ஜெயமோகனின் காடு
சிறந்த நாவல்கள் எப்போதுமே நம்மை நிம்மதியிழக்கச் செய்கின்றன. நம்பிக்கைகள் மீது வந்துவிழும் ஒவ்வொரு அடியுந்தான் வாசிப்பின் வெகுமதி. மனிதர்கள் குறித்து கருப்பு வெள்ளையாக மனத்திரையில் பதிந்து வைத்திருக்கும் மதிப்பீடுகள் வேரோடு பிடுங்கி எறியப்படுகின்றன. மனிதன் புரிந்துகொள்ளவே முடியாத எளிய குழப்பம். நாவலை வாசித்துமுடிக்கும்போது முன்முடிவுகள் சிதைந்து நொறுங்கிக்கிடப்பதைக் கண்டு திகைத்து நிற்போம். காடு நாவலை குமுறும் சொற்களின்றி என்னால் ஒருபோதும் வாசிக்க முடிந்ததில்லை. ஆண்டுதோறும் நான் செல்லும் தீர்த்த யாத்திரை இந்நாவலின் உலகம்.
கிரிதரனாக உருமாறி சொற்கள் பீறிட பித்தேறி கடைவீதிகளில் அலைந்திருக்கிறேன். முதல்முறையாக வாசித்தபோது பல வரிகளுக்கு இடையில் தவித்து நின்று உணர்ச்சிகள் மேலிட பெருமூச்சுகள் பிரிந்ததுண்டு. அந்நாவலின் மனிதர்கள் அன்றாடம் வந்துபோகும் முகங்கள்தான், அந்த முகங்களுக்கு பின்னால் மறைந்திருக்கும் வெவ்வேறு முகங்களை அறிய நேரிடும் போது வரும் நிலைகொள்ளாமை. பெரும்பாலும் அது கிரியாகவோ, அம்பிகா அக்காவாகவோ, வேணியாகவோ இருக்கலாம். இப்போது நினைத்தாலும் மாமியும் சினேகமும் புகைமூட்டத்தோடு வந்து நிற்கிறார்கள். அவர்களை திட்டவட்டமான சொற்களுக்குள் அடைக்க முடியவில்லை. வரையறை செய்யும் கணந்தோறும் எல்லைகளை தாண்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பெண்கள். எனில் ஆண்களை என்னவாக எண்ணிக்கொள்கிறார்கள் என்ற வினாக்கள் தேனீக்களின் இரைச்சலைப் போல ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறது. குட்டப்பன் இயல்பாக மனிதச் சாத்தியங்களை விரித்தெடுத்துக்கொண்டே போகிறான். அவனிடம் வெளிப்படும் திறன்கள் சாமானியர்கள் அத்தனைப்பேரிடமும் காணக்கிடைப்பதில்லையே ஏன்? காடுகள் அழித்து, வெட்டவெளியில் வீடுகள் கட்டி, இருளுக்குள் முடங்கிக்கிடப்பதன் இழப்புகளா? இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே இருந்து வந்த பரஸ்பர புரிதல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதா?
நாஞ்சில் நாட்டின் குலசேகரம் சுற்றுப்பகுதியில் நாவல் நிகழ்கிறது. அணைகள் உள்ள மலையில் கல்வெர்ட் கட்டிக்கொடுக்கும் ஒப்பந்ததாரரான சதாசிவ மாமாவின் பிரதிநிதியாக வேலை கற்றுக்கொள்ளவும், நடக்கும் வேலையை கண்காணிக்கவும் காட்டிற்குள் வருகிறான் கிரிதரன் புண்ணியம். அம்மா தன் தம்பியிடம் கோரிப்பெற்றுத்தரும் வாய்ப்பு. கவிதைப் பித்து கொண்டுள்ள அவனிடம் காடு மேலும் போதையை ஊட்டுகிறது. காட்டிற்குள் எதிர்கொள்ளும் தனிமை அவனை கனவுநிலைக்கு தள்ளுகிறது. அலைந்துதிரிந்து சிக்கிக்குழம்பி மீண்டு வருகிறான். ஒருமுறை மீண்டு தன்னிடத்திற்கு வந்தபின் காட்டின் புதிர்ப்பாதைகள் வழித்தடங்களாகின்றன. கவித்துவ மனநிலை உறைந்திருந்த ஒரு பொழுதில் மலையனின் மகளான நீலியைக் குளிக்கும்போது பார்க்கிறான்.
காடும், தனிமையும், நீலியும் அவனுக்குள் பெரும்காதலாக கசியத் தொடங்குகிறார்கள். கண்டதும் காதல். நீலி காட்டின் மகள். காடும் அதன் வளங்களான தேனும் திணையும் மட்டுமே அவள் சொத்து. கிரி நாட்டைச் சேர்ந்தவன். தங்கம் பற்றி அவன் பேசும்போதெல்லாம் நீலி அச்சத்தோடேயே கேட்டுக்கொண்டிருக்கிறாள். நாட்டின் வாழ்க்கை குறித்த தகவல்கள் அவளுக்கு துணுக்குறல்களை அளிப்பவை. பொட்டுத் தங்கமின்றி இருக்கும் தன்னை மருமகளாக கிரியின் அம்மா ஏற்றுக்கொள்வாளா என்று உள்ளே தவிக்கிறாள். நீலியும் கிரியும் காதலென்னும் தற்கணப்பெருக்கில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். நீலி அவனை காட்டிற்குள் அலைத்து்ச்செல்லும் இரவில் கடும் மழை. நீலி அவனுக்குள் விலக்க முடியாத இருப்பென உறைகிறாள். வாழ் நாள் முழுக்க அவ்விரவு அவனுக்குள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. “நீலிக்க மணம் ஏமானுக்கு கிட்டிப்போச்சு” என குட்டப்பன் ஏளனம் செய்யும் விதத்தில் மலரின் வாசனையைப் போல தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு மழைக்காலத்தில் கடும் சுரம் கண்டு நீலி இறக்க, அவள் வாழ்ந்த சந்தனக்காடும் தீயிட்டு கொளுத்தப்படுகிறது.
அதே நாட்களில் கிரி மாமாவின் சொத்துக்களுக்காக அழகற்ற, புலையனுக்குப் பிறந்த, வேணியைத் திருமணம் செய்துகொள்கிறான். அம்மா அத்திருமணத்தை நோக்கி அவனை உந்தித்தள்ளுகிறாள். போத்தி அவனுக்குப் போதித்து, ஆற்றுப்படுத்துகிறார். வேணிக்கு அத்தை மகன் என்ற வகையில் கிரியின்மீது ஆசை. கிரி அழகனும்கூட. பிரியமும் ஏக்கமும் நிறைந்தவளாக கிரியைச் சுற்றி சுற்றி வருகிறாள் வேணி. முதல் இரவின்போது அவள் அழகில் கிளர்ச்சி அடையாமல், வேண்டாவெறுப்பாக அவளைக்கூட முயலும் கிரியை அறிந்து கொள்கிறாள். தன் அழகின்மை குறித்த கழிவிரக்கம் அவளை ஆயுள் முழுக்க வதைக்கிறது. அதனால் ஏற்பட்ட ஏமாற்றமும் வலிகளும் வெறியாட்டாக அவளிடமிருந்து வெளிப்படுகிறது. கிரி பாலங்கள் கட்டும் காண்டிராக்டில் தோற்று பரதேசிக்கோலம் புகுந்த நாட்களில் “அவுசாரியாட்டு போலாம்னாலும் அதுக்கும் அழகு இல்லையே” என்று வேணி கதறியழும் காட்சி கையறுநிலையின் உச்சம். அவளின் நல்லியல்புகள் காணாமல் போய் யட்சி ஆகி விடுகிறாள். கிரிதரனின் வாழ்க்கை சரியத் தொடங்கி, வீழ்ந்து போவதெற்கு அந்த திருமண உறவும் ஒரு காரணமாகிறது.
கிரிக்கு நீலியோடு ஏற்பட்ட காதலே அவன் மொத்த வாழ்க்கையிலும் மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்த்து பரவசங்கள் கொள்ளும் நினைவுகள். கவிதையும் காடும் நீலியும் இளமை முழுக்க ஆட்கொள்ள அவைகளை விட்டு விலகி வருந்தோறும் அவன் தோற்றுக்கொண்டே இருக்கிறான். அவனால் லௌகீக காரியங்களில் வெற்றிகரமாக செயல்பட முடியாமல் போகிறது. கட்டுமான ஒப்பந்த பணிகளில் சிக்கி செல்வமனைத்தையும் இழந்து, ஒரு கட்டத்தில் பிச்சைக்காரனைப்போல கோவில் வாசலில் சென்று தஞ்சமடைகிறான்.
கிரியின் மாமாவின் வாழ்க்கை வேறுவிதமானது. தரவாட்டு நாயர் பெண்ணிடம் வம்பு செய்து ஊரைவிட்டு ஓடி கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவரிடம் கையாளாகப் போய்ச் சேர்கிறார். இயல்பாகவே துடுக்கும் தைரியமும் மிகுந்தவர். அந்த இயல்புகளால் கவரப்பட்டு ஒப்பந்தக்கராரின் மனைவி அவர் வசமாகிறாள். முதல் அறமீறல். அவரும் முழு விருப்பத்தோடு அவளைத் துய்க்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒப்பந்தக்காரரின் மனைவி ஒரு தளுக்கின் மூலம் கணவனை வீட்டை விட்டுத்துரத்துகிறாள். பருவத்தின் முதல் வெற்றியை ருசிக்கிறார் சதாசிவம் மாமா. அந்த கைமுதல் கொண்டு வெற்றிகரமான காண்ட்ராக்டராகத் தன்னை நிறுவிக்கொள்கிறார். மலைக்கு சாமான்கள் கொண்டு செல்லும் வண்டியோட்டியாக வரும் நாடார், பிறன்மனைவிழைதலின் தீங்குகளைக் கூறி எச்சரித்தாலும் மாமா கேட்கிறவராக இல்லை. அங்கே ஆரம்பிக்கிறது அவரின் சிக்கல்கள். செல்லும் இடங்களில் எல்லாம் பெண்களை வேட்டையாடுவதையே இயல்பாகக் கொண்டிருக்கிறார். வறுமைப்பிடுங்கித்தின்றது போக மிச்சத்தில் கன்னிகாத்து நின்ற மாமியை பணம்கொடுத்து திருமணம் செய்து அழைத்து வருகிறார். பெரிய தரவாட்டு வீட்டைப்போன்று கோட்டையை கட்டியெழுப்புகிறார். மாமி பேரழகி. யட்சி என்பாள் கிரியின் அம்மா. ஊரெல்லாம் மாமியின் அழகினைக்கண்ட பிரமிப்பு. மாமாவிற்கு மாமியின் உடலும் அலுத்துப்போகிறது. அவர் தன்னிடம் மேஸ்திரியாக வேலைபார்க்கும் ரெசாலத்தின் மனைவியை வளைக்கிறார். பணத்திற்கும், அதிகாரத்திற்கும் முன் மண்டியிடாத ஒன்றுண்டா என்ன?. ரெசாலம் வேதனை தாளாமல் தேவாங்கினை தத்தெடுத்து வளர்த்து அன்புகாட்டி போதையில் சிக்கி அழிகிறார். கடைசியில் மாமாவின் முடிவு ரெசாலம் மேஸ்திரியால் நிகழ்கிறது.
பேரழகியும் பெருந்தனக்காரனின் மனைவியுமான மாமிக்கு சதாசிவம் மாமா போதாமல் போவதே நாவலின் மையம். கண்டன் புலையனின் உருவம் நாவலில் கிரியின் பார்வையில் விவரிக்கப்படுவதால் நாமும் புலையனின் உடல் லட்சணம் குறித்து அவலட்சணமான சித்திரத்தையே அடைகிறோம். மாமிக்கும் புலையனுக்கும் இருக்கும் உறவின் சாட்சியாக வேணிப் பிறக்கிறாள். தெற்றுப்பல்லும் மெலிந்த கருத்த உருவமும். இதையெல்லாம் அறிந்தும் மாமாவால் மாமியை ஒன்றும் கேட்க முடியாமல் போகிறது. புலையன் அசாத்தியமான உடல் உழைப்பாளி. அவனின் உடல்வலு மாமியைக் காக்கும் அரண்.
வேணியின் திருமண ஏற்பாட்டு நாளொன்றில் மாமி கிரியை தனிமையில் சந்தித்து ஒரு அணைப்பின் மூலம் அவளின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறாள். சொந்த மகளின் கணவனாக வரப்போகிறவன் என்கிற அச்சம் கூட அவளுக்கு இல்லாமல் போகிறது. கிரிக்கு மாமியின் மீது ஈர்ப்புண்டு. ஆனாலும் மாமியின் செயல்களால் அச்சமடைந்து விலகி ஓடுகிறான். மாமாவின் இறப்பிற்கு பின் மாமி வேறு ஒருவனோடு கொஞ்சம் பணமும் நகையும் எடுத்துக்கொண்டு காணாமல் போகிறாள். ஆண்கள் மாமியை கவர்ந்துக்கொண்டே இருக்கிறார்கள். ஊரும் உறவுகளும் அவளுக்கு ஒருபொருட்டே அல்ல.
காட்டிற்குள் சித்தாள் வேலைக்கு வந்துபோகும் ரெஜினாவும், சிநேகம்மையும் எதிர் எதிர்த்துருவங்கள். குட்டப்பன் அசகாய சூரன். குட்டப்பனிடம் கூட சிக்காமல் நழுவிச்செல்லும் ரெஜினாவைப் போல் அல்லாமல் “கட்டிக்கொடுத்தா ஒத்திக்கும் பாட்டத்துக்கும் எழுதியா கொடுத்திருக்கு” என்று கேட்டு குட்டப்பனை அனுமதிக்கிறாள் சிநேகம்மை.
போத்தியின் சொற்களாக வந்துபோகும் சில வரிகள் இந்நாவலின் மொத்த சாரத்தையும் கொண்டிருக்கின்றன. ஒருமுறை கிரியிடம் போத்தி சொல்கிறார்.
“தாக்கோல் சரியா அமையுற வரை மாத்திக்கிட்டே இருப்பாங்க..சரியான தாக்கோல் சிக்கிக்கிட்டா அதுக்காக உயிரைக் கூட கொடுப்பாங்க”
மற்றொரு இடத்தில் கிரியின் நினைவோட்டமாக “எல்லா மனித உறவுகளையும் தீர்மானிப்பது காமமும் சுயநலமும்தான் ” என்ற வரிகள் கடந்துசெல்லும். இந்நாவலின் தரிசனமுமாக நான் பெற்ற சொற்கள் அவை. மனித உறவுகளை வெட்டுக்கத்தியின் கூர்மையோடு வரையறை செய்யும் பார்வை போத்தியினுடையது. எனில் பெருந்தியாகங்களுக்கும் காத்திருத்தல்களுக்கும் பொருளேதும் இல்லையோ?
நாவல் முழுக்க மனிதர்கள் இச்சைகளால் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறார்கள். மனித உறவுகள் ஒரு விதத்தில் உடலிச்சையால் மட்டுமே தீரமானிக்கப்படுகிறதோ என்றளவில் நாவலில் மீறல்கள் அடர்ந்து காணப்படுகிறது. தனிமனித ஒழுக்கம் எவ்வளவு பெரிய கற்பிதம் என்பதை இந்நாவல் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. மனிதர்களில் மிகச்சொற்பமானவர்களே ரெஜினா போல எத்தனை நெருக்கடியிலும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு எல்லாம் “கொடுக்கல் வாங்கல்” சமாச்சாரம்தான். ஆணுக்கு கொள்கையும் பெண்ணுக்கு கற்பும் இழக்க இருக்கின்றன என்கிறார் சுந்தர ராமசாமி ஒரு புளிய மரத்தின் கதை நாவலில்.
குடும்பம் மனிதர்களின் காமத்தால் சிதைந்து வரும் போது, குழந்தைகளால் வலுப்பெற்று எழுந்துவரும் சித்திரமும் நாவலில் உண்டு. தன் மகனின் ரோமங்கள் அடர்ந்த கால்களைக் கண்டு உத்வேகம் பெறும் நாற்பது வயது கிரியின் நினைவுகள், சில்லறை சில்லறையாக பணம் சேர எழுந்துவரும் நம்பிக்கை. அம்பிகா அக்கா கிரியிடம் வேதனையோடு சொல்கிறாள். “நீயும் எல்லா ஆண்களையும்போல பெண்களை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்கிறவன் தான்” என்று. பெண்களுக்கு ஆண்களால் அளிக்க முடிந்ததே காயங்களும் கல்லெறிகளும் மட்டுந்தான் என்கிறாள்.
ஒரு மகத்தான காதலும், காமத்தால் நுரைத்து வழிந்து செல்லும் மனித உறவுகளுமே காடு நாவல். பகைப்புலமாக காடழிந்து ஊருக்குள் மாற்றங்கள் நிகழ்ந்து, இடைநிலை- கீழ்நிலைச் சாதிகள் அதிகாரம் பெற்று வரும் சித்திரம் விரிவாக எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மதம் அப்பிரதேசத்தை பற்றிப்படரும் பிரம்மாண்ட காட்சிகள். பெரும் லட்சிய நோக்கோடு காடுகளுக்குள் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் செவிலிகள் வருகிறார்கள். மனித உறவுகளின் விசித்திரச் சாட்சிகளாக ஒரு பால் புணர்ச்சியர்களான இரட்டையர்களின் ஊடலும் கூடலும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
காடு நாவல் காமத்தை கருப்பொருளாகக் கொண்டு அதன் அத்தனை வகைமாதிரிகளோடும் வாசகர்களிடம் விவாதிக்கிறது. இத்தனை உன்மத்தங்களிற்கும், கொந்தளிப்பிற்கும் பின்னர், முடிவில் எஞ்சுவதென்ன என்பதே நாவல் எழுப்பும் ஆதாரக் கேள்வி.