ரப்பர் நாவல் குமரி மாவட்டம் உருவான காலகட்டத்தின் கதை என்று சொல்லலாம் . அப்போது நிகழ்ந்த சமூக மாற்றங்கள், மக்களின் எழுச்சி வீழ்ச்சிகளை இரு குடும்ப வரலாறுகளை, அதன் தற்போதைய நிலைகளை சொல்வதன் வழியாக பேசும் நாவல் இது. முக்கியமாக இக்காலகட்டத்தில் நிகழ்ந்த நாயர் சாதியின் வீழ்ச்சியையும் , நாடார் சாதியின் எழுச்சியையும் இரு குடும்ப வரலாறுகள் வழியாக அறிய இயலும் .
நாவலில் எனக்கு மிக பிடித்த அம்சம் என்பது கதை மாந்தர்களின் மனநிலைகளை மிக நெருங்கி நம்மால் அறிய முடிவதுதான், அவர்களது மன போராட்டங்கள், உள நிலைகளை நம்மால் மிக நெருக்கமாக உணர முடிகிறது. பிரதான கதாபாத்திரமான பிரான்சிஸ் முதற்கொண்டு உதவியாளன் பாத்திரமாக வரும் குஞ்சி வரை அவர்கள் மனநிலையை நம்மால் துல்லியமாக அறிய முடிகிறது. இந்த நாவலின் பெரிய பலம் இது என்று எண்ணுகிறேன் .
இரண்டாவது முக்கிய அம்சம் ஒரு பாத்திரம் உச்சத்தில் இருப்பதையும் அப்போது அவரிடம் வெளிப்படும் குணத்தையும் பிறகு வீழ்ந்த பிறகு அந்த பாத்திரத்தில் வெளிப்படும் குணத்தையும் காண முடிவது. காலம் ஒருவரை எப்படி மாற்றுகிறது என்பதை காண முடிவது. மேலும் இதற்கு மாறாக உணவிற்காக சண்டையிட்டு கொல்லும் நிலையில் இருந்து வாழ்வை தொடங்கி மிக பெரிய அளவில் வளர்ந்து சொத்து சேர்த்து பின் இறக்கும் தருவாயில் தனது பிள்ளைகள் அந்த சொத்துகளை அழிக்கும் நிலையை மரணப்படுக்கையில் இருந்து காணும் சூழலை காண முடிவது என வாழ்வின் பல்வேறு வண்ணங்களை இந்த நாவலில் காண முடிகிறது .
நாவலில் நாயர், நாடார் சமூக வரலாறுகள்,மனிதர்கள் தாண்டி இன்னொரு சமூக பிரதிநிதியும் வருகிறார்,அவர் கண்டன்கானி எனும் மலை பழங்குடி மனிதர். இயற்கையை அழித்து சொத்து சேர்க்காதவர், அதனாலேயே நிம்மதியான வாழ்கையை வந்தவர் . இவரது பேரன் லாரன்ஸ்தான் நாவலின் பிரதான பாத்திரமான பிரான்சிஸ்க்கு ஆகாயத்து பறவைகள் விதைப்பத்தும் இல்லை , அறுவடை செய்வதும் இல்லை எனும் மந்திரத்தை அளிக்கிறான் . பிரான்சிஸ் சொத்துகளை இழக்கும் நிலையில் வீழ்ச்சியின் நிலையின் இருப்பவன் , இனி என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவன் , அவனுக்கு இந்த பாடல் பெரும் நிம்மதியை அளிக்கிறது !
லாரன்சிடம் இயற்கையை அழிக்க கூடாது என்ற போதம் இருக்கிறது . அவன் அப்படி என்ன காணியின் பேரன் என்பது முக்கியமான காரணம் , அவன் ரப்பர் மரங்களை வெறுக்கிறான் , காரணம் அதன் சூழல் கேடுகள் ,அது இயற்கையை , இயற்கையின் சீர்மையை கெடுக்கிறது என எண்ணுகிறான் , பதிலாக வாழையை மிக நேசிக்கிறான் ,வாழையை பற்றி அதன் குணங்களாக அவன் எண்ணும் இடம் நாவலின் அழகான பகுதிகளில் ஒன்று .
நாவலில் குளம் கோரி( வேலப்பன் ) என்ற ஒரு பாத்திரம் வருகிறது , மிரள வைக்கிறது . சூழல்களால் மிக கீழ்மையான செயல்களுக்கு ,கீழ்மையான மனநிலைகளுக்கு சென்ற ஒருவனின். மனதிற்குள் இருக்கும் மேன்மையும், துக்கத்தையும் அறிய முடியும் இடம் இந்த நாவலின் சிறப்பான இடங்களில் ஒன்று .
நாவலில் நான் அதிர்ச்சி அடைந்த இடம் குமரி மாவட்டம் உருவான அசல் காரணம் என அறிய முடிகிற இடம் ! எபன் என்ற ஒரு பாத்திரம் உண்டு , திரேஸ் என்பவளின் காதலன் அவன் , குமரி மாவட்ட பிரிவினை போராட்டத்தில் ஈடுபட்டு பொலிசாரால் கொல்ல பட்டு இறந்து விடுவான் . அவன் போராட்ட நாயகர்களை பற்றி ஆவேசமாக உணர்ச்சிகரமாக எல்லாம் காதலியிடம் சொல்வான் . ஆனால் பின்னணியில் இந்த போராட்டத்தை ரப்பர் தொழில் முதலாளிகள் தங்கள் சுயநலனுக்காக ஆதரித்தனர் என்பதும் , நாயர் – நாடார் மோதல் இதில் உள்ளிருப்பதும் , இவைதான் அசலான காரணம் என்பதும் இந்த நாவல் வழியாக அறிய முடிகிறது. காதலி திரெஸ் இதனை அறிந்து காதலனது தியாகம் எவ்வளவு முட்டாள்தனமானது என்று நினைக்கும் இடம் எனக்கு படு அதிர்ச்சி கொடுத்தது , ஏனெனில் இங்கு தற்போது நிகழும் சமூக பிரச்னைகள் சார்ந்து கவனிப்பேன் , சில சமயம் அதை பற்றி எழுதுவேன் , இந்த எபன் கதை தெரிந்த பிறகு ஒவ்வொரு பிரச்சனைக்கும் வெளியே தெரியாத அசல் காரணம் வேறு இருக்கலாம் ,அதை அறியாது வெளி காரணங்களை பார்த்து வாதிடுவது எல்லாம் அபத்தான செயல்களாக தோன்றுகிறது !
இந்த நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு பெண் பாத்திரம் திரேஸ், அவளது வாழ்வும் இளமை தொடங்கி பேச படுகிறது , பெரிய அழகியாக தொடங்கி , காதலித்து ,பிறகு வசதியான வீட்டில் வாழ்ந்து , கடைசியில் மகனிடம் அடிவாங்கி அமரும் பாத்திரம் ! இன்னொரு கதாபாத்திரம் தங்கம் , இளம் பெண் , அவள் தற்கொலை செய்து கொள்வாள் , வீழ்ச்சி அடைந்த வீடுகளில் முதன்மையாக பாதிக்க படுவது பெண்கள்தான் , சூழல்கள் அவர்களை பிய்த்து தின்று விடும் . எனக்கு இந்த நாவலை படித்த போது அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாளா,அல்லது கொல்ல பட்டாளா என்ற சந்தேகம் வந்தது , ஏனெனில் அவள் தான் கற்பமானதில் இருந்து தப்ப வேண்டும் என்றுதான் எண்ணி இருந்தாள், பிறகு நாவலில் அவள் தற்கொலை செய்து கொண்டதாக சொல்ல படுகிறது . இன்னொரு இடத்தில் அவள் கொலை செய்ய பட்டதாக ஒருவர் சொல்வதும் வருகிறது .
எனக்கு இந்த நாவலில் பிடிக்காத பாத்திரம் லிவி. இவனை அவனது அம்மா திரேசின் வாரிசு என்று சொல்லலாம் ,எல்லாம் விதங்களிலும் !
……..
நாவலில் எல்லா குணங்களும் அதன் குரூர நிலையில் வருகிறது என்று சொல்லலாம் , உணவிற்காக மரணம் நிகழும் அளவிற்கு சண்டையிடும் சூழலும் வருகிறது . விவசாயத்திற்காக குன்றுகள் நடுவே இருக்கும் இடம் நின்று எரியும் காட்சி , அதை ஒட்டிய மனநிலை தீவிரமாக வெளிப்படுகிறது . சொந்த அம்மாவையே இன்னொரு தொடர்பு வைத்ததற்காக மகன் அடித்து வெளுக்கும் காட்சி வருகிறது . தனது சொந்த தங்கை தற்கொலை செய்து இறந்ததை, அவளை ஒருவன் வைத்திருந்ததை தானே பிறரிடம் கிண்டலடித்து சொல்லும் காட்சி வருகிறது !
பல தவறுகள் செய்தாலும் என் அளவில் இந்த நாவலின் உயர் பாத்திரம் பொன்னுமணி பெருவட்டர்தான், பசிக்கு திருடியவனை விடுவித்து தன்னோடு வைத்து கொள்கிறார் . சொத்துகள் சேர்த்தாலும் அதன் மீது பற்று இல்லாதவராக இருக்கிறார் , முக்கியமாக பிரான்சிசின் மனதை புரிந்து அவனை ஆதரிப்பவராக இருக்கிறார் .
நாவலின் பிரதான பாத்திரம் பிரான்சிஸ். வாசிக்கும் போது அவன் வழியாக என்னை யோசித்தேன், அப்படி யோசிக்கும் போது அடையும் தெளிவுகள்தான் நல்ல நாவல்கள் வாசிப்பதன் நற்பலன்கள் என்று தோன்றுகிறது. இந்த நாவல் சிறியது, ஆனால் சிறந்த பல தருணங்கள் கொண்ட நல்ல அழகான நாவல் இது .
இந்த நாவலை இதற்கு முன்பு மூன்று நான்கு முறை வாசிக்க முயன்று இருக்கிறேன் . இந்த அளவு முன்பு இழுத்தது இல்லை. இப்போது ஒரு வாசிப்பில் ஈர்ப்புடன் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு நூலுக்கும் அதை வாசிக்கும் தருணம் அமையும் போதுதான் உள்ளே செல்ல முடியும் என்று சொல்லப்படுவது உண்மை என்று தோன்றுகிறது !