ஒளியால் ஆன உலகம் -ஜெயமோகன் படைப்புலகில் சிறு பயணம்

நெல்லை புத்தகத் திருவிழா 2022 – சிறப்புக் கட்டுரை 2

இருபதாண்டுகள் இருக்கும் ஜெயமோகனை வாசிக்க ஆரம்பித்து. இரண்டாயிரத்தை ஒட்டி. நான் அப்போது சுந்தர ராமசாமியின் தீவிர வாசகன். மாவட்ட மைய நுாலகமொன்றில் அவரின் விரிவும் ஆழமும் தேடி கட்டுரைத் தொகுப்பினை குறிப்புதவிப் பிரிவில் அமர்ந்து முழுக்க கற்றேன். அந்நுால் நவீன தமிழ் இலக்கியத்தில் நிலைகொள்ள பெரும் வழிகாட்டுதலாக அமைந்தது. வாசகனாக என்னிடம் காணப்பட்ட பல மயக்கங்களில் இருந்து மீட்டது. எது இலக்கியம் என்பதை சுட்டிக்காட்டிற்று. பிற்பாடு படிக்கக் கிடைத்த ஜெ.வின் நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் என்கிற கட்டுரைத் தொகுப்பு ஒட்டுமொத்தமாக தமிழ் புனைகதை உலகின் பெரும் சித்திரத்தை வரைந்து காட்டிற்று. இவ்விரண்டு நுாற்களையும் ஆரம்ப வாசகன் தனது கையேடாகக் கொள்ளலாம்.

சுந்தர ராமசாமியின் வழியாகவே ஜெயமோகனைக் கேள்விப்படுகிறேன். பாலகுமாரன் வழியாக சுஜாதாவையும், சுந்தர ராமசாமியையும். அந்நாட்களில்  ஜெ.வின் நுாற்கள் அதிகம் வெளிவந்திருக்க வில்லை. ரப்பரும், திசைகளின் நடுவே சிறுகதைத் தொகுப்பும் அரசு நுாலகங்களில் இருந்தன. திசைகளின் நடுவே அப்போது நான் கொண்டாடிக் கொண்டிருந்த வண்ணதாசன், வண்ணநிலவன், அசோகமித்திரன், சுப்ரபாரதிமணியன் ஆகியோரின் சிறுகதைகளில் இருந்து தனித்து விளங்கிக்கொள்ள முடியாத திகைப்பாக நின்றது. அத்தொகுப்பில் நதி போன்ற மிக எளிய பாவனை கொண்டிருக்கும் ஆழமான கதைகளும், திசைகளின் நடுவே போன்ற இந்திய தத்துவத்தை பகைப்புலமாக கொண்ட தத்துவச் சாரம் நிறைந்த கதையும் , ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை கதைக்கருவாகக் கொண்ட ஜகன்மித்யை கதையும், தொல்குடி கதைசொல்லும்  மரபில் உள்ள படுகை கதையும், இருக்கிறது. அவை ஆரம்ப வாசகனான எனக்களித்த சவால் முக்கியமானது. அவையெல்லாம் நல்ல சிறுகதைகள் தானா என்ற தீரா ஐயம். எப்படியோ வாசித்து முடித்தேன். கையில் கிடைத்ததை எல்லாம் வாசித்தே ஆகவேண்டும் என்ற தீர்மானம் கொண்டிருந்தேன். மாடன்மோட்சம் கதை ஒன்றே நீண்டநாள்கள் நினைவில் தங்கியது.

சமீபத்தில் அத்தொகுப்பை மறுவாசிப்பு செய்தபோதுதான் தமிழில் வெளியான முதல் சிறுகதைத் தொகுப்பு வரிசையில் அது மிக முக்கியமானது என்ற எண்ணம் வலுப்பெற்றது. அசோகமித்திரனின் வாழ்விலே ஒருமுறை தொகுப்பிற்கு பிறகு என்னை அதிகம் ஈர்த்த முதல் தொகுப்பு திசைகளின் நடுவே. புதுமைப்பித்தனின் அகலிகை கதைக்கு இணையான தகுதியும் வீச்சும் கொண்ட கதை திசைகளின் நடுவே. அக்கதை வெளியான காலச்சுவடு இதழ் (1991 ஆண்டுமலர்) இன்னமும் என்னிடம் இருக்கிறது. சுந்தர ராமசாமி வெளியிட்ட கடைசி காலச்சுவடு இதழும் அதுதான்.

அதிகம் வாசிக்கக் கிடைக்காமையே அந்நாட்களில் பெரும் தடை. முக்கியமான படைப்பாளிகள் என நான் அறிந்திருந்த அனைவரின் அனைத்துப்படைப்புகளையும் முழுக்க வாசிக்கும் திட்டம். வாண்ணதாசன், வண்ணநிலவன் சிறுகதைகளை பெருந்தொகுப்பாக சந்தியா வெளியிட்டிருந்தது. சா.கந்தசாமி, அசோகமித்திரன், சுப்ரபாரதிமணியன், சி.ஆர்.ரவீந்திரன், வண்ணநிவலன், வண்ணதாசன், நாஞ்சில் நாடன் என பட்டியல் இட்டு தேடியலைந்தேன். அதிகமும் நுாலகம் சார்ந்தே வாசிப்பு.

கரூரில் இருந்த வரை இரண்டு நுாலங்களை நான் பயன்படுத்திக்கொண்டேன். தீவிர வாசகனாக எட்டாண்டுகள் நீடித்தன.  மிகத்தீவிரமாக வாசித்துத்தள்ளிய பருவகாலமும் அதுதான். குளத்துப்பாளையத்தில் இருக்கும் வெங்கமேடு கிளை நுாலகம் அந்த விதத்தில் என் போதிமரம். அங்கிருந்த தற்காலிக நுாலகர் என் பசியைப் புரிந்துகொண்டார். அவருக்கும் சிற்றிதழ் ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தது. வெகுஜன இதழ்களைத் தாண்டி வாசிக்கும் ஒரு வாசகனை அவர் உற்சாகப்படுத்தினார். தடித்தடியான ரெபரன்ஸ் நுாற்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று வாசிக்க அனுமதித்தார். பின்தொடரும் நிழலின் குரல், தகழியின் கயிறு, பைரப்பாவின் பருவம், எம்.டி.வாசுதேவன் நாயரின் காலம் போன்றவை அப்போது வாசிக்க வாய்த்தவை. இன்றும் நினைவில் நிற்பவை.

ஜெயமோகனின் நாவல்களில் காடு நாவலே எனக்கு மிகப்பிரியமானது. கதாப் பாத்திரங்களில் ரப்பர் நாவலில் வரும் கண்டன் காணி. ஏனெனில் காடு  என் அந்தரங்க உலகத்திற்கு மிக நெருக்கமானது. கிரிதரன் புண்ணியத்திற்கு இணையாகவே அதில் வரும் மாமியும் ஆயுள் முழுக்க என்னை மீட்டிக்கொண்டே இருப்பார்கள். ஆண்டிற்கு ஒருமுறை அந்நாவலை ஒரு மதச் சடங்கினைப் போல மறுவாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஜெ.விடம் என்னைக் கொண்டு சேர்த்த நாவல் பின்தொடரும் நிழலின் குரல். அந்நாவல் வாசித்த காலங்களில்  என் வாழ்க்கை சார்ந்து பல முடிவுகளை எடுத்திருந்தேன். வீரபத்ர பிள்ளையும்.கெ.கெ.எம்.மும் நானாக இருந்தேன். வீரபத்திர பிள்ளையின் முன்கதைச் சுருக்கம் என்னுடையதாகவும் இருந்தது. அந்நாட்களில் அன்றாடப் பழக்கமாக இருந்த கைப்பழக்கம் முதல் நாகம்மையின் சிறுநீர் சீற்ற ஒலியில் மீட்பிற்கான ஒளி நாடிய அருணாசலத்தின் போத அழிவு வரை நிகர்வாழ்வாக அமைந்த நாவல். அரசியல் கட்சிகள், இயக்கங்கள், புரட்சிக்கான அறைகூவல்கள் போன்ற வாழ்நாள் சீக்குகளில் இருந்து என்னைத் தற்காத்தது. பல நுாறு பக்கங்கள் கொண்டிருந்த மூலதனத்தை தள்ளிவைக்க துாண்டுதலாக இருந்தது. அதற்கு ஓஷோவின் சொற்களும் பிறிதொரு காரணம்.

பின்தொடரும் நிழலின் குரல் வாசித்த அந்நாட்களை நினைக்கும்போது மனதிலே உவகையும் நன்றிக்கடனும் ததும்புகிறது. பதின்பருவத்தில் இருக்கின்ற ஒவ்வொரு இளைஞனும் வாசிக்க வேண்டிய நாவல் அது. ஜெ. அந்நாவலை இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு, அக்களத்தை முன்மாதிரியாகக் கொண்டு எழுதிய நாவல் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அந்நாவல் வன்முறையை மீட்பிற்கான வழியாக நம்பிச் செயல்படும் அத்தனை புரட்சிகர இயக்கங்கள் மீதும் காத்திரமான கேள்விகளை எழுப்புகிறது. இருபுறமும் கூடிய வாத, பிரதிவாதங்களை முன்வைக்கிறது. ஆயிரக்கணக்கான உயிர்களை புரட்சியின் பெயரால் பலிகேட்கும் தார்மீக உரிமையை பரிசீலனைக்கு உட்படுத்துகிறது. ஓஷோவின் “நான் உனக்குச் சொல்கிறேன்“ நுாலைப் போல இயேசுவை என்னிடம் மிக நெருக்கமாக திறந்து காட்டிய புனைவுப் பகுதியும் இந்நாவலின் தனித்துவம்.

வீரபத்ர பிள்ளைக்கும் கெ.கெ.எம்.மிற்குமான உறவு தமிழ்ப் புனைவு வெளியில் அபூர்வ பதிவு. அறிந்து கொள்ளும் தேட்டத்தால் தன் வாழ்வை முழுதாக அர்ப்பணிக்கும் ஒவ்வொருவரின் பிரதிநிதியாக வீர பத்ரபிள்ளை இருக்கிறார். வாசிப்பவன் எழுதுபவன் அடையக் கூடிய சீரழிவுகளை வீர பத்ரபிள்ளையிடம் காணலாம். அவ்விதத்தில் அவர் ஓர் எச்சரிக்கை. மிக மோசமான முன்மாதிரி. நானும் கூட வீர பத்ரபிள்ளையின் ராஜபாட்டையில்தான் சென்று கொண்டிருந்தேன். அவரின் அறிமுகம் என்னை நல்வழிப்படுத்திற்று.

மற்றொரு கனவு ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்த பொன்னுலகம் படைப்பது. முதிரா இளமைக்கே உரிய நோய். விரல்நகங்களைப் போல புற உலகத்தையும் மிக எளிதாக வெட்டிச் சீர்செய்துவிடலாம் என்கிற பகல்கனவு. கெ.கெ.எம். அக்கனவை இல்லாமல் ஆக்கினார். கெ.கெ.எம். போன்று வாழ விழைவது இன்றும் வரவேற்பிற்கு உரியதே. இலட்சியவாதம் ஒருவரை கொண்டு சேர்க்கும் இடம் எதுவோ அதையே அவரும் அடைந்தார். நிறுவன மயமாகி விட்ட லட்சியவாத அமைப்புகளுக்கும் லட்சிய வாதிகளான தனி மனிதர்களுக்கும் இடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் இடைவிடாத சமரின் மாதிரி களப்பலி அவர்.

அந்நாவல் கொடுத்த பறத்தலின் பரவசத்தினால் நிலைகொள்ள முடியாத தத்தளிப்பு. அப்புனைவினை எழுதிய விரல்களை நேரில் கண்டு நன்றி சொல்லியே தீரவேண்டும் என்ற கொதிப்பு. நானும் அறைவாசி சிவாவும் ஜெ.வைப் பார்க்க கன்னியாகுமரிக்கு கிளம்பினோம். அவர் அப்போது தக்கலையில் வேலையில் இருந்தார்.

அதன்பிறகு காடு நாவல் வாசித்து அந்நாவலின் நிலத்தை நேரில் காண வேண்டும் என்ற ஆவல் உந்த ஒரு நாள் முழுக்க அருமனை, குலசேகரம், களியக்காவிளை, என சுற்றித்திரிந்தேன். அருமனை நகரம் அளித்த ஏமாற்றம் கொஞ்சமல்ல. காடு நாவலுக்கும் இன்றைய அருமனைக்கும் தொடர்பேதும் தென்படவில்லை. பத்துமணிக்கு மேல் அங்கே தங்க முடியாது என்பதால் கடைசிப் பஸ்சில் ஏறி நாகர்கோவில் திரும்பினேன். அப்போதுதான் திற்பரப்பு, திருவற்றாறு என பெருமாள் கோவில்களையும் கண்டு வர நேரிட்டது

ஜெயமோகனின் வருகை நவீன தமிழ் இலக்கியத்தில் பல புதிய திருப்பங்களை நிகழ்த்தியிருக்கிறது. தமிழ் நாவல்களின் இன்றைய வளர்சிதை மாற்றங்களுக்கு ஜெ. நாவல்கள் முக்கியக் காரணம். முதல் நாவலான ரப்பரில் இருந்தே வலுவான நாவல் பிரக்ஞையை அவர் கொண்டிருப்பதைக் காணலாம். ராட்சச குழந்தை ஒன்று தமிழில் பிறந்திருக்கிறது என்று அவரின் வருகையை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொண்டவர் எம்.வேதசகாயகுமார்.

ஜெ.வின் நாவல்களை ஒரு வசதிக்காக மூன்று பிரிவுகளில் தொகுக்கலாம். முதல் வகை மெல்லிய நாவல்கள். இவை பக்கங்களின் எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்டவை. ரப்பர், கன்னியாகுமரி, ஏழாம் உலகம், உலோகம், அனல்காற்று, இரவு, கன்னிநிலம் போன்றவை.  பெரிய நாவல்கள்  இரண்டாம் வகை. விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, வெள்ளையானை முதலியவை. செவ்வியல் நாவல்கள் என்று கொற்றவை மற்றும் வெண்முரசு ஆகியவற்றைக் கருதலாம். தமிழில் முன்மாதிரி அற்றவை இவை.

மெல்லிய நாவல்களில் முதலிடத்தில் வைக்க வேண்டிய நாவல் ரப்பர். நேர்கோட்டுப் பாணியில் கதைசொல்லியதால் நாவலுக்கான உள்விரிவுகளைக் கொண்டிருக்கவில்லை என்றாலும் தன்னளவில் தனித்துவமான ஆக்கம் ஏழாம் உலகம்.  தமிழில் ஏழாம் உலகம் பேசியிருக்கும் கதைப்புலம் குறித்து அதுவரை எந்தப்படைப்பாளியும் எழுதியிருக்கவில்லை. உருப்படிகள் என்ற கோணமே நம் கவனத்திற்கு ஏழாம் உலகம் வெளிவரும்வரை உணர்த்தப்பட்டதில்லை. பேசுபொருள் சார்ந்து ஏழாம் உலகம் தவிர்க்க இயலாதது. வாசிக்க கிடைத்த வரையில் மும்பையில் முடமாக்கப்பட்ட பிச்சைக்காரர்களை வைத்து பிழைப்பு நடத்தும் தாதா உலகப் பின்னணியில் விலாஸ் சாரங்கின்  கதைத்தொகுப்பான கூண்டுக்குள் பெண்கள் தொகுப்பில் ஒரு கதை உள்ளது. ரப்பர் மற்றும் ஏழாம் உலகத்தைத் தொடர்ந்து மதிப்பிட வேண்டிய நாவல்கள் கன்னியாகுமரியும், அனல்காற்றும். இரண்டும் பெண்களின் அக உலகத்தை, அவை கொள்ளும் நெருக்கடிகளை உருப்பெருக்கிக் காட்டுகின்றன. கன்னியாகுமரி பெண்மையின் விஸ்வரூபத்தரிசனம் என்றால் அனல்காற்று யட்சியின் கோரப்பசியைக் கொண்டிருக்கிறது.

ரப்பர் 1990 –ல் வெளியான நாவல். 90 களின் தமிழ் நாவல்களுக்கு இத்தனை உள்விரிவுகள் இருக்கவில்லை. நவீனத்துவ நாவல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலம். ஜெ.வே தன்னுடைய நாவல் என்கிற கட்டுரைத் தொகுப்பில் சொல்லியிருப்பதைப் போல அதற்கு முன்பு வரை க.நா.சு.வின் பொய்த்தேவும், சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையும் மட்டுமே நாவலாக கருதும் தகுதிகளைக் கொண்டிருந்தன. நீள்கதைகளும், தொடர்கதைகளும், குறுநாவல்களும் நாவல்களாக கருதப்பட்டிருந்தன.

உலக மற்றும் இந்திய அளவில் நாவல்களாக கொண்டாடப்பட்டவற்றோடு ஒப்பிட்டால் தமிழில் உடல் சூம்பிய சவலைப்பிள்ளைகளைப் போல நாவல்கள் படைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன. ஒருசில விதிவிலக்குகளைத் தவிர்த்தால்.

தமிழில் சிறந்த நாவல்களே இல்லை என்ற குரலை ஜெ.விற்கு முன்பே எழுப்பியவராக விமர்சகர் சி.மோகன் உள்ளார். அவர் ஜெ.வைப் போல இந்திய மற்றும் உலக நாவல்களோடு தமிழ் நாவல்களை ஒப்பிட்டு தன் தரப்பினை விரிவாக நிறுவியிருக்கவில்லை. நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும் என்ற புதுயுகம் கட்டுரையில் சி.மோகன் 1987-ல்  தமிழ் நாவல்களின் போதாமைகள் குறித்து அக்கறையோடு எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் மிகச் சிறந்த நாவல்கள் இல்லை என்றும் சிறந்த நாவல்கள் என மோக முள்ளையும், ஜே.ஜே.சில குறிப்புகளையும், புயலிலே ஒரு தோணியையும் சொல்லியிருக்கிறார். ஜெ.நாவல் என்கிற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட ஆண்டு 1992.

ரப்பர் முதல் நாவலுக்குரிய சில ஒத்திசைவுக் குலைவுகள் இருப்பினும் தமிழின் மிகச்சிறந்த நாவல்களின் ஒன்று. பொய்த்தேவுவில் சோமு முதலியின் மொத்த வாழ்வும் சொல்லப்பட்டிருப்பதைப் போன்று, ரப்பரில் பொன்னுப்பெருவட்டரின் இறப்புவரையிலான வாழ்வு பெண்டுல ஓட்டமாக விவரிக்கப்பட்டுள்ளது. திரட்சியாக நாவல் அளிக்கும் சித்திரம். பெரும் முயற்சியோடு  கட்டி எழுப்பிய சாம்ராஜ்ஜியம் இரண்டு தலைமுறைகளுக்கு கூட நிலைத்து நிற்கவில்லை என்ற பரிதாபந்தான். மொத்த வாழ்வையும் பிணையம் வைத்து உண்டாக்கியிருந்த கோட்டைகள் தன் கண்முன்னே சரிவதை பொன்னுப் பெருவட்டர் எதிர்கொள்கிறார். அதுவும் மரணம் அவரை விழத்தட்டும் கடைசி நாட்களில்.

நீங்கள் மனந்திரும்பி குழந்தைகளைப் போல ஆகாவிட்டால் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்ற வேதாகமத்தின் வரிகள் இந்நாவலின் தரிசனமாக உள்ளது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையலாம் விண்ணரசில் செல்வர்கள் நுழைவது கடினம் என்பதையும் கூட்டாக எண்ணிக்கொள்ளலாம். எதிரிடையாக தன்னியல்பிலேயே ஒரு குழந்தையைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார் கண்டன் காணி, தாவரங்களைப் போன்ற இருப்பு. ஆதிவாசியின் வாழ்க்கை என்று ஜெ. அவரை அடையாளப்படுத்துகிறார். அடுத்த தலைமுறைகளில் அவரின் வாரிசுகள் தத்தளிப்பற்ற வாழ்க்கையில் நீரோட்டத்தில் மிதந்து செல்லும் புணை போல மிதந்து செல்கிறார்கள். குடும்ப உறவினர்களின் அன்பும் அரவணைப்பும் அவருக்கு கிடைக்கிறது. அவர்கள்  அவரை குழந்தையைப் போல பாதுகாத்துக் கொள்கிறார்கள். பேத்திகள் அவரின் முன் கண்ணீர்விட்டு அழுது தங்கள் துக்கத்தை இறக்கி வைக்க ஆறுதல் நாடி வருகிறார்கள். கண்டன் காணியின் இடம் கனிந்த லௌகீக வாதிக்கு உரியது. எதிர்பார்ப்புகள் இன்றி அவர் அள்ளி வழங்கிய அன்பு பன்மடங்காகப் பெருகி அவரிடம் திரும்ப வருகிறது.

அ புனைவாக எழுதியிருக்கும் பல்லாயிரம் பக்கங்களை தவிர்த்தால் படைப்பாக்கங்கள் என்பவை ஒரு எல்லைக்கு உட்பட்டவையே. அவை பிரத்யேகமான ஒரு விளிம்பிற்குள் அடங்குபவை. துளிக்குள் விழுந்த கடல் என்ற படிமத்திற்கு பொருத்தமானது. கடலின் முடிவற்ற பிரமாண்டத்தையும் அடி காண முடியாத ஆழங்களையும் கொண்டிருப்பது.  வெண்முரசினை தராசின் ஒரு தட்டிலும் பிற அத்தனை நாவல்களையும் எதிர்தட்டிலும் வைக்கலாம். வெண்முரசு தன்னளவில் தனித்த இருபத்தைந்து நாவல்களாக உருப்பெற்றுள்ளது.

சாவின் வருகைக்காக காத்திருக்கும் பொன்னுப்பெருவட்டரின் அக உலகச் சஞ்சலங்கள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. பெரும்செல்வத்தை கட்டிச் சேர்த்து, பேரும் புகழையும் உண்டாக்கியவரின் இறுதிக்காலங்கள் நிம்மதியின்மை கொண்டு ரணப்படுத்துகின்றன. குற்றவுணர்வும், வெறுப்பும் சலிப்பும் நிறைந்த அந்திகள். பெரிய ஆளுமையின் சீர்குலைந்த இருப்பு நம் நம்பிக்கையை கலைத்து அடுக்குகிறது. பணமும் மிதம் மிஞ்சிய செல்வமும் கொண்டு வந்து நிறுத்தும் இடம் இதுதானா என்று விக்கித்துப் போகச் செய்கிறது.

காடு நாவலில் அடித்தட்டு மக்களின் அசுர வளர்ச்சி பகைப்புலமாக வந்து செல்வதைப் போல ரப்பரில் நாடார் இனக்குழுவின் பூதாகர வளர்ச்சி சொல்லப்பட்டுள்ளது. ஒரு காலகட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு புனைவு வெளிக்குள் புதைந்து கிடக்கிறது. பொன்னுப் பெருவட்டரே ஒரு இனக்குழுச் சண்டையின் காரணமாகத்தான் நிராதவராக வேறொரு நிலத்திற்கு துரத்தப்படுகிறார். அந்நிய நிலத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து தன் வாழ்வை ஆரம்பிக்கிறார். காடு திருத்தி தோட்டங்கள் உண்டாக்குவதில் அவரின் ஆயுள் கரைகிறது. ரப்பர் மரங்களின் வருகை அப்பிரதேசத்தையே செல்வம் கொழிக்கும் பரப்பாக மாற்றுகிறது. அதுவரை மேம்பட்ட நிலையில் வாழ்ந்திருந்த நாயர் இனக்குழுவின் வீழ்ச்சியும் அதன் சிக்கல்களும் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது. குளம்கோரி போன்ற ஒரு கதாப்பாத்திரம் நம் கற்பனைக்கும் மீறியது. அத்தனை துர்குணங்களும் கொண்டிருந்தாலும் அவனும் தரவாட்டு நாயர் என்கிற பெருமையோடு வாழ்பவன். தங்கையின் இறப்பிற்கும் தரகுத்தொகை பெற்றுவிடும் சாமர்த்தியம் கொண்டிருக்கிறான். அன்னையின் முன் அவன் அடையும் மாற்றம் மரபின் வலுவினைச் சொல்கிறது.

நாவலின் முடிவு சுற்றுச் சூழல் சீர்கேடு குறித்த எச்சரிக்கையோடு நிகழ்கிறது. தற்கொலை முடிவினை நோக்கி செல்லும் கதாநாயகன் குளித்துக் களிக்கும் குழந்தைகளைக் கண்டு தன்மீட்சியை அடைகிறான். பொன்னுப்பெருவட்டர், கண்டன்காணி, குளம்கோரி என்ற கதாப்பாத்திரங்கள் ரப்பர் நாவலை என்றுமே மறந்துவிடாத நிலைக்கு வாசகனில் பாதிப்பை உண்டாக்கி விடுகின்றனர்.

சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகளில் ஒரு வர்ணனை உண்டு. தொலைவில் கரும்புள்ளியாக புலப்படும் ஒன்று நெருங்கி வர வர பெரும் உருவெடுத்து யானையாக வெளிப்படும் . அதன் எதிர் வடிவாக ராட்சச யானை முன்னே செல்லச் செல்ல மீண்டும் கரும்புள்ளியாக சிறுத்துப்போகும் மாயமும்.

சமகாலத்தில் நேற்றைய பெரும் படைப்பாளிகள் எனக் கருதப்பட்டோர் சென்று மறையும் யானையின் உருவென சிறுத்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள். காலத்தின் களிம்பு படிய அவர்களின் சொற்களில் வெக்கை குறைந்து கொண்டிருக்கிறது. சிலரை ஒரு பக்கம் கூட உயிர்ப்பித்து உரையாடச் செய்ய இயலாமல் போகிறது. இருந்த தடமின்றி காற்றில் மறைந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஆனால் புதுமைப்பித்தன், பிரமிள் போன்றோர் இன்று நம்மை நோக்கி ராட்சச உருக்கொண்டு பாய்ந்து வருகிறார்கள்.

இப்பகைப்புலத்தில் ஜெ.வின் இடத்தை நாம் மதிப்பிட வேண்டி உள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தில் ஜெ.வின் படைப்புகளுக்கு இருக்கும் இடம் என்ன? புள்ளியாகத் தெரிந்து நெருங்கி வரும் போது விஸ்வரூபம் கொள்ளும் மதம் கொண்ட களிறா? அல்லது காலமென்னும் நிலத்தில் முன் சென்று  வெறும் கரும் புள்ளியென தேய்ந்து மறையும் பூதாகரமா?

ஜெ.வின் படைப்புலகத்தை அறம் சிறுகதைத் தொகுப்பிற்கு முன், பின் என்று இரண்டாகப் பகுப்பது அவரை மதிப்பிட உதவும் கருவிகளில் ஒன்று. அறம் ஒரு விதத்தில் நீதிக்கதைகளின் தொகுப்பு. தால்ஸ்தாய் கடைசிக்காலத்தில் எழுதிய சிறுகதைகளுக்கு ஒப்பாகச் சொல்லலாம். அதன் பின்னர் அவரெழுதிய சிறுகதைகள் எல்லாம் அந்தக் கோலத்தை தன் இயல்பாக வரித்துக்கொண்டன.  அவரின் நீண்டகால வாசகனாக அறம் கதைகளின் சொல் முறை, எழுத்தின் செல் திசை, கட்டற்ற நெகிழ்ச்சி, பித்தேறிய அதன் உச்சபட்ச குரல் என என்னை திகைக்கச் செய்தன. திசைகளின் நடுவே, ஆயிரங்கால் மண்டபம், மண், கூந்தல் என அதற்கு முன்னர் நான் வாசித்திருந்த சிறுகதைத் தொகுப்புகளில் இருந்து அறத்தில் ஜெ.வின் எழுத்து முறை முற்றாக தன்னை உருமாற்றிக் கொண்டிருந்தது. சிலர் புறப்பாட்டிற்கு பின்னர் என்று வகுப்பதைக் கேட்டிருக்கிறேன். வடிவப் பிரக்ஞை, துல்லியம் கூடிய படிமங்கள், வீணையின் மீட்டலைப்போல நீண்ட கார்வை  கொண்டிருக்கும் சொற்களின் அதிர்வு, பாவனைகள் உறைந்த சொற் முத்திரைகள் என ஜெ.க்கே உரித்த படைப்பு மொழியை அதற்கு பின்னர் சிறுகதைகளில் இழக்க நேரிட்டது. சிறுகதைகளில் மட்டும்.

ஆனால் அறம் ஜெ.வினை நோக்கி ஆயிரக்கணக்கான இளம் வாசக மனங்கள் திரும்பி வர காரணமாக இருந்தது. அற உணர்வின்மை என்ற பெருஞ்சிலைத்துவத்தில் ஆழ்ந்த உறக்கம் கொண்டிருந்த சமூக மனத்தில் மோதிய விசை மிகுந்த கல் அத்தொகுப்பு. லட்சியவாதத்தின் இருப்பை வலியுறுத்தியது. அதே காலகட்டத்தில்தான் ஜெ.வின் படைப்பியக்கத்திலும் எழுத்தை இயக்கமாக மாற்றும் களப்பணி அதிகரித்தது.

தங்களை ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதிகளாகக் கருதுவோர், ஓர் இனக்குழுவின் நீட்சியாக எண்ணிக் கொள்வோர், படைப்பியக்கத்தின் சவால்களை எதிர்கொள்ளும் திறன் அற்றோர், என்றுமுள புலமைக்காய்ச்சல் மிகுந்தோர் என ஒரு சிலரால் அவர் அவதுாறுகள் செய்யப்பட்டு வருகிறார். அவரின் நாற்பதாண்டுக் கால தொடர்ந்த படைப்பியக்கச் செயல்பாடுகளின் மீது எதிர்மறையான மதிப்பீடுகள் வாரி இறைக்கப்படுகின்றன.

இலக்கியத்தை மெய் காண் முறையாக, நிகர் வாழ்வாக, தன் மீட்சியாக கருதுபவர்களுக்கு அவர்களின் “உன்னதக்” கொந்தளிப்பைக் காண விளங்கிக் கொள்ள முடியாத சன்னதமாக தோன்றுகிறது. இலக்கியம் என்கிற வன ராஜாவை வீதிகள் தோறும் அழைத்து வந்து யாசிக்கும் பாகன்களைப் போல என்றும் எண்ணிக்கொள்கிறேன். மானிட விடுதலை என்னும் பெரும்நோய்க்கு மருந்தாகும் தகுதியுள்ள ஔடதம் ஒன்றை வர்க்க/இனக்குழு விடுதலை என்னும் ஜலதோசத்திற்கு மட்டுமே உரித்தாக பாவிக்கிறார்களோ என்ற வருத்தமும். (என்ன ஜலதோசமா? )

ஆக ஒட்டுமொத்தமாக ஜெ.வின் நாற்பதாண்டுக்கால படைப்பியக்கத்தில் என்னை ஈர்த்தவை என சிலவற்றைப் பருந்துப் பார்வையில் மதிப்பிடுகிறேன்.

  1. நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதி, புதுமைப்பித்தன், பிரமிள் என்ற சிகரங்களில் ஒருவர் ஜெ. அவரின் இடைவிடாத எழுத்தும், வாசக மனங்களின் ஊடாக அவர் மேற்கொண்ட பெரும் உரையாடலும் அத்தகுதியை அவருக்குத் தேடித் தந்திருக்கின்றன.
  2. எழுத்தை மண்டலம் என்ற கணக்கில் மாத்திரைகளைப் போல பாவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே, சுவாசம் போன்று தன்னியல்பாக நடக்க வேண்டியதாக மாற்றி, அதில் பெரும் சாதனைகளை உண்டாக்கி, பின் வருகிறவர்களுக்கு அறைகூவலாக விட்டுச்செல்கிறார்.
  3. லட்சியவாதம் என்கிற கேலிக்கூத்தை தொடர்ந்து முன் வைத்துக் கொண்டிருக்கும் அழிந்துவரும் அபூர்வ பிறவிகளில் ஒருவராக இருக்கிறார். அவர் காந்தியர் அல்ல. ஆனால் காந்தியை தமிழ் மனத்தில் ஐயங்கள் போக்கி நிலைக்கச் செய்திருக்கிறார். காந்தியை மீண்டும் நான் கண்டடைய ஜெ.வே காரணம்.
  4. இந்திய ஞான மரபினை மீண்டும் இங்கே மீட்டெடுத்திருக்கிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்த ஞானமரபின் கண்ணியை கொண்டு சேர்த்திருக்கிறார். இது இன்றைய காலகட்டத்தின் அவசியமான பெரும்பணி. எழுதவோ, விளக்கவோ படைப்பூக்கம் கொண்டவர்கள் அரிது.

5.ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு என்கிற சிறுநுால் அவரை வேறொரு விதத்தில் என்னை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. நவீன தமிழ் இலக்கியத்தின் பிள்ளைக் கனி அமுதை எழுத்தில் பகிர்ந்தவர். நவீனத்துவர்களிடம் இல்லாத ஒரு புதுமை இது. ஜெ. இந்நோக்கில் முன்னோடியாக பொன்மணல் எழுதிய எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களை விதந்தோதி இருக்கிறார். குடும்பம் என்கிற புராதன அமைப்பின் சிறப்பியல்புகளை வலியுறுத்தும் நவீன குடிப்பாணனாக இருக்கிறார். நவீன நக்கீரர் என்று அவரை அழைப்பது வேறொரு காரணம் கொண்டு.

ஜெயமோகன் எழுதியிருக்கும் அபுனைவு எழுத்துக்களில் நிகழ்தல் – அனுபவக் குறிப்புகள் என்ற கட்டுரைத் தொகுப்பு மிக முக்கியமானது. அ. முத்துலிங்கத்தின் அங்கே இப்ப என்ன நேரம், நாஞ்சிலின் நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று என இரண்டையும் இதைப்போன்று நான் மிக விரும்பி வாசித்திருக்கிறேன்.

ஒரு படைப்பாளி தன்னுடைய சுயமுகத்தோடு தன் படைப்புகளில் மிகக் குறைவாகவே வெளிப்படுகிறார். அசோகமித்திரனின் லான்சர் பராக் கதைகள், சுந்தர ராமசாமியின் பக்கத்தில் வந்த அப்பா, நாடார் சார் போன்ற கதைகள் சட்டென்று நினைவிற்கு வருகின்றன. நாஞ்சில் நாடனின் கதைகளில் வரும் அத்தனைச் சிறுவன்களும் பந்தியில் இருந்து எழுப்பிவிடப்பட்ட அந்தச் சிறுவனாகவே இருக்கிறார்கள். பூதப்பாண்டியில் இருந்து அச்சிறுவன்கள் கிளம்பி பம்பாய் செல்கிறார்கள். மேன்சன்களில் ஒட்டி ஒடுங்கி, அரைவயிற்று பசியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நோக்கில் சாரு நிவேதிதா, கோபி கிருஷ்ணன், நகுலன் போன்ற சிலரை விதிவிலக்காகக் கொள்ளலாம். இவர்களின் எழுத்து முழுக்கவே அவர்களே நிரம்பி இருக்கிறார்கள். தங்களையே வாழ்நாள் முழுக்க எழுத்தாக்கியவர்கள். அவர்களின் அன்றாடந்தான் அவர்களின் ஒட்டுமொத்த படைப்புலகமும்.

சுய வாழ்க்கையை பொய்மைகள் இன்றி பொதுவெளியில் வைப்பதற்கும் ஓர் நெஞ்சுரம் வேண்டும். தன்னைச் சுற்றி உள்ளவர்களை சக பயணிகளாக நம்பவும் வேண்டும். தன் பிம்பங்கள் குறித்த பதற்றம் ஒரு பொருட்டாகத் தோன்றக்கூடாது.  தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகள் அத்தனைப்பேரும் இவ்வாறு தங்களின் வாழ்வியல் அனுபவங்களை கட்டுரைகளாக, பத்திகளாக நிறைய எழுதியிருக்கிறார்கள். அவை அவர்களின் படைப்புலகத்தை மேலும் அணுக்கம் கொள்ளச் செய்கின்றன. இந்நோக்கில் எஸ். ராமகிருஷ்ணன் முதல் கே.என். செந்தில் வரை அந்நியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் சொந்த வாழ்க்கை அவர்களுடைய படைப்பில் மிகுந்த சுய பிரக்ஞையோடு ஒளித்துவைக்கப்படுகிறது. சுந்தர ராமசாமி தன்னுடைய மூன்றாவது நாவலில் செய்திருப்பதைப் போல. சுய அனுபவங்களை அப்பட்டமாக எழுதியவர்கள் என்றதும் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், நாஞ்சில் நாடன் சட்டென்று நினைவிற்கு வருகிறார்கள். படைப்புகள் தவிர வேறு சுய அனுபவப் பத்திகள் ஏதும் எழுதியிராதவர்களின் நேர்காணல்கள், பேட்டிகள் இவ்விதத்தில் அவர்களை மேலும் நெருங்கிப் புரிந்துகொள்ள உதவி புரிகின்றன.

ஜெ.வின் பிரமாண்டமான படைப்புலகத்தை ஒரு கிராமத்தின் கதை என்றும், போன்சாய் மரம் போன்று சுருக்கிக் காண்பதும் சாத்தியமே. நாஞ்சில் நிலத்தின் ஒரு சிறிய புனைவுப் பிரதேசமே அவருடையது.  அச்சிறிய உலகமே அத்தனைப் பரிமாணங்களோடு பேருருவென புனைவாக்கம் கொண்டுள்ளது. மற்ற மாவட்டங்களோடு ஒப்பிட்டால் கன்னியாகுமரியே மிகச் சிறிய மாவட்டந்தான். ஆனால் நல்லுாழாக அம்மாவட்டத்தைப் போன்று இஞ்சு இஞ்சாக இலக்கியத்தில் பதிவான நிலப்பரப்பு தமிழில் வேறு இல்லை.  அந்நிலத்தில் இருந்து சுடலைமாடன்களும், யட்சிகளும், ஏக்கிகளும், நீலிகளும்  வந்து கொண்டே இருக்கிறார்கள்.

பாலச்சந்தின் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர ரசகியம் போன்று வாசிப்பு சுவாரசியம் நிறைந்த ஒரு தொகுப்புதான் நிகழ்தல். ஜெ.வின் குழந்தைப் பருவத்தின் பல தொல் நினைவுகளைக் கொண்டிருக்கும் நுால். நம்ப இயலாத  பல சம்பவங்கள்.  அதில் ஒன்று ஆறுமாதக் கைக்குழந்தையாக அவர் இருந்தபோது அவர் அறிந்த பெண்களின் முகங்கள். இன்னும் மறக்காமல் நினைவில் இருப்பது.

ஜெ.வின் அப்பாவைப் பற்றிய மூன்று கட்டுரைகள் இதில் உள்ளன. அவரின் அம்மாவும் பெரும்பாலான கட்டுரைகளில் உலாவிக்கொண்டிருக்கிறார். பதின்வயதுச் சிறுவனாக அவர் வாழ்ந்த நிலம் நமக்கு நம் சொந்த நிலமென தெரியவருகிறது. நதி கதையின் நிலக்காட்சிகள் மின்னல்வெளிச்சத்தின் புகைப்படம் போல தோன்றி மறைந்தாலும் அதன் அத்தனைப் புலப்பட வேறுபாடுகளும் இப்பின்னணியில் ஏற்கனவே பரிச்சயம் ஆகிறது. அப்பரப்பில் இருந்து அப்படியே அவருடைய புனைவுலகத்திற்குள் எளிதாக நுழைந்து பலரை அடையாளம் கண்டுகொள்ளவும் கூடும். காடு நாவலில் கல்யாணப் பட்டுப்புடவையை நெஞ்சில் சாய்த்து கண்கலங்கும் அம்பிகா அக்கா கதாப்பாத்திரத்தின் ஊற்றுமுகத்தை கொண்டுள்ளது நிகழ்தல்.

நிகழ்தல் இரண்டு பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது. வீடு மற்றும் வெளி. இரண்டும் பதினெட்டு பத்திகளை மிகச்சரியாக கொண்டுள்ளன. முதற்பகுதியில் உள்ள பதினெட்டுக் கட்டுரைகளும் ஜெ.வின் சிறுகதைகளுக்கு ஒப்பானவை. ஆயிரங்கால் மண்டபம், தேவகிச் சித்தியின் டைரி, ஒன்றுமில்லை, நைனிடால் போன்ற சிறுகதைகளுக்கு இணையான வாசிப்பனுபவத்தை தரக்கூடியவை. பூதம், தெய்வமிருகம், அப்பாவின் தாஜ்மகால் மூன்று கட்டுரைகளும் மிகச்சிறந்தவை. பூதம் ஒரு செவ்வியல் ஆக்கம்.

வெளி என்கிற இரண்டாம் பகுதியில் பெண் எப்போது அழகாக இருக்கிறாள்? என்றொரு கட்டுரை இருக்கிறது. நண்பரின் பதின்வயதுப் பெண் ஒருவரோடு ஏற்பட்ட சந்திப்பினைக் குறித்த கட்டுரை அது. இக்காலத்தின் பெண் அவள். நாற்பதுகளை ஒட்டிய அங்கிளிடம் அவள் கொஞ்சம் கூட தயக்கமோ, நாணமோ கொள்வதில்லை. தன்னை, தன்னுடைய தனித்த ரசனையை, வாழ்க்கை நோக்கை தைரியமாக வெளிப்படுத்துகிறாள். சூழலியலில் அவளுக்கு இருக்கும் ஆர்வம் வாசிக்கும் நம்மையும் ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. அவள் சொல்லும் ஒரு வாக்கியந்தான். ஐ லைக் மை பூப்ஸ்.

அப்பெண் கொள்ளும் நிமிர்வு நம்மை வாய்பிளக்கச் செய்கிறது. நடுத்தர வர்க்கத்தின் கூனல் நிரம்பிய நம் இருப்பினை உடைத்துப் போடுகிறது.

கன்னியாகுமரியின் விமலா இங்கிருந்து கிளம்பி புனைவிற்குள் வந்து சேர்ந்தாளா? என்று யோசிப்பது அலாதியானது.

தேவதச்சனின் ஒரு கவிதையை சதா நினைத்துக் கொள்வேன். அப்படி தினந்தோறும் நினைவில் வந்து செல்லக் கூடியவர்கள் அத்தனைப்பேரும் படைப்பாளிகளாகவே இருக்கிறார்கள். ஓஷோ ஒருவரைத் தவிர. அதற்காகவே நேற்றைய புதுமைப்பித்தன் முதல் இன்றைய சுரேஷ் பிரதீப், அனோஜன் வரைத் தேடி தேடி வாசிக்கிறேன். இன்றும் கசப்பின்றி நினைவு கொள்ளும் ஆளுமைகளாக எழுத்தாளர்களே இருக்கிறார்கள்.

ஏமாறும் கலை என்கிறார் யுவன். ஏமாறாமல் இருப்பதுதான் இந்நாட்களின் ஆகப்பெரிய சவால். தமிழ்ச் சிந்தனைச் சூழலில் உள்ள போலித்தனங்களை எண்பதுகளிலேயே உரக்கச் சொன்னவர் சுந்தர ராமசாமி. சகல விதங்களிலும் நிலைமை சீர்கெட்டு வருகிறது என்பதை எச்சரிக்கையாக தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். அவரின் ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலே தமிழ்ச் சூழல் மீதான கடும் விமர்சனம்தான். கலை என்று நம்பச் செய்து ஏமாற்றும் வணிகச் சூழல் அளித்த மூச்சு முட்டல்தான்.

இருபதுகளில் இருந்த மனநிலையை முப்பதுகளில் நம்பமுடியவில்லை. முப்பதுகளின் உன்னதங்களை நாற்பதுகள் எதுக்களிப்போடு அசைபோடுகின்றன. எனில் ஐம்பதுகளை அறுபதுளை எண்ணிப்பார்த்தால் நடுக்கம் ஏற்படுகிறது.

மெய்காண் முறை என்பார் ஜெ. உண்மையை தொட்டு விடுந்தோறும் இருளே திரண்டு வருகிறது. சிரிக்கும் உதடுகள் வெறும் பாவனை என்று கண்டறிந்த பின்னர், புன்னகைகள் அனைத்தும் ஒவ்வாமை கொள்கின்றன. வயதில் முதிர்தல் கொண்டு சேர்ப்பது சோர்வும் இருளும் அவநம்பிக்கையும் கொண்ட முட்டுச்சந்தில்தான். மீள வழியே அற்ற முட்டுச்சந்து.

மனித வரலாற்றில் இதற்கு முன்னர் சக மனிதன் மீதான அச்சமும் சந்தேகமும் இந்தளவு இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. சகல உன்னதங்களையும் போலிகள் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். பொய்யும் புரட்டும் பிழைப்பின் அத்தியா வசிய பாவனைகள் என்றாகிப் போயின.

விஷ்ணுபுரம் நாவலைத் தவிர்த்தால் ஜெ.வின் பெரும்பாலான உலகம் ஒளியால் ஆனது. விஷ்ணுபுரம் முடியும்போது தோன்றும் வெறுமை நம்மை இருத்தலியல் சார்ந்த தடுமாற்றத்திற்குள் தள்ளிவிடக் கூடும். பாய்ந்தோடும் வெள்ளத்தில் ஒரு கணமே காண நேர்ந்த நீர்க்குழிழ்கள் போல அந்நாவலில் அனைத்தும் விரைந்தோடி மறைகின்றன. சங்கர்ஷணன் முதல் அஜிதன் வரை. பெருமாளும் விதிவிலக்கல்ல.

காடு, பின்தொடரும் நிழலின் குரல், ரப்பர், கன்னியாகுமரி போன்ற நாவல்கள் ஒட்டுமொத்தமாக நமக்களிப்பது ஒளியால் ஆன உலகத்தை. நீலியின் மீதான பித்து ஒளிச்செறிவில் அமிழ்ந்து போதல். காதலென்னும் காந்தியால் ஆட்கொள்ளப்படுதல். கிரிதரன் புண்ணியத்தின் வீழ்ச்சி நிகழும்போதே தன் மகன்களில் அவன் தன்மீட்சி கொள்கிறான். மகனின் கால்ரோமங்களைக் கண்டு கிரிதரன் கொள்ளும் மன எழுச்சி ஒருவிதத்தில் தோற்க நேரிட்ட அப்பன்களுக்கான புத்துயிர்ப்பு.

பின் தொடரும் நிழலின் குரல் இருளைப் பற்றிய ஓயாத விவாதங்களைக் கொண்டிருக்கிறது. லட்சியவாதத்தின் இருள் அது. ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுக்க நேரிட்ட வரலாற்றின் இருள். புகாரின், வீரபத்ரபிள்ளை, கெ.கெ.எம் என லட்சியவாதிகள் காலத்தின் முன் தோற்றுப் புதைந்து போனாலும் அவர்களின் மறைவில் இருந்து வாசகன் பெறும் ஒளி மீதி வாழ்நாள் முழுக்க வழிகாட்டக் கூடியது. என்னை இனிமேல் தத்துவங்களும அரசியலும் ஏமாற்ற முடியாது என்ற தேவதச்சனின் வரிகளின் சாரம்.

புனைவுகள் தவிர அவர் எழுதியிருக்கும் பல்லாயிரம் பக்கங்கள் முழுக்க ஒளியால் ஆனது. அதன் ஒரு சிறு துளியே தன்மீட்சி என்கிற சிறிய தொகை நுால். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கும் மேலாக இச்சமூகத்தோடு உரையாடிக்கொண்டே இருக்கிறார்.  நிகழ்காலம் அளிக்கும் இருளுக்கு எதிராக தனி ஆளாக ஒளிக்கீற்றைப் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறார். அவரைச் சுற்றி காண நேரிடும் இளைஞர்கள் இதை உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். நவீனத்துவத்தின் காலம் ஜெ.வின் வருகையோடு விடைபெற்றுக்கொண்டது. இலக்கியத்தில் நவீனத்துவம் உண்டு பண்ணிய இருளும்.

இந்தியா என்கிற தேசத்தின் உண்மை முகத்தை முகங்களின் தேசம் சொல்கிறது. பிரிவினை வாதங்களும், சக மனித வெறுப்பும் நிறைந்து காணப்படும் சமகாலத்தின் கூக்குரல் கொடூரமானது. வெறுப்பே நம் தேசிய உணர்வோ என்று நம்பச்செய்யும் சமூக ஊடகப் பரப்பின் மெய்ம்மை.

பதின்களில் எம்.எஸ். உதயமூர்த்தியின் எண்ணங்களை விரும்பி வாசித்ததைப்போல தன் மீட்சி என்கிற இச்சிறு நுாலை இந்நாட்களில் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். யானை டாக்டர் கதையினால் அடையும் ஒளி அந்தி வானத்திற்குரியது.

இந்த ஒளியை ஜெ.பெற்றதெப்படி? சிலவற்றை ஊகிக்க முடிகிறது.  இயற்கையை அறிதல் என்கிற எமர்சனின் நுாலில் இருந்து பெற்றிருக்கலாம். அதைப் பல இடங்களில் எழுதியிருக்கிறார். போலவே தற்கொலையின் விளிம்பு வரை சென்ற அதிகாலையில் தான் புழுவொன்றில் இருந்துபெற்ற மீட்சியை.  ஒளியால் ஆன அச்சிறு புழுவின் துள்ளலைக்கண்டு பெற்ற ஊக்கத்தை தன் வாழ்வின் இரண்டாம் பிறப்பாக எழுதியிருக்கிறார். இயற்கையின் முன் மனிதன் பெறும் உத்வேகம் என்று இதைப் பொதுமைப்படுத்தலாம். ஏழாம் உலகில் பண்டாரத்தில் குற்ற உணர்ச்சியை உண்டுபண்ணி எச்சரிக்கை செய்வதும் வெகு துாரத்தில் ஒளிரும் ஒரு நட்சத்திரத்தின் ஒளிதான். புனைவில் மய்யழிக்கரையோரம் என்கிற எம்.முகுந்தனின் நாவலில் அதிகாலையில் சிறுநீர் கழித்துவிட்டு ஒளிரும் பௌர்ணமி நிலவினைப் பார்த்து அக்கதாப்பாத்திரம் அடையும் மீட்சியை அடையாளம் காட்டி உள்ளார்.

இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுத வந்தவர்களால் தமிழ்ப் புனைகதை எழுத்திலும் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. கச்சிதமும், துல்லியமும், படிமச் செறிவும் கொண்ட புனைவு மொழி அவர்களிடம் இல்லாமல் ஆனது. புதுமைப்பித்தனிடம்,  பிரமிளிடம், சுந்தர ராமசாமியிடம் தொழிற்பட்ட எழுத்துப் பிரக்ஞை அது. நவீன தமிழ் இலக்கியத்தின் அயனான சரக்கு. இரண்டு வரிகளை வாசித்தே எழுதியது யார் என்று கணித்துவிடும் பிரத்யேகத் தன்மை கொண்டிருந்தது. அதுவே புதிய வாசகர்களால் “புரியவில்லை“ என்ற ஒளிவட்டத்தை அக்காலத்தைய படைப்புகளுக்கு பரிவட்டமெனச் சாற்றியது. வாசக கவனத்தை கோரியது.

ஜெ.வின் படைபுலகம் முழுக்க பளிங்கென அம்மொழி சுடர்ந்திருந்தது. பிரேம் ரமேஷிடம் அம்மொழி பைத்தியத்தின் உக்கிரம் கொண்டு நிகழ்ந்தது. கோணங்கியில் சமத்காரம் கூடிய கதை சொல்லியாக. நாஞ்சில் நாடனிடம், யுவன் சந்திர சேகரிடம், சூத்திரதாரியிடம், க.மோகனரங்கனிடம். யூமா வாசுகியிடம் என சென்ற தலைமுறை வரை பெரும்பாலானவர்களிடம் காணக்கிடைத்தது. ஏகதேசமாக சிற்றிதழ் சார் புழங்கு மொழி என்று கூடச் சொல்லலாம். விதிவிலக்காக அதே காலகட்டத்தில் அசோகமித்திரன், சுரேஷ்குமார இந்திரஜித், சாரு நிவேதிதா போன்றோரிடம் சாதாரணத் தன்மையோடுதான் வெளிப்பட்டது.

சமூக ஊடகங்கள் மலினப்பட்டு இணையத்திலும், முகநுாலிலும் அன்றாடம் எழுத நேரிட்டது. இணையாக சராசரி மனங்களை உற்சாகப்படுத்தும் நோக்கமும் கொண்ட சரளத்தை விரும்பியதும் அம்மொழி கரைந்தொழிந்த காரணங்களாக இருக்கலாம்.

சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் அதன் கவித்துவ மொழி நடைக்காகவே வாசகர்களை பித்துப்பிடிக்க வைத்தது. அந்நாவலின் பெரும்பாலான பக்கங்களை அன்று மனப்பாடமாக ஒப்பிக்கும் தீவிர வாசகர்கள் இருந்தனர் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஒரு நோக்கில் அம்மொழியை நவீனத்துவத்தின் நிழல் என்று கூட சொல்லலாம். நவீனத்துவ நோக்கு காணாமல் ஆனதன் விளைவாக அம்மொழியும் காணாமல் ஆகியிருக்கலாம்.

தன் எழுத்தின்மேல் படைப்பாளி கொண்டிருந்த வலுவான ஆளுமை. பிரேக்கில் இருந்து காலை எடுக்காத கவனம் என்பார் ஜெ. வர்மக் கலைபோல ஒரு சிறிய இனக்குழுவிற்குள் சிற்றிதழ்களில் பயிற்று விக்கப்பட்ட மொழி. சிற்றிதழ்களின் இடம் இல்லாமல் ஆகி அவை நடுநிலை இதழ்களாக மாறியதும் உப காரணமாகத் தோன்றுகிறது. மேலும் இரண்டாயிரத்திற்கு பிறகு எழுத வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கவிதைகள் மீது ஆளுமை இல்லாமல் போனதும். கவிதை உரைநடையை பாவிக்க நேரிட்டதும் கூட. ஆனால் அம்மொழி முற்றாக வழக்கொழிந்து போய்விடவும் இல்லை. இன்று எழுதக்கூடியவர்களில் கே.என்.செந்திலிடம், சுரேஷ் பிரதீப்பிடம் காணலாம். முதலாமவரிடம் சுந்தர ராமசாமியின் சாயலோடும். பின்னவரிடம் ஜெ.வின் பாவனையோடும்.

ஏற்கனவே நான் சொல்லியதுதான் ஜெ.வின் படைப்பு மொழியிலும் இந்த வளர்சிதை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அறம் தொகுதிக்கு முன் என்றும் பின் என்றும் அம்மொழி மாற்றத்தை வரையறை செய்கிறேன். ஜெ.வின் புனைவு மொழி மீது பெரும்பித்துக் கொண்டிருக்கும் என்னால், இன்றுவரை அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கன்னிகாத்து பேரழியாக நின்றவளை, இரண்டு பெற்று, நடுவயதின் சதைத்தளும்பலாக காண நேரிட்டதைப் போல பிற்பாடு அது ஆனது. கன்னிமை கதையில் அடைய நேரிடும் துணுக்குறல் போன்றும்.

இரண்டாயிரத்திற்கு முந்திய படைப்புமொழி கண் முன் சம்பவங்களை தத்ரூபமாக நிகழ்த்திக்காட்டும் துல்லியம் கொண்டிருந்தது. பூதக்கண்ணாடியைப் போல நுட்பங்களை மனத்திரையில் ஆழப் பதியச் செய்தது. சொற்களில் கசிந்து நம் மனத்திரையில் உருக்கொள்ளும் நிகர் வாழ்வாக அமைந்தது.  புனைவு உலகத்திற்குள்  கூடுவிட்டு கூடு பாய ஏந்தலாக வாய்த்தது. மேலாக அப்புனைவு மொழிக்கு மிகுந்த நிதானமும் அவதானிப்பும் கொண்ட சமத்காரம் இருந்தது. ஆழமான நதி மெல்ல நகரும் என்பதைப் போல ஆழ்மனதைக் குத்தித் தைத்தது. மிக யதார்த்தமாக சொல்லப்பட்ட வேறு ஒருவன் போன்ற கதையில் கூட “பிறகு தெளிவு மீண்டது. அது யார் என்று பார்க்கவேண்டும் என்று முதல் எண்ணம் ஏற்பட்டது. ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்று பிறகு. குழந்தைகள் துாங்குகின்றனவா என்று அதன் பிறகு “ என கவிதையின் சாயலில் பயின்று இருந்தது.

அம்மொழிதான் ரப்பரில் உருவாகி வந்தது. விஷ்ணுபுரத்திலும், பின்தொடரும் நிழலின் குரலிலும் உச்சம் கண்டது. கொற்றவையில் அசரீரி போன்று அபூர்வத்தன்மையை அடைந்தது. முதல் நான்கு சிறுகதைத் தொகுப்புகளிலும் நிரம்பி நின்றது. செறிவான சொல் வனத்தில் அலைந்து திரிந்த போது ஆசுவாசம் அளித்த தணுமை அதன் பிறகான அவரின் படைப்புக்களில் அனுபவமாகவில்லை.

தீவிரமாக தொடர்ந்து இயங்கும் அத்தனைப் படைப்பாளிகளுக்கும் இம்மாற்றம் இயல்பானதுதான். வலுவான  சொற் சிக்கனம் கொண்டு எழுதிய சுந்தர ராமசாமியின் கடைசிக்கால கதைகளில் இந்த லகுத்தன்மை உள்ளது. நாஞ்சில் நாடனிடம் கட்டுரைக்குணம் மிகுந்த சொற்பெருக்கென. அறம் தொகுதியில் அக்கதைகளின் உணர்ச்சிப் பீறிடலை  வெளிப்படுத்த  நீர்த்துப் போன அதன் வடிவம் உகந்ததே. நாடகீயத் தருணங்களை கச்சிதமாக கடத்துவதற்கு ஏற்ற மொழியும் அதுதான்.

ஜெ.வின் சிறுகதைகளை மூன்று பெரும்பிரிவுகளுக்குள் தொகுக்கலாம். ஒரு வசதி கருதி. நினைவில் நிற்கும் விதத்தில் வகுத்துத் தொகுக்க. ஒன்று அவர் பால்ய காலத்தை பகைப்புலமாகக் கொண்டவை. அவை பெரும்பாலும் ஒரு கிராமத்தின் கதைகளாக இருக்கின்றன. காடு நாவலின் களமும் அதுதான். அங்கிருந்துதான் அவரின் சாதனைக் கதைகள் அதிகம் பிறந்திருக்கின்றன. வெள்ளம், ஆயிரங்கால் மண்டபம், தேவகிச் சித்தியின் டைரி, பெரியம்மாவின் சொற்கள், யானையை மையமாகக் கொண்ட கதைகள் வாரிக்குழி, தாண்டவம், மத்தகம், யானையில்லா போன்றவை. இரண்டாவது புராணங்கள், காவியங்கள், தொல்கதைகள், வாய்மொழி மரபு, நாட்டார் கூறுகள் என புதையுண்ட உலகத்தை மீள் புனைவுருவாக்கம் செய்பவை. அவ்வகையான கதைகள் தமிழின் சிறுகதைத் தளத்தை அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு எடுத்துச் சென்றவை. குறிப்பாக திசைகளின் நடுவே, படுகை, மாடன்மோட்சம், முடிவின்மையின் விளிம்பில், பத்ம வியூகம். ரதம் போன்றவை. ஜெ.வினால் மட்டுமே எழுதப்படக் கூடிய யட்சிக்கதைகளை இப்பிரிவிற்குள் கொண்டுவரலாம். செண்பக யட்சி, கடைசி முகம், கண்ணாடிக்கு அப்பால் என்பன.  மூன்றாவது இவை இரண்டிலும் அடங்காதவை. நைனிடால், ஒன்றுமில்லை, பத்தாயிரம் காலடிகள்

வேறு ஒருவன் கதை மிகச் சாதாரணமானது. அக்கதையை கள்ள உறவினை அறிய நேரிட்ட கணவன் தன் மனைவியை வெட்டிக் கொல்கிறான் என்ற சொற்றொடரில் சொல்லிவிடலாம். ஆனால் படித்த நாளில் இருந்து அக்கதை  குருதி உமிழ் புண்ணாக நினைவில் வதைத்துக் கொண்டே இருக்கிறது. தினந்தோறும் வாசிக்கும் நாளிதழ்களில் அக்கதையின்  வேறுபட்ட மாதிரிகளை செய்திச் சுருக்கங்களாக வாசிக்க நேரிடுகிறது. பாலியல் சார்ந்த கொந்தளிப்பினை அக்கதை வேறொரு நுட்பமான கோணத்தில் உணர்த்திச் செல்கிறது. சிலையில் இருந்து குரல் வெளிப்பட்டதைப் போல கொச்சப்பியில் இருந்து வெளிப்பட்ட அவன் யார்? அவன் யாராக இருக்கக்கூடும்? ஒவ்வொருவருக்குள்’ளும் அவன் இருக்கிறானா? அவனை கைபிடித்து வெளியே  கொண்டுவரக்கூடிய தருணம் என்னவாக இருக்கக் கூடும்?  வேட்டையாடித் திரிந்த காலத்தில் இருந்து ஆழ்மனதில் உறைந்துள்ள ஆவேசம்தானா அது? முடிவற்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது அக்கதை.

கொச்சப்பி அக்கதையில் பல்வேறு மனநிலைகளில் வாழ்ந்து பார்க்கிறான். வாசலில் அமர்ந்து உறுதி செய்ததும் அவன் அடைவது பெரும் திகைப்பை. இப்படி நடக்கும் சாத்தியம் உண்டுதானா என்பதை நம்பவே அவனுக்குக் கொஞ்சக் காலம் ஆகிறது. பூட்டிய கதவுக்கு அப்பால் கேட்க நேரிடும் ஒலிகளும், சிணுங்கல்களும், குசுகுசுப் பேச்சும் அவனை உறைய வைக்கின்றன. அவனில் ஒருவன் வெறி கொண்டு அப்போதே அவளைக் கொலை செய்கிறான். அவள் வெட்கித் தலை குனியும் வண்ணம் வார்த்தைகளை வீசுகிறான் மற்றொருவன். வீம்பு பிடித்தவன் அவளை வீதியில் தள்ளி கதவைச் சாத்துகிறான். சோர்ந்து வீழ்ந்தவன் மனம் கசந்து வீட்டைத் துறந்து வெளியேறுகிறான். முடிவாக தந்தைமையில் உயிர்த்த ஒருவன் நிதானமடைகிறான். பிள்ளைகளின் எதிர்காலம் அவனைச் சாந்தம் கொள்ளச் செய்கிறது. மன்னிக்கச் செய்கிறது.

கூந்தல் என்ற தொகுப்பில் உள்ள கதை அது. அத்தொகுப்பில்தான் செண்பக யட்சி என்ற கதையும் உள்ளது. வணிகத்தில் வெற்றி பெறுவதற்காக தன் மனைவியை மந்திரிக்கு விருந்தாக்கும் கணவனைப் பற்றிய கதை. வேறு ஒருவன் ஒரு மலையாள சினிமாவின் பாதிப்பில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற ஆருடத்தை என் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்திய ஆண் மனத்தின் அடிவேரைச் சீண்டும் ஒரு கதை வேறு ஒருவன். கணவனாக நின்று பார்த்தால் ஆண்கள் அத்தனைப் பேரும் அடைய வாய்க்கும் சன்னதம் அது. அதன் எதிர்கோணத்தை சு.வேணுகோபாலின் சொல்ல முடிந்தது என்ற கதை சொல்கிறது. இக்கதை ஏற்படுத்தும் அதிர்வினை சாந்தப்படுத்தும் ஒரு திறப்பை  அக்கதையில் வாசித்தேன். ” ஏம் பெரியம்மா, அவளுக்கு மூணு பிள்ளைக இருக்கே?“ என்ற அதிர்ச்சிக்கு வரும் பதில். “இருந்தா? புது ருசி விடுமா?“ என்று சமாதானம் கொள்ளச் செய்கிறது. ஆணைப் போல பெண்ணிற்கும் என்ற புரிதலை வெளிப்படுத்துகிறது. ஒரு பாட்டியின் குரலாக ஒலிக்கிறது. பாலியல் மீறல் என்பதை அதுவும் ஒரு தேடல் என நியாயப்படுத்துகிறது.

அசோகமித்திரனைப் போல சுந்தர ராமசாமியைப் போல ஜெ.விடமும் பெண்களின் தனித்த உலகத்தைப் பற்றிய சிறந்த கதைகள் இருக்கின்றன. தேவகிச் சித்தியின் டைரி, கூந்தல் இரண்டும் சட்டென்று நினைவிற்கு வருபவை. காலம் கடிகாரப் பெண்டுலம் போன்று முன்பின்னாக அசைந்து உருமாறும் வடிவத்தை படைப்பு உத்தியாகக் கொண்ட இரண்டு கதைகள் வெள்ளம் மற்றும் கூந்தல். ஜெ.எ ழுதிய நிலத்தின் அகத்திணை கருப்பொருளாக கருதும் விலங்கென்றால் அது யானைதான். மொத்த தமிழ் புனைவு வெளியிலும் யானைகளின் குண இயல்புகள் இவரின் புனைவு உலகத்தில் பதிவானதைப் போல தந்தமும் மத்தகமுமாக வேறு ஒருவரிடமும் காணக்கிடைப்பதில்லை. யானைகளின் மேல் ஜெ.விற்கு இருக்கும் காதல் இச்சிறுகதைகளில் காணக்கிடைக்கிறது.

கலைஞனும் கங்காணியும்

அ. விமர்சகராக ஜெ.வின் பங்களிப்பு ஆச்சரியம் அளிக்கும் அசுரத்தனங்கள் நிறைந்தது. சூழலை மீறிய பெருவிருட்சம்.  நிகழ்ந்துவிட்ட அற்புதம். இதற்கு முன்பும் இதைப்போன்று நிகழ்ந்ததில்லை, பின்பும் இது மீண்டும் நடக்கும் சாத்தியங்கள் இல்லை.

ஐம்பதாண்டுகள் எழுதியும் ஐயாயிரம் வாசகர்களைத் தாண்ட முடியவில்லை என்ற சுந்தர ராமசாமியின் கவலை இந்நாட்களிலும் அப்படியேதான் நீடிக்கிறது. தமிழ் வாசகச் சூழல் எப்போதுமே சவலைத்தனம் நிறைந்தது. நாவல்கள், சிறுகதைகள் விற்பனையாகும் அளவில் விமர்சனத் தொகுதிகள் செல்லுபடியாவதில்லை. விமர்சனங்களை விரும்பி வாசிக்கக் கூடியவர்கள் சக எழுத்தாளர்களே. வாசகர்களில் சுஜாதா சுட்டும் பசித்த புலிகள் மட்டுமே –அதுவும் சிலராகத்தான் இருக்கும் -தேடி வாசிக்கிறார்கள். சாதாரணமாக தீவிர வாசகர்கள் கூட விமர்சனங்களைப் பொருட்படுத்துவதில்லை. அதற்கென மெனக்கெடுவதில்லை.

இடுக்குப்பிடித்த இவ்வறட்சியின் மத்தியில் ஜெ. நுாற்றுக்கணக்கான பக்கங்களை விமர்சனத்திற்காக ஒதுக்கியிருக்கிறார். படைப்புக்கள் எழுதுவதை விட விமர்சிக்கத் தேவைப்படும் உழைப்பு பன்மடங்குப் பெரியது. முக்காலமும் அறிந்திருக்கும் ஞானியைப் போல ஒரு உயர்ந்த நிலை தன்னியல்பில் வாய்க்க வேண்டும். நேற்று நடந்ததையும், இன்று நடந்து கொண்டிருப்பதையும் சிந்தனை மலங்கள் இன்றி அறிந்துகொள்ளும்  திறன் வேண்டும். ஒரு படைப்பாளி அளவே விமர்சகரும் மொழிக்குள் தவிர்க்க இயலாத முக்கியத்துவம் உடையவரே.

தமிழ்ச் சூழலில் ஜெ.அளவிற்கு முதன்மையான விமர்சகர் வேறொருவர் இல்லை.  இக்கூற்று பலருக்கும் வருத்தம் அளிக்கலாம். தன் வாழ்நாள் முழுக்க விமர்சகராகவே வெளிப்பட்ட வெங்கட் சாமிநாதனிடம் கூட  ஜெ.வைப்போன்ற பன்முகத்தன்மை காணப்படவில்லை. தனித்த ருசிகள் அவரை கட்டுப்படுத்தின. ஆராய்ந்து எழுதுவதற்கான கால அவசாகமும் அவருக்கு வாய்க்கவில்லை. மின்னல் வெட்டுப்போன்றுதான் அவரின் பார்வையும். நவீனத்துவம் ஓங்கி நின்ற காலத்தில் அவர் செயலாக இருந்ததும் ஒரு வரலாற்றுக் காரணம். ஆனால் தன்னை மீறிய ஆவேசம் கலையில் ஏற்புடையது. அதுவே கலையின் இயல்பு என்ற கருத்து வெங்கட் சாமிநாதனிடம் இருந்து ஜெ.பெற்றிருக்கக் கூடும். நாம் இன்றில் இருந்துகொண்டு ஜெ.வோடு வெ.சா.வை ஒப்பிடுவது ஒருவிதத்தில் “புல்ஷிட்” தான். ஆனால் தமிழுக்கு விமர்சன ரீதியாக அவர் ஆற்றிய பங்களிப்பை ஒப்பிட்டால் ஜெ.வின் இடம் முதன்மையானது. முன்னோர்களில் ஜெ.வோடு ஒப்பிடத்தகுந்த ஒரே ஆளுமை பிரமிள் மட்டுமே. ஆனால் அவரும் அதிகம் வாசிக்கவோ எழுதவோவில்லை. எழுதியவரை ஒட்டுமொத்த சிந்தனை வரலாற்றையும் பொருட்படுத்தும் விரிவும் ஆழமும் கொண்டிருந்தார்.

நாவல் கலையைப் போல விமர்சனக் கலையையும் தமிழில் ஜெ.வின் வருகைக்கு முன் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். புதுமைப்பித்தன், க.நா. சுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், பிரமிள், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றோர் ஜெ.விற்கு முந்தைய தலைமுறையில் குறிப்பிடத்தக்க விமர்சகர்கள். மேற்குறிப்பிட்டவர்களில் வெங்கட சாமிநாதன் தவிர மற்ற அத்தனைப்பேரும் படைப்பாளிகளும் கூட.

சமகாலத்தில் தமிழவன், பிரேம் ரமேஷ், பாவண்ணன், க.மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், சி.மோகன், ந.முருகேச பாண்டியன், ராஜ் கௌதமன், கீரனுார் ஜாகீர்ராஜா, முதல் கே.என்.செந்தில், சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன், பாலா கருப்பசாமி, நவீன், என அத்தொடர்ச்சி அறுபடாமல் நீண்டுகொண்டுதான் இருக்கிறது.

இவர்கள் அத்தனைப்பேருக்கும் மத்தியில் ஜெ.வின் முக்கியத்துவம் என்னவென்றால் அவர் இதுவரை செயல்பட்டவர்களை விட அதிகப் படைப்பாளிகள் குறித்து எழுதியிருப்பதுதான். அவர்களின் இலக்கியப் பெறுமதி என்ன என்பதை பரிசீலனை செய்து அவர்களுக்கு உரிய இடத்தை நிர்மாணித்ததே ஜெ.வின் சாதனை. ஆனால் கோணங்கியை அவரின் முதல் இரண்டு சிறுகதைத் தொகுதிகளைத் தவிர்த்து பிறவற்றை சொற்குப்பை என்று மதிப்பிட்டு இருப்பது சங்கடம் அளிப்பது. கோணங்கி தமிழின் தனித்த மரபு. படிமச்செறிவு, புனைவுவெளிக்குள் முளைத்தெழும் வரலாற்றுத் தருணங்களும் கொண்ட பிரத்யேக படைப்பு மொழி கோணங்கியினுடையது. அவரை அவ்விதமே அணுகவேண்டும்.

 சுந்தர ராமசாமியோ அசோகமித்திரனோ தொடர்ச்சியாக விமர்சனங்களை மேற்கொள்ள வில்லை. தனக்கு முன்னுள்ளவர்களையும் சமகாலப் படைப்பாளிகள் அத்தனை ப்பேரையும் விமர்சனத்திற்கு உட்படுத்தியிருக்கவில்லை. ஜெ. யும் அதில் முழுமையானவர் அல்ல. ஆனால் பெரும்பாலான முக்கிய படைப்பாளிகளை அவர் அறிமுகம் செய்திருக்கிறார். தமிழில் தவிர்க்கவே கூடாத முக்கியமான படைப்புக்கள் குறித்த மதிப்பீடுகளை  அவை வெளிவந்த காலத்திலேயே முன்வைத்திருக்கிறார். இது அவரின் சமகால எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணனோ சாரு நிவேதிதாவோ செய்திராத காரியங்கள். சாருவின் பழுப்பு நிறப்பக்கங்கள் ஒருவிதத்தில் வாசகக் கொண்டாட்டமே ஒழிய, திறனாய்வு விமர்சனம் அல்ல. வரம்பு மீறிய பிரதிகளில் வெளிப்படுபவை தர்க்க நியாயங்கள் அற்றவை. புலமைக்காய்ச்சல். எஸ்.ராமகிருஷ்ணின் விமர்சனக் கலை ஜெ.வோடு ஒப்பிடும்போது சத்துக்குறைந்ததே.

ஜெ. நவீன தமிழுக்கு ஆற்றிய விமர்சனக் கொடைகள் என பின்வருவனவற்றை பரிந்துரை செய்கிறேன். அறிமுக வாசகர்களுக்கு இவை சிறந்த வழிகாட்டுதல்களாக இருக்கும். எழுத விரும்புகிறவர்களுக்கு கற்றுத்தேர வேண்டிய பாடங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

1. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் – ஏறக்குறைய இரண்டாயிரம் வரையிலான நவீன தமிழ் இலக்கியத்தின் அத்தனை வகைமாதிரியான இலக்கியப் போக்குகள் குறித்தும் அவற்றின் தோற்றுவாய், வடிவ நியாயங்கள், வாசிக்கத் தகுந்தவை என்று ஒரு விரிந்த மதிப்பீடு கொண்டமைந்த நுால். பல்லாயிரம் நுாற்களுக்கு மத்தியில் எவைப் முக்கியமானவை எனத் தேடித் தத்தளிக்கும் ஆரம்ப வாசகர்களுக்கு இது முக்கியமான திறப்பாக அமையும். கல்கியைப் பொருட்படுத்தி எழுதியிருப்பது  எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் ஜனரஞ்சக வாசகர் நோக்கில் அவரைத் தவிர்க்க வேண்டியதில்லை என்கிறார் ஜெ.

2. இலக்கிய முன்னோடிகள் – புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ந.பிச்சமூர்த்தி, மௌனி, க.நா.சுப்பிரமணியம், கு.ப.ராஜகோபாலன், எம்.எஸ்.கல்யாண சுந்தரம், லால்குடி சப்தரிஷி ராமாமிருதம், நகுலன், கு.அழகரிசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், ஜி.நாகராஜன், மு.தளையசிங்கம், சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம், ப.சிங்காரம், ஆ.மாதவன், நீல.பத்மநாபன் என நவீன தமிழின் சத்தான இருபது படைப்பாளிகளின் ஒட்டுமொத்த உலகத்தினையும் விரிவும் ஆழமும் கொண்டு திறனாய்வு செய்யும் கட்டுரைகள். அ.முத்துலிங்கம் மற்றும் நீல.பத்மநாபனைத் தவிர பிற அத்தனைப்பேரும் எழுதுவதை நிறுத்திக் கொண்டவர்கள்தான். ஆகவே அவர்களின் படைப்புகள் முடிவானவை. தமிழின் மாஸ்டர்ஸ் என்று கருதத் தகுந்தவர்கள்தான் அவர்கள் அத்தனைப் பேரும். முழுதாக அவர்களை கற்றுத்தேர இந்நுால் ஒரு பக்கத்துணையாக இருக்கலாம். கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராமன் போன்றோரையும் சேர்த்திருக்கலாம் என இந்நுாலின் எதிர்வினையாக தமிழின் சிறந்த கவிஞரும் விமர்சகருமான க.மோகனரங்கன் எழுதியிருக்கிறார். ஜெயகாந்தனுக்கும், நீல.பத்மநாபனுக்கும் ஜெ. கூடுதல் சலுகைகள் அளித்திருக்கிறார் என்பதும், நகுலனையும், ஜீ.நாகராஜன், மௌனியையும் கூடுதல் கறாருடன் மதிப்பிட்டுள்ளார் என்பதையும் இத் தொகைநுாலின் போதாமைகளாகச் சுட்டியுள்ளார்

3. நாவல்- கோட்பாடு – அசலான நாவல் எது? தமிழில் இதுவரை நடந்துள்ள நாவல் முயற்சிகள் எவை? ஏன் தமிழில் பிற இந்திய மொழிகளில் நிகழ்ந்துள்ளதைப் போல தரமான நாவல்கள் எழுதப்படவில்லை? எனில் இங்கிருக்கும் நுாற்றுக்கணக்கான நாவல்கள் என்பவையெல்லாம் என்ன? மிகச்சிறந்த நாவல்கள் எவை? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான விரிவான விளக்கங்களைத் தரும் சிறிய நுால். ஆச்சரியமான தகவல் என்னவென்றால் மாலன் போன்றோரைக் கூட பொருட்படுத்தி எழுதியிருக்கிறார் என்பதுதான். அவரின் ஜனகணமன என்கிற நாவல் அத்தனைப் பெறுமதி உள்ளதுதானா?

நிகழல்காலம் நாவல்களுக்கானது. நாவல்கள் தரிசனங்களைக் கொண்டிருக்க வேண்டும். தரிசனம் என்பதும் உண்மை என்பதும் சத்தியம் என்பதும் ஒன்றுதான். ஒரு நாவல் அது பேசுபொருளாகக் கொண்டுள்ள கதைக்கரு குறித்த ஆகச் சாத்தியமான அத்தனைக் கோணங்களையும் விவாதித்து வாசகனை உணர்ந்தோன் ஆக்க வேண்டும். தரிசனம், பன்முகத்தன்மை, வாசக இடைவெளி என ஒரு நாவல் கொண்டிருக்க வேண்டிய அத்தியாவசியங்களை அறிவுறுத்திய நுால். இக்குரலுக்கு ஜெ.வின் காலத்திற்கு முன்பே தொடர்ச்சி இருப்பினும் அதை வலுவாக, விரிவான வரலாற்றுப் பின்னணியில் ஆராய்ந்த முதல் படைப்பாளி ஜெ.வே. தன்னுடைய நாவல்கள் மூலம் நாவல் வடிவங்களுக்கு முன்மாதிரிகளையும் அவரே படைத்துள்ளார். தமிழின் உலகத்தரமான நாவல்கள் என்னுடையவை என்ற அறைகூவலையும் அவை வெளிவந்த காலகட்டத்திலேயே பொதுவில் வைத்தார். அதன்பின்னர்தான் தமிழில் நாவல்கள் தங்களின் முகங்களை மாற்றிக்கொண்டன.

4. கண்ணீரைப் பின்தொடர்தல் –முக்கியமான இருபத்திரண்டு இந்திய நாவல்களைப் பற்றிய மதிப்பீடுகள், தமிழில் ஆரோக்கிய நிதேனம், மண்ணும் மனிதரும், நீலகண்டப் பறவையைத் தேடி, ஏணிப்படிகள், அக்னி நதி போன்ற முதன்மையான இந்திய நாவல்களை விரிவான வாசகக் கவனத்திற்கு கொண்டு சென்ற நுால். ஆரோக்கிய நிவேதனம் நாவல் விமர்சனத்தில் ரிபு என்கிற சொல்லை –ஒரு மனிதனின் நோய்க்கு காரணமான குணக்கோளாறு – ஜெ. புதிதாக கண்டு பிடித்து எழுதியிருக்கிறார். அந்தச் சொல் அந்நாவலில் இல்லை. ஒரு வேளை மலையாளத்தில் எழுதப்பட்ட விமர்சன நுாலிலிருந்து அவர் கண்டடைந்திருக்கலாம் என்றார் ஒரு நண்பர். ஆனால் அக்கண்டடைதல் அந்நாவலின் தரிசனத்தை துல்லியமாகச் சொல்லக் கூடியது.

5. மேற்குச்சாரளம் –

6. புதிய காலம்-

7. பூக்கும் கருவேலம்-

8. ஒளியாலானது

9. கடைத்தெருவின் கலைஞன்

10. ஈழஇலக்கியம் –ஒரு விமசரினப் பார்வை

போன்றவை முக்கியமானவை.

ஆ. விமர்சனம் கூட்டு வாசிப்பே. ஒரு சிறந்த படைப்பு வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவத்தை, அறிதலை அளிக்கும் சாத்தியம் கொண்டது. என் பார்வைக்கு உட்படாத நுட்பங்களை அறிந்துகொள்ளவே நான் தொடர்ந்து விமர்சனங்களைத் தேடிப்படிக்கிறேன். சுயஅனுபவத்தில் இரண்டு உதாரணங்களை மட்டும் சொல்லி முடித்து விடுகிறேன்.

ஜெ. எழுதிய நாவல்களில் காடு நாவல்தான் எனக்கு மிகவும் அந்தரங்கமானது. என்னுடைய சொந்த நாவலைப்போல அதைப் பலமுறை விரும்பி வாசித்திருக்கிறேன். ஆனால் க.மோகனரங்கனின் காடு நாவல் குறித்த விமர்சனக் கட்டுரை –சொற்களின் பசுமை மாறா காடு – யில் நான் புதிதாக ஒன்றைத் தெரிந்துகொண்டேன். அப்பார்வை அதுவரை எனக்கு புலனாகியிருக்கவில்லை.

தாய் குறித்து ஒரு மகன் ஒருபோதும் அறியவோ, உணரவோ விரும்பாத அந்தரங்கம் அது என்கிறார் க. மோகனரங்கன். அவருக்கும் முதல் வாசிப்பில் அது சிக்கவில்லை.

கண்டன் புலையனுடன் சம்பந்தப்படுத்தி இழிவாகப் பேசும் தன் மாமியாரை நோக்கி கிரியின் மனைவி வேணி சீறுகிறாள்.

“புலையனானா புலையன். போத்திமாருக்கு தங்கத்தில உருட்டி வச்சிருக்கோவ்? (பக்கம் 273)

இரண்டாவது சந்தர்ப்பம்

கிரிதரன் மலையிலிருந்து இறங்கி வந்தபோது அவன் அம்மா மகனுக்காக கோழி அடித்து குழம்பு வைக்கிறாள். குழம்பு வாசனை கண்டு நாறவெள்ளம் அடித்துவிட்டு வந்து சலம்பும் கிரியின் அப்பா “ஆருல அது? வீடு கேறி வந்தவன் ஆருல? என்று ஆவேசம் கொள்கிறார்.

இந்த நுண் நிகழ்வுகள் கிரியின் அம்மா குறித்த ஒட்டுமொத்த மதிப்பீட்டையே மாற்றிவிட்ட போது ஒருகணம் அதிர்ந்தே போனேன்.  எனில் ஒரு குரு நிலையில் இருந்து கிரியின் மீது அக்கறை காட்டும் போத்தியின் அன்பிற்கு பின்னுள்ள மறைபொருள் என்ன?. அதைத்தொடர்ந்து நாவலின் கோணம் மேலும் சிக்கலாகிறது. தன் மாமியாரின் அந்தரங்கத்தை வேணியும் அறிந்திருக்கிறாள் என்பது பெண்களுக்குரிய தனித்தன்மையையும் காட்டிவிடுகிறது.

ஜெ.வின் படைப்புகளைப் போன்றே அவரின் விமர்சனமும் கவித்துவமும் தருக்ககத்தின் ஒளிர்தலும் கொண்டது. வாசக சுவாரசியம் ஒருபோதும் இல்லாமல் ஆவதில்லை. அறிதலின் பரவசம் நம்மை தொடர்ந்து வாசிக்கச் சொல்லும்.

மிக ஆச்சரியம் அளிக்கும் காரியமாக கருங்குயில் குன்றத்துக் கொலை என்கிற டி.எஸ்.துரைச்சாமி எழுதிய தழுவல் நாவலிற்குக் கூட ஜெ.விமர்சனம் எழுதியிருப்பதுதான்.

அக்கட்டுரை தமிழ் நாவல் உருவாகி வந்த காலத்தில் அந்நாவலின் முக்கியத்துவம் என்ன? அதன் மொழிப்பங்களிப்பு என்ன? என்பது குறித்து விரிவாகப் பேசுகிறது. பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் போன்ற பெயர்கள் ஏன் சூட்டப்பட்டன என்பதில் இருந்து அக்காலத்திற்குப் பின்னர் புதுமைப்பித்தன் வரைப்பட்ட இடைக்காலத்தில் தமிழில் நடந்ததென்ன என்பதை கண்டறிந்து சொல்கிறார். இது ஒரு இலக்கிய வாசகனாக என்னை  வியப்பில் ஆழ்த்தியது.

இரண்டு பெரும் ஆளுமைகளால் நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன் என்பதையும் முடிவாகச் சொல்ல வேண்டும். அவர்கள் ஓஷோவும், ஜெ.வும். ஓஷோ குறித்து ஜெ.ஆற்றிய உரை என் வாழ்வில் மிக முக்கியமானது. நான் விரும்பிய ஒருவரை நான் மிகவும் விரும்பும் ஒருவர் மதிப்பிடும் தருணங்கள்.

என் பால்ய நண்பனை சமீபத்தில் சந்தித்தேன். என்னைப்போலவே நாற்பதுகளைத் தாண்டியவன்தான். நான் ஊரைவிட்டு வெளியேறாமல் அங்கேயே இருந்திருந்தால் என்னவாகி இருப்பேன் என்பதன் வாழும் சாட்சியாக அவன் இருக்கிறான். இன்றுவரை  சொந்த ஊரைவிட்டு இடம் பெயராதவன். ஒரு நாள் முழுக்க அவனோடு பேசினேன். ச்சை என்று தோன்றிற்று. பணம் சேர்க்க வேண்டும். ஆனால் அதற்கான வழிகள் என்ன என்றுதான் தெரியவில்லை. இதைத்தாண்டிய வேறு தேடல்களே இல்லாதவன். நான் எச்சில் தெறிக்க பேசியவற்றில் அவனுக்கு ஒரு சொல்  கூட பயனில்லை. ஆனால் அவனிடம் தான் நான் அங்கிருக்கும்போது விடிய விடிய பேசியிருக்கிறேன். அவனே சொன்னேன். நீ..அப்போதே பெரிய வாயாடி என்று. முடிவில் அவன் கொண்டிருக்கும் ஆர்வங்கள் எனக்கு அளித்தவை பெரும் துக்கத்தை.. நல்லவேளை ஒரு பிறவியை வீணாக்க இருந்தேன் என்று பெருமூச்சு விட்டேன்.

எந்தக் கல்விப் பின்புலமும் இன்றி, வழிகாட்டுதலுக்கு சுற்றமும் நட்பும் இன்றி வர்க்கத்தட்டில் மிகக் கடைசியாக வாழ நேரி்ட்ட ஒருவன் இலக்கியத்தின் மீதும்,  லட்சியவாதத்தின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டிருப்பது எண்ணிப்பார்க்க முடியாத காரியங்கள்.  இலக்கியம் அறிமுகம் ஆகாமல் இருந்திருந்தால் நான் ஒரு மனநோயாளியாக மாறியிருக்கலாம். பதின்களில் என் புகைப்படங்களைப் பார்த்தால் எப்போதும் உக்கிரமும் வெறிப்பும் கொண்ட இளைஞனாகத்தான் தெரிகிறேன். “நீ..இங்கிருந்து ஓடிவிடு இங்கேயே இப்படியே இருந்தால்..உனக்கு விரைவில் பைத்தியம் பிடித்துவிடும்“ என என்னுடன் ஜவுளிக்கடையில் வேலைபார்த்த ஆறுமுகம் அண்ணன் சொல்லியதை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன்.

இருபதுகளில் ஓஷோ அறிமுகம் ஆனார். அவரிடம் இருந்து அக உலகம் சார்ந்த பல தெளிவுகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.  சுந்தர ராமசாமி சொல்லியதைப் போல தாழ்வு உணர்ச்சியில் இருந்து என்னைத் தற்காத்து பாதுகாத்தது இலக்கியமே. சராசரிகளைப் போல முடங்கிப்போகாமல் பெரும் கனவுகளோடு வாழ வேண்டும் என்கிற ஆசையினை உண்டாக்கியவர்களில் ஓஷோவும் ஜெ.வும் முக்கியப் பங்கு ஆற்றுகிறார்கள்.

ஓஷோ மதம் சார்ந்த தளைகளில் இருந்து விடுவித்தார். மரபின் மீதும், அரசியல்வாதிகளின் பெயரிலும் இருந்த வழிபடும் நம்பிக்கைகளை இல்லாமல் ஆக்கினார். அவர் அடித்து உடைத்த உறுப்படிகளில் லட்சியவாதமும், காந்தியமும் சேர்த்தே இருந்தது. ஜெ.வின் சொற்களில் அதை ”குழந்தையையும் தண்ணியோடு வீசி எறிந்ததைப் போல”. ஜெ. ஓஷோவினால் நான் இழந்திருந்த லட்சியவாதத்தையும் காந்தியத்தையும் எனக்கு மீட்டுக்கொடுத்தார். இந்நாட்களில் அது அபூர்வமான காரியம். திராவிடம் என்றும் பொதுவுடைமை என்றும் தீராத் தளைகளில் ஒருவர் சிக்கிக்கொள்ளவே எட்டுத்திக்கும் சாத்தியங்கள் திறந்து கிடக்கின்றன. முழுக்க முழுக்க புற உலக ஆதாயத்திலும் மொத்த வாழ்நாளையும் சிதறி அழிக்கும் இருப்பு. மாபெரும் பயணம் என ஜெ. எழுதிய சி’றுகதையில் மாமிசத்திற்காக எர்ணாகுளத்திற்கு கொண்டு செல்லும் மாடுகளின் நிரை குறித்த ஒரு சித்திரம் வரும். பலி உயிர்கள். தங்களுக்கான கில்லட்டினை தாங்களே விரும்பிச் சென்று கண்டடையும் கால்நடைகள்.  இன்று அரசியலும் அதைப் போன்ற ஒன்றுதான். அரசியலில் நேர்மை என்பது அரிஸ்டாட்டிலின் ஜனநாயகம் போன்றது.

ஓஷோவினால் மொத்த சமூக வாழ்வில் இருந்தும் விலகிச்சென்ற போதுதான் ஜெ.வைக் கண்டடைந்தேன். அது ஒரு தீபாவளி மலர். குமுதம் வெளியீடு. அப்போதெல்லாம் தீபாவளியை ஒட்டி குமுதம் தொடர்ந்து நான்கு வாரங்களும் சிறப்பு மலர்கள் வெளியிடுவார்கள். அதில் சினிமாவும் அரசியலும் போக இலக்கியத்திற்கும் இடம் உண்டு. அந்த காலத்தில்தான் ஜெ.வின் பேட்டியை குமுதம் வெளியிட்டு இருந்தது. புத்தருக்கு தியானம் எனக்கு எழுத்து என்கிற அறைகூவலோடு

மிகச் சரியான காலம் அது. ஓஷோ என்னை முழுக்க காலிசெய்திருந்தார். தியானியாக வாழ்வதைத்தவிர வாழ்க்கைக்கு அர்த்தம் தரக்கூடிய காரணங்கள் ஏதும் இல்லை என்ற நிலைக்கு தள்ளியிருந்தார். பாலியல் சார்ந்த தடுமாற்றங்களும், கொந்தளிப்பும் மட்டுமே அப்பாதையில் தயக்கம் இன்றி நடந்து செல்ல முடியாமல் தடைகள் விதித்தன.

பின் தொடரும் நிழலின் குரலும் அக்காலத்தில்தான் வாசிக்க நேரிடுகிறது. வீரபத்திரபிள்ளையும், புகாரினும், கெ.கெ.எம்.மும் என்னைக் கடுமையாகப் பாதித்தனர். “பொன்னுலகம்னு சொன்னானுவளே..ஏமாத்திப் புட்டானுவளே” என அருணாசலம் தண்ணி அடித்துவிட்டு போதையில் கண்ணீர் விட்டு அழுத போது நானும் அழுதுகொண்டிருந்தேன். அருணாசலத்திடமோ, கெ.கெ.எம்.மிடமோ, புகாரினிடமோ அல்ல. வீரபத்ரபிள்ளையிடமே என்னைக் கண்டேன். நான் அவராக ஆகவே அப்போது முயன்று கொண்டிருந்தேன். அவருடைய சாவு என்னை நானே பார்த்தது போலிருந்தது. அரசியலில் முற்றாக ஆர்வமும் நம்பிக்கையும் இழந்தேன். அன்று அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தவன்தான் இன்றுவரை அத்தளத்திற்குள் நுழையவே இல்லை.

ராமசுந்தரத்தினை வீரபத்ரபிள்ளை சந்தித்து உரையாடு ஓரிடம் வரும் அந்நாவலில். அது மிக அடிப்படையான ஒரு விசயத்தை மிகச்சாதாரணமாக உணர்த்திச் செல்லும்.

“ராம சுந்தரம், உங்களுக்கு என்ன வேண்டும்? பணமா, புகழா? அதிகாரமா? இல்லை வரலாற்றில் ஓர் இடமா? என்ன வேண்டும் உங்களுக்கு,? இதற்கெல்லாம் ஆசைப்பட்டவராக நீங்கள் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்கவே வேண்டாமே” என்கிறார் வீரபத்ரபிள்ளை.

ராமசுந்தரம் முகம் இருண்டது. தடுமாறிய குரலில் “நிறைய இழந்தாயிற்று. நிறைய. எவ்வளவு என்று கணக்கிட்டால் மனம் பதறுகிற அளவுக்கு.மிக முக்கியமாக இளமையைத் தொலைத்தாயிற்று.கிடைத்தது என்ன? ஆனால் என்னால் திரும்ப முடியாது. முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் அர்த்தமற்ற வெட்டவெளி மட்டும்தான் எனக்கு மிச்சம். இப்படியே இருந்தால் மாற்றம் மூலம் உருவாகும் இம்சைகள் இல்லை. இதில் போலித்தனமான ஒரு தற்காலிக மகிழ்ச்சியும் இருக்கிறது. என்னைத் தோழர் என்றும் தலைவர் என்றும் கூறும் பல்லாயிரம் மக்கள் இன்று இருக்கிறார்கள்”

“அதற்காகவா?”

இராமசுந்தரம் கிளம்பிச் செல்கிறார். வீரபத்ரபிள்ளை அவரை அழைத்து மறுபடியும் கேட்கிறார்.

“நீங்கள் அவதுாறுக்குத்தானே பயப்படுகிறீர்கள்?“

விதி சமைப்பவர்கள் என்றும் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றும் ஜெ. எழுதிய இரண்டு கட்டுரைகள் மேலும் அர்த்தப் பூர்வமானவை. திருமணம் ஆகி போட்டித்தேர்வுகளில் சிக்கிச் சீரழிந்து, இலக்கியம் வாசிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பணியில் அமர்ந்து, பணியில் நிலைப்படுத்திக்கொள்ள பத்தாண்டுகள் தொலைத்து, இணையாக பிள்ளைப்பேறின்மை என்கிற சுமையால் நசுங்கி என்னை முற்றாக இழந்துகொண்டிருந்த காலத்தில் தன்னறம் என்கிற கான்செப்ட் என்னை புத்துயிர்ப்பு கொள்ளத் துாண்டியது.

அந்த இரண்டு கட்டுரைகளையும் என்னுடைய அலுவலகக் பேக்கில் எப்போதுமே வைத்திருப்பேன். அன்றாடம் எடுத்து வாசித்துக்கொள்வேன். ஷங்கர ராமசுப்பிரமணியனின் பகடிக்கவிதையில் வருவதைப் போன்ற காரியம்தான் அது. தன்னம்பிக்கையும் உத்வேகமும் வேண்டும் என்றால் ஜெயமோகன் பிளாக் போ என்ற தொனியில் எழுதப்பட்ட கவிதை அது.

இந்தியாவில் எழுதப்படும் ஆங்கில இலக்கியத்தை ஜெ.வின் பார்வையில் ஏற்றுக்கொண்டது. அருந்ததி ராய் போன்றோரின் பார்வைக் கோணங்களை புரிந்து கொண்டது. தன்னறத்திற்காக தயங்காமல் வாழலாம் என்று ஒரு தடுமாற்றமற்ற லட்சியவாதத்தை மனப்பழக்கம் ஆக்கியது என அவரின் பாதிப்பு மிக அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *