ஏகாம்பரேஸ்ரர் அக்ரஹாரத்தின் மனிதர்களைப்பற்றிய நுட்பங்களும் வர்ணபேதங்களும் நிறைந்த சித்திரங்களே திலீப்குமாரின் படைப்புகள். வாழ்ந்து கனிந்த பாட்டிகள், வறுமையை சுமந்து அலையும் இளைஞர்கள், பிள்ளைப்பேறு வாய்க்காத பேரழகிகள், தினசரிப்பாடுகளால் சூறையாடப்பட்ட நடுத்தரவயது ஆண்கள் இவர்களே திலீப்குமாரின் கதைமாந்தர்கள். திலீப்குமார் புலம்பெயர்ந்து சென்னையில் குடியேறிய குஜராத்திகளின் தமிழ்ப்பிரதிநிதி. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத தமிழர். தாய்மொழி குஜராத்தியாக இருந்தாலும் தமிழில் சிறந்த கதைகளை எழுதிய படைப்பாளி.
கோபிகிருஷ்ணன், செந்துாரம் ஜெகதீஸ், விட்டல்ராவ், திலீப்குமார் என்று நமக்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. வரலாற்றில் என்றோ ஒருகாலத்தில் பிழைப்பின் பொருட்டு இங்கே வலசையாகி வந்தவர்கள்தான் அவர்களின் முன்னோர்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் வாழும் அடையாளம் அவர்கள். அல்லாமல் பிழைக்கவந்த இடத்தில் எந்தவித உலகியல் லாபமும் அளிக்காத இலக்கியச் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்களா என்ன?
80 விழுக்காடு கல்வியறிவு பெற்ற தமிழர்கள் வாழ்ந்துவரும் இன்றைய நிலையில் கூட தமிழில் எழுதும் ஒருவருக்கு எதிர்வினைகள் என்பது பெரும்பாலும் உற்காசம் அளிக்கும் விதத்தில் இருப்பதில்லை. கரும்பாறையென கலை இலக்கிய அறியாமையால் இருண்டு கிடக்கும் மூளைகளை நோக்கித்தான் இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. அயனான சிந்தனையை அடையாளம் கண்டுகொள்ள இயலாத மொண்ணைத்தனமான மனநிலை தமிழர்களுக்கே உரியது. அசோகமித்ரன், ப.சிங்காரம் போன்ற உலகத் தரத்திலான பெரும்படைபாளிகளுக்கே இதுதான் இங்கே உள்ள நிலைமை. தமிழ் வாசகச் சூழல் அளித்த புறக்கணிப்பாலும்,எழுதிய படைப்புக்களை நுாலாக வெளியிட எதிர்கொண்ட உயிர்போகும் அவஸ்தைகளாலும் ப.சிங்காரம் எழுத்துலகில் இருந்து விலகிய துயரங்கள் நமக்கு உண்டு. சாருநிவேதிதா அச்சூழலை தொடர்ந்து சாடிக்கொண்டிருக்கிறார். திலீப்குமாரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ”வறுமை எல்லாவற்றையும் உலர்த்திவிடக்கூடியது. மனிதர்களுக்குக்குத் தேவைகளைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை. மனிதர்களின் அந்தரங்கம் வெறும் தேவைகளால் ஆனது. நெருங்கிப் பழகினால் தெரியும்..மனிதர்கள் வெறும் தேவைகளின் பொதிகள் என்று”.
தமிழகத்தின் பொருளியல் வறுமை மாறிவிட்டாலும் சிந்தனை வறுமை அப்படியே தொடரந்து கொண்டுதான் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. வறுமைதான் அவர்களை புத்தகங்களில் இருந்து விலக்கிவைக்கிறதா? பல இலட்சங்கள் செலவுசெய்து வீடுகள் கட்டும் தமிழர்களிடம் வீட்டிற்குள் ஒரு நுாலகத்திற்கு இடம் ஒதுக்கும் நுண்ரசனை இருக்கிறதா என்ன? நம் மரபில் இலக்கியம் என்கிற கலைச்சாதனத்தை சரியான முறையில் அறிமுகம் செய்து பழக்கப்படுத்த எந்த அமைப்புகளும் இன்றில்லை. இதைச்செய்ய வேண்டிய கல்விச்சாலைகளோ, நுாலகங்களோ ஒருபோதும் இதற்காக மெனக்கெட்டதில்லை.
. . வேலைவாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. சினிமாக்களுக்கு நுாற்றுக்கணக்கில் செலவிடும் இளைஞர்கள்தான் இங்கே அதிகம். ஆயினும் கூட தமிழ் எழுத்தாளனின் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்கும் அதிசயம் இதுவரை நிகழாக்கனவு. சினிமாப்புகழும் ஊடக வெளிச்சங்களும் கொண்டிருப்பவர்களை நோக்கி மட்டுமே விட்டில் பூச்சிகளைப்போல தமிழர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
திலீப்குமாரின் உலகம் ஒரு அக்ரஹாரத்திற்குள் அடங்கிவிடக்கூடியது. பாட்டி என்று வருகிற. கங்குப்பாட்டியும்,பப்லிப் பாட்டியும் ஒரே பாட்டிதான். ஆனால் இருவேறு முகங்கள். அங்குள்ள அநேகத் தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு வாய்ப்பதில்லை. மகன்களாலும் மருமகள்களாலும் ஒதுக்கிவைக்கப்பட்டு அல்லது கைவிடப்பட்டு சாவுக்காக காத்திருக்கிறார்கள் குடும்பத்தலைவர்கள். பெரும்பாலான இளைஞர்கள் மிகக்குறைந்த ஊதியம் தரக்கூடிய மிகக் கடுமையான பணிகளில் சிக்கிக்கொண்டு அல்லல்படுகிறார்கள். நம் பொதுப்புத்தியில் உறைந்திருப்பதைப்போல வடநாட்டுக்காரர்கள் அத்தனைப்பேரும் கொழுத்த பணக்காரர்கள் என்பதாக திலீப்குமாரின் படைப்புலகில் இல்லை.
ஆண்களைப்பற்றி இவர் அளிக்கும் சித்திரம் அதிர்ச்சியானது.
”இங்கு வாழ்கிற ஆண்கள் மிகச் சாதுவானவர்கள். மனைவிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இந்தச் சராசரி வாழ்க்கையில் நசிந்து கொண்டிருக்கும் தங்கள் நிலையை நாளெல்லாம் நொந்துகொள்கிறவர்கள். தங்கள் மனைவிகளுக்கு ஏதோ பெரிய துரோகத்தைக் கற்பித்துவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டு, குற்ற உணர்வுடன் உலவிவருகிறவர்கள். மாதத்தில் 29 நாட்களும் சம்பளத்தை எதிர்பார்ப்பவர்கள்.சனிக்கிழமைதோறும் சினிமாவுக்குப் போக இயலாததால் மட்டுமே பஜனை பாடப்போகிறவர்கள். எப்போதாவது செய்தித்தாளை இரவல் வாங்கிப் படிப்பவர்கள். மற்றபடி வாழ்க்கையை ரொம்பவும் சுமப்பவர்கள். இவர்கள் ஆண்கள் என்பதற்கு இவர்கள் பெற்ற குழந்தைகளைத் தவிர நமது கண்களுக்குத் தெரிகிற, மனதுக்குப் புரிகிற வேறெந்த ஆதாரமும் கிடைப்பது சந்தேகமே.”
கடவு சிறுகதைத் தொகுதியில் உள்ள அத்தனைக் கதைகளும் சிறந்தவையே. 14 கதைகளைக் கொண்ட தொகுதி. கானல், கடவு, கண்ணாடி, ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும், தீர்வு, அக்ரஹாரத்தில் பூனை, தடம் , மூங்கில் குருத்து போன்றவை முக்கியமானவை. அவற்றையெல்லாம் விட என் பார்வையில் நிகழ மறுத்த அற்புதம் கதையைத்தான் கொண்டாடத் தோன்றுகிறது.
மரபான சிறுகதை வடிவங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட சிறுகதைகள் மேல் ஒரு வாசகனாக எனக்கு எப்போதுமே ஒருவித பித்து உண்டு. கோணங்கியின் பிற்காலத்தையக் கதைகள், தொண்ணுாறுகளில் எஸ்.ராமகிருஷ்ணனின் (தாவரங்களின் உரையாடல்) ஜெயமோகன் (நாகம், பாடலிபுத்திரம், வலை) எழுதியவை. யுவன் சந்திரசேகரின் அவிழ்ந்து விரியும் கதைப்பாணி. பிரேம் ரமேசின் பைத்தியவெளியில் உலவும் சொற்கள் போன்றவை உவப்பானவை. மரபான கதைகளில் இருந்து ஒரு மாறுதலும் வித்தியாசமான வாசிப்பு அனுபவங்களையும் அக்கதைகள் அளிக்கின்றன. அந்த வகையில் இக்கதை கவிதை மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு சிறுகதை. ஷங்கர ராமசுப்பிரமணியன் போன்றோர் உரைநடையில் கவிதை எழுதியுள்ளார்கள். முதல் முதலாக இக்கதையில்தான் ஒரு நீள் கவிதையைச் சிறுகதையாக காண்கிறேன்.
திருமதி.ஜேம்ஸ் தன் சிறிய பெட்டியுடன் கிளம்பினாள்.
நான் போகிறேன் என்றாள் என – கதை தொடங்குகிறது. அதன்பின் மொத்தக்கதையும் ஒரு நெடுங் கவிதைக்குரிய வடிவ நேர்த்தியில் அபாரமாக எழுதப்பட்டுள்ளது. 42 வயது திருமதி.ஜேம்ஸ்க்கு குழந்தைகள் இல்லை. அவளின் கணவன் மலடன். பிள்ளைப்பேறு வாய்க்காத புணர்ச்சிகள் அவளை சுருங்கிபோகச் செய்கின்றன. மலடானாக வாழநேர்ந்த திரு. ஜேம்ஸ் குடி, கவிதை என்று தன்னை அழித்துக்கொள்கிறார். வேலையை விட்டுவிடுகிறார். சிறுவர்கள் பரிகசிக்கும் நிலை அவருடையது. அவரிடம் இருந்து நாளுக்குநாள் நல்லன அனைத்தும் ஒவ்வொன்றாக காணாமல் போகத்தொடங்குகின்றன. குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பதும், வார்த்தைகளால் சித்திரவதை செய்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கு வீட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. வாழ்வதன் பொருளின்மை திருமதி.ஜேம்ஸை வெறுமை பீடிக்கச்செய்கிறது. பிள்ளைகள் அற்ற தாம்பத்தியம் வெறும் உடலளவில் மட்டும் நிகழும் இயந்திரத்தனமாக ஆகிவிடுகிறது.
இச்சிறுகதையை ஒரு நெடுங்கவிதை என்பேன். ஒரு வார்த்தை கூட உபரியாகத் தனித்துத் தெரியவில்லை. கதையின் கரு ஒருவரியில் அடங்கிவிடக்கூடியதே. இருபத்தைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த அலுப்பின் வெறுமையால் தன் கணவனை விட்டு தனித்திருக்க விரும்பும் ஒரு மனைவியின் கதை. திருமதி.ஜேம்ஸ் என்று கணவனின் பெயரால்தான் அவள் அடையாளப்படுத்தப்படுகிறாள். காலையில் கணவனைவிட்டு பிரிந்துசெல்ல பெட்டியோடு கிளம்பத் தயாரான மனைவியைப் பார்த்து கணவன் சொல்லும் உரையாடல் தொனியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இருபத்தைந்தாண்டுகள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அதன் அத்தனை நல்லது கெட்டதுகளோடு கதைசொல்லியால் சொல்லப்படுகின்றன. திரு. ஜேம்ஸ் கையறுநிலையில் தன் மனைவியின் காலில் விழுந்து விடும் நிலையில்தான் புலம்பித்தவிக்கிறார். திருமதி. ஜேம்ஸ் அத்தனையையும் கேட்டுக்கொண்டிருந்தாலும் கதை முழுக்க ஒருவார்த்தை பதில் அளிப்பதில்லை. கடைசியில் தன் முடிவை மாற்றிக்கொண்டு கணவனோடு இருந்துவிடும் நிலைக்கு வந்துவிடுகிறாள்.
இக்கதையின் சிறப்பென்பதே அதன் கூறுமுறையில் உள்ளது. இருபத்தைந்தாண்டு தாம்பத்திய வாழ்க்கையை திரு.ஜேம்ஸ் வரிசையாக பட்டியலிடுகிறார். புதுமணத் தம்பதிகளாக உடல்களோடு முயங்கிக்கிடந்த கிறக்க நாட்களில் துவங்கி நோயுற்ற திருமதி.ஜேம்ஸ் அவரைத் தவிக்க விட்ட ஆண்டுகளும், பிள்ளைப்பேறு வாய்க்காது என்பதைத் தெரிந்து கொண்டபின் அவரிடம் ஏற்பட்ட குண மாற்றங்களும் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் போன்று அவரால் திருமதி.ஜேம்ஸ் முன் வைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட பாவமன்னிப்பு கோருகிறார் திரு. ஜேம்ஸ்.
நிலை என்றொரு கதை. ஜெயமோகனால் கணையாழிக்கதைகள் என்று பகடி செய்யப்பட்ட கதை. இவன் மெதுவாக நடக்க ஆரம்பித்தான் என்று தொடங்கும். வேலைக்குச் சேர்ந்து முதல்நாள் பணி முடிந்து வீடு திரும்பும் ஒரு இளைஞனின் கதை. வழிநெடுக அவன் கண்களில்படும் சம்பவங்கள் விரிந்து வருகின்றன. கதை உச்சம் கொள்வது ”காலையில் இருந்து பட்டினியா?” என்று அம்மா கேட்பதிலும் அதற்கு அவன் ”ம்” என்று பதில் அளிப்பதிலும் இருக்கிறது.
பல இடங்களில் திலீப்குமாரின் சித்தரிப்புக்கள் உள்ளார்ந்த பகடிகளால் ஆனது. புன்னகைத்துக்கொண்டே வாசிக்க நிறைய இடங்கள் உண்டு. உதாரணமாக
”இரட்டைவேடக் கதாநாயகர்களில் முதலாமவன் தாடியும் கந்தல் துணியுமாக வெறிக்க, இரண்டாமவன் ஆக்ரோஷமாகச் சிங்கத்தோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அருகில் கதாநாயகி சம்பந்தமே இல்லாதவள் போல பெரிய ஒற்றை மார்பைப் பக்கவாட்டில் காட்டியபடி இளித்துக்கொண்டிருந்தாள். அந்தப் புகழ்பெற்ற கதாநாயகியின் மூக்கு அவள் நிஜ மூக்கைவிட லேசாக மழுங்கியிருந்தது என்றாலும் போஸ்டர் வரைந்தவன் – தமிழ்க் கதாநாயகிகளுக்கு முலையையும் தொடையையும் தவிர வேறு எதுவும் எடுப்பாக இருக்கக் கூடாது என்று அறிந்த – புத்திசாலி. மூக்கில் கோட்டைவிட்டதை முலையில் சரிக்கட்டி இருந்தான்.” (மூங்கில் குருத்து)
திலீப்குமாரின் பாட்டிகள் வாழ்வியல் ஞானம் கனிந்தவர்கள். கடவு சிறுகதையில் வரும் கங்குப்பாட்டி தமிழ்இலக்கியத்தில் எழுதப்பட்ட பாட்டிகளில் மிகக் காத்திரமான படைப்பு. இதற்கு இணையாக காடு நாவலில் போத்தியின் தங்கையாக ஒரு பாட்டிக் கதாப்பாத்திரத்தை ஜெயமோகன் எழுதியிருப்பது நினைவிற்கு வருகிறது. இரண்டு பாட்டிகளும் ஒரே சாயலில்தான் இருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கைகளும் கிட்டத்தட்ட ஒன்றுபோலத்தான்.
கங்குப்பாட்டியும் பாட்டியாவதற்கு முன் ஒரு காலத்தில் பேதையாக, சிறுமியாக, பெதும்பையாக, மங்கையாக,மடந்தையாக அரிவையாக, எல்லாமாக இருந்திருந்தாள் என்கிறார் திலீப்குமார். கங்குப் பாட்டிக்கு கல்யாணமானபோது வயது 13. 15 வயதில் புஷ்பவதியாகி 22 வயதுக்குள் 6 குழந்தைகளைப் பெற்று அந்த 6 குழந்தைகளையும் வரிசையாகப் பறிகொடுத்து 27 வயதில் விதவையும் ஆகிவிட்டாள்.
இளம்வயதில் கங்குப்பாட்டி மிக அழகாக இருப்பாள். மூக்கைத்தவிர அவள் முழுக்க முழுக்க நர்கீஸ் ஜாடைதான்.செக்கச் சிவந்த மேனி விம்மித் ததும்பும் மார்பகம்…..உலகத்தையே பரிகசித்தபடி மமதைகொண்டு மினுங்கியது அவளது இளமை. காயமே இது பொய்யடா என்று கூறியவன் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு, பின் அதே கையோடு அவனைக்கட்டித் தழுவிக்கொள்ளவும் தோன்றும்.
இக்கதையில் பாட்டியைச் சுற்றி அமர்ந்து அக்ரஹாரத்துப்பெண்கள் ஆலோசனை கேட்கும் காட்சிகள் மிக அருமை. ஆண்குறியை வஸ்து என்றும் பெண்குறியை கபிலவஸ்து என்றும் புட்டத்தை டேக்ஸா என்றும் அழைத்து நடக்கும் அவர்களின் உரையாடல் கொண்டாட்டம் நிறைந்தது. சிரித்து மாளவில்லை.
திலீப்குமார் தமிழ்ப்புனைகதைப் பரப்பில் தவிர்க்க இயலாத படைப்பாளுமை. மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும் ஒரு நாவலுக்கு இணையாக குஜராத்திகளின் உலகத்தை கண்முன் கொண்டுவந்துள்ளார். கூர்மையான அங்கதமும், நுட்பமான சமூக விமர்சனமும் இவரின் பலம். வறுமை, எளிமை, புறக்கணிப்பு போன்ற எளிய வார்த்தைகளே இவருடைய முப்புள்ளி. மனித மனங்களின் முடிவிலா விசித்திரங்களை அப்புள்ளிகளின் மூலம் பூதாகரப்படுத்தி நமக்கு தரிசனங்களாக அளித்துவிடுகிறார்.