சுந்தர ராமசாமியின் ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ சிறுகதையை முன்வைத்து
‘காகங்கள்’ சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகளின் பெருந்தொகை. சுமார் ஐம்தாண்டுகளில் அவர் எழுதியுள்ளவை. புதுமைப்பித்தனால் கவரப்பட்டு அவரைப்போன்று எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு எழுத வந்தவர். முறையாக தமிழ் கற்றுத் தேரியவர் அல்ல. பள்ளியில் அவர் பயின்றது மலையாளமும் சமஸ்கிருதமும். கோட்டயத்தில் இருந்து நாகர்கோவில் திரும்பிய பி்ன்னர்தான் தமிழ் எழுதப்படிக்கக் கற்று கதைகள் படைக்கத்தொடங்கினார். 57 கதைகளடங்கிய இத்தொகுப்பில் காகங்கள், கோவில் காளையும் உழவு மாடும், விகாசம், பல்லக்குத் துாக்கிகள், ஆத்மாராம் சோயித்ராம், திரைகள் ஆயிரம், ரத்னாபாயின் ஆங்கிலம் போன்றவை சுந்தர ராமசாமியின் படைப்பாளுமை நன்கு கனிந்த கதைகள்.
ரத்னாபாய் பேரழகி, தீவிர ஆங்கிலப்பிரியை, ஆங்கிலத்தில் அவள் வாசித்திருந்த கவிதை நுாலொன்றில் கவித்துவம் மிகுந்த வரிகள் அவளைப் பரவசப்படுத்தின. அவ்வரிகளை தன்னைப்போல தன்தோழியும் அனுபவித்து மகிழவேண்டும் என்று எண்ணி கடிதம் ஒன்றை எழுதுகிறாள். அவ்வரிகளுக்காக கற்பனையாக ஒரு சேலையை வர்ணிக்கிறாள். ”அம்பு, இந்தப் பட்டுப்புடவையை நீ பார்த்தால் என் கையிலிருந்து அதைப் பிடுங்கி உன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு எனக்கு, ஐயோ எனக்கு” என்று குதிப்பாய். சந்தேகமே வேண்டாம். ராதையின் அழகையும் கண்ணனின் வேணுகானத்தையும் குழைத்து இதைப் படைத்திருப்பவனைக் கலைஞன் என்று நான் கூசாமல் அழைப்பேன்.வண்ணக் கலவைகளில் இத்தனை கனவுகளைச் சிதறத் தெரிந்தவன் கலைஞன்தான்” என்பதே அவள் அக்கவிதையை தன் சொந்த அனுப அறிதலாக புனைந்து எழுதிய கடித வரிகள்.
உடனே தோழி அம்புஜத்திடமிருந்து பதில் வருகிறது. ”ரத்னா உனது ஆங்கிலம் எத்தனை தடவை வியந்தாயிற்று.வியந்ததைச் சொல்லத் தெரியாமல் விழித்தாயிற்று. ஒன்றாய்த்தானே படித்தோம்? எங்கிருந்து கிடைத்தது உனக்கு மட்டும் இப்படி ஒரு பாஷை ” என்று அவளின் ஆங்கிலப்புலமையை பாராட்டிவிட்டு கடைசியாக ”நீ வாங்கிய அந்தப் புடவையில் எனக்கும் என் சக ஆசிரியைகள் இருவருக்கும் என மொத்தம் மூன்று சேலைகள் வாங்கி தவறாமல் அனுப்பு“ என்று ஒரு கோரிக்கை வைக்கிறாள். பதில் கடிதம் வாசித்தவுடன் ரத்னாபாயிக்கு இதென்னடா தொந்தரவு என்று தோன்றுகிறது. அவள் அரசுப்பள்ளி ஆசிரியைதான் என்றாலும் அன்றைய நிலைமையில் மூன்று சேலைகள் எடுக்குமளவு பணமில்லை. தன் கணவனிடம் பணம் கேட்க முயற்சித்து தோல்வியுடன் திரும்புகிறாள். தன் கைவளைகளை கழற்றி வங்கியில் நகைக்கடன் பெற செல்கிறாள். அங்கும் ஒரு சிக்கல். புதன்கிழமை மட்டும்தான் நகைக்கடன் கிடைக்குமாம். எனவே ஒரு புத்திசாலித்தனமான முடிவொன்றை எடுக்கிறாள். தன் கையில் இருக்கும் பணத்தைக் கடையில் முன்பணமாகக் கொடுத்துவிட்டு புடவைகளை வாங்கி டெல்லியில் உள்ள தோழிக்கு அனுப்பிவிடுவோம். அதன்பின் புதன்கிழமை நகைக்கடன் பெற்று மீதிப்பணத்தை கடைக்காரரிடம் அடைப்போம் என்று.
ஜவுளிக்கடை சென்று தான் அன்று எடுத்த அந்த ராதையின் அழகும் கண்ணனின் கானமும் கலந்த புடவை வேண்டும் என்கிறாள். அவள் கேட்கும் புடவை உண்மையில் தான் இதுவரை எடுத்திருக்காத ஒன்று அல்லவா என்று அவளுக்கு சங்கடத்தை உண்டுபண்ணுகிறது. ஆனாலும் சிறந்த சேலையை எடுத்துக்கொண்டு வீடு திரும்புகிறாள். அன்றிரவு தன் தோழிக்கு கடிதம் எழுதுகிறாள். ” சேலைகள் எடுத்து அனுப்பி விட்டேன்.உனக்கும் உன் சிநேகிதிகளுக்கும். நீயும் உன் சிநேகிதிகளும் அதைக் கட்டிக்கொண்டு கல்லுாரி முன்னால் நிற்பதாய் கற்பனையும் பண்ணியாயிற்று. ஒன்று சொல்லிவிடுகிறேன்.நீ உன் சேலைக்கு பணம் அனுப்பினால் எனக்குக் கெட்ட கோபம் வரும். எனக்குத் தரவேண்டியது உன் புகைப்படம், அந்தப் புடவையில். ஐயோ! என் சிநேகிதிக்கு என்னால் நஷ்டம் என்று இளைத்துப்போய்விடாதே. இங்கு பிள்ளைகள் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். பல்வலிக்கும் குறைவில்லை.”
ரத்னாபாயிக்கு அந்தக்கடிதமும் ரொம்ப பிடித்திருக்கிறது. தன் ஆங்கில மொழியாளுமை மிகச்சரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று திருப்தி அடைகிறாள். அக்கடிதம் அளித்த மகிழ்ச்சியில் ”பாஷை ஒரு அற்புதம். கடவுளே உனக்கு நன்றி” என்று சொல்லிக்கொள்கிறாள்.
ரத்னாபாய்க்கு அழகில் குறைவில்லை. பருவத்தில் ஊரைக்கலங்க அடித்தவள். நாள்தோறும் அவளுக்குக் காதல் கடிதங்கள் வந்து குவியும். அவை அத்தனையையும் ரத்னாபாயின் தாயார் மீராபாய் வாசித்து மறைத்துக்கொள்வாள். பொக்கிசமாக தன் மகளை பொத்தி பொத்தி்ப் பாதுகாப்பாள். மீராபாய்க்கு தன் மகளின் அழகு குறித்து பெரும் கர்வம். தன்னோடு கடைத்தெருவிற்கு மகளை அழைத்துச்செல்லும்போது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். அத்தனை ஆண்களின் கண்களும் ரத்னாபாயை சுற்றிச்சுற்றி வருவதில் தாயாக மீராபாய்க்கு ஆனந்தமிருந்தாலும் ஒரு பக்கம் அதுகுறித்த வருத்தமும் உண்டு. அவளை எப்படிப் பாதுகாக்கப்போகிறோம் என்று.
நாட்கள் செல்லச்செல்ல ரத்னாபாய்க்கு திருமணம் தள்ளிப்போகிறது. பிறர் அதுகுறித்து கேட்குமளவிற்கு. அவளைச் சுற்றிக்கொண்டிருந்த பையன்களுக்கு அவர்களின் அத்தை, மாமன் பெண்களோடு திருமணம் நடந்துகொண்டே இருக்கிறது. அதனால் ரத்னாபாய் ஜான்சனை காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள். தினமும் அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஜான்சனை வாசலில் லுங்கியோடு நிற்பதைப் பார்க்கிறாள். காரில் சிறுவர்களை அள்ளிக்கொண்டு விரைகிறான். அவனின் எளிமையும் சிறுவர்கள் அவனிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையும் அவன் மீது ரத்னாபாய்க்கு காதல்வரக் காரணமாக இருக்கிறது. திருமணம் நடந்த அன்றிரவு ரத்னாபாய் ஆங்கிலத்தில் தன் கணவனிடம் சொல்கிறாள் ”அந்தச் செய்கை. அதில் நான் கண்ட எளிமை அந்த ஏழைச் சிறுவர்களும் உங்களை அன்னியோன்னியமாக பாவித்த விதம். அதற்காக உங்களை நேசித்தேன் என்று. ”உன்னைவிடவும் அழகாக இருக்கிறது. உன் ஆங்கிலம்.” என்கிறான் ஜான்சன்.
ஆனால் சேர்ந்து வாழ்ந்த சில மாதங்களிலேயே ரத்னாபாய்க்கு தெரிந்துவிடுகிறது, ஜான்சனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வது சாத்தியமில்லை என்று. ஜான்சனுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. பல் டாக்டராக அவன் இருக்கும் நேரம்போக மற்ற நேரங்களில் நண்பர்களோடு வேட்டைக்குச் சென்றுவிடுகிறான். தனக்கு வீடு இருக்கிறது என்றோ அவ்வீட்டில் தன்னை எதிர்பார்த்து ஒருத்தி காத்திருப்பாள் என்றோ அவனுக்குத் தோன்றுவதில்லை. ரத்னாபாயை முதல்முதலாக வாழ்க்கை கைவிடுகிறது. ரத்னாபாயின் துரதிருஷ்டம் குழந்தைகளும் அவளைக் கைவிடுவதுதான். இரண்டு மகள்களும் அவளைப்போல் அல்லாமல் மக்காக பள்ளியில் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். மகனோ அப்பனைப்போல சுற்றித்திரிகிறான். படிக்கிற வயதிலேயே பீடி சிகரெட் என்று சீரழிந்துவிடுகிறான். அவள் பெருமை கொள்ள எதுவும் இல்லை இல்லற வாழ்வில்.
அனைவராலும் கொண்டாடப்பட்ட தன் அழகு, காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன், ஆசையாய் பெற்றுக்கொண்ட குழந்தைகள் என அனைவரும் அவளை கைவிட்டபோதும், அவ்வீழ்ச்சியில் இருந்து தன்னை மீட்டெடுத்துக்கொள்ள அவளுக்கு அவள் அறிந்திருக்கும் ஆங்கிலம் பயன்படுகிறது. தன் இருப்பை நிரூபித்துக்கொள்ள தன் தோழிக்கு தொடர்ந்து ஆங்கிலப்புலமை மிளிர கடிதங்கள் எழுதுகிறாள். தோழியும் அவள் கணவரும் ரத்னாபாயின் ஆங்கிலத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அது ஒன்றுதான். மிக எளிய இன்பம். இந்தியப் பெண்கள் பெரும்பாலானவர்களின் கதை இப்படித்தான் இருக்கிறது. பெண்ணாக வளர்ந்துவரும்போதே அழகு குறித்த பெருமையோ அழகின்மை குறித்த சிறுமையோ அவர்களுடன் சேர்ந்தே வளர்கிறது. கன்னியாக உச்சமடைந்த அவர்களின் அழகு திருமணத்தோடு களவாடப்படுகிறது.. அழகு எவ்வளவு கூடி அமைந்திருக்கிறதோ அந்தளவிற்கு தன் இருப்பு குறித்த கர்வமும் அதிகரித்துவிடுகிறது. அவ்வழகினை இழப்பதென்பது பெண்களுக்கு உடலின் ஒரு உறுப்பினை இழப்பது போன்றது. பெரும் செல்வமாக பெண்கள் தங்கள் அழகினை எண்ணிக்கொள்கிறார்கள். அதனால் அதுகுறித்த சொற்கள் அவர்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது. அழகு எவ்விதத்திலும் பெண்களுக்கு விடுதலையை, கொண்டாட்டத்தைத் தருவதில்லை என்று ரத்னாபாய் மூலம் சுந்தர ராமசாமி சொல்கிறாரா? பெண்கள் தன் உடல்சார்ந்த பிரக்ஞை தவிர்த்து தன் இருப்பிற்கான பொருளை தாங்களே படைத்துக்கொள்ள விழைதல் அவசியம் என்று இக்கதையை வளர்த்துக்கொள்ளலாமா? ஏழு பக்கங்கள் கொண்டு நான்கு பத்திகளாகப் பகுக்கப்பட்ட சுந்தர ராமசாமியின் இந்தச்சிறுகதை 1978 ல் வெளிவந்தது. அவரின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுவது.
ரத்னாபாயின் ஆங்கிலம் பெண்கள் குறித்து எழுதப்பட்டவைகளில் நுட்பமான அவதானிப்புகள் கொண்ட சிறந்த சிறுகதை. அசோகமித்ரனின் பெண்களைப்போல் அல்லாமல் தனக்கென ஒரு தனித்துவ வெளியை உண்டாக்கத்தெரிந்தவர்கள் சுந்தர ராமசாமியின் பெண்கள். கதையை படித்து முடித்ததும் ரத்னாபாயின் மீது ஆழ்ந்த துயரம் எழுந்தது.
***