தேவதச்சனின் கவியுலகு
ஒரு மொழிக்குள் ஒளிந்துதிரியும் இன்னொரு மொழிதான் கவிதை. அல்லது மொழி மீது வந்துபடியும் காலத்தின் துாசிகளைத் தட்டி மெருகூட்டும் மாயக்கரம் கவியினுடையது. நவீன கவிதையில் சொற்கள் தங்களை கவித்துவப் போதையால் நிலையழித்துக் கொள்கின்றன. ஒரே கணத்தில் ஓராயிரம் சாயல்களை தங்கள் உடலெங்கும் வரித்துக் கொள்கின்றன. அதுவரை அசையாமல் நின்று திசைகாட்டிக்கொண்டிருந்த வழிகாட்டி மரம் திடீரென்று சுழன்று நடனமாடத்தொடங்கினால் பாதசாரியின் கண்கள் எவ்விதம் அர்த்தம் கொள்ளும்?
கவிதையை அணுக ஒரு வாசகனாக நான் கொள்ளும் முதல் தயாரிப்பு அதுவரை நான் அறிந்த சொற்களுக்கு நான் அறிந்த பொருள்களை விட்டெறிந்துவிட்டு புது மொழியொன்றை அனுபவத்தின் துணைகொண்டு அப்போதுதான் கற்றுக்கொள்ள காத்திருப்பவனின் மனநிலையை வந்தடைவதுதான். சொற்களில் உறைந்த அர்த்தம் ஒரு கவிதையை முடமாக்கும். அப்போது கவிதை தன் முகத்தை எனக்குக்காட்டாமல் திருப்பிக்கொள்கிறது. வந்திருக்கும் விருந்தாளியை வரவேற்காமல் தனது அறைக்குள் சென்று தாளிட்டுக்கொள்ளும் மனைவியைப்போல.
பெரும்பாலான நேரங்களில் கவிதை ஒரு குழந்தை. அதன் எளிமையும் புதுமையும் உலகத்தை பழக்கத்தின் திரைகளை மீறி கண்டு வியக்கும் விநோதமும் அதன்மீது பித்துக்கொள்ள வைக்கின்றன. பல்லியைவிட குறைந்த பயணங்கள் செய்து எலிகளை விட மிகச்சிறிய வாழிடத்தில் உருண்டு வாழும் எனக்கு ஒரு கவிதையை எதிர்கொள்வது கால்நுனியில் காட்டைச் சுமந்துசெல்லும் பறவையை விரல் நீட்டி அமரச்செய்வது. பற்றிஇறுக்கிய அதன் கூர்நகங்களின் வெப்பத்தால் என் உறைதல் நீர்மைகொள்ளும்.
என் தலைமுறைக் கவிஞர்களில் தேவதேவனும் தேவதச்சனும் பெருங்கவிஞர்கள். இருவரும் துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெயர்களில் ஒரே சொல்லை முன்னொட்டாகக் கொண்டிருப்பவர்கள் என்பதும் அவர்களின் மீது தனிப்பிரியத்தை ஏற்படுத்துபவை. அதே சமயம் இருவரின் பெயர்களும் நினைவில் பல சமயங்களில் ஒன்றுடன் ஒன்று ஊடாடி மறிபவை.
தேவதச்சனின் கவிதைகளுக்கு மலைகளைப்போன்ற ஒரு கச்சிதமற்ற கச்சிதத்தன்மை உண்டு. எட்டிநின்று பார்த்தால் கால்அகட்டி படுத்திருக்கும் அரக்கியைப்போன்று காட்சி தரும், வரிகளுக்கு இடையில் பயணம்செய்யும் கணந்தோறும் உள்ளிருந்து ஒரு காடு தன் முடிவிலா வழித்தடங்களில் என்னை இழுத்துச்சென்று திகைப்பூட்டும். சுற்றியலைந்து மீள வழியின்றி சோர்ந்து தாகித்து அமரும்போது மிக அருகே சலசலத்து ஓடும் நீரோடையை கொண்டுவந்து காட்டும்.
தேவதச்சனின் பெரும்பாலான கவிதைகளுக்கு ஜென் கவிதைகளின் முகவெட்டு உண்டு. தியான மந்திரங்களைப்போன்ற கவிதைகள் அவை. நாவடியில் காட்டுநெல்லியை ஒதுக்கி அவ்வப்போது நீரருந்தி கானத்தின் இனிப்பை உட்கொள்ளும் அனுபவத்திற்கு இணையானது அவரது கவிதைகளை வாசிக்கும் அனுபவம். சொற்களில் இருந்து சதா தேவதைகளும் பிசாசுகளும் உருக்கொண்டு மனவெளியில் அலைவார்கள். வெறுமனே வெயிலிலும் மழையிலும் சீந்துவாரற்று கிடந்த கல்லுக்குள் இருந்து லட்சணம் கூடிய சிற்பம் ஒன்று பிளந்து வருவதைப்போல சாதாரணத்தின் சொற்களில் இருந்து கவித்துவம் நிகழும் தருணங்களே தேவதச்சனின் கவித்திறம்.
மிகச்சாதாரண ஒரு சம்பவம். மாலைநேரத்தில் வாசல்தெளித்து விளக்கேற்றி வாசல்படியில் அமர்ந்து வீதியை வேடிக்கைப்பார்த்து அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணின் சித்திரம். ஆனால் அதற்குள் ஒரு திருவிழா மனநிலையை கிளர்ச்சியை கவிஞரால் கொண்டுவந்திட முடிகிறது. காலம் என்பது ஒருநாள் என்னும் பிராந்திய நதியாகி சாயங்காலம் ஆற்றங்கரையாகிறது. எனில் ஆறுமணி என்பதுதான் அவள் அமர்ந்திருக்கும் படித்துறை. காற்றில் சுழலும் காதோர முடிச்சுருள் தான் மாயாவியின் சூட்டுக்கோல். ஒரு மாலையை பொன்னிற மலர்கள் கொண்டதாக ஒளிரச்செய்கிறது.
இயற்கையின் நுட்பங்களை கொண்டிருக்கும் கவிதைகள் எப்போதும் உயர்தத்துவங்களின் திட்டவட்டத்தன்மையை அடைந்துவிடுகின்றன. அவ்வரிகளின் சொற்கள் தங்களுக்குள் முயங்கி உச்சமென்னும் தரிசனத்தை தொட்டுத்திறக்கின்றன.
காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை.
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப் பூச்சிகள். காலில்
காட்டைத் துாக்கிக்கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக்கொண்டிருக்கிறான்
துாரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை
முதல் வரியே ஒரு மகத்தான கவிதை. வண்ணத்துப்பூச்சியின் காலி்ல் ஒரு காடு என்கிற படிமம் தரும் மனவெழுச்சி உன்மத்த வெறியூட்டுவது. ஆட்டிடையன் மேய்த்துக்கொண்டிருக்கிறான் துாரத்து மேகங்களை. ஆழிசூழ் உலகைப் பாளிக்கும் கருக்கொண்ட மேகங்களை ஆட்டிடையனின் மெலிந்த தேகம் வழிநடத்திச்செல்கிறது. உள் நாக்கொலியின் முடிவிலா கார்வைகளில் அவை கலைந்து திரள்கின்றன. மற்றும் சில ஆடுகளை என்றுவரும்போது நம் பாதங்கள் நிலத்திற்கு திரும்புகின்றன. பருப்பொருட்களைப்போல பிரபஞ்சமும் இவரின் கவிதைகளில் குழந்தைகளின் செப்புச்சாமான்கள் போல மாறுகின்றன. அவற்றை அவற்றின் காலாதீதப் பிரக்ஞையற்று சாதாரணமாகப் புழங்குகிறார்.
எனக்கு
ஏழுகழுதை வயசாகியும்
கண்ணாடியை நான்
பார்த்ததில்லை. ஒவ்வொரு
முறையும்
எதிரில் நிற்கையில்
என் முகரக்கட்டைதான் தெரிகிறது
கண்ணாடியைக் காணோம்
உடைத்தும் பார்த்தேன்
உடைந்த ஒவ்வொரு
துண்டிலும் ஒரு
உடையாத கண்ணாடி
லேசான வெட்கம் எனக்கு
பார்க்க முடியாத
கண்ணாடியைத்தான்
பார்க்க முடிகிறது
பார்க்க முடியாத கண்ணாடி எது? கண்ணாடிகளில் ஏன் கண்ணாடியைக் காணமுடியவில்லை. கண்ணாடி என்பது உண்மையில் ஒரு மாயைதானோ? உடைந்த ஒவ்வொரு துண்டிலும் ஒரு உடையாத கண்ணாடியை இல்லாமல் ஆக்க முடியுமா? கவிதையைப்போன்றே முடிவிலாத சாத்தியங்களைக் கொண்டுருக்கும் கவிதை.
சொற்களை கற்களைப்போல வான்நோக்கிவீசி தட்டாமாலை ஆடுவதில் தேவதச்சனுக்கு பெரும்பிரியம். மேலும் பொற்கொல்லர்களைப்போல சொற்களை தருணமெனும் உருப்பெருக்கிகொண்டு உற்றுநோக்கி தருக்கமென்னும் கூர்முனைகளால் தொட்டு உருட்டி விளையாடுகிறார். ஆரங்களில் அவற்றிற்கான இடத்தை நிச்சயமற்றதாக்குகிறார். சொற்கள் சுரந்து வடியும் பொருளின்மையின் நிசப்தம் கவிதைக்கு மோனத்தவத்தை அளிக்கின்றது.
அநேகம் கவிதைகள் திட்டவட்டமான காட்சிகளை, கண்முன் விரியும் சம்பவங்களை கொண்டுள்ளன. ஆனால் அக்காட்சிகளில் திரளும் சாரம் என்பதே அக்கவிதையை அழுத்தம் மிக்கதாக மாற்றுகிறது. அவள் தன் அந்தரங்க ரோமங்களை நீக்கிக்கொண்டிருந்தாள் என்கிற கவிதை ஒரே தொனியில் சொல்லப்படுகிறது. ஆனால் மூன்று அடுக்குகளில் விரிகிறது. மூன்று காட்சிகளும் ஒருபுள்ளியில் குவிந்து ஒரு சம்பவத்தின் மூன்றாவது கோணத்தை காட்சிப்படுத்துகிறது.
காத்திருத்தல் போன்ற கவிதைகளுக்கு வாழ்வின் லீலைகளை சொல்லிச்செல்லும் நோக்கம் இருக்கிறது. சவத்தை பக்கத்துவீட்டில் சாத்தி வைத்து விடியக் காத்திருக்கும் கூட்டத்திற்கு அருகில்தான் பக்கத்துவீட்டு சன்னலைச் சாத்தி தன் பருத்த காம்புகளை கணவனுக்கு தந்து இறுகப் புணரும் இளமகளொருத்தியின் நாசியில் வந்துவந்து போகிறது பத்தியின் வாசனை. நிலவொளியும் துஷ்டி கேட்க வந்த விருந்தினரைப்போல கலைந்துகிடந்த சேர்களில் ஒன்றில் அமர்ந்து விடியக் காத்திருக்கிறது. சாவில் பிறக்கும் சிருஸ்டி.
நிகழ்காலம் நுகர்வெனும் பெரும்பசியை வளர்த்தெடுப்பது. காட்சி ஊடகங்கள் நம் நுண்ணுணர்வை தடித்துப்போகச் செய்கின்றன. உலகத்தின் அத்தனை அதிசயங்களும் துார்ந்துவரும் நதிபோன்று ரேகைகளுக்கு இடையே வழிந்துசென்று தன் மகத்துவத்தை இழந்துகொண்டிருக்கின்றன. காட்சி ஊடகங்களின் பின்விளைவென்பது நம் ரசனையின் கூர்மையை மழுங்கச்செய்வதுதான். எரிமலைகள் செங்குருதியென பீறிட்டுப்பாயும் செல்போன் காட்சிகள் நமக்கு அன்றாடம் சிறுநீர் கழிப்பதைப்போல மிகச் சாதாரணமாக இருக்கிறது.பேரிடர்கள், பெரும் விபத்துக்கள், படுகொலைகள், தற்கொலைகள் என அசாதாரண நிகழ்வுகள் அனைத்தும் சாதாரணத்தன்மையை அடைந்துவிட்டன. அறிதலின் பரவசம் என்பது நாள்தோறும் வற்றிக்கொண்டுவருகிறது. அப்பரவசங்களின் சேமிப்புக்கிடங்கு போன்று இன்று கவிதைகள் இருக்கின்றன. அதற்கு சிறந்த ஒரு உதாரணம் இக்கவிதை. தேவதச்சனின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றும் கூட.
காற்றில் வாழ்வைப் போல
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது.
காலமாற்றத்தை கவிஞர் எதிர்கொள்ளும் விதம் ஒரு துன்பியல் சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. பால்யத்தில் இருந்த அத்தனையும் நடுவயதினைத் தொடும்போது காணாமல் போகின்றன. நாள்கள் செல்லச்செல்ல நிழல்களை இழந்து இலைகள் வீழ்வதைப்போன்று பால்யத்தின் மகத்துவங்கள் அழியத்தொடங்குகின்றன. அகன்று விரிந்த வீதிகளை வீடுகளின் முற்றங்களும் வணிகவளாகங்களும் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. குளங்களையும் கிணறுகளையும் தின்றுசெரித்த வாழிடங்கள் புது உருக்கொள்கின்றன. நீர்தளும்பி மரங்களின் நிழல்கள் குலுங்கிய காட்சிகள் பொய்யாப் பழங்கதையாய் ஆகிப்போயின. அந்தக் கையறுநிலையை பகிர்ந்துகொள்ளும் தேவதச்சனின் அற்புதமான கவிதை எங்கள் ஊர் சிற்றுாரும் அல்ல பேருரும் அல்ல என்று ஆரம்பிக்கும் கவிதை.
தேவதச்சனின் ஆகச்சிறந்த கவிதைகளில் இதுவும்ஒன்று இது. இத்தனை ஆண்டுகளும் இடைவிடாமல் வாசித்தது இந்தக் கவிதையை வந்தடையத்தான் என்று உறுதியாகச் சொல்லத்துணிவேன்.
பொற்கணம்
என்னை இனிமேல் அம்மா
ஏமாற்ற முடியாது ஏனென்றால்
நான் சிறுவன் அல்ல
என்னை இனிமேல் தத்துவங்களும்
அரசியலும் ஏமாற்ற முடியாது ஏனென்றால்
நான் இளைஞன் அல்ல
என்னை இனிமேல் மதமும் கலையும்
ஏமாற்ற முடியாது ஏனென்றால்
நான் நடுத்தர வயதினன் அல்ல
என்னை இனிமேல் மாத்திரைகளும் மரியாதைகளும்
ஏமாற்ற முடியாது ஏனென்றால்
நான் முதியவனல்ல
நான் இப்போது மூப்பை கடந்தவன் சின்னஞ்
சிறு குழந்தையைப் போல
யாராவது என்னை லேசாக விரலால் தொட்டால்
போதும்
எனக்குள்
சுடர்கிறது ஒரு பொற்கணம்
இப்போது நான் அணிந்திருக்கும்
பழய ஆடைகளுக்குள்
ஏமாறுவதற்கு யாரும் இல்லை.