கீ .ஜா. என்னும் பெருங்கலைஞன் 

கீரனுார் ஜாகிர்ராஜா சிறப்பிதழ் கொண்டு வரும் எண்ணம் திடீர் என்று தோன்றிய ஒன்று. அதன் பொருட்டாகவேனும் அவரை முழுதாக வாசிக்க நேரிடும் என்கிற சுய லாபம் பிரதி பலன். சிறப்பிதழுக்காக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒரே மூச்சாக அவரின் எல்லாப் படைப்புகளையும் வாசிக்க நேரிட்டது. இப்போது என் மன அடுக்கில் எனக்கு மிகப் பிடித்தமான பத்து தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார்.  

முன்னதாக கீரனுாரின் துருக்கித் தொப்பி மற்றும் வடக்கே முறி அலிமா என இரண்டு நாவல்களும் செம்பருத்தி பூத்தவீடு சிறுகதைத் தொகுப்பும் படித்திருந்தேன். வடக்கே முறி அலிமா என்னை பெரிதும் கவர்ந்தது. தமிழில் அதற்கு இணையான நாவலே இல்லை என்று துணிந்து சொல்ல முடியும். ஆண் எழுத்தாளர் பற்றி எழுதப்பட்ட சிறந்த நாவலாக சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் உள்ளதைப் போல பெண் படைப்பாளி ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்நாள் குறித்தும் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் வடக்கே முறி அலிமா.மேற்குறிப்பிட்ட இரண்டு நாவல்களும் அதன் கதைசொல்லும் முறையால் பின்நவீனத்துவ பாணியினை பாவிக்கின்றன என்பதும் ஓர் ஒற்றுமை. 

கீரானுார் ஜாகிர்ராஜா முதன்மையாக தமிழின் சிறந்த நாவலாசிரியர். அதன்பின்னர் சிறுகதை எழுத்தாளர். மூன்றாவதாக கட்டுரையாளர் என்பது அவரின் படைப்புகளைப் பற்றிய எனக்குள்ள மனவரைபடம்.  

மீன்காரத் தெரு, கருத்த லெப்பை, மீன் குகைவாசிகள்,வடக்கேமுறி அலிமா,துருக்கித் தொப்பி, குட்டிச்சுவர் கலைஞன், ஜின்னாவின் டைரி, ஞாயிறு கடை உண்டு, சாமானியர்களைப் பற்றிய குறிப்புகள், இத்தா என பத்து நாவல்கள் எழுதியுள்ளார்.  

அவருடைய சிறுகதைகள் தேய்பிறை இரவுகளின் கதைகள்,கொமறு காரியம், பஷீரிஸ்ட், ஹலால் என மொத்தம் ஆறு தொகுப்புகளில் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட கதைகள். செம்பருத்தி பூத்த வீடு மற்றும் பெருநகர குறிப்புகள் என்பவை பின்னர் தொகுக்கப்பட்டு தேய்பிறை இரவுகளின் கதைகள் என39 சிறுகதைகள் அடங்கிய பெருந்தொகுப்பாக வெளியிடப்பட்டது.

குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை,சுய விமர்சனம்,கதா ரசனை மற்றும் காலத்தை விஞ்சி நிற்கும் கலை என நான்கு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.  

கீரனுாரின் நாவல்களை ஒரு வரையறைக்காக மூன்று பகைப்புலங்களாக  பிரித்துக்கொள்கிறேன். முதன்மையானதும் தனித்துவமானதுமான ஒன்று இஸ்லாமானவர்களின் உலகம். சிறுபான்மையினர் என குறிப்பிடப்படும் பிரிவுகளில் ஒரு மதத்தினரின் வாழ்க்கை, பண்பாடு , கலாச்சாரம் சார்ந்து மிக விரிவான சித்திரங்களை வரைந்துள்ளார். இது இவருக்கு முன்னர் நிகழ்ந்திராத பெருநிகழ்வு. தமிழில் தோப்பில் முஹம்மது மீரானை இவரின் முன்னோடியாக கருதலாம். ஆனால் தோப்பில் எழுதாத பலநுாறு பிரத்யேக பக்கங்களை இவர் கீரனுாரின் கதைகளாக படைத்துள்ளார். இஸ்லாமானவர்கள் என்கிற சொல் இவரின் மூலமே தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகம். சிறுபான்மையினர் என்கிற எல்லைப்படுத்தலை இவர் விரும்புவதில்லை என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.  

தமிழ் இஸ்லாமியர் என்று தன்னை அடையாளப்படுத்தும் கீ.ஜா.வின் படைப்புலகம் தமிழ் இஸ்லாமியர்களுக்கு இடையே உள்ள உட்பிரிவுகளை நுட்பத்தோடு விவரிக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் வாழ்க்கையிலும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை சார்ந்த முன் தீர்மானங்கள் அரசியல் காரணங்களுக்காக பொதுவெளியில் ஏற்படுத்தபட்டு வழங்கப்பட்டவையாக இருக்கின்றன. இவரே ஓரிடத்தில் சொல்வதைப் போல “ஒரு காலகட்டம் வரை தொப்பி,தாடி,கைலி,பிரியாணி இவற்றைத்தவிர இஸ்லாம் குறித்த எந்தத் தகவலும் இங்கே மாற்று மத நண்பர்களுக்குத் தெரியாது.”.இவரின் படைப்புகள் அந்த மூடுண்ட நிலையை மாற்றி அமைக்கின்றன. கீ.ஜா.வின் எழுத்துகளின் ஊடாக சென்று வந்தபின்னர் இஸ்லாமியர்களின் உலகம் மேலும் நெருக்கமாகிறது. அதன் அத்தனை நிறை குறைகளுடன்.  

இஸ்லாமானவர்களின் பெருங்கதையாடல் இவரின் தனித்த அடையாளம். கீரனுாரின் மனிதர்கள், பிழைப்பின் பொருட்டு கேரளாவில் வலசை சென்றவர்கள், கோயம்புத்துாரில் வாழ்ந்து வருகிறவர்கள், தஞ்சையின் இஸ்லாமியர்கள் என்று கதைகள் நிகழும் நிலங்களை ஒரு வசதிக்காக கோர்த்து அடுக்கலாம். மீன்காரத்தெரு, மீன்குகைவாசிகள், துருக்கித் தொப்பி, கருத்த லெப்பை நான்கு நாவல்களின் மண் கீரனுார். வடக்கேமுறி அலிமா கேரளத்தை கதைநிலமாகக் கொண்டுள்ளது. சாமானியரைப் பற்றிய குறிப்புகள் கேரளத்தில் பிழைப்புத் தேடிச் சென்ற கீரனுார் வாசிகளின் நாவலாக விரிகிறது. திருவனந்தபுரத்தின் ஒருகாலத்தின் நிலவரைபடத்தையும் அதன் மனிதர்களையும் கீ.ஜா.வின் இந்த நாவல் பதிவு செய்துள்ளது. நீல.பத்மனாபன், ஆ.மாதவன் போல திருவனந்தபுரத்தை களமாகக் கொண்டு இயங்கிய படை்பாளிகளில் கீ.ஜா.வும் ஒருவராக இருக்கிறார். 

இரண்டாவது உலகம் நவீன தமிழ் இலக்கிய உலகம், பதிப்புச் சூழல், எழுத்தாளராக வாழநேரிட்ட கையறுநிலை, தமிழில் எழுதி உயிர்வாழ முடியாத இக்கட்டு என இலக்கிய உலகம் குறித்து எள்ளலும் பகடியும் நிறைந்த கசப்புப்பக்கங்களை கொண்டுள்ள இரண்டு நாவல்கள். குட்டிச்சுவர் கலைஞன் மற்றும் ஜின்னாவின் டைரி. இரண்டும் நவீன இலக்கியச் சூழல் சார்ந்து நுட்பமான அவதானிப்புகளும் அதனை அடிப்படையாகக் கொண்ட பகடிகளையும் கொண்டிருக்கின்றன. அவற்றின் கலைந்த வடிவம். ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்ற பாவனை என நாவல் உத்திகளின் புதுவகைமாதிரிகளை இந்த இரண்டு நாவல்களும் கொண்டிருக்கின்றன. இஸ்லாமியர்கள் பின்பற்றும் மதம் சார்ந்த கட்டுகளை விமர்சிக்கும் தருணங்களை கொண்டிருக்கும் நாவல்கள். இத்தா அந்த வகையில் முக்கியமானது. தலாக் நடைமுறையின் ஒரு கட்டுப்பாடாக விதிக்கப்படும் இத்தாவினை கேள்விக்குட்படுத்துகிறார். கருத்த லெப்பை உருவ வழிபாடு சார்ந்த மீறலை நிகழ்த்தியிருப்பதைப் போல. 

கீ.ஜா.வின் 70 சொச்சம் சிறகதைகளும் மேற்சொன்ன மூன்று உலகங்களில் சுற்றிச் சுழல்பவைதான். தமிழ்ச் சிறுகதைகளுக்கென்று இவரின் சிறந்த பங்களிப்புகள் என ரெட்டை மஸ்தானருகில், பௌர்ணமிக் கிணறு,அமானுஷி,குடமுருட்டி ஆற்றின் கரையில், உருவம், ராஜமீன், ராட்சஸப் பறவையின் சிறகுகள், ஆதிமை, பக்ரீத் ஆடுகள், ஒரு பகல் பொழுது, நிழலின் சாயலும் சாயலின் நிழலும்,கொமறு காரியம், நாச்சியா, மனுஷிநரகத்திலிருந்து ஒரு குரல்,சிதைந்த மனம்,ஹலால் போன்றவை இவரின் தனித்த அடையாளம் கொண்டிருக்கும் இரண்டு சிறுகதைகள் காப்காவின் நண்பன் மற்றும் ஜான் ஆபிரகாமின் கழுதை. அசோகமித்ரன், பிரபஞ்சனைப் போல சினிமா உலகம் சார்ந்த சிறந்த கதைகளும் கீ.ஜா.வின் உலகில் உள்ளன. நிழலின் சாயலும் சாயலின் நிழலும் என்ற சிறுகதை சினிமா உலகம் சார்ந்து தமிழில் எழுதப்பட்ட கதைகளில் தனித்துவம் கொண்டது. இதுவரை யாராலும் எழுதப்பட்டிராத ஒரு கோணத்தை அறிமுகம் செய்கிறது.  

கீ.ஜா.வின் கட்டுரைகள் இலக்கிய அறிமுகங்களும் இஸ்லாமிய இலக்கியங்கள் மற்றும் படைப்பாளிகள் குறித்த அறிமுகங்கள் கொண்டவை. சுய விமரிசனம் இவரின் கட்டுரைத் தொகுப்புகளில் மிகவும் முக்கியமானது. தன் சமூகம் சார்ந்த விமர்சனங்களை அத்தொகுப்பின் கட்டுரைகளில் மிகக் காத்திரமாக வெளிப்படுத்தியுள்ளார். கதா ரசனை தமிழின் முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கியது. ரசனையின் அடிப்படையில் ஒரு வாசகராக அவர் பெற்ற அனுபவங்களை முன் வைத்துள்ளார். வைக்கம் முகமது பஷீர் மற்றும் தஞ்சை பிரகாஷ் குறித்து நிறைய எழுதியுள்ளார். அக்கட்டுரைகளின் வழியே துலக்கமாகி வரும் தஞ்சை பிரகாஷ் அவரின் படைப்புகளின் மூலம் அறிமுகம் ஆனவராக இல்லை. வேறொரு பேருருக்கொள்கிறார். இலக்கியத்தின் மீதும் பிற கலைகளின் மீதும் அவர் கொண்டிருந்த பெரும்பித்து அக்கட்டுகரைகளில் காணக்கிடைக்கிறது.  

தமிழில் அதிகம் பேசப்படாத முதன்மையான படைப்பாளிகளில் கீரனுார் ஜாகிர்ராஜாவும் ஒருவர். இந்த சிறப்பிதழ் அவரின் படைப்புகள் குறித்த சிறிய அறிமுக விழைவு. இது ஆரம்பமாக அமைந்தால் மகிழ்ச்சி. மேலும் விரிவான விமர்சனங்களையும் வாசக பங்கேற்பையும் அவர் பெற வேண்டும். ஒரு பெருங்கலைஞனை கௌரவிக்கும் நோக்கம் ஒன்றே இந்த சிறப்பிதழின் விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *