ஜி.கார்ல் மார்க்ஸின் ‘கட்டுத்தரை’ சிறுகதை குறித்து
மாட்டு வைத்தியரைப் பற்றிய கதை. இளம் எழுத்தாளர்கள் மிக எளிதாக எழுத வாய்ப்புள்ள நாஸ்டால்ஜியா வகைக் கதைதான் என்றாலும் ஆழங்கள் நிறைந்தது. ஒரு வார காலமாக இக்கதையை பலமுறை நினைத்துக்கொண்டேன். பாதிப்பில் அசோகமித்ரனின் புலிக்கலைஞன் கதைக்கு இணையானது. புலிக்கலைஞனில் வரும் டைகர்பாய்ண்ட் காதர் இக்கதையில் கனிந்து ஞானியைப்போல ஆகியிருக்கிறார். கலைஞன் வந்தடையச் சாத்தியமுள்ள ஓரிடம்.
பல மாடுகளுக்குச் சொந்தக்காரரும், நண்பருமான கதைசொல்லியின் தாத்தாவோடு தொடர்புடைய பழைய நினைவுகளை மீட்டிக்கொள்ள மாட்டுவைத்தியர் தாத்தா எப்போதாவது வந்து போகும் இடமாக இருக்கிறது கதைசொல்லியின் வீடு. அன்றும் வந்து வாசலில் நின்று தம்பி என்று அழைக்கிறார். அவர் அழைப்பில் ஒரு உரிமையும் நிதானமும் இருக்கிறது. வராண்டா படிக்கட்டில் அமர்ந்து சாவகாசமாக வெற்றிலையில் நரம்பெடுத்து சுண்ணாம்பு தீற்றி சீவல் சேர்த்து ருசிக்கிறார். பதற்றமோ அந்நியத்தன்மையோ அவரின் இயல்பில் இல்லை. அத்தனை இயல்பாக அந்த வீட்டைப் பாவிக்கிறார்.
வைத்தியரைத் ஒரு தியாகியாகக் காட்டி ”ஆகவே மனிதர்களே விவசாயத்தை நீங்கள் கைவிட்டதால் வந்த அவலத்தைப் பாருங்கள்” என்று நம்மை நோக்கி விசனப்படக்கூடிய சாத்தியம் உள்ள கதை. அதன்மூலம் வலுவான வாசக வரவேற்பைப் பெற்றுத்தரக்கூடியதும் கூட. ஆனால் கார்ல் மார்க்ஸ் மிக நுட்பமாக அந்த தேய்வழக்கில் இருந்து கதையை வேறொரு தளத்திற்கு அழைத்துச்செல்கிறார். . கதைசொல்லியால் விவரிக்கப்படும் தாத்தாவின் பிம்பம் நமக்கு ஆசுவாசம் அளிக்கிறது. காலமும் மண்ணும் கைவிட்டாலும் அவரிடம் கையறுநிலையின் துக்கம் இல்லை. வாழப் பொருளற்ற நிலையிலும், கொண்டாட உறவுகள் இல்லாத போதும் வைத்தியர் தாத்தாவிடம் அதுகுறித்த ஆவலாதிகள் வெளிப்படவில்லை என்கிறார் கதைசொல்லி.
இக்கதையின் உச்சக்கட்ட நிகழ்வாக ஒரு மங்கிய சித்திரத்தையே கதைசொல்லி தருகிறார். புலிக்கலைஞன் கதையில் வருவதைப் போன்று உயிர்பிளக்கும் பிரயத்தனங்களை காட்சிப்படுத்தவில்லை. கதைசொல்லியோடு பேசிவிட்டு, கதைசொல்லியின் அப்பாவைக் காண வீட்டின் பின்கட்டிற்கு இடதுபக்கமாக தொழுவத்தின் ஊடாக செல்கிறார் வைத்தியர் தாத்தா. நேராக பின்கட்டிற்கு அவர் செல்லவில்லை. கட்டுத்தரையின் கட்டுமானத்தைப் பிடித்துக்கொண்டு கனத்த மௌனத்தோடு தரையை வெறித்துக்கொண்டு நிற்கிறார் ஒரு கணம். அந்த ஒரு கணமும், நின்ற கோலத்தை நமக்கு காட்சிப்படுத்திய விதமுமே இக்கதையை அபூர்வமான ஒன்றாக துாக்கி நிறுத்துகிறது.
கார்ல் இப்படி எழுதுகிறார்.
”தாத்தா தொழுவத்திலேயே நின்றுகொண்டிருந்தார். அதன் எறவானக் கழியைப் பிடித்துக்கொண்டு தரையைப் பார்த்து குனிந்து நின்றிருந்தார். இரண்டு கைகளும் கூரையின் மூங்கில் கழியை வலுவாகப் பற்றியிருக்க, உடல் லேசாக அசைந்துகொண்டிருந்தது. வாய் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டிருந்தது.
அது தவம் செய்வது போல இருந்தது. ஏதோ ஒரு வாசத்தை உள்ளிழுத்துக்கொள்வதைப்போல. தன்னை எதற்குள்ளோ கரைத்துக்கொள்வது போல. அந்நேரம் தாத்தா ஒரு குழந்தையைப் போல தோன்றினார். சிரிப்பு வந்தது எனக்கு”
மொத்தக்கதையிலும் இத்தருணமே என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கண மௌனத்தில் வந்து வெடித்து கடந்து செல்லும் ஒரு பிரளயம். ஒரு யுக மாற்றம். அப்போது நான் வைத்தியர் தாத்தாவாக மாறினேன். என் முன்னால் வால்களில் அன்பு வழிய என்னை கண்டுகொண்டு உடலில் உற்சாகத்தை வெளிப்படுத்தும் மாடுகளைக் கண்டேன். பனிக்கட்டி போன்று கண்களில் உறைந்த அன்பினை என்மீது பாய்ச்சி மெலிதாக ம்மா என்று என் நலம் விசாரிக்கிறது ஒரு பசு. மூச்சுப்பிடிப்பால் அவதியுற்று கண்களில் நீர்வடிய நின்ற உழவுக்காளைக்கு என் வருகையால் ஒரு திடீர் உற்சாகம். எழுந்து நின்று வாலினை ஆட்டிக்கொண்டு சிறுநீர் கழிக்கிறது. தொழுவத்தில் இருந்த அத்தனை மாடுகளுக்கும் என்னை அடையாளம் தெரிகிறது. அவை காட்டும் அன்பால் என் உள்ளமெங்கும் பூரிப்பு.
விவசாயிக்கு பயிரெல்லாம் தன் குழந்தைகள். மாட்டு வைத்தியருக்கும் அவர் வைத்தியம் பார்க்கும் மாடுகள் குழந்தைகள் அன்றி வேறென்னவாக இருந்திருக்கக்கூடும். அதுவும் மனைவியும் குழந்தைகளும் அற்று வாழ நேர்ந்திருக்கும் ஒரு நடுத்தர வயது ஆணின் அகவுலகத்தைக் கருத்தில்கொண்டால். அப்படி இருந்திருக்கிறது மாடுகளோடு அவருக்குள்ள உறவு. ஜீவகாருண்யம் என்பது பொருள்சேர்க்கும் வணிக உத்தியால் உண்டாவதில்லை. பிற உயிர்களையும் தன்னைப்போல நினைக்கும் தோழமை உணர்வால் ஏற்படுவது. அன்றிருந்த மனிதர்களுக்கு அந்த நல்வாய்ப்பு இருந்திருக்கிறது. பயிர்வாடக்கண்டு தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் துயரம் வெறுமனே கடன்தொல்லை என்பதாக மட்டும் இருப்பதில்லை போலும்.
கதைசொல்லியின் தாத்தா உயிரோடு இருந்த காலத்தில் வீடு நிறைய மாடுகள். குலுங்கும் மணிநாதச்சிதறல்களும், கார்வை மிகும் மூச்சுக்காற்றொலிகளும், சிறுநீரும் சாணமும் கழியும் ஓசைகளும் என மொத்தவீடும் மாடுகளின் இருப்பால் நிறைந்திருக்கும். தாத்தாவோடு போயிற்று அக்காலம். கதைசொல்லியின் அப்பாவிற்கு மாடு வளர்ப்பின் மீது ஈர்ப்பில்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அவுரு எங்க இங்க வந்தாரு? என்று அப்பா கேட்கும் கேள்வியில் ஒளிந்துள்ளது மாடுகள் மீது அவருக்கிருந்த விலக்கம்.
மறுநாள் வைத்தியர் தாத்தாவைத் தேடிப்போய்ப் பார்க்க கிளம்புகிறான் கதைசொல்லி. கதைசொல்லி பிழைப்பிற்காக வெளிநாட்டிற்குச் சென்றவன். பதினைந்தாண்டுப் பழமையான நினைவுகள்தான் வைத்தியா் தாத்தா குறித்து அவனுக்குள் இருப்பது. வைத்தியர் தாத்தாவி்ன் பெயரைக்கூட அவன் தெரிந்திருக்கவில்லை.
வைத்தியர் தாத்தாவின் குடிசை வீடு, யாருமற்ற தனிமை, குடிசையைச் சுற்றிக்கிடக்கும் ஏகாந்தம் இவையெல்லாம் கதைசொல்லியைப் பாதிப்பதைப் போல நம் இதயத்தையும் கனத்துப்போகச்செய்கிறது. இறுகிய உள்ளத்தோடுதான் கதையைத் தொடர்ந்து வாசிக்கிறோம். ஆனால் நேரில் பிரத்யட்சமாகும் தாத்தாவின் இயல்பு வேறாக இருக்கிறது. தன்னைத்தேடி வந்திருக்கும் கதைசொல்லியை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் அவரால் வரவேற்க முடிகிறது. கதைசொல்லியின் தாத்தாவோடு அவருக்கு உள்ள பழைய நினைவுகளை கிளர்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார். குறிப்பாக விவசாயத்தை மாடுகளை கைவிட்ட கதைசொல்லியின் அப்பாவின் மீது அவருக்கு எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை. நிறைவான வாழ்வினை வாழ்ந்து களிப்பவரைப்போன்றுதான் வைத்தியர் தாத்தா இருக்கிறார். அகம் கனிந்து வாழ வீடு நிறையப் பொருள்கள் கட்டாயமில்லை என்பதையும் தாத்தா நமக்குச் சொல்லிக்காட்டுகிறார். ஆத்ம நிறைவிற்காக செய்யப்படும் செயல்கள் அளிக்கும் அனுபூதி.
பொதுவாக விவசாய அழிவிற்கு பெரும்பாலும் அரசியல்வாதிகளையும் அரசூழியர்களையும் சுட்டுவோம். உண்மையில் இன்று நிகழும் அத்தனை அவலங்களுக்கும் முதல் ஆதாரமாக இருப்பது வணிகர்கள்தான். குற்றம் சாட்டப்பட வேண்டிய மக்கள்நல விரோதிகளில் முதலிடம் பெருமுதலாளிகளுக்கே உரியது. விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் ஈட்டும் வியாபாரிகளின் பேராசையே நியாயமாக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார வளத்தை இல்லாமல் ஆக்குவது.
முன்பு ஒரு காலத்தில் மதவாதிகளும் அவர்களின் சொல்கேட்டு ஆட்சிபுரிந்த அரசியல்வாதிகளும் இருந்திருக்கலாம். இன்று ஆட்சியாளர்களை தேர்வுசெய்வதில் இருந்து அரசின் கொள்கை முடிவுகளை ஒப்புதல் செய்வது வரை பெருமுதலாளிகளின் பங்கிருக்கிறது என்பது நம் அனைவரும் அறிந்ததே. ஆனால் பழி மட்டும் அவர்களைச் சேர்வதில்லை.
கதைசொல்லி கிளம்பும்போது உணர்ச்சி பொங்க தாத்தாவிடம் கன்றுக்குட்டி வாங்கி வளர்க்கலாமா என்று சிறுவனைப்போல கேட்கிறான். நீங்களே வாங்கி என் வீட்டில் வந்து தங்கி வளர்க்கலாமே என்று ஆலோசனையும் வழங்குகிறான். ஆனால் வைத்தியர் தாத்தாவிற்கு அதெல்லாம் நடைமுறைச்சாத்தியம் அற்றது என்பது புரிந்திருக்கிறது. மேலும் தனக்கு வைத்தியம்தான் பார்க்கமுடியும். மாடு வளர்க்க தெரியாது என்கிறார். விளிம்பில் பட்டு நீர்வளையங்களை தோற்றுவித்து ஒருகாலகட்டம் மீட்டெடுக்க இயலாத ஆழம்நோக்கிச்செல்லும் பிம்பங்களை வரிகளில் காட்டிவிடுகிறார் கார்ல் மார்க்ஸ்.