
நீலி ஆரம்பித்தபோது கவிஞர் தேவதேவன் நீலியில் பிரசுரிக்க பொருத்தமானதாக இருந்த “புதிய ஏற்பாடு” (https://neeli.co.in/3275/) என்ற கவிதையை அளித்தார். இக்கவிதையை தேவதேவன் அனைத்து மெய்யியலாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் சமர்ப்பிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.அக்கவிதையை நீலிக்கான அவரின் ஆசியாக அப்போது கருதினேன். ஆனால் ஒருவகையில் அது ஒருமுனைத்தன்மையான சிந்தனையோ என்று கூட தோன்றியது மறுப்பதற்கில்லை. ஆனால் தேவதேவன் அதற்குப் பின் சந்தித்த தருணங்களிலெல்லாம் அந்தக் கவிதையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறிவந்தார். தான் இதற்கு முன்பே கூட அந்தக் கருப்பொருளில் ஒரு கவிதையை எழுதியிருப்பதாகவும் கூறினார். அப்போது நான் அவரின் ”ஒரு பாலுயிரியாய்…” கவிதையை வாசித்ததில்லை. அல்லது நினைவில் இல்லை. அதற்குப் பின் நீலியில் அவர் எழுதிய ’சாகுந்தலம் காவியம்’ (https://neeli.co.in/3762/) கவிதையும், ஆண்டாள் பற்றிய கவிதையும் (இன்னும் வெளியாகவில்லை) இந்தக் கருப்பொருளை ஒட்டியதே.
சென்ற வாரம் எப்ஸ்டீன் ஃபைல்கள் கசிவு வெளியானதற்குப் பின் அது தொடர்பான நான்கு எபிசோடுகள் கொண்ட ஆவணப்படத்தையும், அவன் காதலியான கிலியன் மேக்ஸ்வெல்லின் ஆவணப்படத்தையும் பார்த்து பல கேள்விகளுக்கும் சோர்வுக்கும் உள்ளாகியிருந்தேன். இதனுடன் தொடர்பு படுத்தத்தக்க இன்னொரு படம் “Spotlight”. நாம் பெரும் நம்பிக்கையுடன் தொடரும் அமைப்புகள், நம்பிக்கைகள், மனிதர்களின் பிம்பம் தகர்க்கப்படும்போது உருவாகும் சோர்வு. எப்போதும் இத்தகைய விஷயங்களை எதிர் மனநிலையுடன் அணுகும் போக்கு எனக்கு இல்லை. அல்லது இதனால் அனைத்தையும் அதே சோர்வுடன் நோக்கி, விலக்கி, ஒளிந்து கொள்ளும் போக்கும் இல்லை.
இந்த உலகத்து மாந்தர்களையே நல்லவர், தீயவர் என்று பிரித்துக் கொள்வதன் மேலும் ஒரு செவ்வியல் இலக்கியத்தின் வாசகராக எனக்கு நம்பிக்கை இல்லை. என் கடிதம் ஒன்றிற்கான பதிலிலும் (அன்பின் அடிப்படைகள்:https://www.jeyamohan.in/196398/) ஜெ கூறியிருந்தபடியே ஒரு நபரை நாம் முழுவதுமாக தன்மையப் பார்வை கொண்டவர்கள் – அன்பாளர்கள் என வகைப்படுத்துவது பிழை என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறேன். ஏழாம் உலகத்தில் உள்ள பண்டாரம் தன் குழந்தைக்கு பாசமான அப்பாவாக இருப்பது போல, ஒவ்வொரு நபர்களும் ஒரு குறிப்பிட்ட மனிதர்களிடம், குறிப்பிட்ட சூழலில் வெவ்வேறு வகையில் நடந்து கொள்வதை உணர்கிறேன். அது ”ஏன்?” என்பது வேறு கேள்வி, வேறு தேடல் சார்ந்தது.
மேலும் தீமையின் தரத்தைப் பொறுத்தும், நன்மையின் தரத்தைப் பொறுத்தும் வெவ்வேறு படிநிலைகள் உள்ளது. விஷ்ணுபுரத்தின் திருவடி சுற்றியுள்ளவர்களால் கள்ளமற்றவன் என மதிப்பிடப்பட்டவன். ஆனால் தனக்குள் இருக்கும் அந்த தீய சிந்தனைகளை நினைத்து அவன் மருகுவதாக இருக்கும் இடத்திலும் அவனின் நல்லதன்மை வெளிப்படும். போலவே கடல் நாவலின் பியட்ரிஸ் தாமஸின் தீமைகளை தான் தவறுகள் என்று நினைக்கும் எளியவற்றுடன் தொடர்புபடுத்தி அதை எளிதாகக் கடக்கும் இடமும் நன்மையின் முகமாகவே பார்க்க முடிந்தது. ஒரு அன்பாளர் தீமையை அளவிடும் அளவுகோல் வேறாகவே உள்ளது. “உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் முதல் கல்லை எறியட்டும்” என்று இயேசு சொல்வதும் அத்தகைய இடத்திலிருந்து தான்.
எனில் எல்லா மனிதருள்ளும் அனைத்து சாத்தியங்களும் பொதிந்துள்ளது. இன்னொரு மனிதனின் தீமை என நான் எப்ஸ்டீன் லீக் பார்த்து கைசுட்டி பயப்படவில்லை. மாறாக எனக்குள்/மானுடருக்குள் இந்த எல்லை வரையான தீமை இருக்குமா என்பதைக் கண்ணுறும்போது வரக்கூடிய அச்சம். நடுக்கம். எப்ஸ்டீன் லீக் வழியாக தெரியவரும் மிகப் பெரும் ஆளுமைகள் செய்த அரசியல்/பொருளாதார குற்றங்களை இப்போதைக்கு ஓரமாக வைத்துக் கொள்ளலாம். இதிலுள்ள உடல் சார்ந்த (பாலியல் குற்றங்கள், உடலை வதைத்தல்) குற்றங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கேள்வி கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் உணர்வுசார்ந்தவர்களால் கடக்க முடியாத பெரும் வலி அதில் பொதிந்துள்ளது. வலிகளில் ஆழமானதும் அதுவே என்பதாலும்.
இதனால் பாதிக்கப்பட்ட பதின்ம வயதுப் பிள்ளைகள் (சிறுவர்/சிறுமியர்) மற்றும் பிறரும் பத்து வருடங்கள் அல்லது அதற்கு முன் நிகழ்ந்தவற்றை துல்லியமாக நினைவில் சொல்வதைக் கேட்பதன் வழியாக இந்த உணர்வுச்சிக்கலை புரிந்து கொள்ளலாம். ஒரு போதும் அவர்கள் நினைவை விட்டு அவை நீங்கப்போவதில்லை. மெல்ல அதிலிருந்து விடுபட்டு தங்கள் வாழ்க்கையின் பிற பக்கங்களைப் புரட்ட அவர்களுக்கு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நூறு, இருநூறு என்ற எண்ணிக்கையில் சிறுவர்/சிறுமியரை உறவு கொண்ட எப்ஸ்டீன் மற்றும் பிறர் இதை ஒவ்வொன்றையும் நினைவில் வைத்திருக்க வாய்ப்பேயில்லை என்று தோன்றியது. வயது வராத பிள்ளைகளின் நிலைமையுடன் ஒப்பு நோக்கத்தக்க இன்னொரு வகையினர் முதல் முறை இதனால் பாதிக்கப்பட்டு இத்தகைய மனநிலை ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறது என்று கண்டு கொள்பவர்கள். இவர்களில் இறப்பு, பிறழ்வு நோக்கிச் செல்பவர்களுடன், எதிர் மனநிலைக்குச் செல்பவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இதை அறிவார்ந்து பார்க்கக் கூடிய கண்கொண்டவர்கள், ஆன்மிக நோக்கில் கடந்து செல்பவர்கள் மட்டுமே தப்பித்துக் கொள்கின்றனர்.
வேறு ஒன்றும் கவலைக்குள்ளாக்கியது. 2008-லிருந்தே இந்தப் பிரச்சனை கசிய ஆரம்பித்துள்ளது. அதன்பின்னும் கூட நாம் கட்டி வைத்திருக்கும் இந்த அரசு, சமூக இயந்திரத்தால் உடனடியாக எதையும் செய்துவிட முடியவில்லை. இந்த நேரத்தில் அரசியல், பொருளாதார குற்றவியல், பாலியல் சார்ந்து பொதுவெளியில் இதுவரை பிரகடனப்படுத்தப்பட்ட பலவற்றின் நிலைமையை நினைத்துக் கொள்கிறேன். மாபெரும் இயந்திரம் என்ற கட்டுரையில் ஜெயமோகன் அரசு இயந்திரத்தை குறிப்பிட்டு ஒரு படிமத்தை முன்வைத்திருப்பார். இன்று அத்தகைய படிமத்தை உலகம் முழுமைக்கும் பொருத்திக் கொள்ள முடிகிறது. எத்தனை பெருங்குற்றச் செயல்களுக்குப் பின்னும் சிறிய ஸ்தம்பித்தல் கூட இல்லாமல் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அத்தனை குற்றச் செயல்களுக்குப் பின்னும், குறிப்பாக உடனடியாக தண்டனை பெறவியலாத அறப்பிழைகள் செய்த பின் மனிதர்களால் தன் உலகியல் நோக்கிச் சென்று இந்த கூட்டத்தில் தன்னை கரைத்துக் கொள்ள முடிகிறது. இந்த மாபெரும் இயந்திரத்தின் எந்த சலனமும் இல்லாத தொடர் இயக்கத்தினாலேயே அதன் அடிப்படைக் கட்டமைப்பின் மேல் கேள்வி எழுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த இயந்திரம் மீள சமைக்கப்பட வேண்டுமோ என்று தோன்றுகிறது. ஆண்தன்மையிலிருந்து பெண் தன்மைக்கு?
*
இத்தகைய கேள்விகள், சோர்வுகளுடன் இருந்தபோது தான் தமிழ்விக்கி பதிவுக்காக ஜெயமோகன் S.N.N. என்று அழைக்கப்பட்ட எஸ்.என். நாகராஜனுக்கு எழுதிய அஞ்சலிக்கட்டுரையை வாசித்தேன். அதில் கீழ்க்கண்ட வரிகள் மிகவும் ஈர்ப்பானதாக இருந்தது.
“தமிழகத்தில் இருந்து மார்க்ஸிய சிந்தனைக்கு அசலான ஒரே கொடை என்பது எஸ்.என்.நாகராஜனின் கீழைமார்க்சியம் என்னும் கருத்தாக்கமே. ஆகவே அவரை இந்நூற்றாண்டின் தமிழகத்து முதற்சிந்தனையாளர்களில் ஒருவராக முன்வைப்பது என் வழக்கம். மேலைமார்க்ஸியம் ‘ஆண்தன்மை’ கொண்டது. ஆகவே தாக்கும்தன்மை, தன்முனைப்பு ஆகியவை கொண்டது. அவர் ஆண்தன்மையை ஓர் எதிர்மறைப் பண்பாகக் கண்டார். மேலைமார்க்ஸியம் இயற்கையின்மேல் ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டது, மையப்படுத்தும் தன்மை கொண்டது, அதிகாரத்தின் வழியாக மாற்றத்தைக் கொண்டுவரும் இயல்பு கொண்டது என்பது எஸ்.என்.நாகராஜனின் கருத்து. அதற்கு மாற்றாக எஸ்.என்.நாகராஜன் முன்வைத்தது கீழை மார்க்ஸியம். அது ‘பெண்தன்மை’கொண்டது. ஆகவே படைப்புச்சக்தி கொண்டது. இயற்கையுடன் ஒத்திசைந்துசெல்லுதல், பரவலாக்கப்பட்ட பன்மையாக்கப்பட்ட மையமற்ற தன்மை, சேவையினூடாக சமூகமாற்றம் ஆகியவை அதன் இயல்புகள் என்றார்.”
நான் கவிஞர் சாம்ராஜிடம் எஸ்.என். நாகராஜன் பற்றிய அவரின் பார்வையைக் கேட்பதற்காகவும், சில தகவல்கள் பெற்றுத்தர வேண்டியும் அழைத்தேன். அப்போது அவரிடம் எஸ்.என்.என் -இன் பார்வையின் மேல் அவருக்கு ஏற்புள்ளதா என்று கேட்டேன். அதற்கு சாம், தான் தியாகுவிடம் இக்கேள்வியைக் கேட்டதாகச் சொன்னார். தியாகு தாங்கள் 70களில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தபோது அதற்கு அழைக்கப்பட்ட எஸ்.என்.என். வர இயலாமல் போக அவர் அனுப்பியிருந்த கட்டுரை அங்கு வாசிக்கப்பட்டதாகவும், அப்போது அக்கருத்துடன் தான் உடன்படவில்லை என்றும் பின்னாளில் (தொண்ணூறுகளில்) அவர் உணர்ந்திருந்ததை தானும் உணர்ந்ததாகக் கூறியதை சாம் பகிர்ந்து கொண்டார். ’இன்னும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லவில்லை’ என்று சொன்னபோது அவர் சிரித்துக்கொண்டே “ஆம், ஆம். நானும் ஏற்கிறேன்” என்றார். கீழைத்தத்துவ அறிமுகத்திற்குப் பின்னர் அதை சரியென்றே உணர்வதாகவும் சொன்னார்.
இன்னொரு நிகழ்வை இத்துடன் இணைத்துக் கொள்கிறேன். இந்தமுறை அமெரிக்காவிலிருந்து விவேக் சுப்ரமணியன் அயன் ராண்ட் பற்றிய கட்டுரை ஒன்றை அனுப்பியிருந்தார். முதலில் அந்தப் பெயரைப் பார்த்ததுமே பிரசுரிக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்தேன். அல்லது பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தோன்றியது. ஏனெனில் நீலியின் சித்தாந்தம் அயன் ராண்டின் கொள்கைகளுக்கு மாற்றானது. ஆனால் கட்டுரையை வாசித்தபோது அதை பிரசுரிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. முதலாவது அதில் அயன் ராண்ட் ஏன் அப்படியான எண்ணத்திற்கு வந்தார் என்பதை அவரின் வாழ்வை ஒட்டி சொன்னது, பெண்ணியத்தைப் பற்றி சொன்ன பார்வையும், அதனுடன் இறுதியில் அவரின் பலவீனங்களையும் சொன்னது பிடித்திருந்தது.
இப்போது தேவதேவனின் இந்தக் கவிதை
ஒரு பாலுயிரியாய்… (தலைப்பு)
இரங்கத்தக்க என் ஆண்டவரே,
தவறாகவே
நீர் ஆதாமைப் படைப்பதற்கு முன்பே
உம்மை நீர் நன்றாய்
அறிந்திருக்க வேண்டாமா?
எல்லாத் தீமைகளும்
உம்மிடமிருந்துதானே
ஊற்றெடுத்துப் பெருகிவிட்டன?
அதிகாரமும் அச்சமும் பேராசைகளும் கொண்டு
பிற எவ்வுயிர்களுமே விளைவித்திராத
ஒரு பெருக்கம் – வீக்கம் –
உம்மிடம் மட்டுமே – மன்னிக்கவும் –
நம்மிடம் மட்டுமே
எத்துணைப் பெரிய அழிவுச் சக்தியாய்த்
திரண்டுவிட்டது!
தானே பெருக்கிக்கொள்ளும்
ஒருபாலுயிரியாய்
ஒரு பெண்ணை மட்டும் நீர் படைத்திருந்தால்
எத்துணை நலமும் அன்பும் அழகும்
ஆனந்தமும் கூடியிருக்கும் இப்புவனத்தில்!
இயற்கைப் பெருவெளிதான் நமக்கு
என்ன குறை வைத்திருக்கிறது?
அளவோடே பெருகி எப்படி வாழ்ந்திருக்கலாம்!
நம் குழந்தைக்கும் முதுமைக்கும்
இடையேயுள்ள இளமை என்பது
போட்டியும் பொறாமையும் புலனின்பங்களும்
இன்பமும் துன்பமும் வலியும் வேதனைகளுமே
கொந்தளிக்கும் போராட்டமாக இருந்திருக்குமோ?
இயற்கைக்கும் மனிதனுக்குமுள்ள
உறவும் உறவின்பமும்தான் சாமான்யமானதா?
எத்துணை பெரிய முட்டாள்தனத்தைப் பண்ணிவிட்டீர்
சரி, இனிமேல் நம் தவறுகளையெல்லாம்
களைந்துவிடுவோம்
இனி ஒரு விதி செய்வோம்
இந்த மனிதப்படைப்பை முற்றுமாய் அழித்துவிட்டு
ஓருயிரியாய் ஒரு பெண்ணை மட்டும் படையும்.
அப்புறம்
காமுகனாக அன்றி
ஒரு காதலியாக, தாயாக, குழந்தையாக
புதிய கடவுளாகக்கூட அன்றிச்
சும்மா, காதலாக மட்டுமே
ஒதுங்கி நின்று பாரும்.
கரையேறாத கோபியர்களாய்க்
குளித்துக் கொண்டேயிருக்கும்
இந்த ஏவாள்களை நீர்
பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும்
அங்கிருந்தே எல்லாம்
தாமே பிறந்து நடக்கும்.
*
மேலே சொன்ன ஒட்டுமொத்த தீமை சார்ந்த அனைத்து செயல்பாடுகள், விழைவுகள் அனைத்தையும் ”ஆண் தன்மை” என்பதோடு தொடர்பு படுத்திக் கொள்கிறேன். நீட்சே வழியாக தன் சித்தாந்தத்தை உருவாக்கிக் கொண்ட அயன் ராண்டையும், முதலாலித்துவ, மேலைத்தேய, தனிநபர்வாத அனைத்து சிந்தனைகளையும் இந்த இடத்தில் வைக்கிறேன். அது உருவாக்கிய அனைத்து நேர்மறை வளர்ச்சி அம்சத்திற்குப் பின்னால் இருக்கும் அறமற்ற, அருளற்ற தன்மையை நினைத்துப் பார்க்கிறேன். மானுடம் அறிவால் அல்ல கருணையாலேயே தன் அடுத்தகட்ட நேர்மறை நகர்வை அளிக்க முடியும் என சிந்தனையாளர்கள் நம்புகின்றனர். அதன் பொருட்டு தான் தேவதேவன் இந்தக் கவிதையைச் சொல்கிறாரா?
என் பாதையில் “பெண் தன்மை” என்ற சிந்தனையை நான் வெண்முரசில் மாலினி வழியாக சென்றடைந்தேன். அவள் சொன்ன அந்த ஒற்றை வரி (ஆண் பரந்து விரிந்து அகன்று சென்று கண்டடைவதை பெண் அடுமனையிலிருந்தே அடைய முடியும் என்ற பொருளில் வரும் வரி) வழியாக. அதை விரித்து விரித்து அந்தத் தேடலை இப்போது பெரிதுபடுத்தியிருக்கிறேன். அதன் வழியாக நான் சென்றடைவது கீழைத்தேய சிந்தனை மரபையே.
எமர்சனின் சிந்தனையைப் பற்றி குறிப்பிடும் “அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?” கட்டுரையில் ஜெ இவ்வாறு சொல்லியிருப்பார்.
”இந்திய சிந்தனையை வைத்து நோக்கினால் இயற்கை மட்டும் அல்ல, பிரபஞ்சமே பிரம்மத்தின் தோற்றமே. ஆனால் பிரம்மம் நன்மையால் அழகால் ஆக்கமும் மட்டுமே ஆனதல்ல. குரூரமும் குரூபமும் அழிவும் அதுவே. இயற்கையில் இருந்து ஒருவன் பெறச்சாத்தியமானது அழகையும் அன்பையும் அறத்தையும் மட்டும் அல்ல. இருளையும் ஒளியையும் கொண்டு பின்னப்பட்டிருக்கும் இப்பிரபஞ்சத்தின் நெசவைத்தான். அது அளிக்கும் சமநிலையையே இயற்கையனுபவம் என நாம் சொல்லத் துணிவோம்.”
எப்ஸ்டீன் வழியாக நான் சென்று பார்க்க முடிவது இருளின் ஆழத்தையே. மனிதன் செய்யச் சாத்தியமான தீமையின் பக்கங்களைப் புரட்ட முடிகிறது. அந்த ஆவணப்படத்தில் ஒரு பெண் தன் பதின்ம வயதைக் குறிப்பிட்டு நான் ஓர் மலர் போல இருந்தேன், எப்ஸ்டீனை சந்தித்தபின் அது கசக்கி எறியப்பட்டது போல உணர்கிறேன் என்றாள். தான் குற்றவுணர்வுக்கு ஆட்பட்டாலும் தொடர்ந்து மூன்று வருடங்கள் அங்கு சென்றதாகச் சொன்னாள். சில மாதங்களுக்கு முன் ஒரு சிறுமி தாத்தாவுடன் இயல்பாக உடலுறவு கொண்டு செல்லும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பிரபலமானது. அதற்கு வந்த எதிர்வினையில் அந்த சிறுமி விரும்பித்தானே சென்றாள் என்ற வரிகள் இருந்தது. ஒருவிதத்தில் அது உண்மையும் கூட. ஆனால் இதனை உளவியலாளர்கள் “Grooming” என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர். முதிர்ச்சியான நபரால் க்ரூம் செய்யப்பட்ட நபர் ’தான்’ அதில் இருக்கிறோம் என்று உணர்வதற்குள் அவர் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டிருப்பார். அல்லது மீளவியலாத மனத்துயருக்குள் சென்று நோயாளியாக ஆகியிருப்பார். இங்கு இந்த உலகத்துப் பெரியவர்களால் இந்த சிறுவர், சிறுமியர் தாங்கள் அறியாமல் அடைந்த துயரத்தைப் பற்றிய குற்றவுணர்வை நாம் அடைந்திருக்கிறோமா?
தீமையும் நன்மையும் ஒன்றையொன்று தன் இருப்பின் வழியாக கோடிட்டுக் காட்டுகிறது. ஒன்று இன்னொன்றை விளக்குகிறது. அதன் வழியாக உலகம் இயங்குகிறது. ஆனால் இங்கு இந்த பெரும் தீமை ஒன்று நிகழ்ந்தது என்று கேள்விப்படும்போதும், அதை பெரும்பாலான மக்கள் இயல்பாக கடந்து போவதைப் பார்க்கும் போது நாம் உணர முடிவது பெரும் சமன்குலைவையே.
(-∞, 0, ∞) என்பதை நிகழ்வுகளின் தொகையை எடுத்துக் கொண்டால், ஒட்டுமொத்தமாக ஆண், பெண் தன்மை இரண்டின் தீமை அம்சம் சார்ந்த கூறுகளையும் (-∞, 0) என்ற தளத்தில் வைக்கலாம். நாம் இப்போது சந்திக்கும் தீமைகளின் முகமும், இன்னும் சந்திக்காத தீமைகளின் முகமும் அதில் இருப்பதாகக் கருதுகிறேன். X,Y தளத்தில் அதை பிரித்துக் கொள்கையில் ஆண், பெண் தன்மையின் தீமையின் பக்கங்கள் எனப் பிரித்துக் கொள்ளலாம். (0, ∞) என்ற தளத்திலேயே மனித குலத்தின் அடுத்த கட்ட நகர்வு இருக்கிறது. இது ஆண், பெண் தன்மையின் நன்மையின் களம் என்று வரையறுத்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்த பெண் தன்மையையும் நாம் நேர்மறை அம்சம் கொண்டது என்று சொல்லிவிட இயலாது. அதன் மிக நுணுக்கமான எதிர்மறைப் பண்புகளை பார்க்க இயலாத வண்ணம் நாம் அதன் அனைத்துக் கூறுகளையும் தடுத்த ஒரு சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறோம் என்று தோன்றுகிறது. தாய்த்தேய, தந்தைத்தேய சமுதாயம் ஆகியவை ஒன்றின் ஆதிக்கம் மேலெழும் போது இன்னொன்று தலையெடுக்கும் என்று சொல்லப்படும் சமூகவியல் சிந்தனைப் போக்கு ஒன்று உள்ளது என்பதை இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன். ஓர் சுழற்சி முறையிலேனும் பெண்தன்மை கொண்ட ஒரு உலகம் உருவாகி வரட்டும் என்றே சொல்ல முடிகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை ”வியர்த்தம்” என்று கடந்து செல்வதை விடவும் “நினைக்கப்படும்” (https://www.jeyamohan.in/226947/) என்று சலனத்துடன் கடந்து செல்வதே கலைஞனின் பார்வையாக இருக்க முடியும் என இந்த நேரத்தில் தோன்றுகிறது.
தேவதேவன் அதற்கும் மேலான இடத்தில் நின்று கொண்டு அந்த ஒரு பாலுயிரியாய். கவிதையை எழுதினார் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் என்னால் அந்த முனைக்கும் செல்ல முடியாமல் அலைக்கழிகிறேன். இப்போதைக்கு நடுக்கத்துடன் அவர் கைகளை பற்றிக் கொள்கிறேன்.
