மலைகள் நகர்வதுமில்லை உறைவதுமில்லை

தமிழில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட படைப்பாளிகளில் முதன்மையானவர் சாரு நிவேதிதா. சாருவின் புனைவுகள் முதல் வாசிப்பின்போது எளிய விவரணைகள் மற்றும் செய்திக்குறிப்புகளால் ஆனது எனத் தோற்றம் கொள்பவை. கவித்துவங்களோ, உக்கிரமான நாடகீயத் தருணங்களோ அவரின் பெரும்பாலான படைப்புகளில் இருப்பதில்லை. அவற்றை அவர் திட்டமிட்டு, வலுக்குறைந்த சித்திரங்களாகத் தீட்டிச் செல்கிறார். வாழ்நாள் முழுக்க ரணங்களாக அமையக்கூடிய சம்பவங்கள் கூட தினசரி செய்தித் தாள்களின் தொனியில் வாசகனிடம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

சாருவின் அத்தனை நாவல்களையும் வாசித்து முடித்து மீள் நினைவு கொள்கிற போது சம்பவங்களின் உதிரிகளே நினைவரிப்பில் சிக்குகின்றன. நாவல்களின் விரிந்த வளர்சிதை மாற்றச் சித்திரங்களை தொடர் ஓட்டமாக வாசகனால் நினைவு கொள்ள முடியாமல் போகிறது. நீரோடையென நலுங்கிச் செல்லும் படைப்புமொழியும், உள்ளுறை உவமையற்ற அப்பட்டமும் சாருவின் படைப்புலகை எளிமையான ஒன்றாகக் கருதத் துாண்டுகின்றன. உண்மையில் சாரு நிவேதிதாவை முழுவதும் அனுபவம் கொள்ள, நிறைய மெனக்கெட வேண்டியுள்ளது.

“வாசிப்பு என்பது அவ்வளவு எளிதான செயல்பாடு அல்ல, வனத்தில் சென்று தானே வேட்டையாடி, வேட்டையாடிய விலங்கைத் தோலுரித்து எடுத்து சமைத்து உண்பதைப் போன்றது வாசிப்பு. நீண்ட பயணத்தையும்,சாகசங்களையும் சமயங்களில் இழப்பையும் வேண்டி நிற்பது அது” என்கிறார் சாரு நிவேதிதா. அவரின் படைப்புக்களை வாசிப்பது சார்ந்தும் இவ்வரையறையை நாம் பொறுத்திப் பார்க்கலாம். மேலும் அவரே தன் ஆளுமையின் ஆதாரங்களென “இஸ்லாம்,கிறித்தவம், பௌத்தம் என்ற மூன்று சமயங்களோடு கூட தொம்பர் சமூகத்தின் tribal character-உம் என்னை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தன” என்று சொல்கிறார். பின் நவீனத்துவத்தின் இலக்கிய அழகியல் என மையத்தை அழித்தல், எழுத்தை ஜனநாயகப் படுத்துதல், கலகத்தன்மை, மனப்பிறழ்வின் அரசியல் என்பனவற்றையும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. கூடுதலாக “ஆணின் காமம் அவனது தேகத்தின் மையமான ஆண்குறியில் ஆரம்பித்து ஸ்கலிதமாகி முடிவடையக் கூடியது. மாறாக பெண்ணின் காமம் spiral தன்மைகொண்டது. மையமற்றது. பாதம் முதல் தலைமுடி வரை காமத்தின் விகசிப்பு கூடியது. ஆரம்பமோ முடிவோ இல்லாதது” என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

சாருவின் முதல் நாவல்  எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும். அவரின் நாவல்களில் நான் கடைசியாக வாசித்த நாவல். கட்புலனாகும் திரண்ட கதையாடல் நிரம்பக் கிடைக்கும் அவரின் ஒரே நாவல் அதுதான். மலைகளைப் போன்ற திட்டவட்டமான வடிவமற்ற ஒரு கச்சிதம் கொண்ட நாவல். அந்நாவலின் தொடர்ச்சிகளாக ஜீரோ டிகிரி நாவலையும், புதிய எக்ஸைல் நாவலையும்  சேர்த்து வாசிக்கலாம். முதல் நாவலின் சத்தான பகுதிகள் புதிய எக்ஸைல் நாவலில் மீண்டும் ஒருமுறை அறியக்கிடைக்கிறது.

சாரு படைப்புலகின் ஆதார மையங்கள் மூன்று. ஒன்று கதைசொல்லியின்  சொந்த உலகம். நாகூர், தொம்பர்களின் வாழ்நிலம், இஸ்லாமிய கலாச்சார பின்னணி, சூர்யா, கண்ணாயிரம் பெருமாள், முனியாண்டி, டெல்லி வாலாக்கள், குமாஸ்தாக்களின் மனநிலை என விரிந்து அலையடிக்கும் பகைப்புலம். அவ்வுலகில்தான் அவந்திகா, அஸ்வினி, நளினி  என முடிவிலா பெண்களின் நிரை வருகிறது. இரண்டாவது எழுத்தாளரான கதைசொல்லி, சக எழுத்தாளர்களோடு கொள்ளும் உறவு.  தொடர் பயணங்களில் பெற்றவை மூன்றாவது. வாசித்த புத்தகங்கள், பார்த்த உலக சினிமாக்கள், கேட்டு ரசித்த இசை, சமகால அரசியல் பண்பாட்டு விமர்சனங்கள் போன்றவை. பேய்களின் உலகத்தைப் போல ஞானிகளின் உலகமும் அத்தனை நாவல்களிலும் பரவிக்கிடக்கின்றன என்பது அவருக்கே உரிய தனிச்சிறப்பு.

ஒரு நுாற்றாண்டு கடந்து விட்டது தமிழில் நாவல்கள் அறிமுகமாகி. தமிழின் முதல் நாவல் வாய்மொழி கதை மரபின் தொகையாக எழுந்துள்ளது. பத்தொன்பதாம் நுாற்றாண்டில் ஏற்பட்ட இந்து மறுமலர்ச்சி இயக்கங்களின் பாதிப்பும், சுதந்திர தாகத்தின் விழுமியங்களும் இந்திய நாவல்களை பெரிதும் பாதித்தன. பெண் சமத்துவமும், அரசியல் தனித்துவமும் பெரும் மாற்றங்களை தமிழ்ப் புனைவுகளில் நிகழ்த்தின. பாரதியில் செயல்பட்ட மரபார்ந்த விழுமியங்கள் நவீனத்துவ மூலவரான புதுமைப்பித்தனின் வரவால் இடைவெளி கண்டது. நாவல் வடிவம் இந்தியாவின் பிற மொழிகளில் அறிமுகமாகி அதுவரையிலான இந்திய மரபினை எதிர்கொண்டது. அதன்விளைவாக அசலான நாவல்கள் பிறந்தன. தமிழில் புதுமைப்பித்தனால் நிலை நிறுத்தப்பட்ட நவீனத்துவம் முன் தோன்றி, நவீனத்துவ நாவல்களை உண்டாக்கிற்று என்கிறார் ஜெயமோகன்.. யதார்த்தவாதம் காலாவதியானது என்ற மதிப்பீடு தொண்ணுாறுகளில் பரவலாக கருதப்பட்டது.  மேற்குலகின் பின் நவீனத்துவ பிரக்ஞை தமிழில் உரத்து பேசப்பட்டது. அதிகார மையைங்களை கலைத்தல், விளிம்புநிலை மக்களை முன்னிலைப்படுத்துதல், சாதியக்கட்டுமானத்தை அண்டக்கொடுக்கும் இந்துத்துவ பிரதிகளை நிராகரித்தல், மாற்று மெய்ம்மையை உண்டாக்கி மனிதர்கள் அத்தனைப்பேருக்கும் மீட்சியை அளித்தல் என பின்நவீனத்துவ அலை வரவேற்பிற்கு உள்ளானது. நவீனத்துவத்தின் போதாமைகளை நிரப்பும் புத்தம் புதிய வரவாக பின் நவீனத்துவ அழகியல் வரவேற்கப்பட்டது. அதன் பாதிப்பு தொண்ணுாறுகளில் களமாடிய அத்தனைப் படைப்பாளிகளையும் தீண்டிச்சென்றது.

பின்நவீனத்துவ அழகியலைச் சார்ந்தவர்கள் என்று ஒரு பட்டியலை நம்மால் அடையாளம் காண முடியும். அ.மார்க்ஸ், தமிழவன்,எம்..டி.முத்துக்குமாரசாமி, பிரேம் ரமேஷ், சாரு நிவேதிதா, எம்.ஜி. சுரேஷ், நாகார்ஜூனன் என அப்போது ஆரம்பித்த படைப்பாளிகள் வரிசையில் தொடர்ந்து செயல்பட்டவர்கள் சிலரே. தமிழவனின் புனைவுலகு கலையம்சக் குறைபாட்டால் பரவலான வாசக ஏற்பிற்கு உட்படவில்லை. எம்.ஜி.சுரேஷின் படைப்புகள் வீர்யமற்ற படைப்புமொழியின் காரணமாக முக்கியத்துவம் இழந்தன. உன்மத்தம் நிறைந்த மொழியில் பெரும் பாய்ச்சலைக் காட்டியவர்கள் பிரேம் ரமேஷ். அவர்களிடம் பின்நவீனத்துவம் சார்ந்த பிரக்ஞை வலுவாக தொழிற்பட்டது. மாற்று அரசியல் சித்தாந்தங்களைக் குறை வற கற்றுத்தேர்ந்த படைப்புமனம் அவர்களுடையது. தமிழின் முதன்மையான படைப்பாளிகளாக வந்திருக்க வேண்டியவர்கள் தமிழின் தீயுழாக பிரிய நேரிட்டது. ஆக தமிழின் ஆகச் சிறந்த பின் நவீனத்துவ பிரதிநிதியாக நம்மிடையே சாரு நிவேதிதாவே இருக்கிறார். அவருடைய இடையறாத செயல்பாடுகளும், பிறழ்வெழுத்து என்ற வகைமைக்குள் தொடர் இயக்கம் கண்ட படைப்பூக்க மனநிலையும் சாருவை தமிழின் தவிர்க்க இயலாத பின்நவீனத்துவ படைப்பாளியாக முன்னிலைப்படுத்துகிறது.

சாரு நிவேதிதாவோடு ஒப்பிடத் தகுந்த பிறிதொரு படைப்பாளி யுவன் சந்திரசேகர். இருவரின் புனைவு வெளிப்பாட்டு முறைகளுக்கும் பின் நவீனத்துவ பிரக்ஞை வலுவான உந்துதலாக இருக்கிறது. தன்னை நிராகரித்தல், மையத்தை திட்டமிட்டே கலைத்தல், தரிசனங்களற்ற வெறுமையையே தங்கள் படைப்புகளின் தரிசனம் என முன்வைத்தல் என இருவரின் நாவல்களுக்கும் ஒப்புமை கொள்ள நிறைய இருக்கிறது. யுவன் அடிப்படையில் கவிஞர். மாற்று மெய்ம்மையின் மீதான நம்பிக்கையில் உயிர்த்திருப்பவர். அரசியல் நீக்கம் அவரின் இயல்பாக அமைந்துள்ளது.  மாறாக கவித்துவமும், சமத்காரமான புனைவுத்திறனும், துல்லியம் கூடிய பேச்சுமொழித்திறனும் யுவனின் தனித்த அடையாளங்கள். சாருவிடம் உரையாடல்கள் அனைத்தும் பொதுவான மொழியைக் கொண்டிருப்பதை நாம் சட்டென்று அடையாளம் காணலாம்.

சாருவின் நாவல்களுக்கு ஒரு பொதுவான கதைத்தன்மை உண்டு. ஏகதேசமாக அதை அவரின் சொற்களான அலைந்து திரிபவனின் அழகியல் என்று துல்லியப்படுத்தலாம். நாகை மாவட்டத்தில் பிறந்து பதின்பருவத்தின் ருசிகள் திடப்பட்ட கதைசொல்லி, இருத்தலியல் நெருக்கடிகள் தாளாமல், படித்து அரசுத் தேர்வெழுதி டெல்லிவாசியாக தன்னை மேன்மைப்படுத்திக் கொள்கிறான். குடும்பத்தின் கடமைகள் அவனை இயக்குகின்றன. குமாஸ்தா மனநிலையின் தடுமாற்றங்களோடு அவன் தன் இலக்கிய வேட்கையினால் வாழ்நாட்களை பகுத்துக்கொள்கிறான். அங்கே அவனுக்கு உலக இலக்கியமும் உலக சினிமாக்களும் அறிமுகம் ஆகின்றன. நாடகங்களை தொடர்ந்து காண வாய்க்கிறது. குறிப்பாக பிரெஞ்சு சிந்தனை உலகத்தின் பிதாமகர்களை அவன் கற்றுத் தேரும் வாய்ப்பாக அமைகிறது. அவனுக்கு தமிழ் கூறும் நல்லுகத்தோடு தொடர்பேதும் அமையாமல்  போகிறது. அதற்கு அவன் கூறும் காரணம். இங்கே உள்ள சாதியக் கொடுமைகளை தமிழ்ப்படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் எதிர்கொள்ள வில்லை. இந்துத்துவ பிரதிகளை இலக்கியம் என்று தொடர்ந்து படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உலக இலக்கியம் என்பதே தெரியவில்லை. அப்படித் தெரிந்தாலும் தஸ்த்தவ்ஸ்கி, தல்ஸ்தோய், ஆல்பெர்ட் காம்யு, காஃப்காவோடு நின்றுவிடுகிறார்கள் என்று கருதுகிறான்.

டெல்லியில் உணவுப்பொருள் வழங்கல் துறையில் குமாஸ்தா பணி. டெல்லியில் வாழ நேரிட்ட பத்தாண்டுகள் கதைசொல்லியின் வாழ்வின் முக்கியமான திரும்புமுனை. திரிலோக்புரி போன்ற கதைகளை பின்னாட்களில் எழுதும் அனுபவங்களும் அவற்றில் இருக்கின்றன. அங்கே அவனுக்குத் திருமணமாகி, குழந்தையும் பிறக்கிறது. பணி நெருக்கடி மிக வேலையை விட்டுவிட்டு, தமிழகம் திரும்பும் கதைசொல்லிக்கு தபால் இலாகாவில் ஸ்டெனோவாக வேலை கிடைக்கிறது. இடையே ஒரு திருமண முறிவு. தபால் துறை நெருக்கடிகள் அவனை திக்குமுக்காட வைக்கின்றன. சுதந்திரமாக எழுத முடியாமல் போகிறது. உலகப் பயணம் மேற்கொள்ளும் அவனின் முயற்சிக்கு பணிச் சூழல் அளித்த சிவப்பு நாடாத் தடைகளால் மனம் புண்பட்டு அந்த வேலையையும் ராஜினாமா செய்கிறான். இடையில் அவந்திகாவை சந்தித்து முதல் திருமணம் ரத்தாகும் முன்பே இரண்டாவது திருமணமும் செய்துகொள்கிறான். அவந்திகாவின் வருகைக்கு பிறகு முழுநேர எழுத்தாளராக வாழ்ந்து வருகிறான். அவனின் அன்றாடங்கள் எழுதுவதற்கான கச்சாப்பொருட்களாக அமைகின்றன. மையத்தை நிராகரிக்கும் சாருவின் நாவல்களில் இருந்து சேகரிக்க முடிகிற ஒரு கோட்டுச்சித்திரம் இது.

பின் நவீனத்துவம் ஆண்மைய அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. சாருவின் நாவல்களில் வரும் பெண்கள் மரபான கதைசொல்லல் வரையறைக்குள் உட்படுவதில்லை. தமிழ்க் கலாச்சாரம் என்பதன் பாவனைப்பூச்சுக்கள் அவர்களிடம் வெளிப்பட்டதில்லை. தங்களின் உடல்களைக் கொண்டாடும் உல்லாசிகளாக அவர்கள் வந்து போகிறார்கள்.  சாருவின் உலகில் பெண்ணுடல் பெரும் கொண்டாட்டத்திற்கான வெளி. அதே நேரத்தில் பெண்கள் உலகின் கையறுநிலைகளை மிக அதிகமாக எழுதியவரும் சாருவே.

அவந்திகா கதாப்பாத்திரம் அதற்கு ஒரு உதாரணம். அவந்திகாவின் பால்யமும், திருமண வாழ்வும் நம்ப முடியாத இருளால் ஆனது. உயர்குடிப்பிறப்பும், பேரழகும் அவந்திகாவை கைவிடத்தான் செய்கின்றன. குடும்ப அமைப்பின் வன்முறை அவந்திகாவை பெரும் சங்கடத்திற்கு ஆளாக்குகிறது. ஜோதிடத்தின் வழிகாட்டுதலால் அவரது தந்தை அவரை வதைக்கிறார். உடன் பிறந்தவள் வன்கொடுமை செய்கிறாள். திருமண வாழ்வு பெரும் துயரத்தில் முடிகிறது. சாவின் இறுதி வரை அவரை வாழ்வு துரத்துகிறது. இது அவந்திகா என்கிற கதாபாத்திரத்தின் முன்கதைச் சுருக்கம். அவந்திகாவின் இரண்டாவது மண வாழ்வில் அவர்  கொள்ளும் விஸ்வரூபம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது.அத்தனை நெருக்கடிகளும், வன்முறைகளும் அவரைச் சூழ்ந்திருந்தாலும் அவற்றை மீறி அவர்  பிற உயிர்களனைத்தின் மீது கருணையும் தீரா அன்பும் கொண்டவராக தன்னை மாற்றிக்கொள்கிறார். மனச்சிதைவிற்கு ஆளாக வேண்டிய ஒரு பெண் பேரன்னையாக கனிகிறார். இந்த உருமாற்றம் தமிழ்ப்புனைவு வெளியில் முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்களின் வீழ்ச்சியையே பெரும்பாலும் எழுதிய தமிழ்க் கதைவெளிக்கு அவந்திகா கதாப்பாத்திரம் ஒரு முன்மாதிரி.

பாரதிக்கு இருந்த காணிநிலம் ஆசையைப் போல நடுத்தற வயது பெண்களின் கனவுலகை சாரு  தனது முதல் நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும் நாவலில் சுகந்தி என்கிற கதாப்பாத்திரத்தின் வாயிலாக இப்படி எழுதுகிறார்.

“சுகந்தி பட்டினியிலேயே வளர்ந்தாலும் தான் அழகாயிருப்பது குறித்து அவளுக்குப் பெருமையாகவும் வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையைத் தருவதாகவும் இருந்தது. இளவரசனை ஒத்த ஒருவன் காரில் வந்து தன்னைத் துாக்கிப்போவான் என்று நிச்சயமாயிருந்தாள் அவள்.அது பசியோ பட்டினியோ இல்லாத உலகமாயிருக்கும். வீட்டில் இருக்கும் அத்தனைபேரும் குளிப்பதற்காக அடுத்த தெருவிலிருந்து குடம் குடமாக தண்ணீர் எடுத்து வரத் தேவையில்லாத உலகமாயிருக்கும். அண்ணன்மார்களின் ஒரு மூட்டைத் துணிகளைத் துவைக்க அவசியமில்லாத உலகமாயிருக்கும். விலக்காகி இருக்கும் போது தொடைகளை அறுக்கும் பழந்துணிகளைக் கட்டிக்கொள்ளும் அவலமில்லாத உலகமாயிருக்கும். குப்புறப் படுத்தால் எவனை நினைத்துப் படுத்துக்கிடக்கிறாய் என்றோ மல்லாந்து படுத்தால் இன்னும் உனக்கு அதற்கு வயது வரவில்லை என்றோ அம்மாவிடமிருந்து வசவுகள் கிடைக்காத உலகமாயிருக்கும். கக்கூசுக்குப் போனால் ஓலைத்தட்டிகளின் இடுக்கு வழியாகவோ அல்லது பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலிருந்தோ பொறுக்கிகள் பார்த்து அழுதுகொண்டே மேற்கூரையில்லாத கக்கூஸிலிருந்து ஓடிவர வேண்டிய அவசியமில்லாத உலகமாயிருக்கும். குடித்துவிட்டு வரும் அண்ணன் வீடு முழுவதும் எடுத்து வைத்த வாந்தியை குடலைப் பிடுங்கும் நாற்றத்தைச் சகித்துக்கொண்டு கழுவி விடும் கடமைகளில்லாத உலகமாயிருக்கும். அண்ணன் மீதுள்ள கோபத்தை தன் மீது காட்டி தலைமுடியை இழுத்துப்போட்டு உதைக்கும் அம்மா இல்லாத உலகமாயிருக்கும். எந்த நேரத்தில் அன்டிராயரை அவிழ்த்தானோ அப்பன் என்று அம்மாவிடம் தன் பிறப்பு குறித்து நொந்து கொண்டு சண்டைபோடும் அண்ணன்மார்கள் இல்லாத உலகமாயிருக்கும். நடுஇரவில் அந்த அண்ணனோடு புரண்டு அம்மா எழுப்பும் மிருக சப்தங்களில்லாத உலகமாயிருக்கும். தெரு முழுக்க நரகல் செய்யும் குழந்தைகளைப் பார்த்து குமட்டலை அடக்கிக்கொண்டே போக வேண்டிய பள்ளிக்கூடங்களில்லாத உலகமாயிருக்கும். அந்த உலகத்தில் குளியலறையின் குழாயைத் திறந்தால் பூ மழைகொட்டும்”

அறம் என்றும் ஒழுக்கம் என்றும் பொதுமனம் கருதும் விழுமியங்களை சிதைக்கும் நோக்கம் சாருவின் எழுத்திற்கு இருக்கிறது. பொதுவிடங்களில் மூக்கு நோண்டவோ காது குடையவோ கூடாது என்று தான் நாவலின் முதல் வரி ஆரம்பிக்கிறது. இது பண்பாட்டின் ஒரு அறைகூவல். ஆனால் பழக்க வழக்கங்களில் லலிதமாக இருக்க நிர்ப்பந்திப்பதும் கருத்தியல் வன்முறை என்பதாக முடிகிறது குருசாமி என்கிற தொம்பர் குல மனிதனின் தொழில் முறையை கதைசொல்லியின் வழியாக நெருங்கி அறியும்போது. மலம் அள்ளும் அவனிடம் சென்று லலிதமான பழக்க வழக்கங்களை எதிர்பார்ப்பது ஒரு நோய்க்கூறாக அமைகிறது. சுத்தம் என்பது இங்கே வன்முறையின் கருதுகோளாக உருமாறி தவிர்க்க வேண்டியதாகிறது. இதன் தொடர்ச்சியாகவே டெல்லி கனாட் பிளேஸிலுள்ள நடைபாதையில் துயிலும் வாசிகளின் மீதான இரக்கம் என்கிற அறச்சிந்தனை கேள்விக்குள்ளாக்கப்படுவதும்.

எழுபதுகளின் கிராமங்களின் தனித்தன்மைகளில் ஒன்றான பேய்களின் உலகம் பின் நவீனத்துப் பிரதியான சாருவின் நாவலில் உறுதிசெய்யப்பட்ட ஒன்றாக எழுதிச் செல்லப்படுகிறது. சூர்யாவின் வாழ்வில் புதையலைக்காட்டும் ஆவிக்கான தவிப்புகள் இருக்கின்றன. சூர்யாவின் தங்கையான ஆர்த்திக்கு பேய் பிடித்துவிடுகிறது. பொன்னுச்சாமி வாத்தியார் எலுமிச்சைப் பழத்தை அவளிடம் அளித்து பேயோட்டும் சித்திரம் மிக விரிவாக நாவலில் எழுதப்பட்டுள்ளது. நவீன மனம் நம்ப மறுக்கும் விரிவான சித்தரிப்பு இது. கடவுள் செத்துவிட்டான் என்று சொன்ன நீட்ஷேயின் இருத்தலியல் சிக்கல்களில் ஒன்றாக கருதப்பட வேண்டியது பேய்களின் உலகமா? மனோதத்துவம் இதை நரம்புகளின் கோளாறாக கருதினாலும் இந்நாவலில் ஆர்த்தி மரபான பேயோட்டியால் மீட்கப்படுகிறாள். பேயோட்டியாக வரும் வாத்தியாருக்கும் சில வரம்புகள் இருக்கின்றன. அவருக்கு தட்சிணை எப்போதும் எளிய தொகையாகவே இருக்கிறது. பேய்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே இந்நாவலில் சாமியாடிகளின் உலகமும் விவரிக்கப்படுகிறது. ராபர்ட் மேல் மாரியாத்தாள் இறங்குவதும், குறி சொல்வதும் நவீனத்துவ மனம் ஏற்க மறுக்கும் காரியங்களே.

இதைப்போன்றே மற்றொன்றும் இந்நாவலின் முதல் பதிவென கருதத் தகுந்தது. நாவல் வெளியிடப்பட்ட ஆண்டு 1989. நான் வாசித்தவரையில் ஆண்களில் தனித்த உலகமாக ஆதியில் இருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் சுய மைதுனம் குறித்து பால்ய ஆண்மனம் கொள்ளும் தடுமாற்றங்களை எழுத்தில் பதிவு செய்த அக்கறை இந்நாவலுக்கு உண்டு. சாருவின் புனைவுலக மாந்தர்களிடம் சுயமைதுனம் அன்றாடச் செயல்களைப் போல அவ்வளவு இயல்பாக வெளிப்படுகிறது. அது குறித்த குற்றவுணர்வோ தீர்ப்பிடலோ எழுதப்படுவதில்லை. எதைக்குறித்தும் தீர்ப்பிடாத இயல்பு சாரு புனைவுலகின் தனித்தன்மைகளில் ஒன்று.

மனித வாழ்வின் அர்த்தமின்மையை, அதன் காரண காரியமற்ற இருப்பை வலுவாக பதிவு செய்வதில் சாருவின் புனைவுலகம் கூடுதல் அக்கறை கொள்கிறது. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும் நாவலில் பகுதி ஒன்று இரண்டில் சொல்லப்படும் குலக்கதை வரலாறு இதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. தந்தை வழி தாத்தா கோவிந்தராஜூலு நாயுடுவில் இருந்து ஆரம்பிக்கும் வழ்சாவழிக் கதையில் அத்தனைப்பேரும் இருளுக்குள் சென்று தேயும் சித்திரமே நீண்ட கதையாடலாக கட்டமைக்கப்படுகிறது. இந்த வாழ்க்கைக்கு மேலான லட்சியம் ஏதும் இல்லை. லட்சியவாதம் என்பதே ஒருவிதமான அதிகாரத்திற்கான முன்னேற்பாடு என்ற கருதுகோள் இங்கே சொல்லப்படுகிறது. உண்மையில் மனித வாழ்வின்  கோலங்களும் அவ்விதந்தான் இருக்கின்றன. ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்க முடிகிறதே தவிர, வாழ்வின் சீரழிவில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வழிகள் அடைபட்டு துார்ந்து போய் இருக்கின்றன. உறவுகளில் புனிதம் கற்பிக்கப்படுவதில்லை. இச்சைகள் துரத்தும் மனித மனங்களாக உறவுகள் இருக்கின்றன. மீறப்படாத எல்லைகளே இல்லை. லட்சியவாதம் அற்ற மனிதர்களாக அவர்களை மாற்றியது எது என்ற கேள்வி நம்மை வந்தடைகிறது. இத்தனை அல்லல்களுக்கு மத்தியில் அவர்கள் அடைவதுதான் என்ன என்பதும் நம்மை சிந்திக்க வைக்கிறது.

மரபான சிந்தனை வழிமுறைகளை கலைப்பது, பேசத்தயங்கிய செயல்களின் மீதான மனத்தடையை உடைப்பது. புனிதங்களை கேள்விக்கு உட்படுத்துவது, அதிகாரத்தின் நுண் வழிகளை மேலும் பகுத்தறிவது, விளிம்புநிலை வாழ்வை பிரதான கதையாடலாக முன்வைப்பது, பாலியல் மீதான இறுக்கங்களை கட்டுக்குலையச் செய்வது, அறம், ஒழுக்கம், பண்பாடு போன்ற அதிகாரக் குவிப்பு முறைகளை விலக்கி மனிதனை தளைகளில் இருந்து மீட்பது என சாரு நிவேதிதாவின் புனைவுலகு விரிந்து கிடக்கிறது. சாருவின் இடம் சாருவினால் மட்டுமே தாண்டிச் செல்லப்படக் கூடும். தமிழில் சாருவிற்கு முன்னோடிகள் என எவரும் இல்லை. முன் மாதிரியற்ற தனித்த ஒரு சிந்தனை முறையின் வெளிப்பாடாக சாரு நம்முன்னே வாழ்ந்து வருகிறார்.

(சாரு நிவேதிதாவிற்கு 2022 விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டதை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை. ஏற்கனவே ஜெயமோகன் வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம்  செய்யப்பட்டது. இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *