள கதையாக இதை சொல்ல முடியும்.

யதார்த்தவாதத்திலோ,இயல்புவாதத்திலோஅல்லது வேறு எந்த இலக்கிய உத்தியிலோ கதை சொல்லும் போது அந்த அழகியலின் இயல்புக்கும் அதை கையாளும் ஆசிரியரின் நேர்மைக்கும் அதிக நெருக்கம் இருப்பதாக படுகிறது.ஒரு கதையில் ஆசிரியன் எழுப்பிக் கொள்ளும் கேள்விக்கும்,கவனப்படுத்த விரும்பும் சிக்கலுக்கும் அவன் நேர்மையின் பொருட்டே அந்த கதையின் கலை பெறுமானம் தீர்மானிக்கப்படுகிறது அல்லவா? இப்படிச் சொல்கிறேன். சாதிய சிக்கலை ஓர் ஆசிரியர் தன் கதையில் கவனப்படுத்த விழையும் போது  பிராந்தியத்தையும்,சாதியின் பெயரை சொல்லாமலும் எழுதினால் அது எவ்வாறு நேர்மையான கதையாக மாறும்? (அப்படிப்பட்ட கதைகள் தமிழில் இருக்கிறது தானே).

புதுமைப்பித்தனின் கதைகளை வாசிக்கும் நாம் “அவரின் தத்துவ நோக்கு” என்று நம்பும் ஒன்றை பீராய விரும்புகிறோம்.தி.ஜா சிறுகதைகளை பார்த்தால் தெளிவான சமூக நோக்கு தென்படுகிறது.இப்படி நம் மனதில் ஓர் ஆளுமை ஒரு நேரத்தில் ஒன்றாகவே நமக்கு கிட்டுவார்கள். ரஸிகனிடத்தில் நமக்கு கிடைப்பது, வாழ்க்கை நோக்கு என்று இப்போது சொல்ல தோன்றுகிறது.(அது மூன்றும் வெவ்வேறா? என்பது வேறு விவாதம்)

மேலே சொன்ன அனைத்து கதைகளும் முழு வாழ்வை அள்ளும் கதை.அதிலும் வெவ்வேறு களங்களில் இது அமைந்துள்ளது.அதிகார மட்டத்தில் உச்சியில் உள்ள நீதித்துறை,(ஊருக்கு பெரிய மனுஷர்),அதிகாரத்தில் கடைசியில் உள்ள குத்தகைதாரர்(வெகுநாளைக் குடியானவன்), ஆன்மீகமாக கேள்வியில் தத்தளிக்கும் படித்த லௌகீகன்(கீசகவனம்), லௌகீகத்தில் தோல்வி அடைந்தவன்(மாப்பிள்ளை),பின்னே இழுக்கும் சமூகத்தின் குடும்ப அமைப்பில் விரும்பிய வாழ்வை வாழ முடியாத தம்பதி(வெள்ளெருக்கு- க.நா.சு கட்டுரை வழி இந்த கதைக்கும் ரஸிகனின் தனிப்பட்ட வாழ்வுக்கும் தொடர்பிருப்பதை அறிமுடிகிறது) என்று வேறு வேறு சூழலை நாம் பார்க்கமுடிகிறது.எந்தப் போலியும் இதில் தென்படவில்லை.இவை அனைத்திலும் ஒரு பொது அம்சம் உள்ளதை கவனித்தால் ஒன்று புரியும்.இன்று தமிழில் நமக்கு பின் நவீனத்துவம் சார் அடிப்படைகள் மீது சந்தேகம் உள்ளது.மிக அடிப்படையான விடயங்களில் நமக்கு இருக்கும் திரிபு என்பது இடுகுறிக்கு நிகராக இடுகுறியை வைப்பது போல் தோன்றுகிறது.ஆனால் ரஸிகன் கதைகளில் சமூகம் நம்பும் அடிப்படையில் எந்த பங்கமும் ஏற்ப்படுத்தாமல் அந்த தர்கத்தில் நின்றே களமாடுகிறார்.கீசகவனம் கதையின் ஒருவன் அடையும் ஆழமான ஆன்மீக கேள்விக்கும் அவனின் சமூக பார்வைக்கும் உள்ள நெருக்கத்தை பேசுகிறார்.எதை பேசினாலும் சமூகம் சார்ப்பார்வையை அறுத்துவிட்டு பேசவில்லை. இது நேர்மையாக வெளிப்பட்டமையால் ஆவணமாகும் தகுதியை பெறுவதோடு காலாதீத்தையும் எட்டிவிடுகிறது.ரஸிகனுக்கு  சமூகவியல் கேள்விகளை தொடர்ந்து கையாள்வதில்  வெறுப்புமில்லை சோர்வு மில்லை.அதனால் அதை கை விடவுமில்லை.இது அனைத்து நவீனத்துவ படைப்பிற்கும் பொருந்தும் தானே? – இருக்கலாம், இதில் ஒரு வலு இருக்கிறது.கதையின் தொனியில்  தயக்கமில்லை.இந்த விஷயங்கள் தான் என் எடுத்த அடியை யானையடியாக வைக்கவேண்டும் என்ற யோசனையை பரிசீலனை செய்ய வைக்கிறது.

 4.

குளிர்ந்த பனி காதில் அரிப்பையும் தொண்டையில் எரிச்சலையும் தருவதுபோல, இலக்கிய பிரதி எங்குவேண்டுமென்றாலும்  எதையும் செய்யலாம்.அதில் ஒற்றைப்படை வெளிபடுவது ஒரு பலவீனமே.ஆகவே வெவ்வேறு களங்களில் ‘இலக்கியம்’ வேறு வேறு புரிதலைத் தரமுடியும்.’கதை’ தரமுடியாது.ரஸிகன் பல நகர்வுகளை தர சாத்தியமுள்ளவர் என்பதே என் கண்ணில் புலப்படுவது.சுருங்க சொன்னால் சமகால எழுத்தில் ரஸிகன் சில அதிர்வை தரவல்ல எழுத்துக்காரர்.கதையின் ஓர்மையுடன் கலையில் குந்தகம் இல்லாது ‘சமகால’  சிக்கலை கையாள்வது மிக சிக்கலான ஒன்று.அது ரஸிகனுக்கு வாய்த்திருக்கிறது.(சமகாலம் என்பது இந்த நூற்றாண்டாககூட இருக்கலாம்). அவ்வளவு தான்.

எழுத்தாளர் நண்பர் ஒருவரிடத்தில் ரஸிகன் தொடர்பான அனுபவத்தைச் சொன்னபோது,

பாத்தியா ஒரு ஆள(யுவன்) கவனப்படுத்தும்போது, அவரோட அழகியல் பார்வ முழுசும் உள்ளவருது? என்றார்.

யுவன் ரஸிகனிடத்தில் பெற்றுக்கொண்டது என்ன என்பதை ரஸிகனை படிக்காமல் முடிவெடுக்கமுடியுமா?அந்த எழுத்தாளர் நண்பர் அப்படிச்சொன்ன போது தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுதிகளை மட்டும் படிக்கும் நண்பர்களை நினைத்துக் கொண்டேன்.

அப்புறம்,நூலகத்தில் பிரிதியை திரும்பி தரவில்லை.புதுப்பித்துக்கொண்டே இருக்கிறேன்.அடுத்தமுறை எவரேனும் புரட்டிப் பார்த்தால் ‘இவர் வாசிக்கப்பட்டவர்’ என்று தெரியவேண்டும் என்ற என் எண்ணத்தில் தவறில்லையே!.

புகைப்படங்கள்- தமிழினி பதிப்பகம்.