1981ல் எழுதப்பட்ட நாவல் ஜே.ஜே.சில குறிப்புகள். எழுத்தாளன் மீது பெரும் பித்துக்கொண்ட வாசகன் ஒருவனின் பார்வையில் சொல்லப்படும் புனைவு. ஜோசஃப் ஜேம்ஸ் என்கிற மலையாள எழுத்தாளனை வாசிக்க நேர்ந்து அவனிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ளத்துடிக்கும் பாலு என்கிற இளைஞனின் பரவசத்துடன் நாவல் ஆரம்பம் ஆகிறது. பாலுவின் பார்வையின் ஊடாக .ஜே.ஜே. வின் மொத்த வாழ்க்கையும் நாவலில் குறிப்புகளாக, நினைவோடை உத்தியில் பிறரின் சொற்களாக, ஜே.ஜே.வே எழுதிய நாட்குறிப்புகளாக விரிகிறது.
வெளியாகி கிட்டத்தட்ட முப்பந்தைந்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இந்நாவலின் முக்கியத்துவம் என்ன? அதற்குமுன் இந்த நாவலின் பேசுபொருள் என்ன என்பதும், அறிமுக வாசகர்கள் எதிர்கொள்ள இருக்கும் தடைகள் எவை என்பதையும் கொஞ்சம் சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்.
இந்நாவல் நடக்கும் காலம் சுதந்திரப் போராட்டம் நடந்து முடிந்து பொன்னுலகம் வாய்க்கும் என்று நம்பி ஏமாந்து, மனித மனத்தின் பேராசைகளால் தியாகங்கள், லட்சியவாதங்கள் துார்ந்து போயிருந்த காலம். பொதுவுடைமைச் சித்தாந்தம் அவ்வெற்றிடத்தை நிரப்பும் என்று ஏகமனதாக அறிவுஜீவிகள் நம்பி, பெரும் ஊக்கத்தோடு அவர்களை இயங்கச்செய்திருந்த காலமும்கூட. இலக்கியத்தில் கலை கலைக்காக என்றும், கலை மக்களுக்காக என்றும் தனித்தனி அலைகள் குமுறிக்கொண்டிருந்த காலம்.
முன் மாதிரிகள் ஏதும் இந்நாவலின் வடிவத்திற்கு தமிழில் இல்லை. கலைஞனின் தேடலில் விழைந்த வடிவம். கூறுமுறையும் முன்னர் அனுபவப்படாதது. இதுவே ஆரம்ப வாசகர்களிடம் இந்நாவல் ஒருவித அந்நியத்தன்மை கொள்ள காரணமாக அமைகிறது.
ஜே.ஜே. இடதுசாரி சிந்தனைகளின் மீது ஈர்ப்புக்கொண்டவன். நாளடைவில் தோழர்களிடம் தத்துவம் அவர்களின் சுயநலத்தை நிறைவேற்றிக்கொள்ள வாய்த்த ஒரு உபாயமாக மாறிப்போனதைக்கண்டு கலங்கி, அவற்றில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டவன். இது அப்போதைய காலகட்டத்தில் பரவலாக நிழந்த உண்மை. சுந்தர ராமசாமியே ஆரம்பத்தில் முற்போக்குக் கதைகள் எழுதியவர்தான். தண்ணீர், கோவில்காளையும் உழவுமாடும் போன்ற கதைகள் அக்காலத்தியவை. அதன்பின் ஸ்டாலினிய நிர்வாகத்தினால் மனம்நொந்து அக்கிருந்து வெளியேறுகிறார். ஏழைப்பங்காளிகளின் உலகத்தை சமத்காரமாக ரத்தமும் சதையுமாக எழுதிப் பேரும் புகழும் பெற்றுவரும் முல்லைக்கல் மாதவன் நாயர் மீது ஜே. ஜே. வைக்கும் விமர்சனங்கள் இன்றைக்கும் முக்கியமானவை.
முல்லைக்கல் நாயர் ஒரு போலி என்ற ஜே.ஜேயின் அவதானிப்பு கடும் விமர்சனமாக உருவெடுக்கிறது. எழுதுவதும் வாழ்வதும் வெவ்வேறாக இருக்கும்போது புரட்சியாளன் பிம்பத்தை முல்லைக்கல்லுக்கு அளிக்க ஜே.ஜே. ஒப்புக்கொள்ளவில்லை. உண்மையைக் காணும் வேட்கை, அதை எழுத்தில் பதிவுசெய்யத்துடித்த வேகம் என்று தன் செயல்களால் தொடர்ந்து எதிரிகளைச் சம்பாதித்துக்கொள்கிறான் ஜே.ஜே. தன்னுடைய மொழியான மலையாள இலக்கிய உலகத்தின் மீது அவன் காட்டும் சமரசமற்ற கறாரான விமர்சனம் அவனுக்கு அளிப்பது புறக்கணிப்பையும் பரம்பரையாகத் தொடர வாய்ப்புள்ள பகைகளையும்.
பாலு ஜே.ஜேயை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நுால்தான் இந்நாவல். தொடர்கதைகளும் நெடுங்கதைகளும் பரவலாக எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்நாவலின் வடிவம் அளித்த அந்நியத்தன்மை இன்றும் வாசகர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இதில் வாசக ஊகங்களுக்கான இடைவெளி ஏராளம். காலம் முன்பின்னாக ஊஞ்சலாடி குதிக்கிறது. ஜே.ஜே. என்கிற எழுத்தாளன் தமிழில் உள்ளவன் என்றும் ஒரு கற்பனைக்காக புதுமைப்பித்தன் என்றும் கொண்டு மலையாள இலக்கிய உலகத்தின் மீது ஜே.ஜே.கொட்டும் விமர்சனங்கள் தமிழ் இலக்கிய உலகம் சார்ந்தவை என்றும் கற்பனை செய்துகொண்டால் இந்நாவலின் முக்கியமான பரிமாணம் பிடிபடும். மொத்த நாவலும் சிந்திக்கும் மனிதர்களின் மீது தயவுதாட்சண்யமின்றி கடுமையான விமர்சனங்களை முன்னிறுத்துகிறது. போலிகளைக்கண்டு கொந்தளிக்கிறது. துவேசம்கொள்கிறது. ஏளனம்செய்து சபையில் இருந்து விரட்டி அடிக்கிறது. சிந்தனை என்ற பெயரில் நடக்கும் மொண்ணைத்தனங்களை செவிட்டில் அறைந்து அது சிந்தனை அல்ல சிந்தனைப் போலி என்று உரக்கச் சொல்கிறது. மேலும் பொதுவுடைமை தத்துவத்தை பாவித்தவர்கள் குறித்த துல்லியமான விமர்சனம் நாவலில் பெரும்பாலான இடங்களில் வருகிறது.
எண்பதுகளில் நாம் எப்படி இருந்தோம் என்பதையும், நம் அறிவுலகக் சீரழிவுகள் எவை என்பதையும் விமர்சனப்பூர்வமாக பதிவுசெய்துள்ளது என்பதே இந்நாவலின் முக்கியத்துவம். இரண்டாவதாக தமிழ்ச்சமூகத்தின் மீது சுந்தர ராமசாமிக்கு இருந்த விமர்சனங்கள். அவை இன்றும் மாறாமல் தொடரந்து கொண்டிருக்கின்றன.
வணிக எழுத்தின் மீது சு.ரா.விற்கு இருந்த எண்ணம் இந்நாவலில் ஓரிடத்தில் பதிவாகியுள்ளது. ”மாயக் காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புக்களை ஓயாமல் நம்மேல் உரசிக்கொண்டிருக்கும் அற்பங்கள்” என்று அது வெளிப்படுகிறது. அக்கவலை “சீதபேதியில் தமிழ் சீதபேதி என்றும், வேசைத்தனத்தில் தமிழ்வேசைத்தனம் என்றும் உண்டா? என்று சினங்கொள்கிறது. சு.ரா.வின் பாலயத்தில் இலக்கிய உலகம் எப்படி இருந்தது என்பதை ”நான் பள்ளி இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தபோது என் மனத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியவன் ஜே.ஜே. தமிழ் நாவல்களில் அதாவது தமிழ்க் காதல் கதைகளில் அல்லது தமிழ்த் தொடர்கதைகளில் என் மனத்தைப் பறிகொடுத்திருந்த காலம். அன்று வானவிற்கள் ஆகாயத்தை மறைத்திருக்க, தடாகங்கள் செந்தாமரைகளால் நிரம்பியிருந்தன. உலகத்துப் புழுதியை மறைத்துக்கொண்டிருந்தார்கள் பெண்கள். ஆஹா தொடர்கதைகள் ஒரு குட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள். பரிசுச் சீட்டு யாருக்கு விழும், கண்டுபிடிக்க முடிந்ததில்லை என்னால்.” என்று வர்ணிக்கிறார்.
ஆன்மீக வாதிகளிடம் அவருக்கு ஏற்படும் அவநம்பிக்கை துரதிருஷ்டவசமானது. நாராயணகுருவின் சீடர் என்று தன்னைச் சொல்லிக்கொண்ட ஒருவரை சந்தித்து கொஞ்ச நாட்கள் அவரோடு தங்க நேரிடுகிறது பாலுவுக்கு. விரைவிலேயே அவரின் நம்பிக்கைகளால் ஒன்றும் இம்மண்ணில் விளையப்போவதில்லை என்று சோர்வுற்று விலகிச்செல்கிறார். ஆயினும் அவரைப்போன்ற லட்சியவாதிகளின், சந்நியாசிகளின் அத்தனை உழைப்பும் ஏன் வீணாகிப்போகிறது என்ற துக்கம் அவரை வாட்டுகிறது.
பாலு ஜே.ஜே.யைச் சந்திக்க எழுத்தாளர் மாநாட்டுக்குச் செல்கிறான். அங்கு அவனுக்கு சரித்திர நாவலாசிரியர் திருச்சூர் கோபாலன் நாயரைச் சந்திக்க நேரிடுகிறது. அப்போது அவரின் நாவல்கள் குறித்து ஜே.ஜே. சொல்லும் வரிகள் அங்கதம் நிரம்பியவை. ”கொல்லங்கோட்டு இளவரசி உம்மிணிக்குடடியை அவளைத்துரத்திய அரசர்களிடமிருந்தும். முடிவில் அவளைக் காப்பாற்றிய இளவரசனிடமிருந்தும் விடுவித்து, திருச்சூர் கோபாலன் நாயருக்கே மணம் முடித்து வைக்க என்னால் முடியுமென்றால் , சரித்திர நாவல் எழுதும் அவஸ்தையில் இருந்து அவருக்கு நிரந்தர விமோசனம் கிடைக்கும்”, “பாவம் திருச்சூர், கற்பனைக் குதிரைகள் மண்டிக் கிடக்கும் லாயம் அவருடையது. ஏதோ சிலவற்றை அவிழ்த்துவிடுகிறார். அவை விண்ணென்று மேலே போய் மேகக் கூட்டங்களிடையே புரண்டு உடல் வலியைப் போக்கிக்கொண்டு சூரியனைப் பின்னங்காலால் உதைத்துதள்ளி, கிரகங்களை முட்டிக்குப்புறச் சாய்த்து சில நட்சத்திரங்களையும் விழுங்கிவிட்டு சந்திரனின் ஒரு துண்டை வாயில் கவ்விக்கொண்டு திரும்பி வந்து சேருகின்றன.” என்கிறான்.
அதைவிட உச்சபட்ச அங்கதம். ஜே.ஜே.பாலுவைச் சந்தித்த உடன் கேட்கும் கேள்வி. ”சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?”.
இந்நாவலின் சில தருணங்களை ஜெயமோகன் கைப்பற்றி பின்தொடரும் நிழலின் குரல் என்ற பெரிய நாவலாக எழுதியிருக்கிறார். முல்லைக்கல் மாதவன் நாயரிடம் ஜே.ஜே.யைப்பற்றி விவரிக்கும் அரவிந்தாட்ச மேனன் ஆல்பெர்ட் என்கிற இடதுசாரி தொழிற்சங்க வாதி ஒருவரைப்பற்றி சொல்கிறார். தனியாளாக மலைக்காட்டில் சங்கங்களை ஏற்படுத்தியவன் என்றும் பின்னாளில் கார் பங்களா நிலம் என்று ஒரு குட்டி முதலாளியாக தன்னை நிறுவிக்கொண்டவன் என்றும் வருகிறது. ஜே.ஜே.யின் நாட்குறிப்பு பகுதியில் ஒரு வரியில் ட்ராட்ஸ்கி ட்ராட்ஸ்கி என்று மாணவர்கள் புலம்பிக்கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறார். பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் கதைக்களத்தை ஜெயமோகன் இந்நாவலின் வரிகளில் இருந்தும் அதன்பின் அவருக்கு ஏற்பட்ட தொழிற்சங்க அனுபவங்களில் இருந்தும் எழுதியிருக்கலாம். அந்நாவலும் இந்நாவலைப்போன்ற வடிவ ஒற்றுமை கொண்டுள்ளது என்பது இந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது.
உண்மையான கலைவெளிப்பாட்டின் இயல்பு என்ன என்பதற்கு நாவலில் வரும் ஒரு காட்சிச்சித்தரிப்பு உதாரணமாக அமைகிறது. அது ஜே.ஜே. டயரிக்குறிப்பாக வருகிறது. “முல்லைக்கல் உன் எழுத்தை நான் மனத்தால் வெறுக்கிறேன். மாட்டுக்குச்சொறிந்து கொடு அது நல்ல காரியம். ஆனால் மனிதனுக்கு ஒருபோதும் சொறிந்துகொடுக்காதே…லுாக்கோசின் மகள் ஏலியம்மாவின் வீணை வாசிப்பை நான் கேட்கச் சென்றிருந்தபோது அவளுடைய தனி அறையில் வீணையின் கம்பிகள் அதிர்ந்தன. ஏலிக்குட்டியோ எங்களுடன் இருந்தாள். நாங்கள் வேகமாக ஓடிக் கதவைத்திறந்து பார்த்தபோது கம்பிகள் தானாக அதிர்ந்துகொண்டிருந்தன. மேல்மாடி உத்தரத்தில் ஒரு தச்சன் ஒரு ஆப்பை மரச்சுத்தியலால் அறைந்துகொண்டிருந்தான். இதுதான் மனிதாபிமானம்.”
நாவலில் அநேகம் இடங்கள் கவிதைவரிகளாக கவித்துவம் கொண்டிருக்கின்றன. சம்பத் காணும் கனவு அதன் வரலாற்றுப்பின்புலம், கரும்புள்ளிகளாத்தெரிந்து யானை உருப்பெற்று மீண்டும் கரும்புள்ளிகளாக யானை மறையும் மாயத்தோற்றம். சம்பத் காணும் பரவசமான சூரிய உதயம் என்று நாவல் முழுதும் சிந்தனையின் பாய்ச்சலையும் கலைவெளிப்பாட்டையும் காணலாம். படைப்பு மொழியோ சன்னதம் வந்து வேட்டைக்கு ஏகும் சாமியாடியுடையது.
மந்திரங்கள் போன்று இந்நாவல் வெளிவந்த காலங்களில் சிலவரிகள் இலக்கிய வாசகர்களால் ஓதப்பட்டு வந்தன. அவற்றில் சில
”எனது குடி தற்காலிகத் தற்கொலை – நான் உயிர்வாழ அவ்வப்போது தற்கொலைகள் அவசியமாகின்றன””
”மூலதனம் இல்லாமல் முதலாளி ஆக இன்று இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தொழிற்சங்கம் , மற்றொன்று பாஷை. பாஷை என்பது மொழி மூலம் மக்களின் உணர்ச்சியை, முக்கியமாக மேடைகளில் துாண்டுவதற்கான ஆற்றல். மக்களின் மனத்தேவைகளைப் பெரும் மாளிகைகளாக எழுப்பி அவர்கள் முன் காட்டும் காரியம்.”
”சஞ்சலமின்றி முடிவெடுப்பது. சரியோ தவறோ அதன்பின் அதில் ஆழ்ந்து விடுவது. அதன்பின் எதிர்நிலைகளைப் பற்றி உணர்வில்லாமல் இருப்பது. உயர்வோ தாழ்வோ இவை நிம்மதியானவை. மனநிம்மதி எப்போதும் மந்தத்தைப் பார்த்துக் கண்சிமிட்டுகிறது போலிருக்கிறது”
”பாஷை என்பது வேட்டை நாயின் கால்தடம். கால்தடத்தை நாம் உற்றுப்பார்க்கும்போது வேட்டைநாய் வெகுதுாரம் போயிருக்கும்.”
”ஆத்மாவை ஜேப்படிக்க ஒரு உடலுக்குள்தான் எத்தனை கைகள்”
தமிழ்ச் சமூகத்தின் போலித்தனத்தின் மேல், சிந்தனைச்சோம்பல் மேல் சுந்தர ராமசாமிக்கு இருந்த எண்ணங்கள்தான் இந்நாவலாக உருப்பெற்றுள்ளது. தமிழில் இதுபோன்று தன் உடல்முழுக்க சிந்தனையின் முத்திரைகள் கொண்ட வேறொரு நாவல் இல்லை. அது ஒன்றே இந்நாவலின் பேரழகு.
[…] […]