செந்துாரம் ஜெகதீசின் ‘கிடங்குத்தெரு’ நாவலை முன்வைத்து
வாசிப்பு என்பது தொடர் பயணம். ஒரு நாவலின் முதல்வரியில் அதுவரை அறிந்திராத ஓர் உலகத்தின் வாசல் திறந்துகொள்கிறது. அல்லது நாமறிந்த உலகத்தின் அதுவரை கவனத்திற்கு வந்திராத பார்வைக்கோணம் ஒன்று மேலும் அதிகமாக விரிகிறது. சிறந்த நாவல்களில் கண்ணீரும் கைவிடப்படுதலும் மனிதர்களின் வீழ்ச்சிகளும் உள்ளடங்கி இருப்பது உலகப் பொதுநியதி. துயர் உற்றவர்களின் சித்திரங்களே நம்மை கவர்ந்திழுக்கின்றன.
நாவல் தகவல்களஞ்சியமாக இருப்பதுடன் தனக்கென்று ஒரு தரிசனத்தைக்கொண்டிருப்பது ஆகச்சிறப்பு. உள்ளதை உள்ளபடி சொல்வதல்ல எழுத்தின் நோக்கம். சொல்ல வந்ததன் சாரத்தை தேவையான சொற்களில் சொல்லி அனுபவமாக்கும் வல்லமை இருக்கவேண்டும். அவ்வல்லமை கொண்டுள்ள நாவல்களே மகத்தானவை. மனிதன் இருக்கும் காலம்வரை அவனோடு அந்நாவல்களும் இருக்கும்.
எங்கும் தரமான நாவல்களுக்கு வாசகர்கள் எண்ணிக்கை குறைவுதான். அத்தனைபேர்களாலும் சிகரங்களைத் தொட்டுவிட இயலாது என்பது போல். தரமான எழுத்து என்று ஒன்று இருக்க முடியுமா? நாவலில் எந்தவிதத்தில் தர வேறுபாடு இருந்துவிடப்போகிறது என்பது வாசக அறியாமை. வாசிப்பை வாழக்கிடைத்த மற்றுமொரு வாய்ப்பு என்பவர்களுக்கு இப்பிரச்சினை இருப்பதில்லை. தொடர்ந்த வாசிப்பில் தங்களுக்கான தரத்தை வந்தடைந்துவிடுகிறார்கள். ஆரம்பக்கால வாசகர்களுக்கு அது அமைய நல்லுாழ் வேண்டும். இல்லையென்றால் கடைசிவரை கல்கியையும் சாண்டில்யனையும் கொண்டாடி வாழ்ந்து கழியக்கூடும்.
என் ரசனைக்குகந்தவை என சில நாவல்கள் இருக்கின்றன. அந்த நாவல்களை ஆண்டுதோறும் ஒருமுறை வாசித்து என்னைப் புதுப்பித்துக்கொள்வேன். ஒவ்வொரு வாசிப்பின்போதும் அதுநாள்வரை என் கவனத்திற்கு வந்திராத ஒரு புதுத்தளத்தை கண்டடைவேன். நல்ல நாவல்கள் என்பவை குறைந்தது ஐந்துமுறையாவது நம் வாசிப்பைக்கோரி நிற்பவை.
முதல் வாசிப்பின்போது இந்நாவலின் ஒரு தளம்மட்டும் என்னை மிகக்கவர்ந்து அது அளித்த உற்சாகம் என்பதே இந்நாவலின் மையப்படிமமாக இருந்தது. கிடங்குத்தெரு அப்போதே ஆகச்சிறந்த என் விருப்பத்திற்குரிய நாவல்களில் ஒன்றாக தோன்றிற்று. எனக்கு மிகப்பிரியமான பத்து நாவல்களில் ஒன்றாக இதை வைத்திருக்கிறேன். அதற்கு தனிப்பட்ட பல காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக நான் நினைப்பது இந்நாவல் தீவிர வாசிப்பை மேற்கொண்ட ஒருவன் வந்தடையும் இன்னல்களை மையப்படுத்திப்பேசுகிறது என்பதே. எழுத்தாளனாக வாழமுயன்று வயிற்றுக்காக அவன் மேற்கொண்ட பணியால் பலிகொள்ளப்பட்ட ஒருவனை பற்றிய கதை. மேலுமதிகமாக ஓஷோவால் படுகொலை செய்யப்பட்ட ஒரு மனிதனின் கதை என்பதும்.
தன்னை அறிவுஜீவி என்று நம்பும் கதைசொல்லி தன்வாழ்க்கை துயர்மண்டியது, தனக்கு சிரிப்பை வழங்காதது என்கிறான். எப்போதும் கைவிடப்பட்டவனாக இருக்கிறான். கதைசொல்லியான ராஜா இந்நாவலின்படி நாற்பதை நெருங்கியவன். அவன் பூர்வீக நிலமாக இன்றைய பாகிஸ்தானின் சிந்து மாகாணம் இருக்கிறது. அங்கிருந்து தேசப்பிரிவினையால் விரட்டப்பட்ட பல்லாயிரம் குடும்பங்களில் அவனுடைய மூதாதையரின் குடும்பமும் ஒன்று. கதைப்படி அவன் இம்மண்ணின் அகதி. அகதிகளுக்குரிய அத்தனை இக்கட்டுகளும் அவனுடைய அன்றாடத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது தானே? ஆனால் நவீன வாழ்க்கை நம்மில் பெரும்பாலானவர்களை சொந்தநிலத்தில் கூட அகதிகளைப்போல அலைந்து திரியத்தான் வைத்திருக்கிறது. எத்தனைபேருக்கு பிறந்து வளர்ந்து வாழ்ந்து வீழும் மண் ஒரே மண்ணாக அமையக்கூடும்.
சிந்தி இன மக்கள் குறித்த இலக்கியப்பதிவாக இந்நாவல் இருக்கிறது. உடுத்திய துணிகளோடு பிழைக்க வந்த ஒரு மக்கள்திரளின் கதையிது. யூதர்களைப்போல இவர்களின் கவனமும் பொருள்சார்ந்த ஒன்றாக இருப்பதில் பிழை என்ன இருந்துவிடப்போகிறது. ஆனால் ராஜா விதிவிலக்காக இருக்கிறான். தீவிர வாசிப்பு அவனை அவன் வாழும் உலகத்தில் இருந்து அந்நியப்படுத்துகிறது. அறிவு அளிக்கும் கர்வம் என்பது சாதாரணப்பட்டதல்ல. அறிந்தவர்களுக்கே அதன் கனம் புரியும். கடவுள் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார். ஒருவகையில் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள்தான் தங்களை பலியிட்டு இந்த மனித மந்தையை வழிநடத்திச் செல்கிறார்கள். ஆனாலும் அரிஷ்டாட்டில், கார்ல் மார்க்ஸ், புத்தர், இயேசு, காந்தி, என்று அதன்கண்ணி தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
அதிகாரம், பணம் போன்றவை குறித்து ராஜாவுக்கு வேறு எண்ணங்கள் இருக்கின்றன. கூடவே இந்நுாற்றாண்டின் மகத்தான சிந்தனையாளர்களின் எழுத்துக்கள் அவனை மாற்றியமைக்கின்றன. ஓஷோவின் நஞ்சு தொண்டைக்குழிக்குள் நிரந்தரமாக நிலைத்துவிடுகிறது. பதின்பருவத்தில் உறவினர்களால் பாலியல் இச்சைகளுக்கு வலுக்கட்டாயப்படுத்தப்படுகிறான். வறுமையும், அன்றாடத்தேவைகளுக்காக கையேந்த வேண்டிய நிலையும் அவனை சிதைக்கின்றன. வாசிப்பு அவன் செல்லவேண்டிய திசைக்கு எதிர்திசையில் அவனை அள்ளிக்கொண்டு செல்கிறது.
இந்நாவலின் முன்மாதிரியாக சுந்தர ராமசாமியின் ஆத்மாநாம் சோயித்ராம் கதை இருக்கிறது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கதைப்பின்னணியைக் கொண்டிருக்கின்றன. கவிஞனாக அடையாளம் காணப்பட்ட சேல்ஸ்மேனை புரவலராக இருந்து ஆதரித்து வந்த முதலாளி இறந்ததும் அவன் தம்பிகளால் விரட்டப்படும் அவலத்தை சொல்லும் கதை ஆத்மாநாம் சோயித்ராம். இந்நாவல் அச்சிறுகதையில் பின்புலமாக வந்த கிடங்குத்தெரு வாழ்க்கையை விஸ்தாரமாக விவரிக்கிறது. சேட்டுக்களும் மார்வாடிகளும் நமக்கு அவர்களின் வியர்வை வாசத்தோடு அறியக்கிடைக்கிறார்கள்.
ஆ.மாதவனின் சாலைத்தெரு போன்றுதான் இருக்கிறது சென்னையின் கிடங்குத்தெருவும். எனில் ஊரில் உள்ள அத்தனை வணிகநிலையங்களின் நிலையும் இதுதானோ? அத்தனை தளங்களில் இருந்தும் எழுதவந்தால் நமக்கு காணக்கிடைக்கும் சித்திரம் என்னவாக இருக்கக்கூடும். அரசியல்வாதிகளை, அரசூழியர்களை நோக்கி ஊழல், அநீதி என்று விரல்நீட்டும் நாம் அவர்களை விட பன்மடங்கு நம்முடைய உடலையும் சுற்றுப்புறத்தையும் பணம் என்ற ஒரு நோக்கத்திற்காக நம் அனுமதியோடு பாழாக்கும் வணிகர்கள் மீது என்றாவது சினந்திருக்கிறோமா?
இந்நாவலில் மேத்தா என்றொரு கதாபாத்திரம். கிடங்குத்தெருவின் வெற்றிபெற்ற முகங்களில் ஒன்று. வணிகனாக வெற்றிபெற தேவைப்படும் திறமைகள் அத்தனையும் கைவரப்பெற்றவர். அந்தரங்கமாக அவரை அறியும் கணங்கள் நமக்கு மிகுந்த அருவருப்பை அளிப்பவை. ஆனால் யதார்த்தம் இதைவிட உக்கிரம் கூடியதாகத்தான் இருக்கிறது.
சம்பளம் போதவில்லை என்று கேட்கும் ஐம்பது வயது வேலைக்காரனை திட்டம்போட்டு நடுத்தெருவில் நிப்பாட்டுகிறார் மேத்தா. தன் கடையில் கணக்கு எழுதவரும் பணிப்பெண்ணை காமக்கிழத்தியாகப் பயன்படுத்திக்கொள்கிறார். முப்பது வயது முதிர்கன்னி வயிற்றில் தங்கிய கருவை கலைத்துவிட்டு திருமணத்திற்கு தானே சம்பாதித்து மணக்கோலம் ஏற்கிறாள். ஊர்ஊராக ஆர்டர் கேட்டு அலைந்து சென்னைதிரும்பி வயிராற உண்டுவந்த பணத்திற்கு பணியாளரை மேத்தா கடிந்துகொள்ளும் காட்சி நம்மை ஆவேசம் கொள்ளச் செய்கிறது. பணம் பணம் என்று தன் மொத்த வாழ்நாளை’யும் மாற்றிக்கொள்ளும் மேத்தா போன்றோர்களிடம் தானே உலகம் மண்டியிட்டுக்கிடக்கிறது..
தன் உறவுக்காரப்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்ள இரண்டுமுறை தற்கொலையின் விளிம்பிற்கு சென்று மீண்ட ராஜா திருமணத்திற்கு பிறகு அவளோடு மனம்விரும்பி வாழ மறுக்கிறான். அங்கே அவனை அவளிடமிருந்து விரட்டியடிப்பது அவளும் அவன் குடும்பத்தாரைப்போன்று ஒருத்தியாக மாறிவிட்டதுதான். பணம் சம்பாதிக்கத்தெரியாத ஆண் பிணத்திற்கு சமம் என்கிற பொதுப்புத்தியின் இளக்காரம் அவர்களுக்கு இடையே நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்குகிறது. கவிஞனின் வேலை கவிதை எழுதுவதாகத்தானே இருக்கமுடியும். எனில் கவிஞர்களை கவிதை எழுதுவதில் இருந்து விரட்டுவது எது? வயிற்றுப்பாடுதான். காமத்திற்கு திருமணத்தைத்தவிர வேறுவாய்ப்புக்கள் இல்லாத இந்தியா போன்ற தேசத்தில் கவிஞர்கள் திருமணத்தோடு காணாமல் போவது இயல்பான நிகழ்வே. ராஜா தன்னை கவிஞனாக அறிவுஜீவியாக கொண்டாடும் பெண்ணிற்காக ஏங்குகிறான். அவன் மனைவி தீபா அப்படிப்பட்டவள் அல்ல. இலக்கியக் கூட்டம் ஒன்றில் துளசி என்கிற திருமணமான பெண்ணைச் சந்திக்கிறான். அதுவரை பகிரப்படாத காமம் காதலாக அவள்மீது பொழிகிறது. அவளை நெருங்கி அவளோடு சேர்ந்து வாழ விரும்புகிறான். துளசி தெளிவாக அவனோடு பழகுகிறாள். வாசகியாக அவள் எண்ணியிருந்த பிம்பம் இல்லாமல் சிறுவன்மனநிலையில் அவன் இருப்பதை ஆச்சரியம் தாளாமல் பார்க்கிறாள். பலமுறை சிறந்த மனோதத்துவ மருத்துவரைச் சென்று பார்க்குமாறு அவனுக்கு ஆலோசனை அளிக்கிறாள். அவனின் மகிழ்ச்சியற்ற நாட்களை தன்னால் மாற்ற முடியுமா என்று யோசிக்கிறாள். அவள் அவனை அந்தளவே அனுமதிக்கிறாள். நாவலில் அவர்களுக்குள் நிகழ்ந்த உடல் பரிமாற்றம் உதட்டுமுத்தம் என்பதோடு முடிகிறது.
இந்நாவலின் தனிச்சிறப்பு சிந்து மண்ணில் இருந்து பிழைப்புத்தேடி சென்னை வந்து வேர்ப்பிடித்து தளிர்த்து பெரும் விருட்சங்களாக வளர்ந்து நிற்கும் மேத்தா போன்றவர்களின் வளர்ச்சியில்தான் இருக்கிறது. மேத்தா வெளிப்படையாக நல்லவர் போன்று தன்னை வடிவமைத்துக்கொள்ளும் வணிகர். தன்னிடம் மட்டுமே மகிழ்ச்சியும் பணமும் அதிகாரமும் இருக்க வேண்டும் என விரும்பும் கர்வி. பணம் தரும் வாய்ப்புகளை எந்த எல்லை வரை பயன்படுத்த முடியுமோ அந்தளவுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். தன்னிடம் தஞ்சமடையும் ராஜாவின் மனைவியைக் கூட படுக்கைக்கு அழைக்காமல் அவரால் இருக்க முடிவதில்லை. பணம் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விலைபேசிவிடும் என்கிற வணிக புத்தி.
இந்நாவலில் லலிதா, மாதவன்,கிருஷ்ணன், ஹேமாதிரி என்று மேத்தாவால் வேட்டையாடப்பட்டவர்களின் அவலங்கள் கிளைக்கதைகளாக விரிகின்றன. எண்பது காலகட்டத்தைய இலக்கிய உலகின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம் கடைசி மூன்று அத்தியாயங்கள் வருகிறது. இலக்கிய உலகின் குழு மனப்பான்மை ராஜாவைப்போன்றே நம்மையும் கலைத்துப்போடுகிறது. இலக்கியம் ஒருவரை பண்படுத்தும் என்கிற நம் மேலான நம்பிக்கையை நம் ஆதர்சங்களின் செயல்பாடுகள் பொய்த்துப்போகச் செய்கின்றன.
120 பக்கங்களே கொண்ட பெருநாவல் என கிடங்குத்தெரு நாவல் குறித்து எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு அத்தியாயம் என்று குறைத்து அக்கதாப்பாத்திரங்களுக்கு ஜெகதீஷ் துரோகம் இழைத்துவிட்டார். தனித்தனி பாகங்களாக இந்நாவலில் வரும் அத்தனை பேருக்கும் பக்கங்கள் அளித்து எழுதியிருந்தால் இந்நாவல் இதைவிட இன்னும் பிரம்மாண்டம் கொண்டிருக்கும். ஞானியரின் துக்கத்தை ஞானியரே அறிவர் என்கிற ஓஷோவின் வரி ஒன்று உண்டு. எளியவர்களுக்கு அவர்களின் பரவசத்தைப்போன்றே துக்கமும் எளியதன்மை உடையதுதான் போலும்.