எஸ். ராமகிருஷ்ணனின் ‘உனக்கு 34 வயதாகிறது’ சிறுகதையை முன்வைத்து
தமிழில் அதிகமாக எழுதப்பட்ட கதைக்களங்களில் வேலையில்லாத் திண்டாட்டமும், முதிர்கன்னியின் காத்திருப்பும் முதலிரு இடங்களை வகிப்பவை. எனில் இக்கதையின் சிறப்பம்சம் என்ன? ஏன் இது மிகச்சிறந்த தமிழ்ச்சிறுகதை என்ற உள்வட்டத்திற்குள் வருகிறது?
மூன்றுவிதமான சுழல்கள் இக்கதையை உந்தித்தள்ளிக்கொண்டு செல்கின்றன. முதலாவது குடும்பமும் உறவினர்களும் தனித்துவாழ விரும்பும் சுகந்திக்கு அளிக்கும் நெருக்கடியும், வன்முறையும். அப்பாவின் குத்தல் பேச்சோடுதான் கதையே ஆரம்பிக்கிறது. இரண்டாவது தனித்துவாழ முயலும் பெண்னை நம் ஆண்களும் பெண்களும் எதிர்கொள்ளும் விதம். சுதந்திரம் பெற்று, கல்வியறிவில் கணிசமான முன்னேற்றம் கொண்டுள்ள நாம் முதிர்கன்னியாக விரும்பி வாழ முயலும் பெண்ணிற்கு கொடுக்கும் துளைச்சல்கள் சொல்லமுடியாதவை. விதவை என்றால் ”ஆணிற்காக தவித்திருப்பவள் ” என்பதும், முதிர்கன்னிகள் “ஆணையே நினைத்திருப்பவர்கள்” என்ற பிம்பமும் பொதுப்புத்தியில் நிலைத்திருப்பவை. தனித்திருக்கும் பெண்களை சக பெண்கள் அஞ்சுகிறார்கள். ஆண்களோ தங்களின் இச்சைக்கான சுதந்திர வெளியென்று கருதி திளைத்துவாழ விழைகிறார்கள்.
சுகந்திக்கு திருமணத்தின்மீது விருப்பமில்லாமல் போகிறது. ஏன் என்பதற்கான காரணத்தை எஸ்.ரா. நம் கற்பனைக்கே விட்டுவிடுகிறார். பெரிய லட்சியமொன்றைக் கொண்டவர்களைத்தவிர மற்றோருக்கு பிரம்மச்சரியம் என்பது உதந்தவாழ்க்கை நெறி அல்ல. இயற்கையை மீறிய ஒன்றும் கூட. எனில் சுகந்திக்கு ஏன் ஆணின்துணை அவசியம் என்று தோன்றாமல் போகிறது. தனித்துவாழ்வதன் மகத்துவத்தை அவள் எவ்விதம் அறிந்துகொண்டாள்? கதையில் இரண்டு இடங்களில் இதற்கான புள்ளிகளை எஸ்.ரா. வைத்துள்ளார். கல்யாணத்தைப் பற்றிக் கல்லுாரியின் முதல் ஆண்டில் சுகந்தி நிறையக் கனவு கண்டாள். கல்யாணம் செய்துகொண்டுவிட்டு படிக்கலாமே என்று கூடத் தோன்றியது. ஆனால் இறுதி ஆண்டு படிக்கும்போது கல்யாணம் பற்றிய கனவுகள் மறைந்து போயிருந்தன. வேலைக்குப்போக ஆரம்பித்த பிறகு எதற்குக் கல்யாணம் என நினைக்க ஆரம்பித்தாள். அமெரிக்கா போய்வந்தபிறகு தனியாக வாழ்வது என முடிவே செய்துகொண்டாள் என்பது முதல் விவரிப்பு. மற்றொரு இடம் அப்பாவோடு நடைபெறும் விவாதத்தின்போது வரும் ஒற்றை வரி.
”உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதாலே அம்மா ஒண்ணும் நிறைவா வாழ்ந்திறலையே“
துல்லியமாக மதிப்பிட்டால் தமிழ்ச்சமூக அமைப்பில் உடலின்பம் தரும் சட்டப்பூர்வமான ஒரு வழியே திருமணம் என்பது. ஆணுக்கு அவன் விரும்பிய பெண்ணுடலை வழங்கும் திருமணம் பெண்ணிற்கு அந்த வாய்ப்பையும் அளிப்பதில்லை. நடக்கும் திருமணங்களில் பெரும்பாலானவை பெண்ணின் விருப்பத்தை பொருட்படுத்தாதவை. பணம், அதிகாரம். சுயசாதி அபிமானம் போன்ற லௌகீக அடிப்படைகளை மட்டும் கவனத்தில் கொண்டு முன்னெடுக்கப்படுபவை. ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் அவளுக்கான ஆண் எங்கோ வெகுதொலைவில் அடையக்கூடியவனாகவே இருப்பான். உண்மையில் அவர்கள் எதிர்பார்க்கும் லட்சிய ஆண் இம்மண்ணில் இருப்பதே இல்லை. இதை அவர்கள் அறிந்துகொள்ள வாய்க்கும் தீப்பாதையே திருமணம் என்பது. காதலித்து பெற்றோரை மீறி திருமணம் செய்துகொண்ட என்தோழி ஒருவர் சொன்னார். “ எல்லா ஆண்களும் சுயநலவாதிகள், பெண்களின் உணர்வுகளை ஒருபோதும் புரிந்துகொள்ளப்போவதில்லை.”
இக்கதையில் அப்பாதான் சுகந்தியை மீண்டும் மீண்டும் திருமணத்திற்காக வற்புறுத்துகிறார். அதற்காக அவர்கொள்ளும் பாவனைகளை சுகந்தி பொருட்படுத்துவதே இல்லை. எல்லாம் தந்திரங்கள் என்று கடந்துசெல்கிறாள். ஆனால் அவளையும் சிலசொற்கள் காயப்படுத்திவிடுகின்றன.
”ஒற்றைக் குரங்கா திரி. யாரு உன்னைக் கேட்குறது” என ஆத்திரத்தோடு அப்பா அவளிடம் சீறிவீழுகிறார். சுகந்தி அழநேரிடும் தருணங்களில் ஒன்றாக அப்பா இருக்கிறார். பத்துபக்கங்கள் கொண்ட கதையில் நான்கு பக்கங்களில் சுகந்தி தனித்திருந்து அழுது தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் காட்சியைப் பார்க்கலாம். அவளாக ஒருபோதும் விரும்பி அழுவதில்லை. அண்ணாவும். அண்ணியும், அப்பாவும்தான் அவளை அழச்செய்கிறார்கள். ஏன் இங்குள்ள அத்தனைபேருக்கும் ஒரு பெண் தனித்து வாழ்வது என்பதை ஏற்றுக்கொள்ள இயலாமல் போகிறது என்ற கேள்வி இக்கதையின் மையம். முதிர்கன்னியாக வாழநேர்ந்த பெண்கள் சார்ந்து அறிந்துகொண்ட சித்திரங்கள் சுகந்தியின் அப்பாவை எச்சரிக்கின்றன.
”நான் எத்தனையோ பேரைப் பாத்துருக்கேன். கெட்டு சீரழிஞ்சி போயிருக்காங்க”
அதனாலேயே சுகந்தி வீட்டைவிட்டு வெளியேறி மகளிர் விடுதியி்ல் தங்கிவாழ்கிறாள். விடுதியில் வாழநேர்ந்த அவலத்தை எஸ்.ரா. விவரிக்கும்விதம் நம்பமுடியாத விதத்தில் இருக்கிறது. பெண்கள் பொறாமையாலும் வெறுப்பினாலும் ஒருவருக்கொருவர் மிக மோசமாக நடந்துகொள்கிறார்கள். அவதுாறுகள் வீண்வம்பு, திருட்டு என எல்லாமும் அந்த விடுதியின் இயல்பாக இருக்கிறது. அனைத்தையும்விட ஆஸ்டல் வார்டனே அவளை முத்துன கேஸ் அப்படித்தான் இருக்கும் என்று கேலி செய்கிறாள். ஆக ஆண்களின் நம்பிக்கைகளை பெண்கள் அப்படியே பின்பற்றும் மடமையை காட்சிப்படுத்துகிறார். எக்ஸ்பரி டேட் முடிஞ்ச கேஸ் என்றும், முத்தின் கேஸ் என்றும் பெண்களே பெண்களைப் பற்றி விமர்சனம் வைக்கிறார்கள். இது பெண்ணுடலை நுகர்வுப்பண்டமாக காணும் ஆண்களின் பார்வை.
ஆஸ்டலில் இருந்து தப்பிக்க சுகந்தி அப்பார்ட்மெண்டில் வீடு எடுத்து வாழ முயல்கிறாள். அங்கே ஏற்படும் இன்னல்கள் வேறுவிதமானவை. குடி வந்த சில நாட்களில் தனித்து வாழும் பெண் என்றால் யார் வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம் என நினைத்துக்கொண்ட ஆண்களை அறியத் துவங்கினாள். வயது வேறுபாடின்றி ஆண்கள் அவளிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். அதன்பிறகு தான் அவள் ஊரிலிருந்த அப்பாவை உடனே வந்து தங்கும்படியாக அழைக்கிறாள்.
உண்மையில் இது என்ன மாதிரியான சமூகம். ஏன் அத்தனை சராசரிகளும் தங்களைப் போன்று மற்றவர்களும் சராசரியாக வாழவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள். நன்றாகப் படி, உத்தியோகம் போ, என்ன செய்தேனும் பொருள்சேர், திருமணம்செய்துகொண்டு பிள்ளைககள் பெறு, வீடு. தோட்டம், வங்கியில் கணிசமான தொகையிருப்பு சம்பாதித்து வை, நோய்வந்து செத்துப்போ என்ற பொதுப்பாதையில் செல்லவிரும்பாதவர்களைக் கண்டு ஏன் எரிச்சல் கொள்கிறார்கள். பெண்ணுடல் என்பதனாலேயே ஒவ்வொரு ஆணும் அதன்மீது தன் அதிகாரத்தை நிலைநாட்ட விரும்புகிறானா? ஆண்களைப்போல பெண்களும் விரும்பிய விதத்தில் வாழ முயன்றால் என்ன?
அப்பாவிற்கும் சுகந்திக்கும் இடையே நடக்கும் உரையாடல் முக்கியமானது. கல்யாணம், புருஷன், பிள்ளைகுட்டிக இதைத்தவிர பேசுறதுக்கு வேற விஷயமே கிடையாதா? என்று சுகந்தி கேட்கும் கேள்வியே இக்கதையின் சிறப்பு. மாறாக அவற்றைத் தவிர்த்து வேறு என்ன இருக்கிறது. நமக்கு அப்படி முன்னோடிகள் இருக்கிறார்களா? அவ்வையார் கூட தன்னுடலை முதுமைக்குள் புதைத்துக்கொண்டபின்னர்தான் கவிதாயினியாக வாழ முடிகிறது. இதில் காமத்தை எவ்விதம் கடந்துசெல்வது?
காமம் என்னளவில் கிணற்றில் குதித்து மூழ்கிக்குளிப்பது போன்றதே. எத்தனைமுறைக்குளித்தாலும் ஆசைதீரா இச்சை. ஆழக்குளித்து கண்கள் சிவப்பேறி கரைமீதமர்ந்த கணம் தோன்றும் இனி ஒருபோதும் நீந்திக்குளிக்க வேண்டியதில்லை என. ஆனால் கொஞ்ச நாட்கள் கடந்தால் அலையடித்து ஒளிரும் நீர்ப்பிம்பங்கள் அளிக்கும் கவர்ச்சி சாதாரணமானது அல்ல. நாற்பதைத் தாண்டிய என் நண்பர் ஒருவர். எதன்பொருட்டோ இதுவரைத் திருணமத்தை தவிர்த்து வந்துள்ளார். ஒருமுறை பேட்டையில் இருசக்கரவாகனத்தில் என்பின்னால் அமர்ந்துவந்தபோது ஒரு வீட்டின் மொட்டைமாடியை பரவசத்தோடு சுட்டிக்காட்டி வண்டியை நிறுத்தச்சொன்னார். மாடிவீட்டின் குளியலறைக்கதவில் கழட்டி தொங்கவிடபப்பட்டிருந்த உள்பாவாடையும் வெண்ணிறப்பாடியும் அவருக்கு அளித்த போதை மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்த கொஞ்சநேரமும் அந்த குளியலறைக்குள் நடக்க இருப்பவை குறித்து அவர் விவரித்தவிதம் சொல்லக்கூசுபவை. இது நோய்க்கூறன்றி வேறென்ன? காமத்தை எதன்பொருட்டோ தள்ளிவைப்பதன் பின்விளைவு இவ்விதம் இருந்தால் என்ன செய்வது? நீந்தக்கற்றுக்கொள்ளாதவரை நீர்ப்பெருக்கை கண்டு அஞ்சிநடுங்கும் விதம்தான் காமத்தைப்பழகி அறிந்துகொள்ளாத நிலையும். அச்சமும் ஈர்ப்பும் இணைகோடுகளாக நீண்டுசெல்லும் நெடும்பயணம்.
சுகந்தி இந்த நெருக்கடியில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள கற்பனையில் கணவன், குழந்தைகள், கிளி ஆகியவற்றின் துணையோடு வாழத்தொடங்குகிறாள். அவர்களோடு பேசி மகிழ்ந்திருக்கிறாள். கணவனுக்கும் குழந்தைகளுக்கும் ஆடைகள் வாங்கி அதை பிறர்காண துவைத்து கொடியில் காயப்போடுகிறாள். அப்படி கற்பனையில் இருப்பது அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது. இதில் ஒருநாள் கோபித்துக்கொண்டு சென்ற அப்பா மீண்டும் தங்கவருகிறார். கொடியில் காய்ந்து தொங்கும் ஆணின் உடைகளைக்கண்டு “ எவனையாவது திருட்டுத்தனமா கட்டிக்கிட்டயா? என்று அதிர்ச்சியோடு கேட்கிறார். அவள் கால்விரல்களில் அணிந்திருக்கும் மெட்டி அவருக்கு இந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது.
சமகாலத்தில் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் முக்கியமான பிரச்சினையொன்றை கலாப்பூர்வமாக இக்கதை சொல்லியிருப்பது. மேலும் பெண்களுக்கு இவ்விதம் வாழ முயலும் ஆர்வத்தை ஏற்படுத்தி அறைகூவல் விடுவது, கட்டாயப்படுத்தும் ஒவ்வொன்றையும் மீறி எழும் சுகந்தியை கதாபாத்திரமாக்கியிருப்பது போன்றவையே இக்கதையின் தனித்துவம்.