சொற்களில் எழுந்த நடுகற்கள்

சாரு நிவேதிதாவின் ‘பிளாக் நம்பர் 27 திர்லோக் புரி’ – வாசகப்பார்வை

இந்தியா உருவாகி வந்த போது எழுந்த தேசப்பிரிவினை  தமிழ்மண்ணை எள்ளவும் பாதிக்கவில்லை. சாதத் ஹசன் மண்டோவின் படைப்புகளுக்கு அவரின் எழுத்துக்கள் பேசும் தனித்த கதையுலகம் சார்ந்தே தவிர்க்க முடியாத முக்கியத்துவம் ஏற்பட்டுவிடுகிறது. நல்லவர்களாகவும். பண்பட்டவர்களாகவும், நீதிமான்களாகவும் தெரியும் சக மனிதர்கள், அண்டைவீட்டார்கள் இரத்தவெறிகொண்டு கொலை ஆயுதங்களை கைகளில் ஏந்தி நம்மை வேட்டையாடக்கூடும் என்ற பயத்தை மண்டோவின் கதையுலகம் நமக்கு குறிப்புணர்த்திக்கொண்டே இருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் எதன் பொருட்டோ மற்றவர்களின் மீது எப்போதும் தீர்ந்துவிடாத குரோதம் இருக்கிறதா என்ன?

இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து நடந்த இனக்கலவரம் குறித்து தமிழில் எழுதப்பட்ட ஒரே புனைவாக இருப்பதே  இக்கதையை முக்கியத்துவம் உள்ள ஒன்றாக மாற்றுகிறது. நான் வாசித்திருக்கும் வரையில் தீவிர இலக்கிய படைப்பாளிகளில் இந்த கதைக்கருவில் சாரு மட்டுமே எழுதியிருக்கிறார். சாரு நிவேதிதா பணியின்பொருட்டு டெல்லிவாசியாக இருந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவம் என்பதால் அவருக்குச் சாத்தியமாகி இருக்கிறது போலும். எனில் அப்போது அங்கே வேறு எந்த தமிழ்ப்படைப்பாளிகளும் வாழ்ந்து வரவில்லையா?

சாருவின் சிறுகதைகள் நவீனத்துவ சிறுகதைகளின் வடிவமீறலைத் திட்டமிட்டு முன்மொழிபவை. கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், பாக்தாத் பேரழகி (அல்லது) இட்லி மிளகாய்ப்பொடி செய்வது எப்படி?, மதுமிதா சொன்ன பாம்புக்கதைகள் போன்றவை நமக்கு மிக புதிய வடிவை அள்ளித்தருபவை. அதனாலே அவற்றின் மீது இயல்பான விலக்கம் வந்தடைகிறது. நம் சாதனைச் சிறுகதைகள் கச்சிதமான வடிவ ஒழுங்கும் சொற்சிக்கனமும் கொண்டவை. நவீனத்துவ சிறுகதை வடிவு என்பதன் மனப்பழக்கத்தை மீறியே இக்கதைகளை சென்றடைய வேண்டியுள்ளது.

திர்லோக்புரிக்கு இணையாகச் சொல்ல தமிழில் வேறுசிறுகதைகள் இருக்கிறதா? தென்னிந்தியர்களாகிய நமக்கு வட இந்தியர்களைப் புரிந்துகொள்வதில் இருக்கும் போதாமையை இக்கதை நிவர்த்தி செய்கிறது. ரேட்கிளிப் ஒரு அலுவலக மேஜையில் இந்திய வரைபடத்தைக் கிடத்தி, கிழித்த கோடும் அதன்பிறகான உயிர்ப்பலிகளும் நமக்கு புள்ளிவிவரங்கள்தான். அதன் வடுக்களோ ஆறாத ரணங்களோ  நம் முன்னோர்களின் நினைவில் இல்லை. அதைப்போன்றதே சீக்கிய இனப்படுகொலையும்.

இக்கதை மூன்று பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி கதைசொல்லி குடியிருக்க வாடகை வீட்டிற்காக அடையும் சங்கடங்கள் பற்றியது. ஒண்டுக் குடித்தனங்களின் நெருக்கடிகள் நமக்கு அசோகமித்திரனின் கதைகள் வழியே மிகச் செறிவாக ஏற்கனவே அறிமுகம் ஆனவைதான். சாரு அவருக்கே உரிய முறையில் ஒரு ஜன்னலைத் திறந்து காட்டுகிறார். வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் கழிவறை சென்று வந்த பின்னர் கைகளை சோப்பு போட்டு நன்றாகத்தேய்த்து கழுவும் பழக்கம் உடையவர்கள். ஆனால் கழிவறைக்குள் போதிய தண்ணீர்விட்டு சுகாதாரத்தைப் பேணத் தயங்குபர்கள் என்ற காட்சி நமக்கு அளிக்கம் தகவல் புதிது. ஒரு நண்பர் மூலம் கிழக்கு தில்லியில் ஜமுனா பாக்கில் இருக்கும் பெரிய வீடு கதைசொல்லிக்கு கிடைக்கிறது. கிழக்கு தில்லி குறித்து சாரு அளிக்கும் தகவல்கள் தலைநகரின் எண்பதுகளைப் பேசுபவை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நபர்கள் கடத்தப்படுதல் எல்லாம் அன்றாடம் நிகழும் சம்பவங்கள். மேலும் அப்போதே பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் இரண்டு சம்பவங்களை எழுதியிருக்கிறார். தெருவில் நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நடந்து செல்லும் போதே ஆட்டோவில் வந்து துாக்கிச்சென்று வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் அல்லது வீடுதேடிவந்து கொன்றழிக்கிறார்கள்.

மயூர் விஹாரில் குடியேறிய முதல்நாளிலேயே பஞ்சாபைச்சேர்ந்த ரேக்கி என்கிற சர்தார் சிறுவன் கதைசொல்லி மூலம் நமக்கு அறிமுகம் ஆகிறான். அவனின் தந்தை இராணுவ வீரர். அவர் லால் கிலாவில் கலிஸ்தான் கொடியை ஏற்றியே தீருவேன் என்று சபதமிட்ட தீவிரவாதியான சந்த் பிந்தரான் வாலேயை ஒழித்துக்கட்ட  நடந்த நீல நட்சத்திர நடவடிக்கையின்போது உயிர்நீக்க நேரிடுகிறது. அதற்காக அரசு ரேக்கியின் அம்மாவிற்கு சப்ராஸி வேலையும் ஒரு நினைவு பதக்கமும் அளிக்கிறது.

 நீல நட்சத்திர நடவடிக்கையின் பின்விளைவாகத்தான் அதன்பிறகான இந்தியப் பிரதமரின் படுகொலையும் நடக்கிறது. அப்பாவை இழந்த ரேக்கியின் மீது கதைசொல்லிக்கு இயல்பாகவே அன்பும் கருணையும் ஏற்படுகிறது. தன் மகள் ரேஷ்மாவோடு அவனையும் அன்போடு கவனித்துக் கொள்கிறான். அவர்கள் விடுமுறை நாட்களில் டெல்லியைச் சுற்றிப்பார்க்கிறார்கள். அப்போது ரேக்கி கதைசொல்லியிடம் நட்சத்திர ஓட்டல் ஒன்றில், தன் தந்தையை இழந்த துயரத்தை தவிப்போடு பகிர்ந்துகொள்கிறான். அப்பாவின் ஆவியோடு பேச முடிந்தால் அவரிடம் கேட்க அவனுக்கு ஒரே கேள்விதான் இருக்கிறது என்கிறான். “ ஏன் அப்பா உயிரோடு இருந்த நாட்களில் என்னையும் அம்மாவையும் ஒரு வெளியிடத்திற்கும் கூட்டிச்சென்று காட்டவில்லை“

அந்தநாட்களில் ஒன்றில்தான் அந்தச்சம்பவம் காட்டுத்தீயைப்போல பரவத் தொடங்குகிறது. ஒரு கும்பலால் சீக்கிய ஆண்கள் தேடித்தேடி அழிக்கப்படுகிறார்கள். வன்முறையை வெறும் தகவலைப்போல சாரு விவரித்துச் செல்கிறார். உடல்கள் மண்ணெண்ணெய் ஊற்றி போகிப்பண்டிகை மனநிலையில் எரிக்கப்படுகின்றன. எரிந்து வெளியே ஓடிவரும் மனித உடல்கள் கூரான ஆயுதங்கள் கொண்டு வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. சீக்கியர்கள் என்கிற ஒரே காரணம் அத்தனை ஆண்களையும் கொலை செய்ய போதுமான தார்மீகத்தை அந்தக் கும்பலுக்கு அளிக்கிறது. ஆனால் புதிதாகப் பொறுப் பேற்றுக் கொண்ட பிரதமரோ நாட்டிற்குள் நல்லிணக்கம் பேணவேண்டியதன் அவசியத்தை டி.வி.யில் உரையாக படித்துக் கொண்டிருக்கிறார்.

கணவர்களை, மகன்களை இழந்த பெண்கள் வீதிகள் முழுக்க கதறி அழுகிறார்கள். சாவு என்பது கொசுக்களை அடித்துக்கொல்வது போல மிகச்சாதாரண நிகழ்வாக இருக்கிறது. காவலர்களும், இராணுவமும் அவர்களை கை விடுகிறார்கள். அதற்குப்பின் அரசதிகாரம் செயல்படுகிறது என்று கதைசொல்லிக்கு காவலர் ஒருவரே எச்சரிக்கிறார்.

சாருவின் இக்கதை வரலாற்றில் உறைந்த ஒரு துயர நிகழ்வை தமிழ்ப்புனைவில் பதிவு செய்துள்ளது. அதே போல சிறுகதைக்கான கச்சிதத்தையும் கொண்டுள்ளது. முள் போன்ற அவரின் குறிப்பிட்ட சிலகதைகளுக்கே இத்தகைய வடிவ நேர்த்தி வாய்த்திருக்கிறது. சாருவின் பெரும் பலமாக இருப்பது சுவராசியம் மிகுந்த ஆற்றொழுக்கான கதைசொல்லல். பலவீனமாக இருப்பது தீவிரம் நிறைந்த கதைக்கு உயிராக இருந்தாக வேண்டிய சம்பவங்களை செய்தித்தாள் விவரணை போன்று எவ்விதக் கொந்தளிப்பும் இல்லாமல் ஆவணப்படுத்திச் செல்வதுதான். அதுதான் இக்கதையிலும் நிகழ்கிறது. பாதிக்கதைக்குமேல் ஆயிரக்கணக்கான உயிர்கள் படுகொலை செய்யப்படும் நிகழ்வு சொல்லப்பட்டாலும் நமக்கு அவை ஒரு செய்தியாக வந்து செல்கிறதே தவிர அனுபவமாக மாறியிருக்கவில்லை. குடியையும் காமத்தையும் மிக விரிவாக எழுதும் சாரு இதைப்போன்ற துயர் நிரம்பிய கதைத்தருணங்களை மிகக்குறைந்த வார்த்தைகள் கொண்டு கடந்து செல்கிறார். வாசகனான எனக்கு அத்தருணங்களே சாருவின் இலக்கிய இருப்பை உறுதி செய்கின்றவையாகத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *