கில் பில் இரண்டாம் பாகத்தின் (Kill Bill Vol – 2) உச்சக் காட்சியில் வில்லன் பில், “காமிக் ஹீரோக்களில் எனக்கு பிடித்தமானவர் சூப்பர்மேன். மற்ற பாத்திரங்களைப்போல அவரில்லை. அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் அவர்களுடைய உண்மை உருவம் உண்டு. ஸ்பைடர்மேனுக்கு பீட்டர் பார்க்கர் , பேட்மேனுக்கு ப்ரூஸ் வேயின். காலையில் எழும்போது பேட்மேன் ப்ரூஸ் வேயினாகத்தான் எழுகிறார், ஸ்பைடர்மேன் பீட்டர் பார்க்கராகத்தான் எழுகிறார். சூழ்நிலைகளின் நிர்பந்தங்களுக்கு உட்பட்டு உருமாறுகிறார்கள். இதில்தான் சூப்பர்மேன் வித்தியாசமானவர். சூப்பர்மேன் பிறக்கும்போதே சூப்பர்மேனாகத்தான் பிறந்தார். அவருடைய மாற்று உருவமான கிளார்க் கென்ட் தான் முகமூடி அணிந்தவர். கிளார்க் கென்ட் எப்படிப்பட்டவர் ? மந்த புத்தி, வெகுளி, கோழை. கிளார்க் கென்ட் , மானுடத்தின்மீது சூப்பர்மேன் சுமத்திய விமர்சனம்.” என்பார். ஆக்கத்தில் சூப்பர் ஹீரோக்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பொது நுகர்விற்கும் உகந்தவர்கள் என்பது இந்த எடுத்துக்காட்டிலிருந்து விளங்கும்.
காமிக் பாத்திரங்களில் சமுதாய கூட்டுச் சிந்தனையின் ஏதோ ஒரு சரடு வெளிவருகிறது. “பறவையா? விமானமா? இல்லை சூப்பர்மேன்” எனும்போது சூப்பர்மேனை விமானம் பறக்கும் விண்ணைவிட உயர்ந்த இடத்தில் தேவர்களுடன் சஞ்சாரம் செய்பவராக உயர்த்திவிடுகிறது. பொதுவாக சூப்பர் ஹீரோக்களின் கருத்தாக்கம் மனித இயலாமையிலிருந்து ஒரு பாகமும் ஆளுமையின் எதிர் பிம்பத்தின் பிரதிபலிப்பாக மீதமும் ஒருசேர்ந்து உருவானது. உள்ளுணர்வின் சிக்கலான இருப்பு பின்பியல் விடைகளுக்கு நேர் மாறாக, புறக் கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை அழித்து, முற்றிலும் வேறு மனிதராக உருவெடுக்க, தனிநபர் அறங்களை வன்மையுடன் நிலைநாட்டச் சிந்தை கருத்தரிக்கும் எதிர் ஆளுமையின் பிம்பமே சூப்பர் ஹீரோக்கள். சூப்பர் ஹீரோக்களின் விளக்கம் மற்றும் விரிவாக்கம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹுகோ ஹெர்குலீஸ் (Hugo Hercules ) என்பவருடன் துவங்கி 1930 களில் சூப்பர்மேனுக்கு வரும்போது வெகுவாக மாறிவிடுகிறது. அமானுஷ்யச் சக்தி படைத்தவர் சமுதாயத்திற்கு நல்லது செய்ய நினைக்கும் மத்தியக் கரு மாறாமல் அந்த மனிதரைப்பற்றிய பல கதையாக்கங்கள் நுகர்வின் தேவைக்காகக் கொடுக்க வேண்டியது அவசியமானது. சூப்பர்மேனின் நிரந்தர ஜனாபிமானத்திற்கு அதுவும் ஒரு காரணம். சூப்பர்மேன் அடிப்படையில் அயல்வாசி மட்டுமின்றி மனிதனைப்போலக் குறைகள் (கிரிப்டோணையிட் நினைவிருக்கட்டும்) உடையவராக காண்பிக்கப்படுவதிலிருந்து அவரது நித்திய அபிமானம் வேரூன்றுகிறது.
ஐரோப்பா , அமெரிக்கா இருவரிடையே சூப்பர் ஹீரோக்களின் விரிவாக்கத்தில் இருந்த இடைவெளி, அச்சமுதாயங்களின் மதிப்பமைப்புகள் பேணும் சமூகக் கூறுகளின் விளைவு. ஐரோப்பியர்கள் சூப்பர் ஹீரோக்களை மனிதர்களுள் திறமைசாலிகளாகப் பாவித்தனர். மர்மமான குழுக்களில் திறனுடன் கொள்கைக்காகப் போராடும் மாவீரர்களாகச் சித்தரித்தனர். வெளியுலகிற்குக் கோமாளிகளாகவும் வேலைக்கு உதவாதவர்களாகவும் காண்பவர்கள் திரைக்குப் பின் சாதனையாளர்களாக மாறினர். ஸ்கேர்லெட் பிம்பேர்னெல் (Scarlet Pimpernel), ஸ்கேர் கிரௌ (Scare Crow) போன்றவர்கள் இத்தகைய கருத்தாக்கத்தின் உதாரணங்கள். தனிப்பட்ட அமானுஷ்யச் சக்திகளின்றித் தங்கள் திறமையினால் மட்டுமே சமுதாயத்தில் மர்மம் கலந்த மோகத்தன்மை உடையவர்களாக வலம் வந்தனர். மாறாக அமெரிக்கர்கள் தங்கள் சூப்பர் ஹீரோக்களை அமானுஷ்யச் சக்தி படைத்தவர்களாக பாவித்தபோது கொள்கை வீரர்களாகக் காட்டவில்லை. இந்த வேறுபாடு அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சமுதாயங்களின் பிரதிபலிப்பு. காமிக் ஹீரோக்களின் நுகர்வு பெரும்பாலும் மேற்கத்திய வாசகர்களையே மையமாகக் கொண்டதென்பதால் மத்தியப் பாத்திரம் அக்காலகட்டச் சமுக ஒழுக்கங்களையே கடைப்பிடித்தனர். பிரபுக் குடியில் பிறந்த வெள்ளையர் டார்சான், ஆப்ரிக்கக் காட்டிற்கு ராஜாவானது அப்போதைய சொல்லாடலில் ஒவ்வாமையூட்டும் கதையமைப்பாக யாருக்கும் தோன்றவில்லை. ஆப்ரிக்கர்களைப் பின்தங்கியவர்களாகவும் மேற்கத்தியர்களை அவர்களுக்குச் சமுதாய பண்புகளைப் புகட்டுபவர்களாகவும் சித்தரிப்பது அந்தக் காலகட்டங்களில் பொதுப் பிரசங்கத்திற்கேற்ப அமைந்தது. மேற்கத்தியர்களின் கண்ணோட்டத்தில் கிழக்கை, ஆப்பிரிக்கக் கண்டதை, தெற்காசியர்களை அச்சடித்ததுபோல பிரதிபலிப்பது நுகர்வின் காரணமாக மட்டுமின்றி அச்சமூகங்களைப் பற்றிய விழிப்புணர்வின்மையின் விளைவும்கூட.
ஜப்பானியர்கள் படைத்த முதல் ஹீரோ ஓகோன் பேட் (Ogon Bat ) மேற்கத்திய பேட்மேனுக்கு முன்னோடி. பாணியில் அமெரிக்க காமிக் பாரம்பரியத்தையே பின்பற்றினாலும் ஜப்பானிய சூப்பர் ஹீரோக்களின் வயது மேற்கத்தியர்களின் வயதைவிடக் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய சூப்பர் ஹீரோக்கள் பிரத்தியேகமாக உபகரணக் கலாச்சாரத்தை ஆரம்பித்தனர். மரபணு பாதிப்போ அல்லது விபத்தோ அமானுஷ்யச் சக்தியைக் கொடுப்பதைவிட உபகரணங்களின் மூலம் சாமானியன் அதியாற்றலை பெரும் தனித்துவ கதாபாணி அவர்களுடையதே.
வேறுபாடுகள் இருப்பினும் சூப்பர் ஹீரோக்களின் கருத்தரிப்பில் உலகளாவிய ஒற்றுமைகள் சில உள்ளன. முதலாவது, அணைத்து ஹீரோக்களும் ஏதோ விதத்தில் முகமூடி தரிப்பவர்கள். இந்தப் பொதுமை சமுதாயத்தின் பொதுச் சிந்தனையில், நேர்மையானவர்கள் நன்மைக்கென போராடும்போது நிச்சயம் முகமூடி அணியவேண்டும் என்ற உளவியல் கட்டாயத்தை ஏற்படுத்திவிடுகிறது. இரண்டாவது, சமுதாய இன்னல்களுக்கு சூப்பர் ஹீரோக்கள் நிவாரணம் அளிப்பதில்லை. பாரபட்சம், கல்வியின்மை, இனவெறி போன்றவற்றில் சூப்பர் ஹீரோக்களுக்கு அதிக ஆர்வமிருப்பதில்லை. குறிப்பிட்ட வில்லன் இருந்தால் மட்டுமே சூப்பர் ஹீரோ அவதரிப்பார். மூன்றாவது, உலகத்தையே நல்லது கேட்டது என்ற இருமைகளாகப் பிரித்துவிடுவது. மனிதருக்கு மனிதர் வேறுபடும் அறத்தை பற்றிய சிந்தனைகள் சூப்பர் ஹீரோக்களுக்கு முக்கியமாகத் தெரிவதில்லை.
இப்போதைய விழித்த சமுதாயத்திற்கேற்பச் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட, குறைந்த பிரதிநிதித்துவப் பிரிவினரின் ஒரு பாத்திரமாவது கதையோட்டத்தில் அல்லது காமிக் நிறுவனங்களின் கதை மாந்தர்கள் அவையில் சேர்த்துக்கொள்ளப்படுவது சமூக நெறிகளுக்கு உடன்படுவதற்காக முகம் சுளித்துக் கொடுக்கப்படும் சிறு காணிக்கையெனத் தோன்றுகிறது. இத்தகைய வலுக்கட்டாய முயற்சியின் விளைவே பிளாக் பாந்தர் (Black Panther ) , ஃபயிஜா ஹுசைன் (Faiza Hussain) போன்ற ஆழமற்ற கதைமாந்தர்களின் உருவாக்கத்தில் முடிகிறது. இந்திய சூப்பர் ஹீரோவின் துவக்கம் தொண்பதுகளில் தொலைக்காட்சிப்பெட்டி இல்லங்களுக்குள் சகஜமானதும் சக்திமானுடன் ஆரம்பித்து அவருடனே முடிந்தும் விடுகிறது. கருத்தரிப்பில் சூப்பர்மேனின் நகலியாக இருப்பதுகூட சகித்துக்கொள்ளலாம் ஆனால் சக்திமானின் அமானுஷ்யத்திற்கு இந்தியத் தத்துவத்தில் அடிப்படை கொடுத்ததில் பொதுத்தன்மை நீங்கி ஓர் இனத்தவரின் ஹீரோவாக மாறிவிடுகிறார் என்பதே குறை. இந்திய சூப்பர் ஹீரோக்கள் புத்தக ஊடகத்தைவிடத் திரையில் அதிகமாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்க விசித்திரம். அமிதாப் பச்சனின் அஜுபா (Ajooba), ஷா ருக் கான் நடித்த ரா – ஒன் (Ra-One), ஹிருத்திக் ரோஷன் – க்ரிஷ் போன்ற படங்கள், பாத்திரத்தைவிட ஹீரோக்களின் தற்புகழை அதிகரிக்க உதவும் படைப்புகளே. இந்தியாவில் சினிமா இருக்கும்வரை இந்தப் போக்கு மாறாதென்றே தோன்றுகிறது. மேற்கில் நேர் மாறாகப் பாத்திரங்களை மையப்படுத்தி ஹீரோக்கள் மாறுவது வழக்கம் (அடுத்த சூப்பர்மேன் யார்?). வர்த்தக ரீதியாக சூப்பர் ஹீரோக்கள் ஊடக பொழுதுபோக்கு நுகர்வின் முக்கிய அங்கங்களாக இந்தியாவில் பார்க்கப்படுவதில்லை.
சூப்பர் ஹீரோக்களின் ஜனாபிமானம் அவர்கள் எதிர்கொள்ளும் வில்லன்கள்மேல் அடிபடைகொண்டது. ஜப்பானிய நகர நாசினிகள் மேற்கிற்குப் புலம் பெயரும்போது முற்றிலும் வேறு கண்ணோட்டம் உடையவர்களாக மாறிவிடுகிறார்கள். மேலோட்டத்தில் ஐரோப்பிய சூப்பர் ஹீரோக்களின் ஆரம்பகாலத்தில் கொள்கைரீதியான எதிர்மறைகளே வில்லன் பாத்திரத்திற்கு உகந்தவர்களெனக் கருதினர். உதாரணத்திற்கு ஸ்கேர்லெட் பிம்பேர்னெல் ஃபிரெஞ்சு பிரபு குலத்தவரை புரட்சிக்காரர்களிடமிருந்து மீட்பதே லட்சியமாகக் கொண்டிருந்தார். அமெரிக்க சூப்பர்கள் உலக ஆதிக்க நோக்கம் கொண்டவர்களை எதிர்த்தனர். இந்தப் பாகுபாடு குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஹீரோக்கள் சமுதாயத்தைக் குறிப்பாக மனிதர்களை நல்லவன் கெட்டவன் இருமைகளாக வகைப்படுத்துவது புனைவை மேலும் வலுப்படுத்துவதற்கே. இந்தப் போக்கு மேற்கத்திய ‘எங்கள் வழி இல்லையேல் பொதுவழி’ யுடன் ஒத்துப்போவது ஆச்சர்யப்படுவதற்கில்லை. மனிதர்களுள் சாம்பலின் பல்வேறு நிழல்கள் இருப்பதை சூப்பர் ஹீரோ உருவாக்கிகள் கருத்தில் கொள்ளாதவரை மாசற்ற மனிதனை சூப்பர் ஹீரோக்களிலேயே சமுதாயம் பார்க்கமுடியும்.